""சிஸ்டர்!''

அழைப்பைக் கேட்டதும் தலையை உயர்த்திப் பார்த்தேன். அவர் ட்யூட்டி அறையின் கதவுக்கு அருகில் வந்து நின்றுகொண்டிருக்கிறார்- புன்னகையுடன்.

அருகில் சென்று கண்களைப் பார்த்தவாறு கேட்டேன்: ""வேதனை அதிகமா இருக்கா?''

""இருக்கு... ஒரு ஊசி போடுறீங்களா? தூங்கலாமே!''

Advertisment

""போடுறேன். மாத்திரை சாப்பிட்டீங்கள்ல?''

""மாத்திரைங்க சாப்பிட்டாச்சு.'' இதைக் கூறிவிட்டு, மெதுவாக சிரித்தார். அந்த சிரிப்பை ஆழமான வேதனை மூடியிருந்தது.

அவரைப் படுக்கைக்கு அனுப்பிவிட்டு, கொதித்துக் கொண்டிருந்த ஸ்டெர்லைஸரிலிருந்து ஸிரிஞ்சையும் ஊசியையும் எடுத்து வெளியே வைத்தேன். தொடர்ந்து சிந்தனையில் மூழ்கி நின்றுவிட்டேன். இந்த மனிதரின் சிறிய, நிசப்தமான சிரிப்புகளில் உலகத்தையும் மருத்துவ அறிவியலையும் கிண்டல் செய்யக்கூடிய ஏதோவொன்று உள்ளதோ?

Advertisment

ஃபோர்ஸிப்பை லோஷனிலேயே திரும்பவும் வைக்கும்போது நினைத்தேன்: கிண்டல் தோன்றினால், அதில் என்ன தவறிருக்கிறது? பயனில்லை என்று உறுதியாகத் தெரியக்கூடிய ஒரு விஷயத்தில் எல்லாரும் சேர்ந்து தீவிரமாக முயற்சிப்பதைப் பார்க்கும்போது யாருக்குத்தான் கிண்டல் தோன்றாமல் இருக்கும்?

எனினும், எந்த அளவுக்கு மரியாதையாக இந்த மனிதர் நடந்துகொள்கிறார்! ஊசியை சோதித்துப் பார்த்துவிட்டு ஸிரிஞ்சில் வைத்தபோது, நேற்று பார்த்த காட்சி ஞாபகத்தில் வந்தது.

சாயங்காலம் ஐந்து மணி இருக்கும். பார்வை யாளர்கள் வந்து நுழையக்கூடிய ஆரவாரம்... அன்பும் பாசமும் முட்டாள்தனங்களும் நிறைந்த ஒரு உலகம் வார்டுகளுக்குள் வேகமாக நுழைந்துகொண்டிருந்தது. ஆரவாரம்... அதைக் கேட்கும்போது மனதில் முறுகி நின்றுகொண்டிருந்த கம்பிகளெல்லாம் தற்காலிலிகமாக சற்று இளகியதைப்போல தோன்றும்.

மருந்து ரெஜிஸ்டரை மடக்கிவைத்துவிட்டு, மெதுவாக நடந்தேன். மொட்டை மாடிக்குச் சென்று, கடலைப் பார்த்துக்கொண்டு நின்றேன். தலையை உயர்த்தி சிரித்தவாறு கரையில் வந்து விழுந்து இறக்கும் அலைகள்... அலைகளுக்குப் பின்னால் அலைகள்... இப்படி ஒரு கடல் இங்கு... வாசற் படியிலேயே இருப்பது எவ்வளவு நல்ல விஷயம்! தனிமையான இரவுப் பொழுதில், எப்போதாவது ஒரு முனகலை மட்டும் வெளிப்படுத்தியவாறு நோயாளிகள் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது, என் வாழ்க்கை ஒரு ஊசிமுனையைப்போல இதயத்திற்குள் மீண்டும் நுழைந்து வரும்போது, என் ஷுக்களின் மெல்லிலிய ஓசையை மட்டும் கேட்டவாறு அங்குமிங்கு மாக நடக்கவேண்டிய சூழல் வரும்போது, இந்த கடல் எந்த அளவுக்கு நிம்மதியைத் தருகிறது! அது வாழ்வையும் அசைவையும் ஞாபகப்படுத்துகிறது.

