நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். அப்போதெல்லாம் நீதி போதனை வகுப்பென்று ஒன்றிருக்கும். இப்போது அது தேவையற்ற ஒன்றாகிவிட்டது என்பது வேறு விஷயம். அந்த நீதி போதனை வகுப்புகளில் ஓர் ஆறுதல். ஆங்கிலமோ, தமிழோ, சரித்திரமோ, பூகோளமோ, கணக்கோ, அறிவியலோ கண்டிப்பாக அந்த நேரம் மட்டும்தான் இருக்காது . ‘பாடம் நடத்தாத வாத்தியார்கள்’அன்று மாணவர்களுக்கு நண்பர்களாகத் தெரிவார்கள். பொதுவான விஷயங்களைப் பேசுவார்கள். கதையளப்பார்கள். மாணவர்களாகிய எங்களோடு கலந்து கொள்வார்கள். அந்த வகுப்பை நான் ஆர்வத்தோடு அப்படி வரவேற்பேன், ரசிப்பேன். ஒருநாள் நீதி போதனை வகுப்பு எடுக்கும் நடராஜ பிள்ளை சார்வாள் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
‘‘இதயம் உன்னிடம் என்ன கேட்கும்?”என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. ஒவ்வொருவரும் எழுந்து பதில் சொல்லத் தொடங்கினோம். ‘‘இதயம் மற்றவர்களிடம் அன்பு காட்டச் சொன்னது”என்றான் ஒருவன். ‘‘கருணை காட்ட வேண்டும் என்றது”என்றான் இன்னொருவன். ‘‘சுத்தமாக இருக்க வேண்டும் என்றது”என்றான் அடுத்தவன். ராதா (அப்போது ராதாதான் இப்போதுதான் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்) ‘‘இதயம் உன்னிடம் என்ன கேட்டது?”என்றார். சற்றும் யோசிக்காமல், ‘‘இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னது”என்றேன். அன்று யாரும் சொல்லாத பதிலைச் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்னேனோ இல்லையோ அப்படியே ஆகிவிட்டேன். காலை 5 மணிக்கு எழுந்தது முதல் (அதுவும் தலையில் தண்ணீரை ஊற்றி அப்பா எழுப்புவார்) இரவு படுக்கப் போகிறவரை படிக்கவேண்டும் என்பதில் தொடங்கி ஏதாவது வேலைகள் செய்து கொண்டேயிருக்க சபிக்கப்பட்டவனாக இருந்தேன். இப்போதும் அப்படியே இருப்பதை சபிக்கப்பட்டவனாக அல்ல ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதச் செய்திருக்கிறது.
காலையில் எழுந்ததும் சிறு உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, காலைக்கடன்கள் முடிந்து இறைவழிபாடு, செய்திப் பத்திரிகைகள் வாசிப்பு, இன்றியமையாத சில தொலைபேசி அழைப்புகளை ஏற்பது, பேசுவது, காலை உணவு முடித்து பத்து பத்தரை மணிக்கெல்லாம் ஏதோ அலுவலகத்திற்குப் போய் வெட்டிமுறிப்பதுபோல தினமும் தயாராகிவிடுகிறேன்.
எனக்கிது பழகிப்போய்விட்டது. உற்சாகமாக இருக்கிறது. ஆனால் பாவம் என்னைப் போலவே வயதில் முதிர்ந்து (5 வயதுதான் குறைவு) என்னைவிடக் களைத்துப்போயிருக்கும் என் சகபயணியான துணைவிதான் பாவம் அதிகம் சிரமப்படுகிறார். ‘‘தினமும் எதையோ வெட்டி முறிக்க ஆபீஸ் போகிற மாதிரியே படுத்தறீங்களே”என்று அவள் முணுமுணுப்பதைக்கூட கண்டுகொள்ளாமல் இயங்குகிறேன். சில நேரம் அவளுக்குத் தோன்றும் (எனக்கும்கூடத் தோன்றும்) “இனி என்ன வேண்டிக்கிடக்கிறது, கடமைகளை எல்லாம் முடித்தாகிவிட்டது. பேசாமல் ஓய்வெடுக்கலாம், படிக்கலாம். பத்திரிகை நடத்துவது, விழாக்கள் எடுப்பது, நண்பர்களுக்கு உதவுவது, பொதுப்பணிகளில் ஈடுபடுவதென்று நாள் முழுதும் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறைத்துக்கொண்டு, ஓய்வெடுக்கலாமே என்று மனைவி மட்டுமல்ல பிள்ளைகளுமே ஆதங்கப்படுகிறார்கள். ஆனால் மாக்கவி பாரதி அனுமதிக்க மறுக்கிறான்.
