தமிழ்ப் பண்பாட்டை நாட்டுப்புறக் கலைகள் மூலம் எதிரொலித்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியை, கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே தூத்துக்குடியில் "நெய்தல்' கலைவிழாவாக, கட்சி முத்திரை எதுவும் இன்றி அரங்கேற்றியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதி.
தூத்துக்குடி கடல் சார்ந்த நகரம் என்பதால் "நெய்தல்' என்ற பெயரில் இந்த கலைவிழாவை அவர் நடத்தி இருக்கிறார்.
ஜெகத்கஸ்பர் உள்ளிட்ட ஆளுமைகளுடன் சேர்ந்து "சென்னை சங்கமத்தை' முன்னெடுத்த கனிமொழியே, இப்போது தூத்துக்குடியில் 4 நாள் நிகழ்வாக, "நெய்தல்' கலைவிழாவை நடத்தி, தென்மாவட்ட மக்களை மகிழ்வில் பூரிக்க வைத்திருக்கிறார். கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 4 நாள் நடந்த நெய்தல் கலைவிழாவில், தமிழகத்தின் தொன்மையான கலை நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டன.
முதல் நாளின் சிறப்பு நிகழ்வாக கலைமாமணி சின்னப்பொண்ணு குவினரின் இசை நிகழ்ச்சியும், அடுத்தடுத்த நாட்களில் ஐந்திணை குழுவினரின் இசை நிகழ்ச்சி, செந்தில்- ராஜலட்சுமி இசை நிகழ்ச்சி, ஆந்தக்குடி இளையராஜா - கிடாக்குழி மாரியம்மாள் இசை நிகழ்ச்சி என நிகழ்ச்சிகள் வரிசை கட்டி, தூத்துக்குடியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின.
ஒயிலாட்டம், தேவராட்டம், கும்மி - கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளோடு, மிகவும் அருகிவரும் துடும்பாட்டம், நெய்தல் நிலத்திற்கே உரிய களியல், கணியான் கூத்து என பழம்பெருமை வாய்ந்த கூத்துக்கலைகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியது நெய்தல். கலைநிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, பல்வகை உணவு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, முத்துநகர் முத்துக்கள் என்று திருநங்கை சகோதரிகளுக்கென சிறப்பாக ஒரு உணவு அரங்கும் அமைக்கப்பட்டிருந்ததோடு, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு உணவு வகைகளைப் பந்திவைக்கும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கூடுதல் கவனத்தையும் அன்பையும் பெற்றது.
தோடர் பழங்குடியினரின் பூத்துக்குழி ஆடை, காணி பழங்குடியினரின் வாழ்வியல் அங்காடி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை, காயல்பட்டினப் பெண்களால் நடத்தப்படும் அபதி கைவினைக் கலை அங்காடி என கைவினைப் பொருட்களுக்கும் பல அரங்குகள் அங்கே திறக் கப்பட்டிருந்தன. மேலும் அறிவுக்கு விருந்து வைக்கும் புத்தக அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.
ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் ஆகிய நிறுவனங் களின் உதவியோடும், மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையோடும் அரங்கேறியது நெய்தல். இந்த நிகழ்ச்சியில் கனிமொழியோடு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் என ஒரு பெரும் படையே கைகோத்துச் செயல்பட்டதைக் காணமுடிந்தது.
தொன்மையான தமிழ்க்கலை வடிவங்களின் மேன்மையை நிலைநாட்டுவதாக நெய்தல் அமைந்திருந்தது. இதுபோல் தமிழகம் முழுக்க பண்பாட்டுத் திருவிழாக்கள் நிகழ்த்தப்பட வேண்டியது, காலத்தின் அவசியம்.