விதவை கலைத்திறமை கொண்டவ ளாக இருந்த காரணத்தால், அவளை ரகசியமாக வெறுப்பதென்பது உறவினர் களுக்கு சிரமமான விஷயமாக இருக்க வில்லை.

அவளுடைய புதிய தனிமைச் சூழல், கலாரசனையில் பாதிப்பை உண்டாக்குமென அவர்கள் உண்மை யிலேயே நம்பினார்கள். வறுமையின் பிடியில் சிக்கி அவள் உருக்குலைந்து போவாளென அவர்கள் நினைத்தார்கள்.

"இப்போ அந்த கர்வமெல்லாம் எங்க போச்சு?''

அவர்கள் ஒருவரோடொருவர் கேட்டுக்கொண்டார் கள். அந்த கேள்விக்கு கூட்டமாக சகிக்கமுடியாத கிண்டல் சிரிப்புகளைச் சிரித்தார்கள்.

Advertisment

தங்களிடமிருந்து வேறுபட்டு நிற்கக்கூடிய புகழ்பெற்ற பெண்களை சாதாரண நிலையில் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. அது இயற்கை யின் சட்டம். இளம்பெண்ணாக இருந்ததிலிருந்து முதுமையின் ஆரம்பம்வரை அவள் அவர்களிட மிருந்து அன்பையும் பொறுமையையும் பெறுவதற்கு முயற்சித்தாள். யாருடனும் நெருங்கிப் பழகவும் முடியவில்லை. கணவரின் மரணம் அவளை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சோர்வடையச் செய்ததற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் அவள் தன் வாழ்க்கையைத் தொடர்வது குறித்து அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். தன் கிராமத்தில் இருக்கக்கூடிய குடும்பத்திற்குச் சொந்தமான பரம்பரை வீட்டிற்குத் தன் இருப்பிடத்தை அவள் ஏன் மாற்றிக்கொள்ளக் கூடாது? அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கியிருக்கும் பூனைகளையும் எலிகளையும் வவ்வால்களையும் கண் தெரியாத பாம்புகளையும் விரட்டிவிட்டு, அறைகளை சுத்தம் செய்வதற்கு அவளால் முடியாமல் போய்விட்டதா? அப்படியே இல்லையென்றாலும், எதற்கு எல்லா அறைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்?

அவளுக்கு வசிப்பதற்கு ஒரு அறையும் சமையலறையும் போதுமே! கணவர் இருந்தபோது கூடத்திலும் வாசலிலும் வந்து கூடிய வருகையாளர்களின் கூட்டம் கிராமத்திற்கு அவளைத் தேடிப்போகப் போவதில்லையே! அப்படியே வருகையாளர்கள் வந்துசேர்ந்தாலும், அவர்களை அவள் வரவேற்று அமரச் செய்யக்கூடாது. ஒரு விதவைப் பெண் எதற்கு ஆண்களிடம் பேசவேண்டும்? காலையில் குருணை அரிசியில் தயாரிக்கப்பட்ட கஞ்சியைக் குடிக்கலாம். மற்ற இரு நேரங்களிலும் சாப்பாடு... கிராமத்தில் அவளுக்கு சமையல்காரர்கள்கூட தேவையில்லை. ஒரு ஆளுக்கு உணவு தயாரிப்பதற்கு சமையல்காரர் வேண்டுமா?

Advertisment

உறவினர்கள் அவளைப் பற்றி நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் தங்களுக்கொரு சுமையாகப் போகிறாள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள்.

தனிமைச் சூழலில் இருக்கவேண்டிய பெண்ணாக மாறிவிட்ட அந்த கலாரசனைகொண்ட பெண் தங்களுடைய குடும்பப் பெருமைக்குக் களங்கம் உண்டாக்கிவிடுவாளோ என்று அவர்கள் நினைத்தார்கள். இனிமேல் நிர்வாணப் பெண்களின் ஓவியங்களை அவள் வரையக்கூடாதென அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

"அன்று உன் எந்தவிதமான செயலுக்குப் பின்னாலும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளக்கூடிய ஒரு கணவர் இருந்தார். இன்று உனக்குப் பின்னால் தியாக புருஷர்கள் இல்லை. பாசம் கண்களை மறைத்த பெற்றோர் இல்லை.'' அவர்கள் அவளிடம் கூறினார்கள்.

கடுமையான வேதனையுடன் அவள் நோய்ப் படுக்கையில் கிடந்தபோது, உறவினர்களும் நண்பர்களும் அவளை எப்போதும் வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மருந்து வாங்கிக்கொண்டு வருவதிலும், தொலைபேசியின் வழியாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதிலும் அவர்கள் அக்கறையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் தன்மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என அவள் நினைத்தாள்.

