1897-ல் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச்செயலாளராக பனப்பாக்கம் சீத்தா அவர்கள் பணியாற்றி வருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில் பிறந்து படித்து, ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தமிழாசிரியராக சுமார் 40 ஆண்டுகாலம் பணி செய்தவர். கவிதை, நாடகம், கட்டுரை என பல நூல்கள் எழுதியுள்ளார். பல திறமைசாலிகளை உருவாக்கியவர். பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் சுரதாவோடு நீண்ட காலம் பழகியவர்.
உங்களது பள்ளிப்பருவ வாழ்க்கையைப் பற்றி கூறுங்கள்...
என் பிறப்பு சாதகப்படி படிப்பு வராது. ஆடு மாடு மேய்க்கதான் லாயக்கு என ஜோசியர் சொல்ல என் குடும்பத்தினர் நம்பிவிட்டனர். எட்டாம் வகுப்பு வரை படித்த என்னை, எனது உறவினரும் கம்யூனிஸ்ட் பிரமுகருமான கோவிந்தசாமி வளவனூர் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்தார். நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி யானேன். எங்கள் உறவினரும் அப்போதைய அண்ணா வின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கோவிந்த சாமி, மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர்ப்பதாகச் சொன்னார். நான் தயங்கினேன், (குடும்ப கஷ்டத்தை எண்ணி). பிறகு அவரே வடலூரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். அங்கே தேர்ச்சிபெற்று ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பிறகு தொலைதூரக் கல்வி மூலம் பட்டப்படிப்பும் படித்து மேல்நிலைப் பள்ளியிலும் பணிசெய்தேன். ஜோதிடரின் வாக்கை முறியடிக்க என் வாழ்வில் திருப்புமுனையாக இருந்தவர்கள் இரண்டு கோவிந்தசாமிகள். பள்ளிக்காலத்தில் எனது ஆசிரியராக இருந்த சாம்பசிவ ரெட்டியார் முற்போக்கு சிந்தனையாளர், அவர்தான் என் மனதில் விதையாக ஊன்றினார். எழுத்தார்வத்தை, சுயமரியாதை எண்ணங்களை!
கவிதை எழுதும் எண்ணம் எப்படி வந்தது?
என் முன்னோர்கள் யாரும் பெரிய அளவில் படிப்பாளிகள் இல்லை. என் தாத்தா ராமசாமி பக்திப் புத்தகம், கதை, பாடல்கள் எல்லாம் பாடி மக்களைக் கவர்ந்துள்ளார். அவருக்கு மக்கள் மிகப்பெரிய மரியாதை அளித்துள்ளனர். அவரது மரபணு என்னுள் எழுத்தார்வத்தை உண்டாக்கியிருக்கலாம். மற்றபடி யார் சிபாரிசும் இல்லாமல் என் சொந்த முயற்சியினால் வளர்ந்தேன். ஆசிரியர் பணியின்போதே மதி ஒளி, தூது, தமிழ்நாடு, மாணவர் குரல் என கையேடுகள் நடத்தி னேன். நான் மட்டுமல்ல மாணவர்களையும் எழுத வைத்தேன். இதன்வழியே பாவேந்தரை சந்திக்கும் வாய்ப்பு உருவானது.
பாவேந்தர் மகா கோபக்காரர். நாங்கள் நடத்திய "களங்கம்' என்ற நாடக வசனப் பிரதியை எடுத்துக்கொண்டு பாண்டிக்குப் போனோம். எங்களை ஏற இறங்கப் பார்த்தவர், ""என்ன விஷயம் எதற்கு வந்தீர்கள்'' என்றார் கடுமையான குரலிலில். நாங்கள் பவ்யமாக அவரிடம் எங்கள் நாடக கையேட்டுப் பிரதியை நீட்டினோம். அதைப் பார்த்தவர் கொஞ்சம் சாந்தமாகி அதற்கு 40/50 மதிப்பெண் போட்டு சில திருத்தங்கள் செய்துகொடுத்தார். அதன்பிறகு பாவேந்தரை அடிக்கடி சந்திக்கச் செல்வோம்.
