சங்கப்பாடல்கள் அகம், புறம் என்ற இரண்டையும் பாடுபொருளாகக் கொண்டவை. அவற்றை ஒட்டி எழுந்துள்ள நீதி இலக்கியங்கள் நீதியைப் பாடுபொருளாகக் கொண்டவை. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் பொதுப்படையாக நீதியைப் புகுத்த வேண்டியவைதான் நீதி இலக்கியங்கள். இந்த அடிப்படையில்தான் அவை தோன்றியுள்ளன என்றுதான் நாம் கருத வேண்டும். ஏனெனில் அகம் மற்றும் புறச் சிந்தனைகளை உடைய மக்களை மடைமாற்றம் செய்து சமுதாயத்தில் நீதியைத் தழைக்கச் செய்யவும் அகம், புறத்தை அளவோடு வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதை வலி−யுறுத் தவும் நீதி இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
சங்க இலக்கியத்தைப் போன்றே நீதி இலக்கியங் களும் பதினெட்டு என்ற எண்ணிக்கையில் தோற்றுவிக்கப்பட்டன. இவற்றுள் நீதியைக் கூறுபவை, புறத்தைப் பாடுபவை, அகத்தைப் பாடுபவை என்ற பிரிவுகள் உள்ளன. இவையாவும் சேர்ந்து நீதி இலக்கி யங்களாகப் போற்றப்படுகின்றன.
பதினெட்டு நூல்களுள் பதினொரு நூல்கள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை
1. நான்மணிக்கடிகை- விளம்பி நாகனார்
2. இனியவை நாற்பது- பூதஞ்சேந்தனார்
3. இன்னா நாற்பது- கபிலர்
4. கார் நாற்பது- மதுரைக் கண்ணங்கூத்தனார்
5. களவழி நாற்பது- பொய்கையார்
6. திரிகடுகம்- நல்லாதனார்
7. ஆசாரக் கோவை- வண்கயத்து முள்ளியார்
8. சிறுபஞ்சமூலம்- காரியாசான்
9. முதுமொழிக் காஞ்சி- மதுரைக் கூடலூர்க் கிழார்
10. ஏலாதி- கணிமேதாவியார்
11. நாலடியார்
இங்கு எடுத்துக்கொண்ட நூல்களுள் ஒன்பது நூல்களில் பெண் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவை பெண்ணின் ஆளுமைப் பண்பை எடுத்தியம்புவனாக இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய நிலையாகும்.
பெண்ணின் ஆளுமை எங்கே?
சங்க இலக்கியத்தில் அக இலக்கியங்களுள் தலைவனுக்காக ஏங்குபவளாகத் தலைவி படைக்கப் பட்டுள்ளாள். தோழி, தலைவன் தலைவி இருவரையும் சமாதானப்படுத்துதல், வாழ்வில் இணைத்து வைத்தல் ஆகிய பணிகளைச் செய்து கொண்டுள்ளாள். பரத்தைப் பெண்கள் பற்றிப் பேசப்படுகின்றது.
புற இலக்கியத்தில் ஆங்காங்கே பெண்களின் ஆளுமை ஔவையார் போன்று வெளிப்படுகின்றது. அப்பண்புகளையே அறிந்த புலவர்கள் அகம், புறத்தி−ருந்து சமுதாயத்தை மடைமாற்றம் செய்ய விரும்பினர்.
அதனால் நீதிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அதன் விளைவாகவே நீதி இலக்கியங்கள் தோன்றின.
நீதி இலக்கியத்தில் பெண்கள்
சங்க இலக்கியத்தில் தலைவி தலைமைப்பாத்திர மாகத் திகழ்ந்தாள். அவர்களுடைய உணர்வுகளுக்கு முதன்மை வழங்கப்பட்டது. அவளுக்கும் தலைவ னுக்கும் உள்ள உறவு வளர்வதற்குத் தோழி என்ற பாத்திரம் படைக்கப்பட்டது. தலைவி சோர்ந்திருந்த நேரம் அவளைத் தேற்றுபவளாகவும் தோழி திகழ்ந்தாள். ஆராய்ந்து பார்த்தோமானால் தலைவி வளமான வாழ்க்கை வாழ்வதற்குத் தோழி காரணமாக இருந்தாள்.
