ஏதோ ஒரு தாய் கொண்டு வந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களும்
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா
கனவுகளின் கண்ணாடி திடீரென்று கீழே விழுந்து நொறுங்கிவிட்டது. பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் நான் உறங்கிப் போயிருந்தேன். அதிகாலை மூன்று மணிக்கு நூறு நாழிகை தூரத்திலிருந்த விமான நிலையத்திற்குச் சென்று, அமெரிக்காவிலிருந்து வரும் மருமகனை அழைத்துக்கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தேன். காரை யார் நிறுத்தினார்கள் என்பதோ, எதற்காக நிறுத்தினார்கள் என்பதோ... எதுவுமே முதலிலில் எனக்குப் புரியவில்லை.
சாலையில் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். ஆட்கள் நின்றிருந்தது பம்பாயிலிருந்து வரக்கூடிய ஒரு சுற்றுலா பேருந்திற்கு முன்னால்... பேருந்திற்கு அப்பால் சாலையின் அருகில் இரண்டு ஜீப்புகளும் ஒரு காரும் நின்றிருந்தன.
ஒரு விபத்து நடந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. காரின் கண்ணாடியை இறக்கி, தலையை வெளியே நீட்டி நான் கேட்டேன்:
""யாருக்கும் ஏதாவது நடந்துவிட்டதா?''
குறிப்பிட்டு யாரிடமும் நான் கேட்கவில்லை.
அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடிய ஆர்வம் என்னிடம் அதிகமாக இருந்தது. அங்கு கூடிநின்றிருந்தவர்களில் யாராவது என்னிடம் அதைப்பற்றிக் கூறுவார்கள் என்று நான் நினைத்தேன்.
ஆனால், யாரும் எதுவும் கூறவில்லை. ஓரிரண்டு பேர் என்னை வெறித்துப் பார்க்க மட்டும் செய்தார்கள்.
அப்போது காக்கிச்சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்த ஒரு நடுத்தர வயதுகொண்ட மனிதர் காருக்கு அருகில் வந்து கூறினார்: ""வண்டியை ஒரு பக்கமாக நகர்த்தி இருக்கச் செய்யுங்கள்.'' அவர் எங்களுடைய ஓட்டுநரிடம் கூறியிருக்கலாம். ஆனால் அவர் பார்த்தது என்னைத்தான்.
எனக்கு ஏதோ பயம் உண்டானது.
அவருடைய குரல் மிகவும் முரட்டுத்தனமாக இருந்தது. ஏதோ ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்ட வர்களிடம் கூறுவதைப்போல, அவர் எங்களிடம் வண்டியை நகர்த்துமாறு கூறினார்.
அவருடைய குரலிலும் அசைவிலும் பொறுமையற்ற தன்மை இருந்தது. வண்டியில் என்னையும் ஓட்டுநரை யும் தவிர, வேலைக்குச் சென்றபிறகு, அமெரிக்கா விலிலிருந்து முதன்முறையாக ஊருக்கு வரக்கூடிய என் மருமகன் மட்டுமே இருந்தான். முதலில் நாங்கள் நிறைய உரையாடிக்கொண்டே வந்தோம். பிறகு... எப்போதோ... அவனும் என்னைப்போலவே தூங்கியிருக்க வேண்டும். அதனால் அங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது... அல்லது... என்ன நடந்தது என்பவற்றைப் பற்றி அவனும் முற்றிலும் தெரியாத வனாக இருந்தான்.
ஓட்டுநர் காரை ஒரு ஓரத்தில் நிறுத்தியபிறகு, நாங்கள் வெளியே இறங்கி ஆட்களுக்கு மத்தியில் சென்றோம். அப்போது புரிந்தது- விஷயம் விபத்து அல்ல... சுங்க இலாகாவின் சோதனை...
மருமகன் நெற்றியைச் சுளித்தவாறு கூறினான்:
""இப்படியும் ஒரு விஷயம் நடக்குமா? இது எப்போதிருந்து ஆரம்பமானது?''
எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது.
சாலை முழுக்க ஆட்கள் இருந்தார்கள் என்று கூறினேன் அல்லவா? அதில் கொஞ்சம் ஆட்கள் பம்பாயிலிருந்து வரக்கூடிய பேருந்திலிருந்து இறங்கியவர்கள். பிறகு... காட்சியைப் பார்ப்பதற்காகக் கூடிநின்ற அந்த இடத்தைச் சேர்ந்த ஆட்களும்... இந்த இரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் பள்ளிக்கூடத்திலிலிருந்து திரும்பிவரும் குழந்தைகள்.
அங்கு என்ன நடக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் குழந்தைகள் வேகமாக கூட்டத்திற்கு மத்தியில் நுழைந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
திருவிழா நடக்கும் இடத்திற்குச் செல்லும்போது இருப்பதைப்போன்ற சந்தோஷம் பிள்ளைகளின் முகங்களில் தெரிந்தது.
வெளியிலிருந்து விலகி, நாங்கள் ஒரு மரத்திற்குக் கீழே நின்றோம்.
பம்பாயிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் வெயிலில்தான் நின்றிருந்தார்கள். அவர்கள் நிழலில் போய் சிறிதும் நிற்கவில்லை.
மரத்திற்குக்கீழே நின்றவாறு எங்களால் அனைத் தையும் தெளிவாகக் காண முடிந்தது.
பேருந்தின் ஒரு பக்கத்தில் ஏராளமான பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. பெட்டிகள் தவிர, பலவகையான பைகள், துணிகள், சிறிய சிறிய பொருட்கள்... அவற்றிற்கு அருகில் செயலற்று நின்றுகொண்டிருக்கும் பயணிகள்... பிறகு... அந்த கூட்டத்திலிருந்து முற்றிலும் விலகி, பெட்டியிலிலிருந்து பொருட்கள் அனைத்தையும் அள்ளி வெளியே போட்டுக்கொண்டிருக்கும் காக்கிச் சட்டைக்காரர்... காக்கிச் சட்டைக்காரருக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பித்தவாறு, அவருக்கு அருகிலேயே நின்றுகொண்டிருக்கும் ஒரு கூலிலிங் கிளாஸ் அணிந்த மனிதர்...
ஒரு வயதானவர்... அவர் நிச்சயம் அந்த பகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். தன்னுடைய தேய்ந்துபோன பற்களை வெளியே காட்டியவாறு கூறினார்:
""துபாய்க்காரர்களின் பெட்டி... பெட்டியில் தங்கம் இருக்கும். தங்க பிஸ்கட்...'' வயதானவரின் குரலிலிலிலிருந்து அவருடைய மனதிற்குள் இருப்பது சந்தோஷமா பொறாமையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை அவர் வெறுமனே ஒரு உலக நடபைக் கூறியிருக்கலாம். எனினும், எனக்கு அருகில் நின்றிருந்த இளைஞன் அப்போது வயதான மனிதரை எரித்துவிடுவதைப்போல பார்த்தான்.
இளைஞன் மிகவும் களைத்துப்போய்க் காணப்பட்டான்.
அவன் தூங்கிப் பல நாட்கள் ஆகியிருக்கவேண்டும் என்று தோன்றியது.
நான் அவனிடம் கேட்டேன்: ""நீங்கள் இந்த பேருந்தில் வந்தீர்களா?'' அவன் என்னவோ கூறினான்.
ஆனால், அது மிகவும் தாழ்ந்த குரலில் இருந்தது.
அதனால் எனக்கு எதுவும் புரியவில்லை.
அவனுடைய முகத்தைப் பார்த்தபிறகு, எதுவும் கேட்கவும் தோன்றவில்லை.
ஆனால், பிறகு... இளைஞன் தனக்குத்தானே கூறிக்கொள்வதைக் கேட்டேன்: "இவனுடைய வாய்க்கு அரிசியையும் போட்டு முடித்துவிட்டால் பை காலியாகி விடும். பிறகு... வீட்டிற்குப்போய்ச் சேர்ந்தபிறகு...
