கூத்துப்பட்டறை ந.முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தியை அக்டோபர் 24 மதியம் முகநூலில் பார்த்தேன். அடுத்த சில நிமிடங்களிலேயே முகநூல் முழுக்க அவருக்கான அஞ்சலிகள் பரவலாக நிரம்பி வழிந்தன. ஓர் இரவு கடந்து மறுநாள் காலை அவருக்கு அஞ்சலி செலுத்த கூத்துப்பட்டறை அமைந்திருக்கும் சென்னை நடேச நகருக்குள் சென்றேன். நுழையும் இடத்தில் இருந்தே பல கலைக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் தாரை, தப்பட்டை, நாயனம், பேண்ட் முதலான இசைக்கருவிகளோடு வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அவர் இல்லத்தை நெருங்கினேன். இருநூற்றுக்கும் மேலானவர்கள் கையை கட்டிக்கொண்டு உறைந்த முகத்தோடும் நின்றிருந்தனர். இது இயல்பாக எல்லா மரணங்களுக்கும் நிகழக்கூடியதுதானே என நினைக்கலாம். ஆனால் துக்கம் கேட்க வரும் உறவுகள் நண்பர்கள் போல் அல்ல அங்கு நின்றவர்கள். பெரும்பாலும் 20 முதல் 30 வயது கொண்ட இளைஞர்கள்.
தமிழின் முக்கியமான எழுத்துக் கலைஞர் கோணங்கி முதல் கலை இலக்கிய உலக ஆளுமைகளும் அங்கு கூடியிருந்தனர். உள்ளே கண்ணாடிப் பெட்டிக்குள் தன் பிரம்மாண்ட உடலை நீட்டிக்கொண்டு நிரந்தர துயில் கொண்டிருந்தார் ந.முத்துசாமி. இறக்கும்போது வயது 82 என்று சொன்னார்கள்.
வயது முதிர்ச்சி கொண்ட ஒருவருக்கு நூற்றுக்கணக் கான இளைஞர்கள் மௌனமாக உறைந்து கைகட்டி அஞ்சலி செலுத்துவது என் பார்வையில் முக்கியமான ஒன்றாகத் தோன்றியது.
தொண்ணூறுகளில் நடிகரும், இயக்குனருமான நாசர் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்தபோது முதன்முதலாக கூத்துப்பட்டறை என்ற பெயர் காதில் விழுந்தது. அதுவரை கோவில் திருவிழாக்களில் பார்த்த வள்ளித்திருமணம், பவளக்கொடி முதலான மரபான நாடகங்களை மட்டும் ஊரில் பார்த்திருக்கிறேன். ஆனால் "அவதாரம்' படத்தில் பணியாற்றியபோது நாசர் அப்படத்தில் நடித்த கலைராணி முதலியோர் நவீன நாடகம் என்ற வார்த்தையை உச்சரித்தனர். அதுவே புதுக்கவிதை என்ற சொல்போல் எனக்குப் புதுமையாக இருந்தது.
சினிமா என்பது நாடகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி என்றாலும் நாடகத்துடனான தொடர்பை முற்றிலும் விலக்கிக் கொண்ட ஒன்றாக பாவனை செய்துகொண்டிருப்போரும் அங்கே உண்டு. "இது என்ன டிராமாவா...' என்று தரக்குறைவாக நாடகத்தை பேசும் குரல்களையும் கேட்டிருக்கிறேன். அதனால் இந்த 'நவீன நாடகம் 'என்ற சொல்லாட்சி கவர்ச்சிகர மான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அது தமிழின் தொன்மையான கலையான கூத்துடன் இணைக்கப் பட்டது என்று அறிந்ததும் அதன் மீதான ஆர்வம் கூடியது. "அவதாரம்' படப்பிடிப்பும் கூத்துக்கலை சம்பந்தமாகவே இருந்தது. அதுதான் கூத்துப் பட்டறையை நான் அறியவும் காரணமாக இருந்தது.
