தமிழ்க் கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கடந்துவந்த பாதை தொன்மை மரபுடையது.
பா என்றும், செய்யுள் என்றும் பழைய சொல்லாட லில் இருந்து தன்னைக் கவிதை என்ற வழக்கிற்குப் புதிப்பித்துக்கொண்டது.
பின்னாளில்தான் கவிதை ஒரு படிநிலை வளர்ச்சியைக் காலவோட்டத்தில் கண்டுவந்துள்ளது. இது தொடரோட்டமான வளர்ச்சி. பழமையான பாடுபொருளிலிருந்தும், வடிவ ஒழுங்கிலிருந்தும் புதுபுதுக் கிளைகளாகப்படர்ந்து வருவதைத் தமிழ்க் கவிதை வரலாற்றில் காண்கிறோம். பழமையின் வார்ப்பில் பக்குவம் பெற்றுப் புதுமை நாட்டத்தில் புகுவது என்பது உலகக்கவிதை வரலாறு காட்டும் உண்மையாகும்.
இருபதாம் நூற்றாண்டுகளிலும், அதற்குப் பின்னுள்ள ஆண்டுகளிலும் ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் புதுமை காணும் ஆர்வம் பெருகிற்று. இதனால் கவிதை, புதியதொரு களத்தை நோக்கி நடைபோட்டது. பாரதி, பாரதிதாசனுக்குப் பின் மிகப் பெரிய அளவில் மாற்றம் காணுவதற்குப் புதிய தடம் வழியமைத்துக்கொடுத்தது. புதுக்கவிதை என்ற பெயரில் அது உருவாகி வளர்ந்தது. மேலும் புதிய திசைநோக்கி நவீன கவிதை என்ற பெயரில் தன் திசையைக் காட்டிக்கொண்டு வந்தது. இன்றுள்ள கவிதை உலகம் வெவ்வேறான பாடுபொருள்களிலும், வடிவத்திலும் புதிய பாதைளை உருவாக்கியது. மூத்த கவிஞர்களும், இளைய தலைமுறையினரும் புதிது புதிதான சிந்தனைத்தடத்தில் பயணித்து வருவதைப் பார்க்கலாம். சொல்லும் முறையிலும் புதிய போக்குக் காணப்படுகிறது.
புதியன விரும்பு, வெடிப்புறப் பேசு என்றெல்லாம் சொல்லிச்சென்ற பாரதியின் வீறுணர்ச்சி ஆண்களைக் காட்டிலும் பெண்களிடம் ஓங்கியிருப்பதை இன்றைய கவிதை உலகில் காணமுடிகிறது.
தமிழ்த் தேசியத்திலிருந்தும், இந்திய தேசியத்திலிருந்தும் பின்னர் உலகளாவியச் சிந்தனைக்குமாகச் சிறகு விரித்துள்ளது இன்றைய கவிதை வானம். கவிதை சிலருக்குக் கைவாள்; மற்றும் சிலருக்கு நுட்ப உணர்ச்சியை வெளிப்படுத்தும் மெல்லிய அக உணர்வின் ஒலி, இன்னும் சிலருக்கு அகச்சூட்டை வெளியே தள்ளும் கருவி- இப்படித் தன்னைப் பலவித நோக்குகளில் வரித்துக்கொண்டுள்ளது கவிதை.
கவிதை கவிதைதான் என்று சொன்னாலும் அதனை வேறு படுத்திக் காட்டக் கூடிய நிலையில் அதன் இலக்கணமும் மாறுபட்டு வருகிறது. ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் கவிதை வடிவத்திற் கெனத் தனித் தன்மை யும் கவனத்திற்குரியதாகிறது.
