டந்த இருபத்தைந்து வருடங்களாக நகரத்தில் வாழ்ந்து வெறுத்துப் போனபிறகு, அவர் தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்பிவந்தார். வறுமையில் உழன்று வளர்ந்திருக்கும் அவர் நகர வாழ்க்கையை முடித்து விட்டு திரும்பி வந்தபோது, வறுமையின் பிடியிலில்லை. ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்கும் வகையில் தொகையை வங்கியில் போட்டுவைத்திருந்தார்.

குடும்பத்தின் வாரிசு என்றவகையில் இருபத்தைந்து சென்ட் இடமும், மிகவும் சிரமப்பட்டு நுழைந்து வசிக்கும் அளவிலிருந்த ஒரு சிறிய வீடும் கிடைத்தன. வீட்டில் குறிப்பிட்டுக் கூறும்வகையில் எந்தவித வசதிகளும் இல்லை. கழிப்பறை, குளியலறை என்று எதுவும் அந்த வீட்டிலில்லை.

அவற்றையெல்லாம் இனி புதிதாக உண்டாக்கவேண்டும்.

தனிமையாக வாழவேண்டுமென்ற நோக்கம்தான் ஓய்வூதியம் கிடைத் தாலும் தொடர்ந்து இருப்பதற்கு சாத்தியமாக இருந்த வேலையை உதறி விட்டு சொந்த கிராமத்திற்குத் திரும்பிவருவதற்கு அவரைத் தூண்டி விட்டது. ஓய்வூதியம் கிடைப்பதற்கு இன்னும் நான்கைந்து வருடங்கள் எஞ்சியிருக்கின்றன. எனினும், அவருக்கு வேலையின் மீதிருந்த வெறுப்பைவிட, மன அளவில் அடிமைத்தனத் துடன் வாழ்ந்துகொண்டிருந்த இருப்பின்மீது ஏற்பட்ட எதிர்ப்புணர்வு காரணமாகவே பணியைவிட்டு விலகி வரவேண்டிய சூழல் உண்டானது.

Advertisment

ஆனால், இப்போது தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பி வந்தபிறகுதான் தான் செய்தது முட்டாள்தனமானது என்ற எண்ணம் அவருக்குண்டானது. இனிமேல் இந்த இடத்தைவிட்டுப் போவதற்கான வழியில்லை.

நகரத்திலிருந்த வேர்கள் பிடுங்கி எறியப்பட்டபிறகுதான் கிராமத்திற்கே வந்திருக்கிறார். எந்தவகையில் பார்த்தாலும், நகரத்தைவிட, மகத்துவத் தன்மை கொண்ட இடம் கிராமம்தான்.

குறிப்பாக... அவர் பிறந்து வளர்ந்த பழமையான கிராமம். பால்யகால, வாலிபகால சந்தோஷங்களில் மூழ்கி வாழ்ந்திருந்த அந்த நல்ல காலம்... தாயுடன் சேர்ந்து வாழ்ந்த சொர்க்கத்திற்கு நிகரான காலங்கள்... கடின உழைப்பாளிகளான தந்தையும் தாயும்... ஒரே மகன். எனினும், இருபதாவது வயதில் கிராமத்தை விட்டுக் கிளம்பவேண்டிய நிலை அவருக்கு உண்டானது.

Advertisment

பிழைக்கும் வழிதான் பிரச்சினை. பட்டினி கிடக் காமல் இருக்கவேண்டுமெனில், ஊரைவிட்டு வெளியே றியே ஆகவேண்டும்.

ss

தாய்- தந்தையின் முதிய காலத்திலாவது அவர் களுக்கு ஒரு தாங்கும் சக்தியாக இருக்கவேண்டும். நோக்கங்கள் மிகவும் பெரியனவாக இருந்தன. ஆனால், வழிகள் அனைத்தும் அடைந்து கிடந்தன. வேறு வழியற்ற ஒரு சூழலில் தாய்- தந்தையிடம் விடைகூட பெறாமல் அவர் ரகசியமாக ஓடிச் சென்றுவிட்டார்.

