அறிவுநிலைக்கு அப்பாற்பட்ட கேள்விக்கு உட்படுத்த முடியாத நிலையை தொன்மம் என்று குறிப்பிடலாம். உலகெங்கிலும் தொன்மக் கதைகள் உள்ளன.
தொன்மங்களை மனிதர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்தின் அல்லது இனத்தின் மரபு சார்ந்த நிலைக்குப் பழமைப்படுத்துகின்றனர். தொன்மங்கள் இலக்கண மரபிற்குக் கட்டுப்பட்டவை அல்ல. தொன்மத்தையும் புராணத்தையும் வேறுபடுத்தி பார்க்கின்ற அறிஞர்களும் உளர். ஒன்றுதான் எனக் கூறுவாறும் உண்டு.
இன்றுவரை இது விவாதத்திற்கு உள்ளவை யாகவே விளங்குகின்றது. நாடோடிகளாக மனித சமூகம் அலைந்த காலத்திலிருந்து தொன்மக் கதைகள் வெளிப்பட்டிருக்கலாம். இன்று நவீன இலக்கியங் களில் தொன்மச் செய்திகளைப் படைப்பாசிரியர்கள் வெளிப்படுத்தும் போக்கு நிலவிவருகிறது. இதன் மூலம் இளைய தலைமுறையினர் தொன்மம் பற்றிய புரிதல்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் தொன்மக் கதைகள் அழியாமல் பாதுகாப்பதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகின்றது. இக்கட்டுரையானது ஜெயமோகனின் கொற்றவை புனைகதையில் காணப்படும் தொன்மச் செய்திகளை வெளிப் படுத்தும் முறையாக அமைகின்றது.
தொன்மம்
‘ஆங்கிலத்தில் உள்ள மித் (ஙஹ்ற்ட்) என்ற சொல் மிதோஸ் (ஙன்ற்ட்ர்ள்) என்ற கிரேக்கச் சொல்லின் வழிப்பட்டது. இதுகதை, வாயினால் உரைக்கப்படுவது எனப் பொருள்படும். மேலும் பொருட்பரப்பு நோக்கில் ஓர் அறிக்கை, ஒரு கதை, ஒரு நாடகக் கரு என்றெல்லாம் பொருள்தரும் இச்சொல்லை முதன் முதலில் எடுத்தாண்ட அறிஞர் பிளேட்டோ. ‘முத்தோலோஜியா’ என்பதற்குக் கதை கூறுதல் என்று பொருள் கொண்டார். இன்று ஆங்கிலத்தில் ‘மிதாலஜி’ (ஙஹ்ற்ட்ர்ப்ர்ஞ்ஹ்) என்பது புராணக் கதை ஆய்வு, புராணக்கதைப் பொருளமைதி, புராணக்கதை வகை எனப் பல்வேறு பொருள்களைக் கொண்டது.
இலக்கியங்களில் இத்தொன்மக்கதைகள் ஹோமரின் இலியது(ஊப்ண்ர்ற்), ஒதிசி(ஞக்ண்ள்ண்) காப்பியங்களில் இருந்து துவங்குகிறது. ‘உலகில் ஒரு காலத்தில் பேசப்பட்ட இயற்கையான, நுண்ணிய சிந்தனைகளை வெளிப்படுத்துவது, கவிதைகட்கு அடிப்படையானது, உண்மை நிகழ்வு அல்லது வரலாற்று நிகழ்வுகளின் கற்பனை வடிவமாய் அமைவது, மனித இனம் முழுமைக்கும் பொதுவான அடி மனத்திலிருந்து எழுவது, இது மனித இனத் தின் கனவு. அமுக்கபட்ட ஈடிபஸ் குற்றவுணர்வின் மாறுபட்ட வெளிப்பாடு, சடங்கோடு தொடர்பு டையது எனத் தொன்மம் பற்றி க. பஞ்சாங்கம் குறிப்பிடுகின்றார்.