அதை விற்கவேண்டும். கடன் வாங்கவேண்டும்... இவனையெல்லாம்...
இளைஞன் கோபத்துடன் கையைச் சுருட்டி, தன்னுடைய உள்ளங்கையில் பலமாகக் குத்தினான்...
எனக்கு பயம் உண்டானது.
அவனுடைய வாயிலிருந்து வெப்பம் நிறைந்த வார்த்தைகள் அதற்குப்பிறகும் வெளியே தெறித்து விழுந்தன.
""பம்பாயில் ஒரு சுங்க இலாகாவின் சோதனை... கோவாவில் ஒரு சுங்க இலாகாவின் சோதனை... பிறகு... கர்நாடகத்தில்... இப்போது... இங்கேயும்...''
அமெரிக்காவிலிருந்து வரும் மருமகன் அப்போது பதைபதைப்புடன் என்னிடம் கேட்டார்: ""நாம் மாலைவரை இங்கிருக்க வேண்டியதிருக்குமோ?''
நான் எதுவும் கூறவில்லை. அப்படிப்பட்ட ஒரு பயம் எனக்குள்ளும் தலையை நீட்டிக்கொண்டிருந்தது.
அப்போது இதுவரை என்னிடம் பேசாமலிருந்த இளைஞன் கூறினான்:
""நீங்கள்...?''
நான் கூறினேன்: ""இவன் அமெரிக்காவிலிருந்து வருகிறான். பம்பாயில் சுங்க இலாகாவின் சோதனைகள் அனைத்தும் முடிந்து, முதல் விமானத்தில் மங்களாபுரத்திற்கு வந்தான். அங்கிருந்து காரில்...''
அப்போது இளைஞன் கூறினான்: ""அப்படி யென்றால்... பிறகு... உங்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் வராது. இந்த சோதனை எங்களைப்போன்ற வளைகுடாவிலிருந்து வருபவர்களை மையமாக வைத்து நடத்தப்படுவது... அமெரிக்காவிலிலிருந்து வருபவர்களுக்கானது அல்ல... தங்கத்தைக் கடத்துப வர்கள் நாங்கள்தானே?''
எதுவுமே கூறாமல் சந்தேகத்துடன் நின்றிருக்க, அவன் மிகவும் தீவிரமான குரலிலில் கூறினான்:
""அதோ... அந்த கூலிலிங் கிளாஸ்காரன் இருக்கிறானே!
அவன்தான் அதிகாரி. மற்றவர்கள் அவனுக்குக் கீழே இருப்பவர்கள். நீங்கள் அந்த மனிதனிடம் போய்க்கூறினால், ஒருவேளை உங்களைப் போக அனுமதிக்கலாம்.''
நான் அப்போது தயங்கியவாறு நின்றிருக்க, இளைஞன் கூறினான்: ""தயங்குவதற்கு எதுவுமே இல்லை. உங்களைப் போன்றவர்கள் சீக்கிரமாக இங்கேயிருந்து செல்வதுதான் அவர்களுக்கும் நல்லது. பிறகு... வளைகுடாவிலிருந்து வரக்கூடிய கல்வி இல்லாத எங்களை சரியாகப் பிழியலாமே! யாருக்கும் தெரியாமல்...''
மருமகனும் கூறினான்: ""முயற்சி செய்வதால் எதையும் இழக்கப்போவதில்லையா! பிறகு... நம் கையில் அத்தாட்சிகள் இருக்கின்றன.'' அவன் கோட்டின் பைக்குள்ளிலிருந்து சுங்க இலாகா சோதனையின் தாள்கள் அனைத்தையும் எடுத்து என்னிடம் கொடுத்தான்.
""கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள்.''
