விஞர், பேச்சாளர், தொழிலதிபர் என பன்முகம் காட்டிவருவதோடு முகநூல் பிரபலமாகவும் திகழ்பவர் கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜூ. சென்னைவாசியான அவரிடம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான அவர் கணவர் சு.சுப்புராஜ் எடுத்த நேர்காணல் இதோ...

உங்களைப் பற்றி நானறிவேன். எனினும், நீங்களாக உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்?.

வணக்கம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தேன். அப்பா புலவர்.அழ. தமிழ்ச் செல்வன். மிகவும் நேர்மையான தமிழாசிரியர். அப்பாவின் இயற்பெயர் சுப்புராசு. தமிழின் மேலுள்ள பற்றினால் அவர் தன் பதினேழாம் வயதில் தமிழ்ச்செல்வனாக பெயர் மாற்றம் செய்து கொண்டவர். அம்மா பெயர் பஞ்சவர்ணம். அவர் ஆகச் சிறந்த சமூகசேவகி. நான் ஆடை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு பற்றி படித்துள்ளேன். அதோடு என் மனதிற்குப் பிடித்தபடி கவிதைகள் எழுதி வருகிறேன். கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கிறேன்.

anbuselvi

Advertisment

இல்வாழ்க்கை எப்படி என்று கூறமுடியுமா?

என் கணவரான சு.சுப்புராஜூ என்னும் நீங்கள், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத் தில் (மத்திய அரசு பாதுகாப்பு துறை) தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதோடு தமிழார்வலர். அதிலும், ஹைக்கூ கவிதைகளை அதிகம் எழுதுபவர். பெற்றவர்கள் முடிவு பண்ணி நடத்திய திருமணம் எனினும் காலங்கள் கடக்க கடக்க... புரிதலும் அன்பும் பெருகுகிறதே தவிர குறையவில்லை. பிள்ளைகள் என்ற பெயரில் நாம் வரம் வாங்கினோம்.

ஒரு பெண்.. விமலா. ஒரு ஆண்.. சிவராம்குமார். இருவரும் பொறியியல் பட்டதாரிகள்.

பணிகள் பற்றி சொல்லலாமே?

என் நாற்பத்தைந்து வயது வரை குடும்பம் மட்டுமே என் உலகமாக இருந்தது. குழந்தைகள் குடும்பம் என்றே வருடங்கள் கழிந்தன. குழந்தைகள் வளர்ந்து சுயமாகிய பின்னர், எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் பக்கத்தில் உள்ள ஒரு சில முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களில் சிறுசிறு உதவிகள் செய்தல், பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் ஊக்கமூட்டுதல் போன்றவற்றை செய்துகொண்டு இருந்தேன். இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அந்த சமயம் மகள் "க்ரீன் டிரெண்ட்ஸ்' அழகு நிலைய உரிமையை, எக்மோர் பகுதியில் வாங்கி நன்முறையில் நடத்திக் கொண்டிருந்தார். அவரும் மகனும் தந்த ஊக்கத்திலும் உங்கள் ஒத்துழைப்பிலும் நானும் "க்ரீன் டிரெண்ட்ஸ்' அழகு நிலையத்தின் காட்டுப்பாக்கம் பகுதி உரிமையாளராக மாறிவிட்டேன். 49 வயதில் அதைத் தொடங்கி இன்று நன்முறையில் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

கவிதைகளின் மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

சிறுவயதிலிருந்தே தமிழின் மேல் பற்று அதிகம். அது அப்பா கொடுத்த சீர். நாட்குறிப்பேடுகளில் அவ்வப்பொழுது கவிதைபோல் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் தானாய் ஏற்பட்டது. வாசிப்பதும் அதிகரித்தது. நான்கு வருடங்களுக்கு முன்பு முகநூலில் கணக்கு துவங்கினேன். நிறைய கவிதைக் குழுமங்களின் தொடர்புகிடைத்தது. அவற்றில் ஒவ்வொரு கவிதையாகப் பதிவிட்டேன். அவைகளுக்கு கிடைத்த பாராட்டு எனக்கு ஊக்கம் தந்தது. எழுதும் உத்வேகம் பெருகியது. தொடர்ந்து எழுதி இன்று... அன்பின் கவிதைகள் (புதுக்கவிதை), நிலவோடு நான் (காதல் கவிதைகள்), துளிர்க்கும் மரம் (ஹைக்கூ) என மூன்று கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறேன். சமீபத்தில் "துளிர்க்கும் மரம்' இரண்டாம் பதிப்பும் வெளியாகிவிட்டது.

இல்லத்தரசியாக இருந்து தொழில் தொடங்கி நடத்தி வருவதுடன் இலக்கியப் பணியும் ஆற்றிவருவது சுமையாக இல்லையா?

நேரமாளுமையும் திட்டமிடலும் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்புமே என் சுமைகளைக் குறைத்து சிறகுகளைத் தருகிறது. இதற்கு முழுக் காரணம், எனக்குக் கிடைத்த. உங்களையும் அடக்கிய அன்புசூழ் உலகு. இலக்கை நோக்கிய பயணத்தில் வெளிச்சமாக எல்லோரும் இருப்பதால், நாட்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. .

கவிதையில் பலவித வடிவமைப்புகள் உண்டு.

அவற்றில், தன்முனைக் கவிதையின் மேல் உங்களுக்கு அதிக ஈர்ப்பு வந்ததற்கான காரணம் என்ன?

