யற்கையின் பேரெழிலில் வசப்படாத மனம் எவரிடத்திலேனும் இருக்க முடியுமா? அதுவும் கவிதை மனம் கண்மூடிக் கொண்டிருக்குமா?

அரைநூற்றாண்டுக்கு முன் கவிதையின் நோக்கும் போக்கும் வேறு வேறாக இருந்தன. தமிழ், காதல், இயற்கை, சமூகம், பொதுவுடைமை என்று வரையறுக்கப்பட்ட பார்வைகளுக்குள் கவிதைப் பயணம் நடந்து கொண்டிருந்தது. மகாகவி பாரதியின் பாதிப்பிலும் புரட்சிக்கவிஞரின் நெருப்புக் கவிதைகளின் தெறிப்பிலிருந்தும் பலநூறு கவிஞர்கள் உலாவந்து கொண்டிருந்தார்கள். பக்திரசம் சொட்ட சின்னச் சின்னச் சொற்களில் சிறுவர்களுக்காக மெல்லிய மணி எழுதிக்கொண்டிருந்தவர்கள் ஒருபக்கம். சீர்திருத்தக் கருத்துகளைச் செதுக்கித் தந்தவர்கள் ஒருபக்கம். எதிலும் ஒட்டாமல் பட்டும் படாமல் எதையெதையோ எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஒருபக்கம். ஒலித்த கவிமணி போன்றவர்கள் ஒருபக்கம் என்று கவிதை, சலங்கை கட்டி ஆடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயற்கையை முதன்மையான பாடுபொருளாகக் கொண்டு தன் கவிதைப் பயணத்தைத் தொடர்ந்தவர்தான்

சருகுகள் பூந்தளிர் தம்மில்-ஒளித்

தங்க மெருகினைப் பூசி

Advertisment

மரகதச் சோலையிலெல்லாம்-புது

மாணிக்கச் செங்கதிர் வந்தான்.

ஓடையில் நீரினில் பொன்னே-புனல்

Advertisment

ஊற்றினில் ஆற்றினில் பொன்னே!

காடு மலைகளும் பொன்னே-கண்

காணு மிடமெலாம் பொன்னே!’’

என்று எங்கும் பொன்னெழில் கண்டு, இன்புறும் கவிதைகளை எழுதிய மின்னூர் சீனிவாசன். தாகூர், பாரதி, பாரதிதாசனார் கவிதைகளின் தாக்கம் இவர் கவிதைகளில் சற்றே தூக்கலாக இருப்பதும் இயல்பானது தான். ஏனெனில் அரும்புப் பருவத்தில் இவருக்குக் கிட்டிய கரும்புக் காட்சிகள் கவிதைகளில் ஓவியங்களைத் தீட்டிக் காட்டுகின்றன. தொடர்ந்து இயற்கையின் கூத்துகளைத் தன் கவிதைகளில் குடியேற வைத்துக் கொண்டாடி மகிழ்ந்த கவிஞர் ஓவியம் தீட்டுவதிலும் வல்லவர். அதனால்தான் தன் கவிதைகளிலேயே பல காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டிக் காட்டியிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் மின்னூரில் 7-7-1939-ல் குப்புசாமி, சின்னம்மாள் இணையருக்குப் பிறந்த கவிஞர், ஆம்பூர் இந்து உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தவுடன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அறிஞர் டாக்டர் மு.வ.வின் அன்பு மாணவராக 1956-57ல் நுழைந்தார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையின் அன்புக்கரம் இவரை அணைத்துக் கொண்டது. அறிஞர் மு.வ.வின் வழிகாட்டல் இவர் வாழ்வில் ஒளியேற்றியது. கவிஞரின் பாடல்களை சென்னை வானொலி மெல்லிசை யாகத் தவழவிட்டது. இசைச்செல்வர் சீர்காழி கோவிந்தராசன் கவிஞரின் "காந்தி தந்த சாந்தி ஓடம்' என்கிற இசைப்பாடலை முதன்முதலாகக் காற்று வெளியில் மிதக்க விட்டார். இசைத்தட்டுகளிலும் இவர் பாடல்கள் அசைந்து வந்தன. படித்துமுடித்து அரசினர் கல்லூரியில் 1965-ல் தமிழ்த்துறையில் பணிக்குச் சேர்ந்த கவிஞர் கோவை வேளாண்மைக் கல்லூரியில் துணைத் தமிழ்ப்பேராசிரியராக 1971 ஜூலைவரை பணிபுரிந்தார். கோவை வாழ்க்கை அவருக்குள் பேரூக்கத்தையும் எழுச்சியையும் தந்தது. வானம்பாடிக் கவிஞர் இளமுருகுவின் நட்பும் முதுபெரும் படைப்பாளரும், பத்திரிகையாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆங்கில இலக்கியங்களில் பெரும்புலமை பெற்றவருமான அறிஞர் டி.சி. ராமசாமி அவர்களின் நட்பும் இவரின் படைப்பு வெளியில் பெரும் மாற்றங்களை உருவாக்கின. கவிஞர் புவியரசு, அக்கினிப்புத்திரன், ஓவியக் கலைஞர் மீனன், இயலிசைப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இந்தி மொழியின் வல்லமை பெற்ற கே.பி. பொன்னுசாமி போன்றோரின் தொடர்பு இவரைக் கவியுலகில் தொய்வில்லாமல் இயங்க வைத்தது. 1998-ல் சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக இருந்து பணிநிறைவு பெற்ற கவிஞர், எண்பது வயதைத் தொட்டுத் தொடர்ந்து இன்றும் கவிதையிலும் ஓவியத்திலும் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