பாவேந்தருடனான அனுபவங்கள் சிலவற்றைக் கூறுங்களேன்?
ஒருமுறை கூட்டேரிப்பட்டு அருகேயுள்ள தேத்தாம்பட்டு தேசிங்கு என்பவரது திருமணத்தை நடத்திவைக்க பாவேந்தர் வந்திருந்தார். அவருக்கு பை எடுத்துக்கொண்டு துணையாகச் சென்றேன். தாலிஎடுத்துக் கொடுக்கும் நேரத்தில் மணமகன் அழ ஆரம்பித்துவிட்டான். பாவேந்தருக்கு கோபம் வந்துவிட்டது. ""ஏன்டா அழறான். இப்படி அழுதால் நான் தாலிலி எடுத்துக் கொடுக்கமாட்டேன்'' என்றார்.
நான் ஓடிப்போய் மணமகனிடம் தணிந்த குரலிலில் காதோரம் பேச, அவனோ அக்கா மகளையே பெற்றோர் திருமணம் செய்து வைப்பதால் வேண்டா வெறுப்பாக உள்ளதால் அழுததாகச் சொல்ல, அதைப்போய் பாவேந்தரிடம் சொன்னால் கோபப்பட்டு புறப்பட்டுப் போனாலும் போய்விடுவாரோ என்று பயந்து பவ்யமாக பாவேந்தரிடம், ""அய்யா மாப்பிள்ளைக்கு திருமணமாகப் போகும் சந்தோஷம். நீங்கள் வந்த சந்தோஷத்தையும் தாங்க முடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்'' என்று சொல்ல, ஒரு வழியாக திருமணத்தை நடத்திவிட்டு கூட்டேரிப்பட்டில் ஒரு டீக்கடையில் வந்து உட்கார்ந்தோம்.
பாவேந்தர் ஒரு வெண்சுருட்டை (சிகரெட்) எடுத்து பற்றவைத்து புகைத்தார். அப்போது அந்த வழியாக ஒரு மாட்டுவண்டி ஓட்டி வந்த மனிதர் ஒருவர், அந்த பெட்டிக்கடையில் ஒரு பீடியை வாங்கி அதை பற்றவைக்க சுற்றும்முற்றும் பார்த்தார். பாவேந்தரை நெருங்கி, ""கொஞ்சம் நெருப்பு கொடுக்க முடியுமா?'' என்றார். பாவேந்தருக்கு கோபம் வந்துவிட்டது. ""யாரிடம் கேட்கிறாய் நெருப்பு'' என்று கோபக்கனலில் சொல்ல, நான் அந்த மனிதரை தனியே தள்ளிக்கொண்டு போய் ""அய்யா அவருதான் பாவேந்தர் பாரதிதாசன் அவரிடம்போய் நெருப்பு கேட்கலாமா?'' என்றேன் ""யாரா இருந்தா என்ன... விருப்பம் இருந்தா கொடுக்கலாம்.
இல்லை என்றால் தரமுடியாது என்று சொல்ல வேண்டியதுதானே?'' என்று சாதாரணமாக கூறியபடியே மாட்டு வண்டியோடு புறப்பட்டுப்போனார். பாவேந்தர் என்ன அந்த கால சினிமா நடிகரா எல்லாருக்கும் தெரிந்திருக்க... கிராமத்து ஆசாமிக்கு பாவேந்தரை பற்றி எப்படித் தெரியும் என்று என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன்.
