திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு-அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் எனும் இரு ஆன்மிகப் புரட்சிகளை அமைதியாக நிகழ்த்தியிருக் கிறது முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக் கும் சேகர்பாபு தீவிர கடவுள் பக்தர். அவரிடம் இந்தத் துறை ஒப்படைக்கப்பட்டிருப்பதால் மிகுந்த அக்கறையுடனும் உறுதியுடனும் முதல்வரின் உத்தரவுகளை நிறைவேற்றி வருகிறார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது அரை நூற்றாண்டு கால சட்டப் போராட்டம். தந்தை பெரியார் அதனை முன்னெடுத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அதற்குரிய சட்டம் இயற்றினார். ஆனாலும், மேலோர்களாகத் தங்களைக் கருதியிருக்கும் நூலோர் கள் சிலர் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி,-ஆகம விதி களைக் காட்டி, அனைத்து சாதியினரும் அர்ச்சக ராவதற்குத் தடை பெற்றனர். தந்தை பெரியாரின் நெஞ்சில் இது முள்ளாகத் தைத்தது. அந்த முள்ளுடனேயே இவர் மறைந்தார்.

2006ஆம் ஆண்டு 5வது முறையாக முதல்வரான கலைஞர், ஆகம விதிகளுக்குட்பட்டு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து, ஆகமப் பயிற்சிப் பள்ளிகளை நிறுவி, அதில் 200க்கும் மேற்பட்ட அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்க வகை செய்தார். இதனை எதிர்த்தும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிப் பார்த்தனர். இறுதி வெற்றி, கலைஞரின் சட்டத்திற்கே!

ஆனாலும், தீர்ப்பு வந்தபோது அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றதால், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க ஆர்வம் காட்டவில்லை. பெயரளவுக்கே நியமனங்கள் நடந்தன. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டவர்கள்-மிகபிற்படுத்தப்பட்டவர்கள்-பட்டியல் இனத்தவர் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு, பணி ஆணையையும் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இந்த விழாவில் ஆன்மிகப் பெரியவர்கள் குன்றக்குடி ஆதீனகர்த்தர், பேரூர் ஆதீனகர்த்தர், குமரகுருபரசாமி ஆதீனகர்த்தர், தெய்வதத்தமிழ்ச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குன்றக்குடி ஆதீனத்தின் தவத்திரு பொன்னம்பல அடிகளார் பேசும்போது, "கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில், கலைஞரைப் போல் செயல்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்பது அப்பர் பெருமான்- ராமானுஜர் ஆகியோரின் எண்ணம்' என்று குறிப்பிட்டார். அவரது கூற்றுப்படி பார்த்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கனவாக-இலட்சியமாக இருந்ததை இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நிறைவேற்றியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

arra

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதுடன் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது மற்றொரு சிறப்பான முன்னெடுப்பாகும். இதுவும் நெடுங்கால இலட்சியம்தான். இறைவன் சன்னதியில் தமிழ், தீண்டத்தகாத மொழி போல நடத்தப்பட்டு வந்த நிலையில், அதனையும் மாற்றிக் காட்டியிருக்கிறார் முதல்வர்.

Advertisment

அதிகாலையில் தேர்வுக்காகப் பாடப் புத்தகத்தைப் புரட்டும் பள்ளிக்கூட வயதில், திருவாரூர் பெரிய கோயில் கோபுரத்து ஒலி பெருக்கியிலிருந்து, "தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..' என்ற குரல் கேட்கும். அதனைத் தொடர்ந்து, "ஆரூர் அமர்ந்த அரசே போற்றி..' என திருவாரூர் இறைவனான தியாகராசரைப் போற்றும் வரிகள் வரும்.

தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை இவையெல்லாம் அதிகாலை நேரத்தில் செவிகளுக்கு விருந்து. புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கு முன்பாக இந்தப் பாடல்கள் மனப்பாடமாகிவிடும். சில நேரங்களில், இதில் ஒரு சில பாடல்கள்கூட, பாடப்புத்தகத்தில் மனப்பாடப் பகுதியாக இருப்பது உண்டு.

