து, முகம்மது அலி ஜின்னாவின் அரசியல் பணி குறித்த கட்டுரை அல்ல. அவரது அகவாழ்வு பற்றியது.

விடுதலைக்கு முற்பட்ட இந்தியாவில், முகமது அலி ஜின்னா “இந்தியன் முஸ்லீம் லீக் என்ற அமைப்பைத் துவக்கி, இந்தியா முழுவதிலும் பரவியிருந்த இசுலாமிய சமூகத்தினரை ஓரணியில் திரட்டினார். காங்கிரஸுடன் இணைந்து, விடுதலைப் போராட்டக்களத்தில் பெரும் பங்காற்றினார். அவர் பாராட்டுக்களையும், வசவுகளையும் ஒருசேர எதிர்கொண்ட பெருமகனார்.

பரவலாக அறியப்படாத அவரது அகவாழ்வைக் குறித்துச் சொல்லவே இக்கட்டுரை.

இன்றைய பாகிஸ்தானின் கராச்சி மாநகருக்கு அருகே யுள்ள பணேலி என்ற சிறு கிராமத்தில் ஜின்னா 25.12.1876 அன்று பிறந்தார். இவரது தந்தையார் தனது பொருளாதார இடர்ப்பாடுகளைக் கருதாது, ஜின்னாவை லண்டன் மாநகரில் பணிபுரிய அனுப்பினார். அவர் பயணம் மேற்கொள்ளும் முன்னர், அவரது அன்னையார் அவருக்கு திருமணம் செய்துவைத்தார். ஆனால் இந்தப் பெண்மணி ஜின்னா லண்டனுக்கு சென்ற சில நாட்களுக்குள் காலமாகிவிட்டார். ஜின்னா அங்கு சில மாதங்கள் பணிபுரிந்துவிட்டு, சட்டக்கல்லூரியில் சேர்ந்து, படித்து, வழக்கறிஞராக இந்தியா திரும்பினார். வழக்குரைஞர் தொழிலில் சிகரத்தைத் தொட்ட அவர் அரசியலிலும் ஈடுபட்டு, அனைவரது கவனத்தையும், தன் தவிர்க்கமுடியாத ஆளுமைப் பண்புகளால் ஈர்த்தார். சர் தீன்ஷா என்ற பார்சி செல்வந்தரின் நட்பும், ஜின்னாவினும் பல ஆண்டுகள் இளைய அவரது மகளின் அறிமுகமும் அவருக்குக் கிடைத்தன. ஒருமுறை தீன்ஷா, தனது மனைவி, மகளுடன் டார்ஜிலிங்கிற்கு கோடை விடுமுறைக்குச் சென்றபோது, ஜின்னாவும் அவர்களுடன் சென்று இரண்டு மாதங்கள் இருந்த போதுதான், அப்போது பதினாறே வயது நிறைந்திருந்த ரத்திக்கும், அவரைவிட இருபத்து நான்கு ஆண்டுகள் மூத்தவரான ஜின்னாவிற்கும் இடையே நட்பு அரும்பியது.

Advertisment

ஆனால், ஜின்னா கேளிக்கைகளில் ஈடுபாடு அற்றவராயும், அரசியலில் மிகுந்த ஆர்வமுடையவராயும் இருந்தார். ஆகவே, அவர் ரத்தியின் அறிமுகத்தை, நட்பு என்ற எல்லைக்கு அப்பால் கருதவில்லை.

ஜின்னாவின் இதயத்தில் இடம்பிடிக்க முடியாமல் தவித்த ரத்தி, “1916’’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை அவரது காதல் வேட்கையின் ஆழத்தைப் படம்பிடித்துக் காட்டும். அக்கவிதையின் ஒரு பகுதி, வாழ்வு முழுமையையும், காதலின் மது நிறைத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் மட்டும் ஏன் சோகமாக இருக்கின்றேன். ரத்திக்கு 12 வயதே ஆகியிருந்தபோது, அவளுடைய இலக்கிய தாகத்தைப் புரிந்துகொண்ட தந்தையார் தீன்ஷா, அவளுக்கு, ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் டென்னிச னின் கவிதைத் தொகுதியை வாங்கிப் பரிசளித்தாராம்! ரத்தி இவ்வாறு காதலில் கசிந்துருகிக் கொண்டிருந்த வேளையில், ஜின்னா இந்தியன் முஸ்லீம் லீகும், காங்கிர ஸும் இணைந்து லக்னோ நகரில் நடத்தவிருந்த மாநாட்டிற்கான, ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டி ருந்தார். அவருடைய இலக்குகள் மிகமிக உயரத்தில் அமைந்திருந்தன.

லக்னோ மாநாட்டிற்கு ஜின்னா செல்ல இருப்பதை அறிந்த ரத்தி, தானும் அங்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தைத் தன் பெற்றோ ரிடம் தெரிவித்தபோது அவர்கள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. ஐரோப்பிய மரபுகளை ஒட்டி, ரத்தியின் பெற்றோர் மகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை, இன்னொரு பெண்மணியிடம், அவுட் சோர்சிங் செய்திருந்தார்கள் என்ற செய்தியை, திருமதி ஷீலா ரெட்டி, தனது “மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜின்னா என்ற புத்தகத்தில் நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார்.