’’இலக்கியத்தின் மிகச்செறிவான சுருங்கிய வடிவம் கவிதை. மிகக்குறைந்த அடிகளில் மிக அதிகமானதைச் சொல்வது கவிதை. தனது அடிகளின் சிறப்பினாலோ அன்றி என்ன நிகழ்ந்தது என்பதன் மேல் மிக ஆற்றலோடு குவியப்படுத்தப்படுவதினாலோ, மற்றபடியான மொழியைவிடக் கவிதை மொழி அதிக அழுத்தத்தைப் பெற்றுள்ளது. அவ்வப்போது ஒளியை யும், சூட்டையும் ஒருங்கே தருகின்ற மொழி அது.
என்ற பூரணசந்திரனின் கூற்று இன்றைய கவிதை மொழியின் நடையியல்பை எடுத்துரைப்பதற்குரிய சான்றாகும். எளிமையான மொழிநடை இன்றைய கவிதைகளில் அமைந்திருந்தாலும் புரிந்துகொண்டு போற்றுவதற்கும், சில சமயங்களில் ஏமாற்றும் எளிமையாக ஆவதற்குமான வாசலையும் அது திறந்து வைத்துள்ளது.
கவிதை என்பது சொல்வது அன்று; உணர்ச்சிப் பெருக்காக உருவாவதுமன்று; மடை திறந்த வெள்ளம் போல் ஓடி வருவது மன்று. அது ஓர் அனுபவம். காட்சியினை ரூபமாகவும் அல்லது அரூபமாகவும் சொல்லலாம் என்ற வெளிப் பாட்டை விதைத்து வருகிறது இன்றைய கவிதை உலகச் சிந்தனை. கவிதை மொழி பண்பாடு, கலாச்சாரம் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டுக் கவிதையில் தொனி ஏற்படுகிற போதுதான், வார்த்தைகளுக்கிடையே -உருவாகிற அர்த்தங்களுக்கிடையே உள்ள மௌனம் கவிதை மொழி ஆகிறது என்ற வகையில் நவீனக் கவிதையை நோக்குகின்றனர்.
இன்றைய கவிதையில் பன்முகத் தன்மை கூடுதலாக இருக்கிறது. எளிதாகப் பொருள் புரியாத கவிதைச் சூழலில் வாசகர்களின் வாசிப்புத் திறனில் பொருள் பிடிபடாமல் இருப் பதையும் காணலாம். பொருள் புரிதலில் கவிதையோடு வாசகனும் கவிதையாக இணையவேண்டும் போலும்! இப்படிப் புதுக் கவிதைக்காரர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர்.பன்முறை வாசிப்பிற்கு வாசகரை இட்டுச் செல்லும் படி உள்ளது நவீன கவிதை.
உணர்ச்சியுடைய மனிதனுக்குக் கவிதை உணர்வு சிறிதாவது இல்லாமல் இருக்காது. ஒவ்வோரிடத்தும் கவிதை மனம் இருக்கவே செய்யும். கவிதையானது நமக்கு நெருக்கமாக இருக்கிறது. நம் வாழ்வோடு ஒட்டிக்கொண்டு வருகிறது. நம்மோடு பயணிக்கிறது. நமக்கிருக்கும் ஆசைகள், உறுதி, கனவு, இலட்சியம் முதலியன கவிதை மனத்தைக் கிளர்ந்தெழவே செய்யும். இன்றைய நிலையில் கவிதைத் தளத்தில் பெரிதாக இடம்பிடித்துள்ள நுகர்வுக் கலாச்சாரமும் அதனைக் குறிவைத்தே இயங்கும் அது தொடர்பான ஏனைய பிறவும் நவீனக் கவிதையின் பரப்பை மிகுதியாக்கி யிருக்கின்றன.
இன்றைய கவிதையைப் பற்றி வீ. அரசு சுட்டிக் காட்டும் ஒரு தொடர்’’ கவிதை என்பது சமகால வாழ்வின் கோபம்’ என்பதாகும். இது சமகால நிகழ்வுகளின் செயற்பாட்டுக்குப் பொருந்தும்.
