றத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.’

-என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

இதன் பொருள், அறத்தைப் போல் நன்மை தரக்கூடியது எதுவும் இலை. அதைப் போல் அறத்தைக் கைவிட்டால், அதைவிடத் தீமை தருவதும் எதுவுமில்லை என்பதாகும்.

Advertisment

அறத்திற்கு எதிராக நடக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட கனியாமூர் சக்தி பள்ளி நிர்வாகிகளைப் போன்ற, திமிர் பிடித்த அறக்கேடர்களுக்காகவே, வள்ளுவர் எழுதிய எச்சரிக்கைக் குறள் இது. அறத்தை மறந்து அராஜகமாகச் செயல்படும் கனியாமூர் சக்தி பள்ளியோ, தன் கொடூரப் படலத்தை இன்னும் அரங்கேற்றியபடியே இருக்கிறது.

அந்த வரிசையில் இப்போது அது, நம் நக்கீரன் நிருபர்கள் மீதே கொலைவெறித் தாக்குதலை நடத்தி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாகவே பார்ப்போம்.

prakash

Advertisment

*

கனியாமூர் சக்தி பள்ளியில் படித்துவந்த மாணவி ஸ்ரீமதி, ஜூலை 13 ஆம் தேதி, உடலில் காயங்களோடு, மருத்துவமனை மார்ச்சுவரியில் சடலமாகக் கிடத்தப்பட்டிருந்தாள். அவள் உடலின் அந்தரங்கப் பகுதிகளில் காயங்களும், உடம்பெங்கும் ரத்தம் கசிந்த தடயங்களும், உடையில் கிழிசல்களும் இருந்தன. ஆனால், பள்ளி நிர்வாகமோ, அங்குள்ள மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டாள் என்று அலட்சிய மாய்ச் சொன்னது.

மாணவியின் அம்மாவும் குடும்பத்தினரும் உறவினர்களும், ஸ்ரீமதியின் சடலத்தைப் பார்த்துவிட்டு, இது தற்கொலை அல்ல. கொலை என்று நீதிகேட்டுக் கதறினர். பள்ளியின் நடவடிக்கை ஒவ்வொன்றும் அனைவரின் சந்தேகத்தையும் அதிகப்படுத்தியது. அந்தக் கொலைபாதகப் பள்ளிக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினரின் ஆதரவும் சாதிரீதியிலான பலமும் இருந்ததால், அது, அடியாட்களின் துணையோடு மாணவி யின் மர்ம மரணத்தைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றது. உள்ளூர் காவல்துறையும் அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் கைகட்டி நின்றது.

அதனால் பொறுமையிழந்த அப்பகுதி மக்கள் நீதிகேட்டுப் போராடியபோது, அங்கே திட்டமிட்டுக் கலவரம் உருவாக்கப்பட்டது.

அதன் மூலம் நீதிகேட்டுப் போராடியவர் களை மிரட்டி அடக்கியதோடு, கைது நடவடிக்கையிலும் சிக்க வைத்தது பள்ளி நிர்வாகம். இந்த நிலையில்தான் மற்ற ஊடகங் களைப் போல் நமது நக்கீரனும், நடந்த உண்மையை அறிய, அங்கே புலனாய்வில் இறங்கியது.

எந்தப் பிரச்சினையையும், அரைகுறையாக விசாரித்துவிட்டு, நக்கீரன் அதைக் கைவிட்டது இல்லை. ஆட்டோ சங்கர் விவகாரம் தொடங்கி, பித்தலாட்டச் சாமியார் பிரேமானந்தா, வீரப்பன் விவகாரம், சங்கரமடம் செய்த சங்கரராமன் படுகொலை, போலிச் சாமியார் நித்தியானந்தா, பொள்ளாச்சி மன்மத விவகாரம், காவலர்களின் சாத்தான் குளக் கொடூரம் என நக்கீரன் களமிறங்கி, ஆதிமுதல் அந்தம் வரை புலனாய்வில் சாதித்த பட்டியல் மிகவும் நீளமானது.