Advertisment

லக்னோ மாநாட்டு நடவடிக்கைகளின் நடுவே, ரத்தி, தன்னைக் கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்ட பெண்ணுடன், ஜின்னாவைச் சந்திக்கின்றார். தனது காதலையும் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றார். அதன் பின்னர், ஜின்னாவிடம் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழுகிறது. அவரும் ரத்தியிடம் காதல் வயப்படுகிறார்.

ஆனால் அந்தக் காலகட்டத்தில், மத வேறுபாடுகளைக் கடந்த திருமணங்கள் பரவலாக நடைபெற்றிருக்கவில்லை. தேசிய அளவில் புகழ்பெற்றிருந்த கவிதாயினி திருமதி சரோஜினி நாயுடு அப்போது தீன்ஷா குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருந்தார். அப்போது அவருக்கு ரத்தி வயதில் இரு பெண்கள் இருந்தனர். வங்காளப் பார்ப்பனரான அவர், தனது இளமையில், “மதராஸி (ஆந்திரா) நாயுடு ஒருவரைக் காதலித்து, பிறரது எதிர்ப்பைப் பொருட்படுத்தாது திருமணம் செய்து கொண்டிருந்ததால், ரத்திக்கு அவர்பால் மிகுந்த மரியாதை உண்டு. ஆகவே, அவரிடம் ரத்தி, ஜின்னா மீது தான் கொண்டிருந்த காதலைப் பற்றித் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் பெண்களிடம் தமது காதலை வெளிப்படுத்தினால், அது ஓர் உயர்ந்த செயலாகாது என்ற தவறான கருத்து ஐரோப்பிய ஆண்களிடம், இருந்தது.

பண்டை நாட்களில், ரோமனிய இளைஞர்களி டையேகூட, "காதல் வீழ்க! வீரம் வாழ்க!' என்று வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் மரபு இருந்தது. ஐரோப்பிய மரபுகளில் ஊறித் திளைத்திருந்த ஜின்னா ரத்தி, தனது காதலை நேரடியாகத் தெரிவித்தவுடன், மிகவும் மனம் நெகிழ்ந்திருக்க வேண்டும்.

தோற்றத்தில் மட்டுமல்ல, பண்புநலன்களிலும் மிக உயர்ந்த மனிதராய் இருந்த ஜின்னா, நேரே, தீன்ஷாவிடம் சென்று, தான் அவரது மகளைத் திருமணம் செய்துகொள்ளுவதாகத் தெரிவித்தார். பழமைவாதியான தீன்ஷா, ஜின்னாவின் இந்த கோரிக்கையை மூர்க்கத் தனத்துடன் நிராகரித்து விட்டார். அதோடு மட்டுமல்ல, நீதிமன்றம் சென்று, ஜின்னா தனது மகளை ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள திட்டம் தீட்டுகிறார் என்று புகாரளித்து, ஒரு தடையாணை கோரினார்.

தந்தையின் இந்த எதிர்ப்பைக் கண்ட ரத்தி, தனக்கு பதினாறு வயதே நிறைந்திருந்த அந்த நிலையில், மனம் துவண்டு, தன் அறைக்குள் போய் படுத்துக்கொண்டு, யாருக்கும் கதவைத் திறக்க மறுத்துவிட்டார். உணவுண்ண வும் அவர் மறுத்துவிட்டதால், அவர் உடல்நிலையும் சில நாட்களில் கேடுற்றது. மகளின் இந்நிலையைக் கண்ட, ரத்தியின் பெற்றோரும் மனமும் உடலும் வாடினர். தனக்கு 18 வயது நிறைவுற வேண்டும் என்று மிகுந்த மன உறுதியுடன், ரத்தி காத்திருந்தார். 18 வயது நிறைவுற்றவுடன் ஒரு நாள் பின்மாலைப்பொழுதில், தனது வீட்டைவிட்டு வெளியேறி, நேரே ஜின்னாவின் இல்லத்திற்குச் சென்றார். அவர்கள் இருவரும், ஏற்கனவே விவாதித்து முடிவுசெய்திருந்தபடி, பம்பாய் நகரின் ஜூம்மா மசூதிக்குச் சென்று, இசுலாமியப் பெரியோர் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்தநாள் காலையில், அவர்களது திருமணம் நிறைவேறியது குறித்த செய்தியை செய்தித்தாட்களின் மூலமாக அறிந்த தீன்ஷா அதிர்ந்து போனார். இந்த திருமணச் செய்தியை, சரோஜினி நாயுடு, தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய மடலில், இறுதியாக ஜின்னா, தான் மிகவும் விரும்பிய நீலமலரைப் பெற்றுக்கொண்டார் என்று கவிதைமொழியில் பதிவுசெய்துள்ளார். ஆனால் அப்போது அரசியல் களத்தில் புகழ்பெற்றிருந்த இன்னொரு பெண்மணியான விஜயலட்சுமி பண்டிட், ஜின்னா தன்னினும் இருபது ஆண்டுகள் இளைய பெண்ணான ரத்தியைத் திருமணம் செய்துகொண்டது பொருத்தமில்லாததொன்று என்று கருத்துத் தெரிவித்தார்.