தேவாரம் பாடிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் மூவரும் திருவாரூர் திருத்தலத்தைப் பாடியுள்ளனர்.

"ஆரூர் அமர்ந்த அரசே போற்றி' எனப் பாடியவர் மாணிக்கவாசகர். எல்லாமே இன்பத்தமிழ்தான்.

"தோடுடைய செவியன்' என திருஞானசம்பந்தரால் போற்றப்படும் இறைவனின் செவிகளுக்கும், திருக்கோயிலை நாடி வரும் பக்தர்களின் காதுகளுக்கும் தேன் போன்ற இனிமையானத் தமிழ்தான் எப்போதும் வழிபாட்டு மொழி. சமஸ்கிருத மந்திரம்தான் "வைப்ரேஷன்' என்கிற வகையறாக்களுக்கும் இது தெரியும்.

திருவாரூர் ஆழித்தேரோட்டத்தைப் புதிய தொழில் நுட்பத் தில் மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்தவர் கலைஞர். அந்தத் தேரோட்டத்தில் அதிர்வேட்டு முழங்க, "ஆரூரா.. தியாகேசா..' என பக்தர்கள் உணர்ச்சி பொங்கத் தமிழில் முழங்கியபடி, வடத்தை இழுக்கும்போது, ஆழித்தேர் அசைந்தாடி நகரும். தமிழ் மொழியின் வைப்ரேஷன் எப்படிப்பட்டது என்பது அப்போது கண்கூடாகத் தெரியும். "நாங்க மட்டும்தான் வைப்ரேஷனுக்கு அத்தாரிட்டி' என்கிற சமஸ்கிருத மாய்மாலம் நொறுங்கும்.

கோயில் கோபுர ஒலிப்பெருக்கியிலும், தேர் ஓடும் தெருக்களிலும் கேட்ட தமிழ், கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கருவறையிலும் ஒலிக்கிறது. இறைவன்-இறைவியின் மனம் மணக்கிறது. அதிலும், 1500 ஆண்டுகால பழமை கொண்ட மாடம்பாக்கம் தேணுகாபுரீசுவரர் கோயிலின் மண்டபத்தில் ஒலிக்கும் பெண் ஓதுவார் குரல், மாதொருபாகனான இறைவனை, செந்தமிழ் மழையில் நனைக்கிறது. சைவத் திருத்தலங்கள் போலவே வைணவத் திருத்தலங்களிலும் திருப்பல்லாண்டு கேட்கிறது.

"நமஹ' என்று மந்திரம் ஓதினால்தான் வைப்ரேஷன் வரும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தம் புரியாவிட்டாலும், நமஹ என்றும் ஸ்வாஹ என்றும் முடிக்கும்போது "வைப்ரேஷன்' மயக்கத்தில் சிக்கிக் கொள்வது நம்மில் பலருக்கு வழக்கமாகிவிட்டது. மயக்கம் தெளிவிக்கும் மருந்துதான், தமிழ்.

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர்,

நமச்சிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில்

நீங்காதான் தாள் வாழ்க’

-என்கிறார். அதனைத் தொடர்ந்து, "ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க' எனச் சொல்லிவிட்டு,

‘வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க‘

-என்று தொடர்கிறார்.

"நமஹ, ஸ்வாஹ' இவற்றைவிட "வாழ்க.. வெல்க..' என்ற சொற்கள் எளிமையானவை. எல்லாருக்குமானவை.

அரசியல் கட்சிக் கூட்டங்களில் "ஜே' போட்ட வழக்கத்தை மாற்றி, "வாழ்க' என முழங்கவைத்த மண் இது. ஆண்டவன் திருக்கோயிலில் அன்னைத் தமிழ் ஒலிக்கட்டும். மாம் பாக்கம் கோயில் போல மாநிலத்தில் உள்ள கோயில்கள் அனைத்திலும் சமத்துவ மும் சமூக நீதியும் மலரட்டும்.

கருவறைத் தீண்டாமை மட்டுமல்ல, மனிதனின் மன அறையில் குடியேறியிருக் கும் தீண்டாமைகளும் ஒழியட்டும்.