கவிதை அவரவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. தாஜ்மகாலைப் பார்க்கும் ஒருவர் அழகியல் வழி நிரம்பி வழியும் உணர்ச்சியாக, ‘ பளிங்குக் கல்லிலே வடித்த கவிதை என்கிறார். வெள்ளைத் தாமரை மொட்டு என்கிறார் ஒரு கவிஞர். பெண்டளையான் இயன்ற வெண்பா என்கிறார் இன்னொரு கவிஞர். புதைத்தது ரோஜா, முளைத்தது மல்லிகை என்கிறார் வேறொரு கவிஞர். இவையெல்லாம் அழகியல் உணர்ச்சியின் வெளிப்பாடு.
வீ. அரசு சொன்ன வார்த்தைகளுக்கு நெருக்கமாய் தாஜ்மகால் ’ஒரு ஏழையின் காதலை ஏளனம் செய்திருக் கும் சின்னமாகவும், ஆயிரமாயிரம் கொத்தடிமைகளின் வியர்வையாகவும்’ காணுகிறான் இந்திக் கவிஞனான சாஹீர். கவிதை அவரவர் பார்வையில் வித்தியாசப்பட வேண்டும். வித்தியாசமாகச் சொல்வதே கவிதையாயிருக்கிறது.
எதையும் புதிய கோணத்தில் சிந்தனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இன்றைய கவிஞர்களிடையே வளர்ந்துவருகிறது. நாக்கால் சொல்லும் கருத்தை விடுத்து, அதனைக் கையால் பேசினால் எப்படி உணர்த்தலாம் என்று சிந்திக்கிறார் ஒரு கவிஞர். சிக்கனமான இன்னும் சொல்லப்போனால் ஆத்தி சூடி வடிவத் தைக் காட்டிலும் சுருக்கமாக, ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்கிறார். ’கைந்நா’ என்று எழுதி விடுகிறார்.(பிச்சினிக்காடு இளங்கோ எழுதியது) ஆனாலும் இது கவிதையாகி விடாது. சொற் சிக்கனம் இதில் மிளிர்கிறது அவ்வளவுதான்!
கவிதை என்பது ஒரே அடியாகச் சுருங்கிப் போய்விடக்கூடாது என்று கருதிய பாரதி ஹைகூ வடிவத்தை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு நிறுத்திக் கொண்டார்.
கவிதை எதையும் செய்யும். தீயாகிக் கூட உள்ளத்தைப்பொசுக்கலாம். தீ கூட இனியது என்று பாரதி சொல்லவில்லையா? அந்தப் பார்வை வித்தியாசமானதுதானே!. கவித்துவம் நிறைந்த வார்த்தையல்லவா அது. தீயாகிய நெருப்பு வேறொரு கவிஞர் பார்வையில்,
’நெருப்புத்தான் பெண்
அம்மாவிற்கு அடிவயிற்றில்
மாமியார்க்கு அடுப்படியில் (அறிவுமதி)
மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டும் என்றார் தலைமுறை முந்திய கவிஞர் கவிமணி. இங்கே இருவித கோணங்களில் பெண் நோக்கப் படுகிறாள். பெண்ணைப் பெற்றால் அவளை வளர்த்து ஆளாக்குவதில், வெளியுலகில் அவளை நடமாட விடுவதில் உள்ள சிக்கல்களைச் சிந்திக்க வேண்டியவளாகிறாள். புகுந்த வீட்டிலோ அவளை அடிமைப்படுத்தும் மாமியார்களின் போக்கும் இங்குச் சிந்திக்கப்படுகிறது.
இதே நெருப்பு வேறொரு கோணத்தில் குடந்தையில் நிகழ்ந்த நிகழ்ச்சியை ஆழமாக- சோக உணர்வோடு பதிவு செய்கிறது.
’ நெருப்பே!
எந்தக் கோணத்தில் எரிந்தாலும்
கொழுந்துவிட்டுத்தானே எரிவாய்
ஏன்
கும்பகோணத்தில்
மட்டும்
கொழுந்துகளை
விடாமல் எரித்தாய் ’( நெல்லை ஜெயந்தா)
-என்று கேட்பதில் கூடக் கவித்துவம் நிரம்பியிருக்கக் காணலாம்.