முன்பெல்லாம் மேடை நாடகங்கள் நடத்தும்போது அண்ணா, பெரியார், கலைஞர், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கே. போன்ற வி.ஐ.பி.க்களை தலைமை தாங்க அழைத்து வருவார்கள். அப்படிதான் ஒரு போலீஸ்காரர் விழுப்புரத்தில் தேவி நாடக சபா சார்பில் நாடகம் போட்டார். இதற்கு தலைமை தாங்க பாவேந்தரை அழைத்து வந்துள்ளார். தலைமையேற்று நாடகம் நடத்தி முடித்தனர். பாவேந்தரை யாருமே கண்டுகொள்ளவில்லை. தன்னை அழைத்து வந்த போலீஸ்காரரை தேடிப்பிடித்தார். ""நான் ஊருக்குப் போகணும்'' என்றார். ""போயேன்'' என்றார். ""நான்தான் பாரதிதாசன்'' என்றார். ""நீ யாரா இருந்தா என்னய்யா'' போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் அலட்சியமாக கேட்டும்விட்டார். நாடகம் காண வந்த அப்போதைய நகரசபைத் தலைவர் தியாகராசன், பாவேந்தர் பாண்டி செல்ல உதவி செய்து அனுப்பிவைத்தார். இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு பாண்டி கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் தன் நண்பர்களோடு டீ சாப்பிட்டபடி இருந்த பாவேந்தருக்கு, அவ்வழியே நாடகத்திற்கு அழைத்த போலீஸ்காரர் செல்வது தெரிந்தது. தன் நண்பர்களை விட்டு அவரை அழைத்து வரச்செய்தார். பாவேந்தர் அவரிடம் நலம் விசாரித்தபடியே தன் வீட்டுக்கு அழைத்துப் போனார். மனைவி பழனியம்மாளிடம், ""இவருக்கு வயிறு நிரம்ப சாப்பாடுபோடு'' என்றார். போலீசும் சந்தோஷமாக சாப்பிட்டார். அவர் சாப்பிட்டு முடித்ததும் பக்கத்து அறைக்குள் அழைத்துச் சென்றார். கதவை சாத்திவிட்டு நாலுபோடு போட்டார். ""இவன்தான் பாரதிதாசன். இப்ப தெரிஞ்சுக்க'' என்று சொல்லிவழிச்செலவுக்கு 50 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பிவைத்தார்.
பாவேந்தர் தலைமையில் திருமணம் நடந்தது எப்படி?
பாவேந்தரின் 70-வது பிறந்தநாளை கவியரங்க விழாவாகக் கொண்டாட முடிவுசெய்தோம். கரந்தை கல்லூரி முதல்வராக இருந்த நண்பர் ராமநாதன் மற்றும் சக நண்பர்கள் பாவேந்தரை விழாவுக்கு அழைக்கலாம் என்றனர். சிலர், ""அவரை அழைத்து வந்தால் நாம் சுதந்திரமாக கவிபாட முடியாது. தமிழை தப்பாகப் பேசினால் ஆற்காட்டு செருப்பால் அடிப்பேன் என்று அடிக்கடி சொல்லுவார். நாம் படிக்கும் கவியில் சிறுபிழை இருந்தாலும் போச்சு... விழா நடத்த முடியாது. அவரது படத்தை வைத்து நாமே நடத்திக்கொள்ளலாம்'' என்றனர். அவரது படத்தை வாங்க பாண்டிக்குப் போனோம். பவ்யமாக அவரை நெருங்கி, ""தங்கள் 70-வது பிறந்தநாளுக்கு உங்கள் படத்தை வைத்து விழுப்புரத்தில் கவியரங்கம் நடத்த அனுமதியும் படமும் வேண்டும்'' என்றோம். ""சரி சரி நடத்துங்கள் எனக்கு என்ன தருவீர்கள்'' என்றார். தலையைச் சொரிந்தோம். அவரே 70 வெண்பொற்காசுகள் (70 ஒரு ரூபாய் நாணயங்கள்) தரச் சொன்னார். சரியென்றோம். அவர் படத்தை வாங்கிக்கொண்டு வந்து விழுப்புரம் ஹேமாவதி சத்திரத்தில் வைத்து அப்பாதுரையார், ராமநாதன் திருக்குறளார், குன்றக்குடி அடிகளார் என பல அறிஞர் களை அழைத்து விழா நடத்தினோம். விழா செலவுக்கு என் மோதிரத்தை அடகு வைத்தேன்.
