திநாள் தமிழர்கள் நிலாமுற்றத்தில் கூடிக் குலவியபடி பாடி மகிழ்ந்தார்கள். அடுத்து வந்தவர்கள் வயல்வெளிகளிலும், கரட்டுகளிலும் பாட்டுப் பாடிக் கழித்தார்கள். நினைவு தெரிந்த நாளில் இருந்து தமிழர்கள் தங்கள் வாழ்வை இசையோடும் பாடலோடும் மகிழ்ந்து கரைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அதிலும் இன்றைய திரைப்பாடல்கள், நம்மோரை பல்வேறு உணர்வு வெளியில் சிறகடிக்க வைக்கின்றன. இதற்கு இசையமைபாளர்கள் மட்டும் காரணமில்லை. இசைக்குத் தகுந்தபடி அழகான, அடர்த்தியான பாடல்வரிகள் கலந்தால்தான், அந்தப் பாடலுக்கு இதயங்களை வசப்படுத்தும் வல்லமை கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் பாடகர்களும் மும்முனையில் நின்று கொண்டு சந்தோஷத்தை சாரு பிழிந்து கொடுக்கிறார்கள்.

பாடலாசிரியர்களில் வார்த்தைகளை வசீகரப்படுத்திக் கொண்டாட வைப்பதில் கவிஞர் விவேகா முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறார்.

"பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா' என்ற பாடலின் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து வெற்றி பாடல்களை கொடுத்து மானுடத்தை மகிழ்வித்து கொண்டே இருக்கிறார்.

Advertisment

ஒரு சின்னத் தாமரை, மாயம் செய்தாயோ, சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன், விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய், என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான், வானே வானே என்பது உள்ளிட்ட ஏறத்தாழ 2 ஆயிரம் திரைப்பாடல்களை எழுதி, இதயங்களில் சாம்ராஜ்யம் நடத்திவரும் கவிஞர் விவேகா அவர்களை, நாம் இனிய உதயத்துக்காக சந்தித்த போது...

வேடங்குளம் எனும் உங்கள் ஊரும், மண்ணும், மண் சார்ந்த நினைவுகளையும் பற்றிக் கூறுங்கள்..?.

வேடங்குளம் ஒரு அழகான பசுமையான கிராமம். எங்கள் தாத்தாவுக்கு முந்தைய மூன்றாம் தலைமுறை தாத்தாக்கள், சாத்தனூரில் இருந்து வேடங்குளத்துக்குச் சென்று, அங்கு நிறைய நிலங்களை வாங்கி அந்த இடங்களை எல்லாம் பண்படுத்தி, அங்கு விவசாயம் செய்ய ஆரம்பித்திருக் கிறார்கள். இவர்கள் விவசாயம் செய்த நிலங்கள் அனைத்தும் தென்பெண்ணை ஆற்றின் கரையை சார்ந்திருந்தன. வீட்டைச் சுற்றிலும் காடுகளும் வயல்களும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடு என்று கால்நடைச் செல்வங்களை அதிகம் வளர்த்து வந்தார்கள். எங்கள் வீட்டில் மட்டுமே 200 ஆடுகளுக்கு மேல் இருந்தன. எங்களின் கல்விக்காக பணம் தேவைப்படும் போதெல்லாம் எங்கள் தந்தை ஆடுகளை விற்றுதான் பணத் தேவையை பூர்த்தி செய்வார். ஆடு விற்பதில் கூட எங்கள் தந்தை நேர்மையை கடைப்பிடிப்பார். விற்கக்கூடிய ஆடுகள் கசாப்பு கடைக்காக இருக்கக் கூடாது என்பதில் எங்கள் தந்தை மிகுந்த கவனத் துடன் இருப்பார். பச்சையம்மன் கோவிலில் என் குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக சென்றிருந்தோம். அப்போது கூட அங்கு கோழியோ, ஆடோ பலி கொடுக்கக் கூடாது என்று கூறிவிட்டார். இன்று வரையிலும் அப்பாவின் மனசுக்குத் தெரிந்து அவரால் ஒரு உயிர் பலி கூட நிகழ்ந்தது இல்லை. இதை நினைக்கிற போது அப்பாவின் மீது உள்ள அன்பு இன்னும் கூடிக் கொண்டே இருக்கிறது.

Advertisment

* சிறுவயதிலேயே உங்களுக்குத் திரைத்துறை மீது காதல் வந்துவிட்டதா?

