தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் உள்ளிட்ட 21 தமிழறிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் கடந்த 15 ஆம் தேதி, தமிழக அரசு விருதுகளை வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. விருது பெற்ற அத்தனை பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விருதாளர் பட்டியலில் இடம்பெற்று, இளங்கோவடிகள் விருதினை தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து பெற்றிருக்கும் ஐயா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள், சிறந்த தமிழறிஞர். அவருக்கு கம்பர் விருதை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், ”நெல்லை கண்ணன் வாயைத் திறந்தாலே காப்பியங்கள் அவர் வாயிலிருந்து அணிவகுக்கும்” என்று மனமுவந்து பாராட்டி மகிழ்ந்தார்.
தன் வசீகரப் பேச்சாற்றலால் உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் சர்வதேசப் பேச்சாளர் ஐயா, ஏறுகிற எல்லா மேடைகளையும் கட்டி ஆளும் தமிழ்ப் புலமையாளர். கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மையும், கேளாரும் விரும்பிக் கேட்கத் துடிக்கும் உரைவன்மையும் கொண்ட பேச்சாளராகத் திகழ்கிறவர். அதிசயிக்கத்தக்க ஆற்றலும் புலமையும் வாய்ந்தவர்.
தமிழன்னை, அவர் விரல்களிலும் கொலு வீற்றிருப்பதால், அவர் எழுதும் எழுத்தெல்லாம் காவியச்சுவை பெறுகின்றன. அவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள், காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், திக்கனைத்தும் சடைவீசி, பழம்பாடல் புதுக்கவிதை நூல், வடிவுடை காந்திமதியே!
-உள்ளிட்ட நூல்கள், ஐயாவின் தமிழ் வளத்தைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன.
மரபுக் கவிதையில் தேர்ச்சி பெற்ற ஐயா, தாண்டக யாப்பிலும் பழுத்த ஞானம் உடையவர். அந்த யாப்பில் அமைந்த ’திக்கனைத்தும் சடைவீசி’ என்கிற நூல், சைவ சமயத்துக்குக் கிடைத்திருக்கிற அருந்தமிழ்ப் பெட்டகமாகும்.
அனைவரையும் பாரபட்சமின்றி, சொட்டச் சொட்ட நனைக்கும் பேரன்பு அடைமழை அவர். அதனால்தான் இவரைத் தமிழ்ச்சமூகம் தன் தலைமேல் வைத்துக் கொண்டாடிவருகிறது.
அரசியலிலும் கோலோச்சிய பெருந்தகையாளர் ஐயா. நீண்டகாலமாக காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரத் தொண்டராக, பெருந்தமிழர் காமராசரின் செல்லப்பிள்ளையாக, உடலிலே தேசிய ரத்தம் பாய்ந்தோடுபவராகத் திகழ்ந்தவர். இன்று, அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடத்தால், மதவாத நோய்மைக்கு எதிரான திராவிட உணர்வு மேலோங்கப் பெற்றவராக புதுப்பொலிவு பெற்றிருக்கிறார். அவரை இந்த நேரத்தில், வாழ்த்திப் பாராட்ட நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.
நெல்லை என்றால் அங்கு உறைந்திருக்கும் நெல்லையப்பருக்கும், பாய்ந்துகொண்டிருக்கும் தாமிரபரணிக்கும் பிறகு, அந்த மண்ணுக்கு முகவரியாகத் திகழ்ந்துவருபவர் ஐயா தான்.
நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு, பாரதி என்றால் பரவசம். கண்ணதாசன் என்றால் இதயத் துடிப்பு. கம்பனும் இளங்கோவும் அவருக்குச் சிறகுகள். சங்கத் தமிழும் தெய்வத்தமிழும் அவருக்கு சுவாசம். மொத்தத்தில் அவரே, தமிழன்னையின் இன்னொரு வடிவம் என்று சொல்லலாம்.
அரசியலில் அவர் போகாத எல்லை இல்லை. சந்திக்காத தலைவர்கள் இல்லை. காணாத உயர்வும் பாராட்டும் இல்லை. பெருந்தமிழர் காமராஜர் என்றால் அவருக்கு உயிர். கவியரசு கண்ணதாசன் என்றால் அவருக்கு அவ்வளவு போதை. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்றால் அவருக்கு அவ்வளவு உவப்பு. இந்த உணர்ச்சியெனும் தொப்பூழ் கொடிதான் அவரைப் பரிசுத்தமான காங்கிரஸ்காரராகவே பல காலம் வைத்திருந்தது. ஆனால் அவர் காலம் காலமாக நம்பிய தேசிய அரசியல், அவருக்கு உரிய மகுடத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டது. மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. அதனால்தான் -
”அனாதையான காங்கிரஸ் கட்சி, என்னையும் அனாதை ஆக்கிவிட்டது”’ என்று அவர் உள்ளம் வருந்திச் சொல்லும் நிலை ஏற்பட்டது.