திருமணம் முடிந்தவுடன், ஜின்னா தனது மனைவி விரும்பியபடி தனது தலைமுடி, மீசை, தொப்பி, மற்றும் ஆடைகளையும் ஓரளவு மாற்றிக்கொண்டார் என்பது, அவரது ஆழ்ந்த காதலுக்குச் சான்று. மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறைக்கு முந்திய நாளன்று இரவு ஜின்னா திருமணம் செய்துகொண்டதால், தீன்ஷாவால் உடனடியாக நீதிமன்றக் கதவுகளைத் தட்டமுடியவில்லை.

திருமணம் முடிந்தபின், ஜின்னாவும், ரத்தியும், லக்னோ நகரில் இருந்த நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில், அவரது இல்லத்திற்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினர். இந்த இரண்டு நாட்களில் ஜின்னா எவ்வாறு மாறியிருந்தார் என்பதை, அவரது நண்பர், பின்னொரு நாளில், "எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் எதையும் நிதானமாகவும் தர்க்கரீதியாக அணுகும் முறையைக் கடைப்பிடிக்கும் ஜின்னா, இறுதியில், காதல் வேட்கையின் முன் தோற்றுப் போனார்' என்று எழுதினார்.

இதற்கு நடுவே இந்தியாவின் பல இதழ்களும், செய்தித் தாட்களும், ஜின்னா - ரத்தியின் கலப்புத் திருமணம் குறித்து பலவாறு விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. அவர்களது திருமணம் நிகழ்ந்த வெள்ளிக்கிழமையை “கறுப்பு வெள்ளிக்கிழமை’’ என்று பல பார்சி செய்தித்தாட்கள் குறிப்பிட்டன. பெரும் செல்வந்தரான தீன்ஷாவின் மகளான ரத்தியின் சொத்துக்கு ஆசைப்பட்டு, ஜின்னா ரத்தியைத் திருமணம் புரிந்துகொண்டார் என்று அவதூறு பரப்பின.

இவை எதையும் பொருட்படுத்தாது, இருவரும் நைனிடால் சென்று ஒரு மாதம் தங்கியிருந்தனர். ஒரு மாத காலம் தனது தலையாய அரசியல் பணி எதிலும் ஜின்னா ஈடுபடாமல் இருந்தது இதுவே முதன்முறையாகும்.

இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத தீன்ஷா, நீதிமன்றத்தில் இன்னொரு வழக்கு தொடர்ந்து ஜின்னா தனது மகளை கடத்திக்கொண்டு போய்த் திருமணம் செய்துகொண்டார் என்று புகாரளித்தார். ஆனால் நீதிமன்றத்தில், ரத்தி, "ஜின்னா என்னைக் கடத்தவில்லை. நான் தான் அவரைக் கடத்தினேன்' என்று வாக்குமூலம் அளித்தபோது, தீன்ஷா நொறுங்கிப் போனார்.

பார்சி மதவாதிகள், இக்கலப்புத் திருமணம், தங்களது மதத்திற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது என்று கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மத மாநாடுகள் நடத்தி, எதிர்காலத்தில் இதுபோன்ற கலப்புத் திருமணங்கள் நடந்தால், திருமணத்தை நடத்திவைத்த மதகுரு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண், பார்சி மதத்திலிருந்து விலக்கப்பட வேண்டும், இதற்கு அப்பெண்ணின் பெற்றோர் ஒத்துழைக்காவிடின் அவர்களும், மதநீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்கள் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் பார்சி குருமார் யாரும் செல்லக்கூடாது என்றும் தீர்மானம் கொண்டுவந்தனர்.

பார்சி மதத்தின் தீவிரப் பற்றாளர்களிடமிருந்து, இவ்வாறு வெறுப்பு கலந்த எதிர்ப்பு தோன்றியபோதும் ஜின்னாவும் ரத்தியும் நிலைகுலையாமலேயே இருந்தனர்.

ddaf

அவர்களது சமூக வட்டத்திலிருந்த பலர் அவர்களிட மிருந்து விலகிவிட்டனர். இதில் ரத்தியை மிகவும் பாதித்தது, அவரது அன்னையாரே, தன் மகளுடனான தொடர்பை முற்றிலுமாய்த் தவிர்த்துவிட்டதுதான்.

ஆனால் இந்நிகழ்வின் மறுவிளைவாய், ஜின்னா நாடெங்கும், ஒரு பண்பட்ட சீர்திருத்தவாதி என்று அறியப்பட்டு போற்றப்பட்டார். நாள் செல்லச் செல்ல, அவர்கள் இருவரிடையே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலையும், ஆழமாக விதைக்கப்பட்டு துளிர்த்தது. ஜின்னாவின் முதல் காதல் அரசியல் என்றாலும், அவள் தன் இன்னுயிர் மனைவியை உயர்வாய் மதித்தார். தன் வீட்டு நிர்வாகம் அனைத் தையும் அவரிடமே ஒப்படைத்தார். ரத்தியும், ஜின்னவுடன் காரில் அலுவலகம் செல்வதும், அங்கு முக்கிய கூட்டங்கள் நடைபெறும் வேளையிலெல்லாம் அவருக்கு அருகே அமர்ந்து கொள்வதையும் வழமையாக மேற்கொண்டார். ஜின்னா, தனது மனைவிக்கு அந்த உரிமையை முழுமையாக அளித்திருந் தார் என்பதுதான் அவரது பெருமைக்கு சான்று. பெண்ணுரிமை குறித்த விஷயங்களில், அவரது கருத்துக்கள் விவாதத்திற்கு இடமின்றி, ஒரு மேன்மை யான நிலையில் இருந்தன.