கவிஞரின் முதல் கவிதை மரியாதைக்குரிய எஸ்.எஸ். மாரிசாமி அவர்கள் நடத்தி வந்த “இமயப்பேரிகை என்ற இதழில் வெளிவந்ததாகச் சொல்கிறார் கவிஞர். 1960 மார்ச்சில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் இவரின் “காதல் கவிதை முதல் பரிசை வென்றது. கவியரசர் கண்ணதாசனின் இதயத்தைத் தொட்டது. தொடர்ந்து இவர் கவிதைகளை கலைமகள், தீபம், ஆனந்தவிகடன், கல்கி, தமிழரசு போன்ற இதழ்கள் வெளியிட்டன. தன்னை இலக்கிய உலகுக்கு அடையாளம் காட்டிய பெருந்தகை தமிழறிஞர் கி.வா.ஜ. என்று நன்றியோடு சொல்கிற கவிஞர், தன்னை ஆளாக்கிய அண்ணல் நீலகண்டம் கிருஷ்ணசாமிக்குத் தன் நூலைக் காணிக்கையாக்கியிருக்கிறார்.

காண்கிற காட்சிகளையெல்லாம் தன் கவிதைகளில் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிற கவிஞரின் தனித்திறன் இப்படி வெளிப்பட என்ன காரணம் என்பதை அவரே சொல்கிறார். எப்படித் தெரியுமா?

"இளம்பருவத்தில் கிராமப்பள்ளியில் கவிமணியின் பாடல்களும் பிற பாடல்களும் வகுப்பில் உடன் மாணவர்கள் கூட்டமாகப் பாடும்போது என்னுள் பேரூக்கமும் மகிழ்ச்சியும் விளையும். இன்னதென இயம்ப முடியாத ஒலியுலகம் எனக்கென்றே விரிந்து கிடப்பதாகத் தெரியும். பள்ளிக்குப் போவதும் வருவதுமாக, சிறுபருவம் கழியும் நாளில், தனியாகப் பள்ளிக்குப் போகும்போதெல்லாம் மின்னூர்க் கிராமத்துக் கபிலைகளின் ஓசை, வாய்க்கால்களின் தனியழகு, சுற்றிலும் வயல்களின், தென்னந்தோப்புகளின் அமைதியும் அசைவுகளும் என்னைக் கவரும். தூரத்து மலைகள் பெரிய மலைப்பை உண்டாக்கி நின்று நிமிர்ந்த காட்சிகளைக் கண்டு வியந்து போவேன். பள்ளிக்குப் போகும்போது வழியில் விறகு வெட்டவோ, புல்சுமை கொணரவோ போனவர்கள், பள்ளிவிட்டு நண்பகல் உணவுக்கு நான் திரும்புகையில் வழியில் எதிர்ப்படுவர். யாரும் என்னை நிறுத்திப் பேசி அனுப்புவதும் அதன் காரணமாக, கிராமத்துப் பள்ளிக்குத் தாமதமாக நான் போவதும் வழக்கமே. ஓய்வாக மாலையில் திரும்பும்போது மேய்ச்சலுக்குப் போன ஆட்டு மந்தைகளும் மாட்டுக் கூட்டமும் திரும்பிவரும் காட்சியே மகிழ்ந்து பார்க்கத்தக்கதாயிருக்கும்.