பழுத்த இலக்கிய வாதியான அவருக் குள் ஒரு தீரம் மிகுந்த போராளி இருக்கிறார்.
அதனால்தான் எந்த நிலையிலும் தன் கொள்கைகளைச் சமரசம் செய்துகொள்ளாமல், எதிரில் இருப்பவர் யாரென்றெல்லாம் கவலைப்படாமல் சுயமரியாதைக் காகவும் சமூக நீதிக்காகவும் ஐயா வாள் சுழற்றுகிறார்.
சிறுபான்மை மக்களைக் குறிவைத்து, பா.ஜ.க.
அரசு 2019-ல் கொண்டுவந்த சர்ச்சைக்குரிய ‘இந்தியக் குடியுரிமை சட்டத்தை’யும் நெஞ்சுரத்தோடு எதிர்த்த கருத்துப் போராளி அவர். அந்த சட்டத்தை எதிர்த்து, இந்தியாவே கொந்தளித்த நேரத்தில், டெல்லியின் ஆதிக்க மமதைக்கு எதிராக, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி நெல்லை மேலப்பாளையத்தில் ஒரு கண்டன மாநாட்டை நடத்தியது. அதில் தார்மீக அடிப்படையில் துணிச்சலோடு கலந்துகொண்டார் ஐயா. அந்த மாநாட்டில், ஒன்றிய அரசின் அந்தக் கருப்புச் சட்டத்துக்கு தனது எதிர்ப்பை அழுத்தமாகத் தெரிவித்தார். அது ஒரு எழுத்தாளரின் இதயக் குரல். ஒரு இலக்கியவாதியின் அறச்சீற்றம். தடுமாறும் அரசுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய ஒரு தேர்ந்த மதியூகியின் லகான் சொற்கள் அவை. சுயமரியாதை உள்ள ஒரு மாமனிதரின் தன்மான நிமிர்வு.
ஆனால் இதை டெல்லியின் அடிமையாக இருந்த அப்போதைய அ.தி.மு.க. அரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தனது எஜமான விசுவாசத்தோடு அது ஐயா மீது பாய்ந்தது. பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவர் இழிவாகப் பேசினார் என்றும், இசுலாமியர்களிடம் வன்மத்தை தூண்டும் விதத்தில் உரையாற்றினார் என்றும் ஐயா மீது வழக்கைப் புனைந்தது.
அதுமட்டுமா? டெல்லியின் எடுபிடி ஆட்சியான எடப்பாடி ஆட்சி.
இலக்கிய கூட்டத் திற்காக பெரம்பலூ ரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி யிருந்த ஐயா நெல்லை கண்ணன் அவர்களை, ஒரு தீவிரவாதியை மடக்குவதுபோல் மடக்கியது.
2020 ஜனவரி 1 ஆம் தேதியின் இரவு நேரத்தில், அது ஆங்கிலப் புத்தாண்டு என்று கூடப் பார்க்காமல், அன்றைய இரவு நேரத்தில் அவர் விடுதியை முற்றுகையிட்ட போலீஸ் படை, அவரை அதிரடியாய்க் கைது செய்தது. ஒரு மூத்த-முதிய தமிழறிஞர் என்று கூட அடிமை அ.தி.மு.க.வினர் கருதவில்லை. நோயோடு போராடிக்கொண்டிருப்பவர் என்று கூட அந்த இதயமற்றவர்கள் இரக்கம் காட்டவில்லை. அவரை இரும்புப் பிடி போட்டு, இரவோடு இரவாக, தூங்கக்கூட விடாமல், நெல்லைக்குக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றமும், அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டது. அன்று தமிழன்னையே சிறைப்பட்டாள். இலக்கிய உலகம் அதிர்ந்து இருண்டது. அன்றைய மாட்சிமை இழந்த ஆட்சியாளர்கள், எல்லாத் திசையில் இருந்தும் கண்டனங்களைச் சம்பாதித்தார்கள்.
அப்படிப்பட்ட அ.தி.மு.க. அரசின் அடக்குமுறைகளை அவர் தனது 76 ஆவது வயதில் சந்திக்க நேர்ந்தது.
