பல வருடங்களுக்குமுன்பு ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். இளம் வயதிலிருந்தே துறவி நிறைய படித்துக்கொண்டும் வாசித்துக்கொண்டும் இருந்தவர். பெரிய ஒரு குருநாதருக்குக் கீழே நீண்டகாலம் சீடனாக இருக்கவும் செய்தார். ஆனால் இப்படியெல்லாம் இருந்தாலும், தன் மனதை துறவியால் முழுமையாக அடக்கி நிறுத்திவைக்க முடியவில்லை. பல வேளைகளிலும் மனம் சபல எண்ணங்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கு வரக்கூடிய காம உணர்ச்சிகளுக்கும் அடிமைப் பட்டுக்கொண்டிருந்தது.
நம் துறவியின் மிகப்பெரிய பலவீனம்... அதிகமாக கோபப்படுவது. கோபம் வந்துவிட்டால் அவருடைய மனமும் சரீரமும் காய்ந்த மூங்கிலைப்போல வெந்து எரிய ஆரம்பித்துவிடும். பிறகு அது முன்பிருந்த நிலையை அடைவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் இந்த பலவீனங்களைப் பற்றி துறவி சிறிதும் உணர்ந்திருப்பவராக இல்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம். அவருடைய கோபத்திற்கு பயந்து யாரும்- அவருடைய நலம்விரும்பிகள்கூட இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதில்லை.
ஒருநாள் காலையில் துறவி ஆழமான தியானத்தில் மூழ்கியவாறு காட்டிலிருந்த ஒரு மரத்திற்குக் கீழே அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய தலையில் ஏதோ வந்து விழுந்தது. துறவி அதிர்ச்சியடைந்து மேலே பார்த்தபோது ஒரு காகம் இருந்தது. சுகமான ஒரு எச்ச வெளியேற்றத்தின் நிம்மதியில் இருந்தது காகம்.
தொடர்ந்து துறவி தலையைத் தடவிப் பார்த்தார்.
அப்போது வெப்பமும் ஈரமும் கொண்ட காகத்தின் எச்சம்- அதற்குத் தாங்கமுடியாத அளவுக்கு நாற்றம் இருந்தது- நெற்றியிலும் அங்கிருந்து மூக்கின் நுனிப் பகுதியிலும் விழுந்தது.
முழு உலகத்தையுமே எரித்துவிடக்கூடிய கோபத்துடன் துறவி காகத்தைப் பார்த்தார். அப்போது... அந்த நிமிடத்தி லேயே காகம் மரத்தின் கிளையிலிருந்து அவருடைய காலடியில் விழுந்து, துடித்துத் துடித்து மரணத்தைத் தழுவியது.
ஆனால் நம் துறவியிடம் காகத்தின் மரணம் எந்தவகையிலும் கவலையையோ இரக்கத்தையோ உண்டாக்கவில்லை. அதுமட்டுமல்ல; ஒருவகையான வெற்றி மனப்போக்கு... ஏதோ மிகப்பெரிய சக்தியை தான் பெற்றுவிட்டதான நம்பிக்கை அவருக்குள் உண்டானது.
தொடர்ந்து... துறவி எப்போதும்போல பிச்சைக்காக கிராமத்திற்குச் சென்றார். முதலில் போய்ச் சேர்ந்த வீட்டிற்கு முன்னால் நின்றுகொண்டு துறவி உரத்து குரல் கொடுத்தார்.
"ஓம்...''
அது ஒரு சிறிய குடிசை. குடிசையின் வாசல் கதவு திறந்தே கிடந்தது. தன் குரலைக் கேட்டவுடன் யாரும் வெளியே வந்து தன்னை வரவேற்காதது குறித்து துறவிக்கு வருத்தம் உண்டானது. அவர் மேலும் உரத்த குரலில் அழைத்தார்:
"ஓம்...''
அப்போது, விரதம் மேற்கொண்ட வாழ்க்கையினால் சுருங்கி வற்றிப்போய்க் காணப்பட்டாலும், பிரகாசமான முகத்தைக்கொண்டிருந்த ஒரு இளம்பெண் சிரமப்பட்டு வெளியே வந்தாள். பிறகு... அவள் கைகளால் தொழுதவாறு கூறினாள்:
"சுவாமி... தாமதமா வந்ததுக்கு என்னை மன்னிக்கணும். காதுல விழாததால அல்ல... நோயாளியான கணவரை நான் கவனிச்சிக்கிட்டிருந்தேன். பல நாளா உணவு சாப்பிடாமலிருந்த அவருக்கு இன்னிக்கு நான் கொஞ்சம் கஞ்சி கொடுத்தேன். என் மார்போடு சேர்த்து வச்சுக்கிட்டு... நான் அவருக்கு...''
அப்போது துறவியின் மனம் கோபத்தின் நெருப்புக் கடலாக மாறியது. நித்ய பிரம்மச்சாரியான தன்னிடமா இவள் தன் கேவல நிலையிலிருக்கும் கணவனைப் பற்றி பேசுவது என்பதை நினைத்து அவர் தன் வலது முஷ்டியை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார்.