பிறகு... இருபத்தைந்து வருடகாலம் அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. அவர் இறந்துவிட் டார் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். உயிருடன் இருந்திருந்தால் கட்டாயம் கிராமத்திற்கு வந்துபோயிருப்பார். தந்தை இறந்த சமயத்திலாவது அவர் வந்துசேருவார் என சிலராவது ஆசைப்பட்டார் கள்.

ஆனால், அவரோ தந்தையும் தாயும் மரணத்தைத் தழுவியபிறகுதான் சொந்த கிராமம் என்பதைப் பற்றியே சிந்தித்தார். தன்னை வளர்த்து ஆளாக்கியவர்கள்மீது இருக்கக்கூடிய கடமையை அவரைப்போன்ற ஒரு மகன் இவ்வளவு சீக்கிரம் எப்படி மறந்துபோகலாம் என்ற விஷயம் கிராமத்து மனிதர்களை வியப்பில் ஆழ்த்தியது.

"பாசமற்ற... பெரியவர்களை மதிக்காத மகன்...'' மரண மடைந்த தாயும் தந்தையும் யாரிடமாவது கூறியிருப்பார் களோ என்ற விஷயம்கூட அவருக்குத் தெரியாமலிருந்தது. ஒரு வினோதனமான- பித்துப் பிடித்த நிலை யிலிருந்த அந்த மகனைப் பற்றி கிராமத்தில் இருப்பவர் களுக்கு இளமையான நாட்களில் நல்ல மதிப்பிருந்ததாக பொதுவாகக் கூறுவார்கள். சாகசங்கள் நிறைந்த எவ்வளவோ இரக்கத்திற்குரிய கதைகள் அவரைப் பற்றி கிராமத்தில் பரவிவிட்டிருந்தன. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று யாருக்கும் தெரியாது.

ஒருவேளை இவையெல்லாம் சில அதிசய எண்ணங் கள் கலந்த பேச்‌‌‌சுகளாக இருக்கலாம். ஆழமாக சிந்தித் தால், சில உண்மைகள் இருப்பதைக் கண்டும் பிடிக்க லாம்.

அமைதி தவழக்கூடியதாகவும் இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதாகவும் இருக்கும் தன்னுடைய கிராமத்திற்குத் திரும்ப வந்திருக்கிறார். ஆனால், அவர் ஊரைவிட்டுச் செல்லும்போது இருந்த சூழல்கள் அல்ல இப்போதிருப்பவை.

கிராமம் கிட்டத்தட்ட வறட்சியும் பஞ்சமும் பாதித்த ஒரு நோயாளியைப்போல இருந்தது. என்றென்றைக்கும் அவருடைய மனதில் ஒரு ஆனந்த அனுபவத்தைத் தந்துகொண்டிருந்த அன்றைய கிராமம் எங்கே? இன்றைய கிராமம் எங்கே? பூஞ்சோலைகளும், காட்டாறுகளும், சிறிய வாய்க்கால்களும், பரந்த நீர் நிலைகளும் இருந்த அந்த கிராமத்தில், மழைக் காலத்தில்கூட நீர்ப் பற்றாக்குறை இருக்கிறதென்ற தகவலைக் கேட்கும்போது எப்படி நம்பமுடியும்? நான்கு பக்கங்களிலும் பசுமையான... அதிக உயரத்திலிருந்த பச்சை மலைகள். வடக்குப் பகுதியில் மட்டும் கரும்பாறையான தென்மலை உயர்ந்து நின்றிருந்தது. அங்குதான் பார்த்தசாரதியின் சுய வடிவமான கிருஷ்ணரின் ஆலயம். அந்த ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தைச் சுற்றிலும் காடுகள் இருந்தன. அடர்த்தி யான காடுகள்...

பல நூற்றாண்டுகளாக இருக்கக்கூடிய பெரிய மரங் கள் நிறைந்திருக்கும் அந்தச் சூழலை தென்மலை என்ற செல்லப் பெயரில் மக்கள் அழைத்து வந்தார்கள். தென் மலை தெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று தனிமையில் அமர்ந்து தவம்செய்ய அவர் விரும்பினார்.