எமக்குத் தொழில் கவிதை
நாட்டுக்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்.
இயங்குவது நம்மை நலமாக வைத்திருக்கிறது என்பது மட்டுமல்ல உற்சாகமாக இருக்கச் செய்கிறது. நமது முன்னோர்களும் ஓய்விலாது தானே உழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள்! மகாத்மா காந்தியடிகள்கூட “ஓய்வென்பது படுத்துத் தூங்குவது அல்ல இன்னொரு பணியில் ஈடுபடுவதே”என்றும் ஒரு பணியில் நமக்குக் கிடைக்கும் ஓய்வு என்றும் கூறுகிறார்.
நிகழ்ச்சியொன்று நினைவுக்கு வருகிறது. அமெரிக்கத் தொழிலதிபர் கோடீஸ்வரர் ராக்ஃபெல்லர் விமானத்தில் தனியே பயணித்துக் கொண்டிருக்கிறார். அவர் அருகில் அமர்ந்திருந்த ஒருவர், ‘‘போதுமான அளவு சம்பாதித்துவிட்டீர்கள். நிறுவனத்தையும் நிலைப்படுத்தியாயிற்று. பேசாமல் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டியதுதானே”என்றபோது, ‘‘இந்த விமானம் தரையில் ஓடி வானத்தில் ஏறிப்பறந்து கொண்டிருக்கிறது. வானத்திற்குத் தான் வந்துவிட்டோமே என்று அதன் எந்திரத்தை நிறுத்திவிடலாமா? அப்படித்தான் மனித வாழ்வும், ஓடிக்கொண்டே பறந்துகொண்டே இருக்க வேண்டும். இந்த மனித எந்திரத்தை நிறுத்திவிடக்கூடாது”என்றாராம்.
தந்தை பெரியார்கூட சமூக மாற்றத்திற்கான தமது முன்னெடுப்பில் தம் ஆயுளை முழுமையாக அர்ப்பணித்திருந்தது அவரது சிறப்பு, தள்ளாதவயதிலும் தன்னை ஓய்வுக்குள் தள்ளிக்கொள்ளாது கட்டுப்படாத சிறுநீரைக்கூடப் பாத்திரத்தில் ஏந்தியவண்ணம் பயணித்தவர் அவர். அவரது மரணம்கூட அவர் சைதாப்பேட்டையில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்ததே தவிர ஓய்வு நாற்காலியிலோ, படுக்கையிலோ நிகழவில்லை. தந்தை பெரியாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் பலவற்றில் இதுவுமொன்று.
செய்வதற்கான வேலை இருக்கிறபோதுதான் ஒருவன் வளர்ந்து கொண்டிருக்கிறான் என்று ஓர் ஆங்கில அறிஞர் கூறுகிறார். நான் எல்லாவற்றையும் முடித்துவிட்டேன் என்பவன் முடிந்துவிட்டான் என்று பொருள். இன்றைக்கும் கிராமங்களில் வயோதிகர்கள் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டிருப்பார்கள். தொழிலதிபர்கள், செல்வந்தர்கள்கூட தமது தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் போய் அமர்ந்திருப்பார்கள். நான் பெரிதும் மதிக்கிற பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் காலை பத்து பதினோரு மணிக்கெல்லாம் கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். அவரது முகம் பார்த்து மகிழவே பல வாடிக்கையாளர்கள் நண்பர்கள் வருவர். பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள், ஊழியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அந்த எண்பது வயது இளைஞர் நினைப்பதே இல்லை.
மற்றுமோர் எடுத்துக்காட்டு அண்ணாச்சி வி.ஜி. சந்தோஷம். தொழில், வணிகம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கப் பணிகளில் அத்தனை உற்சாகமாக ஈடுபடுவதும், இயக்குவதும் அவரை இளமையாகவே வைத்திருக்கி றது. ஊரெங்கும், உலகெங்கும் திருவள்ளுவர் சிலைகளை அனுப்புவது அவரது அன்றாடப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகளே
இல்லை எனுமாறு ஓய்வை உதாசீனப்படுத்துகிறார்கள் என்பது வியப்புக்கும், வாழ்த்துக்குமான வாழ்க்கையாகிவிட்டது.
