மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி'
-என்பது வள்ளுவர் அடிக்கும் எச்சரிக்கை மணி.
இதன் பொருள் நீதி தவறாது செங்கோன்மை யுடன் சரியாக ஆள்வதுதான் ஆட்சியாளர்களுக்கு புகழைத் தரும். இல்லையேல், அவர்களின் புகழ் நிலையற்று சரிந்து போகும் என்பதாகும்.
அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்களை மதிக்காமல், விருப்பம்போல் ஆட்டம் போடும் பிரதமர் மோடி, எங்கு சென்றாலும் அவரது புகழும் பெருமையும் ஓகோவென்று பறக்கிறது. அதற்கு உதாரணம் அவரது அமெரிக்கப் பயணம்.
ஐந்து நாள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த 22-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, அங்கே குவாட் உச்சி மாநாட்டிலும் மறுநாள் ஐ.நா.வின் பொதுச்சபைக் கூட்டத்திலும் உரையாற்றி இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பின், இந்தியா திரும்பிய சூட்டோடு மோடி "இரு நாடுகளும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். எனவே இந்தப் பயணம் மகிழ்வாக அமைந்தது. அமெரிக்காவுட னான நமது ஒற்றுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது' என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
அமெரிக்காவில் நிறைய சாதித்துவிட்டு வந்தது போல், அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் பா.ஜ.க.வினர் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். உலகின் நம்பர்-1 பிரதமர் என்று சர்வதேச ஊடகங்கள் அவரைப் பாராட்டுகின் றன என்று காவிக் கும்பல்கள் ஏகப்பட்ட அலப்பறை களும் செய்தன. அந்த அலப்பறையில் உண்மை இருக்கிறதா?
அமெரிக்காவில் என்ன நடந்தது? அங்கே மோடிக்கு எப்படிப்பட்ட வரவேற்புகள் கிடைத்தன?
2019-ல் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு விசிட் அடித்தார். அப்போது அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பும், மதிப்பும் கிடைத் தன. அப்போது அமெரிக்கா வால் கொண்டாடப்பட்ட மோடிக்கு, இந்த முறை அந்த அளவுக்கு மரியாதையும் மதிப்பும் கிடைக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.
2019 விசிட்டின் போது, ட்ரம்பும் மோடியும் அண்ணன் தம்பிகளைப் போல ஆரத் தழுவிக்கொண்டனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் 50 ஆயிரம் பேரைத் திரட்டிவைத்துக் கொண்டு, மோடியை என் அன்புச் சகோதரர் என்று பாராட்டித் தள்ளினார் ட்ரம்ப். மோடியும் ட்ரம்ப்பை வானளாவப் புகழ்ந்தார். அதோடு நிறுத்தாமல் அடுத்தும் இங்கே ட்ரம்ப் அரசுதான் வரும் (அப்கி பார் ட்ரம்ப் சர்க்கார்) என்று, அங்கு கூடியிருந்தவர்களை மூளைச் சலவை செய்வது போல், ட்ரம்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார் மோடி இதைக் கேட்டு, ட்ரம்ப்பே திகைத்தாராம்.
அந்த நேரத்தில் "இந்தியாவின் ட்ரம்ப் என்று மோடியை அமெரிக்க ஊடகங்கள் வர்ணித்தன. இப்படி அப்போது ட்ரம்ப்புக்கு ஜால்ரா போட்டுவிட்டு வந்த மோடி, இப்போது எந்தவித கூச்சமும் இல்லாமல் ஜோ பைடன் ஆளும் அமெரிக்காவுக்கு விசிட் அடித்திருக்கிறார்.
2020-ல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்த போது, அங்கே அதிபருக்குப் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபருக்குப் போட்டியிட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாகச் சொல்லப்போனால் மன்னார்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் போட்டியிட்ட நேரத்தில், இந்தியாவில் மோடி ஆட்சியில் ஜனநாயகப் படுகொலை நடப்பதாகவும், அப்படிப்பட்ட மோடியோடு ட்ரம்ப் கை குலுக்குவதாகவும், பிரச்சாரம் செய்தனர்.
அப்போதே மோடியின் நடவடிக்கைகளில் வெறுப்படைந்திருந்த ஜோ பைடனும், கமலா ஹாரிசும்தான், அங்கே வெற்றி பெற்றார்கள். இந்த நிலையில்தான் மோடி அமெரிக்காவுக்குப் பறந்தார்.
அங்கே என்ன நடந்தது தெரியுமா? இந்திய வம்சாவளி என்ற நம்பிக்கையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசினார் மோடி. தன்னை கமலா ஹாரிஸ் பாராட்டுவார் என்று மோடி நினைத்தார். ஆனால் கமலா ஹாரிசோ, ஜனநாயகம் என்பது உயர்வானது. அது நாகரிகத்தின் அடையாளம். அதை ஆட்சியில் அமர்கிறவர்கள் காப்பாற்றவேண்டும். மக்களின் குரலுக்கு உரிய மதிப்பளிக்கவேண்டும் என்ற ரீதியில், மோடிக்கு ஜனநாயகம் பற்றி வகுப்பெடுத்து அவரை நெளியவைத்தாராம்.
அது மட்டுமல்ல; கமலா ஹாரிஸ், தான் யாரைச் சந்தித்தாலும், எவருடன் உரையாடினாலும், அவர்களைப் பற்றித் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுவாராம். ஆனால் மோடியைச் சந்தித்தது பற்றி அவர், எதையும் பதிவிடாமல் புறக்கணித்திருக்கிறார்.
மோடியைச் சந்திப்பதற்கு முன்பாக ஜாம்பியா அதிபரைச் சந்தித்தது பற்றிக்கூட டிவிட்டரில் பதிவிட்ட கமலா, வேண்டுமென்றே மோடியின் சந்திப்பைப் புறக்கணித்தாராம்.