எண் வகை வனப்புகளுள் தொன்மையானது, புராணம் என்ற வடசொல் பொருளமைதியுடைதாக உள்ளது. தொன்மை தானே உரையோடு புணர்ந்த பழமை மேற்றே’ (தொல்.1493) இங்கு உரை என்பதற்குக் கதை என்று பொருள் கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் எனத் தமிழண்ணல் குறிப்பிடுகின்றார். மேலும் இந் நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் யாரும் சரியான விளக்கம் தரவில்லை என்றே குறிப்பிடலாம். தொன்மக் கதைகள் முதன்முதலில் தமிழில் நாட்டுப்புறக் கதைகளில் இருந்துதான் உருவெடுத்திருக்க வேண்டும். பின்னர் இதுவே படிநிலை வளர்ச்சி பெற்று ஒரே கரு பல்வேறு வடிவங்களில் எழுத்திலக்கியங்களில் தொன்மமாக வடிவெடுத்துள்ளது.
தொன்மத்தின் புதை
நிலைப் பொருள் சமூக
வியல் சார்ந்தது என மாலினோவ்ஸ்கி குறிப்
பிடுகின்றார். எனவேதான்
சமூகம் சார்ந்த தொல் அடை
யாளத்தை தொன்மக் கதைகள் வெளிப்படுத்து
கின்றன. ‘துறவுக் காலம், நரகம், ஊழிக்காலம், கன்னிப்
பிறப்பு, பிறன் மனைவியைக் கவர்தல், அரக்கனும்
தேவனும் சமர்புரிதல், அரக்கன் முதலில் ஆற்றலில்
மிகவுயர்ந்து இறுதியில் அழிதல், கடவுளரும் அவரது
புதல்வர்களும் அளவிறந்த வலிமையுடைய மானிட
ரும் இடம்பெறுதல் என இவ்வாறு தொன்மைக் கதைகள் பல தம்முள் ஏதேனும் வகையில் ஒரு தன்மையுடையனவாய் உள்ளன. நாடு, மொழி, இனப் பண்பாட்டு வேறுபாடுகளுக்கேற்பவே இக்கதைகளும் சிறிது சிறிது மாறுபடுகின்றன’.
தமிழ் இலக்கியத்தில் தொன்மம் பற்றிய ஆராய்ச்சியை குறைந்த அறிஞர்களே செய்துள்ளனர்.
தொன்மங்கள் சங்க இலக்கியப் பாடல்களிலும், இடைக்காலப் பக்தி இயக்கப் பாடல்களிலும் நிறைந்து காணப்படுகிறன்றன.
ஒரு தமிழ் எழுத்தாளர் கொற்றவையை புதுக் காப்பியமாகப் படைத்துள்ளார். புனைகதையுலகில் இது மாறுபட்ட தளத்தினை எட்டிப்பிடித்துள்ளது என்றே கூறலாம். இப்புனைகதையின் புறக் கட்டுமான, மன்னர்கள், மொழி நடை என்று விவரித்துள்ளது சிறப்புக்குரியதாகும். கொற்றவை புனைகதையில் உள்ள தொன்மக்கதையினைக் குறிப்பிடும் பொருட்டு தலைப்புசார்ந்த தொன்மக் கதையினை அறிதல் அவசியமாகின்றது.
தொல்காப்பியப் புறத்திணைப் பாடலில் கொற்றவை பற்றிக் குறிப்பிடுவதால் அது தமிழகத் தின் பண்டையத் தாய்த்தெய்வமாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. காடுகிழாள்’ என்ற மறுபெயரும் அவளுக்கு உண்டு. குறிஞ்சி நில மக்கள் வேட்டைத் தொழிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப் பயிர் செய்யத் தொடங்கினர். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர் செய்யத் தொடங்கியக் காலத்தில் காடுகிழாளும் தோன்றினாள்.’
கொற்றவை பற்றி சங்க இலக்கியமான சேரர்களின் சிறப்பினைக் கூறும் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சேரநாட்டின் போர்த்தெய்வமாக கொற்றவை விளங்கியதை அறியலாம். கொற்றவையை முருகனின் தாயாகக் காட்டுவது பெரும்பாணாற்றுப்படையாகும். இதுதான் முருகனை கொற்றவையுடன் இணைத்துப் பேசும் முதல் தமிழிலக்கியச் சான்று என பெ. மாதையன் குறிப்பிடுகின்றார். தமிழ் இலக்கியங்களில் கொற்றவை, பழையாள், காடுகாள், ஐயை என பல பெயர்களில் அழைக்கப்படு கின்றாள்.