நிர்வாகத்திலும், வாழ்வியலும் இலக்கு குறித்தல் என்பது இன்றியமையாப் பண்பாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான இலக்குகள் பலருக்கு ஆசைகளாகத்தான் இருக்கின்றன. “அடைந்தால் மகாதேவி அல்லது மரணதேவி”என்று பி.எஸ். வீரப்பா பேசுகிற வசனம் அவரது ஆசையின் வெளிப்பாடேயன்றி அதை இலக்கென்று ஏற்கமுடியாது. இலக்குகள்கூடப் பலருக்கு எட்டிய பிறகு முடிவடைந்து விடுவதாக அமைந்துவிடும். போய்ச் சேரும் இடத்தைவிடப் பயணம்தான் இனியது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். “நான் எல்லைகளை வெறுக்கிறேன்”என்பார். தொட்டுவிடுவதோடு வேலை முடிந்தது என்று விட்டுவிடுவது வெற்றியல்ல; தொடர்ந்து இயங்கவேண்டும் அதுதான் வெற்றி.
நம்மில் பலர் தாம் பெற்ற வெற்றிகளைக் கொண்டாடுவதிலேயே நேரத்தைக் கழிப்பார்கள். விளையாட்டில் ஒரு பகுதி என்பதாகத்தான் வெற்றிகளும், தோல்விகளும் நம் வாழ்க்கையில் அமையவேண்டும். அப்துல் கலாம், " தொடர்ந்து இயங்கவேண்டும், வெற்றி பெறவேண்டும். நமது சாதனைகளை நாமே முறியடிக்க வேண்டும். தொடர்ந்து வெற்றிபெறாமல் ஒருமுறை மட்டும் பெற்றால் அது அதிர்ஷ்டத்தாலோ, தற்செயலாகவோ நிகழ்ந்ததாகத் தான் பிறருக்குத் தோன்றும்”என்பார். எனவே தொடர்ந்து வெற்றிபெற தொடர்ந்து இயங்க வேண்டும்.
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தார் என்றும் இந்தியாவை வாஸ்கொடகாமா கண்டுபிடித்தார் என்றும் நம் கரும்பலகைக் காலத்திலிருந்தே கதைவிட்டுக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவும், இந்தியாவும் அப்படியேதான் அப்போதும் இருந்திருக்கின்றன. கொலம்பஸும், வாஸ்கொடகாமாவும் சலிக்காமல் தொடர்ந்து பயணித்திருக்கிறார்கள். வந்து சேர்ந்திருக்கிறார்கள் அவ்வளவுதான். தொடர்ந்த இயக்கம் அவர்களுக் குத் தந்த புகழ் இது என்பதை யார் மறுக்கப் போகிறார்கள்?
எந்தப் பணியை மேற்கொண்டாலும் முதலாவதாக இருக்க வேண்டும் என்பது வழக்கமாக நமக்குத் தரப்படும் அறிவுரை. ஆனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நான் பேசப் போகும்போது முதலாவதாக இருப்பது முக்கியம்தான். ஆனால் எதிலும் முழுமையாக இருக்க வேண்டும் என்று மாணவச் செல்வங்களுக்குச் சொல்வேன். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் முன்வரிசையில் அமர்ந்திருக்கிற மாணவர்கள் அவர்களின் உயரத்தின் அடிப்படையில் அல்லது அகரவரிசையில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். எதற்கெடுத்தாலும் முந்திரிக் கொட்டைகளாக அவர்களில் சிலர் எழுந்து எழுந்து தம் மேதாவிலாசத்தைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அமைதியாகக் கடைசி வரிசையில் இருக்கிற மாணவர்கள்தான் தேர்வுகளில் முதலாவதாக வருவார்கள்.
பலருக்குத் தெரிந்த செய்திதான். மகாகவி பாரதி கவிதைப் போட்டி ஒன்றில் கலந்துகொள்கிறார். அப்போட்டிக்காக அவர் எழுதிய ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’என்ற பாடல் இரண்டாவது பரிசினைப் பெற்றது. அன்று முதற்பரிசு பெற்ற கவிஞர் இன்று தமிழில் அத்தனை பிரபலமில்லை காரணம் அவரைவிட பாரதியே கவிதையாகவே வாழ்ந்தும், கவிதையிலே இருந்ததுமான முழுமையான ஈடுபாடுதான். எதிலும் முதன்மையாக இருப்பதற்கும் முழுமையாகத் திகழ்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பது புரியவேண்டியவர்களுக்குப் புரியும்.