நான் திரைத்துறைக்கு வருவேனா என்று எந்த அபிப்பிராயமும் இல்லாத ஒரு சூழலில், ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இசைக்கு பாடல் எழுதுவேன். ஒரு பாடலின் டியூனை எடுத்துக் கொண்டு அதற்கு பாடல்கள் எழுதுவேன். அப்படி எழுதிய பாடல்களை என் தந்தையிடம் சென்று காட்டுகிற போது உடனே அவர் பையில் இருக்கக்கூடிய காசை எடுத்து என்னிடம் கொடுப்பார். சினிமா பாடல்கள் எல்லாம் கேட்பதே தவறு என்று நினைக்கிற அன்றைய சமூக சூழலில், என் தந்தை என்னை ஊக்கப்படுத்தி வளர்த்தார்.

இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால் கிராமிய கலைகள் மீது அப்பாவிற்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.. வருடத்திற்கு ஒருமுறை எங்கள் ஊரில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிற பொழுது, அப்பொழுது தெருக்கூத்து நடக்கும். அப்பா தான் ஊர் பெரிய மனிதர். எங்கள் வீட்டு திண்ணை யில் உட்கார்ந்துதான் எல்லோரும் ஒத்திகை நடத்துவார் கள். அப்பொழுது அப்பாதான் அதில் முக்கிய வேடம் வகிப்பார். அப்பாதான் அனைத்து வேடங் களுக்குமான ஒத்திகைகளை சொல்லிக் கொடுப்பார். அவரே முக்கியமான வேடம் கட்டுவார். கர்ண மோட்சம் என்றால் அவர்தான் கர்ணனாக நடிப்பார்.

பாவாடராயன் பரமகேது சண்டை என்றால் அவர் தான் பரமகேது. அப்போது நான் உள்ளே உட்கார்ந்து கொண்டு அந்த பாடல்களை எல்லாம் ரசிப்பேன். சில நேரங்களில் கையேடு தயாரித்து கொடுக்கிற பொழுது என்னுடைய வரிகளையும் அதன் உள்ளே சேர்த்து எழுதுவேன்.

* கல்லூரி வாழ்க்கை?

நான் திருவண்ணாமலை கலைக் கல்லூரியில் பி. எஸ். சி. கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படித்தேன். அப்பொழுது "கல்லூரி மாணவ நாவலராக" என்னை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

அப்பொழுது சென்னை போன்ற மாவட்ட தலை நகரங்களுக்கெல்லாம் எங்கள் கல்லூரியின் சார்பாக என்னை பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என அனைத்து போட்டிகளுக் கும் அனுப்பி வைப்பார்கள். கவிதைகள் எழுது வேன், கட்டுரைகள் நன்றாக எழுதுவேன், நன்றாக பேசுவேன் இப்படி அனைத் திலும் சிறந்து விளங்கு கிற ஒரு மாணவரைத்தான் கல்லூரி மாணவ நாவலராக தேர்ந்தெடுப்பார்கள். அப்படித்தான் என்னையும் தேர்ந்தெடுத்திருந்தார்கள். கவிதைப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசும் வாங்கி இருக்கிறேன். ஆதலால் எனக்கு கல்லூரியில் மிகச் சிறந்த பெயர் இருந்தது. கல்லூரியில் படித்த கால கட்டங்கள் எல்லாம் எனக்கு மகிழ்ச்சியான தருணங் களை ஏற்படுத்திக் கொடுத்தன. அப்பொழுதுதான் என்னுடைய தோழர்கள் நிறைய பேர் நீங்கள் ஏன் சினிமாவிற்கு பாட்டு எழுத கூடாது என்கின்ற கேள்வியை என்னிடம் எழுப்பினார்கள். அப்போது ஏற்பட்ட சிறு பொறிதான் பிற்காலத்தில் ஆசையாக வளர்ந்து நான் சென்னை நோக்கி வருவதற்கு காரணமாக இருந்தது.

viveka

* உங்கள் இயற்பெயர் விவேகானந்தர் வீர வைரமுத்து என்பதுதானே?

