எம்.டி. வாசுதேவன் நாயர், மலையாள இலக்கியத்தின் மாபெரும் சிற்பிகளில் ஒருவர். இணையற்ற அருமையான இலக்கியப் படைப்புகளை மலையாள இலக்கிய உலகிற்கு அளித்து பெருமை சேர்த்தவர். நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றுவிட்டார்.
1933 ஆம் வருடம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள கூடலூர் என்ற கிராமத்தில் பிறந்த வாசுதேவன் நாயர், பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் 1953 இல் பி.எஸ்ஸி. ரசாயனத்தில் பட்டம் பெற்றார்.
இவரின் முதல் கதையான "ரக்தம் புரண்ட மந்தாரிகள்' கல்லூரிக் காலத்தில் பிரசுரமானது. தன் 20-ஆவது வயதில் "நியூயார்க் ஹெரால்ட் ட்ரிபியூன்' நடத்திய உலக சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. பாலக்காட்டில் இருந்த எம்.பி. டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக சில மாதங்கள் இவர் பணியாற்றினார்.
1956 ஆம் வருடத்தில் "மாத்ருபூமி' வார இதழின் உதவி ஆசிரியராக சேர்ந்த வாசுதேவன் நாயர், 1968 இல் அதன் ஆசிரியராக ஆனார்.
அந்த காலகட்டத்தில் திறமைகள் கொண்ட பல எழுத்தாளர்களை உருவாக்கி, மலையாள இலக்கிய உலகிற்கு பெரிய அளவில் இவர் சேவை செய்தார் என்றே கூறலாம்.
எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி, அனைவராலும் வாசிக்கப் பட்ட புதினம் "நாலுக்கெட்டு' கூட்டுக் குடும்பத்தின் தகர்வை மையமாகக் கொண்ட கதை.
பால்ய காலத்தில் தனிமை உணர்வுடன் வாழ்ந்தவர் எம்.டி.வாசுதேவன் நாயர். இப்புதினத்தில் வரும் அப்புண்ணி கதாபாத்திரம், வாசுதேவன் நாயர்தான் என்று பொதுவாகக் கூறுவார்கள்.
இவர் எழுதிய முதல் நாவல் இது. 1958-ஆம் வருடத்தில் இது எழுதப்பட்டது. கேரள சாகித்ய அகாதெமி விருது இதற்குக் கிடைத்தது. அப்போது இவரின் வயது 25. இதுவரை 14 மொழிகளில் இந்த நாவல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பெருமையைப் பெற்றிருக்கிறது.
1962-இல் வாசுதேவன் நாயர் எழுதிய புதினம் "அசுரவித்து'. இது திரைப்படமாக எடுக்கப்பட்டது. பிரேம்நஸீர், சாரதா நடித்த இப்படத்தை இயக்கியவர் ஏ.வின்சென்ட்.
1964 இல் இவர் எழுதிய புதினம் "மஞ்ஞு'. பின்னர் இது திரைப்படமாக மலையாளத்தில் எடுக்கப்பட்டது. எம்.டி.வாசுதேவன் நாயரே இப்படத்தை இயக்கினார்.
1969 இல் இவர் எழுதிய புதினம் "காலம்'. தேசிய சாகித்ய அகாடெமி விருதை இதற்காக பெற்றார் எம்.டி.வாசுதேவன் நாயர். 1973 ஆம் வருடத்தில் "நிர்மால்யம்' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இப்படத்திற்காக பெற்றார் பி.ஜே.ஆன்டனி.
கேரள அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான விருதும் இதற்குக் கிடைத்தது.
இந்த மகத்தான திரைப்படத்தை இயக்கியவர் எம்.டி. வாசுதேவன் நாயர்.
இவர் எழுதிய 'பள்ளி வாளும் கால் சிலம்பும்' என்ற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது.
1984 ஆம் வருடத்தில் வாசுதேவன் நாயர் எழுதி, மலையாள இலக்கிய உலகில் பரபரப்பாக பேசப்பட்ட புதினம் "ரண்டாமூழம்'. "மகாபாரத' கதாபாத்திரங்களில் ஒன்றான பீமனை மைய கதாபாத்திரமாக வைத்து எழுதப்பட்ட நாவல். பல மொழிகளில் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டது.
ஆங்கிலத்தில் பி.கே.ரவீந்திரநாத் 'நங்ஸ்ரீர்ய்க் பன்ழ்ய்' என்ற தலைப்பிலும், கீதா கிருஷ்ணன் குட்டி 'இட்ண்ம்ஹ : கர்ய்ங் ரஹழ்ழ்ண்ர்ழ்' என்ற பெயரிலும் இதை மொழி பெயர்த்து, அவை நூல்களாக வந்திருக்கின்றன.
எம்.டி.வாசுதேவன் நாயரின் இறுதி நாவல் "வாரணாஸி'. 2002-ஆம் வருடத்தில் இதை இவர் எழுதினார். சர்ய் கண்ய்ங்ஹழ் பாணியை இப்புதினத்திற்காக கையாண்டிருந்தார் எம்.டி.வாசுதேவன் நாயர்.