வெற்றியாளர்கள் இது உன் வேலை என் வேலை என்று பிரித்துக்கொள்வதில்லை. எந்தப் பணியையும் கேவலமாக கருதுவதுமில்லை. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்ற நேரம். அவரைக் கேவலப்படுத்தவேண்டும் அசிங்கப்படுத்த வேண்டும் என்று கருதிய ஒரு வெள்ளைக்காரப் பிரமுகர், “இதோ நான் அணிந்திருக்கிற காலணி உங்களுடைய தந்தை எனக்குத் தைத்துத் தந்தது”என்றாராம் கேலியாக. சிறிதும் சலனப்படாத லிங்கன் அவரைப் பார்த்து, “மகிழ்ச்சி இந்தக் காலணி பழுதுபட்டால்கூட நீங்கள் என்னிடம் கொண்டுவரலாம். தைத்துத் தருவேன்”என்று கூறி தன் பணிகளைச் செய்யத் தொடங்கினார் என்ற செய்தியொன்றுண்டு.
பல அலுவலகங்களில் பலர் தெரியாது என்று கூறியே தம் பணிகளிலிருந்து தப்பிக்க முயல்வார்கள். தெரியாவிட்டாலும் கற்றுக்கொள்வதில் தவறில்லை. காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் அவரவர் வேலைகளை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். கழிவறையைக்கூட பயன்படுத்துகிறவர்களே சுத்தப்படுத்திவிட்டுப் போக வேண்டும்.
வாங்கிய புதிதில் நான் கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தபோது நண்பர் ஒருவர் சொன்னார். “கார் வைத்திருந்தால் கார் ஓட்டக் கற்றிருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை”என்று. இக்கருத்து தவறானது. எப்போதுமா கார் ஓட்டுநரை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியும்? கற்றுக்கொள்வதில் பயன்தான் அதிகம். நான் நண்பர்களிடம் மூன்று விஷயங்கள் நமக்கு மிகவும் முக்கியம் என்பேன். நீச்சலடிக்கத் தெரிந்திருக்க வேண்டும், கார் ஓட்டக் கற்றிருக்க வேண்டும், தட்டச்சு செய்யப் பழகியிருக்க வேண்டும். இவற்றுள் எனக்குத் தட்டச்சு மட்டும் வராது. தட்டச்சுப் பயிற்சிக் கூடத்துக்குப் பெண் பிள்ளைகள் வருவார்கள் என்று சின்னவயதில் என்னுடைய இராணுவத் தந்தை என்னைப் பயிற்சிக்கு அனுப்பாத வருத்தம் இப்போதும் இருக்கிறது. இருந்தாலும் எழுத்துக்களைத் தேடித் தேடி தட்டச்சு செய்வதில் நான் ‘ஒருவிரல் கிருஷ்ணரா’வாக இருப்பது சற்று ஆறுதல்.
எல்லோருக்கும் தெரிந்திருப்பதைப் போலவே எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதுகிறவன் நான். யாராவது கண்டுபிடிக்கட்டும் என்று தாமஸ் ஆல்வா எடிசன் தன்னை சோம்பேறியாக வைத்துக்கொண்டதில்லை. மக்கள் தேவைக்கான மிக அதிகமான பயன்படு கருவிகளைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர் அவர். ஒரு நாள் இறந்துபோன தன் தாயின் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பொருட்களைப் பிரித்துப் பார்த்தபோது ஒரு கடிதம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் பள்ளியில் பயின்ற நேரம், “உங்கள் மகன் சராசரிக்கும் கீழே மந்தபுத்தி உள்ளவனாகவும், மனநலம் குன்றியவனாகவும் இருக்கிறான். அவன் தொடர்ந்து இந்தப் பள்ளியில் படிக்க முடியாது. வந்து அவனை அழைத்துக் கொண்டு போகவும்”என்று அப்பள்ளித் தலைமையாசிரியர் எழுதியிருந்தார். மகனிடம் இந்தச் செய்தியைச் சொல்லாமல் மனம் சோர்ந்துவிடாமல் வளர்த்து ஆளானதற்கு தாயின் அன்புப் பிரார்த்தனையோடு தாமஸ் ஆல்வா எடிசனின் தொடர்ந்த இயக்கமே காரணமாக இருந்திருக்கிறது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்
தாழாது உஞற்று பவர்
என்ற குறளின் உண்மை இப்போது புரிகிறதா? எந்தப் பணியிலும் எந்த இடத்திலாவது நேரத்திலாவது நமக்குச் சலிப்பு ஏற்படும் அல்லது நம்மைச் சுற்றியிருப்பார்கள் உற்சாகமிழக்கச் செய்வார்கள். அதற்காக எதையும் நிறுத்திவிடக்கூடாது. எப்போதோ நான் எழுதிய ஒரு சிறு கவிதை,
எழுதவருகிறது சரி
எழுதினால் என்ன வருகிறது?