அந்தக் கூத்துப்பட்டறை கலைஞர்களை அழைத்து திரைப்படத்தில் பயன்படுத்தினார் நாசர். பசுபதி இப்படித்தான் சினிமாவுக்குள் நுழைந்தார். இப்போது விஜய் சேதுபதி, விதார்த், இன்னும் பலர். முக்கியமான ஒன்று என்னவென்றால் இப்போது சினிமாவில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் முதலில் செய்வது கூத்துப்பட்டறைக்கு அனுப்பி நடிப்பு பயிற்சி பெறச் சொல்வதுதான். ஆம்... நாடகப் பயிற்சி செய்யும் அங்கிருந்துதான் உடல் மொழியில் சிறந்த நடிகர்களைப் பெறமுடியும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
இதற்கான மூலவர் ந. முத்துசாமி. அவரோடு எனக்கு நேரடி பழக்கமில்லை. ஆனால் அவரது மாணவர்களில் ஒருவரான முத்துக்குமார், இயக்குனர் லிங்குசாமி அலுவலக மொட்டை மாடியில் லிங்குசாமியின் அண்ணன் மகன் வினோத்திற்கும், வேறு சிலருக்கும் நடிப்புப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு சில காட்சிகளை உருவாக்கி கொடுக்கப்போய், அப்பயிற்சி விளையாட்டாக இருப்பதைப் பார்த்து, தினமும் அதில் நானும் கலந்துகொண்டேன். நடிப்புக் கலையை அழகழகான முறைகளால் எளிதாக வகுப்பெடுத்தார் முத்துக்குமார். எல்லாம் கூத்துப்பட்டறையில் கற்றுவந்த முறை என்று அறிந்தேன்.
குரல் பயிற்சி, நடைப் பயிற்சி, முகபாவப் பயிற்சி, பார்வைப் பயிற்சி என ஒவ்வொன்றும் சிறப்பான ஒன்றாக இருந்தது. இவற்றின் மூலம் எண்ணற்ற நடிகர்களை உருவாக்கி இருக்கிறது கூத்துப்பட்டறை. அதன் பிதாமகன் ந. முத்துசாமி. அவருக்கு அஞ்சலி செலுத்தவே இவ்வளவு இளைஞர்கள்.
கிராமப்புறங்களில் இருந்து வந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் குழுக் குழுவாக வந்து இசை அஞ்சலி செலுத்தினர். தாரைத்தப்பட்டை முழங்கி ""தமிழ் நாடகக் கலையின் முன்னோடி; கிராமப்புறக் கலைஞர்களுக்கு ஒரு மரியாதையையும் அங்கீகாரத் தையும் உருவாக்கிக் கொடுத்தவர்; உலகமெல்லாம் தமிழின் தொன்மையான கூத்து மரபை எடுத்துச் சென்றவர்; நவீன நாடக பிதாமகர் ந.முத்துசாமி அவர்களின் பணிகளைப் பாராட்டி, அவரை வாழ்த்தி, அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாத ஒன்று என்று கூறி அவருக்கு எங்களுடைய குழுவின் சார்பாக அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்'' "டண்..டண்..டண்' என்று மீண்டும் கருவிகளை வாசித்தபோது அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அணை உடைத்து பொங்கிவிட்டது. அருகில் முத்துசாமி அவர்களின் புதல்வர் இருந்தார். இயல்பாக பேசுவது போல் "நல்லா வாழ்ந்துதான் போறார்' என்று சில நொடிகளுக்கு முன் எனக்கு ஆறுதல் கூறியவர் இப்போது முகம் கோணி அழத் தொடங்கிவிட்டார். இதுபோல் எத்தனை ஊர்களிலிருந்து எத்தனை குழுக்கள்.
ஒரு கலையின் அடையாளமாக, மீட்டுருவாக்கமாக, மரியாதையைத் தேடிக் கொடுத்தவராக, ஆக்க சக்தியாக, ஊக்க சக்தியாகத் திகழ்ந்த அந்த மாபெரும் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் மாலைகள் மட்டும் இரண்டு குட்டி யானைகள் நிரம்ப ஏற்றப்பட்டிருந்தது. எவ்வளவு பரந்துபட்ட பாதிப்பை நிகழ்த்தியிருந்தார் என்பதை அறியமுடிந்தது.
மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் இயல்புதான். ஆனால் கலைஞர்கள் தங்கள் கலையை தங்கள் பிரதிநிதிகளான சிலரிடம் ஒப்படைத்துவிட்டுப் போவதால் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள் என்று சொல்வார்கள். இவரோ சிலருக்கு அல்ல பலருக்கு, தன்னை நாடி வந்த அனைவருக்கும் தன் கலையை வழங்கினார். அவரது வாழ்க்கை ஒரு தவம். அதன் பலனான வரத்தை அவர் தனக்கென வைத்துக் கொள்ளவில்லை. பகிர்ந்தளித்து விட்டார் என்பதைத் தான் அவரது இறப்பின்போது கூடிய கூட்டம் சொன்னது.