அப்போது இளம்பெண் மிகுந்த பணிவுடன் கூறினாள்:
"வேணாம் சுவாமி. எனக்கு சாபம் தர முயற்சிக் காதீங்க. நான் அந்த அளவுக்கு எந்தவொரு தவறையும் செய்யல.
சுயதர்மத்தைக் கடைப்பிடிக்கற என்னைத் தண்டிக்க றதுக்கு உங்களுக்கு ஒரு அதிகாரமும் இல்ல. பிறகு... இன்னொரு விஷயம். உங்களுடைய கோப நெருப்புல வெந்து சாம்பலாகறதுக்கு நான் ஒரு காகமும் இல்ல...''
இதைக் கேட்டதும் துறவி திகைப்படைந்து விட்டார். எதுவுமே நடக்காததைப்போல இளம்பெண் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அதற்குப்பிறகு துறவி வேறு எந்தவொரு வீட்டிற்கும் பிச்சைக்காக செல்லாமல், பதறிய மனதுடன் காட்டிற்கே திரும்பினார். நீண்டகாலம் தனக்கு கற்றுத்தந்த குருவின் ஆசிரமத்திற்கு துறவி சென்றார்.
ஆசிரமத்திற்கு முன்னாலிருந்த ஒரு ஆலமரத்திற்கு அடியில் குரு கண்களை மூடி அமர்ந்திருந்தார்.
நிரந்தரமான சாந்த நிலை நிறைந்திருக்க, அவரின் முகம் பிரகாசமாகக் காணப்பட்டது. குருவின் முகத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்திலிருந்த வண்ணத்துப் பூச்சிகள் தேவதைகளைப்போல நடனமாடிக்கொண்டிருந்தன. சிறிய கிளிகள் மரத்தின்கீழ் கிளைகளில் அமர்ந்து இனிமையாகப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தன. இந்தக் காட்சிகளில் ஒன்றிப் போய் துறவி சிறிது நேரம் இருந்தார்.
பிறகு... அவர் சீடனைப் பார்த்து அன்புடன் கூறினார்: "நீ வருவேன்னு எனக்குத் தெரியும்.'' வணங்கி நிற்பதைத் தவிர துறவியால் எதுவும் கூறமுடியவில்லை.
"ஒரே பார்வையில காகத்தை எரிக்கக்கூடிய ஆற்றலையெல்லாம் நீ அடைஞ்சிட்டேல்ல?''
அப்போதும் துறவியால் எதுவும் கூறமுடியவில்லை. தொடர்ந்து குரு கூறினார்:
"பார்... எனக்கு உன்மேல அன்பிருக்கு. இருந்தாலும், உன்னைப் பத்தி நினைக்கும்போது கவலை உண்டாகுது. நீ உபநிஷத்துகளைப் படிக்க மட்டுமல்ல... அதுக்கு விளக்கவுரைகூட எழுதியிருக்கே. ஊர்களுக்குள்ள போய் மனிதர்களைத் தட்டி எழுப்பறதுக்காக தொடர்ந்து சொற்பொழிவுகள் செய்திருக்க. ஆனா இதனால நீ மேன்மை நிலையை அடையலையே! எங்கிட்ட படிச்சுக்கிட்டிருந்த காலத்தில நான் பல வேளைகள்லயும் உங்கிட்ட சொல்லியிருக்கேன்....
"மனம்ங்கற மிகப்பெரிய எதிரியை யார் கீழடக்கு றாங்களோ, அவங்கதான் மகா அதிர்ஷ்டசாலிங்க'ன்னு.
ஆனா உன்னால புரிஞ்சுக்கவே முடியல. உன் கவனம் முழுக்க எப்போதும் உன் குரல்ல மட்டுமே இருக்கு. அந்த குரல்... அதைப் பத்தி நீ மத்தவங்ககிட்ட என்ன சொன்ன? "மிகப்பெரிய பலம் கொண்டது..'ன்னு... இல்லியா? கஷ்டம்!
என் குழந்தையே... இனி கேட்கட்டுமா? இன்னிக்கு பிச்சைக்காக சென்றப்போ, உங்கிட்ட சில உண்மைகளைக் கூறிய ஒரு இளம்பெண்ணைப் பத்தி உன் மனசிலிருந்த எண்ணம் என்ன? பொறாமைன்னு நான் சொல்லமாட்டேன். ஆனா கடுமையான கோபம் இருந்ததில்லியா? இப்போ நீ எதுக்காக என்னைத் தேடி வந்திருக்கேங்கறதும் எனக்குத் தெரியும். உனக்கு இன்னும் கத்துக்கணும். இல்லியா? வேணாம். அதனால எந்தவொரு பயனுமில்ல. உனக்கு வேண்டியது ஆத்மஞானம். அதை யாருக்கும் கத்துத்தர முடியாது. அது... ஒருவனோட உள்ளுக்குள்ளிருந்து அதுவாவே தோன்றி வரக்கூடியது...''
