"புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர், புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான்.
வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான். இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.
எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன். எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணிவிட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.
நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.
நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்றமூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் எம்.ஜி.ஆர்.
தூய கதராடை அணிந்து, தங்க நிறமேனியுடைய எம்.ஜி.ஆர். சிவந்த கரம் உயர்த்திப் பேசிய பாணியும்உதிர்த்தத்தைகளும்என்றைக்கும்எங்கள் நெஞ்சை விட்டு நீங்காத காட்சியாகும்."புரட்சி நடிகராகவே என்னைக் கழகத்திற்கு அர்ப்பணித்துக் கொள்கிறேன்.
கதராடை அணிந்திருந்தாலும், பெரியார் அண்ணா கொள்கைகளுக்காகப் பாடுபடுவேன்.
கலைஞருடன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் மூலம் பழக்கம் ஏற்பட்டபின் இருவரும் தீவிர நண்பர்களாகி விட்டோம். அதனால் இயக்கக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு வந்திருக்கிறது. என் உடலிலில் ஒருசொட்டு இரத்தம் இருக்கும்வரை, அண்ணாவிற் காகவும், தி.மு.க.விற்காகவும் கடைசிவரை உழைப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்' என்றுமுழங்கினார். (எம்.ஜி.ஆர். கதை, ப.43) . புரட்சிப்பித்து ஏறிய கதை இதுதான்.
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததும் தேசிய இயக்கத்தின் வீறாப்பு மங்கத் துவங்கி, திராவிட இயக்கத்தின் தாக்கம் அதிகரித்தது. கம்யூனிஸ்டு கட்சியோ அதிதீவிரவாதத்தில் இறங்கிய தவறைச் செய்தது; அதையே சாக்காகக் கொண்டு அதன் மீது கொடூரமான அடக்குமுறையை ஏவிவிட்டது காங்கிரஸ் அரசு. இவற்றையெல்லாம் எம்.ஜி.ஆர் கவனித்துக்கொண்டு வந்தார்.
சினிமா உலகில் தி.க.வின் பகுத்தறிவுப் பிரச்சார நிழல் படர்ந்ததை எம்.ஜி.ஆர். அறியாமல் இருப்பாரா? 1949இல் "நல்லதம்பி'யால் என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் ஆனார். "வேலைக்காரி'யால் சி.என். அண்ணாதுரை அறிஞர் ஆனார். தி.க. திராவிட முன்னேற்ற கழகம் ஆனது.
"ரத்னகுமார்' படத்தில் சிறுவேடத்தில் நடித்து வந்த எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனித்தார். 1950-இல் கலைஞர் தொடர்பால் "ராஜகுமாரி', "மருதநாட்டு இளவரசி, "மந்திரிகுமாரி' 1951-இல் "மர்மயோகி'யும் "சர்வாதிகாரி'யும். அண்ணாவின் "ஓர் இரவி'ல் கே.ஆர்.இராமசாமி ஜொலிலித்தார். கலைஞரின் "பராசக்தி'யில் சிவாஜி மகாசக்தி ஆனார். திராவிட இயக்கம் தலைநிமிர்ந்தது. எம்.ஜி.ஆர் உள்ளூர பரபரப்பும் பதைபதைப்பும் அடைந்தார். அவர் அண்ணாவின் எந்த நாடகத்தை ஒதுக்கினாரோ அதே நாடகத்தில் கணேசன் நடித்து ஒரே படத்தில் சிவாஜி கணேசன் ஆனதும் 16 ஆண்டுகளாகப் படவுலகில் போராடி வரும் எம்.ஜி.ஆருக்கு எப்படி இருந்திருக்கும்.
அரசியல் வாழ்விலும் திரைப்பட உலகிலும் காற்றடிக்கும் திசையை உன்னிப்பாகக் கவனித்து, தனது சினிமா வாழ்வுக்கு எது உகந்தது என்று சரியாகக் கணக்கு போட்டு கதர் சட்டையோடு தி.மு.க. பக்கம் சாய்ந்தார் எம்.ஜி.ஆர்.