அப்பாவிற்கு விவேகானந்தரை மிகவும் பிடிக்கும். அப்பா கன்னியாகுமரி சென்று வந்திருந்த அந்த தருணத்தில் தான் நான் பிறக்கிறேன். அப்போது பிறந்ததனால், விவேகம், ஆனந்தம் இரண்டும் கலந்து இருக்க வேண்டும் என்பதற்காக விவேகானந் தர் என்ற பெயர் வைக்க வேண்டும் என்று அவர் ஆசைப் பட்டார். வீர வைரமுத்து என்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. எங்கள் வீட்டில். நிறைய பெண் பிள்ளைகள் இருந்ததனால் என்னைக் கருவிலேயே கலைப்பதற்கு முயற்சி செய்திருந்தார்கள். ஆனாலும் பிறந்துவிட்டேன். அவர்கள் நினைத்தபடியே நான் ஆண் குழந்தையாக பிறந்ததனால், விவேக, ஆனந்த வீர, வைரமுத்து என்று என் தந்தை எனக்கு பெயர் சூட்டினார்கள்.

* உங்கள் முதல் பாடல் அனுபவம் பற்றி குறிப்பிடுங்கள்?

முதல் பாடல் நிச்சயமாக அது மிகவும் பெருமைக்குரிய ஒரு பாடல். ஏனெனில் அந்தப் பாடல் எழுதுகிற போது நான் அடைந்த பரவசம்! அந்த பாடல் எழுதுகிற போது எனக்கு ஏற்பட்ட மனநிலை என்பது மிகவும் வித்தியாசமானது. ஒரு கவிஞருக்கு ஏற்கனவே அந்த பாடல் கொடுக்கப்பட்டது. அந்த கவிஞரால் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பாடலை எழுதிக் கொடுக்க முடியவில்லை. அவர் வேறு ஏதோ பணிகளில் சிக்கியிருந்தார். அப்போது இரவு ஏறக் குறைய ஒரு பத்து மணி இருக்கும். அந்த படத்தின் கோ டைரக்டர் மதிப்பிற்குரிய ராயன் அவர்களும், அந்த படத்தின் உதவி இயக்குனர் சிவனேசன் அவர்களும் என்னைத் தேடி வந்தார்கள். இயக்குனர் உங்களை அழைக்கிறார். நீங்கள் உடனடியாக ஒரு பாடல் எழுத வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அப்போது வேலாயுதம் கால”யில் அந்த அலுவலகம் இருந்தது. காலையில் எட்டு மணிக்கு ரெக்கார்டிங் இருக்கிறது. இரவுக்குள் நீங்கள் இந்த மெட்டுக்கான பாடலை எழுதித் தர வேண்டும் என்று அந்த இசையை எனக்கு கொடுத்தார்கள். எழுதுவீர்களா என்று கேட்டபோது எழுதிவிடலாம் என்று கூறியிருந்தேன். இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. ஐந்து பல்லவிகள், ஏழு சரணங்கள் என்று எழுதி காலையில் கொண்டுபோய்க் கொடுத்தேன். அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். டைரக்டர் பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது என்று கூறினார். அந்தப் பாடலை ஆர். பி. சௌத்ரி அவர்களிடம் காண்பித்த போது அவரும் மகிழ்ச்சி அடைந்தார். பின்பு இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ் குமார் அவர்களிடம் கொடுத்த பொழுது மிகவும் பிரமாதமாக எழுதி இருப்பதாகக் கூறினார். உடனே ரெக்கார்டிங் நடக்கிறது. இப்படித்தான் என்னுடைய முதல் பாடல் உருவானது.

"பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா, பனி காற்றே பிடித்திருக்கா' என்பதுதான் அந்த பாடல். நான் மேலும் எழுதிய பல்லவிகளை எல்லாம் இப்பொழுதும் இயக்குநர் அவர்கள் மேற்கோள் காட்டி என்னை பாராட்டுவார். "மேகத்துக்கு ஏன் கருப்பு சட்டை அது வக்கீலுக்கு படிச்சிருக்கா' என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாடல் எழுதிய முதல் படமே நூறு நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றது. என்னுடைய முதல் பாடலே மிகப்பெரிய வெற்றிப் பாடலாக அமைந்தது. படமும் வெற்றியடைந்து பாடலும் வெற்றி அடைந்த அந்த தருணம், நான் பெருமகிழ்ச்சி அடைந்த தருணம்.

* உங்களுக்கான இடத்தை எப்படி தக்க வைத்துக் கொள்கிறீர்கள்?

தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது ஒரு பாடலாசிரியர் என்பவர் தன்னை தினந்தோறும் புதுப்பித்துகொண்டே இருக்க வேண்டும் , எந்தச் சூழலுக்கும் பாடல் எழுதும் அளவுக்கு பரந்து பட்ட பார்வையும் வாசிப்பனுபவமும் அவசியம்.. எல்லாவிதமான கதைச்சூழலுக்கும் பாடல் எழுதியிருக்கிறேன். அதேபோல பரபரப்பான எந்த சூழலிலும் எப்பொழுது வேண்டுமானாலும் நான் பாடல் எழுதுவேன். எனக்கு என்னை சுற்றிலும் ஒரு பரபரப்பான சூழல் இருந்தால் கூட நான் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து பாடல் எழுதி விடுவேன். கார் ஓட்டிக்கொண்டு செல்லும் போது கூட நான் பாடல் எழுதி விடுவேன். கவிஞரே பாடகர்கள் எல்லாம் தயார் செய்து விட்டோம் ஒரு பாடல் வேண்டும் வர முடியுமா என்று கேட்டால் நான் காரில் செல்லும் பொழுதே பாடலை எழுதி அவர்கள் கைகளில் சென்று கொடுப்பேன். நிறைய பாடல்கள் நான் ஸ்டுடியோவில் அமர்ந்து எழுதி இருக்கிறேன். நிறைய இயக்குனர்களுக்கு எதிரில் அமர்ந்து எழுதிக் கொடுத்திருக்கிறேன். இசை யமைப்பாளர் டியூன் சொல்ல சொல்ல நான் வரிகள் சொல்லிக் கொண்டே இருப்பேன். அவர்கள் அது வேண்டாம் என்றால் அடுத்த லிரிக்ஸ் சொல்லுவேன். கந்தசாமி பாடல்கள் அனைத்தும் அப்படித்தான் உருவாகின. இயக்குனர் சுசி கணேசன் அவர்களைத் திருப்திபடுத்துவது என்பது மிகவும் சிரமம். அவர் ஏற்கனவே இரண்டு மூன்று கவிஞர்களிடம் சென்று திருப்தி இல்லாமல்தான் என்னிடம் இறுதியாக மெட்டைக் கொடுத்தார். அவர் எதிரிலேயே அமர்ந்து எஸ்கியூஸ்மி கந்தசாமி என்ற பாடலை எழுதினேன்.

மியா மியாவ் பூனை, எம்பேரு மீனாகுமாரி, மேம்போ மாஃபியா, கந்தசாமி கந்தசாமி போன்ற பெரும்பாலான பாடல்கள் உடனடியாக அமர்ந்து எழுதிக் கொடுத்தவைதான்.

என் பேரு மீனா குமாரி 15 நிமிடத்தில் எழுதப் பட்ட பாடல். தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களும் நானும் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு டீ சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் ஏதாவது யோசித்துக் கொண்டிருங்கள் அந்தப் பாட்டை முடித்து விடலாம் என்று இயக்குனர் சென்றிருந்தார். அவர் சென்று பதினைந்து இருபது நிமிடத்தில் வருவதற்குள் அந்த பாடலை எழுதி அவரிடம் போட்டு காண்பித்தோம். அது மாதிரி மிக அவசர அவசரமாக எழுதப்பட்டதுதான் அந்த பாடல். இது மாதிரியான சூழ-லும் என்னால் பணி செய்ய முடியும். இவை எல்லாமும்தான் நான் எனக் கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான காரணங்கள்.

* திரைக்கு வெளியே நீங்கள் எழுதிய படைப்புகள் பற்றி ?

என்னுடைய முதல் நூல் "உயரங் களின் வேர்" என்ற ஒரு நூல். அது பெரும் பாராட்டை பெற்றது. "சிந்தனைச் செம்மல்' போன்ற பல விருதுகளை பெற்ற நூல் அது. அதனுடைய ஒரு கவிதையை கூட பத்தாயிரம் பிரதிகள் அச்சடித்து கடைநிலை ஊழியர்கள் மாநாட்டில் விநியோகித்தார்கள். தினமலரில் தொடராக "பெண் புராணம்' என்ற ஒரு தொடர் எழுதினேன். தினகரனில் "குயில் தோப்பு' என்கிற தொடரையும் எழுதி வந்தேன். அதன் பிறகு இலக்கியப் பீடம் இதழில் ஒரு தொடர் எழுதினேன். என்னுடைய கவிதைகள் அனைத்தையும் சேர்த்தாலே ஏறக்குறைய 15 தொகுப்புகளுக்கு கவிதைகள் தயாராக இருக்கின் றன. இந்த வருடம் எப்படியும் அதில் ஐந்து தொகுப்பு களை வெளியிட்டு விடலாம் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய பெண் புராணம் என்கிற கவிதைதொடர் அது தினமலரில் வாரா வாராம் வெளியானபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது.

viveka

* உங்கள் குடும்பம் பற்றி?