பாவேந்தருக்கு 70 வெண்பொற்காசும், படத்தையும் கொண்டுபோய் கொடுத்தாகனுமே என்று தயங்கினோம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ராமநாதனும், நானும் படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்குப் போனோம். (புகைப்படம் அப்போது எல்லாம் அதிசய பொருள்) பவ்யமாக படத்தை மட்டும் நீட்டினோம். விழா எப்படி நடந்தது, யார் யார் கலந்து கொண்டார்கள் என்று கேட்டார். விவரமாகச் சொன்னோம். ரொம்ப சந்தோஷமாகிவிட்டார். பொற்காசை எல்லாம் மறந்துவிட்டு மனைவி பழனியம் மாளை அழைத்து எங்களுக்கு சாப்பாடு போடச் சொன்னதோடு அவரும் எங்களோடு அருகே அமர்ந்து சாப்பிட்டார். அது மறக்கமுடியாத சம்பவம். இப்படிப் பட்ட நட்பு மூலம் என் திருமணத்திற்கு அவரை தலைமை தாங்கி நடத்தித் தருமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார்.
எனக்கும் அத்தியூர் நாராயணசாமி கவுண்டர் மகள் இந்திராணிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 19-5-1962 அன்று திருமண நாள். அதற்கு சில நாட்களுக்கு முன்பே பாவேந்தரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. திருமணத்தன்று காலை விக்கிரமபாண்டிபுரம் வந்துவிடுகிறன். அங்கிருந்து என்னை அழைத்துச் செல்லவும் என்று. அந்த கடிதம் மூலம்தான் இப்போதைய விக்கிரவாண்டி என்ற ஊரின் பெயர் விக்கிரமபாண்டிபுரம் காலப்போக்கில் மருவி விக்கிரவாண்டி என ஆகி யுள்ளதைப் புரிந்துகொண்டேன். அதன்படி எங்க ஊர் ரெட்டியார்வீட்டு வில்வண்டியை இரவல் கேட்டு வாங்கி ஓட்டிக்கொண்டு போய் பாவேந்தரை அழைத்து வந்தோம். என் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். பாவேந்தர் தலைமையேற்று நடந்த எங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாகவே அமைந்தது.
சுரதாவுடனான உங்களது அனு பவத்தை பகிர முடியுமா?
முதன்முதலிலில் கவிஞர் கண்ணதாசன் நடத்திவந்த "தென்றல்' இதழுக்கு பல கவிதை கள் அனுப்பினேன். அவர் என் கவிதைகளை வெளியிட்டு வாய்ப்புக் கொடுத்தார். அதேபோல் சுரதா நடத்தி வந்த காவியம், இலக்கியம் இதழ்களில் பாவேந்தரின் "குயில்' ஆகிய இதழ்களில் எழுதும் வாய்ப்பு பெற்றேன். அதன்மூலம் பல கவிஞர்கள் மத்தியில் அறிமுகமானேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவரான சிதம்பரம் செட்டியார் மகாபலிலிபுரத்தில் ஒரு கவியரங்க விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தார். அதில் 50-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிபாட உள்ளதாக போட்டிருந்தது. அதிலே என் பெயர் திருமதி. சீத்தா என அச்சிடப்பட்டிருந்தது. என்னை பெண் கவிஞர் என்று எண்ணிவிட்டார்கள்போல, நானும் கவிபாடச் சென்றேன்.
அறிமுக விழாவில் ஒவ்வொரு கவிஞர் பெயரையும் வாசித்தனர். என் பெயரை திருமதி. சீத்தா என்று அழைக்க நான் எழுந்து நின்று வணக்கம் சொன்னேன். எல்லாரும் என்னைப் பார்த்ததும் கலகலவென சிரித்தனர்.
கவிஞர்களுக்கு பரிசுப்பை கொடுத்தார்கள். சிதம்பரம் செட்டியார் மனைவி லட்சுமியம்மாள் எனக்குரிய பையை அவரது பேத்திமூலம் கொண்டுவந்து கொடுத்தார்.