நான் ஆட்களுக்கு மத்தியில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த அதிகாரிக்கு அருகில் சென்று, என்னுடைய பெயரைக் கூறினேன். என் பெயரைக் கேட்டால் ஏதாவதொரு சிறப்பு கவனிப்பை அவர் என்னிடம் வெளிப்படுத்துவார் என்று நான் நினைத்தேன். ஒரு அரசாங்க நிறுவனத்தில் பொதுவாக பெரிதென நினைக்கும் பணியிலிருந்து நான் ஓய்வுபெற்று சில நாட்கள்தான் ஆகியிருந்தன. அதன் செய்தியும் புகைப்படங்களும் பத்திரிகைகளில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்திருந்தன. அந்த நிலையில் அவற்றையெல்லாம் வாசித்துவிட்டு... ஏதாவது ஒரு... அப்படித்தான் நான் நினைத்தேன்.
ஆனால், நான் அருகில் சென்று பெயரைக்கூறியும், அவர் என் முகத்தைப் பார்க்கக்கூட இல்லை.
அவர் டயரி போல இருந்த ஒரு சிறிய புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.
அவருடைய சதைப்பிடிப்பான கழுத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த தங்கச் சங்கிலியைப் பார்த்தவாறு நான் நின்றுகொண்டிருந்தேன்.
நான் நினைத்தேன்: இவர் எப்படிப்பட்ட அவசரத்தில் இருந்தாலும், என்னை சற்று பார்க்கவாவது செய்திருக்கலாமே? ஆனால், அவர் அதைச் செய்யவில்லை.
எனக்கு சற்று கூச்சமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நான் கூறினேன்:
""என் சகோதரியின் மகன்... அவன் அமெரிக்கா விலிருந்து...''
அவர் உடனடியாக தலையை உயர்த்திக் கேட்டார்:
""அதற்காக...?''
அவருடைய குரலில் வெளிப்படையான எரிச்சல் இருந்தது.
நான் கூறினேன்: ""இன்று அவனுடைய குழந்தையின் பிறந்த நாள். குழந்தையை அவன் முதன்முறையாகப் பார்க்கப்போகிறான். அவனுடைய கையில் ஒரே ஒரு சோனி தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே இருக்கிறது. பம்பாய் சுங்க இலாகா அதை அனுமதித்ததற்கான...''
என்னுடைய வார்த்தைகள் அவரிடம் எந்தவொரு உணர்ச்சி வேறுபாட்டையும் உண்டாக்கவில்லை. அவர் ஒரு கற்சிலையைப்போல கேட்டவாறு நின்றுகொண்டிருந்தார்.
நான் இறுதியில் கூறினேன்:
""தயவு செய்து எங்களை சீக்கிரம் செல்லும்படிச் செய்தால் மதிய வேளையிலேயே வீட்டை...''
அதுவரை பேசாமலிலிருந்த அவர் உரத்த குரலிலில் கூறினார்:
""பாருங்கள். எங்களுக்கு சில சட்டங்களும் வழிமுறைகளும் இருக்கின்றன. அதன்படிதான் எதையும் செய்யமுடியும். இந்த பேருந்தில் வந்தவர்களே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் "பேக்கேஜ்' அனைத்தையும் சோதனை செய்து முடிக்காமல்... பிறகு... தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினீர்கள் அல்லவா? அதை முறைப்படி சோதனை செய்வதாக இருந்தால்...''
என் சரீரம் தளர்ந்துபோய்விட்டது.
என்னையே அறியாமல் வார்த்தைகள்... ""தொலைக்காட்சிப் பெட்டியைச் சோதித்துப் பார்க்கவேண்டுமா? எதற்கு?''
நீண்டகால எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு எனக்கு கிடைக்கக்கூடிய ஒரு சோனி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி... விமான நிலையத் திலிருந்து வெளியே எடுத்துவைக்கும்போதே, நான் அதை மிகுந்த அன்புடன்... காரில் அமர்ந்துகொண்டு நான் என்னுடைய தொலைக்காட்சிப் பெட்டியைப் பற்றி பல கனவுகளைக் கண்டுகொண்டிருந்தேன்.
