2018, செப்டம்பர் 09 அறிவுக்களஞ்சிய மாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கவிஞர்களால் சூழப்பட்டிருந்தது. தமிழ்நாட்டுப் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் மலேசியா, இலங்கை பஹரீன் போன்ற நாடுகளிலிருந்தும் வந்த தமிழ்ப் படைப்பாளிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களுக்குள் அளாவளாவிக் கொள் வதை காண முடிந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரண்டு நண்பர்களின் முன்னெடுப்பால் தொடங்கப்பட்ட "படைப்பு' என்ற முகநூல் குழுமத்தின் இரண்டாம் ஆண்டுவிழாதான் அது. சென்ற ஆண்டும் இதே வளாகத்தில் அவர்களின் முதலாம் ஆண்டு விழா சிறப்புற நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

vanampadi

ஒரு முகநூல் குழு வீண் அரட்டை களுக்கு ஆட்படாமல் படைப்பாளிகளை ஒன்றிணைத்து வளரும் படைப்பாளிகளையும் கௌரவிக்கமுடியும் என்பதை இந்தப் படைப்பு குழுமம் நிரூபித்திருக்கிறது. அவர்களது அழைப்பிதழே ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அழைப்பிதழ் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விழா ஒருங்கிணைப்பிற்கு என்று, தனியாக ஒரு குழுவையும் அமைத்திருந்தார்கள். விழா நிகழ்வுகளைப் பதிவு செய்து ஆவணப் படுத்தவும், பங்கேற்பாளர்களின் கருத்துகளை பதிவு செய்யவும் என்றே யூனிக் ஆங்கிள் என்ற நிறுவனம், தாமாக முன்வந்து தகவல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டது.

இதன் அமைப்பாளர் முகமதலி ஜின்னா பொறுப்பில் நண்பர்களின் ஒத்துழைப்புடன் இயங்கும் இக்குழுமம் சாதித்துள்ள சாதனைகள் அளவற்றவை. இக்குழுமத்தில் ஒவ்வொரு மாதமும் சிறந்த கவிஞர்களைக் கண்டுபிடித்து சிறந்த படைப்பாளிகள் விருதினையும் மாதம் ஒருவருக்கு கவிச்சுடர் விருதினையும் அளித்துக் கௌரவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிறந்த கவிதைகளைத் தொகுத்து மாதம் ஒரு மின்னூலாக வும் வெளியிடும் இக் குழுமம் ஆண்டுவிழாவின் போது படைப்பாளிகளுக்குரிய விருதை அளிப்பதுமட்டுமில்லாமல் அவர்களின் கவிதைகளையும் தொகுத்துப் படைப்பு பதிப்பகத்தின் மூலமாகக் கவிதை நூலாகவும் வெளியிட்டுச் சிறப்பித்து கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு, இந்த விருதுகளோடு குழுமத்தின் தோளுரசும் பதிப்பகம், ஓவியம் மற்றும் இலக்கிய இதழான "தகவு' வின் பங்களிப் பாளர்களுக்கும் சிறந்த பங்களிப்பாளர்களுக் கான விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

முதலாம் ஆண்டிலேயே சிறந்த சமூகப் பங்களிப்பிற்கான ஈரோடு தமிழன்பன் விருதை யும், தமிழன்பன் ஐயாவின் பாராட்டையும் படைப்பு குழுமம் தட்டிச்சென்றது.

இரண்டாம் ஆண்டில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்ட படைப்பு குழுமம் 2018 மே மாதம் முதல் ஆசியதாரா என்ற பேராசிரியரை ஆசிரியராகக்கொண்டு "தகவு' என்ற வண்ண பல்சுவை இலக்கிய மின்னிதழையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ஆண்டில் 8 நூல்களை வெளியிட்ட இக்குழுமத்தின் படைப்பு பதிப்பகம் இரண்டாம் ஆண்டில் 10 நூல்களைச் செம்மையாக வெளியிட்டு தங்களது தரத்தை நிரூபித்துள்ளார்கள். அழகிய அட்டை ஓவியங்களும், தேர்ந்த கவிதைகளுமாக திகழும் இந்நூல்களை ஒவ்வொரு இலக்கியப்பிரபலங் களும் வெளியிட, அரங்கம் நிறைந்த ஆண்டுவிழா சிறப்பாக தொடங்கியது.

இந்த ஆண்டு வெளியிட்ட அவர்களின் நூல்களில் நீர்வீதி என்ற நூல், குழுமத்தின் கவிஞர்கள் எழுதிய சிறந்த கவிதைகளின் தொகுப்பாகும். பாதங்களால் நிறையும் வீடு - அவர்களால் ஆண்டுதோறும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவைப் போற்றும்விதமாக நடத்தும் கவிதைப் போட்டியில் தேர்வுசெய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகவும், உயிர்திசை என்ற நூல் அம்மையார் ஹைனூன்பீவி அறக்கட்டளையின் நினைவு பரிசுப்போட்டிக் கவிதைகளாகவும் மிளிர்ந்தது.

