என் பக்கத்து வீட்டுக்காரனான கொச்சு வறீது பட்டாளத்திலிருந்து திரும்பிவந்தபோது, அவனிடமிருந்த சம்பாத்தியம் இரண்டு மூன்று காக்கி சட்டைகளும், ஒரு ஜோடி பூட்ஸும், ஒரு தகர பெட்டியும் கண்ணாடியும் சீப்பும், ஒரு முறுக்கு மீசையும்தான். அவனுடைய பர்ஸில் பத்து ரூபாயும் சில்லரைகளும்கூட இருந்தன என்பதைக் கூறாவிட்டால், அது பொய் என்றாகி விடும். ஒரு மாதம் முடிந்தபோது, எஞ்சியிருந்தது முறுக்கு மீசை மட்டுமே. அது இரு கன்னங்களிலும் நீண்டு வளர்ந்து நின்று கொண்டிருந்தது. ஒரு வாரத்திற்கான ரேஷனையும் மனைவிக்கு ஒரு புதிய துணியையும் வாங்கியவுடன், பர்ஸ் காலியாகிவிட்டது. அடுத்த வாரத்தில் பூட்ஸையும் தகரப் பெட்டியையும் விற்றான்.
கண்ணாடியும் சீப்பும் அருகிலிருந்த தேநீர்க் கடைக்காரனுக்குச் சொந்தமாயின. பழையது என்று தெரியாத அளவிற்கு இருந்த ஒரு காக்கிச் சட்டைக்கும் ஆள் கிடைத்தது.
இறுதியில் அவனும் மரியாம்மை யும் மூன்று குழந்தைகளும் மட்டும் எஞ்சியிருந்தார்கள். நாட்கள் நகர்வதே கஷ்டமாக இருந்தது. இந்த கஷ்டம் அந்த குடும்பத்தைப் பொருத்தவரையில் முன்பே இருந்ததுதான்.
அதற்கொரு மாற்றுவழியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காகத் தான் கொச்சு வறீது பட்டாளத்திலேயே போய்ச் சேர்ந்தான். பலன் கிடைத்தது. சிறிது காலத்திற்கு அந்த நாசமாய்ப் போன ஜெர்மன் தலைவர் தோற்ற காரணத்தால், கொச்சு வறீது திரும்பி வரவேண்டிய நிலையும் உண்டானது.
அந்த விஷயத்தில் அவனுக்குக் கவலை உண்டானது. யுத்தத்தில் ஈடுபடவேண்டுமென்ற ஆசை காரண மாக அல்ல. கொச்சு வறீதைப் பொருத்தவரையில் போர் என்பது வெறுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். அது ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்தபிறகுதான் அவன் பட்டாளத்திலேயே சேர்ந்தான். அதற்கு முன்பே மூன்று குழந்தை களின் கஷ்டங்களைப் பார்த்து தாங்கிக் கொள்ளமுடியாமல் மரியாம்மை அவனை நச்சரித்திருக்கிறாள்.
"அந்த மிலிட்டரியில கொஞ்சம் போய் சேருங்க. ஏதாவது நாலு காசு கிடைக்கும். அந்த முஸ்லிம் அண்ணனின் மகன் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறான்.'' ஆனால், கொச்சு வறீதுக்கு அப்போது அது புரியவில்லை.
"இந்த யுத்தம்னா நீ என்ன நினைச் சுக்கிட்டு இருக்கே? மனிதர்களின் ரத்தம்... ரத்தம். அதைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பது நல்லதா? கடவுள் நினைத் தால், நமக்குக் கிடைக்கும்.''
அந்த வகையில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகக் காத்திருந் தும், எதுவுமே கிடைக்கவில்லை. உணவுப் பொருட்களுக்கு பற்றியெரியும் அளவிற்கு விலை... நாள் கூலியை வைத்து ஐந்து உயிர்களால் வாழ முடியவில்லை. அப்போது கொச்சு வறீது இரண்டு மனநிலையுடன் பட்டாளத்தில் போய்ச் சேர்ந்தான். ரத்தமெனில் ரத்தம்... பிள்ளைகளின் வயிறு நிறையவேண்டுமே! ஆனால், திரும்பி வரவேண்டிய நிலை ஏற்பட்ட போது, கவலை உண்டானது. எப்படிப் பிழைப்பது?