அந்த தொலைக்காட்சிப் பெட்டியைத்தான் இப்போது கண்களுக்கு முன்னால் வைத்து...
அப்போது அதிகாரி சிரித்துக்கொண்டே கூறினார்:
""பாருங்கள், உங்களுடைய தொலைக்காட்சிப் பெட்டியைக் கழற்றிப் பார்க்கப் போவதாக நான் கூறவில்லை. அந்த விஷயத்தை தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தபிறகுதான் தீர்மானிக்க முடியும். பிறகு... இப்போதைய காலத்தில்... யாரால் கூறமுடியும்?''
அதற்குப் பிறகு அவர் கூறியது எதையுமே நான் கேட்கவில்லை.
இறுதியில் பொறுமையில்லாமல் அவர் கூறினார்:
""நீங்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்காமல்
அங்கு காத்திருங்கள். இதெல்லாம் சற்று முடியட்டும்...''
பிறகு நான் கூறுவதற்கு எதுவும் இல்லா மலிருந்தது. திரும்பி வந்தபோது, மருமகன் ஆர்வத்துடன் கேட்டான்: ""என்னவாயிற்று?''
நான் எதிர்மறையாகத் தலையை ஆட்டினேன்.
என்னுடைய சோனி மனதிற்குள் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது.
அப்போது மருமகன் கூறினான்: ""நான் சிறிது முயற்சித்துப் பார்க்கிறேன்.''
சுங்க இலாகாவின் தாள்களுடன் அவன் சென்றான்.
தன்னுடைய உள்ளங்கையில் கையைச் சுருட்டி வைத்துக் குத்திக்கொண்டிருந்த இளைஞன் அப்போது அங்கிருந்தான்.
என் மன அமைதிக்காக நான் அவனிடம் கேட்டேன்:
""இவர்கள் தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து பார்ப்பார்களா? அதற்குள்ளே தங்கம் இருக்கிறதா, மருந்து இருக்கிறதா என்பதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு...''
அவன் என்னையே வெறித்துப் பார்த்தான்.
நான் கூறினேன்: ""எனக்காக மருமகன் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டு வந்திருக் கிறான். அதற்கான வரியை பம்பாயில் செலுத்தி யதற்கான தாளும் இருக்கிறது. அது ஒருபுறமிருக்க, இந்த ஆட்கள் எப்படியாவது திறந்து நாசப்படுத்து வதாக இருந்தால்...'' கோபம் காரணமாக என்னால் வாக்கியத்தை முழுமைசெய்ய முடியவில்லை.
இளைஞனின் கண்கள் என்னுடைய முகத்திலேயே இருந்தன.
நான் கவலையுடன் கூறினேன்: ""பிறகு... நான் அதைத் திரும்ப எடுத்துக் கொள்வதாக இல்லை. திரும்ப எடுத்துக்கொண்டு... நான் அதை வைத்து... என்ன...''
அப்போது... ஒருவேளை... என்னை சமாதானப் படுத்துவதற்காக இருக்கலாம்... இளைஞன் கூறினான்:
""இல்லை... அவ்வாறு திறந்துபார்க்க வேண்டியது எதுவும் இல்லை.'' நானும் கூறினேன்: ""செய்யாமல் இருக்கலாம்.'' ஆனால், தொடர்ந்து எதையோ நினைத் ததைப்போல இளைஞன் கூறினான்: ""அவ்வாறு உறுதியாகக் கூறவும் முடியாது. சமீபத்தில் அமெரிக்காவிலிலிருந்து வந்திருந்த ஒரு பிணத்தின் வயிற்றில் தங்கமோ மருந்தோ வேறு ஏதாவதோ இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக கிழித்து அறுத்தது இவர்கள்தானே? வயதான தாயைக்கூட சற்று பார்க்க அனுமதிக்காமல், இரண்டு நாட்கள் காத்திருக்கச் செய்துவிட்டு... பிறகு, என்ன கிடைத்தது? எதுவுமே கிடைக்கவில்லை. பிறகு... சவப்பெட்டியைக் கூட உருக்கிப் பார்க்கவில்லையா? ஏதாவது கிடைத்ததா? அவற்றையெல்லாம் செய்தவர்கள் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.''