அதேபோலத்தான், ஸ்ரீமதிக்கு உண்மையில் என்ன நேர்ந்தது? அந்த மரணத்தின் பின்னால் யார் யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடைதேட, நக்கீரன் பரபரப்பாகச் செயல்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்துவரும் காவல்துறையினருக்குப் பயன்தரும் வகையிலும் நக்கீரனின் புலனாய்வு நகர்ந்தது.

ajith

குறிப்பாக நமது நக்கீரனின் தலைமை நிருபரான தம்பி தாமோதரன் பிரகாஷ், பிரச்சினை தொடங்கியதில் இருந்தே, கள்ளக்குறிச்சிப் பகுதியிலேயே வட்டமடித்து, மாணவி மரணம் குறித்த பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தி வந்தார். இதன்பிறகு தான் பள்ளி நிர்வாகி ரவிக்குமார், அவர் மனைவி சாந்தி உள்ளிட்ட ஐந்துபேர் பள்ளித் தரப்பில் கைதுசெய்யப்பட்டனர். எனினும் அவர்கள், தங்கள் செல்வாக்கால் உடனே வெளியேவரத் துடித்தனர். நக்கீரனின் புலனாய்வுத் தகவலால், அவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதனால் மிரண்டுபோன சக்தி பள்ளித் தரப்பு, நம் நிருபர் தம்பியைப் பேரம் மூலம் வளைக்கமுயன்றது. எதற்கும் அடிபணியாத நம் நிருபர், அந்தப் பள்ளியில் ஏற்கனவே நடந்த குற்றச் சம்பவங்களையும் தோண்டி எடுத்து, முன்னிலும் வேகமாக அம்பலப் படுத்தினார். இதனால் அவரது உயிருக்குக் குறிவைத்தது அந்தக் கொலைகாரப் பள்ளி.

*

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த சக்தி பள்ளியில் புனரமைப்புப் பணிகள் நடப்பதை அறிந்த நமது நிருபர் பிரகாஷும், போட்டோகிராபரான தம்பி அஜித்தும் கடந்த 19-ஆம் தேதி மாலை 5 மணியளவில், அங்கு சென்று, அந்தப் பள்ளியை வெளி யிலிருந்தே படம் எடுத்தனர். அப்போது, பள்ளித் தரப்பு வில்லன்களில் ஒருவரும், தாளாளர் ரவிக்குமாரின் தம்பியுமான அருள்சுபாஷ், இவர்களை நோட்டம்விட்டிருக்கிறார்.

அதோடு, பரபரப்பாக அங்கே இருந்து வெளியே புறப்பட்டிருக்கிறார்.

இதை கவனித்த பிரகாஷ், ஏற்கனவே அவர்கள் தரப்பு தாக்கத் திட்டமிட்டதால், அருள்சுபாஷ் ஏதாவது ஏடாகூடம் பண்ணலாம் என்று யூகித்து, போட்டோகிராபரை அழைத்துக்கொண்டு, தான்வந்த காரில் ஏறியிருக்கிறார். கார் கொஞ்ச தூரம் நகர்ந்த நேரத்தில், அருள்சுபாஷ் ஒரு காரில் பின் தொடர, அவரோடு கவுன்சிலர் ராஜசேகர் என்பவரும் டூவீலரில் அங்கே வந்திருக்கிறார். திடீரென அந்த ராஜசேகர், பிரகாஷின் காரை வழிமறித்து, தனது டூவீலரை நிறுத்துகிறார். அவர்கள் முகத்தில் கொலைவெறி.

வந்தவேகத்தில் முதலில் போட்டோகிராபர் அஜித்தை அந்த ராஜசேகர் தாக்க முயல்கிறார். இதைப்பார்த்துப் பதறிப்போன பிரகாஷ், "ஏன் அடிக்கவர்றீங்க?' என்று கேட்க, அந்த ராஜசேகரோ "என்னைப் பத்தியும் மகாபாரதி பள்ளி மோகனைப் பத்தியும் ரவிக்குமார் பத்தியும் நியூசாடா எழுதறீங்க?'ன்னு சத்தம் போட்டதோடு போட்டோ கிராபரைத் தாக்கி, அவர் சட்டையைக் கிழிக்கிறார்கள். சுதாரித்துக்கொண்ட பிரகாஷ் காரை, உடனடியாக ரிவர்ஸில் எடுத்து, வேகமாக அங்கிருந்து கிளப்புகிறார்.