எனினும், தான் அந்த அளவிற்கு நிலைகுலைந்து போய்விடமாட்டோம் என்றவொரு நம்பிக்கை கொச்சு வறீதுக்கு இருந்தது. மரியாம்மைக்கும் அதுவேதான் நம்பிக்கை. காரணம்... அவர்கள் முழுமையான நம்பிக்கை மனம் கொண்டவர்கள். தவறாமல் தேவாலயத்திற்குச் செல்வார்கள். கர்த்தருக்கு முன்னாலும் கன்யாஸ்த்ரீ அன்னைக்கு முன்னாலும் முழங்காலிட்டு அமர்வார்கள்.
உண்மையின்மீது நம்பிக்கை கொண்டவர்கள். சிலுவைக்கும் கொடிக்கும் அடிபணிந்த ஒரு வாழ்க்கை... நம்பிக்கை எந்த அளவிற்குப் பெரியது என்றால், "மலையுடன் சேர்ந்து நில்' என்று கூறினால், சேர்ந்து நிற்போம் என்ற விஷயம் கொச்சு வறீதுக்குத் தெரியும். மரியாம்மைக்கும் தெரியும். எனினும், அவர்களுக்கு முன்னால் வாழ்வின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டுதான் வந்தன.
அந்த ஏழை மனிதன் பல நேரங்களில் என் வீட்டிற்கு வந்து, தன் சிரமங்களையும் கவலைகளையும் என்னிடம் கூறுவதுண்டு. எங்காவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என அவன் விரும்புகிறான்.
பலரிடமும் நான் சிபாரிசு செய்து பார்த்தேன்.
ஒரு இலக்கியவாதியின் சிபாரிசைப் பொருட் படுத்தாமல் இருந்தாலும், தங்களுடைய மதிப்பிற்கு எந்தவொரு பாதிப்பும் உண்டாகப்போவதில்லை என்பதை நம்பக்கூடிய முதலாளிகள் சிறிதும் கவனமே இல்லாமல் அதைக்கேட்டுவிட்டு, பதிலும் கூறுவார்கள்: "வெற்றிடம் இல்லையே!'' நான் அந்த கவலையைக் கொச்சு வறீதிடம் கூறும்போதெல்லாம், அவன் சமாதானம் கூறிக்கொள்வது காதில் விழும்: "கடவுள் மனம் வைக்கவில்லை.''
கர்ப்பிணியான மரியாம்மையும் என் மனைவியிடம் பல நேரங்களில் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
"இந்த வீட்டுல உணவு விஷயம் எப்படிப் போகுது?''
"என்ன? கொச்சு வறீது எதுவும் தரலையா?'' மனைவிக்கொரு சந்தேகம்.
"கையில இருக்கவேண்டாமா? இருந்தால் தருவார். பாசம் உள்ள மனிதர்..''
"குழந்தைகளின் அப்பாவிற்கு ஒரு வேலையை உண்டாக்கிக் தரணும்'' என்று அவள் பெருமூச்சுடன் கடவுளிடம் வேண்டிக்கொள்ளவும் செய்தாள்.
இதற்கிடையில் ஒருநாள் கொச்சுவறீது என் வீட்டிற்கு வந்தபோது, நான் கேட்டேன்:
"கொச்சு வறீது... உன்னிடம் பைபிள் இருக்கிறதா?
கொஞ்சம் பார்ப்பதற்குத்தான். திரும்பத் தந்திடுறேன்.''
அவன் மிகுந்த உற்சாகத்துடன் பதில் கூறினான்:
"இருக்கிறதே! அப்பன் வாங்கி வைத்தது. பெரியது. இருபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கினார்.'' அவன் அதை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் கொடுக்கவும் செய்தான். மேலட்டை முழுவதும் பாசி பிடித்திருந்த அந்த தடிமனான புத்தகத்தை நான் விரித்துப் படித்தபோது, கொச்சு வறீதிற்கு ஒரு சந்தேகம்:
"சார்... உங்களுக்கு எதற்கு வேத புத்தகம்?''
பெரிய அளவில் நம்பிக்கையற்ற ஒரு மனிதன் பைபிளைப் புரட்டிப் பார்ப்பதற்கான அர்த்தத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அக்னியைக் கொண்டும் பரிசுத்த ஆன்மாவைக் கொண்டும் ஸ்நானம் செய்கின்ற இடத்திலிருந்து, நீரைக் கொண்டு ஸ்நானம் செய்யும் இடத்திற்கு, வரலாற்றிற்குத் திரும்பிச்சென்ற கதையை அவனிடம் கூறி என்ன பயன்? நான் இவ்வாறு கூறினேன்:
"இதை அவ்வப்போது வாசிப்பதே ஒரு சுவாரசியமான விஷயம்தான். ஒன்றை வாங்கவேண்டுமென சில நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். முடியல...''