நான் திகைப்படைத்து நின்றிருக்க, அவன் கூறினான்: ""ஒரு நிமிடம் என்னுடன் சேர்ந்து வரமுடியுமா? நான் உங்களுக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறேன்.''
பேருந்தின் அந்த முனைக்கு... ஆட்கள் கூட்டமாக நின்றிருந்த திசையை நோக்கி அவன் என்னை அழைத்துச் சென்றான்.
அங்கு... பாதையோரத்தில் வெறும் மண்ணில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வயது இருக்கக்கூடிய ஒரு பெண் தனியாக அமர்ந்து சத்தம் உண்டாக்காமல் அழுதுகொண்டிருந்தாள்.
சூரியன் அவளுடைய முகத்தில் பலமாக அடித்துக்கொண்டிருந்தது. என்றாலும் அவள் அதை உணரவில்லை.
எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் என்னவோ கேட்பதற்கு முயன்றபோது, அவன் விலக்கினான். தொடர்ந்து என்னை அழைத்துக்கொண்டு மீண்டும் மரத்திற்கு அடியிலேயே வந்தான்.
அதுவரையில் அவன் மிகவும் அமைதியாக இருந்தான்.
நான் கேட்டேன்: ""யார் அது?''
அப்போது அவன் கூறினான்: ""அதைத்தான் நானும் தெரிந்து கொள்ளவேண்டும். யார் அது?''
நான் எதுவுமே கூறமுடியாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
அப்போது அவன் மீண்டும் கூறினான்: ""ஒருவேளை... நான் கூறுகிறேன்... அவள் என்னுடைய சகோதரியாக இருக்கலாம். இல்லாவிட்டால்...
அம்மா... இல்லாவிட்டால்... உங்களுடைய சகோதரி... அதுவும் இல்லாவிட்டால்... நம்மைப்போன்ற இந்த நாட்டிலுள்ள எவ்வளவோ மக்களில் யாருடைய சகோதரியாகவோ, தாயாகவோ...''
அவனிடமிருந்து அப்படிப்பட்ட ஒரு குரலை நான் முதன்முறையாகக் கேட்டேன். அதில் கோபமோ பகையோ வெறுப்போ... எதுவுமே இல்லை. வேதனை இருந்தது. ஆனால், அது தன்னைப் பற்றிய வேதனையாக இல்லை.
நான் ஆச்சரியத்துடன் அவனையே பார்த்தேன்.
அவன் கூறினான்: ""அந்தப் பெண்ணை எனக்குத் தெரியாது என்று கூறமுடியாது. காரணம்- அவள் நாங்கள் வந்த பேருந்தில் இருந்தவள்தான். அவள் ஏதோ ஒரு வளைகுடா நாட்டிலிலிருந்து வருகிறாள். அங்கு அவளுக்குப்பணி இருந்தது. பணி என்று கூறும்போது, நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது. அவள் ஒரு சாதாரண வீட்டு வேலைக்காரியாக இருந்தாள்.
அதற்கும் முதலிலில் கூறப்பட்ட சம்பளமெதுவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. எனினும், அவள் அதை வைத்துக்கொண்டு திருப்தி அடைந்து, அங்கு எப்படியோ வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தாள். ஊரில் நோயாளியாகக் கிடக்கும் கணவனையும் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டியது அவள் அல்லவா? எனினும்... அவள் திரும்பிவந்தாள். இனி எந்தச் சமயத்திலும் திரும்பச் செல்வதில்லை என்ற தீர்மானத்துடன்தான் திரும்பி வந்தாள்.''
சிறிது நேரம் எதுவுமே கூறாமல் நின்று விட்டு, இளைஞன் கேட்டான்:
""அவள் எதை நோக்கித் திரும்பி வந்தாள் என்று தெரியுமா? ஊரிலிருக்கும் பட்டினியை நோக்கி மீண்டும்...''