நீதி இலக்கியம் தோன்றிய பின்னர் நீதியைக் கூற நினைத்த புலவர்கள் பெண்ணை விளித்துப் பாடி யுள்ளனர். இதில் இவளுடைய புற அழகு பேசப் பட்டுள்ளது. பெண் ஒரு காமப் பொருளாகப் பார்க்கப் பட்டுள்ளாள். அவளுடைய திறமைகள் வெளிக் கொணரப்படவில்லை.
""கல்லி−ல் பிறக்கும் கதிர்மணி- காதலி−
சொல்−ல் பிறக்கும் உயர்மதம்'' (நான்மணிக்கடிகை, பா.7)
மலையின் பாறைகளில் ஒலி−மிக்க மணிகள் தோன்றும். மிகுதியான களிப்பு காத−யின் இனச் சொல்−ல் தோன்றும். இதன் மூலம் இன்பத்திற்குக் காரணமானவள் பெண் என நான்மணிக்கடிகை கூறுகின்றது. மேலும்.
""பெண்மைக்கு அழகு நாணமுடைமை'' (பா. 11)
""மனைக்குப் பாழ் வாள்நுதல் இன்மை'' (பா. 22)
""பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர்'' (பா. 34)
""மையால் தளிக்கும் மலர்க்கணிகள் (பா. 36)
""..... தகையுடைய
பெண் இனிது பேணி வழிபடின்'' (பா. 39)
""அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண் என்ப'' (பா. 55)
"".......கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகுவாள்'' (பா.85)
கொண்ட கணவரோடு ஒன்றுபட்டு வாழ்தலே பெண்களுக்கு நல்ல செயலாகும்.
""நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்'' (பா.5)
நல்லி−யல்புடைய பெண்டிர் நாணத்தின் எல்லையில் நிற்பர்.
""அணங்கல் வணங்கின்று பெண்'' (பா.91)
பெண்கள் தம் கணவனை அல்லாது வேறு தெய்வங்களை வணங்குதல் இலர்.
""பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்
பெட்டாங்கு ஒழுகும் பணையி−'' (பா. 92)
நற்பண்புடையவள் கற்பொழுக்கத்தினின்று சிறிதும் தவற மாட்டாள். எவ்வளவு காவல் இருந்தாலும் சுயக்கட்டுப்பாடு இல்லாதவள் தான் விரும்பியபடியே நடப்பாள்.
""பாழாகும்
பண்புடையாள் இல்லா மனை'' (பா. 101)
பண்புடைய மனைவி இல்லாத வீடு பாழ்மனையாகி விடும்.
""மனைக்கு விளக்க மடவாள்'' (பா. 105)
இல்லத்திற்கு ஒளிவீசும் விளக்கு மனைவி என்று நான்மணிக்கடிகை பெண்ணை விதந்து பேசுகின்றது. ஒரு வீடு (குடும்பம்) நன்றாக இருந்தால் சமுதாயம் நன்றாக இருக்கும். சமுதாயம் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும். இதைத்தான் தமிழ் இலக்கியம் நமக்குப் பாடமாகப் புகட்டுகின்றது.
ஆனால் நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சார்புத் தன்மையாகப் பேசுகின்றார். குடும்பத்தில் பெண்ணின் நற்பண்பும் ஒழுக்கமும் மட்டும் சிறப்பாக அமைய வேண்டும் என்று பேசுகின்றது. ஆண் ஒழுக்கம் பற்றியோ, நற்பண்புகள் பற்றியோ எங்கும் பேசவில்லை.