தனிமனித உணர்ச்சியைத் தன் வயமாக விரிவாகச் சொல்வதற்கு இடம் தருகிறது இன்றைய கவிதை. சான்றாக, பா.சத்தியமோகனின் கவிதை ஒன்று இப்படிச் செல்கிறது.
’நீங்கள் பார்ப்பதற்குள் குழந்தை விரலில் பிளேடு
அழுத்தமாய்க் கீறி| குருதியாகிறது./ இருக்கை விட்டு எழுவதற்குள் இறங்கவேண்டிய இடத்தைப் பேருந்து கடக்கிறது ஆதரவுக்காக உரமும் குச்சியும் வைக்கும் முன் பட்டுப்போகின்றன ரோஜா பதியன்கள்/ விடுப்பு கிடைத்துப் பணமும் கிடைத்து, உறவு களைப் பார்க்கச்செல்லுமுன் , வரவேண்டாம் என்ற தந்தி/. அன்பளிப்பைத் தெரிவு செய்வதற்குள் நண்பனுக்கு அடுத்த நாள் பிறந்த நாள் கடக்கிறது./ இணையாய் ஓடும் இன்னொரு ரயிலின் ஓட்டத்தைக் காணவிடாமல் அடிக்கிறது. தண்ட வாளத்தில் மாட்டிக் கூழான கன்றுக் குட்டி வீடுவீடாய் விலாசம் தேடி அலையும்
போது - அதே ஊரில் என்னிடமே வழி கேட்கிறான் ஒருவன்./ எதில் எதுவென எதன் நடுவே நாமென யோசிக்கும் வினாடி யோசிக்கவே படாமல் ஓடும் நாட்கள் இளமையுடன் இருக்க நிமிடத்துக்கு நிமிடம் நெருங்குகிறது முதுமை’
-இந்தக் கவிதை, இயல்பான ஓட்டத்தில் நிகழ்வு களைப் பதிவு செய்திருப்பதோடு எளிமையும் காட்சிப் படுத்தலும் எதார்த்தமான தளத்தில் இயங்கியுள்ளது. எந்த ஒன்றிலும் நாம் எதிர்பார்ப்பது நழுவித்தான் போய் விடுகிறது. காலம் விரைந்து கடப்பதைக் கவிதை ஆழமாக வெளிப்படுத்துகிறது. அனுபவங்கள் இங்கு உணர்வு கொள்ள வைப்பதால் சொல்லும் முறையும் மனத்தின் தன் வெளிப்பாடும் கவிதையை உயர்த்திப்பிடிக்கின்றன.
இன்றைய கவிதைமொழி மிகச்சரளமாகப் பேச்சு மொழியைப்பயன்படுத்தத் தவறவில்லை. தொல்காப்பியம் இதனைச் சேரிமொழி என்று பேசுவதைக்கூட இதில் அடக்கலாம். பழமலய் கவிதைகள் இப்படிப்பட்டவை. இவரது பாணியில் வித்யா ஷங்கரின் கவிதை ஒன்றை எடுத்துக்காட்டலாம்.
’குடிக்கப்பயந்து| நண்பரின் மிலிட்டரி குடுத்த குவார்ட்டரை முதன்முதலாகக் குடித்தது அம்மாவோடு தான் தூக்கம் வராது புரண்டால் எதையாவது குடிச் சிட்டிருப்பேன், இப்பவும் யோசனை சொல்பவள் அம்மாதான்; தெருச்சண்டையிலே கரண்டைக் கால் மயித்துக்கு ஆவியா| எம்புள்ள பேச்செடுத்தாற குர வளைய கடிச்சுருவேன் என்றதில் ஊறிக்கிடந்த மறத்தி யாய் அப்பா இருக்கும்போது இப்பவும் அம்மா என் காவல் தெய்வம் எட்டூரு சண்டைக்கும் எதிர்ச்சண்டை போடவும் இதனை வயசிலும் அம்மா இருக்கிறாள் ஆதி மனுஷியாய் சூலம் ஏந்தாமல் சூன்யம் வெறிக்காமல் நூல் சேலை கொசுவத்தில் எல்லாத் தாயும் போல!