எத்தனையோ மணி நேரங்களை தென்மலையின் உச்சியில் இந்த காலகட்டத்தில் செலவழித்த காரியத்தைச் செய்திருக்கிறாரே! பழைய நினைவுகள் ஒவ்வொன்றாகக் கிளம்பி வந்துகொண்டிருக்கின்றன- தென்மலையில் உருவாகிப் பாய்ந்தோடி வரும் காட்டாறுகளைப்போல... அந்த காட்டாறுகளின் சோலைநீரைப் பருகி ஒருகாலத்தில் பசியையும் தாகத்தையும் தீர்த்திருக்கிறார். ஆடு, மாடுகளை மேய்த்துத் திரிந்த பசுமையான மலைகள்... எங்கும் பசுமை... எல்லா காலங்களிலும் அந்த பசுமை தொடர்ந்து இருந்தது. செழிப்பாக நன்கு வளர்ந்திருக்கும் காட்டுச் செடிகள்... அந்தச் செடிகளில் பலவும் மருத்துவ குணம் கொண்டவையாக இருந்தன. உயர்ந்த மருத்துவத் தன்மை கொண்டவை. எப்படிப்பட்ட குணமாகாத நோய்களையும் குணப்படுத்தக்கூடிய பச்சை மருந்து கள் தானே முளைத்து வளர்ந்திருக்கும் பசுமையான மலைகள்.

ஒவ்வொரு மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வயல்களிலும் அவர் ஓடித் திரிந்தார். உரிய மூலிகை களைப் பற்றியும் சக்திபடைத்த மருந்துகளைப் பற்றியும் இருக்கக்கூடிய எவ்வளவோ கதைகளை அவர் கேட்டார்.

பச்சை மருந்துகள் இயற்கையில் முளைத்து உண்டாக் கக்கூடிய ரகசியங்களைப் பற்றிய ஆழமான கதைகளைத் தன் தாயிடமிருந்தும் பாட்டியிடமிருந்தும் இளம் வயதில் கேட்டு மனதில் பதியவைத்திருக்கிறார்.

அந்தக் காலங்களில் ஒவ்வொரு இலையிலும தளிரிலும் வேரிலும் பூவிலும் மொட்டிலும் ஆர்வம் உண்டாகி அலைந்து திரிந்த செயல் நடந்திருக்கிறது. பல மரங்களிலும் விரிந்து மலர்ந்து நிற்கும் பூங்கொத்து களைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

இலைகளும் பூக்களும் உதிர்ந்துவிழும் செயலைப் பார்த்து பெருமூச்சுகளை விட்டார். சருகுகளின் வழியாக கோடை காலங்களில் ஓடி நடந்தார். சருகு களுக்கு நெருப்பு வைத்து மலையின்மீது அமர்ந்து தீ காய்ந்தார்.

காட்டுப் பறவைகளின், கிராமத்துப் பறவைகளின் ஓசைகளைக்கேட்டு வளர்ந்த அவர் இளம்வயதில் கவிதைகளையும் பாடல்களையும் மிகவும் விரும்பினார்.

அவரும் சில கவிதைகளைப் படைக்க முயற்சித்தார். தன் கிராமத்தைப் பற்றிய முழு விஷயங்களையும் மனதில் பதிய வைத்துக்கொண்டு, கிராம வாசனைகொண்ட நாடோடிப் பாடல்களைக்கேட்டு ரசித்து, துடியை இசைத்தவாறு நடந்து திரிந்தார். பசியையும் தாகத்தையும் மறந்துவிட்ட நடை... நாடோடியாக சுற்றியலைந்துகொண்டிருந்த அவர் தன் சொந்த தாய்- தந்தையின் கவலைகளைப் பற்றி விசாரிக்க முயற்சிக்க வில்லை.

"என்னுடைய நரம்புகளில் உற்சாகத்தை அள்ளிக் கொட்டி நிறைத்திருந்த அன்றைய அந்த கிராமம் இன்று எங்கு போனது? என்ன ஆனது? கடந்த இருபத்தைந்து வருடங்கள் உண்டாக்கிய விளைவுகள்... ஆக்கிரமிப்பு கள்... கீறல்கள்...'