குடும்ப மேன்மைக்குக் காரணமானவள் பெண் என்று பேசவில்லை. தொடக்க காலத்தில் இருந்த சமூகம் தாய்வழிச் சமூகமாகும். குடும்ப நிர்வாகத் திறமையில் ஆணுக்கு இணையாகப் பெண் இருந்துள்ளாள். குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளாள்.
தனிப்பட்ட உறவு உரிமை, சொத்து உரிமை, வாரிசு உரிமை வந்ததன் பின்னர் பெண் சுதந்திரம் ஒடுக்கப் பட்டது. பெண் ஒழுக்கம் வரையறுக்கப்பட்டது. பெண்ணின் நிர்வாகப் பொறுப்புகள் குறைக்கப் பட்டன. வெளிப்படையாகச் சொல்லப் போனால் பெண் ஒடுக்குமுறை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியது. அதனுடைய பிரதிபலி−ப்பாக நீதி இலக்கியங்கள் திகழ்கின்றன. அதைத்தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நூல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. மேற்கண்ட நான்மணிக்கடிகையும் இதைத்தான் உணர்த்துகின்றது.
பெண்ணை அடிமைப்படுத்தும் உத்தி என்ன சொல்− ஊக்கப்படுத்துகின்றோமோ அந்தப் பண்புதான் மனிதர்களிடம் ஓங்கி வளர்கின்றது. வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும்போது எத்தனையோ வீரப்பெண்மணிகளைப் பார்க்க முடிகின்றது. பெண்களிடம் வீரம், ஆட்சித்திறம் போன்ற ஆளுமைப் பண்புகள் இருப்பதை மறந்து அல்லது மறுத்து பெண்களை மென்மையானவர்கள் என்றே நீதி இலக்கியங்கள் பாடியுள்ளன. ஒருவரின் வளர்ச்சியைப் பல வழிகளில் மட்டுப்படுத்தலாம். நேரடியாகக் குறைகளைக் கூறலாம். அல்லது வஞ்சகமாகப் புகழ்ந்தும் அவர்களை வளர விடாமல் பண்ணலாம். இரண்டாவது வகையை அற இலக்கியங்கள் மேற்கொள்கின்றன.
இனியவை நாற்பதை எழுதிய பூதங்சேந்தனார்
""மூத்தோர் முறுவலார் சொல்−னிது'' (பா.1)
முத்துப்போன்ற பற்களையுடைய மகளிரின் வாய்ச்சொல் இனிது என்று புகழ்ந்து பேசுகின்றார்.
கணிமேதாவியாரும் ஏலாதியில் இவ்வாறு பேசுகின்றார். பெண்ணை முன்னிலைப்படுத்திப் பேசுவதுபோல் அவருடைய பாடல் கருத்துகள்
அமைந்துள்ளன மூங்கிலையொத்த தோள்களையுடைய பெண்ணே'' (ஏலாதி பா. 6)
""மயிலி−றகின் அடியைப் போன்று விளங்கும் கூரிய பற்களையுடைய பெண்ணே'' (மேலது பா.7)
""கயல்மீன் போன்ற மையுண்ட கண்களையுடைய பெண்ணே'' (மேலது பா. 14)
""மின்னல் போன்ற இடையை உடைய பெண்ணே'' (மேலது பா. 20)
""பால்போலும் சொல்−னாள்'' (பா.21)
""மத்த மயிலன்ன சாயலாள்'' (பா.31)
""பூவாதி வண்டுதேர்ந் துண்டுழாய்'' (பா. 32)
வண்டுகள் ஆராய்ந்து மொய்த்து உண்ணுகின்ற மலர்கள் முதலி−யன நிறைந்த கூந்தலையுடைய பெண்ணே
""கூந்தல் மயிலன்னாய்''(பா.33)
""கொவ்வைபோல் செவ்வாயாய்'' (பா.34)
""பண்ணாளும் சொல்லாள்'' (பா.35)
""காதுதாழ் வான்மகர வார்குழையாள்'' (பா.43) காதின்கண் தொங்குகின்ற பெரிய மகரமீன் போன்ற நீண்ட குண்டலங்களை அணிந்த பெண்ணே
""மாவலந்த நோக்கினாள்'' (பா.56)
மாவடுவின் பிளவை வென்ற கண்களையுடைய பெண்ணே