மாலையில் மேகங்களின் பொன்னழகையும் புதுப்புது வடிவ எழில்களையும் கண்டு மகிழ்வேன். கதிரொளியின் ஊடுருவல்களும் மேகநாடகங்களும் எத்தனையோ இன்பத்தைத் தந்து மாறி மாறிச் சிரிக்கும்.'

கவிஞரின் இளம்பருவ நாள்கள் இயற்கையோடு தோய்ந்து தோய்ந்து கழிந்ததுதான், அவர் கவிதைகளில் வழிந்தோடிக் கொண்டிக்கும் தனிஎழிலுக்குக் காரணம். இதன் அடிப்படையிலேயே இவர் கவிதைகளை நாம் காண வேண்டும்.

இயற்கையின் அழகில் இதயம் பறிகொடுத்த கவிஞர் சமுதாயத்தைக் குறித்து எழுதுகிற போதும் இயற்கையை முன்வைத்தே எழுதுகிறார் என்பதைக் காணமுடிகிறது. தத்துவம் இழையோடும் அற்புதத்தை அறிய முடிகிறது. முன்னவர்களின் கற்பனைகள் இவர் கைகளில் புது முலாம் பூசிக்கொண்டு வருகின்றன.

தண்டலை மயில்கள் ஆடத்

தாமரை விளக்கம் தாங்கக்

கொண்டல்கள் முழவின் ஏங்கக்

குவளைகண் விழித்து நோக்க..’’

என்பார் கம்பநாடர். இங்கே கவிஞர் காலைக் காட்சியைச் சித்து விளையாட்டு’போலக் காண்கிறார். எப்படி வருகிறதாம் காலைப் பொழுது?

“பாரை வளைத்திருக்கும்-இருட்

பாசறை யினில்கரம் வீசிய வண்ணம்

வீரன் வருவது போல் - கதிர்

வேந்தன் எழுந்தனன் கீழ்த்திசையில்’’

என்கிறார். காரிருள் போய்விட்டது. இப்போது ஒரு காட்சியைக் காட்டுகிறார்

தண்ணீரிலே விளக்கு- ஏற்றித்

தந்திடலாம் என்று பொய்கையிலே

தண்ணீரிற் பூவிளக்காய்-காட்சி

தந்தன தந்தன தாமரைகள்’’

என்கிறார். தாமரைப் பூக்கள் தண்ணீரின் விளக்குகளாம். குறுநகை புரிந்தபடி கம்பர் பார்க்கிறார்.

நாம் அழகு நிலாவைத்தான் பார்க்கிறோம். அதுவும் மார்கழிமாத நிலா என்றாலும் சித்திரை மாதத்து நிலா என்றாலும் கொள்ளை அழகு குடிகொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் கவிஞரோ "அழுக்கு நிலா' என்று பாடுகிறார். முழுநிலவைக் காண்கிறோம். ஏதோ கறைபடிந்தது போலிருக்கிறது. பாட்டி வடைசுடுகிறாள் என்கிறோம். ஆனால் பிறையாகப் பார்க்கிறபோது எந்தக் கறையையும் காண்பதில்லை. பிள்ளைப் பருவத்தில் உள்ளத்திற்குள் எந்தக் கள்ளமும் இல்லை. வளர வளர எங்கெங்கிருந்தோ எப்படியெப்படியோ கள்ளத்தனங்கள் வந்து சேர்ந்துவிடுகின்றன. கவிஞர் பிறையைப் பார்க்கிறார். நிலவைப் பார்க்கிறார்.

