மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
-என்பது வள்ளுவர் வாக்கு.
இதன் பொருள், அருள் நிறைந்த ஆட்சியாளர்கள் என்றால் தங்கள் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகும். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்களோ, பாதுகாப்புக் கோட்டைக்குள் பத்திரமாக இருந்துகொண்டு, மக்கள் படும் வேதனைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால்தான், இது நாடா? இங்கே அதிகாரத்தில் இருப்பவர்கள், உண்மையிலேயே மக்களின் பிரதிநிதிகள் தானா? என்ற கேள்வியை மக்கள் பரிதவிப்போடு எழுப்பி வருகிறார்கள். ஏனெனில், எங்கு பார்த்தாலும் துயரம், கண்ணீரில் நனைந்த தகவல்கள், வலிகொடுக்கும் காட்சிகள்... என இந்தியாவே இப்போது துயரக் காடாக மாறியிருக்கிறது.
பீகார் துயரம்
பீகார் மாநில முசாபர்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்ற அந்த ரயிலில் இருந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு இறங்கியபோது, குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியில் குழந்தையோடு இருந்த அந்த இளம்வயதுப் பெண் மட்டும் இறங்கவில்லை.
அவர் பட்டினியால் இறந்துபோயிருந்தார். நடந்த விபரீதத்தைப் புரிந்துகொண்ட சிலர், அவரின் சடலத்தை பிளாட்பாரத்தில் இறக்கி, போர்வையால் மூடிவிட்டுப் போனார்கள். அவரது பெண் குழந்தையோ, நடந்த விபரீதம் புரியாமல் சடலமாகக் கிடத்தப்பட்டிருந்த தன் தாயின் போர்வையைப் பிடித்து இழுத்தபடி விளையாடியது. இதைப் பார்த்தவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
புலம்பெயர் தொழிலாளர்களை ரயிலில் ஏற்றி அனுப்பிய அரசாங்கம், இரண்டு மூன்று நாள் பயணிக்க வேண்டிய அவர்கள், வழியில் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் எனகொஞ்சமும் எண்ணிப் பார்க்க்கவில்லை.
அவர்களைப் பசி, பட்டினியோடு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதத்திற்கு ஒரு மோசமான சாட்சியம்தான், அந்த ஏழைப் பெண்ணின் மரணம்.
கொரோனாவை விட பெரிய கொரோனா:
உயிரைப் பறிக்கும் ’பாசக்கயிறை’’கையில் வைத்துக்கொண்டு உலகையே கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மத்திய, மாநில அரசுகள் என்ற மேலும் இரண்டு கொரோனாக்கள் இங்கே எல்லோரையும் ஆட்டிப் படைக்கின்றன. அதனால்தான் அரங்கேறக் கூடாத சம்பவங்களும் காட்சிகளும் நம் கண்ணெதிரே அரங்கேறி வருகின்றன. வாழ்வாதாரத்தை இழந்த ஒட்டுமொத்த குடிமக்களையும் மத்திய, மாநில அரசுகள் நிராதரவாகத் தவிக்கவிட்டிருக்கும் நிலையில், புலம்பெயர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சந்தித்துவரும் கொடுமைகளோ சொல்லி மாளாதவை. கொரோனாவைக் காரணம் காட்டி, இவர்கள் அரங்கேற்றிய கொடுமைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.
அவசர ஊரடங்கு:
இருமல், தும்மல் மூலமும் கொரோனா பரவுகிறது என்று, அதிகாரவர்க்கம் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், மார்ச் 24-ந் தேதி, திடுதிப்பென்று தொலைக் காட்சியில் தோன்றி, 21 நாள் ஊரடங்கை எந்த அவகாசமும் கொடுக்காமல் அறிவித்தார் மோடி.
லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பிறகுதான் கோடிக்கணக்கான மக்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் 20 சதம் பேர், சொந்த மாநிலங்களில் வேலை கிடைக்காமல் வெளிமாநிலங்களில் பஞ்சம் பிழைத்து வருகி றார்கள் என்ற கொடுமையான உண்மையே பகிரங்கமானது. ஒரு மாநில மக்கள், அங்கே வேலை கிடைக்காமல் இன்னொரு மாநிலத்துக்குப் போகிறார்கள் என்றால், அது அந்த மாநிலத்தின் கையாகாலாத் தனமாகும். இப்படிப்பட்ட கையாகாலாத்தனம் இங்கே அத்தனை மாநில அரசுகளிடமும் இருக்கிறது. இதற்காக எந்த மாநிலமும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே, கிழக்கு டெல்லியில் இருக்கும் ஆனந்த விகார் பேருந்து முனையத்தை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஊர்போகும் தவிப்பில், கொரோனாவை மறந்து முண்டியடித்த காட்சிகளை யாராலும் மறக்கமுடியாது. இதன் பின்னும் அவர்களை நெறிப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை.
கொடுமைகள்:
அதுமட்டுமா? அங்கங்கே சிலரை மட்டும், சொற்பப் பேருந்துகளில் ஏற்றி அவரவர் பகுதிக்கு அனுப்பியபோது, உ.பி. எல்லையில் அவர்களை வழிமறித்த போலீஸ், கைக்குழந்தைகள், பெண்கள் என்று கூடப் பார்க்காமல், அவர்களை ரோட்டில் உட்காரவைத்து, அவர்கள் மீது, கிருமி நாசினியைப் பீய்ச்சியடித்த கொடுமையையும் நம்மால் மறக்க முடியாது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் மீது விஷ வாயுவைப் பீய்சியது போன்ற காட்சி அது. இப்படி பேருந்தில் அனுப்புவதும் நின்று போனதால், போக்குவரத்தே இல்லாத நிலையில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் கொடும் வெய்யிலில், பசி பட்டியோடு தங்கள் சொந்த ஊர் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
லாக்டவுனால் ஏற்பட்ட உயிர்ப்பலிகள்:
சொந்த மாநிலம் நோக்கி நடந்து வந்தவர்களில் நம் நாமக்கல்லைச் சேர்ந்த லோகேஷ் என்ற 17 வயதே ஆன மாணவனும் ஒருவன். மகாராஷ்டிர மாநில வர்தா வில் இருந்து 450 கி.மீ. தூரம் நடந்து வந்த நிலையில், வழியிலேயே தெலுங்கானா மாநில செகந்தரா பாத்தில் மாரடைப்பால் இறந்து போனான் . அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும் என்ற தவித்துக் கொண்டிருந்த லோகேஷின் சடலம்தான், அவன் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தது. இதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிலர், மகாராஷ்டிராவில் உள்ள ஜால்னா இரும்புத் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நடந்தே சென்ற நிலையில், 45 ஆவது கி.மீ தூரத்தில், ரயில் தண்டவாளப் பகுதியில் அதீத களைப்பில் தூங்கியபோது, நள்ளிரவில் வந்த சரக்கு ரயில் அவர்களை ரத்தக் களறியாக்கியது. அதில் 17 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
இதேபோல், ராஜஸ்தான் மாநில ஃபரிதா பாத்தில் இருந்து 81 புலம் பெயர் தொழிலாளர்கள், கோரக்பூருக்கு லாரியில் போனபோது, அந்த லாரி, மற்றொரு லாரி மீது மோதியதில் அவர்களில் 24 அங்கேயே இறந்துபோனார்கள். அவர்களின் பொட்டலம்தான் ஊர்போய்ச் சேர்ந்தது. இந்தக் கொடுமைகளுக்கு நடுவே, தெலுங்கானா வாரங்கல் மாவட்ட தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்த 9 பேர், இந்த அரசுகளை நம்பி இனியும் வாழ முடியாது என்று தீர்மானித்து, அங்குள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட கொடுமை யும் அரங்கேறியது. இவையெல்லாம் தெளிவற்ற லாக்டவும் ஏற்படுத்திய மரணங்கள் ஆகும்.