""ஒல்லுவ நல்ல உருகுவேல் கண்ணினாள்'' (பா.76)
ஒப்பனவும் அழகியதுமாகிய வேல்போன்ற கண்களையுடைய பெண்ணே என்று பலவாறு மகடூஉ முன்னிலையாக ஏலாதியில் கூறப்பட்டுள்ளது. இத்தொடர்கள் யாவும் பெண்கள் மேன்மையானவர்கள் என்று பகர்கின்றன. இவ்வாறு கூறிக்கொண்டே வந்தால் அவர்களிடம் உள்ள திறமைகள் சிறிது சிறிதாக மறைந்து மென்மைத் தன்மையை அதாவது அவர்களுடைய புற அழகை பாதுகாப்பதில் முழுக்கவனமும் மாறும். அதன்பின் எளிமையாக அவர்களை வீட்டு வேலை செய்வதில் எளிமையாக பழக்கப்படுத்தி விடலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு நீதி இலக்கியங்கள் தோன்றியுள்ளதாகக் கருத இடமேற்படுகின்றது.
இன்னா நாற்பது பாடிய கபிலர் பெண்களை வேறொரு கோணத்தில் பார்க்கிறார்.
""உடம்பா டில்லா மனைவிதோள் இன்னா'' (இன்னா நாற்பது பா. 11)
உள்ளம் பொருந்துதல் இல்லாத மனைவியின் தோளைச் சேர்தல் துன்பம்
""முலையில்லாள் பெண்மை விழைவின்னா'' (மேலது (பா.12)
பெண்மை நலம் இல்லாதவள் பெண் தன்மையை விரும்புவது துன்பம்.
"".......................................... இன்னா
பிணியன்னார் வாழும் மனை'' (மேலது பா. 13)
கணவருக்குள் பிணி போலும் மனைவியர் வாழும் வீடு பெரும் துன்பம்
""......................................... ஐம்பாலர் வஞ்சித்தல் இன்னா'' (மேலது பா. 14)
ஐந்து பகுப்பினை உடைய (கூந்தல், குழல், கொண்டை, சுருள், முடி) மகளிர் தம் கணவரை வஞ்சித்தொழுகுதல் துன்பம்.
""நல்ல தகையார் நாணாமை யின்னா'' (மேலது பா.19)
அழகினையுடைய மகளிர் நாணல்லாமல் வாழ்தல் துன்பம் என்று பெண்களால் ஏற்படும் துன்பங்களை வரிசைப்படுத்திக் கூறுகின்றது.
குடும்பத்தில் பெண்களால் மட்டும் இத்தகைய துன்பம் வருவதில்லை. குடும்பத்தின் சரிபாதியாக இருக்கும் ஆணுக்கும் இருக்க வேண்டிய கூறுகள் பண்பு நலன்கள் இல்லை என்றால் அக்குடும்பம் பெருந்துன்பத்திற்கு ஆளாகும். இதை ஏனோ நீதி இலக்கியங்கள் சிந்திக்க மறந்து விட்டனர்.
கார் நாற்பதை எழுதிய மதுரைக் கண்ணங்கூத்தனார் பாடிய நாற்பது பாடல்களிலும் தலைவன் தலைவியர் குறித்த அக ஒழுக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தான் இங்கும் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் பொருள்தேடச் சென்ற தலைவன் திரும்பி விரைவில் வருவான் பருவம் வந்த பின்னரும் இனியும் தலைவன் வரவில்லையே என்று வருந்தும் தலைவி, வருத்தமுற்ற தலைவியை தோழி ஆற்றுப்படுத்துதல் ஆகியவை தொடர்பான பாடல்கள் இந்நூ−ல் இடம்பெற்றுள்ளன. மேலும் தலைவி மென்மைத் தன்மை வாய்ந்தவளாகவும் அவளுடைய புற அழகும் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. நீதி நூல்களில் வேறுபட்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ஆசாரக்கோவையை எழுதிய வண்கயத்து முள்ளியார் பெண்களின் இயல்புகளை பின்வருமாறு வரையறைப்படுத்துகின்றார்.