"காங்கிரசிலிலிருந்து விலகி தி.மு.க. உறுப்பினரான பின்னரும் கூடக் கதர் கட்டினேன் அண்ணா தவறு என்று சொன்னதில்லை' என்று எம்.ஜிஆர். கூறியிருக்கிறார்.
மிகுந்த கொள்கை வழிப்பட்டு தி.மு.க.வை எம்.ஜிஆர். தேர்ந்தெடுத்தார் என்று கூறமுடியாது. 1953 ஏப்ரல் வரை அவர் தாமதித்ததே அதற்கான சாட்சியமாக இருக்கிறது. தி.மு.க மூலமான பொதுவாழ்வானது தனது சினிமா உலக வளர்ச்சிக்கு உதவக் கூடியது என்பதில் உறுதி பிறந்ததும்தான் அவர் அதில் நேரடி யாகப் பங்குகொண்டார். கணக்கைப் பார்த்தே அவருக்குத் தி.மு.க. மீது காதல் வந்தது. அண்ணா, கலைஞர் போன்றவர்களுக்கும் ஒரு கணக்கு இருந்தது. கிடைத்தவரை - சினிமா நடிகரின் பிரபல்யம் கட்சிக்குப் பயன்பட்டது வரை லாபம். இதிலே நட்டக் கணக்கு பின்னர்தான் தெரிந்தது என்பார் அருணன் (ப.35)
எம்.ஜி.ஆர். சினிமாவில் தன்னை நிலைநிறுத்தியதும் தி.மு.க. பிரச்சாரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தார். பொதுநீதி, சுயவீரப்பிரதாபம் என்றே தன்னை வளர்த்தார்.
தி.மு.க.வால் தமிழ் சினிமாவும் தமிழ் சினிமாவால் தி.மு.க.வும் வளர்வதை - வளர்க்கப்படுவதைப் புரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர்.
அப்போது அவருக்குக் கிடைத்த பட்டம்தான் "புரட்சி நடிகர்'.
புரட்சி என்கிற மகத்தான சொல் இப்படித்தான் மலிலினப்படுத்தப்படத் துவங்கியது. புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் ஆனதும் பின்னர் புரட்சித் தலைவி உருவானதும் பிற்காலத்திய சோக சரித்திரம் இதற்கு அச்சாரம் போடப்பட்டது. 1952-இல் ஒரு நாடக மேடையில் என்பார் அருணன்(எம்.ஜி.ஆர். நடிகர், முதல்வரானது எப்படி?., ப.34)
1953-1972 வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக எம்.ஜி.ஆர். இருந்தகாலத்தில் தமிழ் மாநிலக் கட்சியான தி.மு.க.வின் கொள்கைகளான இறையாண்மை மிக்க தமிழகம், நாத்திகம், பிராமண எதிர்ப்பு ஆகியவற்றைத் தன்னுடைய திரைப்படங்களில் மிதமாக நீர்த்துப்போன வடிவில் பரப்பினார். கட்சித் தலைவர்கள், கட்சிக்கொடியின் நிறங்கள் ஆகியவற்றைத் திரையில் காட்டினார்.
தி.மு.க., அரசியல் தகவல் பரிமாற்றத்துக்கான கருவியாகச் சினிமாவை அதிகளவில் சார்ந்திருந்ததால் எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் களத்துக்கு நகர்த்தி ஒருவித உயிரோட்டம் மிகுந்த அதிகாரப்பூர்வ தன்மையோடு அதனை அரசியல் முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ள அதனால் முடிந்தது. அவ்வாறு தி.மு.க.வின் அரசியலில் நிழலும்நிஜமும் அடிக்கடி கலந்தது பெருமளவில் பயன்தருவதாக அமைந்திருந்தது. தேர்தலுக்குத் தேர்தல் தி.மு.க.வின் செழிப்பான வாக்கு அறுவடைக்கு அது வழிவகுத்தது என்பார் எம்.எஸ்.எஸ். பாண்டியன். (பிம்பச் சிறை, முன்னுரை).