1995-ஆம் வருடத்தில் இலக்கியத்திற்காக அளிக்கப்படும் உயர்ந்த விருதான 'ஞானபீடம் விருது' எம்.டி.வாசுதேவன் நாயருக்கு அவருடைய வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக வழங்கப்பட்டது.
திரைப்படத்திற்காக இவர் எழுதிய முதல் திரைக்கதை "முறப்பெண்ணு'. 1965-ஆம் வருடம் இப்படம் திரைக்கு வந்தது.
எம்.டி.வாசுதேவன் நாயர் 54 திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். அவற்றில் நான்கு திரைப்படங்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வாசுதேவன் நாயர். அப்படங்கள்... ஒரு வடக்கன் வீர காத (1989), கடவு(1991), ஸதயம்(1992), பரிணயம்(1994)
கேரள அரசாங்கத்தின் சிறந்த திரைக் கதைக்கான விருதை பல படங்களுக்கு இவர் பெற்றிருக்கிறார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஓளவும் தீரவும், நிர்மால்யம், பெருந்தச்சன், பஞ்சாக்னி, நகக்ஷதங்கள், அம்ருதம் கமய, வளர்த்து மிருகங்கள், ஒரு வடக்கன் வீர காதா, த்ருஷ்ண, தய, பழஸ்ஸி ராஜா.
இவர் 6 திரைப்படங்களை இயக்கி யிருக்கிறார்.
கேரள அரசாங்கத்தின் சிறந்த இயக்குநருக்கான விருதுகளை இவர் நிர்மால்யம், கடவு, ஒரு செரு புஞ்சிரி ஆகிய படங்களுக்காக பெற்றிருக்கிறார்.
2005-ஆம் வருடத்தில் இவருக்கு "பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.
எம்.டி.வாசுதேவன் நாயரை 'கோழிக்கோடு நாயகர்' என்று கூறலாம். அந்த நகரத்தில்தான் இவர் 69 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்... ஈடற்ற இலக்கிய சாதனைகளைப் புரிந்திருக்கிறார்.
எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய 3 திரைக்கதைகளை நான் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
அவை..
கன்யாகுமரி, நீலத்தாமரை, ஆரூடம். இவற்றை ஒரே நூலாக "எம்.டி.வாசுதேவன் நாயரின் 3 திரைக்கதைகள்' என்ற பெயரில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது.
எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதி, மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் "ஒரு வடக்கன் வீர கதா'. படத்தின் நாயகன் மம்மூட்டி. அந்த திரைக்கதையை நான் மொழிபெயர்த்தேன். காவ்யா பதிப்பகம் அதை வெளியிட்டது.
எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய கவித்துவத் தன்மை கொண்ட புதினம் "மஞ்ஞு' அதை 'மூடுபனி' என்ற பெயரில் நான் மொழிபெயர்க்க, "நக்கீரன் பதிப்பகம்' நூலாக வெளியிட்டது.
இவை தவிர, எம்.டி.வாசுதேவன் நாயரின் பல அருமையான சிறுகதைகளை நான் மொழி பெயர்த்து, அவை பிரசுரமாகி இலக்கிய வாசகர் களின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக் கின்றன.
எம்.டி.வாசுதேவன் நாயருக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு நடந்திருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு விழாவில் பங்கு பெறுவதற்காக வாசுதேவன் நாயர் வந்திருந்தார். அவரை நான் சந்தித்தேன்.என் பெயர் உள்ள விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன்.
"உங்களின் பெயர்தான் எனக்கு நல்லா தெரியுமே!'' என்றார் எம்.டி.வாசுதேவன் நாயர்.
அதைக் கூறியபோது, என் பெயரை வாசித்துக் கொண்டே புருவத்தை மேல்நோக்கி வளைத்தவாறு, சிரித்துக் கொண்டே... உதட்டைக் குவித்தவாறு... தலையை ஆட்டினார்.
இன்று எம்.டி. என கேரள மக்களால் அன்புடனும் பாசத்துடனும் மரியாதையுடனும் மதிப்புடனும் நினைக்கப்பட்ட... தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மிடையே இல்லை.
அவரின் சாதனைகளை யாராலும் ஈடு செய்யமுடியாது.
காலத்தை வென்று நிற்கும் மகத்தான இலக்கியக் கருவூலங்களை இந்த உலகிற்கு விட்டுச்சென்றிருக்கும் மாபெரும் இலக்கியப் பேரரசர் அவர். இந்தத் தருணத்தில்... அவரின் சில அமரத்துவ படைப்புகளை மொழிபெயர்த்ததற்காக பெருமைப்படுகிறேன்.
அவரை நான் நேரில் சந்தித்த வேளையை மதிப்புமிக்கதாக நினைக் கிறேன்.
அவரின் படைப்புகளைப் போலவே.... எம்.டி.வாசுதேவன் நாயரும் என்றும் என் மனதில் வாழ்ந்துகொண்டேயிருப்பார்.