நோயிலிருந்து குணமானவுடன் மீண்டும் அவர்கள் கேள்விகளால் அவளை மூடினார்கள்.

அவளுடைய எதிர்கால திட்டம் என்ன? இனிமேலும் அவள் ஓவியங்களை வரைந்து விற்பனை செய்வாளா? மிகப்பெரிய வாடகையைக் கொடுத்து நகரத்திலேயே பிடித்துக்கொண்டு நிற்பாளா? வெளிநாட்டிலிருக்கும் மகன் அவளைத் தன் குடும்பத்திற்குள் அழைத்து சேர்த்துக்கொள்வானா?

அந்த மகன் அவள் பெற்றெடுத்த மகனாக இல்லாததால், அவனுடைய வீட்டில் அவளுக்கு நிரந்தரமான ஒரு இடம் கிடைக்குமா?

அவள் ஒரு கையிலிருந்து இன்னொரு கையில் விழக்கூடிய நாணயத்தைப்போல, ஒரு பொது சடங்கிலிருந்து வேறொரு பொது சடங்கைநோக்கி நீங்க ஆரம்பித்தபோது, அவர்கள் கூறினார்கள்:

"துக்கம் முடிவுக்கு வந்திடுச்சுன்னு தோணுது. சொற்பொழிவாற்றுவதுக்கு அலங்கரிச்சிக்கிட்டு புறப்பட்டுட்டா! விளம்பரம் கிடைக்கணும்ங்கறதுல இந்த அளவுக்கு வெறிகொண்ட இன்னொரு பெண்ணையும் நாங்க பார்த்ததில்லை.''

dd

ரகசியமாகவாவது நாதாரி, தேவடியா ஆகிய பெயர்களால் அவர்கள் அவளுக்குப் பெருமை சேர்த்தார்கள். அவளைப் பார்க்கும்போது, அந்த மெலிந்த சரீரத்தை அவர்கள் கட்டிப் பிடித்தார்கள். பார்த்ததில் சந்தோஷம் உண்டாகியிருப்பதாக மிகை நடிப்பின்மூலம் வெளிப்படுத்த முயன்றார்கள்.

தூங்க ஆரம்பிப்பதற்கு முன்னால் அவள் தன் கணவரின் புகைப்படத்திடம் கேட்டாள்:

"இனி நான் என்ன செய்யணும்?''

"வீடு' என்ற வார்த்தைக்கே அர்த்தமில்லாமல் போயிருந்தது. கணவர் இல்லாத வீடு வீடல்ல... வெறும் ஒரு கட்டடம்தான் என்று அவளுக்குத் தோன்றியது. எழுத்தாளனான வெளிநாட்டுக்காரன் அவளுக்கு எழுதினான்:

"ஆட்சேபணை இல்லையென்றால், என் மனைவி யாகுங்கள். நான் உங்களை பொக்கிஷத்தைப்போல பாதுகாத்து காப்பாற்றுவேன்.'

பிரம்மச்சாரிணியான ஒரு மனைவி அந்த இரக்க குணம்கொண்ட மனிதனுக்குத் தேவைப்படமாட்டாள் என்று அவளுக்குத் தோன்றியது. அருகில் அமர்ந்து

கொண்டு உரையாடுவதற்கு தனக்கு ஒரு ஆள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று அவள் தனக் குத்தானே கூறிக்கொண்டாள்.

கவலைப்படும்போது தலையைத் தடவிவிட்டு, ஆறுதல் கூறுவதற்கு இனி தனக்கு யாருமேயில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

கணவரின் மரணத்துடன் தன் மதிப்பு சரிந்துவிட்டதென்பதும், தான் சமூகத்திற்குத் தலைவலியாக மாறிவிட்டிருக்கிறோம் என்பதும் அவளுக்குப் புரிந்தது. நிர்வாண சரீரங்களின் அழகை இனி எந்த சமயத்திலும் ஓவியமாக வரைவதற்கு தனக்கு தைரியம் இருக்காதென்று அவள் பயந்தாள்.

வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தை அவள் கிழித்தெறிந்தாள். பிறகு தன் கதவை உள்ளேயிருந்து பூட்டிக்கொண்டு, கட்டிலில் ஏறிப் படுத்தாள். இனம்புரியாத அந்தத் தனிமைச் சூழல் அவளை "ஆக்டோபஸ்' கரங்களைக்கொண்டு இறுக அணைத்தது.