ஒருமுறை ஜின்னாவும் ரத்தியும் பம்பாய் ஆளுநரின் துணைவியாரான திருமதி வெல்லிங்டனுடன் உணவருந் தும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, ரத்தி சற்று தாழ்வாக கழுத்துப்பகுதி தைக்கப்பட்ட ஆடை ஒன்றை அணிந்திருந்ததை திருமதி வெல்லிங்டன் ரசிக்கவில்லை. தனது பணியாளை அழைத்து, "திருமதி ஜின்னாவிற்கு குளிர்கிறது. அவருக்கு ஒரு சால்வை கொண்டுவந்து கொடுங்கள்' என்றார். இதைக் கேட்டவுடன் விருட்டென்று எழுந்த ஜின்னா, "திருமதி ஜின்னா, குளிர் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், அவரே சால்வையொன்றைக் கேட்பார்' என்று ரத்தியை விட்டுக் கொடுக்காமல் பதிலளித்தார். இந்நிகழ்விற்குப் பிறகு அவரும் ரத்தியும் திருமதி வெல்லிங்டனைச் சந்திக்கவேயில்லை.

jennahஜின்னா பலமுறை இம்பீரியல் அசெம்பிளிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே அரசியலையும் அவரையும் தனித்தனியேப் பிரித்துப் பார்ப்பதென்பது எந்த ஆய்வாளராலும் செய்யமுடியாத ஒன்று. அதே போல ஜின்னா ரத்தி இணையரின் அகவாழ்வும் அரசிய லோடு தொடர்பு கொண்டே இருந்தது.

கவர்னர் வெல்லிங்டன் பணி ஓய்வுபெற்று இங்கிலாந் திற்கு திரும்பவேண்டிய வேளை வந்தபோது, பம்பாயிலிருந்த பலர், அவருக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் கொடுக்க வேண்டுமென்று முடிவுசெய்தனர். ஆனால் ஜின்னாவும் பிறரும், ஓர் ஆங்கிலேய அதிகாரிக்கு பாராட்டுப் பத்திரம் அளிப்பது, நமது அடிமை நிலையைத்தான் சுட்டிக்காட்டும் என்று கருதி, எதிர்ப்புத் தெரிவித்தனர். இருதரப்பினரிடையேயும் வாக்குவாதம் முற்றி இறுதியில் ஓட்டெடுப்பின்மூலம், இதற்கு முடிவுகாணலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பாராட்டுப் பத்திர ஆதரவாளர்கள் இதில் எந்த முறைகேடும் செய்துவிடக் கூடாது என்பதற்காக ஜின்னா வும் அவரது ஆதரவாளர்களும், ஓட்டெடுப்பு நடக்க இருந்த அரங்கிற்கு முன்னதாகவே வந்துவிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ரத்தியும் ஜின்னா வுடன் வந்துவிட்டார். அதோடு உணர்ச்சி பொங்கிய நிலையில், அங்கு கூடியிருந்தோரிடையே ஐந்து நிமிடம் உரையாற்றினார். கூச்சலும் கலவரமும் அதிகமானபோது, காவலர் உள்ளே வந்து, ரத்தியை, அந்த இடத்திலிருந்து உடனடியாக நீங்கச் சொல்லி வற்புறுத்தினர். ரத்தி அதற்குப் பதிலாக, "நான் இந்த நாட்டின் குடிமகள். என்னை நீங்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது'என்று சொல்ல, காவலர் தண்ணீர் பாய்ச்சி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்தனர். ரத்தி உடல் முழுவதும் நனைந்த அப்போது, அவர் தாய்மை நிலை எய்தி ஐந்து மாதங்கள் ஆகியிருந்தன.

பாராட்டுப் பத்திரத் தீர்மானம் வெற்றிபெற்றது என்று போலியாக அறிவிக்கப்பட்டாலும், “பம்பாய் க்ரானிக்கிள்’’ என்ற பத்திரிகை, “இது உண்மையில் ஆளுநருக்கு அவமானம்’’ என்று அடுத்தநாள் தலையங் கம் எழுதியது. இதனால் எரிச்சலுற்ற ஆங்கிலேய அரசு, உடனடியாக, அந்தப் பத்திரிகையின் ஆசிரியரான ஹார்னிமேன் என்ற ஆங்கிலேயரை நாடு கடத்தியது.