*
இதற்காக அவர் சார்ந்திருந்த தேசிய அரசியல், எந்தப் பிரளயத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரவரும் அரசியலில் தனி ஆவர்த்தன அரசியல் பண்ணிக் கொண்டிருந்தார்களே தவிர, நம் இலக்கிய போதி மரத்தைச் சுற்றித் தீவைத்துவிட்டார்களே என்று, எவரும் இதயம் துடிக்கவில்லை. ஆனால் அந்த போதி மரம், தனக்குத் தானே வாழ்வியல் சார்ந்த சுய ஞானத் தைப் பெற்றது. ஆம்! இப்படிப்பட்ட அனுபவங்கள் ஐயாவை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தன.
‘இந்தப் பாழாய்ப்போன அரசியலே வேண்டாம். நமக்குத் தமிழும் தமிழ்ச் சுற்றங்களும் போதும்’ என்ற முடிவுக்கு அவர் அப்போதே வந்தார். அந்தத் தமிழ்க் காதல் அவரைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிற இடம்... திராவிட உணர்வு மேலோங்கிய அன்பான சுற்றங்களின் முற்றத்தில்.
அது அவரே எண்ணிப்பார்த்திராத மாற்றம். திட்டமிடாமலே அவர் வாழ்வுக்கு வந்திருக்கும் திருவிழாக் காலம் இது.
இது எப்படி நிகழ்ந்தது?
சிறுத்தைகள் கட்சித் தலைவர் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவும், அதையொட்டிய விருதுகள் வழங்கும் விழாவும் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. அதே விழாவில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. அதே விழாவில்தான் நம் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் ஐயாவுக்கு, காமராசர் கதிர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அங்கே காமராசர் கதிர் விருதைப் பெற்ற ஐயா, ஒலிவாங்கி முன் மனம் திறக்கிறார். அவர் இதயம் பேசுகிறது. அந்தப் பேச்சால் ஒரு மகத்தான மாற்றம் நிகழ்ந்தது.
அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
”எனக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது. அதனால், என்னை இந்தக் கூட்டத்துக்குச் செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் தடுத்தார்கள். இந்த விழாவுக்கு வந்து என் உயிர் போகுமென்றால் அது திருமாவளவனின் மடியில் தானே போகும். அதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டே தீருவேன் என்று சொல்லிவிட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்”- என்று தழுதழுக்கச் சொன்னார். அதோடு....
“தமிழக முதல்வரும். திருமாவளவனும் உடல் நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும். ஏனென் றால் உங்கள் இருவரையும் விட்டால், இந்தத் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை. அதனால் நீங்கள் இருவரும் நீண்டகாலம் வாழவேண்டும் என்று ததும்பி வந்த அழுகையோடு அவர் வாழ்த்தி னார்.
அப்போது, நோயுற்ற ஒரு தாய் தன் அன்பிற்குரிய மகன்களிடம் நெகிழ்ச்சியோடு பேசுவது போலவும் வாழ்த்துவது போலவும் இருந்தது. அந்த சொற்களின் மூலம், முதல்வர் மற்றும் திருமா ஆகியோரின் உடல் நலனின் அவர் காட்டும் அக்கறை அற்புதமாக வெளிப்பட்டது. அது அவரது குரல் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் அக்கறைக் குரல்.
அதைத்தான் நெல்லை கண்ணன் அங்கே உணர்ச்சிப் பூர்வமாக எதிரொலித்தார்.
அவரது உணர்சிப் பூர்வமான உரையைக் கேட்டு முதல்வர் ஸ்டாலினும் திருமாவும் கண்ணீர் கசிய நெகிழ்ந்து போனதையும் நம்மால் பார்க்க முடிந்தது. அது ஓர் உணர்ச்சிப்பூர்வமான விழாவாக மாறியது.
தமிழ்க்கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இளங்கோவடிகள் விருது;
அவரது உயரத்திற்குச் சூட்டப்பட்ட மகுடமாகும்.
தமிழின் முதிர்ந்த போதிமரமாய் நிழல் பரப்பிக் கொண்டிருக்கும் ஐயா நெல்லை கண்ணன், நீண்ட காலம் ஆரோக்கியத்தோடும், நிம்மதியோடும், மன நிறைவோடும் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன். 78 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஐயாவின் 80-ல் மட்டுமல்லாமல், அவரது நூற்றாண்டு விழாவையும் அவரோடு கொண்டாட நாம் காத்திருக்கிறோம்.
பேரன்போடு,
நக்கீரன்கோபால்