-இப்படி அம்மாவைப் படம் பிடிக்கும் கவிதை வித்தியாசமானது.எதார்த்தமான பேச்சுவழக்கு கவிதை யின் ரசிப்புத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கவில்லை. அம்மாவின் நடைச்சித்திரத்தின் ஒரு பகுதி! அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கவிதையில் உணர்த்தி யிருக்கும் பாணி உண்மைக்கு அணியமாய் வந்து நெஞ்சில் உட்கார்ந்துவிடுகிறது. அம்மாவை வேறு கோணத்தில் படம்பிடித்துக்காட்டும் சமயவேல் , 'அம்மா முற்றிலும் குணமாகி வந்து முற்றம்
தெளித்துக் கோல மிடுவாள்……அம்மா
இறந்துபோன குளிர் காலம் ஞாபகம் வருகிறது'- என்கிறார்.
யுகபாரதியின் கரிசனம் அம்மாவிடம் பாசத்தை வேறுவிதமாக உணர்த்துகிறது. ’’ இந்தத் தீபாவளிக்காச்சும் அம்மா வுக்கு உடுக்க ஒரு கண்டாங்கிச் சேலை யாவது வாங்கிப்போகணும் “ -என்று எளிய வார்த்தைகளில் தன் எண்ணத்தை யும் ஏழ்மைநிலையையும் ஒன்றாகக் கலந்து நெஞ்சைக் கரையச்செய்கிறார். இப்படிப்பேச்சு மொழி, கவிதைக்கு வீரியம் தருகிறது. இந்தப் பேச்சு மொழி எந்த அளவுக்குக் கவிதைக்குள் கனமான பொருளையும் அடர்த்தியான வார்த்தைகளின் வீச்சிலும் காணக் கிடைக்கிறது என்பதை கவிமுகிலின் எழவுக்கடை என்ற கவிதை இப்படிக் காட்டும் -
’யாரு சாவையும் தாங்கமாட்டம தள்ளாடுவா| ஈனமா வாழ்ந்தாலும் இவ ஒப்பாரியால சாவும் பெருமையுறும். இவள் ஒப்பாரிக்காகவே ஒரு தடவ சாவலாம். ஊருல யாரு வீட்டுத் துக்கமும் இவ வீட்டு எழவாகும். நடவு, களை பறிக்க ஆளு கூப்பிட்டாலும் எழவு கடைக்குப் போறேன்னு தட்டிக் கழிச்சிடுவா.. சாவுக்கடையிலே ஒப்பாரி வைக்க வைதேகி இல்லையான்னு கேட்டப்ப, அவதான் பொணமா படுத்துக்கிடக்குறான்னு அக்கா சொல்லும்’
- எந்தச் செயற்கைப் பூச்சுமில்லாமல் , வைதேகியின் ஒப்பாரியில் பேச்சு மொழியின் வீச்சு கவிதைக்கு உயிர்கொடுப்பதைக்காணலாம்.
அகவயப் பயணத்தில் பயணிப்பதும் , உரத்த குரலில் புறவயமான சூழலுக்குத் தான் ஆட்படவேண்டும் என்ற தீவிரமாகச் சிந்திப்பதும் பழநி பாரதி வரிகளில் இவ்வாறு வெளிப்படுகிறது.