அப்படியே பிள்ளைப் பிராயத்தையும் எண்ணிப் பார்க்கிறார். பின் கேள்வி கேட்கிறார்.

நித்தம்வான் பொய்கையில்

மெத்தக் களிப்பொடு

நீந்திய போதினிலும்-உன்

முத்து முகத்தினில்

பற்றிய தோர்மறு

முற்றும் அகன்றதுவோ?-இல்லை

சற்றே மறைந்ததுவோ!

பிள்ளை வயதினில்

பிஞ்சு மனத்தினில்

கள்ளமில் லாததுபோல்-நீ

வெள்ளிப் பிறையென

விண்ணில் வருகையில்

இல்லையே இக்களங்கம்!-இதைச்

சொல்லிடில்தான் விளங்கும்!’’

என்கிறார். அப்படியே வானத் தைப் பார்க்கிறார். மேகங்கள் கலைந்து கலைந்து போய்க் கொண்டிருக்கின்றன. பால்மனம் மாறாத பிள்ளையின் தூய நெஞ்சம் போல் தெரிகிறது. கொஞ்சம் உற்றுப் பார்க்கிறார். முதியவரின் தாடியைப் போல் ஆடிக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.

அழுக்கெலாம் போகத் தோய்த்த

ஆடையை உலர்த்தி னாற்போல்

குழுமிய மேக மெல்லாம்

குலைந்தாடும்.. தாழ்ந்து மீண்டும்

எழிலாகப் பறந்து செல்லும்.

இளமையைத் தாண்டிச் சென்ற

கிழவனின் தாடி யைப்போல்

கிடந்திடும் வெண்மே கந்தான்!’’

என்கிறார். அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார். வெண்மேகம் கறுக்கிறது. நினைவு, சமுதாயத்தை நோக்கி நகர்கிறது. களவாடிச் செல்லும் மனிதர்களை நினைக்கிறது.

minarகவிதை திசைமாறுகிறது.

உள்ளத்தில் ஆசை மீறி

உயர்பொருள் திருடிச் சென்ற

கள்வர்போல் முகங்க றுக்கும்

கருமுகி லாக மாறும்’’

என்கிறார் கவிஞர். வானத்தை விட்டு இறங்கமறுக்கிறது கவிமனம்.

அதைப் பார்த்துக் கொண்டே யிருக்கிறது. விண்மீன்கள் பூத்துச் சிரிக்கின்றன. கவிஞரின் மனத் திற்குள் கற்பனைகள் ஆர்த்துச் சிரிக்கின்றன.

கண்மூடா திராப்போதில்

ககனத்தில் உலாப்போகும்

விண்மகளின் திருமுகத்து

வியர்வைதான் மீனினமோ?

கானகத்து மானைப்போல்

கண்விழிக்கும் தாரகைகள்

வானகத்துப் பொய்கையிலே

மலராத அரும்புகளோ?’’

என்று கேள்வி மேல் கேள்வி களை அடுக்குகின்றன. மற்றொருநாள் பார்க்கிறார். திடீரென்று மின்னல். இடிஇடிக்கிறது. மழை பொழிகிறது. வானில் நிலவும் இல்லை. விண்மீன் களும் இல்லை. எங்கே போயின?

கன்னங் கரிய மேகமெலாம்- கூடிக்

கரைந்து கரைந்து பெய்கையிலே

மின்னும் அழகு வெண்ணிலவே

வேறெங் கேநீ சென்றிருந்தாய்?

மழையிற் கூட நனையாமற்-சிரித்து

வந்து வந்து வானிடையே

இழையாம் மின்னல் ஆடிற்றே-அன்று

எங்கே சென்றீர் விண்மீன்காள்?’’