அன்புடன் முரண்டு பிடித்துக்கொண்டும், காலில் கிடந்து உருண்டுகொண்டும் சேர்ந்து பயணிக்கும் ஒரு காவல் நாயைப்போல இந்த கடல்...

""சிஸ்டர்... நீங்க அலையை எண்ணிக்கிட்டிருக்கீங்களா?''

திரும்பிப் பார்த்தேன். அவர் சிரித்துக்கொண்டே தொடர்ந்தார்: ""கடலோட அலை எண்ணக் கூடியதுதான். முடிவே வராதே!''

சிரித்தார். அவருடைய சிரிப்பை எப்போதும்போல வேதனை மூடியிருக்கவில்லை.

""எனக்கு இன்னைக்கு வேதனை இல்லை சிஸ்டர்.''

""நல்ல விஷயம்! நோய் குணமாகி வருது...''

நெருப்பில் பட்டை தீட்டிய ஒரு கத்தியை வீசுவதைப்போல ஒரு பிரகாசம் அந்த கண்களின் வழியாகக் கடந்துசென்றது.

""சிஸ்டர்... நீங்க சொன்னதை நான் முழுமையா ஏத்துக்கிட்டேன். போதுமா?''

யாரோ செவியைப் பிடித்துத் திருகியதைப்போல தோன்றியது. எனினும் சிரித்தேன். சிரிக்க வேண்டுமல்லவா?

""சிஸ்டர்!''

""என்ன?''

""நான் ஒரு நாளை இழந்துட்டதைப்போல உணர்றேன்.''

""காரணம்?''

""வேதனையை உணராத ஒரு நாள் இருக்குங்கறதை என்னால உணரமுடியல.''

அப்போதும் சிரித்தேன். சிரிக்க வேண்டுமல்லவா?

மொட்டை மாடியின் இன்னொரு எல்லையிலிருந்து மெதுவாக வந்துகொண்டிருக்கும் தடிமனான வக்கீலைப் பார்த்தேன். அந்த நடையைப் பார்க்கும்போது, தெர்மாமீட்டரில் மெர்க்குரி ஏறுவது ஞாபகத்தில் வரும். வேதனைகளைப் பற்றிய ஆயிரம் புகார்கள் இருக்கும். புகார் கூறுவதற்கும் உணவு சாப்பிடுவதற்கும் மட்டுமே இந்த மனிதர் வாயை அசைக்கிறார்! ஒன்று முடிந்தால்... இன்னொன்று.

வக்கீல் தூணில் கையை ஊன்றிநின்றவாறு பலமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். தொடர்ந்து கடலைப் பார்த்துப் புன்னகைத்தவாறு நின்றுகொண்டிருந்த அவரிடம் கேட்பது காதில் விழுந்தது.

""இந்த வார்டிலா?''

""ஆமா!''

""நான்...''

"" "பி' க்ளாஸில் இருக்கும் விஷயம் தெரியும். தீவிர கண்காணிப்பில்... இல்லியா? அவங்க ஏதாவதொரு நோயைக் கண்டுபிடிச்சு சொன்னாங்களா?''

""இல்ல.''

""கஷ்டம்தான்...''

""என்ன?''

""நோய் குணமாக வழியில்லைன்னாலும் நோயின் பேரையாவது சொன்னா ஒரு நிம்மதியா இருக்கும். இல்லியா?''

வக்கீல் பதில் கூறவில்லை.

""உங்களுக்கு...?'' வக்கீல் கேள்வியை முழுமை செய்வதற்கு முன்பே பதில் கிடைத்தது.

""புத்து நோய்.''

வக்கீலுக்கு ஒரு அதிர்ச்சி!

""மருந்து கிடையாது.'' அவர் சற்று அழுத்தமாகக் கூறினார்.

சுவாசம் அடைப்பதைப்போல வக்கீல் ஒதுங்கிநின்றார்.