கவிதைகள் என்றாலே ஆர்வம்தான். நான் வடிவமைப்பு வேறுபாடுகளைக் காண்பதில்லை. ஆனாலும் தெலுங்கு "நானிலு' வடிவத்தைத் தழுவி தமிழில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் ஐயாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தன்முனைக் கவிதைகள் அதிகம் ஈர்த்தது. காரணம் எளிய சொற்களில் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் வீரியமாகவும் சொல்ல வரும் கருத்துக்களைச் சொல்வதே தன்முனைக் கவிதையமைப்பின் சிறப்பாகும். நான்கே வரிகள். வரிக்கு இரண்டு அல்லது மூன்று சொற்கள். உணர்வுகளின் குவியலாக இயற்கையின் போற்றுதலாக தன்முனைப் புடன் எழுதப்படும் கவிதைகள் நம்மை ஈர்ப்பதில் வியப்பேது. உதாரணமாக

Advertisment

விழுங்க வரும் இருளைத்

தன் அடியில்

இருத்திக் கொண்டது

லாந்தர் விளக்கு!

என்ற என் தன்முனைக்கவிதை பலராலும் பாராட்டப் பட்டது. இதுபோல் பல.

கவியுலகில் வேறு எம்மாதிரியான பணிகள் செய்து வருகின்றீர்கள்?

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் மற்றும் "தன்முனைக் கவிதைகள் குழுமம்' போன்ற முகநூல் கவிதைக் குழுமங்களில் நிர்வாகியாக இருந்து வருகிறேன். இக்கவிதைக் குழுமங்களின் மூலமாக உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான கவிஞர்களுக்கு உத்வேகம் தந்து அவர்களின் திறமை வெளியுலகிற்குத் தெரிய வழிவகுக்கிறோம்.

மேலும் ஆகச் சிறந்த கவிதைகள் பல எழுதியும் நூல் வெளியிட ஆர்வமிருந்தும் வெளியிட வகையறியா இயலா கவிஞர்களின் ஆசையினை நிறைவேற்றும் வகையில் அவர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் பணிகளையும் செய்து வருகிறோம்.

அவ்வகையில் கிட்டத்தட்ட பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களுக்கு தொகுப்பில் உதவியுள்ளேன். இதில் ஒரு தன்முனைக் கவிதை நூல் "வானம் தொடும் வண்ணத்துப்பூச்சி' இது கம்போடிய நாட்டில் அங்கோர்வாட் தமிழ்ச் சங்கத்தில் வெளியானது மகிழ்வான நிகழ்வு.

நீங்கள் பெற்ற விருதுகளைப் பற்றிக் கூறுங்கள்?

முகநூல் குழுமங்களின் வாயிலாகவும் தனியார் அமைப்புகளின் மூலமாகவும் பல சான்றிதழ்களும் விருதுகளும் பெற்றிருக்கிறேன். அங்கோர்வாட் தமிழ்ச் சங்கமும் கம்போடியா அரசும் இணைந்து வழங்கிய சர்வதேச பாரதியார் விருது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்பட்டறையும் இணைந்து நடத்திய பன்னாட்டு மாநாட்டில் பெற்ற கவிச்செம்மல் விருது, தன்முனைக் கவிதை குழுமம் வழங்கிய பன்னாட்டுச் சான்றிதழ் குறள்மலை பன்னாட்டு மாநாட்டில் வழங்கிய குறள்நெறிக் கவி சான்றிதழ் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கவியுலகம் சார்பிலும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். சமுதாயத்திற்கு ஏதேனும் சொல்ல விருப்பமா?

சொல்லவேண்டிய அனைத்தையும் வள்ளுவரைப் போன்ற நம் முன்னோர்கள் முன்பே தெளிவாகச் சொல்லிவந்திருக்கிறார்கள். .அவற்றை பின்பற்றினாலே போதும். எனக்கான வாழ்வியல் நோக்கமாக நான் கொண்டுள்ளது, நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். இயற்கையை விரும்புபவளாக... இலக்கிய ஆர்வமுடைய மழலை மணம் மாறாத என் பெயர்த்தி பிரவந்திகாவை நேசிப்பவளாக... யாரையும் எனக்கேற்ப தகவமைத்துக் கொள்ளாது, அவர்கள் அவர்களாகவும் நான் நானாகவும் வாழ்கிறேன். குடும்பமும் சமுதாயமும் இரண்டு கண்களாகவும் தமிழ் இலக்கியத்தை மூன்றாம் கண்ணாகவும் கொண்டு... எதிர்பார்ப்பு களற்ற வாழ்க்கையை வாழ்கிறேன். இதுவே இனியதென இன்புற்று இருக்கிறேன்.

காண்போரிடம் நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றினை இங்கு கூற விரும்புகிறேன். கல்வி கற்க ஆசைப்பட்டும் இயலா நிலையில் பல குழந்தைகள் இன்றும் அனாதை இல்லங்களிலும் சுற்றுப்புறங் களிலும் உள்ளனர். அவர்களில் நம்மால் இயன்ற வகையில் எதாவது ஒரு குழந்தைக்கு அடிப்படைக் கல்வி கிடைக்க உதவினோமானால் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டிய நிறைவு உங்களைச் சாரும். நானும் நீங்களும் நம்மால் இயன்றதைச் செய்துகொண்டு வருகிறோம். அதுபோல் நீங்களும் உங்கள் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உதவுங்கள் என்பதையே எல்லோருக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.