என்று கேட்கிறார். கண்மூடிக் கொண்டிருந்த கவிஞர் விழிதிறக் கிறார். அவர்தான் ஆகாயத்தை விட்டுக் கீழேயே இறங்கவில்லையே. இதோ வானவில் தெரிகிறது. இவர் மனமோ கவிதையை நெய்கிறது.

பூவில்லாமல் நாரில்லாமல்

புனைந்த மாலையிதோ!-ஒரு

பாவில்லாமல் தறியில்லாமல்

படர்ந்த சேலையிதோ!’’

என்று பாடுகிறது. அப்படியே கவிதைமனம் கீழே இறங்கி வருகிறது.

கண்களுக்கு முன்னால் கடல் விரிந்து கிடக்கிறது. அலைகள் கொந்தளிக் கின்றன. நண்டுகள் அங்குமிங்கும் கரையில் ஓடுகின்றன. அலையடித்து நுரைபொங்கிவரும் கடல் நீண்டு கிடக்கும் நரைத்த கூந்தலாகத் தெரிகிறது.

நுங்குநுரைப் புனலாகத் தெரிவதெல்லாம்

நோக்குங்கால் வெள்ளிநரைக் கூந்தல்

தானோ?

என்று கேட்டுவிட்டு

நீங்காமல் துயரலைகள் மோதித் தாக்க

நிலையிழந்த நெஞ்சம்போல் இரவில்

கூடத்

தூங்காமல் பாய்சுருட்டும் அலையே,

நீதான்

தோணிகளைத் தாலாட்டும் அருமைத்

தாயோ?

என்கிறார். இவை வெறும் கற்பனை வரிகள் அல்ல. கடல் இங்கே தாயாகிறது. தோணி இங்கே குழந்தையாகிறது. மீனவ வாழ்க்கையை மெல்லிய ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் கவிஞர். கதிரவன் உதிப்பதையும் மறைவதையும் காண்பது பேரழகு. அதுவும் கடற்கரையில், ஆற்றோரம், ஓடையோரம் அமர்ந்து பார்ப்பது பேரழகு. காலை உதயம் என்பது கண்களையும் கருத்தையும் கவரும் காட்சி. கவிஞருக்கோ அது வேறொரு கற்பனையைத் தருகிறது. இரவு வெட்கத்தோடு விடைபெறுகிறதாம். அதுவும் எப்படி?

காரிருட் கூந்தல் ஒதுக்கியே- இராக்

கன்னி யெழில்முகம் காணவே

ஓரக்கடல் மீதில் வானிலே-நின்று

ஓங்கினன் காதற் கதிரவன்!

தாரகைப் பூக்களைப் பற்றியே-கூந்தல்

தன்னை வருடினன் மெல்லவே.

ஆருயிர்க் காதலன் கைகளில்-

அணைக்க

அன்னவள் வெட்கி மறைந்தனள்!’’

நட்சத்திரப் பூக்களை மெதுவாகப் பற்றி, கூந்தலைக் காதலன் கதிரவன் வருடி அணைத்தானாம். இரவுக்கு வெட்கம் தாளவில்லையாம். ஓடி மறைந்தாளாம். ஆகா!

அருமையாக இரவைத் தழுவி

யிருக்கிறார் கவிஞர். அப்படியே காற்று மெதுவாக வீசுகிறது. இன்பந் தருகிற தென்றலின் தழுவல் மெய் மறக்கச் செய்கிறது. இதைக் கவிஞர் ஓடை மலர்களை

ஊதித் திறந்திடும்

ஒற்றடந் தந்திடும் தென்றல்-மேல்

ஆடையிலாதவர்

தோள்களிலும் நடம்

ஆடி நடந்திடும் தென்றல்-மிக

வாடி மெலிந்திடும்

ஏழை வயிற்றினை

வருடி நடந்திடும் தென்றல்-உயர்

மாட விளக்குகள்

ஆடி நெளிந்திட

வந்து படர்ந்திடும் தென்றல்!’’