பசிப்பிணி மரணங்கள்:
இந்தக் கொடுமைகளுக்கு நடுவே, மிக மோசமான, வெட்கக் கேடான பசி மரணங்களும் இங்கே தொடங்கிவிட்டதை, சில சம்பவங்கள் உரத்துச்சொல்கின்றன. ரிஷிகேஷில் வேலை பார்த்த அலிகாரைச் சேர்ந்த நேத்தரபால் என்ற 42 வயது நபர், உத்தராகண்ட் மாநில ரூர்கி நிவாரண முகாமிலேயே இறந்துபோக, அவரை அரசு பட்டினி போட்டுக் கொன்றுவிட்டதாக அவர் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார்கள். இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் கம்ரா கிராமத்தைச் சேர்ந்த காசி என்கிற 40 வயதான ஒருவர், பட்டினியால் இறந்ததாக செய்தி வெளியானது. உடனே இது குறித்து விசாரிக்க ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தர விட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, அவர் வேறு சில நோய்களின் காரணமாகத்தான் இறந்தார் என மழுப்புகிறது. பட்டினியால் ஒருவர் சாகிறார் என்றால், அது ஆட்சியாளர்களின் வக்கற்ற நிலையை உணர்த்துவதாகும். தேசத்திற்கே இது மானக்கேடாகும்.
கொடுமையிலும் கொடுமை:
இதற்கிடையே அண்மையில் முகநூலில் நருகா என்பவர் ஒரு பதிவைச் செய்திருந்தார். அதில் பசியால் ஒருவர், இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருப்பதை சாலையில் பார்த்தேன். யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன்’’ என்று பதி விட்டுள்ளார். இதை இட்டுக்கட்டி நாமாகச் சொல்லவில்லை. இது தொடர்பான செய்தி மே 22 தினமலரில் வெளியாகியிருக்கிறது. நிலைமை எந்த அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார முடக்கம், நடுத்தட்டு மக்களையும் கூட தெருவில் நிறுத்திக் கொண்டிருக்கிறது. அங்கங்கே மக்கள் உணவுக்குக் கையேந்தும் நிலைமை தமிழ்நாட்டிலும் இருக்கிறது. தனியார் பலரும் அங்கங்கே சாப்பாட்டுப் பொட்டலங்களை விநியோகிப்பதையும், அதற்கு கியூ நிற்பதையும் ஊடகங்கள் வருத்தத்தோடு வெளியிட்டும், இதற்காக நம் எடப்பாடிகள் சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும், வாகனம் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை. எங்கள் சொந்த ஊர் களுக்கே போய் பிழைத்துக்கொள்கிறோம் என்ற படி, ஊரடங்கு நேரத்திலேயே தேசிய நெடுஞ்சாலை களில் அணிவகுத்த போது, நடக்க முடியாத குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், சூட்கேஸ் போன்ற பெட்டிகளின் மேல் படுக்கவைத்து இழுத் துக் கொண்டும் அவர்கள் நடந்து சென்ற காட்சி கள் துயரத்தின் உச்சம். சிலர் முதியோரை சுமந்து கொண்டும், செல்லப் பிராணிகளை மார்போடு அணைத்துக் கொண்டும் அவர்கள் நடந்த காட்சிகளை, நம்மால் எந்த நிலையிலும் மறக்க முடியாது.
ராகுலின் அதிரடியும் நிர்மலாவின் நக்கலும்:
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மோடி அரசு கவனம் செலுத்தவேண்டும் என்று காங்கிரஸ் கோரிவந்த நிலையில், கடந்த 17-ந் தேதி டெல்லியில் காரில் போய்க்கொண்டிருந்த ராகுல்காந்தி, அங்குள்ள சுகதேவ் விஹார் பகுதியில், நடந்துசென்ற தொழிலாளர்களைப் பார்த்து, காரைவிட்டு இறங்கினார். பிளாட்பாரத்தில் அவர்களோடு உட்கார்ந்து, அவர்களை விசாரித்துக் குறைகளைக் கேட்டார். அம்பாலா பகுதியில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகச் சொன்ன அவர்கள், லாக் டவுனால், சாப்பாட்டுக்கு வழி இல்லாத நிலையில், தங்கள் சொந்த ஊரான ஜான்ஸிக்கு நடந்து செல்வதாகச் சொன்னார்கள். உடனே அந்தப் பகுதியில் இருந்த தங்கள் கட்சிப் பிரமுகர்களை அழைத்த ராகுல், 10 கார்கள் மூலம் அவர்களை அவர்களின் ஊருக்கு அனுப்பிவைக்கச் செய்தார். இது ஒரு நல்ல காரியம்.