’காலமே என் இளமையைச் சீட்டாடித் தோற்காதே செலவழி ஒரு போராளியின் கடைசீ துப்பாக்கி ரவையாக’
-காட்சி ஒன்றைப் போகிற போக்கில் காணுகிற போதும், அக்காட்சியினூடே தான் சொல்ல வரும் கருத்தை இயல்பாகப் பொருத்தும்போதும் அச்சூழ்நிலையில் கவிதை பிறக்கும் என்பதற்கு கல்யாண்ஜியின் கவிதை ஒன்று, ’சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளில் பழங்கள்
தலைக்கு மேலே வேலை இருப்பதா
கடந்தும் நடந்தும் அனைவரும் போயினர்
பழங்களை விடவும் நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை’
-இக்கவிதை வெறும் காட்சிப்படுத்துவதோடு மட்டும் நிற்கவில்லை. மரித்துப் போன மனித நேயத்தை எடுத்துச்சொல்லும் இடத்துக் கவிதையின் இலக்குப் பிடிபடுகிறது.
’நடைமுறைக் காட்சிகளும், நிகழ்வுகளும் கூடக் கவிஞர்கள் பார்வையில் தப்புவதில்லை. மக்கள் வாழ்வில் காணும் அன்றாடச் சிக்கல்கள் பல. அவற்றில் மின்வெட்டும் ஒன்று. அது மட்டுமன்று. மின்சாரக் கட்டணமும் சேர்ந்து கொள்கிறது. இதனை வேலூர் நாராயணன் நடைமுறை வாழ்வில் இருப்பதை,
’மின்சாரக் கம்பிதனைத் தொட்டால் மட்டும்
முன்பெல்லாம் அதிர்ச்சி வரும். ஆனால், இன்றோ
மின்சாரக் கட்டணத்தைப் பார்த்தால் போதும்
மேனியெங்கும் பேரதிர்ச்சி தாக்கும்’
-என்று இவ்வாறு பதிவு செய்கிறார். மின்சாரம் தொடர்பான இக்காட்சியை வேறொரு கவிஞர் காதலுக் குப் பயன்படுத்திக்கொள்ளும்போது,‘ மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக், மீராவைப் பார்த்தாலே ஷாக்' என்று குறிப்பிடுகிறார். பெண் என்ற பொதுச்சொல்லை மீரா என்று குறிப்பாகச் சுட்டியுள்ளார்.
நடைமுறைக் காட்சிகளில் கருத்துச்சொல்லும் கவின் அழகைப் பழநி பாரதி இப்படிப் படம் பிடித்துக்காட்டுகிறார்,
’பாபர் மசூதிச் சுவரில்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
இராமர் அணில்கள்’
-வரலாற்றின் சோகமான மதப்பூசலை உயிரினம் மூலம் ஒட்டவைக்கிறது இக்கவிதை.
இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு பலரும் எளிய இயல்பான கருத்துக் கோவையில் கவிதை படைத்து வருவதையும் பார்க்கலாம். பலராலும் பலகாலும் உச்சரிக்கப்பட்ட தாரா.பாரதியின் அடிகளான, ‘ வெறுங்கை என்பது மூடத்தனம் , விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற அவரது அடிச்சுவட்டில் எழுதிவருவதையும் காணலாம். பொன்னி நாடன், மூளைத்தனமே மூலதனம்- அது, முடங்கிப் போனால் ஏது தடம்’ என்று எழுதியுள்ளமை இதற்குச் சான்று.
இப்படிப் புரிதலுக்கு உட்பட்ட கவிதைகள் பலவும் இன்றைய கவிதைப் போக்குகளின் புதிய புதிய திசைகளைக் காட்டுவனவாய் உள்ளன.
கவிதையில் கூறும் பொருளை நேரடித் தன்மையிலும், பூடகமான மொழியிலும் உணர்த்துவதும் உண்டு. கவிதைப்பொருள் உணர்த்துவதிலும் வாசகனைத் தேர்ச்சி கொள்ளச் செய்வதையும் இன்றைய கவிதை உலகில் காணமுடிகிறது. உதாரணத்திற்குப் பழமலய் கவிதை ஒன்று.
தன்மை முன்னிலை படர்க்கை என்று இருக்கிறேன். முக்காலத்திலும் இருக்கிறேன்.