காரணம், கொரோனா நேரத்தில் இந்திய மக்களைப் பற்றி அதிக அக்கறையை மோடி காட்டவில்லை என்பதும், சொந்த நாட்டு மக்கள் தடுப்பூசிக்குப் பரிதவித்த நிலையிலும், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது குறித்தும், கொரோனா மரணங்கள் கட்டுமீறிப் போகும் போதும் கூட, அவர் மாநில அரசுகளைக் கவிழ்த்து விட்டு, பா.ஜ.க. ஆட்சியை உருவாக்க, ஆடுபுலி ஆட்டத்தை நடத்திவந்ததும் சர்வதேச ஊடகங்களில் பிரபலமாகி இருந்தது. அதோடு தொடர்ந்து மாதக் கணக்கில் போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாமல்; அவர்கள் மீது வன்முறையை ஏவிய விவகாரமும் சர்வதேச அரங்கில் விவாதமாகியிருக்கிறது. இதோடு, மோடி தலைமை யிலான பா.ஜ.க. அரசில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்ட யுத்தமும் அடக்குமுறையும் தொடர்ந்து அரங்கேறி வருவதும், உலக நாடுகளின் கண்டனத் தைப் பெற்றுவருகின்றன.
இது போன்ற விவ காரங்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கமலா ஹாரிஸ், மோடியை தனது டிவிட்டர் பக்கத்தில் புறக்கணித்தார் என்ற தகவல்களும் அங்கே பரவியது.
இதனால் மோடியுடன் சென்றிருந்த அதிகாரிகள் படை, சங்கடத்தில் நெளிந்திருக்கிறது.
அது குறித்து இந்திய அதிகாரிகள் தரப்பு கெஞ்சிக் கூத்தாடிய பிறகே, மோடியின் சந்திப்பு குறித்து தாமத மாக ட்வீட் செய்திருக்கிறார் கமலா ஹாரிஸ் என்கிறார் கள். இதற்கிடையில், 24-ந் தேதி ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் கொண்ட குவாட் (Quadrilateral Security Dialogue -Quad)அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, 25-ந் தேதி, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் உரையாற்றி யிருக்கிறார்.
அப்போது அவர் "இந்தியாவின் ஒரு மூலையில் தனது தந்தையின் தேநீர்க் கடையில் அவருக்கு உதவிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், இன்று இந்த மாபெரும் சபையில் 4-வது முறையாக உரையாற்றிக் கொண்டிருக்கிறான்' என்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுக்கொண்டவர், "கொரோனாவுக்கு அடுத்தபடியாக உலகைத் தீவிரவாதம் அச்சுறுத்துகிறது' என்று முழக்கமிட்டிருக்கிறார். எனினும் அவர் பேச்சுக்கு எப்படி ஆதரவு இருந்தது?
இது தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சரான ப.சி, தன் ட்விட்டர் பக்கத்தில் "ஐ.நா பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி பேசியபோது, வெகு குறைவான இருக்கைகளிலேயே ஆட்கள் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். அவரது உரைக்கு ஒருவர் கூட கைதட்டாதது மேலும் ஏமாற்றம் தந்தது.
இந்த விஷயத்தில் ஐ.நாவுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி அலுவலகம் மிகப்பெரிய அளவில் சொதப்பி விட்டது'' என்று கூறியிருக்கிறார்.
அதேபோல், இந்தியாவின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டபோது, சீனாவின் அத்துமீறல் பற்றியோ, பாகிஸ்தானின் மீறல்கள் பற்றியோ, விவாதிக் கப்படாதது வருத்தத்துக்குரியது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அமெரிக்க ஊடகங்களும் மோடி பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
இப்படி தனது மோசமான நடத்தைகளாலும் ஆட்சி முறையாலும் சகல விதத்திலும் சங்கடத்தை சந்தித்துவிட்டு மோடி திரும்பினாலும், உலகின் நம்பர் 1 பிரதமர் மோடி என்று சர்வதேச ஊடகங் கள் பாராட்டுவதாக உதார் விடுகிறது காவிக்கூட்டம். இது கூட 2019-ல் "பிரிட்டிஷ் ஹெரால்ட்' என்கிற இணையதள பத்திரிகை, வெளியிட்ட செய்திதான். அப்போது உலகின் மிச்சிறந்த பிரதமர் யார்? சக்தி வாய்ந்த பிரதமர் யார்? என்று ஒரு சர்வேயை நடத்தியதாகச் சொல்லிவிட்டு, அந்தக் கேள்விக்கான பதிலாக இருப்பவர் இந்தியப் பிரதமர் மோடிதான் என்று அப்போது அது சொல்லியிருகிறது. இந்த பிரிட்டிஷ் ஹெரால்டு நிறுவனம், என்பது மிகச்சிறிய, 4 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகிற ஒரு நிறுவனம் இந்த நான்கு ஊழியர் கள்தான் உலகின் சக்திவாய்ந்த பிரதமர் என்று மோடிக்குப் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இந்த இணையதளத்தின் பொறுப்பாளரான அஷ்ரப் அன்சீர், கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர். அவரை வைத்துதான் இப்படியொரு செய்தியை வெளியிட்டு குளிர் காய்ந்திருக்கிறது காவிக்கும்பல்.
உலகம் எங்கும் அவப்பெயரை சம்பாதித்திருக்கும் பிரதமர் மோடி, போலியான விளம்பரங்கள் மூலம், வெகுவாகச் சரிந்திருக்கும் தன் இமேஜை தூக்கி நிறுத்த முயல்வது வேடிக்கையானது.
வருத்தத்துடன்
நக்கீரன்கோபால்