தொடர்ந்து கடலோரப் பகுதியைப் பார்த்தார். சிறிது நேரம் கடந்ததும் கூறினார்:

""இன்னிக்கு கடல் அமைதியா இருக்கே?''

""வக்கீல் சார்... நீங்க விஷயத்தை அழகா மாத்திட்டீங்க. எனக்கு புத்து நோய் இருக்கறதுக்காக நீங்க ஏன் பதைபதைப்பு அடையணும்?' இதைக் கூறிவிட்டு அவர் சிரித்தபோது வக்கீல் தான் வந்த வழியிலேயே மெதுவாக நடந்தார்.

அந்த காட்சியை நினைத்தபோது சிரிப்பு வந்தது. சிரிப்பதற்கு நேரமில்லை. அவர் காத்திருப்பார். ஊசியுடன் அருகில் சென்றபோது சிரித்தார். சட்டையின் கைப் பகுதியை உயர்த்திக் காட்டினார். ஊசி உடலுக்குள் குத்தி நுழையும்போது உண்டாகக்கூடிய அந்த மெல்லிலிய முக அசைவு... ஊசியை வெளியே எடுத்துவிட்டு, மெதுவாக விரலால் தேய்த்துவிடும்போது கேட்டேன்:

""குடிக்கறதுக்கு ஏதாவது வேணுமா?''

""சூடான பால் இருக்கா?''

""இருக்கு... ஸ்டவ்ல வச்சிருக்கேன்.''

அதைக் கொண்டுவந்து கொடுத்தபோது அவர் மிகுந்த திருப்தி நிறைந்த ஒரு முக வெளிப்பாட்டுடன் கூறினார்:

""நேத்து சொன்ன விஷயத்தில இருக்குற இன்னொரு நபரை நீங்க பார்க்க வேணாமா, சிஸ்டர்?''

""எந்த விஷயம்?''

""உங்களையும் குற்றவாளியாக்கிய அந்த வழக்கு... பாவம்... சிஸ்டர்... நிரபராதியான நீங்களும் எனக்காக சிலுவையைச் சுமக்கவேண்டிய நிலை வந்தது.''

சிரிப்பு வரவில்லை. அது அந்த மனிதருக்குப் புரிந்ததோ இல்லையோ? அவர் கூறினார்:

""மன்னிக்கணும் சிஸ்டர்.''

""பரவாயில்லை.. தூங்குங்க...''

ccc

""தூங்குறேன். இந்தாங்க... இந்த புகைப்படத்தைப் பாருங்க. இதுதான் உண்மையான குற்றவாளி.''

தலையணைக்கு அடியிலிருந்து அந்த புகைப்படத்தை எடுத்து கையில் தந்துவிட்டு, அவர் தொடர்ந்து கூறினார்:

""எனக்கு நிம்மதியா இருக்கு. இது அவளுடைய திருமண புகைப்படம். பொண்ணு எப்படி இருக்கா?''

அதைப் பார்த்துப் புன்னகையைத் தவழவிட்டேன். தவழவிட வேண்டுமே!

""சிஸ்டர்..... அதை கையில வச்சிக்கங்க. நான் படுக்கட்டுமா?'' கண் இமைகளில் வந்து முத்தமிடும் தூக்கமே... நீ நல்ல தோழிதான்!

சிரித்துக்கொண்டே அந்த மனிதர் படுக்கையில் நீட்டிப்படுத்தார். சாய்ந்து படுத்து ஒரு சிறிய குழந்தை யைப்போல அமைதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

புகைப்படத்தையும் அவருடைய முகத்தையும் மாறிமாறிப் பார்த்தேன். எந்த அளவுக்குப் பொருத்தமான இரண்டு முகங்கள்! ட்யூட்டி அறைக்குச் சென்று, புகைப்படத்தைப் பாக்கெட்டிற்குள் வைத்துவிட்டு, மேஜைமீது இருந்த ஒரு கேஸ் ஷீட்டை எடுத்துப் பார்த்தேன். அப்போது நேற்று அவர் கூறிய வார்த்தைகள் நினைவில் வந்தன.

திடீரென்று ட்யூட்டி அறைக்குள் வந்து, அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்துகொண்டு கேட்டார்: ""சிஸ்டர்.... ஒரு கேள்வி...''