நான் ஒரு முட்டாளைப்போல எதுவுமே கூறாமல் நின்றிருக்க, இளைஞன் கூறினான்: ""அவள் இப்போது வரவில்லையென்றால்... பிறகு... அவளுடைய பிணம்தான்... அவளுக்கு எழுதவோ வாசிக்கவோ எதுவுமே தெரியாதென்று நான்தான் கூறினேனே!
அவளிடம் மொத்தத்தில் இருந்த சொத்து- அவளுடைய உடல்நலமும் அழகும் மானமும்தான். அனைத்தும் அவளிடமிருந்து நீங்கிச்சென்றுவிட்டன. இனிமேலும் அவள் அங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தால்... எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறதே!''
திடீரென்று இளைஞன் நிறுத்திவிட்டுக் கூறினான்: ""வேண்டாம்.. நான் அதைக் கூறமாட்டேன்.''
தொடர்ந்து என்னுடைய கையைப் பிடித்து பேருந்தின் பகுதியை நோக்கி சுட்டிக்காட்டியவாறு அவன் கூறினான்: ""அங்கு... ஆடைகளின் ஒரு குவியலைப் பார்க்கிறீர்களா?''
நான் அதை முதலிலிலேயே பார்த்திருந்தேன்.
அவன் கூறினான்: ""அவையனைத்தும் அந்தப் பெண்ணுக்குச் சொந்தமானவை. பெரும்பாலும் பழைய ஆடைகள்... சில ஆடைகள் இலவசமாகக் கிடைத்தவையாக இருக்கலாம். அவளின் கணவனுக்குத் தேவையானவையும் குழந்தைகளுக்குத் தேவையானவையும் அந்த குவியலிலில் இருக்கின்றன. அவற்றைத்தான் அள்ளிப்போட்டிருக்கிறார்கள்- தங்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காக... ஆனால், அதுமட்டுமே என்றிருந்தால் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.
அந்தப் பெண் தன்னுடைய இளைய மகனுக்காக வாங்கிய பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களைக்கூட, இவர்கள் வெறுமனே விடவில்லையே! வெறும் பிளாஸ்டிக்...'' நான் அந்த கறுப்புக் கண்ணாடிக்காரனிடம் கேட்டேன்: "மிஸ்டர்... இது தேவையா? இதையாவது நீங்கள்...' அப்போது அவர் என்ன கூறினார் என்று தெரியுமா? "இவள் ஒரு ஏழைப்பெண்ணாக இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களின் "கூரியர்' ஆக, அவர்களுக்காக...''
அவன் திடீரென்று நிறுத்தினான். தொடர்ந்து சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு கடுமையான வெறுப்புடன் கூறினான்: ""அவனின் ஒரு கூரியர்!''
நான் திகைத்துப்போய் நின்றிருந்தேன்.
பிறகு அவன் ஒரு பெருமூச்சை விட்டவாறு கூறினான்: ""இங்கிருந்து பார்த்தால், பார்க்க முடியும்... அந்த ஆடைகளுக்கு மேலே... பச்சையும் சிவப்புமான பிளாஸ்ட்டிக் துண்டுகள்...''
நான் பார்த்தேன்.
இளைஞனின் குரல் திடீரென்று இடி முழுக்கத்தைப்போல காதில் வந்து மோதியது: ""பிறகு... நாம் இப்போது இங்கு சோனி தொலைக்காட்சிப் பெட்டியைப் பற்றி நினைத்து பயப்படுகிறோம்!''
நான் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருக்க, அவன் ஆட்களுக்கு மத்தியில் நடந்துசென்றான்.
அப்போது மருமகனும் ஓட்டுநரும் வந்தார்கள். இரண்டுபேரின் முகங்களும் பிரகாசமாக இருந்தன.