அடுத்து அவர் ஆத்தூரை நோக்கிக் காரை செலுத்துகிறார். பத்து பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தலைவாசலை நெருங்கிய நிலையில், யாரும் தங்களைப் பின்தொடர்ந்து வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, பிரகாஷும் அஜித்தும் தேநீர் குடிக்கலாம் என்று ஒரு கடை அருகே காரிலிருந்து இறங்கமுயல்கிறார்கள்.

அப்போது, திடீரென எங்கிருந்தோ பைக்குகளில் வந்து இறங்கிய ராஜசேகரும் அவர் சகாக்களும், நம் நிருபர் டீமை சுற்றிவளைக்கிறார்கள். ஒரு காரில் அருள்சுபாஷும் அங்கே இருக்கிறார். அப்போது நிருபர்கள் வந்த காரின் பின் கதவைத் திறந்து, அதில் ஒரு ஆள் ஏற முயற்சிக்கிறான். "நாங்க சொல்ற இடத்துக்கு காரை ஓட்டு.. இன்னைக்கு உங்களை என்ன பண்றோம் பாருங்கடா' என்று அவர் கத்துகிறார். உடனே அங்கிருந்து காரை பிரகாஷ் ஸ்டார்ட் செய்யும்போது, அந்தக் கும்பல், போட்டோகிராபர் அஜித்தை வெறியோடு தாக்குகிறது. அவர் கையிலிருந்த செல்போனைப் பிடுங்க, தள்ளுமுள்ளு நடக்கிறது. அந்த வில்லன்கள், முகத்தில் விட்ட குத்தில், அஜித்தின் ஒரு பல் பெயர்ந்து விழுகிறது. வாயிலிருந்து ரத்தம் கொட்டுகிறது.

ddஉடனே அவர்கள் என்னை அங்கிருந்தே தொடர்புகொண்டு, அந்தக் கும்பல் தங்களைத் தாக்குவதாக சொல்கிறார்கள். இதைக்கேட்டுப் பதறிப்போன நான், அவர்களிடம் இருந்து தப்பிக்க, ஆத்தூரிலோ, தலைவாசலிலோ... அருகே இருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு விரைவாகச் செல்லும்படி கூறினேன். அப்போது, ’அடிக்கிறாங்க... அடிக்கிறாங்க’என்று, அஜித் கதறுவது எனக்குக் கேட்கிறது. அதைக்கேட்டு என் நெஞ்சம் மேலும் பதைக்கிறது வேகமாக போலீஸ் ஸ்டேசன் போகும்படி அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன். தாக்குதலை சமாளித்துக்கொண்டு பிரகாஷ் காரை தலைவாசலை நோக்கிச் செலுத்துகிறார். துரத்திவந்த அந்தக் கும்பல், தலைவாசல் மார்க்கெட் பகுதியில் காரை நான்குபுறமும் சூழ்ந்து வழிமறிக்கிறது. காரிலிருந்து நம் நிருபர்களை இறங்கச் செய்து, இருவர் மீதும், அவர்கள் கொலைவெறித் தாக்குதலை நடத்துகிறார்கள். அப்போது அருகில் வேன் ஸ்டாண்டில் இருந்தவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சில தோழர்களும், இதைக் கவனித்துவிட்டு அங்கே ஓடிவருகிறார் கள். அதன் பின்னரே தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கிறது.

சக்தி பள்ளி ஆட்கள்தான் நம் நிருபர்களை இப்படி கொடூரமாகத் தாக்கினார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அவர்கள், பக்கத்தில் இருந்த தலைவாசல் காவல் நிலையத்துக்கு நம் நிருபர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

நம் நிருபர்களைத் தாக்கிய ராஜசேகர் உள்ளிட்ட அந்தக் கும்பலும் காவல் நிலையத்துக்கே தைரியமாக வந்து, தங்கள் வாகனம் ஒன்றை நம் நிருபர்களின் கார் உரசிவிட்டு வந்ததால் தான் தாங்கள் துரத்திவந்ததாகக் கதை அளந்திருக்கிறது. உடனே அங்கிருந்த போலீஸார், "நீங்கள் சம்பவம் நடந்த லிமிட்டுக்கு உட்பட்ட சின்னசேலத்தில் போய் புகார் கொடுங்கள்' என்று சொல்ல, அந்தக் கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறது.

