ன் வழக்கமான புத்தகத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி முடித்திருக்கிறது சென்னை மாநகரம். ஒவ்வொரு முறை புதுவருடம் பிறக்கும் போதெல்லாம் புத்தகக் காதலர்களுக்கு கொண்டாட்டம் கூடிப்போகிறது. புத்தாண்டில் தொடங்கி இரண்டு வாரங்களுக்கு நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிதான் அதற்குக் காரணம். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி, தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் புத்தகக் கண்காட்சி நடத்தினாலும், சென்னையில் புத்தாண்டு சமயத்தில் நடத்தப்படும் கண்காட்சிக்கு என்று தனி மவுசு உண்டு.

ஒவ்வொரு வருடமும் 13 முதல் 14 நாட்கள் மட்டுமே நடக்கும் சென்னை புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 4-ஆம் தேதி தொடங்கி, 20-ஆம் தேதி வரை சென்னை நந்தனத் திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தகக்காட்சி நடைபெற்றது. 820 அரங்கங்கள், இலக்கியம், இசை, உணவு, கலை, சினிமா என 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் ஒன்றரைக் கோடி புத்தகங்கள் மற்றும் பல லட்சம் வாசகர்கள் என புத்தகத் திருவிழா களைகட்டியது.

இந்தத் புத்தகத் திருவிழாவைக் குறிவைத்து, திருவிழா தொடங்குவதற்கு முன்பும், திருவிழா நேரத்திலும் புதிய புதிய வெளியீடுகளைப் படைப்பாளர்களும் பதிப்பகங்களும் வெளியிட்டு, பரபரப்பு காட்டின. உதாரணத்துக்கு ஒருசில நூல் வெளியீட்டு நிகழ்வுகளைப் பார்ப்போம்.

bookrelease

Advertisment

*

புத்தகத் திருவிழா தொடங்கும் முன்பாகவே, அதைக் குறிவைத்து டிசம்பர் 29-ஆம் தேதியே அகநி வெளியீட்டகத்தின் சார்பில் கவிஞர் அ. வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவல் வெளியீட்டு விழா,அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு. ராஜேந்திரன், இ.ஆ.ப., தலைமையேற்றார்.

‘கங்காபுரம்’ நாவலை, உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் வெளியிட, இங்கிலாந்து பிளைமவுத் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம். ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். நூலை வெளியிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், ’’பேரரசன் ராஜராஜ சோழன் தன்னைக் காட்டிலும் பல விதங்களில் வலிமையான தன் மகன் ராஜேந்திர சோழனுக்கு இளவரசுப் பட்டத்தைக் கட்டிப்பார்க்க முடியாத சூழலிலிருந்து வெண்ணிலா எழுதியுள்ள இந்த ‘கங்காபுரம்’ நாவல் தொடங்குகிறது. இந்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களும் அவர்களது மொழியுமே உலகிற்கே உன்னதமாக விளங்கின. வரலாற்றின் துணைகொண்டு இவற்றையெல்லாம் இந்த நாவல் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது’என்று குறிப்பிட்டார்.

Advertisment

எழுத்தாளர் இமையம், இயக்குநர் வசந்த பாலன், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், பத்திரிகையாளர் கே.என். சிவராமன் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர். .

*

இதேபோல், சென்னை புத்தகத் திருவிழா, நக்கீரன் அரங்கில் மறைந்த இலக்கிய ஜாம்பவான்களான கவிக்கோ அப்துல்ரகுமான், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோரின் நூல்களின் வெளியீட்டு நிகழ்வு, நெகிழ்வோடு அரங்கேறியது. நக்கீரன் பொதுமேலாளர் சுரேஷ்குமார் வரவேற்க, கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில் கலைவிமர்சகர் இந்திரன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல்ரகுமானின் ‘""இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது', பிரபஞ்சன் எழுதிய ""மனு அதர்மம்', ""கழுதைக்கு அஞ்சுகால்'’ ஆகிய மூன்று நூல்களையும் கவிவேந்தர் மு. மேத்தா வெளியிட... அதை வானம்பாடிக் கவிஞர் சிற்பி பெற்றுக்கொண்டார்.

அப்போது தலைமையுரை ஆற்றிய ஜெயபாஸ்கரன், ""மறைந்த எழுத்தாளர்கள், தங்கள் எழுத்துகளால் வாழ்கிறார்கள். அவர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த நூல்களை நக்கீரன் வெளியிடுவது பெருமைக்குரியது. அதிலும் கவிக்கோ அப்துல்ரகுமானோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் முன்னிலையில், அவருடைய கவிதை நூல் வெளியிடப்படுவது தற்செயலாக அமைந்த பெரும் வாய்ப்பாகும்''’என்றார்.