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. என்னுடைய மூத்த மகள் செந்தளிர், பத்தாம் வகுப்பு படிக்கிறார். இரண்டாவது மகள் இசைத்தளிர் ஆறாவது படிக்கிறார். மகன் செங்கதிர் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். என்னுடைய மனைவி முன்னாள் விமானி.

தற்போது இல்லத்தரசி. எனக்கு முதலில் இரண்டு சகோதரிகள், ஒரு அண்ணன், பின்பு நான்கு சகோதரி கள். கடைசியா பிறந்தவன் நான். என் தந்தை மிகச்சிறந்த ஜனநாயகவாதி. அவரை நாம் திட்டலாம், விமர்சிக்க லாம். தற்பொழுது அவருக்கு 86 வயது ஆகிறது. ஊரில் இருக்கிறார். ஐந்தாவது வகுப்பு வரைதான் படித்திருக் கிறார். எங்கள் ஊரில் நிலம் அளக்க வேண்டும் என்றால் எங்களுடைய தந்தையைத்தான் அழைப்பார்கள். கல்வியின் வாசனை இல்லாத எங்கள் கிராமத்தில் எங்கள் அண்ணன் செல்வராஜ்தான் முதல் முதலில் முதுகலை பட்டம் பெற்றார். நான் இளங்கலை கணிதம் படித்தேன்.

* திரைப்படப் பாடல்களின் வெற்றியை தீர் மானிப்பது இசையா? அல்லது பாடல் வரிகளா?

இரண்டும்தான் பாடலுக்கான வெற்றியை தீர்மானிக்கின்றன. ஒன்றை விட்டு மற்றொன்று தீர்மானிக்க முடியாது. இசை சிறப்பாக இருக்க வேண்டும். அதில் வரக்கூடிய வரிகளும் சிறப்பாக இருக்க வேண்டும். அவை இரண்டும் சரிவிகிதத்தில் இருக்கிற போதுதான் அந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை அடைகிறது. வரிகளில் நிச்சயமாக ஒரு நிபுணத்துவம் இருக்க வேண்டும். இசையில் ஒரு வசீகரம் இருக்க வேண்டும். இவை இரண்டும் சேர்ந்துதான் ஒரு பாடலை மிக சிறந்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது என்னுடைய அனுபவமாக இருக்கிறது.

*எது மாதிரியான பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன?

எல்லாவிதமான பாடல்களும் காலத்தை வென்றுதான் நிற்கின்றன. "எலந்த பழம்' பாடலை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா? அந்த பாடலை ரசிக்கிறவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். வெற்றியடைந்த பாடல்கள் அனைத்துமே காலத்தை கடந்துதான் நிற்கின்றன. கண்ணதாசனுடைய தீவிர ரசிகன் நான். அவருடைய "மயக்கமா கலக்கமா' பாடல் "உன் கண்ணில் நீர் வழிந்தால்' போன்ற பாடல் "வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று முறிந்து விட்டால் எந்த வண்டி ஓடும்' இது போன்று நம்பிக்கையை மேம்படுத்தும் பாடல்கள் வாழ்க்கையின் நிலைப்பாட்டை பிரதிபலிக் கின்றன. எந்த பாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவருடைய பாடல்களால் நான் ஈர்க்கப் பட்டு இருக்கிறேன்.