விடுதலைக்குப் பிந்தைய தமிழகத்தில் ஊரகப் பகுதிகள் வேகமாக மின்சாரமயமாகி திரையரங்குகள் பரவின. தி.மு.க. திரைப்படங்களை அரசியல் பரப்புரை நிகழ்த்தப் பயன்படுத்திக் கொண்டு மூன்று வழிகளில் ஈடுபட்டது. எம்.ஜி.ஆர். இரண்டு வழிகளை எடுத்துக்கொண்டார்.
1.நேரடி பரப்புரை - சர்வாதிகாரி, மந்திரிகுமாரி, மர்மயோகி, நாடோடி மன்னன், தாய்மகளுக்கு கட்டிய தாலிலி, ஆகியவற்றில் நாத்திக வாதம், வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, காமுகரான குருக்களும் சாமியார்களும், கல்லான தெய்வங்கள், கொடுமைக்கார லேவாதேவிகள், வில்லத்தன பிராமணர்கள் காட்டப்பட்டடனர். நாடோடி மன்னன் தி.மு.க.வின் மக்கள் சேவையை வெளிப்படுத்தியது என்றார் எம்.ஜி.ஆர்.
2.கட்சி அடையாளம், கட்சி வண்ணம். தலைவர்களின் பெயர்கள் ஆகியவற்றைப் படங்களில் காட்டினார். "ராஜகுமாரி'யில் கருஞ்சட்டை, நாடோடி மன்னனில் தி.மு.க. கொடியும் உதயசூரியனும்; சக்கரவர்த்தி திருமகளில் உதய சூரியன் என்ற பெயர், "புதிய பூமி'யில் கதிரவன் என்றே பெயர், "காஞ்சித் தலைவன்' என்று படத்தின் பெயர். "உதய சூரியன் வெகுசீக்கிரம் வெளிச்சம் கொண்டு வரும்.' "அண்ணா நம்புகிறேன்! ஒட்டு மொத்த நாடும் உங்களை நம்புகிறது. உங்களையே பின்பற்றவும் செய்யும்.' "எனக்குச் சிவப்பு பார்டர் வைத்த கருப்பு சேலைதான் எப்பொழுதும் பிடிக்கும்' என்று பேசினார்கள்.
"அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' என்று அண்ணாவைப் பாடினார்.
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லை
சர்க்காரு ஏழைப் பக்கம் இருக்கையிலே - நாங்க
சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
என்று தி.மு.க. ஆட்சியைப் பாடினார்
(ஒளிவிளக்கு). "நம் நாடு' படத்தில் கருப்பு சிவப்பு
ஆடையும் அண்ணா உருவப்படமும், அவரைத் தென்னாட்டு காந்தி என்ற புகழ்ச்சியும், சேரிப் பகுதிகளில் தி.மு.க. கொடியும், கருப்பு சிவப்பு சுவரொட்டிகள் என்று தி.மு.க. பதிவுகள்.
சூரியன் உதிச்சதுங்க
இங்கே காரிருள் மறைஞ்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க இனிமே
சரியாப் போகுமுங்க
என்று "வாங்கய்யா வாத்தியார்' பாடல் முழக்கம்.
1951-இல் வந்த "மர்மயோகி' வீரதீர பராக்கிரம சாகசநாயகன். இப்படமும் தி.மு.கழகச் சார்பு படமாகக் கருதப்பட்டது, கழக ஆதரவாளர்களால்.
ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாலிலிபப் பெரியார் என்ற வர்ணிக்கப்பட்டார். இவர் வசனம் எழுதிய படம் "சர்வாதிகாரி'. பிரதாபனாக எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் மந்திரிசபை. ஒரு பாடலில்,
உலகில் மக்களுக்கே ஆட்சியின்னு சொல்வாங்க
இங்கே மந்திரிகளுக்கே மக்களுன்னு ஆச்சுதே’’
என்று பாடுவார்.
தேசியக் கவிஞர் வெ.ராமலிலிங்கம் பிள்ளையின் மலைக்கள்ளனில் நடித்தார். கவிஞர் சென்னை மாநில ஆஸ்தான கவிஞர். அரசியல் கலப்பில்லாமல் மு.கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.
திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதன் கவிஞர்களும் சம்பந்தப்பட்டால் படம் வெற்றிபெறும் என்ற அந்த இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத படத் தயாரிப்பாளர்களும் நம்பிக்கொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில்சேர்ந்துகொண்டார்.1957-இல் தி.மு.க.விற்குஉதயசூரியன் சின்னம் கிடைத்தது. இதே ஆண்டில் சக்கரவர்த்தித் திருமகன். இதில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தின் பெயர் உதயசூரியன். வெற்றிமேல் வெற்றி குவிக்கும் மாவீரன் பாத்திரம். சட்டசபை தேர்தலிலில் தி.மு.க. 15 இடங்களைப் பெற்றது.
அடுத்து புதுமைப்பித்தன். அமைச்சரின் அடிமையான அரசனை பைத்தியக்கார வேடத்தில் வெல்லும் கதை. இது மு.கருணாநிதியின் நாடகம்.
1959இல் அண்ணாவின் சிறுகதைக்கு இராம. அரங்கண்ணல் வசனம் எழுதிய "தாய் மகளுக்குக் கட்டிய தாலி'யில் நடித்தார். 1960இல் கண்ணதாசன் வசனத்தில் மன்னாதி மன்னனில் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று பாடினார், அச்சம் இல்லாமல்.
அண்ணாவின் திரைக்கதை வசனத்தில் "நல்லவன் வாழ்வான்' படத்தில் நடித்தார். "ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்' என்று பாடினார். ஒருவனே தேவன் என்றது அண்ணாதான்.
1958 இல் இவரது சொந்தப்படம் நாடோடி மன்னன்'. எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் இவரது சொந்தக் கம்பெனி. இதன் சின்னமாக ஆணும் பெண்ணுமாக இருவர் தங்கள் கைகளில் தி.மு.கழகக் கொடியைப் பற்றியிருந்தனர்.
ஆதித்திராவிடர் வாழ்வைச் சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம் என்று துவக்கப்பாடல் பாடப்பட்டது. திராவிட இனங்களின் கூட்டு முழக்கமாகவும் ஓர் காட்சியில் ஒரு பாட்டு சேர்க்கப்பட்டது. பார்புகழும் உதயசூரியனே!என்று சுரதாவும் ஒரு பாடல் எழுதியிருந்தார். எங்கள் திராவிட பூங்காவில் மலர்ந்த வேந்தே என்று அப்பாடல் நிர்ணயித்தது.
நானே போடப்போறேன் சட்டம் - பொதுவில் நன்மை பயக்கம் திட்டம்என்று பட்டுக்கோட்டையின் பாடலுக்குக் காதலனாகத் தி.மு.கழகத்தையும் காதலிலியாக மக்களையும் ஒப்பிட்டு உட்பொருள் கொண்டனர்.
படமும் மாபெரும் வெற்றி பெற்றது. மதுரை விழாவில் முத்து, 110 சவரனில் தங்கவாளைப் பரிசளித்தார். அண்ணாவும் கருணாநிதியும் அவரைப் பாராட்டினர். இயக்கக் கொள்கை, இலட்சிய விளக்கம், மயக்கும் மடமையைக் கொளுத்தும் மார்க்கம் கலையில் காணச் செயல்முறை வகுத்தார் என்று கலைஞர் பாடினார்.
1961-இல் "அரசிளங்குமரி'க்குக் கருணாநிதி வசனம் எழுத எம்.ஜி.ஆர். நடித்தார்.
1962 இல் "ராணி சம்யுக்தா' படத்தில், உதய சூரியன் மலரும் போது உனது கண்கள் மலரட்டும் என்று கண்ணதாசனின் பாடலைப் பாடினார்.
1963இல் காஞ்சித் தலைவன் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். இது அண்ணாவுக்கான பட்டமானது. கலைஞர் கதை வசனம். வடபுலத்துப் படையெடுப்பை எதிர்த்துக் கிளம்பும் கதை, பாடல். இப்படித்தான் இவரது புரட்சி வேடத்தைத் தன் படங்களில் போட்டுக் கொண்டார். ஆனால் அவ்வப்போது வேடம் கலையும், மேல் பூச்சு உதிரும்.
