நான் எத்தனையோ பாடல் களைப் பாடினாலும், 2020-லுதான் ’கத்தரிப் பூவழகி’ பாட்டு ஹிட்டாகுது. எப்படின்னா தொலைக்காட்சியில் நான் ஒரு நிகழ்ச்சில இருக்கேன்.
அப்ப ஒரு போன் வந்துச்சு.
மியூசிக் டைரக்டர் உங்கள சரியா அஞ்சு மணிக்கு வரச் சொல்லி இருக்காருன்னு சொல்றாங்க. டைரக்டர் வெற்றிமாறன் சார் படம் அது. அவர் தன் வீட்ல எல்லார்கிட்டயும், இது வேல்முருகனுடைய பாட்டு... அதனால நான் அங்கேயே சாப்பிட்டுக்கிறேன்... ரொம்ப நேரம் ஆகும். அதனால எல்லாரும் சாப்பிட்டு படுத்துடுங்க அப்படின்னு சொல்லிட்டு வந்திருக்காரு.
ஏன்னா ஆடுகளம் படத்துல ’ஒத்த சொல்லால’ ரெண்டு மூணு நாளாச்சு ரெக்கார்டிங் பண்றதுக்கு. ஆனா இந்தப் பாட்டு நான் சாரு வர்றதுக் குள்ளயே... 20 நிமிஷத்துல பாடி முடிச்சிட்டேன்.
அதாவது ஏகாதசி சார் எழுதின பாட்டு இது.
கத்தரிப் பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட
நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில
புடிக்குது கிறுக்கு
வரப்பு மீசைக்காரா
வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன்
ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா
என்ன பாரு கண்ணால
-அப்படிங்கற பாட்டு அது. ஆடுகளம் மாதிரியே இந்த அசுரன் படமும் தேசிய விருது பெற்ற படம். தேசிய விருது பெற்ற இரண்டு படத்துக்குமே நான் பாடி இருக்கேன்.
கத்தரி பூவழகி பாட்டு, செந்தில் கணேஷ் ஒய்ஃப் ராஜலட்சுமி அவங்ககூட நான் பாடினது. இப்ப ஜி.வி. சார் இசையில் தொடர்ந்து 15 படங்களுக்கு மேல படம் பண்ணியாச்சு. ஒரே இசையமைப்பாளர்கிட்ட 15 படங்கள் அப்படிங்கறது பெரிய விஷயம். அப்போ ஒரு காலகட்டத்தில ஒரே இசையமைப்பாளர்கிட்ட எஸ்.பி.பி. சாரு ஒரு 5000 பாட்டு பாடி இருப்பாரு. 2005-க்கு மேல ஒரே இசையமைப்பாளர்கிட்ட இவ்வளவு பாட்டு பாடி இருக்கிறது நான் மட்டும்தான் இருப்பேன் அப்படின்னு நினைக் கிறேன். ஜி.வி. சார் எல்லாருக்கும் ஒரு பட வாய்ப்பு கொடுப்பாரு. இல்லன்னா இரண்டு படம் வாய்ப்பு கொடுப்பாரு. நமக்குதான் அதிக வாய்ப்பு கொடுத்து, அதிக ஹிட் ஆனது.
ஃபர்ஸ்ட் படம் ஆடுகளம், அதுக்கப்புறம் சகுனி, மீண்டும் ஒரு காதல் கதை, காவலன், தாண்டவம், மதயானை கூட்டம், அசுரன், கொம்பன் இது எல்லாமே செம பாட்டு ஹிட். படமும் ஹிட் அதனால எல்லா படத்திலயுமே ஜீ.வி. சார் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துடுவாரு.
ஒரு நாட்டுப்புறப் பாடகரா வந்து, ஒரே இசையமைப்பாளர்கிட்ட அதிகமா பாட்டு பாடின பாடகர் நாமதான். அதே மாதிரி எல்லா கவிஞர்கள்கிட்டயும் பாடிய பாடகரும் நாமதான். கலைஞர், வாலி ஐயா, வைரமுத்து சார், நெல்லை ஜெயந்தா, புலமைப்பித்தன் ஐயா, பா. விஜய், சினேகன், நா. முத்துக்குமார், ஏகாதசி, விவேகா, சினேகன், கபிலன், அண்ணன் இளையகம்பன், வைரமுத்துவோட பையன் கபிலன் வைரமுத்து, தாமரை இப்படி எல்லா கவிஞர்களிடமும் பாடுன ஒரே பாடகர் நாமதான்.