ஒரு மாதம் கழிந்த பின்னர், சரோஜினி நாயுடு லண்டனிலுள்ள இந்திய ஆதரவாளர்களுடன் கலந்துபேச பயணமானபோது அவர் ஜின்னாவிற்கும் அழைப்பு விடுத்தார். ரத்தியின் முதிர்ந்த தாய்மை நிலை இதற்கு இடையூறாக இல்லை. ஜின்னா-ரத்தி இருவரும், சரோஜினி நாயுடுவுடன், இருபது நாட்கள் பயணமாகப் புறப்பட்டனர்.

jennaஆனால் அந்த இருபது நாள் பயணம் ரத்திக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. தாய்மையுற்றிருந்த காரணத்தினால், கப்பலில் நிகழ்ந்த எந்த கேளிக்கையிலும் அவரால் கலந்துகொள்ள முடியாமல்போயிற்று. மிகவும் உடல் சோர்வுற்ற நிலையில், அவர் எப்போதும் தன் அறைக்குள், படுக்கையிலேயே இருக்கும்படியாயிற்று.

லண்டன் போய்ச் சேர்ந்தவுடன், ஜின்னா, தான் வழக்கமாகத் தங்கும் விடுதியைத் தவிர்த்துவிட்டு, ரத்தியின் தாய்மை நிலையைக் கருதி ஒரு பெரிய வீட்டையே வாடகைக்கு எடுத்துக் கொண்டார். ரத்திக்கு உதவி செய்வதற்காக நிறைய பணிப்பெண்களை அமர்த்தினார். வீடு முழுவதும் ரத்தியின் பொருட்களும், ஆடைகளும், அவரது செல்லப் பிராணிகளான நாய்க் குட்டிகளும் அவைகளுக்கான உணவும் குவிந்து கிடந்தாலும், ஜின்னா அந்தச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளப் பழகிக்கொண்டார். ரத்தியின் நாய்களையும் பூனைகளையும் அவரது “செல்லப் பிராணிகள் துறை என்று ஜின்னா நகைச்சுவையுடன் குறிப்பிடும் அளவுக்கு அவர் ரத்தியுடன் மன இசைவு கொண்டுவிட்டார்.

அன்றாடச் செய்தித்தாட்களும், அரசியல் பேசும் நண்பர்களும்தான் ஜின்னாவின் உலகமாயிருந்தது. விரைவில் இந்தியா விடுதலைபெறும், அவ்வமயம், அரசியலில் தனக்கொரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருந்த அந்த அரசியல் மேதை, திருமணத்திற்குப்பின், தன் மனைவியின் பிறந்த நாளையும் திருமண நாளையும் மறந்துவிட்டார்.

இதனால், இணையருக்கிடையே பூசல் முற்றிய சூழ்நிலையில், ரத்திக்கு சரோஜினி நாயுடுவின் தொடர்பும் பரிவும், அவரது மகள்களான பத்மஜா, லீலாமணி இருவருடனான நட்பும்தான் ஆறுதலைத் தந்தன. இம்மூவருடன் இவர் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றத்தில் அடங்கியுள்ள செய்திகள்தான், ஜின்னா - ரத்தி இணைய ரைப் பற்றி அறிந்துகொள்ளத் துணை நிற்கின்றன.

சரோஜினி நாயுடு, ஜின்னாமீது தான் வைத்திருந்த உயர்ந்த நட்பின் அடிப்படையில், அவருக்கு “நல்லெண் ணத் தூதுவர் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு சிறு அழகிய பெட்டியைப் பரிசளித்துள்ளார்.

ரத்தியும் ஜின்னாவும் லண்டனில் இருந்தபோது, ரத்தி கணவரிடம், ஒரு மாலை, நாடகம் பார்க்கச் செல்லவேண்டும் என்ற அவாவை வெளிப்படுத்தினார்.

ஜின்னாவும், அதற்கேற்றாற்போல் தன் பணிகளை யெல்லாம் மாற்றியமைத்துக்கொண்டு மிகுந்த மனமகிழ்வுடன் தன் காதல் மனைவியை நாடக அரங்கிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர்கள் இடையிலேயே தங்களது வீட்டுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று, ரத்திக்கு தாய்மைப் பேற்றின் வலி துவங்கிவிட்டதால்.

ரத்தி - ஜின்னாவின் பெண்குழந்தை 14.08.1919 அன்று பிறந்தது. சில நாட்களில் அவர்கள் மூவரும் இந்தியா விற்குத் திரும்பினர்.

இந்தியா திரும்பியவுடன், வழக்கம்போல் ஜின்னா தனது அரசியல் பணிகளைத் தீவிரமாகத் துவங்கிவிட்டார். குழந்தையைக் கவனித்துக் கொள்ள ஏராளமான பணிப்பெண்கள் அமர்த்தப்பட்டிருந்ததால், ரத்தி ஏதோ ஒருவிதத்தில் பற்றும் பாசமும் அற்றவராக மாறிப்போனார். காதல், திருமணம், குழந்தை என்ற மூன்றோடு தனது வாழ்க்கை முடிந்துவிடுமோ என்று பயந்தார். இந்த பயத்தின் காரணமாக அவர் மிகுந்த தனிமைப்பட்டுப் போனார். கேளிக்கைகள் நிறைந்த பழைய வாழ்க்கை முறைக்கு அவர் மனம் ஏங்கியது. குழந்தை பிறந்து ஓராண்டு ஆன பிறகு, அதற்கோர் பெயர்கூட சூட்டப்படாத நிலையில், குழந்தையையும் ஜின்னாவையும் பம்பாயில் விட்டுவிட்டு தான் மட்டும், சரோஜினி நாயுடுவின் ஊரான ஹைதராபாத்துக்குச் சென்றார். ஜின்னாவால், இந்தப் பயணத்தில் கலந்து கொள்ள முடியாததற்குக் காரணம், நிஜாம் ஆளுகையில் அவரது கடந்தகால பேச்சு ஒன்றுக்காக ஹைதராபாத்துக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது தான்.