என்று எழுதுகிறார். ஏழையர் வயிற்றை வருடிச் செல்கிற தென்றல் மாட விளக்குகளில் ஆடி நெளிகிறது.

ஏன் அப்படி நெளிகிறது என்ற கேள்வியைக் கேட்காமல் கேட்க வைக்கிறார். ஏனென்றால் ஏழையர் வயிற்றில் பெரும்பாலான நேரம் தான் மட்டுமே இருக்க வேண்டியிருக்கிறதே என்பதால் மெதுவாக வருடிச் செல்கிறது போலும்.

சந்தங்கள் தாளமிட முந்திவரும் கற்பனைகளை முன்வைக்கிற கவிஞர் எந்தப் பொருள்பற்றி எழுதினாலும் சுந்தரச் சொற்கள் தாமே வந்து விழுகின்றன. புறாக் கூட்டத்தைப் பார்க்கிறார். கூடு திறக்கிறது. படபடக்கின்றன சிறகுகள். வெளியே சிறகடித்து வருகின்றன. கவிஞரின் சொற்களும் சிறகடிக்கின்றன

கூட்டைத் திறந்ததும்

தாவிடும்- மெல்லக்

கூவிடும்- இது

ஆட்டப் புறாக்களின்

கூட்டமோ?- பூந்

தோட்டமோ?’’

இப்படிப் பார்க்கிற இடத்தி லெல்லாம் அழகு சிரிக்கிறது. கவிஞரின் மனம் எதையோ நினைக் கிறது. துடிக்கிறது.

“அல்லும் பகலும் வான்மீதில்

அழியாச் சுடர்கள் தாம்சிரிக்கும்

கல்லென் றோடும் புனலோடை

களித்துக் குலுங்கிச் சிரித்தோடும்

கொல்லன் அடித்து வடிக்கின்ற

கூர்வாள் சிரிக்கும், இங்கிவைபோல்

எல்லாம் சிரிக்கும் என்றாலும்

ஏழை சிரிப்ப தென்றைக்கோ?’’

என்று வருந்துகிறார்.

இயற்கையின் அழகில் தோய்ந் திருக்கிற மனம் உணர்வுகளில் தோய்ந்திருக்கும் காதலைப் பாடாமல் இருக்குமா? காதலுக்கு ஒரு கரைகட்டிப் பார்க்கிறார்.

ஓவியனே அறியாத புதிய வண்ணம்!

உறுத்துகின்ற மென்புதுப்பூ, குளிருஞ்

செந்தீ!

நாவலர்கள் நவிலாத புதையல் உண்மை,

நதியனைய மதுப்பெருக்கு, மதுவின்

தோழன்!

என்கிறார்.

பூவெல்லாம் உன்முகம்

பொழுதெல்லாம் பெருமூச்சாய்

நாவெல்லாம் உன்பேச்சாய்

நாளெல்லாம் போகிறதே‘

என்று பெருமூச்சு விடுகிற கவிஞர் ஒருநாள் கண்டாய்

மறுநாள் நின்றாய்

உயிரே அவர்தான் என்கின்றாய்!-

அவர்

வருநாள் தானே

திருநாள் என்று

மனமே எனைஏன் தின்கின்றாய்?’’

என்று காதலியின் மனமாக மாறித் துடிக்கிறார். இந்த உணர்வை வேறுவிதமாக வெளிப்படுத்துகிறார். சற்றே வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் உண்மையானதாக இருக்கிறது.

இருவிழி தானும் அவர்முகம் கண்டே

ஏனோ மூடிக் கொள்ளுமடி!-என்

கருவிழி மீறிக் காதல், இதயக்

கதவைத் திறந்து செல்லுமடி!’’

என்று எழுதி கவிஞர் நம் இதயத்திற்குள் குடியேறிக்கொள் கிறார்.

காலத்தைப் பற்றி எத்தனையோ கவிஞர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால் காலத்தைக் கைப்பிடித் தவர்கள் எத்தனைபேர் என்பதை எண்ணிப்பார்த்தாலும் விடை கிட்டாது. கவிஞரின் சிந்தனையில் காலம் பற்பல கோலங்களைப் போட்டுக் காட்டுகிறது.