நூல்களை வெளியிட்டுப் பேசிய மு. மேத்தா, ""மறைந்த எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்துகளின் வழியாக இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். கவிக்கோ அவர்கள் இறுதிநாட்களில் எழுதிய கவிதைகள், நூல்வடிவம் பெறுவது மகிழ்வைத் தருகிறது. அந்த வேலையை நக்கீரன் செய்வது பெருமைக்குரியது'' என்றார் பெருமிதமாக.

bookrelease

வானம்பாடிக் கவிஞர் சிற்பி, ""கவிக்கோ அப்துல்ரகுமானின் நினைவுகள் என் மனதிலே வந்து என்னை நெகிழ வைக்கின்றன. அவர் காதலிலும் தத்துவத்திலும் கொடிகட்டிப் பறந்தார். அவரது எந்தக் கவிதையை எடுத்தாலும் அதில் இந்த இரண்டு கூறுகளும் இருக்கும். அவருடன் பழகிய நாட்கள் மனதில் நின்று நிலைத்த நினைவுகளாகும். அவர் மறைந்த பிறகும், அவரது கவிதைகளைத் தேடிப்பிடித்துத் தொகுத்துத் தந்திருக்கும் தமிழ்நாடனைப் பாராட்டுகிறேன். இன்று சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரே பத்திரிகை நக்கீரன்தான். மிகவும் நெஞ்சுரம் கொண்ட தைரியமான பத்திரிகை என்றாலும் அது நக்கீரன்தான். இன்று கருத்துரிமைக்காக நக்கீரன் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

கருத்துரிமையின் அடையாளமாகத் திகழும் நக்கீரன்,

தமிழ்க் கவிதையின் அடையாளமாகத் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை நூலை வெளியிடுவது மிகுந்த பாராட்டுக்குரியது. மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உரியது''’ என்றார் அழுத்தமாய்.

நன்றியுரை ஆற்றிய ஆரூர் தமிழ்நாடன், ""கவிக்கோவின் தத்துவக் கவிதைகள் அடங்கிய இன்னொரு நூல் நக்கீரனில் தயாராகி க்கொண்டிருக்கிறது. அது விரைவில் வரும்'' என்று தெரிவித்தார். இந்த நிகழ்சியில், இலக்கிய ஆளுமைகளான பிருந்தாசாரதி, முனைவர் ஆதிராமுல்லை, ஃபைஸ்காதிரி, கவிஞர் ஜலாலுதீன், கவிஞர் உஸ்மான், லெக்சு, சூர்யா, கவிக்குழல், ஜாபர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

*

அதேபோல் நக்கீரன் அரங்கில், ஆரூர் தமிழ்நாடன் எழுதிய காலநதி, ’காற்றின் புழுக்கம், ’சூரியனைப் பாடுகிறேன்’ ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் அரங்கேறியது. கவிஞர் ஜலாலுதின் வரவேற்க, கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில் முனைவர் நா. நளினிதேவி முன்னிலையில் இதழியல் போராளி நக்கீரன் கோபால் நூல்களை வெளியிட்டார். அதை இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கவிஞர் அமுதபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்குநர் பிருந்தாரதி, இயக்குநர் ராசி.

அழகப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், நடிகர் கணேஷ் பிரபு, தமிழ்த் திரைபடப் பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன், பாடலாசிரியர்கள் அருண்பாரதி, பத்மாவதி அருண்பாரதி, வேல்முருகன், பேராசிரியர் ஆதிரா முல்லை, பேராசிரியர் நித்யா, எழுத்தாளர் லதா, புதிய தலைமுறை சுந்தரபுத்தன் ஆடிட்டர் சந்திரசேகரன் பக்கிரிசாமி, இந்திரஜித், கவிஞர் வீரசோழன் க.சோ. திருமாவளவன், கவிஞர் பச்சமுத்து, கவிஞர் நம்ம ஊர் கோபிநாத், கவிஞர் ராஜ்குமார் கென்னடி, எழுத்தாளர் ராம் தங்கம், கவிஞர் தயாநிதி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நக்கீரன் குழுமம் சார்பில் சாருமதி, ராம், பிரசாத் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இலக்கியன் நன்றி நவின்றார்.

*

இந்த ஆண்டு பல புதிய எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை புத்தகத் திருவிழாவின் வாயிலாக அறிமுகம் செய்தனர். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தில் இயக்குநர் பிருதாசாராதியின் இருளும் ஒளியும் கவிதை நூல் வெளியிடப்பட்டது.

அதேபோல் அவரது முதல் கவிதைத் தொகுதியான 'நடைவண்டியின் 25 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் அழகான மறுபதிப்பு கொண்டுவந்திருந்தது. அதன் வெளியீட்டு விழா "நடைவண்டி25 படைப்பாளிகள்25' என்ற பெயரில் டிஸ்கவரி அரங்கில் 19.01.19 மாலை நடைபெற்றது. இயக்குநர் என்.லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் வண்ணதாசன் நூலைப் பெற்றுக்கொண்டார். இதிலும் ஏராளமான படைபாளர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல், இயக்குனர் கண்மணி ராஜா முகமதுவின் "மலர்க்கிரீடம்' நூலை ரஹ்மத் பதிப்பக அரங்கில் இயக்குனர் அமீர் வெளியிட்டார். யாவரும் பதிப்பகத்தில் புதிய எழுத்தாளர்கள் பத்து பேரின் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடப்பட்டது வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குனர் பா. ரஞ்சித் நடத்திவரும் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் தனி அரங்கம் அமைக்கப் பட்டிருந்தது.

அறிமுக அரங்கமாக இருந் தாலும் ஒடுக்கப் பட்டவர்கள் விடுதலை தொடர்பான ஏராளமான புத்தகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. ஆசிரியர் நக்கீரன் கோபால் அந்த அரங்கத்தைப் பார்வையிட்டதோடு, இயக்குனர் பா. ரஞ்சித்தை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

புத்தகத் திருவிழாவுக் காக இதுபோல் ஏராள மான படைப்புகள் வெளிவந் திருப்பது, இலக்கிய உலகின் மலர்ச்சியைக் காட்டுகிறது.