ஆயினும், ரத்தி மேற்கொண்ட இந்தத் தனிப்பயணம், அவருக்கும் ஜின்னாவிற்கும் இடையே மேலும் பூசல்களைத் தோற்றுவித்தது. மௌன யுத்தம் அன்றாட நிகழ்வாயிற்று. கணவரைப் பற்றியும், குழந்தையைப் பற்றியும் கவலைப்படாது எந்த அளவுக்குத் தன் தோழிகளுடன் ஹைதராபாத்தில் மகிழ்ச்சியாகவும் உல்லாசமாகவும் ரத்தி சுற்றித் திரிந்தாரோ, அந்த அளவுக்கு, அவர் பம்பாய் திரும்பியவுடன், கசப்பான சூழ்நிலையை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு உள்ளானார். ஹைதராபாத்தில், அவர் நினைத்த பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்தது, ஜின்னாவிற்கு உடன்பாடாயில்லை.

இந்தச் சூழ்நிலையில் ரத்தி, தனது சினத்தை, ஜின்னாவின் கடைசித் தங்கையான பாத்திமாமீது காட்ட ஆரம்பித்தார். கணவர் மீது கொண்ட கோபத்திற்கு இது ஓர் வடிகாலாய் அமைந்தது. பாத்திமா தன் தம்பியை அன்புடன் ‘ஜின்’ என்று அழைத்தபோதெல்லாம் ரத்தி எரிச்சலுற்றார். ஜின்னாவினும் ஏழு வயது இளையவரான பாத்திமா, பம்பாயில் இன்னோர் சகோதரியின் வீட்டிலிருந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், தன் தம்பி வீட்டிற்கு வந்து, அன்றைய நாள் முழுவதையும் அங்கு கழிப்பதை வழமையாகக் கொண்டிருந்தார். ரத்தியும், மூன்று இளைய சகோதரர்களோடு பிறந்து வளர்ந்திருந்தபோதும், அவரால், ஜின்னா-பாத்திமா இருவரிடையேயான பாசப்பிணைப்பை இயல்பாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை.

ஜின்னாவிற்கு மூத்த சகோதரிகள் இருவர் இருந்தனர். அவர் லண்டனிலிருந்து திரும்பி, தனது கடின உழைப்பால் சமூகத்திலும் பொருளாதார நிலையிலும் ஓர் உயர்ந்த நிலையை எட்டியவுடன், தன் மூத்த சகோதரிகள் இருவருக்கும், தானே திருமணம் செய்வித்தார். கடைசித் தங்கையான பாத்திமாவை கல்கத்தா பல் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தார். பாத்திமா, பம்பாயிலிருந்து கல்கத்தாவிற்குச் சென்றவுடன்தான், ரத்தியின் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் மீண்டும் துளிர்விட்டன! தனது மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக, கணவருடன் ஊட்டிக்கு புறப்பட்டார்.

ஊட்டியில் ஜின்னாவும் ரத்தியும் இருந்த ஒரு மாதமும், ஜின்னா வழக்கம்போல் தன் அரசியல் செயல்பாடுகளிலேயே தீவிரமாக இருந்தார். இதற்கு நடுவே, மகாத்மா காந்தி, ரத்திக்கு ஒரு கடிதம் எழுதி, “ஜின்னாவை ஹிந்துஸ்தானி அல்லது குஜராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள வையுங்கள் என்று உரிமையுடன் வைத்த கோரிக்கை அவருக்கு எரிச்சலூட்டியது! ரத்தி மகாத்மா காந்தி பால் வைத்திருந்த மரியாதையின் காரணமாக, அவர் திரட்டிய “உலகப் போர் நிதிக்கு’’ ஒரு பெரிய தொகையை அனுப்பியிருந்தார். ஜின்னா அதையறிந்தும் ரத்தியிடம் ஒன்றும் கேட்காதது அவருடைய பெருந்தன்மைக்குச் சான்று.

அதேநேரத்தில் ஒருமுறை ரத்தி, சரோஜினி நாயுடுவைச் சந்திக்க தாஜ் ஓட்டலுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. ஏதோ அரசியல் பணியை முன்னிட்டு அவர் வெளியே சென்றிருக்கவேண்டும். ரத்தி ஒரு சிறு துண்டுக் காகிதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்துவிட்டுத் திரும்பினார். “நாளை நான் வரும்போது, உங்களைச் சந்திப்பதற்கு இடையூறாக எந்த மனிதரோ அல்லது மகாத்மாவோ இருந்தாலும் நான் அவர்களைப் பொருட்படுத்தமாட்டேன்!’’