""என்ன?''

""உங்களுக்கு காதல் விஷயத்தில ஏமாற்றமோ, ஏமாற்றங்களோ உண்டாகியிருக்கா?''

""உண்டாகியிருக்குங்கற விஷயம் உறுதி. இல்லியா?''

""மனுஷங்களுக்கு உண்டாவதைதானே நான் கேட்கறேன்.''

அந்த இயல்பான வார்த்தையைக் கேட்டால், அவரை விரட்டவேண்டுமென்று தோன்றாது. நடவடிக்கையிலும் வார்த்தையிலும் இருக்கக்கூடிய மரியாதை... மதிப்பு தோன்றவும் செய்யும்.

பதிலுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அவர் தொடர்ந்து கூறினார்: ""எனக்கு காதல் உண்டாச்சு; ஏமாற்றம் உண்டாகல.''

""சந்தோஷம்.''

""அந்த சந்தோஷத்துக்கு நீங்களும்தான் காரணம்.''

""நானா?''

"முழுக் கதையையும் சொல்றேன். உங்களுக்கு அதிக வேலை இருக்கக்கூடிய நேரமா?''

""சொல்லுங்க.''

""நாங்க எல்லாரும்- நானும் அப்பாவும் அம்மாவும் தங்கைகளும் கொஞ்ச காலம் பம்பாயில வசிச்சோம்னு முன்ன ஒருமுறை நான் சொல்லியிருக்கேன் இல்லியா?''

""ஆமா... உங்க பெரிய மாமாவுக்கு அங்க மிகப்பெரிய வர்த்தகம்ங்கற விஷயமும் எனக்குத் தெரியும்.''

""அந்த பெரிய மாமாவோட மகள் சைலிலி...

அதாவது- சைலஜா... என் காதலியா இருந்தா. ஒண்ணா விளையாடினோம். ஒண்ணா படிச்சோம். ஒரே விருப்பத்தில பிடிச்சிக்கிட்டு நின்னோம். அவ பலநேரங்கள்ல சொல்லுவா ஒண்ணா சேர்ந்து மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்குப் போகணும்னு. அந்த வகையில பழுக்கவேண்டிய நிலைக்கு வந்த பழங்களைப்போல நாளுங்க எங்களுக்கு முன்னால தொங்கிக்கிட்டிருந்துச்சு. நான் எம்.எஸ்.ஸியிலும், அவ எம்.ஏ.விலும் படிச்சுக்கிட்டிருந்தோம். இறுதி வருஷம்... அப்போதான் இவன் வந்து சேர்றான்.''

""யாரு?''

""புத்துநோய்...''

அவர் சிரித்தார். அவருடன் சேர்ந்து சிரிப்பதற்கு சிரமமாக இருந்தது.

""தப்பிக்க வழியில்லைங்கறது உறுதியா தெரிஞ்சது.''

ஒரு நிமிடப் பேரமைதி... சாளரத்தின்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞனின் முகம், சாயங்காலத்தின் பிரகாசத்தில் மேலும் சிவந்து காணப்பட்டது.

"தொடர்ந்து சொல்லுங்க' என்று அவரிடம் கூறவில்லை. ஒரு பருத்தித் துண்டை எடுத்துப் பிடித்திழுத்து, நூலாக அதை ஆக்கிக்கொண்டிருந்தேன்.

""விஷயம் தெரிஞ்சா சைலியோட மனம் மொத்தத்தில ஒருமாதிரி ஆயிடும்.'' அவர் தொடர்ந்தார்: ""நான் ஊருக்குப் போனேன். சைலியோட கடிதம் தொடர்ந்து வந்துகிட்டிருந்தது. நான் மெதுவா... மெதுவாவே பதில் எழுதினேன். முதல்ல மூணுக்கு ஒண்ணு... பிறகு அஞ்சுக்கு ஒண்ணு... பிறகு பத்துக்கு ஒண்ணு... என் காதலோட வெப்பம் குறைஞ்சு வந்துக்கிட்டிருக்குன்னு சைலிக்கு தோணியிருக்கணும். அப்படி தோணச்செய்றதுக்கு நாலஞ்சு மாசமாச்சு. நான் திறமைசாலின்னு தோணுதா சிஸ்டர்?''