உன் அனுபவம் உனக்கு. என் அனுபவம் எனக்கு.
அவன் அனுபவம் அவனுக்கு.
உண்மைதான் என்ன?
உண்மை என்று ஒன்று இல்லை
என்பதுதான் உண்மை!
ஒன்று இருக்கும்
உங்கள் கற்பிதமாக இருக்கும்
என்ன இதெல்லாம் இதெல்லாம்தான்
புதுமையா? புதிய புதுமை.
-இக்கவிதையில் ஒருசொல் கூடப் புரியாமல் இல்லை. எளிமைதான். ஆனால், சொல்லவரும் பொருள்தான் ஒரு மெய்யுணர்வு. தொனி, கவிதைமொழிக்கு அப்பால் பொருள் விளங்கிக்கொள்வதில் சற்றே கடினமாக ஆகிவிடுகிறது. ஏமாற் றும் எளிமையாக உள்ளது. கவிஞனின் இருப்பு நிலை என்று ஒவ்வொன்றிற்கும் பொருள் அடுக்குகளை விரித்துக்கொண்டு போவதற்கு வாய்ப்புத் தரும் கவிதை இது. 'கவிதை என்பது கவிதைக்கு ஏற்பட்ட எல்லைகளை மீறும்போதுதான் கவிதையாகிறது' என்பார் விக்ரமாதித்தன். இது இந்தக் கவிதைக்குப் பொருந்தும்.
’’நவீனக்கவிதைகளை வாசிக்கும் ஒருவர் வாழ்வாலும் மொழியாலும் இந்த யுகத்தின் உணர்வினையும் தத்துவ நோக்கினையும் உட்செறிந்த வராக இல்லாதவரை எதுவும் அவருக்குப் பயன்படாது’’
-என்ற கருத்து ஏற்புடையதே! மிகை நடப்பியல், இருண்மை முதலிய உத்திகளில் எழுதப்பட்டுவரும் கவிதைகள் புரிவதும், புரிந்துகொண்டு போற்றப் படுவதும் வாசகரின் தீவிர வாசிப்பைச் சார்ந்தது. அணுகு முறையைப் பொறுத்தே அமையும். மேலும் தீவிர வாசகன் உருவாவதற்குப் புதிய பாணியில் எழுதப்படும் நவீனக் கவிதையும் ஒரு காரணம். இப்படிப்பட்ட கவிதை யின் வீரியத்தை, பிரமிள் கீழ்க்காணுமாறு குறிப் பிடுவர், இந்தத் தலைமுறை யின் படைப்புகளைக் காணுவதன் வழிக் கவிதையின் இக்காலக் கோட்பாட்டை அறிவது தேவையாக இருக்கிறது தமிழ்க்கவிதை மரபின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் அக்கறை கொண்டவர்களாக இருந்து படைத்த இரண்டாம் தலைமுறைக்கவிஞர் கள் மொழிநடையிலும், மரபு வழியினாகப் போக்கிலும் கவிதைகளைப் படைத்து உலா வந்த காலம் கடந்த நிலையில், இன்று எழுதப்பட்டுவரும் கவிஞர்கள் பலரும் மொழியைக் கையாள்வதிலும், சொல்லும் முறையிலும், பாடு பொருளை உணர்த்து வதிலும், அகவயமான உணர்வுகளை வெளிப்படுத்து வதிலும் சிரத்தை எடுத்துக் கொண்டு படைத்து வருவதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
பூவின் மென்மையும், புயலின் வலிமையும் அறிந்தவர் களாய், படிமப் பார்வையில் படிந்து, சர்ரியலிசம் பேசிக் குறியீட்டால் ஆட்கொள்ளப்பட்ட கவிஞர்கள் இன்றும் புதிய திசைநோக்கித்தான் தம் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய கவிதை உலகம் தனது பல்வேறு பாதைகளில் கிளைபரப்பிப் பயணிப்பது ஒரு தொடரோட்டமாகவே இருக்கும். இருக்கிறது.