ரத்தி, தனது மனதிற்கு ‘சரியென்று தோன்றுவதை சற்றும் தயக்கமில்லாமல் வெளிப்படையாகக் கூறிவிடுவார். ஒருமுறை வைஸ்ராய் லார்ட் ரிடிங் என்பவரோடு ஜின்னாவும் ரத்தியும் உணவருந்திக் கொண்டிருக்கும்போது, ரிடிங், "நான் ஜெர்மனிக்குப் போக வேண்டுமென்று நினைக்கிறேன், ஆனால் அது முடியவில்லை' என்றார். ரத்தி ‘ஏன்’ என்று வினவ, ரிடிங், "ஆங்கிலேயர்களை ஜெர்மனியார் விரும்புவதில்லை' என்று பதிலளித்தார். சற்றும் தாமதியாத ரத்தி உடனே ரிடிங்கிடம், "அப்புறம் எப்படி இந்தியாவிற்கு வந்தீர்கள்' எனக் கேட்டாராம்!

ஜின்னா, மகாத்மா காந்தியுடன், கிலாபத் பிரச்சனையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். முதல் உலகப்போரில் துருக்கி தோற்றவுடன் அரேபியாவிலுள்ள மசூதிகளெல்லாம் இசுலாமியர் அல்லாதாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, அதை எதிர்த்து இந்தியாவில் கிலாபத் இயக்கம் தோன்றியது. இசுலாமியர்கள் தொடர்பான இப்பிரச்சினையில் காந்தி ஈடுபட்டது, “அவர் அதில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்’’ என்ற கண்ணோட்டத்தில் ஜின்னா வால் பார்க்கப்பட்டது. இதனால், ஜின்னா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈடுபடாது ஒதுங்கியே இருந்தார்.

ஊட்டியிலிருந்து ஜின்னா-ரத்தி இருவரும் பம்பாய் திரும்பியவுடன், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றனர். ஜின்னா -

காந்தி ஆதரவாளரிடையே அங்கு பெரிய மோதலே வெடித்தது. மேடையில் ஜின்னாவால் பேசமுடியவில்லை. தன் கருத்துக்களை கூட்டத்தினருக்குச் சொல்லமுடியவில்லை. மேடையில், ஜின்னாவின் அருகே ரத்தியும் அமர்ந்திருந்தபோது, கூட்டத்தினர் பலர், அவர் ஆடையணிந்திருந்த முறையை விமர்சிக்க ஆரம்பித்தவுடன் மனம் கசந்த ரத்தி, தன் கணவரின் பொருட்டு அந்த அவமானத்தை ஏற்றுக்கொண்டு மேடையிலிருந்து நீங்கினார். கை இல்லாத சட்டை, மற்றும் சேலையுடன் ரத்தி வந்திருந்ததுதான் அடிப்படைவாதிகளுக்கு பிடிக்காமல்போயிற்று.

கல்கத்தாவிலிருந்து ஜின்னாவும் ரத்தியும் பம்பாய் திரும்பியபோது, வழியில் அகோலா என்ற ரயில் நிலையத்தில், காந்தியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு அவர்களுக்கெதிராக ஆர்ப்பரித்ததை ரத்தியால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பம்பாய் திரும்பியவுடன், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்து ஒரு மடல் எழுதி அனுப்பினார். “இதுதான் நீங்கள் உங்கள் ஒத்துழையாமையை வெளிப்படுத்தும் முறையா!’’ என்று கணவருக்கு ஆதரவாக அவர் எழுப்பிய கேள்வியிலிருந்த நியாயத்தைப் பலர் ஏற்றுக் கொண்டனர். ரத்தியின் இந்த ஆதரவு ஜின்னாவிற்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. ஒரு தாயைப்போல அவர் தனது கணவருக்காகப் போராடி, அவரைப் பாது காக்க முனைந்தது அவருக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும் தந்தது. எனினும், அவர் அரசியல்வாதிகள் அனைவரும் தடித்த தோலுடன் இருக்கவேண்டும் என்ற உண்மையை அறிந்தே இருந்தார்.

ஜின்னா, காந்தி ஆகிய இருவரிடையே முளைத்த இந்தக் கருத்து வேறுபாட்டினால், ஜின்னா - ரத்தி இருவரின் சமூக வட்டம் மிகவும் சுருங்கியது. நீண்டகால நண்பர்கள் பலர் கூட தொடர்பைத் தவிர்த்தனர். ஜின்னா இந்த நிலையைப் புரிந்துகொண்டாலும், வயதில் அவரினும் மிக இளையவரான ரத்திக்கு, இந்த மாறுபட்ட சூழ்நிலை வெறுப்பைத் தந்தது. ஜின்னாவையும் குழந்தையையும் தனியே விட்டுவிட்டு தான் மட்டும் ஐரோப்பா சென்றார். மனைவியின் குணநலன்களை முற்றிலும் புரிந்திருந்த ஜின்னாவால், ரத்தியை வெறுக்கமுடியவில்லை. ரத்தி லண்டனில் இருந்தபோது அவரைப்போய்ப் பார்த்தார். ரத்தியின் குடும்ப நண்பரான கஞ்சி துவாரகதாஸ் எழுதிய புத்தகமொன்றில், “ரத்தியைத் தவிர்த்து, ஜின்னாவிற்கு வாழ்க்கை ஏதுமில்லை’’ என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து, அவர்களது கணவன் மனைவி உறவின் ஆழம் எத்தகையது என்பதை நாம் உணரலாம். கணவனைத் தன் “கைப்பிடிக்குள்’ வைத்துக் கொள்ளவேண்டும் என்ற சராசரி பெண்ணின் ஆசை ரத்திக்கும் பொருத்தமாயிருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம், ஐரோப்பாவிலிருந்து திரும்பிய ரத்தி கடும் நோயில் வீழ்ந்தார். மருத்துவர்கள் ரத்தியைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோதுதான் அவரது தொடர் புகைபிடிக்கும் பழக்கம், அளவுக்கு அதிகமாக மது அருந்தியமை, எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் பாரிஸில் தங்கியிருந்தபோது, போதைப் பொருளுக்கு அடிமையாகியிருந்தது போன்றவையெல்லாம் தெரிய வந்தன. காலத்தே உண்ணாமையும். தரமற்ற உணவுப் பொருட்களை உண்பதும் ஆகியவற்றின் காரணமாக அவரது ஈரல் பகுதி நிறையவே பாதிக்கப்பட்டுவிட்டது. மருத்துவர்கள் அவருக்கு சுத்தமான இயற்கைக் காற்று தேவை என்று அறிவுறுத்தியதன் பேரில், அவர் மீண்டும் ஜின்னாவையும் குழந்தையையும் இந்தியாவில் விட்டுவிட்டு ஐரோப்பா சென்றார்.