ஒரே வாரத்தில் நான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன்.மனித அன்பு எனும் பிரகாசமான உயர் சிகரங்களின் வழியாக குருதி வழியும் இதயத்துடன் நடந்த அந்த கருணை வடிவமான மனித புத்திரனுக்குப் பின்னால் என் சிந்தனை பயணித்தது. அங்கு ஒரு உலகம் இருக்கிறது.
கற்குகைகளிலிருந்து பாவிகளும், பாதாள அறைகளிலிருந்து வேசிகளும் வெளியேறி வந்தார்கள். அவர் அனைவரிடமும் கூறினார்: "நான் உங்களுடைய ஆள்.''
வரி வசூல்செய்யும் மத்தாயியும் வேசியான மரியாவும் அந்த காலடியில் நம்பிக்கையுடன் அமர்ந்திருந்தார்கள். இந்த கதைகளுக்கு மத்தியில் கொச்சு வறீது என் இதயத்தில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தான்.
மறுநாள் நான் அவனிடம் அந்த புத்தகத்தைத் திரும்பக் கொடுத்தேன். அதைக் கொடுத்தபோது, நான் கேட்டேன்:
"கொச்சு வறீது... நீ இதை வாசிப்பதுண்டா?''
"இல்ல...''
"ஏன்?''
"வாசிக்கத் தெரியாது.''
"மரியாம்மை வாசிப்பாளா?''
"அவளும் படிக்கவில்லை.'' ஒரு நிமிடம் சிந்தித்துவிட்டு அவன் கூறினான்: "என் மகள் கொச்சுமேரி பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறாள்.
கொஞ்ச நாட்கள் சென்றால், அவளால் வாசிக்கமுடியும்.'' தன் பரம்பரை முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்தை அவன் உற்சாகத்துடன் சுட்டிக்காட்டினான்.
பிறகு... கொச்சு வறீது வீட்டிற்கு வரும் போதெல்லாம் பைபிளில் வரும் கதைகளை நான் அவனுக்கு விளக்கிக் கூறுவேன். தாவீது அரசரின், சாலமன் அரசரின் கதைகள் அவனுக்குப் பிடித்திருந்தன.
அவற்றைவிட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது... கிறிஸ்து கூறிய கனிவு நிறைந்த கதைகள்.
பணக்காரனான கலிலியாக்காரனும், கஷ்டப்படும் ஏழை மனிதனும் பிரார்த்தனை செய்வதற்காகச் சென்ற கதை... நான் கூறியபோது, கொச்சு வறீதின் கண்கள் மலர்ந்தன.
"நீங்கள் பாவிகளுக்காக வந்தவர் அல்லவா? நீங்கள் அப்படித்தான் சொல்வீர்கள்.''
நாட்கள் அந்த வகையில் ஓடின. அன்று என் மனைவி ஓடிவந்து, என் கையிலிருந்த புத்தகத்தைத் தட்டி விலக்கியவாறு கூறினாள்:
"இதைக் கேளுங்க. மரியாம்மை பிரசவமாகி விட்டாள்.''
"அப்படியா?''
"அதுவல்ல விசேஷம்.''
"பிறகு?''
"இரட்டை... இரண்டுமே ஆண்...''
"நல்லது.''
ஒரு குழந்தையும் இல்லாமலிருந்த அவள் என் முகத்தையே அர்த்தத்துடன் சிறிதுநேரம் பார்த்தாள். அந்தப் பார்வையைப் பார்க்கும்போது, "பிரசவிக்க வேண்டியவள் நான்தான்' என்பதைப்போல தோன்றும்.
மூன்று நாட்கள் கடந்தன. நான் எதையோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தேன். என் மனைவி அருகில் வந்து கேட்டாள்:
"பிறகு... ஒரு விஷயத்தைக் கூறட்டுமா?''
"ஓஹோ...! தாராளமாக...'' தாளிலிருந்து கண்களை எடுக்காமலே நான் கூறினேன்.
"அந்த மரியாம்மையின் குழந்தைகளைப் பற்றி... கொஞ்சம் இங்க பாருங்க.'' நான் பார்த்தேன். அவள் தொடர்ந்து கூறினாள்:
"அந்த குழந்தைகளின் விஷயம்... ரொம்பவும் கஷ்டமானது.''