அதேபோல இப்பொழுது எழுதப்படுகிற பாடல்கள், அதாவது நான் ஆரம்பகாலத்தில் எழுதிய "மின்சாரம் என் மீது பாய்கின்றதே' 20 வருடங்கள் கடந்தும் இன்றைக்கும் அந்த பாடலை போற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். "ஒரு கோப்பை தண்ணீர் காதல், அதில் நீந்த கற்றுக் கொண்டேன். பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன். அடி உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்'. "நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன். உதடுகள் வேர்க்கும் வரை. அடி உண்மையில் நானும் யோக்கியன் தானடி உன்னை பார்க்கும் வரை' என்ற வரிகளைப் பேசிக் களிப்புறுகிற நண்பர்களை நான் இலக்கியக் கூட்டங்களில் பார்க்கிறேன். "ஊம் சொல்றியா மாமா ஊம் சொல்றியா' என்ற பாடலைப் பற்றி ஒரு சகோதரர், 2000 வருட இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான பாடல் என்று எழுதியிருக்கிறார். பெண்மையைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதப்பட்ட பாடல் ஊம் சொல்றியா ஊகும் சொல்றியா தமிழ் சினிமாவின் ஒரு கலகப் பாடல் என்று "உயிர்மை" பத்திரிகை அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டிருந் தது. எழுத்தாளர் கொற்றவை அந்தப் பாடலைப் பற்றிய மிக உயர்வான கட்டுரை ஒன்றை எழுதியிருந் தார். தோழர் சுந்தரவல்லி அவர்கள் அந்த பாடலைப் பற்றி ஒரு நீண்ட காணொளியை வெளியிட்டிருந்தார். அதேபோன்று சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் பாராட்டினார். இன்றைய நிலையில் பெண்களுக்கு பிடித்த பெயர் என்று ஒன்று சொல்வதென்றால் அது கவிஞர் விவேகாவின் பெயர்தான் ஏனென்றால் நாங்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் அவர் பாடலில் சொல்லிவிடுகிறார். என்று அந்த பாடலை பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இது போன்ற பெரும்பாலான என்னுடைய பாடல்களும், காலத்தை வென்றுதான் நிற்கின்றன பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் அவ்வளவுதான்.

ஒரு பாடலாசிரியரின் வளர்ச்சிக்கு, இசை அமைப்பாளர்களின் கூட்டுறவு அவசியம் என்று கருதுகிறீர்களா?

என்னை பொறுத்தவரை நான் எல்லா இசையமைப் பாளர்களுடனும் இணக்கமாக எழுதிக் கொண்டிருக்கி றேன். இசைஞானி இளையராஜா தொடங்கி சமீபத் தில் இருக்கக்கூடிய இசையமைப்பாளர்கள் வரைக்கும் நான் பணியாற்றி இருக்கிறேன். வெற்றிப் பாடல்கள் மட்டுமே திரைத் துறையில் ஒரு கவிஞனின் ஆயுளை தீர்மானிக்கின்றது. சினிமா என்பது ஒரு கலை. இன் னொன்று அது ஒரு வியாபாரம். எனவே இங்கு வெற்றி தான் பெரிதாக பேசப்படுகிறது. என்னுடைய புல்லட் பாடலை பார்த்தீர்கள் என்றால் தென்னிந்தியாவிலேயே அதிகமாக கேட்கப்பட்டுள்ளதாக மோஜ் இணைய தளம் சொல்லி இருக்கிறது. 1100 கோடி முறை ப்ளே செய்யப்பட்ட ஒரு பாடல் என்று அந்த பாடலுக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது.

ஒரு பாடலாசிரியர் ஒரே ஒரு இசையமைப்பாளரைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களுடன் நான் நிறைய வெற்றிப் பாடல்கள் கொடுத்திருக்கிறேன். அவருக்கும் எனக்கும் அப்படி ஒரு இணக்கம் இருந்திருக்கிறது. ஏறக்குறைய 15 வருடமாக அவருடைய அனைத்து படங்களிலும் நான் பாடல் எழுதி இருக்கிறேன். விஜய் ஆண்டனி, வித்தியாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், இமான், யுவன் சங்கர்ராஜா, தமன், அனிருத், ஜிப்ரான், சாம் சி.எஸ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களுடனும் நான் பணியாற்றி இருக்கிறேன். முக்கியமாக நாம் சிறப் பாக வரிகளை கொடுத்தால் போதும். கூட்டணி தான் வெற்றி அடையும் என்பதெல்லாம் இல்லை. ஆனால் கூட்டணியும் வெற்றியடைந்து கொண்டுதான் இருக்கிறது.

திரைப்படப் பாடல் எழுது வதற்கு தமிழ் இலக்கணம் கற்றிறுத் தல் அவசியமா?

தமிழ் இலக்கணப் பயிற்சி அவசியம். அதைவிட அவசியம் இலக் கிய பயிற்சி. இலக்கியம் நிறைய படித்தி ருக்க வேண்டும் நிறைய நூல்கள் படித்தி ருக்க வேண்டும் நிறைய வாசிப்பு அனுபவம் இருக்க வேண்டும் என்னுடைய மிகச்சிறந்த தோழன் என்றால் அது எனக்கு புத்தகங்கள்தான். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே என் அப்பா என்னை நூலகத்திற்கு அழைத்துச் சென்று, மெம்பர்ஸ் கார்டு வாங்கி கொடுத்து என்னை அங்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை நான் தினந் தோறும் புத்தகங்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன். புத்தகங் கள் இல்லாத ஒரு நாள் என்று நான் யோசிக்கவே முடியாது. இதையெல்லாம் தாண்டி நாம் கடந்து வந்த அனுபவங்கள், வாழ்க்கையில் தினம் தோறும் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் இவைகள்தான் நாம் எழுதக்கூடிய பாடல்களை தீர்மானிக்கின்றன.