சீடனின் பரிதாபத்திற்குரிய நிலையைப் பார்த்த குரு தொடர்ந்து கூறினார்:
"ஆனா... நான் உன்னைக் கைவிடமாட்டேன். நான் உனக்கு ஒரு வழியைச் சொல்றேன். உன்கிட்ட பேசிய அந்தப் பெண்ணிடம் நீ திரும்பிப் போ. பிறகு... அவளுக்கு சீடனா இருந்து, அவளுக்கு பணி செய்துகிட்டு அவளோட இரு.. வேதங்களையோ உபநிஷத்துகளையோ... எதையுமே நீ அவகிட்டயிருந்து கத்துக்கவேணாம். அது எதுவுமே அவளுக்குத் தெரியாது. ஏன்? எழுதவோ வாசிக்கவோகூட சரியா தெரியாத பெண் அவ. ஆனா தன்னோட சுய தர்மம் எதுன்னு அவளுக்குத் தெரியும். ஒரு பிழையுமில்லாம எப்போதும் அவ அதைப் பின்பற்றி நடந்துக்கிட்டிருக்கா. நீ அவளுக்குப் பணிவிடை செய்து... தன்னிடமும் உலகத்திடமும் இருக்கக்கூடிய அவளுடைய அணுகுமுறைகளைக் கூர்ந்து கவனிச்சு...''
திடீரென நிறுத்திவிட்டு, குரு துறவியிடம் கேட்டார்:
"நான் சொல்றதெல்லாம் புரியுதா?''
"ம்...'' என்று துறவி கூற, குரு தொடர்ந்தார்:
"அப்படின்னா... நல்லது. இன்னும் நேரமிருக்கு. இப்போதே கிளம்பு...''
குருவை வணங்கிவிட்டு, சீடர் திரும்பி நடந்தார். நேரம் சாயங்காலம் ஆகாமலிருந்தாலும், காட்டில் இருள் பரவ ஆரம்பித்திருந்தது.
துறவி திரும்பிச் செல்வதைப் பார்த்தவாறு, குரு சிந்தனையில் மூழ்கியிருந்தார்.
_____________
மொழி பெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்தமாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
"இரக்க மனம் கொண்டவர்' கதை ராஜஸ்தானி மொழியில் எழுதப்பட்டது. இதை எழுதியவர் ராமஸ்வரூப் கிஸான். தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவர் இவர். குடிப் பழக்கத்தற்கு அடிமையாகிவிட்ட சுரேஷ் என்னும் மனிதரையும், ரயில் நிலையத்தில் அவருக்கு உதவும் ஒரு மனிதரையும் மையமாக வைத்து எழுதப்பட்ட மாறுபட்ட கதை. முழுக் கதையை வாசித்து முடித்தபிறகு, இதில் வரும் கதாபாத்திரங்கள் நமக்குள் உயிரிப்புடன் வாழும் என்பது நிச்சயம்.
"இருட்டில்...' என்னும் மலையாளக் கதையை எழுதியவர் மூத்த எழுத்தாளரான எஸ்.கெ. பொற்றெக் காட். ஞானபீடம் விருதுபெற்ற நட்சத்திர எழுத்தாளர் இவர். மழை பெய்யும் ஒரு இரவில் நடக்கும் கதை. பாதையில் சந்திக்கும் ஒரு மனிதரின் வீட்டிற்குச் செல்ல... அங்கு வறுமையின் கொடும்பிடியில் சிக்கியிருக்கும் அவரின் சகோதரியைக் காணும் சூழல் உண்டாக... நண்பருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை அவளிடம் தந்துவிட்டு, மழையையோ காற்றையோ பொருட்படுத்தாமல் கதையின் நாயகர் அந்த இரவு வேளையில் கிளம்ப... அடடா... எப்படிப்பட்ட கதை! எப்படிப்பட்ட உன்னத கதாபாத்திரம்! கதையில் வரும் பெண், நம் கண்களில் நீரை வரவைப்பாள்.
"துறவியும் இளம்பெண்ணும்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மலையாள எழுத் தாளரான டி. பத்மநாபன். ஒரு துறவியை மையக் கதாபாத்திர மாகக்கொண்டு எழுதப்பட்ட கதை... தன் ஒரே பார்வையில் காகத்தையே எரித்து சாம்பலாக்கும் ஆற்றல் படைத்த ஒரு துறவிக்கு, சாதாரண ஒரு இளம்பெண்ணிடம் பாடம் படிக்கவேண்டிய நிலை! இந்தக் கதையின்மூலம் எவ்வளவு பெரிய உண்மையைக் கூற நினைக்கிறார் டி. பத்மநாபன்! நான் மொழிபெயர்த்த இந்தக் கதைகள் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
"இனிய உதயம்' பிரசுரிக்கும் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு நன்றி.
அன்புடன்,
சுரா