மருமகன் கூறினான்: ""நான் கூறியும் அந்த ஆள் சம்மதிக்கவில்லை. ஆனால் இப்போது தாமு கூறுவது...''
தாமு, மருமகனின் மனைவியின் தந்தையின் ஓட்டுநர். எவ்வளவோ காலமாக அவர்களின்...
தாமு கூறினான்: ""நம்மிடம் முதலில் காரை நகர்த்தி நிறுத்தும்படி கூறிய மனிதர் இருக்கிறாரே! அவர்தான் சம்மதித்தார். அதிகாரியிடம் கேட்டுவிட்டுதான்...''
எனக்கு நம்புவதற்கு சிரமமாக இருந்தது.
அப்போது தாமு மீண்டும் கூறினான்: ""சம்மதித்தாயிற்று. அவர்கள் நாம் வளைகுடாவிலிலிருந்து வருபவர்கள் என்று முதலில் நினைத்தார்களாம்.''
அப்போது மருமகன் கூறினான்: ""உண்மைதான்.. நாம் போகலாம். இனி தாமதிக்க வேண்டாம்.'' பிறகு நான் எதுவும் கூறவில்லை.
ஆனால், கார் நகர்ந்தபிறகுதான் தாமு கூறியதற்குப் பின்னாலிலிருந்த நம்பிக்கையைப் பற்றி எனக்கு உணர்வு வந்தது.
நகர்ந்த பிறகு, அமெரிக்காவிலிலிருந்து வரும் விஷயத்தைப் பற்றி முதலிலிலேயே கூறினோமே என்றெல்லாம் நான் கேட்கவில்லை. மிகவும் சீக்கிரமே நான் அதை மறந்தும்விட்டேன்.
மீண்டும் நான் பழைய மாதிரி ஆனேன். சாலை பொதுவாகவே நன்றாக இருந்தது. காரோ அழகாக மிதந்துவரும் ஒரு பாடலைப்போல. நான் சோனி தொலைக்காட்சிப் பெட்டியின்மீது ஒரு கையைச் சாய்த்து வைத்தவாறு, சூரியனுக்குக் கீழேயிருக்கக்கூடிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் மிகவும் சந்தோஷத்துடன்...
சுங்க இலாகாவில் பணியாற்றுபவர்கள்... குறிப்பாக- நேரடியாகப் பணியில் அமர்த்தப்படும் இளைஞர்கள்... நேர்மையாகப் பணியைச் செய்யும்போது சந்திக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி...
ஒரு கட்டத்தில் எனக்கு ஏதோ ஒரு குறை தோன்றியது. நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன். தாமுவின் இறுகிய உதடுகளில் ஒரு புன்சிரிப்பு மறைந்திருந்தது.
என்னுடைய சிரமத்தைப் பார்த்தது காரணமாக இருக்க வேண்டும்.. மருமகன் கூறினான்: ""தாமு... பணத்தைக் கொடுத்தார். கழுத்தில் தங்கச்சங்கலிலி அணிந்திருந்த அந்த கூலிலிங் க்ளாஸ் அணிந்த மனிதர் இருக்கிறாரே! நம்மிடம் காரை ஒரு ஓரத்தில் நிறுத்தும்படி கூறிய அந்த ஆள் இருக்கிறாரே!
அவர்தான் வாங்கினார். அதுதான் அதற்கான சட்டம்.''
மருமகன் கூறினான்: ""பரவாயில்லை... கொடுக்க வில்லையென்றால், நான் மிகவும் சிரமப்பட்டு அமெரிக்காவிலிலிருந்து கொண்டு வந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டி...''
என்னால் எதையும் கூறமுடியவில்லை.
ஆனால், தொடர்ந்துகொண்டிருந்த பயணத்தில் என்னுடைய மௌனம், என்னாலேயே தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.
பிள்ளைகளுக்காக எவ்வளவோ தூரத்திலிலிருந்து கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களைத் தன்னுடைய கண்களுக்கு முன்னால் இழந்த ஒரு தாயின் அழுகைச் சத்தம் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது.