"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.'
என்கிறார் வள்ளுவர்.
இதன்மூலம்-பிறரைப்பற்றி ஒருவர் புறம்பேசுவதை வைத்தே,அவர், அறத்திற்கு மதிப்பளிக்காதவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.
இந்தக் குறள், யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பிரதமர் மோடிக்கு மிகப் பொருத்தமான குறளாகத் திகழ்கிறது.
காரணம், பழுத்த அறநெறியாளர் போல மக்கள் முன் காட்டிக்கொள்கிற மோடி, நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தனது ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகளையும் சிறுபான்மை மக்களையும் வன்மத்தோடு விமர்சித்து வருகிறார். ஏனென்றால், அவரது ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் படி சாதனைகள் எதுவும் இங்கே நிகழவில்லை.
அவரது ஆட்சியில் இந்தியாவைத் திணறவைக்கும் வேலை இல்லாத் திண்டாட்டம் போக்கப்படவில்லை. தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகள் கொஞ்சமும் நிறைவேற்றப்படவில்லை. மக்களை வாட்டும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எதுவும் நடக்கவில்லை.
இந்தியாவின்பொருளாதார நிலை மேம்படுத்தும் முயற்சிகள் கையில் எடுக்கப்படவில்லை. மக்களின்
வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவே இல்லை. மக்களை வாட்டும் வறுமை நிலைக்கு கொஞ்சமும் விடை கொடுக்க மோடி அரசு முன் வரவில்லை. அதனால், தனக்கு எதிராக அணிவகுக்கும் எதிர்க்கட்சிகளைத் தாக்கி வருவதோடு, அவை தாங்கிப்பிடிக்கும் சிறுபான்மை மக்கள்மீதும் தனதுவன்மத்தையும் காழ்ப்புணர்வையும் தயங்காமல் உமிழ்ந்துகொண்டே இருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள். அதில் நம் பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை பங்கீடு செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே உங்கள் தங்க நகைகளை இங்கே ஊடுருவியவர்களுக்கு அவர்கள் தரப்போகிறார்கள். அதிகம் குழந்தைகளைப் பெறுகிறவர்களுக்குத் தாரை வார்க்கப் போகிறார்கள். முன்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் சொத்துக்கள் போகப்போகிறது? என்று யோசித்துப் பாருங்கள்' என்று இட்டுக்கட்டிப் பேசினார்.
இதன் மூலம், இஸ்லாமியர்களுக்கும் ஏனைய சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உண்டாக்க மோடி முயற்சிக்கிறார்.உடனே இதுகுறித்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களான அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டவர்கள், தேர்தல் ஆணையத்திடம் சென்று, மோடி மீது புகார் மனுவை அளித்தார்கள். அதேபோல், மோடியின் இந்த வெறுப்புப் பேச்சு தொடர்பாக, டெல்லி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத்தும் புகார் கொடுத்தார்.
இந்தப் புகார்களைத் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டு கொள்ளவே இல்லை. அதனால், மேலும் தைரியம் பெற்ற மோடி அடுத்தடுத்த பிரச்சாரக் கூட்டங்களிலும் தனது வெறுப்புப் பேச்சைத் தொடர்ந்து வாந்தி எடுத்தார். குறிப்பாக...
- ராமர் கோவிலை இந்தியா கூட்டணி இடித்துவிடும் என்றுஅப்பாவி இந்துக்களை பயமுறுத்தினார்.
- முஸ்லிம்களின் வாக்குக்காக இந்தியா கூட்டணியினர் முர்ஜா நடனம்கூட ஆடுவார்கள் என்று ஏகடியம் செய்தார்.
- பழங்குடியின மக்கள் வாக்களிக்கும்போது, ஜிகாத் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று விஷ விதை தூவினார்.
- அதானியின் டெம்போ, காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்ததா? என தன்னிலை மறந்து, ஏடாகூடமாகக் கேள்வி எழுப்பினார்.
- இதைத் தாண்டி, அனைத்து மக்களையும் இழிவுபடுத்தும் வகையில், ரேஷனில் போடும் உணவுக்காக மக்கள் நன்றிக் கடனுடன் இருக்கவேண்டும் என பீகாரில் குரல் எழுப்பினார்.
- அதுமட்டுமா? மகாத்மா காந்தியைப் பற்றி திரைப்படம் வரும் வரை அவரை உலகில் யாருக்குமே தெரியாது என்று, அவரையும் விட்டுவைக்காமல் அவமானப்படுத்தி இருக்கிறார்.
- இப்படியெல்லாம் வாய்க்கொழுப்பாகப் பேசிவிட்டு, இன்னொருமேடையில், சிறுபான்மையினரையும் முஸ்லிம்களையும் நான் தவறாகஒருபோதும் பேசியது இல்லை என்று அந்தர்பல்டி அடித்தார்.
- இது எல்லாவற்றையும்விட, ஒடிசா மாநில பூரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மைக் பிடித்த மோடி, ""இங்குள்ள பூரிஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால்ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்'' என்றுஅபாண்டமாக தமிழர்களின் மீது மோடி திருட்டுப் பழியைச் சுமத்தினார்.
தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் தமிழ், தொன்மையான மொழி என்றும், தமிழ்ப்புலவர் வள்ளுவர் பெரும் சிந்தனையாளர் என்றும், தமிழ் மக்கள் சிறந்த பண்பாடு கொண்டவர்கள் என்றும் "காக்காய் பிடிக்கும்' மோடி, ஒடிசா போன போது, தமிழர்களைத் திருடர்களாக சித்தரித்திருக்கிறார்.
இவரது அல்ப புத்தியைக் கண்டு கொதித்துப்போன, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழர்களைத் திருடர்கள் என கூறும் அளவுக்கு பிரதமருக்கு ஏன் இவ்வளவு வன்மம்? என கண்டனக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். மோடி யாருக்கும் உண்மையானவர் இல்லை என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையில்லை. அதுமட்டுமல்ல; தன்னை விட ஒரு டுபாக்கூர் பேர்வழி இல்லை என்று காட்டும் வகையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த மோடி, அப்பாவி மக்களின் காதில், கலர் கலராகப் பூ சுற்ற முனைந்தார்.
அந்தப் பேட்டியில் திருவாய் மலர்ந்த அவர்...
"என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு அவர் மூலம்தான் வந்தேன் என்று நம்பிக்
கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். அப்போதுதான் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என்பதை உணர்ந்தேன்.' என்று சொன்னதோடு....
"நான், பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்' என்று ரீல்மேல் ரீலாகச் சுற்றினார்.கடவுள்தான் இவரை பூமிக்கு அனுப்பினாராம்.இப்படிச் சொல்வதன் மூலம் அவர் கடவுளின் மதிப்பையும் கெடுத்து, ஆன்மீகத்தையும் அசிங்கப்படுத்துகிறார்.
பொய், பித்தலாட்டம், போலிச்சாமியார்களோடு ஆட்டம் போடுவது, விவசாயிகளைச் சந்திக்க மறுப்பது, மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல், அதானிஅம்பானிகளுக்கு வால்பிடிப்பது, ஏழை எளிய மக்கள் வாழும் இந்திய கிராமங்களின் பக்கம் தலை வைத்துப் படுக்காமல், உலக நாடுகள் பலவற்றுக்கும் தொடர்ந்து சொகுசாக பயணம் நடத்தி, அரண்மனைகளிலும், மாட மாளிகைகளிலும் விருந்து உண்பது என பகட்டின் புத்திரராய் வாழ்ந்துகொண்டிருக்கிறார் மோடி.
இப்படிப்பட்டவரையா கடவுள் பூமிக்கு அனுப்புவார்? இப்படிப்பட்ட ஒருவர்இத்தனை வருடம் பிரதமராக இருக்கிறார் என்பதே நமக்கு அவமானம். மீண்டும் அவரே பிரதமராகத் துடிக்கிறார் என்பது, அவரைத்தாங்கிப் பிடிக்கிறவர்களுக்கே பேரவமானம்.இதை எல்லாம் எப்படி குமட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பது?
இப்படிப்பட்டவரையா கடவுள் பூமிக்கு அனுப்புவார்? அப்படிப்பட்ட மோடி. தமிழகம் வந்து தியானம்செய்யப்போகிறாராம்.இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அவரது தியான அறிவிப்பு குறித்து விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவரான கபில் சிபல்..."கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு எந்த சாதனையையும் செய்யாததால், அது குறித்து அவரால் பேச முடியவில்லை. அதனால் அவர் தியானம் செய்யப் போவதாகச் சொல்கிறார்.ஞானத்திற்கு அர்த்தமே தெரியாத ஒருவர், என்னதியானம் செய்துவிட முடியும்? எனவே மோடி விவேகானந்தர் மண்டபம் செல்வதென்றால் கன்னியாகுமரிக்கு பரிகாரம் செய்வதற்காக செல்லட்டும்' என்று நாகரிகமாகக் கிண்டலடித்திருக்கிறார்.
இதைவிட மோடிக்கு யாரால் பதில் கொடுக்க முடியும்!
-ஆதங்கத்தோடு,
நக்கீரன் கோபால்