"என்ன புதிய ஒரு கஷ்டம்?''
"அவற்றின் விஷயம்... பெரிய சந்தேகம்தான்.''
"எப்படித் தெரியும்?''
"நான் போயிருந்தேன்.''
"பார்த்தாச்சா?''
"பிறகு... பெண் என்றால், பிரசவம் நடக்குற இடத்துக்குப் போகணும்ல...?
"நிச்சயமா... இன்னும் சொல்லப் போனால்... பிரசவிக்கக்கூட செய்வாய். அது இருக்கட்டும்... குழந்தைகளுக்கு என்ன?''
"சின்னதா இருக்கு... உயிர் இருப்பதைப்போல தெரியல. நெஞ்சில ஒரு துடிப்பு இருக்கு.
அவ்வளவுதான். என்னவோ... கடவுளுக்குத்தான் தெரியும்.''
பல்லிகளைப்போல மெலிந்து நீண்ட இரண்டு குழந்தைகள் ஒரு தாயின் இரண்டு பக்கங்களிலும் கிடந்து இழுத்து... இழுத்து சாகக்கூடிய ஒரு காட்சி என் மனதில் கடந்துசென்றது. என் மனைவியோ...
மரியாம்மைக்கும் குழந்தைகளுக்கும் என்று எங்களின் கடவுளிடம் பிரார்த்தனை செய்தாள். எனினும், நான்கு நாட்கள் கடந்தபிறகு, அந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக எனக் குத் தகவல் வந்தது. ஏழு நாட்களுக்கு மட்டுமே பூமியின் காற்றையும் புதிய மண்ணின் வாசனையையும் அனுபவிப்பதற்கு விதிக்கப்பட்ட அவர்கள் வீடுதவறி நுழைந்த விருந்தாளிகளைப்போல வேகமாக விடைபெற்றுக்கொண்டார்கள்.
பட்டினியுடன் பட்டினியாக... பத்து மாதங்களைக் கடந்து ஒரு தாயின் வயிற்றின் வழியாக வெளியே வந்த அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏழு நாட்களே அதிகமாக இருக்கலாம். எனினும், சமாதானம் கூறிக்கொள்ள வேண்டியதுதான்.
மண், மண்ணுடன் ஒரு நாள் சேருமல்லவா? ஆனால், அந்த பிஞ்சு மனங்களுக்கு இந்த நல்ல உலகத்தைப் பற்றி... பிரிந்துசெல்லும்போது என்ன தோன்றியிருக்கும்? வெறுப்பு தோன்றி யிருக்குமா?
மரியாம்மையால் எப்படி இதைத் தாங்கிக் கொள்ளமுடியும்?'' என் மனைவி தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல கேட்டாள்.
உண்மைதான்.
ஆனால், நான் சிந்தித்துக்கொண்டிருந்தது... கொச்சு வறீதைப் பற்றித்தான். பாவம்...
அவனுக்குக் கவலையில் மூழ்குவதற்குக்கூட நேரமிருக்காது.
அடக்கம் செய்வதற்கான காரியங்களைச் செய்யவேண்டுமே!
அவன் பல இடங்களிலும் கடன் வாங்கினான். வண்டி வேலை செய்யும் வர்க்கி ஒன்றரை ரூபாய் கொடுத்தான்.
பக்கத்துவீட்டு ரோதா அக்காவின் வெற்றிலைப் பெட்டியைத் துளாவியபோது, எட்டணா கிடைத்தது.
தையல்காரர் மாத்தச்சன் ஒரு ரூபாய் கொடுத்தார்.
பின்னாலிருக்கும் வழியின்மூலம் என் மனைவி அங்கு இரண்டு ரூபாய்களைக் கிடைக்கும்படி செய்தாள் என்ற விஷயம் நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்குத் தெரிந்தது. எது எப்படியோ... கொச்சு வறீதிற்கு ஐந்து ரூபாய் சேர்ந்தது. அவன் அதைக்கையில் வைத்துக்கொண்டு தேவாலயத் திற்குச் சென்றான். தேம்பிக்கொண்டும் விக்கிக் கொண்டும் விஷயத்தைக் கூறினான். ஐந்து ரூபாய்களைக் கொடுக்கவும் செய்தான்.