அது மட்டுமில்லாமல் அகராதி எழுதிய "வெட்கச் சலனம்' என்ற நூலைக் கவிஞர் பிருந்தசாரதியும், "சின்ட்ரெல்லாவின் தூரிகை' என்ற குறிஞ்சிநாடனின் கவிதை நூலை பேராசிரியர் அபுபக்கர் அவர்களும் அகதா எழுதிய "அசோகவனம் செல்லும் கடைசி ரயில்' கவிதை நூலினை ஈரோடு மகேஷும் "என் தெருவில் வெஸ்ட்மினிஸ்டர் பாலம்' என்ற கோ. ஸ்ரீதரனின் கவிதைத் தொகுப்பை இனிய உதயம் ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களும் "கை நழுவும் கண்ணாடிக்குடுவை' என்ற கவி.விஜயின் ஹைக்கூ கவிதை நூலினை ஹைக்கூ கவிஞர் மு.முருகேஷும் வெளியிட்டு நூல்களின் பெருமைகளைப் பேசி சிறப்புச் செய்தார்கள்.

ஆட்சிப்பணியாளரும் கவிஞருமான ஆண்டன் பெனி வெளியிட்ட "கட்டாரியின் அஞ்சலமவன்' என்ற தாயின் பெருமை பேசும் கவிதை நூல் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் மூன்று மொழிகளும் அடங்கிய நூலாக மலர்ந்துள்ளது. இது இதுவரை யாரும் செய்யாத அரிய முயற்சியாகும்.

தமிழன் பிரசன்னாவால் மிகவும் புகழப்பட்ட "கடவுள் மறந்த கடவுச்சொல்' என்ற கசல் தொகுப்பு படைப்பு, குழும நிர்வாகி ஜின்னாஅஸ்மி என்கின்ற முகமதலி ஜின்னாவின் கசல் தொகுப்பாகும். நூல்களின் அட்டை வடிவமைப்பை கமல்காளிதாஸ் தன் கைவண்ணத்தால் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு நூலின் பெயர்களும்கூட வித்தியாசமான சிந்தனைகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த பேராசிரியர் மன்சூர் அவர்களின் உரையும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் உரையும் படைப்பு குழுமத்தின் வளர்ச்சியை வியப்பின் உச்சத்தில் வைத்துப் பார்த்தது. குழுமத்தின் சார்பில் புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவரான மு.மேத்தா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் பணமுடிப்பையும், நிர்வாகியின் 108 வயதான பாட்டியான நூர்பீபி அவர்களின் கைகளால் கொடுத்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.

மு.மேத்தா, எழுத்தாளர் சூரியகாந்தன் இவர்களெல்லாம் உரையாற்றும்போது வானம்பாடி இயக்கம் மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டதாகவே நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இந்தவிழாவில் இவர்கள், தங்களது பதிப்பக நூல்கள் மட்டுமல்லாமல் மற்ற நூல்களையும் கௌரவப்படுத்த தவறவில்லையென்றே சொல்லவேண்டும்.

குறிப்பாகக் கவிஞர் பிருந்தாசாரதியின் "எண்ணும் எழுத்தும்', கவிஞர் தேன்மொழிதாஸின் 'காயா' என்ற நவீனம் சூடிய கவிதை நூல், மரபு இலக்கியத்தில் இரா. இளமுருகன் அவர்களின் "காவடிச்சிந்து நூறு' கவிஜியின் 'ஊதா நிறக் கொண்டை ஊசிக் கதைகள்', பா. மீனாட்சி சுந்தரம் எழுதிய "முன் மழைக்காலத் தட்டான்கள்' என்ற கவிதை நூல், பிரேமா பிரபாவின் "தொடர்ந்து தோற்கும் புலிக்கடவுள்' மற்றும் மணிமாலா மதியழகன் அவர்களின் இனிய தமிழ் கட்டுரை நூல்களுக்கும் விருதளித்து கௌரவம் செய்யப்பட்டது.

முகநூல் குழுமமாகத் தொடங்கி பேராளுமை கொண்ட இலக்கியக் கூட்டமாக வடிவெடுத்துள்ள படைப்பு குழுமத்தின் இந்த இலக்கியக் கூட்டம், ஒரு குடும்பவிழா போல் சிறந்திருந்ததை நெகிழ்ச்சியுடன் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களும் கவிஞர் மு. முருகேஷ் அவர்களும் தங்களது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

சாதாரணமாக கூடும் இலக்கியவிழா போன்றில்லாமல் கவிஞர்களின் இலக்கியத் திருவிழாவாகவே படைப்பு குழுமத்தின் இரண்டாம் ஆண்டுவிழா சிறப்பாக இருந்தது என்று சொன்னால் மிகைகிடையாது.

விழா முடியும் வரை அரங்கம் நிறைந்திருந்த இந்தக் கவிஞர்களின் திருவிழாவில் பார்வையாளர்களாக பத்திரிகை நண்பர்களுடன் புள்ளிப்பூக்கள் கவிஞர் அமுதபாரதி, பாடகர் நாகூர் ஹனிஃபா அவர்களின் மகன் நௌஷாத் போன்ற இலக்கிய பிரபலங்கள் பலரும் வந்து அமர்ந்திருந்ததை விழாவின் சிறப்பாகவே கருதமுடிகிறது.

மேலும் இதே மேடையில் நிர்வாகி ஜின்னா அவர்கள் உரையாற்றும்போது இந்தப் படைப்பு இயக்கம் இந்த ஆண்டு முதல் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதையும், இதன் மூலம் இனி, நலிந்த எழுத்தாளுமைகளுக்கும், அவர்களது பிள்ளைகளின் படிப்பிற்கும் உதவி செய்யும் அமைப்பாக மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

படைப்பு இயக்கத்தின் அடுத்த ஆண்டுவிழாவில் "தகவு' இலக்கிய மின்னிதழ் மாத இதழாக புத்தகவடிவிலும் மலருமென எதிர்பார்ப்போம்.

Advertisment