அரசும் அமைச்சர்களும் செய்திருக்கவேண்டிய செயலை ராகுல் செய்திருக்கிறார். இதற்காக அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும். ஆனால் இதற்காக வெட்கப்படவேண்டியவர்களில் ஒருவரான இந்திய நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்கு மாறாக, ராகுல் காந்தி நாடகம் ஆடுகிறார் என்றும், அந்த தொழிலாளர்களைச் சந்தித்த ராகுல், அவர்களின் பெட்டி படுக்கை உள்ளிட்ட லக்கேஜை எடுத்துக்கொண்டு அவர் களுடனே போயிக்கலாமே. என்றும் நக்கலடித்தார். பெண் என்றால் பெண்ணிற்கே உரிய தாய்மை இருக்கவேண்டாமா?இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கிறார் என்பதற் காக நாம்தான் வெட்கப்படவேண்டும்.
நீதிமன்றத்தின் சாட்டை!
புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலை குறித்துத் தாமாக முன்வந்து வழக்கைப் பதிவு செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுக்க புலம் பெயர் தொழிலாளர்கள் கைவிடப் பட்டு இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் இந்த பிரச்சனையை சரியாகக் கையாளவில்லை. மத்திய மாநில அரசுகள் இதில் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள் ளன. புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை நினைத்தால் கண்ணீர் வருகிறது. எனவே சொந்த ஊருக்குப் போக விரும்பும் புலம்பெயர் தொழிலாளர் களுக்குத் தேவையான உணவு, உறைவிடம், பயண ஏற்பாடு என அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் இலவசமாகச் செய்து கொடுக்க வேண்டும். இதுவரை அவர்களுக்காக என்னென்ன செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்த அறிக்கையையும் எங்களிடம் சமர்பிக்கவேண்டும் என்றும் கறாராக உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியாவின் நீரோவான மோடி:
உச்சநீதிமன்றத்தின் இந்த சட்டையடி கூட மோடி அரசின் முதுகில் உறைக்கவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவும் உருக்குலைந்து கொண்டிருக் கும் இந்த நேரத்திலும் மோடி, செயலற்றராய் இருக்கிறார். ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் வயலின் வாசித்துக்கொண்டிருந்த மாதிரி, எங்கோ, யாருக்கோ, எதுவோ, நடக்கிறது என்ற நிலையில், காது குடைந்துகொண்டிருக்கிறார் மோடி. இந்தியாவின் நீரோவாகவே மாறி, மக்களின் வயிற்றெரிச்சலை மோடி கொட்டிக்கொண்டிருக்கி றார். பெரும் தொழிலதிபர்களுக்கு நிதி உதவியையும், அப்பாவி பொதுமக்களுக்கு அறிவுரையையும் தரும் உலகின் ஒரே பிரதமர் மோடிதான் என்று பொதுமக்கள் விமர்சனம் வைத்து அவரை சபித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்காக மோடி வெட்கப்படவில்லை.
ஜாடிக்கு ஏற்ற மூடி போலவே, இங்கிருக்கும் மோடியின் சிஷ்யரான எடப்பாடியும், மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த ஐந்தாம் ஊரடங்கிலும் தளர்வு என்ற பெயரில் பல்வேறு ஓட்டைகளைப் போட்டு, கொரோனா தீவிரமாகப் பரவும் வகையில், சகல விதத்திலும் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்திருக்கிறார்.
மோடியும் எடப்பாடியும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அப்பட்டமாய்த் தோற்று விட்டார்கள். எனவே, இங்கு தீவிரமாகும் கொரோனாத் தொற்றுக்கும் கொரோனா மரணங்களுக்கும் தார்மீகப் பொறுப் பேற்று, ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் இவர்கள், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.
-மிகுந்த வருத்தத்தோடு,
நக்கீரன்கோபால்