பதில் கூறவில்லை.

""இந்த மருத்துவமனைக்கு வந்து ஒண்ணரை மாசம் ஆனபிறகு சைலிக்கு எழுதினேன். நான் ஒரு நர்ஸுடன் ஆழமான காதல் உறவுல இருக்கறதா.

உங்க பெயரைத்தான் பயன்படுத்தினேன். அந்த வகையில் உங்களையும் குற்றவாளியாக்கினேன். சைலி வேறுவழியில் உங்களைப் பத்தி விசாரிச்சாங்கற விஷயம் தெரியும்... மன்னிக்கணும்.''

பிறகும்... புன்னகையைத் தவழவிட்டார். தவழ விடவேண்டுமே!

இப்போது திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டாள் என்ற விஷயம் தெரிந்திருக்கிறது. நல்லது... அவளுக்கு நல்லது நடக்கட்டும். சிஸ்டர், உங்ககிட்ட அநீதியா நடந்துகொண்டதற்கு மன்னிக்கணும். நல்ல மனசு கொண்ட ஒரு இளம்பெண்ணைக் காப்பாத்தறதுக்கு நீங்க உதவினீங்க.''

அவர் மொட்டை மாடியிலிருந்து எழுந்து சென்றார்.

சிவந்த கடலையே பார்த்துக்கொண்டு நின்றார். நான் அவரையும்...

கடல் இங்கு இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருப்பது எவ்வளவு நல்ல விஷயம்! உயர்ந்துகொண்டும் தாழ்ந்துகொண்டும் சிதறிக்கொண்டும் இருக்கக்கூடிய அலைகள்!

இன்றும் கடல் இரைச்சல் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அங்கு சென்று பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும்போல இருக்கிறது. சிரித்து... சிரித்து விழுந்து இறக்கக்கூடிய இந்த தொடர் அலைகள் வாழ்க்கையை நிரந்தரமாக கேலி செய்கின்றனவோ?

எனினும், வாழ்வென்பது எந்த அளவுக்கு சக்தி படைத்தது!

""சிஸ்டர்... படுக்கை எண் 13-ல இருக்குற மனிதர் செயல்படாம இருக்காரு...''

வந்து கூறியது "ஆர்டர்லி' என்று தோன்றியது. ஓடிச்சென்று பார்த்தேன். அவருடைய செயல்படும் தன்மை நின்றுவிட்டது. அந்த பெரிய சரீரம் அசைவற்றதாகியிருந்தது.

திரும்பிச் செல்லும்போது அவரைப் பார்த்தேன். மிகவும் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். என் பாக்கெட்டில் அந்தத் திருமணப் புகைப்படம் இருக்கிறதா என்று தடவிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நகர்த்தி வைத்தேன். இருக்கும்போது, அந்த புகைப்படம் சேதமாகிவிடக்கூடாது.

"ரிப்போர்ட்' எழுதினேன். இனி எப்போது இறந்த உடலை எடுப்பார்கள் என்ற விஷயம் தெரியாது.

இன்று மூன்று துப்புரவுத் தொழிலாளிகள் விடுமுறையில் இருக்கிறார்கள். யாராவது வருவார்கள். வரும்போது வரட்டும். பிணமாகும்வரையில்தான் கவனிப்பு தேவை.

மருந்துக் கணக்கினை எழுதி முடித்தேன். இதற்கிடையில் ட்யூட்டி அறையின் சாளரத்தில் தன் தடிமனான போர்வையுடன் வயதான பெரியவர் வந்து கூறினார்.

""மகளே... எனக்கு இன்னைக்கு பால் கிடைக்கல.''

""கிடைக்கும். போய்ப் படுங்க.''

""ரொட்டியும்...''

""எல்லாம் கிடைக்கும் பெரியவரே!''

அவர் நகர்ந்தபோது, கிழிய ஆரம்பித்திருக்கும் பாய்மரத்துடன், இந்த கடலில் பயணிக்கக்கூடிய படகுகள் ஞாபகத்தில் வந்தன.