நேற்றென்றும் இன்றென்றும்

நாளையென்றும்

நித்தநித்தம் பெயர்மாற்றிக்

கொண்டிருப்பாள்.

காற்றைப்போல் ஆற்றைப்போல்

நில்லாதென்றும்

கடந்திடுவாள் காலமெனும் அழியாக்

கன்னி!

என்கிற கவிஞர்

ஞாலம் அவள் பயணத்தின் பாதையாகும்

நங்கையவள் அடிச்சுவடே நாட்களாகும்’’

என்கிறார்.

காலம் என்னும் கவிதையினில்

கலந்த சந்தம் வாழ்வென்பீர்

கால நடையை அறிவீரோ?

கவிதைச் சந்தம் அறிவீரோ?’’

என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார். உண்மைதான். காலநடையை யார் அறிவார்? எந்தத் திசைநோக்கி நம்மை எப்போது இழுத்துச் செல்லும் என்பதை அறியமுடியாமல் எப்படியெல்லாம் அல்லாடுகிறோம். நம் கவிஞரோ காலத்தை வெல்ல வழிகண்டிருக் கிறார்.

துள்ளித் துள்ளி ஓடுகின்ற

கால மென்னும் மானே! - உனைத்

தெள்ளு மின்பக் கவிதை யொன்று

செய்து வென்றேன் நானே!’’

என்று மார்தட்டுகிறார்.

கவிதை என்றொரு தோணியி னாலே

கடந்து செல்வதே காலமாம் மூப்பு’’

என்று வழிகாட்டுகிறார்.

மின்னூராரின் கவிதைகள் மென்மையும் அழகும் கண்

சிமிட்டுகிற கவிதைகளாக மின்னிச் சிரிக்கின்றன. இயற்கையின்

பேரழகில் வசப்பட்ட அவர்

மனம் உலகியல் துயரங்களை எண்ணித் துடிக்கிறது.

கற்பனையாம் சிறகில்-பறக்கக்

கனவு காணுகிறேன்.

இப்பெரும் பாழுலகம்-என்னை

ஏனோ விடுவதில்லை?’’

என்கிறார். ஆனாலும் அவருக்குப்

பொழுது போகிறது. எப்படி என்பதை

பெய்மழையில் முகம்நனைத்த ரோஜாப்

பூவின்

பேசாத கண்ணீரைத் துடைப்பேன் ஆழி

நொய்மணலில் சிதறியதாம் சிப்பி மேனி

நோகாமல் பெயர்பொறிப்பேன்,

கண்மயங்கச்

செய்யுமொரு மயிலிறகை எடுத்து

வைத்துச்

சிரிக்கும் ஒளி அந்தி, இருள், வான்வில்

யாவும்

எய்தியுறை கின்றஎழில் அதனில்

காண்பேன்.

ஈதெல்லாம் என்இனிய பொழுது

போக்காம்.’’

என்று பட்டியலிட்டுக் காட்டுகிறார். இப்படிப்பட்ட பொழுதுபோக்குகள் இருக்கையில் அவர் கவிதைகள் எப்போதும் இளமையாகவேதான் இருக்கும். மின்னூர் சீனிவாசனின் கவிதைகளில் மின்னிச் சிரிக்கும் இயற்கையின் எழில் நம் கண்களுக்குள் எத்தனையோ ஓவியங்களைத் தீட்டுகிறது. நம் மனம் அமைதியாகிறது. அவரே சொல்வது போல் கூச்சலில் கும்பலிலே- இன்று

குரல் அடங்கிடினும்

நீச்சலில் நான்மிதப்பேன்- கால

நீளலை வெள்ளத்திலே!’’

என்று அவர் கவிதைகள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்னும் மின்னிச் சிரிக்கின்றன. தங்கு தடையின்றி ஓடும் மரபுக் கவிதை களின் ஓட்டத்தில் நம் மனம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.