ஆனால் போதைப் பொருளுக்கு மீண்டும் அடிமையாகி, உடல்நலம் வெகுவாக சீர்கெட்டு இந்தியா திரும்பியவுடன், அவருக்கும் ஜின்னாவுக்கும் இடையேயான பிளவு அதிகரித்தது. மனைவியின்பால் ஏதோ ஒருவித அக்கறை இருந்ததால், ஜின்னா, ரத்தியின் பயணச் செலவுகளுக்கெல்லாம் தாராளமாகப் பணம் கொடுத்துக்கொண்டே வந்தார். ஆனால் ரத்தி எப்போதும் வாழ்க்கையில் நடைமுறையில் சாத்தியமில்லாத எதிர் பார்ப்புகளுடன் வாழ்ந்து வந்தார் என்பதை சரோஜினி நாயுடு, “ரத்தி, வானவில்லின் வண்ணங்களை நாள்தோறும் எதிர்பார்த்தார் என்று குறிப்பிடுகின்றார். சிறுவயது முதலே, கவிதை எழுதுவதில் ஈடுபாடு உடைய ரத்திக்கு, தன்னால் ஒரு கவிதைத் தொகுதி வெளியிட முடியவில்லையே என்ற ஆதங்கமும் உண்டு.

ரத்தி தனது மழலைப் பருவத்தில் பெற்றோ ரால் நேரடியாக வளர்க்கப்படாது, ஏராளமான பணிப்பெண்களால் வளர்க்கப்பட்டார். இதன் மறுதாக்கமாக தனக்கோர் மகவு பிறந்தபோது, அதைப் பணிப்பெண்களால் வளர்க்க ஏற்பாடு செய்தார். இயற்கைக்கு முரணான இச்செயல்களால் காலப்போக்கில், அவரது மனநலம், உடல்நலம் இரண்டும் பாதித்தன. இரவில் உறங்க இயலாமல் தவித்த அவர் தூக்க மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்தார். ஆனால் அவரால் உறங்க இயலவில்லை. அவருடைய நெருங்கிய தோழிகளெல்லாம் அவரை விட்டு விலகிச்செல்ல ஆரம்பித்தனர். தனிமையிலிருந்து தப்பும் முயற்சியாய், சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையாரால் துவக்கப்பட்ட தியோசபிக்கல் கழகத்திற்குச் சென்றார். ஆனால், அங்கும் அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்காது திரும்பி வந்தார்.

உடல்நலம் மிகவும் சீர்குலைந்த நிலையில், அவரது தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அவரது எடை வெகுவாய் குறைந்துவிட்டது.

1926-ஆம் ஆண்டு அரசாங்கப் பணி நிமித்தம் ஜின்னா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் கப்பல் பயணம் மேற்கொண்டபோது, ரத்தியையும் அழைத் துச் சென்றார். ஆனால் ரத்தியோ, பயணத்தின் நடுவே, தான் மட்டும் பாரிஸூக்குச் சென்றுவிட்டார். இறுதிவரை ஒரு கண்ணியமான கணவனாகவே இருந்த ஜின்னா, இதைப் பொருட்படுத்தவில்லை.

சில நாட்கள் கழித்து, ரத்தி மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். ஆனால் 1929-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே, அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சரோஜினி நாயுடுவிற்கு அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்துவிட்டது. ஜின்னா, தன் மனைவியின் இன்னுயிரைக் காப்பாற்றுவதற்காக, பெரிய மருத்துவர்களையெல்லாம் தேடிப் போனார். மனைவியின் மருத்துவச் செலவிற்காக. ஏராளமாகப் பணம் செலவழித்தார். அவருடைய அனைத்து முயற்சி களையும் மீறி ரத்தி, 20.12.1929 அன்று, அதாவது அவர் பிறந்து ஏறக்குறைய இருபத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவுற்ற, நாளன்று காலமானார்.