அதை பிரித்துப் பார்த்தேன். உள்ளே வளையல், தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம், ரவிக்கைதுணி என பெண்களுக்கான பொருட்கள் உள்ளே இருந்தன. பக்கத்திலிருந்த கோவை நண்பர் எட்டி என் பையைப் பார்க்க படக்கென மூடிக்கொண்டேன். பெண் கவிஞர் என்றே பலரும் நினைத்து அதற்கான பரிசுப்பொருள் பெற்றது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம்.
இந்த கவியரங்கத்திற்கு கவிபாட பேராசிரியர் அப்துல் காதர், வேழவேந்தன், மயிலை சீனி வேங்கடசாமி, நாகமுத்தப்பா, கோவை இளஞ்சியன், மறைமலை அடிகள், தேவநேயப்பாவாணர் என பல அறிஞர்கள் வந்திருந்தனர். அந்த விழா முடித்த கையோடு அப்படியே சென்னை சென்றேன். கவிஞர் சுரதாவை சந்தித்து விட்டுதான் ஊர் திரும்புவது என்று அவரது வீட்டு முகவரி கதவு எண்: 13, அடைஞ்சான் பிள்ளை தெரு, மைலாப்பூர் சென்று அவரது தெரு, வீட்டு எண்ணை கையில் குறித்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகப் பார்த்தபடியே சென்றேன். 13-ஆம் எண் வீடு வந்தது. அந்த வீட்டு திண்ணையில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரை அணுகினேன். ""அய்யா இது 13-ஆம் நம்பர் வீடுதானே'' ""ஆமாம்'', ""இங்கே கவிஞர் சுரதா குடி யிருக்கிறாராம்'' ""ஆமாம்'', ""அவரைப் பார்க்கணும்'' என்றேன். ""நீ யார்'' என்றார் சற்று கோபக்குரலிலில். ""நான் பனப்பாக்கம் சீத்தா'' என்றேன். ""நீதான் சீத்தாவா'' என்றார். நான் பதட்டத்தோடு, ""சுரதா அய்யா எப்ப வருவார்'' என்றேன். ""இதோ இங்கு வந்துட்டாரய்யா சுரதா'' என்று பலமாகச் சிரித்தபடியே என் தோளில் சந்தோஷ மாக கைபோட்டபோதுதான் தெரிந்தது அவர்தான் சுரதா என்று.
சுரதாவின் கவியரங்கங்களில் பங்கேற்றதுண்டா?
அறிமுகமாவது வரை, கவிதை, கடிதம் மூலமே பேசினோம். நேரில் பார்த்ததில்லை. என்னிடம் பேசியபடியே அழைத்துப்போய் காபி வாங்கிக்கொடுத்து உபசரித்து நான் அனுப்பிய கவிதை கள் பற்றி பாராட்டிப் பேசினார். அப்போது முதல் அவரது நட்பு மிக நெருக்கமாகியது. எனது குடும்பத்தில் மகன் அறிவண்ணல், மகள்கள் அன்புச்செல்வி, அறிவுச் செல்வி, அனிச்சமலர் ஆகியோரது திருமணங்களை அவர்தான் நடத்திவைத்தார். என்னை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட மிகப்பெரிய கவிஞன் என்று புகழ்ந்து பெருமையோடு பேசுவார். நான் சீத்தா வின் பாட்டுப் பயணம் என்ற தலைப்பில் கவிதைநூல் வெளியிட்டேன். தலைப்பைக் கண்டு பாராட்டினார்.
பல புது புதுக்கவிஞர்களை உருவாக்கினார். அதற்காக பல தலைப்புகளில் கவியரங்கம் நடத்தினார். மரங் களுக்கிடையே பலகை இணைத்து தளம் அமைத்து அங்கே உட்கார்ந்து பரண் கவியரங்கம் நடத்தினார். அதேபோல் ஆகாயத்திலும் கடல்மீதும் கவியரங்கம் பாடவைத்து புதுமை செய்தார் சுரதா.