அதே மாதிரி ரகுமான் சார் முதல் இளையராஜா சார் வரை எல்லா இசையமைப் பாளர்களுக்கும் பாடக்கூடிய வாய்ப்பு நமக்கு அமைந்தது. வைரமுத்து சாருக்கு "தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படம். அதுல சுசித்ராவும் நானும் ஒரு பாட்டு பாடினோம்.
ஏ கருப்பா பாரேண்டா
தனுஷ் கோடி லேடி..
நீ கப்பம் கட்டும் பாடி
என் கல்லாப்பெட்டி கோடி..
அப்படிங்கிற ஒரு பாட்டு. இது மாதிரி பல்வேறு இசையமைப்பாளர்கள், பல்வேறு இயக்குனர்கள், பல்வேறு ஹீரோக்கள், அது மாதிரி பல்வேறு கவிஞர்கள் எழுதின பாடல்கள் பாடுனது, இப்படி கிட்டத்தட்ட திரைப்படங்களுக்கு மட்டும் ஒரு 500-க்கும் மேற்பட்ட பாடல்கள் இதுவரைக்கும் பாடியிருப்பேன்.
தெலுங்கில் வந்து சிரஞ்சீவி சாரும், கமல் சார் பொண்ணு இவங்க ரெண்டு பேரும் நடித்த படத்துக்கு பாடி இருக்கேன். 2019 பிக் பாஸ் நான்காவது சீசன்ல கலந்துகிட்ட 18 கண்டஸ்டன்ஸ்ல நானும் ஒரு கண்டஸ்டென்டா கலந்துகிட்டேன்.
அப்புறம் கிட்டத்தட்ட ஒரு 5000 நாட்டுப்புற கலைஞர்களை வச்சு ஒயிலாட்டத்தில உலக கின்னஸ் சாதனை பண்ணனும் அப்படின்னு ஜெயா இன்ஜினியரிங் காலேஜ்ல ஒரு ப்ரோக்ராம் நடந்தது. அதற்கு சிறப்பு விருந்தினரா பத்மஸ்ரீ விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், கங்கை அமரன் சாரு, நம்ம ஐயா பிறைசூடன், அண்ணன் தம்பி ராமையா, எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்த ஜேம்ஸ் வசந்த் சார் இப்படி பல்வேறு பட்டாளங்களோட பெரிய அமைப்போட அந்த பங்சன் நடந்தது.
நான் தமிழ் சார்ந்த கிராமிய பாடல்கள் பாடும்போது அதற்கு ஒயிலாட்ட நடனமாடி அதுல கின்னஸ் சாதனை இப்படித்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் நம்முடைய கிராமிய கலையை கொண்டுபோனதுல அது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருந்துச்சு. அதுக்கு அப்புறம் கின்னஸ் ஏசியா ரெக்கார்டு அப்படின்னு ஒரு விருது கொடுத்தாங்க அத கவர்னர் சதாசிவம் ஐயா கொடுத்தாரு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தில் பாடி, அது உலக வம்சாவளியா அந்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கத்தில் நடக்கும்.
அந்த நிகழ்ச்சிக்கும், எனக்கும் சேர்த்து கின்னஸ் ரெக்கார்டு குடுத்தாங்க.
அதுக்கப்புறம் அமெரிக்கன் யுனிவர்சிட்டில டாக்டரேட் பட்டம் கொடுத்தாங்க. எனக்கும் அண்ணன் முத்துக்குமாருக்கும் சேர்ந்து தான் அந்த டாக்டர் பட்டம் கொடுத்தாங்க. 2013-ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, 2018-ல எடப்பாடி ஐயா கையால வாங்குனேன்.
அதுக்கப்புறம் பெரியார் விருது வாங்கி இருக்கேன். அப்புறம் அரவிந்த் கெஜ்ரிவால் சார்கிட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்காக மரபிசை கலைஞர் விருது வாங்கி இருக்கிறேன். மண்ணின் மைந்தன் விருது, கிராமிய இசை கலாநிதி அப்படிங்கற பட்டம் இது ரெண்டுமே தருமபுரம் ஆதீனத்தால் வழங்கப்பட்டது.