*

இதற்கிடையே, நம் நிருபர்கள் அங்கே நிர்கதியாய்த் தாக்கப் பட்டது குறித்து, காவல்துறை ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், ஐ.ஜி. சுதாகர் உள்ளிட்டவர்களின் கவனத்திற்கு நான் கொண்டு சென்றேன். இதைத் தொடர்ந்தே தாக்குதலில் ஈடுபட்ட கவுன்சிலர் ராஜசேகர், உள்ளிட்ட அடியாட்கள் ஐந்துபேரையும் அன்று இரவே காவல்துறை கைது செய்திருக்கிறது. அதற்கு ஒரு சபாஷ்! இதன் பின்னர், நம் நிருபரையும் போட்டோகிராபரையும் விசாரித்த சின்ன சேலம் போலீஸ், அவர்களை ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க, தாக்குதலுக்கு ஆளான நம் நிருபர் தம்பிகளை மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தோம்.

சக்தி பள்ளியின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தச் சென்ற நமது நக்கீரன் நிருபர்களையே, அவர்கள் கொலைவெறிகொண்டு தாக்குகிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் எப்படிப் பட்டது? அவர்களுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்தது? இப்படித் தாக்கினால் மற்ற ஊடகத்தினர் மிரண்டுபோய் பின் வாங்கிவிடுவார் கள் என்பதுதான், அந்தக் கொலை பாதக வில்லன்களின் திட்டம்.

சக்தி பள்ளி ரவிக்குமாரின் தம்பியான அருள்சுபாஷ், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பது குறித்து காவல்துறையிடம் தெரிவித்தும், அந்த கொடூர வில்லனை போலீஸ் இன்னும் கூட நெருங்கவில்லை. பேருக்குக் கூட விசாரிக்கவில்லை.

school

அதேபோல் பலபேர் சந்தேகம் தெரிவித்தும் ஸ்ரீமதி மரணம் குறித்து, சக்தி பள்ளி ரவிக்குமாரின் மகன்களையும் காவல்துறை இன்னும் விசாரிக்க முயலவில்லை. காரணம், அந்த அளவிற்கு சக்தி பள்ளி நிறுவனரையும் அவர் குடும்பத்தினரையும், பாதுகாப்புச் சுவர் எழுப்பி காவல்துறையே பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

அனைவரையும் எங்களால் எங்கள் விருப்பத்திற்கு வளைக்க முடியும் என்று கொக்கரித்துக்கொண்டே இருக்கிறது சக்தி பள்ளி.

இவர்களை யார் நழுவவிட்டாலும், அறமும் தர்மமும் பழி வாங்காமல் விடாது.

இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். நக்கீரன் எந்த விசயத்திலும் முன்வைத்த காலை, எக்காரணம் கொண்டும் பின் வைத்ததில்லை. இதற்கு மாணவி ஸ்ரீமதி விவகாரமும் விதிவிலக் கல்ல.

இன்னும் எவ்வளவு அடக்குமுறையை எதிர்கொள்ள நேர்ந் தாலும், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சு களை நக்கீரன் அவிழ்த்தே தீரும். ஸ்ரீமதியின் மரணத்துக்குக் காரண மான குற்றவாளிகளை குற்றக்கூண்டில் ஏற்றாமல் நக்கீரன் ஓயாது.

*

அதே நேரம், நக்கீரன் நிருபர்களைத் தாக்கிய குண்டர்களை உடனடியாகக் கைதுசெய்த காவல்துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல் நம் நிருபர்கள் தாக்கப் பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பல்வேறு ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டங் களை நடத்திய பத்திரிகையாளர் சங்கத்தினருக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் தோழமையோடு கூடிய நன்றி.

எத்தகைய இடையூறுகள் வரினும், அநீதிக்கு எதிரான நக்கீரனின் துணிச்சலான புலனாய்வுப் பயணம், எப்போதும்போல் தொடரும்.

-நிமிர்வோடு,

நக்கீரன்கோபால்