பாடல் எழுதும் போது ஒரு பாடலாசிரியருக் கான சுதந்திரம் முழுமையாக கிடைக்கிறதா?

நிச்சயமாக. ஆரம்ப காலகட்டத்தில் எழுதுகிற போது அனைவருக்கும் ஒரு அச்சம் என்பது இருக்கத் தான் செய்யும். ஏனென்றால் சினிமாத்துறை என்பது கோடிகள் புரளுகிற ஒரு துறை. சில கோடிகளை முதலீடு செய்யக்கூடிய தயாரிப்பாளர் ஒரு புது பாடல் ஆசிரியரை அழைத்து பாடல் எழுத சொல்வது என்பது அவர்களுக்கு அது ஒரு ரிஸ்க்கான செயலாகத்தான் இருக்கும். ஏனெனில் ஒரு படத்தில் பாடல்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு அங்கம் வகிக்க கூடியது. ஒரு பாடல் என்பது ஒரு படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது. நீண்ட அனுபவமும் நிகழ் காலத்தில் தொடந்து வெற்றிப் பாடல்களுமாய்ப் கொடுத்துக் கொண்டிருக்கும் எனக்கு திரையுலகம் நல்ல சுதந்திரத்தையும் உயரிய வரவேற்பையும் வழங்குவதாகவே நான் உணர்கிறேன்.

கவியரசு கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து காலங்களைத் தாண்டி இப்போது திரைப்படப் பாடல்களில் ஒரு தேக்கம் இருப்ப தாகத் தென்படுகிறதே ?

அப்படி சொல்ல முடியாது. அது பார்க்கக் கூடியவர்கள் பார்வையை பொறுத்து மாறுபடுகிறது. இப்போது பாடல்களுக்கு என்று ஒரு மார்க்கெட் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது வரக்கூடிய பாடல்களை பல மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்க்கி றார்கள். பாடல்களை கொண்டாடுகி றார்கள். வரிகளை உற்று நோக்குகிறார் கள். நாம் கண்ணதாசன் அவர்களு டைய காலத்தை பார்த்தோம் என்றால் பாடல்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. அப்போது சினிமா என்கிற ஊடகமே மிக புதியது. தெருக் கூத்தில் இருந்து, மேடை நாடகங்களிலிருந்து. சினிமா என்கிற புதிய பிம்பம் உருவாகிறது. திரையில் உருவம் பார்ப் பதே அவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. அப்பொழுது அனைத்து பாடல்களையும் மனதில் ஏற்றிக் கொள்வது என்பது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. தற்போது பார்த்தோம் என்றால் ஒரு நாளைக்கு 200 பாட்டு என்கிற கணக்கில் பாடல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதற்கான களம் பறந்து விரிந்து காணப்படுகிறது. தனிப் பாடல்கள் என்றும், சினிமா பாடல்கள் என்றும் உலகமெங்கும் பாடல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இணையதளத்தின் மூலமாக மொரக்கோ பாட்டு ஒன்றை நாம் கேட்க முடிகிறது. இணையதளத்தில் சென்று மொராக்கோ பெஸ்ட் சாங் என்று போடுகிற போது அதில் இருக்கக்கூடிய அனைத்து பாடல்களையும் நம்மால் கேட்க முடிகிறது. தற்போது உலகளாவிய ஒரு பார்வை வந்துவிட்டது.

அதனால் தேக்க நிலை என்பதெல்லாம் பரந்துபட்ட பார்வைகள் இல்லாதவர்களுடைய கண்ணோட்டம். நான் சென்ற வாரம் வெளிநாடு சென்றிருந்த பொழுது தாய் மொழியை தமிழாக கொண்டிராத ஒரு நிலத்தில் நமது பாடல் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது என்பதை பார்க்கிற போது எவ்வளவு பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது உலகளாவிய ஒரு பறந்துவிட்ட பார்வை வந்துவிட்டது. இப்போதும் பாடல்கள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றன.

தன்னையே நம்பி இருப்பவர்களுக்கு கலை என்ன செய்யும்?