ரூபாய்களை எண்ணி சரி பார்த்தவுடன், பாதிரியார் கூறினார்: "ஒரு குழந்தைக்குச் சரியாக இருக்கு. இன்னொரு குழந்தைக்கு...?''
"இரட்டைப் பிள்ளைங்க...''
"அதனால...?'' அந்த பாதிரியார் கிண்டல் கலந்த பாவத்துடன் கேட்டார்: "இரட்டையாகவே அடக்கம் செய்யணுமா?''
கொச்சு வறீது அமைதியாக நின்றிருந்தான்.
"மீதியைக் கொண்டு வா... கொச்சு வறீது''.
"என் கையில் இனி கால் துட்டு கூட இல்லை... தந்தையே!''
"கொச்சு வறீது...
குழந்தைகளை ஒன்றாக வைத்து அடக்கம் செய்ய முடியாது. கர்த்தரின் வழியை மட்டுமே என்னால பின்பற்றமுடியும். உன் வழியைப் பின்பற்றி நடக்க முடியாது'' அமைதியான கம்பீரத்துடன் அவர் அந்தப் பக்கமாகப் போகவும் செய்தார். இந்தத் தகவலை... பிறகொரு தருணத்தில் கொச்சு வறீதே கூறினான்.
இனி என்ன செய்வது? குழந்தைகளை அடக்கம் செய்யவேண்டுமே? அவை அழுகி நாற்றமெடுப்பது நல்லதா? அவன் திரும்பிவந்தான். வாசலில் அமர்ந்தான். அவன் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்? கர்த்தரை மனதில் நினைத்துப் பார்த்திருப்பானோ? தேவாலயத்தைப் பற்றி சிந்தித்திருப்பானோ? பாதிரியாரைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்பானோ?
சிறிது நேரம் கடந்ததும், கொச்சு வறீது என் வீட்டிற்கு வேகமாக வந்தான். அவனுடைய கையில் அந்தப் பெரிய பைபிள் இருந்தது.
வாசற்படியிலேயே நின்றவாறு என்னிடம் கேட்டான்:
"சார்... உங்களுக்கு இந்த பைபிள் வேணுமா? ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும்.'' .அவனுடைய குரல் தடுமாறவும், கைகள் நடுங்கவும் செய்தன.
நான் உள்ளே சென்று ஐந்து ரூபாயை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தவாறு கூறினேன்:
"கொச்சுவறீது... பைபிளை நீ திரும்பக் கொண்டுபோயிடு.''
அவன் ஒரு நிமிடம் சிந்தித்தான்.
இறுதியில் இவ்வாறு கூறினான்:
"சார்... இதை நீங்க வச்சிருங்க. பணம் தயார் பண்றப்போ திரும்பத் தந்தால் போதும்.''
பதில் கூறுவதற்கு எனக்கு இடம் தராமல், அவன் நடந்துசென்றான்.
அந்த வகையில்... அந்த இடுகாட்டில் மேலும் இரண்டு மரச்சிலுவைகள் உண்டாயின.
அந்த பைபிளோ...மூன்று மாத காலமாக என் மேஜையின்மீதுதான் இருக்கிறது. அதைத் திரும்பக் கொண்டு போகும்படி நான் பலமுறை கூறிவிட்டேன்.
அப்போதெல்லாம் கொச்சு வறீது ஒரு பெருமூச்சை விட்டவாறு... முறுக்கு மீசையைக் கீழ்நோக்கி தடவியவாறு தலையைக் குனிந்துகொண்டே நடந்து போய்விடுவான்.
தாத்தாவின் சொத்தை வைத்து அடக்கம் செய்யப்பட்ட அந்த பிள்ளைகளை நினைத்திருக்க லாம். அந்த கிழிந்த காக்கிச்சட்டை ஒற்றையடிப் பாதையில் மறையும்போது, கவலை நிறைந்த ஒரு சூழல் என்னைச் சூழ்கிறது. நான் இந்த பைபிளுக்கு அருகில்வந்து அதைப் புரட்டி பார்த்துக் கொண்டிருப்பேன்.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பார்வை யில் பட்ட ஒரு வாக்கியத்திற்கான அர்த்தம் எனக்கு இப்போதுகூட புரியவில்லை.
வாக்கியம் இதுதான்:
"அவர்கள் பூமியில் கட்டியவை அனைத்தும் சொர்க்கத்திலும் கட்டப்படும்.'
உங்களுக்குப் புரிகிறதா?