என்கிறாள் மனைவி.
இது மனைவியர் கேட்பதான கற்பனை. என்றாலும் பல இடங்களில் இது நிகழாமலில்லை. வங்கியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். தமிழ்நாடு அரசு எனக்கு ‘கலைமாமணி’விருது வழங்கிய தருணம். என்னிலும் உயர் அதிகாரி ஒருவர், “கலைமாமணி விருது பெற்றதின் மூலம் என்ன பெரிய சாதனை நிகழ்த்திவிட்டதாகக் கருதுகிறீர்கள்? என்று கேட்டார். உள்ளூர சிரித்துக்கொண்டேன். எப்போதும் நான் வாயுள்ள பிள்ளை. இப்படிப்பட்ட அசட்டுத்தனமான கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளித்து விடுவேன். அவரிடம் ஒரு கேள்வியையே பதிலாகக் கொடுத்தேன். “மகிழ்ச்சி. வங்கியில் நீங்கள் உதவிப் பொது மேலாளராகி என்ன பெரிதாக சாதித்து விட்டதாகக் கருதுகிறீர்கள்?”என்று.
அவரைப் போன்ற அதிகாரிகளை மட்டுமல்ல, அவ்வப்போது உச்சத்திற்கு வந்துபோகும் எத்தனை பேரை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள். மிகுந்த அடக்கத்தோடும், பெருமையோடும் என்னைப் பற்றிய என் மகிழ்ச்சி நான் உலகெங்கும் உள்ள தமிழர்களால் அறியப்பட்டவனாக அன்பு பாராட்டப்படுகிறவனாக இருக்கிறேனே…எழுதுவதும், படிப்பதும், பேசுவதும் பெரிதாக யாருக்கும் அத்தனை பெரிய கிரீடங்களைச் சூட்டிவிடாமற்போனாலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இமைப்பொழுதும் சோராதிருக்கிறார்கள். நாட்டிற்குழைக்கிறார்கள் எனும் நலம் தானே பலரை நன்றாக வைத்திருக்கிறது!
எண்பதடியில் தண்ணீர் வரும் என்று கருதி எட்டு ஏக்கர் உரிமையாளரான ஒரு விவசாயி தொண்ணூறு அடி தோண்டிய பிறகும் தண்ணீர் தென்படவில்லை என்ற விரக்தியில் வந்த விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு வங்கியில் பணத்தைப் போட்டு வட்டியில் வாழலாம் என்று கருதியபோது அந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி தொண்ணூறு அடிக்கு மேலே பத்தடி தோண்டியதில் பீறிட்டது தண்ணீர் தொடர்ந்து முயலத் தவறியவன், இயங்க மறுத்தவன் ஒரு மாபெரும் இழப்பைச் சந்திக்க எடுத்த எடுப்பிலேயே வேறு ஒருவன் வெற்றி பெறுகிறான். இந்தக் கதையைக்கூட நான் சொல்லவரும் செய்திக்கு சரியான எடுத்துக்காட்டாக வைத்துக் கொள்வது நல்லது.
தோற்றவர்களில் பலர், “நான் முடிந்தவரை முயற்சித்தேன். முடியாமற் போய்விட்டது என்று கூறுவண்டு. முடிந்தவரை முயற்சிக்கிறவர்களைவிட எந்தச் செயலையும் முடிக்கிற வரை முயன்று கொண்டிருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். சாதனையாளராகிறார்கள். தொடர்ந்து இயங்குவது நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. சாதாரண மனிதர்களுக்கிடையே நம்மை அசாதாரணமான, அதிசயமான மனிதர்களாக்குகிறது. இயங்குவது வாழ்க்கையை நிறைவாக்குகிறது. உங்கள் இதயம் உங்களுக்குச் சொல்வதெல்லாம் “இயங்குக”என்பதைத்தான். எனவே தொடர்ந்து இயங்குவோம்.