பாவேந்தர் இந்திய தலைநகரான டெல்லிலிவரைகூட போனதில்லை. விமானம் ஏறியதில்லை. அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். மீதமுள்ள கவிஞர்களுக்காவது அந்த வாய்ப்பு அமையவேண்டும் என்று பேசியதோடு அதைச் செயலிலிலும் செய்துகாட்டினார். காங்கிரஸ் அமைச்சரவை யில் மத்திய மந்திரியாக இருந்த தங்கபாலுவிடம் சொல்லி சென்னையில் இருந்து திருச்சி வரை விமானத் தில் கவிஞர்களை அழைத்துப் போவதற்கு ஏற்பாடு செய்தார் சுரதா. அப்படிப் போகும்போது பறந்தபடியே வானில் கவியரங்கம் நடத்தப்படும் என்றார். இதற்காக 150-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை நிறைந்த காகிதங்களோடு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் ஏறினோம். எங்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த தங்கபாலுவும் எங்களோடு வந்தார். கவியரங்கம் தொடங்கியது. தங்கபாலுவை வரவேற்பு கவி வாசிக்கச் சொன்னார் சுரதா. ஆவர் நீண்ட வரவேற்பு கவிதையை வாசித்து முடிக்க விமானம் திருச்சியில் எங்களைத் தரையிறக்கியது எங்களுக்கு சிரிப்பை வரவழைத்தது. இருந்தும் விமான பயண அனுபவம் ஒருவித சுகத்தையே கொடுத்தது கவிஞர்களுக்கு.
சுரதாவின் நட்பால் புகழடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பது மிகப்பெரிய பெருமையை, சந்தோஷத்தை தருகிறது.
பணிக்காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள்?
நான் பெரியாரை அழைத்து வந்து தியாகதுருவத்தில் பகுத்தறிவாளர் மன்றம் தொடங்கி நடத்தினேன்.
அப்போது முதல்வர் காமராசர். அவரிடம் அரசுப்பள்ளி ஆசிரியரான நான் அவர் கடவுள் மறுப்பு கொண்ட பெரியாரை அழைத்து வந்து விழா நடத்தலாமா என என் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லிலி சில காங்கிரசார் நேரில் சென்று புகார் கொடுத்தார்கள். அவர் புகாரைப் படித்துவிட்டு, "எல்லா ஆசிரியரும் ஏதோ ஒரு கட்சியில், இயக்கத்தில் அனுதாபியாகத்தான் இருப்பார்கள், இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை என்றால் ஒரு ஆசிரியரும் வேலை செய்யமுடியாது. போங்கணும் போய் வேலையைப் பாருங்கள்' என்று சொல்லிலியுள்ளார்.
அதேபோல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அரசு சார்பில் பாவேந்தர் விழா நடந்தது. சென்னை கலைவாணர் அரங்கில் சுரதா தலைமையில் கவியரங்கம். அதில் என்னையும் கவிபாட அழைத்திருந்தார்கள்.
அப்போது நான், ""ராவணனை காதலிலித்தேன் இந்த சீத்தா. எதற்கு என்றால் கோழை ராமனையே விரும்பாத சீத்தா இனத்தலைவனான தமிழ் முதல்வன் என்பதாலே'' என்ற கவிதையை வாசித்தேன். இதை யாரோ அ.தி.மு.க. மந்திரிகள் எம்.ஜி.ஆரிடம், ""புலவர் சீத்தா கலைஞருக்கு நெருக்கமான கவிஞன். அதனால்தான் உங்கள் பெயரை ஏளனம் செய்வதுபோல கவிதை வாசித்துள்ளார்'' என்று சொல்ல. அப்புறமென்ன தியாகதுருவத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சரை பள்ளிக்குப் பந்தாடினார்கள். பிறகு ஊட்டி, சிதம்பரம் என பல ஊர்களுக்கு பணி மாறுதல்கள். இப்படிப்பட்ட காலத்தில் மீண்டும் முதல்வர் எம்.ஜி.ஆர். கரத்தால் பரிசு வாங்கும் நிலையும் வந்தது.
