இனிய உதயம் வாசகர்களுக்கு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்?
என் பெயர் நான்சி. மதுரையில் பிறந்து வளர்ந்தவள்.
அம்மாவின் பெயர் மேரி. அப்பாவின் பெயர் ஆன்டணி. அப்பா மலையாளி என்பதால் அவருக்கு தமிழில் அவ்வளவாக எழுதத் தெரியாது. ஆனால் அழகாகத் தமிழ் பேசுவார். அதேசமயம் எனக்கும் என் அண்ணன் தம்பிகளுக்கும் தமிழ்மேல் பற்றுவரக் காரணமே அப்பாதான். எழுத்துக் கூட்டி வாசிக்கும் வயதில், நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்தியவர் அவர். என் அண்ணன் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே திருக்குறள் போட்டியில் கலந்துகொண்டு "திருக்குறள் நம்பி' என்ற பட்டம் வாங்கினார். இன்றளவும். எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் புத்தகம் வாசித்தல் என்பது சுவாசமாக இருக்கிறது. இப்போது... நான் பிசினஸ் உமனாகவும் இருக்கிறேன். இதற்கிடையே, புத்தகங் களிலும் நாளிதழ்களிலும் எனக்குத் தெரிந்த கருத்து களை எழுதி வருகிறேன். மதுரையில் பொற்கைப் பாண்டியனின் கவிதா மண்டலத்தில் நானும் ஓர் உறுப்பினராக உள்ளேன். கவிஞர் நர்மதா தொடங்கிய "பெண்' அமைப்பிலும் ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறேன். கல்லூரி மாணவர்களிடம் டாக்குமெண்டரி எடுப்பது பற்றிய எண்ணத்தில் இப்போது பேசி வருகிறேன். மன அழுத்தத்துடன் வரும் பெண்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன். என்னால் முடிந்த அளவு சமூக சேவையும் செய்து வருகிறேன். எல்லாம் என் கணவரான உங்களுடைய ஒத்துழைப்பால் சிறப்பாகச் செய்ய முடிகிறது. என் குடும்பமும் அன்புசூழ் உலகமாக இருக்கிறது.
உன் அன்புசூழ் உலகம் பற்றி?
இந்த அன்புசூழ் உலகத்தை மேலும் அன்பாக மாற்றியிருப்பது பேரப் பிள்ளைகள்தான். அவர்கள் வெளிநாட்டில் பிறந்து, படித்து, வளர்ந்ததால் தமிழில் பேசவும் எழுதவும் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அவர்களுக்கு தமிழ் மொழி புரிய வேண்டும் என்பதற்காக, அவர்களோடு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு பேசவும், அவர்களுக்குக் கதைகள் சொல்லவும் தொடங்கினேன். பேரப் பிள்ளைகள் வெகு தொலைவில் இருப்பதால், இப்போது அவர்களுக்குக் கதைகளைச் சொல்லி, அதை வீடியோவாக அனுப்பிக் கொண்டு இருந்தேன். வெளிநாட்டில் இருக்கும் என் உறவுகளில் இருக்கும் பேரப் பிள்ளைகளுக்கும், என் கதை வீடியோக்களை அனுப்புவேன். அதை அப்படியே, யூ டியூப் மூலமும் பதிவு செய்தால்.... கதை மீது ஆசையுள்ள குழந்தைகள் கேட்பார்களே என்று மகனும் மகளும் சொன்னதால், "கதை சொல்லும் ஆச்சி' என்ற தலைப்பில் அதை யெல்லாம் இப்போது யூ டியூப்பில் பதிவுசெய்கிறேன்.
"மீட் அண்ட் ஈட்' உணவகம் பற்றி...?
என் அப்பாவின் ஆசையும், மகனோட சிந்தனையுமே தொழில் தொடங்கக் காரணமாக அமைந்தது. சாப்பாடுதான் மனிதர்களின் முதல் அத்தியாவசியம். அதனால்.. உணவுத் துறையை தேர்ந்தெடுத்தேன், இதில் பலரின் மகிழ்வையும் மனநிறைவையும் பார்ப்பது மகிழ்வான அனுபவம். ரெஸ்டாரண்டு தொடங்குவதற்கு முன், சென்னையில் நான் பயிற்சி எடுத்துவிட்டுதான், மதுரையில் அதைத் தொடங்கினேன். அதனால்.. எங்கள் உணவகத்துக்கு பணிக்கு வருபவர்களுக்கு என் அனுபவங்கள் எல்லாவற்றையும் நான் சொல்லிக் கொடுத்து விடுவேன். ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் வந்துவிட்டு சிலர் சொல்லாமல் நின்றுவிடுவார்கள். உணவகம் என்பதால் வாடிக்கையாளர்கள் வந்துக்கிட்டே இருப்பாங்க. எனக்கு உணவு வகைகளைத் தயாரிக்கத் தெரியும் என்பதால்... நான் செய்து கொடுத்து விடுவேன். மதியம் 2 மணிக்கு மேல்... எனக்கு உதவ காலேஜ் படிக்கும் மாணவ- மாணவிகள் வந்துவிடுவார்கள். எனது மிகப்பெரிய பலமே அவர்கள்தான்
குடும்பம், உணவகம் இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது பற்றி..?