தமிழ் நிலப்பரப்பின் தொன்மை மற்றும் பழங்காலம் பற்றி இப்புனைகதை வரலாற்றின் பக்கங்கள் என நம்பத்தக்க வகையில் எழுதிக்காட்டும் சித்திரங்கள் புதியவை என அ. ராமசாமி குறிப்பிடுகிறார். புனைகதையில் கிழவன் தன் குடிச் சிறார்களுக்கு சம்பாபுரி அழிந்த கதையைக் குறிப்பிடுகிறார்.
கடல் உண்ட அந்நகரின் பெயர் சம்பாபுரம். ஏழு பெரும் குவை மாடங்கள் நடுவே லாடவடிவம் கொண்ட பெரும் சதுக்கமும் அரைவட்ட வடிவத் தெருக்களும் கல் மாடங்களும் கொண்ட அந்நகரம் சாம்பவர்கள் வாழ்ந்த இடம். அந் நகரத்துக்கு வந்த மரக்கல மாந்தரால் அந்நகரின் ஆளுகைக்குக் கீழிருந்த பெருநிலமும் சம்புத்தீவு எனப்பட்டது. சென்ற காலத்தின் குடியேறியவர்கள் சாம்பவர்களே. நகரின் பேரழகினைக் கண்ட கடலாழத்துத் தெய்வமான நீலக்கன்னி தன் கூந்தலை அவிழ்த்து அலைகளாக்கி ஏவி அதை அழித்தாள் என சம்பாபுரம் அழிந்ததை தொன்மக் கதையாகப் படைக்கப்பட்டுள்ளது.
இப்புனைகதையில் பெண்களைப் பற்றியத் தொன்மக் கதைகள் மிகுதியாக உள்ளன. நீலக்கன்னி, மருதி, நீரரமகளிர், ஆதிமந்தி, வள்ளி என பெண்கள் பற்றிய தொன்மக் கதைகள் அமைந்துள்ளன. நீரரமகளிர் பற்றியத் தொன்மக் கதையில் அப்பெண்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, நீரரமகளிர் கரையில் ஆற்றிருக்கும் இளம் பெண்களை கவர்ந்து சென்று விஞ்சையருடன் கூடச்செய்வர். இவர்கள் மீன்பெண்ணுறு உடலமைப்புக் கொண்டவர்களாகப் படைப்பில் சித்திரிக்கப்பட்டுள்ளனர். குலக்கதைகள், நீ- சொன்னது எனும் தலைப்புகளில் வரும் பகுதிகள் அனைத்தும் தொன்மக் கதைகளாகவே உள்ளன. சான்றாக சோழ நாட்டில் கன்னியர்க்கு கடல் நீராடுதல் தடைசெய்யப்பட்டது. பெண்கள் செம்முத்துக்களை வைத்திருந்தால் கொடுந்தண்டனைக்கு உள்ளாகுவர். இவ்வாறு வெண்ணி என்பவள் செம்முத்துக்களை வைத்திருந்ததினால் ஒரு முலை அறுக்கப்பட்டாள். இவ் வெண்ணியைப்போல் பல பெண்கள் முலைகளை இழந்ததன் காரணமாக அப்பெண் களுக்கெல்லாம் தெய்வமாக வெண்ணி வணங்கப்பட்டாள். இதனால் வெண்ணியை முத்து ஆரம் அம்மனாக (முத்தாரம்மன்) அம்மக்கள் வழிபட்ட தொன்மச் செய்தி இப்புனைகதையில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
மருதி நீராடும்போது விஞ்சையன் தவளை உருவில் அவள் உடல் அங்கங்களைப் பார்த்துவிட்டு வீட்டில் மனித உருக் கொண்டு பெண் கேட்கச் செல்லும்போது அவளுடைய அங்கங்களின் அடையாளத்தைக் கூறி, மருதிக்கும் தனக்கும் காந்தருவ மணம் முடிந்துவிட்டது என்று பொய் கூறினான். குலப் பெண்டீரின் அங்கங்களைப் பார்க்கும் தகுதியுடையோர் கணவனும், நீரும் மட்டுமே என்பதால் தன் குலத்திற்குத் தீங்கு இழைத்துவிட்டதாகக் கருதி மருதி தெய்வ மாகின்றாள்.