செழிப்பான விளை நிலங்கள், எல்லை காணமுடி யாத வயல்வெளிகள்... வயல்களில் உதடுகள் பழுத்து நின்றிருக்கும் நெற் செடிகள். கிராமத்து வயல்களை யொட்டி காணப்படும் குளங்கள்... மேடுகள்... பள்ளங்கள். நீர் நிறைந்திருக்கும் வாய்க்கால்களில் விளையாடி நெளிந்துகொண்டிருக்கும் பலவகைப்பட்ட மீன்கள்... வண்டுகள். அவை அனைத்தும் புதுமையான ஆனந்த அனுபவத்தை அளிக்கக்கூடிய காட்சிகளாக இருந்தன. இப்போது அந்த வயல்களில் பழைய செழிப்புகளைப் பார்க்கமுடியவில்லை.

குளங்களைப் பெரும்பாலும் இல்லாமற் செய்து நிலங்களாக மாற்றி, தென்னங்‌ கன்றுகளை நட்டு வைத்திருக்கின்றன‌ர். தென்மலையிலிருந்து பாய்ந் தோடி வரும் வளங்கள் நிறைந்த நீரில் செழிப் பைக் கண்டிருக்கின்றன‌ர். அதன்காரணமாக பள்ளத் தாக்குகளில் இருக்கக்கூடிய வயல்களில் எல்லா காலங்களிலும் நல்ல விளைச்சல் இருந்தது. ஆனால், இன்றைய நிலையோ? பாய்ந்துவரும் நீரின் ஓட்டம் நின்றுவிட்டது. நீர் வரும் பாதைகளை மண் வந்து மூடிவிட்டது. எஞ்சியிருக்கும் காலத்தை கிராமத்தில் கழிக்கவேண்டு மென எண்ணிய அவருக்கு துயரத்தைத் தரும் பல காட்சிகளுக்கு சாட்சியாக இருக்கவேண்டிய நிலை உண்டானது.

வாகனங்கள் அதிகமாக ஓடி தாறுமாறாக்கிய சாலைகளுக்கு அருகில் தென்மலைக் காட்டின் மரங்கள் முழுவதும் இறந்து விழுந்து குவியலாகக் கிடந்தன. பச்சை மலைகளின் நிரந்தரமான பசுமை எங்கோபோய் மறைந்துவிட்டது. காடும் மேடும் கைப்பற்றப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதால் உண்டான குருதி அடையாளங்கள். எல்லா இடங்களிலும்... பசும் மலைகள் மழைக் காலத்தில்கூட வறண்டு கிடக்கின்றன.

தென்மலை பார்த்தசாரதியின் இன்னொரு வடிவமான கிருஷ்ண பகவான் வறட்சியான பூமியாக மாறிக்கொண்டிருக்கும் தென்மலையைப் பார்த்து பெருமூச்சு விட்டார். தென்மலையின் மரங்கள் மட்டுமல்ல பலாத்காரம் செய்யப்பட்டிருப்பன. தென்மலையின் கரும்பாறைகளை வெட்டி உடைத்து எடுத்துக்கொண்டு போகின்றனர். தென்மலையின் பெரிய ஒரு பகுதி மலையாக இல்லாமல் ஆகிவிட்டி ருக்கிறது.

தென்மலையைச் சுற்றிலும் இப்போது கருங்கல் குவாரிகளின் தொடர்ச்சிகள்தான் இருக்கின்றன.

தினமும் பத்திலிருந்து ஐம்பது லாரிகள்வரை கருங்கல் பாறைத் துண்டுகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சீறிப் பாய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன.

"என் தென்மலை இப்போது மார்பு பிளந்து வாய் திறந்து இறந்துகிடக்கும் ஒரு யட்சியைப்போல, தோற்றத்தையும் அழகையும் இழந்து கிடக்கிறது. கருங்கல் குவாரிகளிலிருந்து வரும் கற்களை உடைக்கும் சத்தத்தைக் கேட்டவாறுதான் இப்போது என் கிராமமே கண் விழிக்கிறது.'

அளவற்ற மக்கள் கூட்டம் இங்கு...

கருங்கற்களை உடைக்கும் தொழிலாளிகளும் கங்காணிகளும் மேஸ்திரிகளும் கான்ட்ராக்டர்களும் கட்டைவண்டி ஓட்டுபவர்களும் காளைவண்டி வைத்திருப்போரும் லாரிக்காரர்களும் பட்டைச் சாராயம் காய்ச்சுபவர்களும் சேர்ந்து பங்குபோட்டு எடுத்துக்கொண்ட கருங்கல் குவாரிகள்...