அரசு சார்பில் பாரதிதாசன் பற்றி விருத்தத்தில் கவிதைப்போட்டி அறிவித்திருந்தார்கள். அதற்கான கவிதையை எழுதி அனுப்பினேன். அதை நானே மறந்து போன நிலையில் அதற்கு பரிசு அளிப்பதாகவும், கலைவாணர் அரங்க விழாவுக்கு வரச் சொல்லிலி அரசின் அழைப்பு வந்தது. என் கவிதை முதல் பரிசுக்கு தேர்வாகி யுள்ளது. சீத்தா தி.மு.க.காரன் வரமாட்டேன் என்று இரண்டாம் பரிசாக மாற்றிவிட்டார்களாம். அதையும் வாங்க விழாவிற்கு வராவிட்டால் அதிகாரிகள் மூலம் தரச்சொல்லி முதல்வர் சொல்லிலியுள்ளதாக தகவல் கிடைத்தது. எனக்கு பரிசு அறிவிக்க வேண்டாம் என்றுகூட சிலர் எம்.ஜி.ஆரிடம் சொல்லிலியுள்ளனர். ""அது தவறு. திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிலிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா சொன்னதை மறக்கலாமா'' என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதன்பிறகே அந்த விழாவிற்கு போய் முதல்வர் கொடுத்த பரிசை பெற்ற கையோடு கலைஞர் அவர்களை சந்தித்து விவரமும் சொன்னேன்.
கலைஞர் என்றதும் ஞாபகம் வருவது...
தி.மு.க.வில் விழுப்புரம் மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பதவியில் உள்ளேன். கலைஞரால் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது தமிழ்மொழிக்கு. எனவே கலைஞரின் ஊரான திருக்குவளையில் முத்தமிழ் விழா எடுக்க எங்கள் உலகத்தமிழ் கவிஞர் பேரவை முடிவு செய்தது. இதற்காக கலைஞரை நேரில் சந்தித்து விழா எடுக்கும் விஷயத்தைச் சொன்னேன்.
""அதற்கு நான் என்ன செய்யவேண்டும்'' என்றார். ""நீங்கள் எதுவும் செய்யவேண்டாம் அனுமதி மட்டும் கொடுத்தால் போதும்'' என்றேன். ""நடத்துங்கள்'' என்றார்.
அதன்படியே முதல்நாள் காலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணிநேர முத்தமிழ் விழா நடந்தது. இதிலே கவியரங்கம், தெருக்கூத்து, பட்டி மன்றம், நடனம், பாட்டரங்கம் என விழா களை கட்டி சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கலைஞரின் நண்பர் ஆரூர் வீரன்புவிடம் போன் மூலம் கேட்டு சந்தோஷப்பட்டார் கலைஞர். இந்த விழா நடத்த அப்போதைய மத்திய அமைச்சர் வேங்கடபதி, மாநில மந்திரி பழனிமாணிக்கம் உட்பட கட்சி முன் னோடிகள், அறிஞர்கள், சான்றோர்கள் உடனிருந்து நடத்தி உதவினார்கள். மிக மிக மன நிறைவான விழா அது.
இளம் கவிஞர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
புதுக்கவிஞர்கள் புதுமைக் கவிஞர்கள் நிறைய பேர்கள் ஆர்வமாக வருகிறார்கள். நாட்டையே மாற்றி சமுதாய புரட்சி ஏற்படுத்தும் அளவிற்கு திறமை ஆற்றல்கள் உள்ளன. அவர்கள் பார்ப்பதை, கேட்பதை, மனதால் உணருவதை எழுத்து வடிவில் கொண்டுவரவேண்டும். கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறமுடியும். பழமை மாறாத புதுமைகளை புகுத்தி கவி புனையலாம். எழுத்துக்கு எந்த பின்புலமும் தேவையில்லை. சிந்தனை, அறிவாற்றல், விடாமுயற்சி இருந்தால் போதும்.