இவர் ஏழைத் தொழிலாளியாக முதலாளி களின் அநியாயத்தை எதிர்ப்பார். வில்லன்களைத் தண்டிக்காமல் மக்களிடமோ சட்டத்திடமோ ஒப்படைத்து விடுவார் அல்லது திருத்திவிடுவார். எல்லா ஆபத்துகளையும் முறியடித்து வெற்றிபெறுவார். கடைசியில் வில்லன் மகளைத் திருமணம் செய்து கொள்வார். ஆடுபகை குட்டி உறவு கதைகள்தான்.
எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் அடித்தட்டு நாயகனாக தான் இருக்கின்ற அமைப்புக்குள் எது நியாயம் என்று கருதப்படுகிறதோ அதையே வழங்குவதன் மூலம், நிலவும் முறையை விமர்சிப்பதற்கு மாறாக அதனை மறு உறுதிப்படுத்து வதோடு, அதை நிலைநாட்டவும் செய்கிறார். ஆகவே, இது மனம் மாறிய, சுரண்டல்காரர்களால் உருவாக்கப்பட்ட சொத்து, அதிகார உறவுகளால் ஆன உலகமே ஆகும்.
ஆகவே, எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் புகழ் என்பது சொத்துகள் உடைய நாயகனுக்கு உரியது.
அது சொத்தற்றவர்களுக்கு இல்லை. இது வீரகாவியக் கதைப்பாடல்களில் ஒருவர் காண்பதற்கு முற்றிலும் எதிர்மறையானதாகும். சுருக்கமாக, புரட்சிகரமான நாட்டுப்புற நாயகர்களைக் கருத்தியல்ரீதியாக மதிப்புக் குறைக்கப்பட்ட வடிவத்தில் எம்.ஜி.ஆர் திரையில் அடையாளப்படுத்துகிறார். எதிர்ப்பதற்குப் பதிலாக மேல்தட்டு மதிப்பீடுகளுக்கு எம்.ஜி.ஆர். எனும் நாயகன் தலைவணங்குவதன் மூலம், திரை ஊடகத்தின் மூலம் பிரச்சாரம் செய்யும் அதே சமயம் அடித்தட்டு மக்களின் போராட்டத்தின் மேல் பூச்சை மட்டும் தொடர்ந்து தனதாகத் தக்கவைத்துக் கொள்கிறார்.
"மதுரை வீரன்' ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன், ஆனால் கதைப்பாடலிலில் அரசன் மகனாக ஆக்கப்பட்டான். இந்த மாற்றங்கள் மேல்தட்டினரால் காலப்போக்கில் கமுக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டு கதைப்பாடல்கள் ஜாதி அமைப்புக்கு, ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக விடுக்கும் சவால்களை வலுவிழக்கச் செய்கின்றன. எம்.ஜி.ஆர் படங்களில் இவ்வாறு செய்யப்படும் மாற்றங்களும் அப்படிப்பட்டவையே. ஆனால் முரணாக, பழமைவாதத்தை ஆதரிக்கும் வகையில் மறுபுனைவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்வேண்டும்' என்பார் எம்.எஸ்.எஸ்.பா., (ப.83).
"அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபராக எம்.ஜி.ஆர். தன்னுடைய திரைப்படங்களின் போக்கில் அநீதியை எதிர்த்துப் போராடுகிறார்.
மோதலுக்கான உலகம் என்பது (நாயகனை) எம்.ஜி.ஆரை மையப்படுத்திய உலகமாக இருக்கிறது.
அவரின் தனிப்பட்ட வெற்றி தோற்றுவிக்கப்பட்ட வெற்றி, தோற்றுவிக்கப்பட்ட சமூக அநீதிக்கு எதிரான வெற்றியாக அடையாளப்படுத்தப்படுகிறது' என்பார் சிவத்தம்பி.
எம்ஜி.ஆர் மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவந்து தன்னுடைய பாணி நீதியை நிலை நாட்டுகிறார். "மலைக்கள்ளன்' வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். படங்களில் தேவையான மசாலாபாணி ஆனது.