அப்துல் கலாம் ஐயா கையால நாட்டுப்புறக் கலைஞர் விருது வாங்குனது, அண்ணன் திருமா கையால மரபிசை மன்னன் அப்படிங்கற விருது வாங்கினது, அதுக்கப்புறம் கலைஞர் கையால ஒரு விருது. அப்புறம் நம்ம முதல்வர் தளபதி கையால விருது. இப்படி ஆறு ஏழு முதல்வர் கையால வாங்குனது, நம்ம நாட்டினுடைய பிரதமர் வந்து, அவர் முன்னாடி நாட்டுப்புற கலையை வளர்த்து, அங்க பாடி, அவர் வாழ்த்தி, கட்டிப்புடிச்சு,
அந்த தருணம் மிகவும் சீரும் சிறப்பும் பெற்றது. குடியரசுத் தலைவர் பிரதமர் கவர்னர், முதலமைச்சர் அப்படின்னுஅத்தனை பேர் கையாலயும் ஆசீர்வாதம் பெற்ற பாடகர்தான் நான்.
இப்படி பல்வேறு விருதுகளும் பல்வேறு பட்டங்களும் ஒரு நாட்டுப்புறப்பாடலுக்குச் சொந்தக்காரனா இருந்து, ஒரு கிராமத்தில் இருந்து வந்து, வாங்குனதில் எனக்குப் பெருமைதான்.
அது மாதிரி நிறைய நிகழ்வுகளை தமிழ்நாடு மட்டும் இல்லாம, உலகம் பூரா இருக்கக்கூடிய தமிழ் சொந்தங்களுக்காக இசை நிகழ்ச்சி பண்ணினது, இப்படி கிட்டத்தட்ட ஒரு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கிறேன்.
இதுல என்ன ஒரு சிறப்பு அப்படின்னா,
நம்ம ஒரு ஆளு வெளிநாடு போறது அப்படிங் கிறது சாதனை இல்லை. நாம கலையை கத்துக் கிட்டதனாலகூட வர அத்தனை திரை இசைக் கலைஞர்களுக்கும் டிக்கெட் போட்டு, அவங்களுக்கு ரூம் போட்டு அந்த நிகழ்ச்சி நடத்துறவங்க அவங்களுக்கும் பணம் கொடுத்து இப்படித்தான் நாம முயற்சி பண்ணி இருக்கிறோம்.
என்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு டீமோடயும் தனிமையாகவும் போயிட்டு வந்து நிகழ்ச்சி பண்ணி இருக்கிறேன். அதுல முக்கியமா அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, மொரிஷியஸ், சைனா இது மாதிரி பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து போயி நம்முடைய திரை இசைக் கலைஞர்களோடும், கிராமிய இசை கலைஞர்களோடும் நிகழ்ச்சிகள் பண்ணி இருக்கிறேன்.
வெளிநாடுகளில் போயி அங்கே இருக்கிற நிறைய கலைஞர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவங்க பிளே பண்ற அளவுக்கு வந்துட்டாங்க, வளந்துட்டாங்க அப்படிங்கறத பாக்கும்போது, நம்ம கலைய வெளிநாடுகளிலும் விதைச்சிருக்கி றோம். அது வளர்ந்து மிகப்பெரிய விருச்சமா கிளை விரிக்கும் அப்படிங்கறது நெனைக்கும்போது, மனசுக்கு நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருக்கு.
அந்த மாதிரி பண்ணும்போது ஒவ்வொரு நாட்டில் இருந்தும் விருது கொடுத்திருக்கி றார்கள்.