வாய்பிளந்த கர்ப்பப் பைக்குள்ளிருந்து வெடி யோசைகளின் காதுகளை அடைக்கக்கூடிய சத்தம்...

வெடிமருந்திற்கு நெருப்பு வைத்தவுடன் எழுந்து வரும் வெடிக்கும் சத்தத்தைக் கேட்டு பறவைகள் அனைத்தும் கிராமத்தின் எல்லையைவிட்டுப் பறந்து போய்விட்டன.

பலவகைப்பட்ட பறவைகளின், மைனாக்களின் இருப்பிடமாக இருந்த தென்மலையும் பசுமையான மலைகளும் இப்போது குரூரமான ஆடை அவிழ்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் நிலை...

இந்த கிராமம் இனிமேலும் எத்தனை நாட்களுக்கு இப்படி வாழ்ந்துகொண்டிருக்கும்? அனைத்தும் தலை கீழாக சரிந்து கிடக்கின்றன.

மாற்றங்கள்... ஆனால், இந்த மாற்றங்கள் யாருக்காக?

மனிதனின் வெறிக்கும் ஆணவத்திற்கும் எல்லையில்லாமற் போனால், இவைதான் நடக்கும்.

அபூர்வமான காட்டு மிருகங்களின் இருப்பிடமாக இருந்த தென்மலை பள்ளத்தாக்கில் இப்போது மயிலோ மானோ முயலோ வசிக்கவில்லை. எதற்கு அதிகமாகக் கூறவேண்டும்? தென்மலை தெய்வத்தின் திருமுற்றத்தில்கூட ஏதாவதொரு குயில் பறந்து வந்து பாடுவதற்குத் தயாராக இல்லை. காகங்கள்கூட தென்மலை தெய்வத்தின் ஆலயத்தில் அமர்ந்து இப்போது கரைவதில்லை.

எல்லாமே அனாதையாகக் கிடக்கின்றன. காடும் பாசியும் பிடித்த திருமுற்றம்... பூஞ்சை பிடித்த தூண்கள்... தகர்ந்து விழும் நிலையிலிருக்கும் ஆலயம்... பாசி படர்ந்த பலிபீடங்கள்... ஆனால், அந்தப் பக்கம் தகர்ந்த தென்மலையின் மிச்சம் மீதிகளான கருங்கற்களின் சிறிய குவியல்கள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. கற்குவியல்களை விழுங்குவதற்காக வரும் லாரிகள்... சீறிப் பாய்ந்து இரைச்சலுடன் வந்துகொண்டிருக்கும் லாரிகளில் வளையலணிந்த, வளையலணியாத கைகளின் தொடர் சலனம்... ஏற்றிக் கடத்துகிறார்கள்.

தூரத்து இடங்களுக்கு... மிகவும் அருகிலிருக்கும் நகரங்களுக்கு...

காட்டு ராஜாக்களும் கள்ளக்கடத்தல் செய்பவர்களும் வெள்ளை பணக்காரர்களும் கள்ளப் பணக்காரர்களும் கிராமத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கக்கூடிய பரிதாபத் திற்குரிய காட்சியைப் பார்த்து அவர் கவலைப்பட்டார்.

"இப்படிப் போனால், என் கிராமத்தின் நிலை என்ன ஆவது?'

எதிர்காலத்தைப் பற்றி அவர் ஒரு நிமிடம் சிந்தித்தார். புற்கள்கூட முளைக்கத் தயாராக இல்லாத... பழைய பசுமையான மலைகள் வறண்டுகிடக்கின்றன. எங்கும் ஆக்கிரமிப்பு. ஒரு அங்குலம் நிலம்கூட வெறுமனே கிடக்க இயலாது போலும். சுற்றுச் சூழல்களை சூனியமாக்குவது... அசுத்தமாக்குவது... மனிதன் நாளுக்கு நாள் அழிந்துகொண்டிருக்கும் நிலை இருக்கிறதோ?