தன்னை நம்பி இருப்பவர்களை கலை உயர்த்தும். ஒரு துறையில் ஒருவர் முழுமையாக, நேர்மையாக, உளசுத்தியோடு செயல்பட்டால் உச்சத்தை தொடுவார் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

ஈழத் தமிழ் மகளை திருமணம் செய்து இருக்கிறீர்களே?

என் ரசிகையின் தோழிதான் என் மனைவி. ஈழத்தின் மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு பேரன்பு உண்டு. ஈழப் போராட்டங்களின் போதெல்லாம் அதை நான் கூர்ந்து கவனித்து இருக்கிறேன். மேதகு. பிரபாகரன் அவர்களின் மீது பெரும் மரியாதை கொண்டவன் நான். அந்த வகையில் ஒரு ஈழத் தமிழ் பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டது பெரும் மகிழ்ச்சி. மற்றபடி ஈழத் தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கொள்கை எதுவும் வைத்திருந்த தில்லை. அது இயல்பாக அமைந்தது அவ்வளவு தான்.

உலகளாவிய பார்வையில் மற்ற நாட்டு பெண்களி −ருந்து தமிழ் பெண்கள் எந்த விதத்தில் வேறுபடு கிறார்கள்?

தமிழ் பெண்கள் தமிழ் கலாச்சாரத்தில் இருக்கிறார் கள். ஒவ்வொரு நாட்டிற்கும் நாம் செல்லுகிற போது அந்த நாட்டில் உள்ள பெண்கள் அந்தந்த நாட்டின் கலாச்சாரத்தோடு இணக்கமாக இருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வேறு நாடுகளுக்கு சென்று வேறு கலாச்சாரத்தை பின்பற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு மீறல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

இன்னொன்று கலாச்சாரம் என்பது ஒரு கெட்டிப்பட்டு இறுகிப் போய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலத்திற்கு காலம் அவை மாறிக்கொண்டே வருகின்றன. உடன்கட்டை ஏறுவது என்பதையெல்லாம் தூக்கி போட்டு விட்டோமே! உடன்கட்டை ஏறுவது என்பது அறிவுக்கு உகந்தது அல்ல என்று கருதுகிற போது அவைகள் சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டன. கணவன் இல்லாத பெண்டிர் பொட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. பூ வைத்துக் கொள்ளக் கூடாது என்பதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று அவற்றை நாம் தூக்கி போட்டு விட்டோம். அறிவு மேம்பட மேம்பட சிறந்த செயல்கள் கலாச்சாரத்தில் வந்து சேர்கின்றன.

நம்முடைய உயிர் தமிழ். தமிழ்தான் நம்முடைய அடையாளம். தமிழை நாம் போற்ற வேண்டும். தமிழை நாம் இழக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழனுடைய உயிர் மூச்சாக இருக்க வேண்டுமே ஒழிய கலாச்சாரம், பண்பாடு எல்லாம் காலத்திற்கு தகுந்தார் போல் மாறிக்கொண்டே இருக்கும்.

அவற்றை நாம் கட்டிப்பிடித்துக் கொண்டு வைக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் நான் ஒரு ஒன்றரை தெருவை மட்டுமே கொண்ட ஊரில் வசித்து வந்தேன்.

20 வயது வரை எனக்கு வேறு எந்த உலகமும் தெரியாது.

என்னுடைய மகள் லிட்டில் லீடர்ஸ் என்று ஒரு குழுவை அமைத்து உலகலாவிய நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். அவர்கள் வெளி நாட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளோடு இயல்பாக பேச முடிகிறது. அப்படி பார்க்கிறபோது எது சிறந்ததோ அதுதான் நிலைத்து நிற்கிறது. அல்லது எது சிறந்ததோ அது நம்மிடத்தில் வந்து சேர்ந்து விடுகிறது * பெண்ணடிமைத்தனம் முற்றிலுமாக தகர்க்கப் பட்டுள்ளதா?

தற்பொழுதும் பெண்களை இரண்டாம் பாலினமாக பார்க்கக்கூடிய ஒரு சூழல்தான் நிலவி வருகிறது. ஆண்களுக்கு இணையாக அவர்களைப் பார்க்கக் கூடிய தன்மை இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். உலகம் முழுவதும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. பெண்களுக்கான சமத்துவம் என்பது சமூகத்தில் இன்னும் வரவில்லை. அவர்களை அழுத்தி வைக்கக்கூடிய ஒரு சூழல்தான் தற்பொழுதும் நிலவிக்கொண்டு வருகிறது. இது வருத்தத்திற்குரியது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.