புனைகதையில் உள்ள பெண்கள் மனித நிலையில் இருந்து வேறுபட்டு தன் செய்கைகள், நிகழ்வுகளினால் தெய்வமாக ஆக்கப்பட்டிருப்பதை தொன்மங்கள் உணர்த்துகின்றன. ஆதிமந்தி தன் காதலன் அத்தியிடம் விளையாட்டாகக் கூறிய வார்த்தைகளினால் அத்தி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் துறக்கிறான். ஆதிமந்தி அழுது புலம்பி பின்னர்த் தெய்வ நிலைக்கு உட்படுத்தப்படுகிறாள். இதனைச் சடங்காகக் கொண்டாடும் பொருட்டு கணவனைப் பிரியாதிருக்கப் பெண்கள் திங்கள் நோன்பு நோற்று உப்பில்லா அப்பம் படைத்து வணங்கும் வழக்கம் உள்ளதை படைப்பில் தொன்மச் சடங்காகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தொன்மம் மனிதனின் வாழ்க்கையோடு, ஒத்துப்போகும் நிலையில் ஓரிணைப்பாக விளங்குகிறது. சமுதாயம், பண்பாடு, இயற்கை ஆகியவற்றின் அடிப்படைச் சிக்கல்களை மனிதன் தொன்மத்தில் காண்கிறான். தனி மனிதனின் இயல்புகள், சமூகத் தேவைகள், இரண்டையும் நிறைவுசெய்யும் வேறுபட்ட கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள தொன்மம் வாய்ப்பு நல்குகின்றது. மக்களின் சமூக வாழ்வில் தொன்மக் கதைகள் பெறும் இடத்தினை சரசுவதி வேணுகோபால் குறிப்பிடுகின்றார்.
குமரித் தெய்வத்தினை வணங்கிய மக்கள் குறியவர்களாக இருந்ததினால் குறவர்கள் என அழைக்கப்பட்ட தொன்மக் கதையும், குமரன் வேட்டையாட வரும்போது வள்ளிக் குறத்தியின் அழகில் மயங்கி அவளை மணமுடிக்கும் சூழலையும், கோவலன் முற்பிறப்பில் சங்கமனாக இருந்து வசுமன்னரால் கொலைசெய்யப்பட்டு நீலியைத் தனியாகத் தவிக்கவிட்ட கதையும் இதுபோன்ற தொன்மக் கதை களும் இப்புனைகதையில் நிறைந்து காணப்படுகின்றன.
கொற்றவையில் குறிப்பிடப்பெறும் நீர், காற்று நிலம் எனும் முதல் பகுதிகளில் தொன்மக் கதைகள் மிகுதியான இடத்தைப் பெறுகின்றன. புனை கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தொன்மக் கதைக்கு உட்படுத்தப்பட்டதாகவே உள்ளது. குறிப்பாக நீரரமகளிர், காகந்தி, ஆதிமந்தி கதைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன. தொன்மக் கதைகளின் மூலம் பெண்ணியத்தை நிலைநிறுத்தியதோடு மட்டுமில்லாமல் தொன்மங்களைப் பயன்படுத்துவதற்கும் பழைய இலக்கியங்களில் ஆழ்ந்த பயிற்சியும் சமுதாயப் பார்வையும் வேண்டும் என்ற திறனாய்வாளர்களின் கூற்று படைப்பாசிரியருக்குப் பொருந்துவதாய் உள்ளது. தொன்மக் கதைகளைக் கொண்டு சமூகம், பண்பாடு, வழக்காறுகள் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்ய வழி உள்ளதையும் அதற்குத் தமிழ்ச் சூழலில் தொன்மம் பற்றிய ஆய்வுகள் வளர்க்கப்படுதலைத் தேவையாகக் கருதலாம்.