நான் நினைப்பதை எல்லாம் நினைத்த மாதிரியே சிறப்பாகச் .செய்ய முடியுதுன்னா அதற்கு நீங்கள்தான் முக்கிய காரணம். அதோடு மகன், மகளின் கருத்துகளும் செயல்பாடுகளும் ஒத்துழைப்பும் பக்கபலமாக இருக்கிறது. அடுத்து. என்ன செய்யனும்? யாரை சந்திக்கனும்? என்று முன்கூட்டியே நேரத்தை திட்டமிட்டு... அன்றாட வேலைகளை எழுதி வைத்துக் கொள்வேன். அதனால் எல்லாமே எளிதாக இருக்கிறது.
எதிர்காலக் கனவு?
பெரிய ஆசையெல்லாம் ஒன்றும் இல்லை. பேரப்பிள்ளைகளுடன் ஜாலியாக நேரத்தை செலவு செய்ய வேண்டும். அது போதும்.
இந்த வாழ்வும் தொழிலும் நிறைவைத் தருகிறதா?
உறுதியாக. இந்த வாழ்க்கை எனக்கு கிடைச்ச பெரிய வரம். அடிக்கடி நான் நினைத்து சந்தோஷப்படும் ஓர் விஷயமும் இதுதான்.
இந்த வியாபார உலகத்தில் தொழில்சார்ந்த இடர்ப்பாடுகளை சமாளிப்பது எப்படி?
பெரிய இடர்ப்பாடுகளை நான் சந்தித்ததில்லை. காரணம் எனக்கு அரணாக என் குடும்பமும் உறவுகளும் இருக்கிறது. அதே சமயம், ஒரு பெண் உயர்ந்த பதவியிலோ இடத்திலோ இருந்தால் ஆண்கள் சிலருக்கு பிடிக்காது. பெண் தானே என்று. ஏளனப் பார்வையோடு... பதில் சொல்வதோ...பேசுவதோ கிடையாது. பெண்களுக்கு வெளிஉலகம் தெரியாது அவர்களை எளிதாக ஏமாற்றலாம் என்று சிலர் நினைப்பார்கள்.
நான் அமைதியாக அழுத்தமாக தெளிவாக பதில் தரும்போது, அவர்களும் மரியாதையாக பேசத் தொடங்கிவிடுவார்கள். நமக்கு எது வேண்டும். வேண்டாம்... என்ற தெளிவு இருந்தால் போதும். எதையும் எளிதாக வெற்றிகண்டு விடலாம்.
இலக்கியத்தின் மீது ஆர்வம் எப்படி வந்தது? ஏன் இன்னும் கவிதை புத்தகம் போடவில்லை?
என் அம்மா, அப்பாதான் என் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். தமிழை எழுத்துக் கூட்டி வாசிக்கும்போதே... நிறைய புத்தகங்கள் எனக்கு அறிமுகமாயின. வளர வளர... நானும் அண்ணன் தம்பிகளும் புத்தக வாசிப்பில் எங்களைத் தொலைத்தோம். புதிதாக புத்தகம் வாங்கினால் அதை யார் முதலில் படிப்பது என்பதில் எங்களுக்குள் சண்டையே வந்துவிடும். அம்மா எங்களுக்கு தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுக்கும்போது, தேமா.... புளிமா என்று பாட்டுடன் சொல்லிக் கொடுப்பாங்க. கடையில் மடித்து தரும் சிறு பேப்பரையும் வாசிக்காமல் விடுவதில்லை. மதுரையில் அண்ணன் பொற்கைப் பாண்டியன் அவர்களின் கவியரங்கத்தில், கவிதைகளைக் கேட்கவும்...படிக்கவும்....எழுதவுமாக தமிழோடு நான் பயணித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் நூல் வெளியிடுவேன்.
ஏதேனும் இனிய அனுபவம்?
எங்கள் "மீட் அண்ட் ஈட்டில்' ஒரு சந்தோஷமான தருணம். "மதர்ஸ் டே' அன்று அங்கு வரும் கஸ்டமர்கள் அனைவருக்கும் ரோஜாப்பூவும் சாக்லேட்டும் கொடுத்தோம். அப்போது... குழந்தைகளோடு வரும் அம்மாக்களுக்கு குழந்தைகளின் கையால் பூக்களும் ஸ்வீட்டும் கொடுக்க வைத்தோம். இதுபோன்ற இனிய அனுபவங்களில் திளைக்கிறேன். எங்கள் உணவகம் வரும் குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி வைத்து...
அவர்களுக்கு பிடித்த உணவைக் கொடுத்து சாப்பிட வைத்ததும் சுகமான அனுபவம்தான். அதேபோல் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தருவார்கள். அவர்கள், அம்மா, அப்பா, ஆச்சி, தாத்தா, ஆண்டி...என்றெல்லாம் நம்மை உறவு முறை வைத்து பாசத்தோடு அழைப்பதே அலாதிதான்.
என்னிடம் பிடித்ததும் பிடிக்காததும்?
பிடிக்காதது... முன்கோபம். பிடித்தது... ரொம்பவும் எல்லாவற்றிலும் காட்டும் பொறுப்புணர்வு. அதேபோல் சேமிப்பு குணம், அனைவரிடமும் அக்கறை அன்பு இதெல்லாம் ஈடில்லாதது.