அதே மாதிரி மிகச்சிறந்த ஆலயங்களில் பாடிய பாடகர். காசி தமிழ் சங்கத்துல ஒரு சாதாரண நாட்டுப்புற கலைஞராப் போய் பாடுனது, டெல்லி இந்தியா கேட்டில் பாடினது, அதுக்கு அப்புறம் வந்து திருப்பதி பெருமாள் கோயில்ல பாடுனது, அப்புறம் திருவண்ணாமலை தீபத்தின்போது, திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி மலை முருகன் கோவில், கபாலீஸ்வரர் கோயில் இந்த மாதிரி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இப்படி வேளாங்கண்ணி சர்ச், இது மாதிரி மிகப் பிரசித்தி பெற்ற ஆலயங்கள்ல தேவாலயங்களில் சென்று பாடுனது, முஸ்லிம் பள்ளி தர்கா அதாவது அனைத்து மொழிகளிலும், அனைத்து மதங்களையும் கடந்து பாடுன பாடகரா இருப்பதிலும்எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
மத நல்லிணக்க பாடல்கள், கிராமத்து வாசனை பாடல்கள், நாட்டுப்புற இசை பாடல்கள், மெல்லிசை பாடல்கள், மக்கள் இசைப் பாடல்கள், ஏர் உழவன் பாடல்கள், இரவு கதை பாட்டு, தெருக்கூத்து பாடல்கள், நாடக பாடல்கள், கணியன்கூத்து பாடல்கள், புறநானூறு பாடல்கள் இப்படி எல்லா வகையான பாடல்களையும் பாடி இருக்கிறேன். பாடிக்கொண்டும் வருகிறேன்.
என்னுடைய கிராமியப் பாடல்கள் மூலமாக மக்கள் மனசுல நீங்கா இடம்பெற்று தொடர்ந்து பாடல்கள் மூலமாக, உறவுகளின் அன்பையும், நட்பினுடைய அன்பையும், படித்தவர்களுடைய அன்பையும், பண்பாளர்களுடைய அன்பையும் பாராட்டையும் பெற்றிருக்கேன்.
அதேமாதிரி தனியார் தொலைக்காட்சிகள்ல, அத்தனை தொலைக்காட்சிகளிலும் பிரசித்திபெற்ற எல்லா நிகழ்வுகள்லயும் பங்குகொண்டவர். எந்த ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்தாலும், அந்த சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு, அந்த சிறப்பு நாளை தொலைக்காட்சி நிகழ்ச்சியோடு கொண்டாடுவது.
என் மனைவி கலா , குழந்தைகள் ரக்ஷனா, பிரதக்ஷனா. திருமணம் முடிந்த பிறகும் பரதநாட்டியத்துல பி.எச்.டி. அதாவது முனைவர் பட்டம் பெறவைத்து படிக்க வச்சிருக்கேன். ஒரு பொண்ணு செவன்த் இன்னும் ஒரு பொண்ணு தேர்ட் படிக்கிறாங்க. இதுதான் என்னுடைய குடும்பம். இப்படி நான் இசையால் புகழ் பெறக் காரணம், நாட்டுப்புற இசைதாங்க.
இப்படி இத்தனை நாளா என்னைப் பத்தி உங்ககிட்ட மனம்விட்டு நிறைய பகிர்ந்துக்கிட்டதில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு. இப்படியொரு வாய்ப்பு கிடைச்சதை எண்ணி நெஞ்சுகொள்ளப் பெருமை உண்டாகுது.
நக்கீரன் குழும இலக்கிய இதழான ”இனிய உதயம்” மாத இதழின் மூலமாக என்னுடைய வாழ்வை வரலாறாக்க வாய்ப்பளித்த பத்திரிகையுலக ஜாம்பவான் அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கும், இரண்டு வருட காலம் என்னை வழி நடத்திச் சென்ற, இனிய உதயம் இதழின் இணை ஆசிரியர் ஐயா கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கும், இந்தத் தொடரை தொடர்ந்து 22 மாதங்கள் என்னுடன் கூடவே பயணித்து, தடை ஏதும் இல்லாமல், நான் சொல்லச் சொல்ல என்னுடைய வழக்கு மொழியைக் கூட கவனமாகப் பதிவுசெய்து வந்த அண்ணன் முனைவர். அ. பழமொழிபாலன் அவர்களுக்கும், இந்தத் தொடர் வெளிவருவதற்கு ஊக்கமாக இருந்து வந்த அண்ணன் பாடலாசிரியர் இளையகம்பன், கவிஞர் தமிழ்அமுதன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து படித்து, என்னை ஊக்கப்படுத்தி பெருமைப்படுத்திய வாசகர்களாகிய உங்களுக்கும் என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். மீண்டும் சந்திப்போம்.