நற்குலப் பெண்டிர் தன் கணவரைத் தவிர வேறு ஆடவரைப் பார்க்கமாட்டார். (ஆசாரக் கோவை பா. 7)
""தம்மேனி நோக்கார் தலையுளார் கைநொடியார்
எம்மேனி யாயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி யள்ளால் பிற''
(மேலது பா 77)
என்ற பாடலும் மேற்கண்ட கருத்தையே வ−யுறுத்துகின்றது.
சிறுபஞ்சமூலத்தை எழுதிய காரியாசான் பின்வருமாறு பெண்ணின் இயல்புகளை அவளையே முன்னிலைப்படுத்திப் பேசுகின்றார்.
""........................... காதிரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தல் நகை''
(சிறுபஞ்சமூலம் பா. 5)
காதுகளே முகத்துக்கு நகையணிந்து அழகு செய்யும் சிறப்புறுப்பு ஆக−ன் அவை அல்லாதவள் இறுமாப்புக் கொள்ள முடியாது.
""இடர் இன்னா நட்டார்கள் ஈயாமை இன்னா
தொடர்பின்னா நன்னார்கண் தூயார்ப் படர்பின்னா
கண்டல் அவிர்பூங் கதுப்பினாய் இன்னாதே
கொண்ட விரதங் குறைவு''
(சிறுபஞ்சமூலம் பா. 14)
தாழை மலர் விளங்குகின்ற அழகிய கூந்தலையுடை யவளே நண்பர்களுக்குத் துன்பம் செய்தலும் அவர் களுக்குத் துன்பம் வந்த காலத்தில் உதவாதிருத்தலும் பகைவரிடத்து உறவு கொள்ளுதலும் கைகொண்ட விரதம் குறைவுபடுதலும் ஆகிய இவ்வைந்தும் தீய பயன்களைத்தரும் என மகடூ முன்னிலையாகக் கூறியுள்ளார்.
நாலடியார் பெண்களை மையப்படுத்தி கீழ்வரும் கருத்துக்களைக் கூறியுள்ளது. கற்புடைய மகளிர் என்ற அதிகாரத்தில் ""குடநீர் அறவுண்ணும் இடுக்கட்பொழுதும்
கடனீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
மாதர் மனை மாட்சியாள்''
(நாலடியார், பா. 383)
குடத்தில் வைத்திருந்த நீர் தீரும்படி முழுவதையும் குடித்துவிடும் வறுமையுற்ற காலத்திலும் கடல்நீர் முழுவதையும் குடித்துத் தீர்க்கும் அளவு உறவினர் கூட்டம் வந்தாலும் விருந்தோம்பும் தன் கடமை யையே இல்லற நெறியாகக் கொண்டு வாழும் மடப்பமுடைவற்றை மொழியும் அழகிய பெண்ணே இல்லறத்திற்குரிய மாண்புடையவளாவாள் என்று பெண்ணின் பொறுப்பை உணர்த்துகின்றது. கற்புடைய மகளிர் இவ்வாறுதான் செய்வர் என்பதை அறிவுறுத்த கற்புடைய மகளிர் என்ற அதிகாரத்தில் இக்கருத்தைக் கூறியுள்ளது. அக்கால மகளிரானாலும் இக்கால மகளிரானாலும் பெண்களுக்குப் பெரிதும் மன உளைச்சலையே இக்கருத்து கொடுக்கும்.
""அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட''
(நாலடியார். பா.1)
அறுவகைச் சுவையுடையனவாகிய உணவை
அன்புடன் மனையாள் பரிமாற எனவும்,
""தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் -கரிலா
மம்மர்கொள் மாந்தர்க்கணங்காகும்''
(மேலது. பா.14)
இளமை நிலையில்லா தரையில் வீழ்ந்துவிடும் பெண்ணைக் காமுறுதல் கூடாது எனவும் வரும் பாடற் கருத்துக்கள் பெண்கள் திறமையுடையவர்களாக. ஆளுமையுடையவர்களாக வளர்வதற்கான கருத்துக்கள் இல்லை.
""கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா அடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்படும்''
(மேலது. பா.74)
ஈதல், நுகர்தல் இரண்டன் பயன்களையும் பெறாத குறையுள்ள மனத்தான் பெற்றுள்ள பெருஞ்செல்வம் வீட்டில் பிறந்துள்ள அழகிய பெண்கள் உரிய பருவமெய்தியபோது அயலான் ஒருவன் மணந்து மகிழ்வதைப்போல் இதன் சிறப்பறிந்து அயலான் ஒருவனால் நுகர்ந்தும், ஈந்தும் பயன் கொள்ளப்படும்.
""நீர்மையே அன்றி நிரம்ப எழுந்த தம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர் கூர்மையின்
முலை அலைக்கும் எயிற்றாய் நிரப்பென்னும்
அல்லல் அடையப் பட்டாள்.''
(மேலது. பா.287)
முல்லை அரும்புகளைத் தன் கூர்மையால் துன்புறுத்தும் கூரிய பற்களை உடைய பெண்ணே! வறுமைத்துயரால் வாட்டப்பட்டவர்கள் நம் நல்ல இயல்புகளை மட்டுமின்றி நன்கு ஓங்கியுள்ள தம் நுண்ணறிவையும் சேர்த்து இழப்பர் என அறிக.
""நாணம் கமழும் கதுப்பினாய்'' (மேலது. பா. 294)
கத்தூரி மணக்கும் கூந்தலையுடைய பெண்ணே
""வழுக்கனைத்தும் இல்லாத வாழ்வாய்க் கிடந்தும்
இழுக்கினைத் தாம் பெறுவ ராயின்- இழுக்கனைத்தும்
செய்குறாப் பாணி சிறிதேயச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது'' (மேலது. பா. 362)
சிலவற்றை மட்டுமே பேசக்கூடியவராகிய பெண்கள் சிறிதும் இழுக்காற்ற முடிறாத சிறைபோன்ற காவலிலில் வைக்கப்பட்டாலும் அவர்கள் கற்பு நெறியிலிருந்து தவறுதலை உடையவராயின் சிறிதும் வழுவாது வாழும் காலம் குறைவானதாகவே இருக்கும். ஆனால் ஒழுக்கமற்று வாழும் காலம் பெரிதாகவே இருக்கும்.
""எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
ஆட்டில் புகாதாள் அரும்பிணி- அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை''
(மேலது. பா. 363)
"என்னை வெட்டு' எனக் கணவனை எதிர்த்து நிற்பவள் கூற்றுவன்: வய்கறைப் பொழுதிலேயே சமையலறைக்குட் சென்று சமைக்காதவள் தீராத நோய். சமைத்ததை உண்க எனப் பரிமாறாதவள் அகத்திலேயே வாழும் பேய். இம்முத்திறப் பெண்டிரும் கணவரைக் கொல்லும் படைக்கருவிகளாவர்.
என வரும் கருத்துக்கள் யாவும் அன்றும் இன்றும் சிந்திக்க வைக்கின்றன.
நீதி இலக்கியத்தில் பெண்களின் ஆளுமைக்கான கருத்துக்கள் இல்லை. பெண்களின் திறன்களை மறைப்பதற்கான கருத்துக்களே அவ்விலக்கியத்தை ஆளுமைப்படுத்துகின்றன.