ஆடு, மாடுகளின் மேய்ச்சல் தளமாக ஒரு காலத்தில் இருந்தன தென்மலையின் குன்றுகள். இப்போது ஆடு, மாடுகளை மேய்க்கும் சிறுவர்களையே மலையின் அடிவாரத்தில் பார்க்க முடியவில்லை. கிராமத்தின் கால்நடைச் செல்வங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன. ஆடு, மாடுகளுக்கு தீவனம் போட்டுக் காப்பாற்றமுடியாத கிராமத்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகிவிட்டார்கள்.

தேவைப்படும் நபர்களுக்கு பாலும் மோரும் எளிதில் கிடைக்காத கிராமங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பலரும் கறவையை நிறுத்திவிட்டு, வியாபாரத்திற்குள் நுழைந்துவிட்டனர். யாராவது பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு தென்மலைக் குன்றில் கால்நடைகளை மேயவிட்டால், பிறகு அவை திரும்பிவராது. எதையாவது சாப்பிட்டு வயிறு வீங்கி, அதிக சக்திபடைத்த விஷ திரவத்தைத் தெளித்து நாசமாக்கிய புற்களில் இறந்து விழுந்து கிடப்பது தெரியாது.

கால்நடைகளை ஒரேயடியாக ஓடவிட்டு கசாப்பு செய்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின்மீது சிறிதுகூட கருணையில்லாத ஒரு நிலை. வயல்களுக்கு மத்தியில் பண்டைக் காலத்தில் ஊர் பெரிய மனிதர்கள் உண்டாக்கிய பொதுக் குளங்களைக்கூட பயனற்றவையாக்கிவிட்டு, சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பதுதான் நடக்கிறது. பொதுக் குளங்களில் நஞ்சைக் கலந்துவிட்டு மீன்பிடிக்கக்கூடிய செயல் ஒரு பொழுதுபோக்காக இப்போது நடந்துகொண்டிருக்கிறது. வயல்களில் இருந்துகொண்டு மழைவிடாது பெய்வதைப் பார்த்தவாறு இசை எழுப்பக்கூடிய தவளைகளால்கூட தப்பமுடியவில்லை. தவளைகளைக் கழுத்தில் பிடித்து கோணிக்குள் போட்டு, பெட்ரோமாக்ஸின் உதவியுடன் இருட்டில் மறைந்து நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த மிருக வதைக்கு இரையாவது தவளைகள் மட்டுமல்ல; கீரிகளும் பாம்புகளும்கூட தப்பமுடியவில்லை.

பாம்புகளைப் பயன்படுத்தும் விழாக்களுக்கு, பாம்புகளை ஒப்பந்த அடிப்படையில் பிடிக்கக்கூடிய பாம்புகளின் எமன்கள். உயிருடன் பிடித்து விஷப் பல்லை அகற்றிய பாம்புகளுக்குக் கூறுவதுதான் விலை. இறந்த பாம்பின் தோலுக்கும் நல்ல விலை. "ஸ்டஃப்' செய்யப்பட்ட அனைத்து பாம்புகளையும் கீரிகளையும் வரவேற்பறையில் அலங்காரப் பொருட்களாக வைப்பதை ஒரு பெருமையாகப் பார்க்கக்கூடிய புதிய பணக்காரர்கள்.

முழு கிராமமே இந்த புதிய பணக்காரர்களால் நிறைந் திருக்கிறது.

"எதற்குமே அதிக விலை...கொள்ளையடித்தல்...' அவர் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

எங்கு திரும்பிப் பார்த்தாலும் ஆதரவற்ற நிலையும் அக்கிரமமும் நடமாடிக் கொண்டிருக்கின்றன.

தனக்கு என்றென்றும் ஆனந்தமளித்துக்கொண்டிருந்த அந்த பழைய கிராமம் இப்போது எங்கு போனது? தோற்றம் மாறிவிட்டது. பலம், அழகு ஆகியவற்றின் உறைவிடமான தன்னுடைய கிராமம் இப்போது ஒரு பாலைவன பூமியாக மாறியிருக்கிறது. இனிமேலும் இங்கு எப்படி.. எத்தனை நாட்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு வாழ்வது?