நீதியைத் தனி ஒருவராக நிலைநாட்டும் எம்.ஜி.ஆர். வேடம் சண்டைக் காட்சிகளுக்குத் தரப்படும் அழுத்தம் மூலம் விரிவடைகிறது. இது ஆக்ஷன் சுவையைக் கூட்டுவதோடு சமூக அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிரான அவரது போராட்ட வகையின் வெளிப்பாடாகும். தனியாளாக, நிராயுதபாணியாக ஆயுதம் தாங்கிய எதிரிகளோடு எம்.ஜி.ஆர் வில், வாள்சண்டை, சிலம்பம், சண்டையிடுகிறார். கடப்பாரைகளை வளைப்பார் (படகோட்டி) சிங்கம் புலிலியை வெறுங்கையால் கொல்வார் (குலேபகாவலிலி, அடிமைப்பெண்).
மக்களும் எம்.ஜி.ஆரை உண்மையான வீரனாக நம்பினர். சிவத்தம்பி கூறுவது போன்று, அண்ணாதுரையும் கருணாநிதியும் ஏன் சமூக அடக்குமுறைகள் ஏற்படுகின்றன என்பதற்கான வாதங்களைத் தந்தபோது, எம்.ஜி.ஆர். எப்படி அவற்றை வெற்றி கொள்வது என்பதைக் காட்டினார். ஆகவே, எம்.ஜி.ஆரிடம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சுவடுகள் அதிகம் காணப்பட்டன. இதனால் எண்ணற்ற ரசிகர்கள் அவரைத் தாம் நினைத்ததைப் பிரதிபலிலிப்பவர் என்பதைவிட, நினைப்பதை முடிப்பவர் என்று அடையாளம் கண்டார்கள். வெறும் வார்த்தைகளோடு நிற்காமல் செயலிலிலும் சூரர் என்று நம்பினார்கள்.
அத்துடன் வெல்லவே முடியாத நாயகன் என்றும் நம்பினார்கள். இதை எம்.ஜி.ஆரும் நம்பினார் என்பதுதான் வேடிக்கை. ஒரு பேட்டியில் மகாபாரதத்தில் இளைய அபிமன்யு திறமிகுந்த வீரர்களோடு சண்டையிட்டு, சிக்கலான போர் சூழ்ச்சிகளை உடைத்து நொறுக்கி எதிரிகளை வீழ்த்த முடியுமென்றால் என்னைப் போன்ற திரைப்பட நாயகர்களும் அதைக் கண்டிப்பாகச் செய்யமுடியும் என்கிறார். (மணியனின் "காலத்தை வென்றவர்').
எம்.ஜி.ஆர். படத்தில் தோற்பதையோ இறப்பதையோகூட அவரது ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றால் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். "பாசம்' படுதோல்வி அடைந்ததற்கும் இதுவே காரணம். "பல்லாண்டு வாழ்க' படத்தில் ஒரிஜினல் கதையை மாற்றிப் பிழைக்க வைத்தனர்.
எம்.ஜி.ஆர். "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் நடித்திருந்தால் வெள்ளையர்களை விரட்டியிருப்பார். அவரைத் தூக்கிலேயே போட்டிருக்க முடியாது என்றும் ஜம்பம் பேசினார்கள். அதனால்தான் விசிலடிச்சான் குஞ்சுகள் என அழைக்கப்பட்டனர்.
"மக்கள் ஏமாளிகள், எம்.ஜி.ஆர். ஏமாற்றுக்காரர். சினிமா கவர்ச்சி என்ற அறியாமையின் வடிவமே புரட்சி நடிகர் ஆனதற்குக் காரணம் என்று தீர்மானிக்கப்பட்டு, அறிஞர்களால் உதாசீனப் படுத்தப்பட்டிருந்தது' என்பார் ராஜன்துறை (பிம்பச் சிறை, ப.4)
தானே கவனத்துடன் கட்டமைத்த பிம்பத்தின் பிடியில் எம்.ஜி.ஆரும் அந்தப் பிம்பத்தினால் ஈர்க்கப்பட்ட, அதன் விளைவாகத் துன்பங்களை மட்டுமே அடைந்த ஆனால் அதே வேளையில் அப்பிம்பத்தைக் கொண்டாடுவதன் வழியான போலி மகிழ்ச்சியைத் துய்த்த தமிழகத்தின் அடித்தட்டு மக்களும் ஒரே வேளையில் அந்த நாயகப் பிம்பச்சிறையில் சிக்குண்டது நகைமுரண் என்பார் சுபகுணராஜன் (பி.சி., ப.4)
எம்.ஜி.ஆர். தன்னை ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவராகக் கட்டமைத்துக் கொண்டே இன்னொரு புறம் நீதி வழங்கும் உரிமையைத் தானே எடுத்துக்கொண்டு அவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறவராகவும், வன்முறையைப் பயன்படுத்துபவராகவும் இருக்கிறார். நிஜவாழ்க்கையில் இவை மேல்தட்டு வர்க்கத்திடம் மட்டுமே காணப்படும் ஏகபோக உரிமையாகும். திரைப்படப்பண்பு தரும் உரிமையில் அவரால் நீதி வழங்க முடிகிறது என்பார் எம்.எஸ்.பாண்டியன் (ப.45).