பேனாவை மடக்கி பாக்கெட்டிற்குள் வைத்துவிட்டு, மேஜையின்மீது கையை வைத்து அமர்ந்தேன். என் வாழ்க்கை ஊசிமுனையைப்போல இதயத்திற்குள் வந்தது.

புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். அழகான இளம்பெண்! அழகான கண்கள். அழகான முகம்.... அழகான... இவருடைய நோய் குணமாகியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென்று நான் நினைத்தேன். அப்போது டாக்டர் கூறியதையும் நினைத்துப் பார்த்தேன்.

"சில நாட்களே இருக்கு.'

""சிஸ்டர்!''

குரலைக் கேட்டு அந்த கட்டிலுக்கருகில் சென்றேன். அவர் கண் விழித்திருந்தார்.

""தாங்கமுடியாத அளவுக்கு... மூச்சுவிடமுடியல...''

டாக்டருக்கு ஆளை அனுப்பினேன்.

மிகவும் செயலற்ற நிலையில் இருந்தார் அந்த மனிதர். அமர்ந்தார்... படுத்தார்... திரும்பிப் படுத்தார். மூச்சுவிட முடியாத நிலையில் படுக்கக்கூடாது. மீண்டும் எழுந்து அமர்ந்தார். தனியாக இருக்கமுடியவில்லை. தாங்கி அமரச் செய்தேன். அவ்வாறு படுத்திருக்கும்போது, அந்த மார்புப் பகுதி பலமாக உயர்ந்துகொண்டும் தாழ்ந்துகொண்டும் இருந்தது- புயல் சமயத்திலிருக்கும் கடலினைப்போல...

படுக்கவேண்டுமென்று விரும்பினார். படுக்க வைத்தேன். மூச்சுவிடுவது குறைந்துகொண்டு வந்தது. டாக்டர் உள்ளே நுழைந்தபோது, அந்த மார்பு அசைவற்றதாகிவிட்டிருந்தது.

அவர் ஒரு நிமிடம் பார்த்தவாறு நின்றுகொண்டி ருந்துவிட்டு, வெளியேறி நடந்துசென்றார். வழக்கம்போல ட்யூட்டி அறைக்குள் திரும்பி வந்து, அசைவே இல்லாமல் அமர்ந்தேன். குலுங்கிக் குலுங்கி அழமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! முடியவில்லை...

உயர்ந்துகொண்டும் தாழ்ந்துகொண்டும் சிதறிக் கொண்டும் இருந்த தொடர் அலைகளின் சத்தம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

அப்போது நேற்றைய அவருடைய கேள்வி ஞாபகத்தில் வந்தது.

"உங்களுக்கு காதல் விஷயத்தில ஏமாற்றமோ, ஏமாற்றங்களோ உண்டாகியிருக்கா?'

அந்த மனிதர் பதிலை எதிர்பார்க்கவில்லை.

கடலின் இரைச்சலைக் கேட்டுக்கொண்டே எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை.

பணி நேரம் முடிந்துவிட்டது. "ஸென்ஸஸ் ரிப்போர்ட்' எழுதவேண்டும்.

டிஸ்சார்ஜ்- 4... அட்மிஷன்- 6.... ட்ரான்ஸ்ஃபர்- 1... மரணம்- 2...

புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு, பாக்கெட்டில் தடவிப் பார்த்தேன். புகைப்படம் அங்கேயே இருந்தது. எடுத்துக் கிழித்தெறிய வேண்டுமென்று தோன்றியது.

அப்போது அந்த வார்த்தை ஞாபகத்தில் வந்தது. "சிஸ்டர்... இந்த புகைப்படத்தை நீங்க வச்சிருங்க.' வார்டிலிருந்து செல்லும்போது, கடலின் இரைச்சல் சத்தத்தை கவனித்தேன். அது புரண்டுப் புரண்டு கொண்டு பின்னால் வருவதைப்போல தோன்றியது.

ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்த்தேன். பாவம் கடல்!

வாழ்வின் முனை இதயத்திற்குள் தாழ்ந்து இறங்கிக்கொண்டிருந்தது.