திருடாதே (196) வெற்றிக்குப் பிறகு பல்வேறு மாறாத குணாம்சங்களைக் கொண்ட கதாபாத்திரங்களின் மூலம் எம்.ஜி.ஆர். என்கிற ஆளுமையைத் திரையில் கட்டமைத்தார். உழைக்கும் மனிதன் ஒருவன் அன்றாடம் நடக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராடுவது எம்.ஜி.ஆரின் தனிச்சிறப்பானவேடங்களில் ஒன்றாகும். தொழிலாளி (1964)
படகோட்டி (1964) விவசாயி (1967) மாட்டுக்கார வேலன் (1970) ரிக்க்ஷாக்காரன் (1971) என்று பெயர் வைத்துக் கொண்டார் தம் படத்துக்கு.
இரட்டை வேடத் திரைப்படங்களில் ஒருவர் படித்தவராகவும் இன்னொருவர் அடித்தட்டு மனிதராகவும் இருப்பார். இவர் அடித்தட்டு மனிதருக்கே முதன்மை தருவார். மாட்டுக்கார வேலனில் மாட்டுக்காரனும் வழக்குரைஞரும், எங்கவீட்டுப் பிள்ளையில் உழைப்பாளியும் நிலப்பிரபுவும் ஆக நடிப்பார். ஏழைகளின் உணவை உண்பதாகவும் நடித்து இதன் மூலம் ரசிகர்கள் தங்களில் ஒருவனாக நாயகனை உணர வைக்கும் சூழலை உருவாக்குவார். அத்துடன் மேல்தட்டு உணவுமுறையைப் பகடியும் செய்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் சமூகம் சமான சரிசமமற்ற அதிகாரத்தால் ஆனது. விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கும் நிலபிரபுக்கள் (விவசாயி), ஏழைகளைச் சாட்டையால் அடிக்கும் செல்வர்கள் (எங்க வீட்டுப் பிள்ளை), கந்துவட்டிக்காரர்கள் (படகோட்டி), வேலையைப் பிடுங்கும் தொழிலதிபர்கள் (தொழிலாளி), மற்றவர்களின் சொத்துக்களைப் பறிக்கும் பேராசைக்காரர்கள் (ஆயிரத்தில் ஒருவன், மாடப்புறா, முகராசி), கிராமத்துப் பெண்களை நாசமாக்கும் நகரத்து மோசடிக்காரர்கள் (தேர்த் திருவிழா), ஜாதி வெறியர்கள் (நாடோடி), காமுகர்கள் (ஆசைமுகம், ஜெனோவா, மகாதேவி, விவசாயி).
அடித்தட்டு மக்களின் நாயகனாக எம்.ஜி.ஆர் மோதலிலின் போக்கில் ஆதிக்கம் செலுத்துபவர்களின் பல்வேறு அதிகார/ஆற்றல், அடையாளங்கள், குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்வார். நியாயம் வழங்கும் அதிகாரம் மற்றும் வன்முறையைக் கைக்கொள்ளுதல், எழுத்தறிவைப் பெறும் வழிகள், பெண்ணை அடையும் வழிகள் என்று மூன்று குறியீடுகள் இவர் படங்களில் இருக்கும். இதில் புரட்சி எங்கே?
(தொடர்ச்சி அடுத்த இதழில்...