ப்போதும் தோள் கொடுக்கும் ஒரு தகப்பன், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தோழன், அந்யோன்யமான அண்டை வீட்டுக்காரர், உரிமையோடு பாசம் காட்டும் இலக்கிய உறவினர்.

நகைச்சுவை பொங்கும் சக மனிதர் என தவிர்க்கவே முடியாதவொரு திரைபிம்பம். நடைமுறை வாழ்வின் அனுபவச்செறிவும், அன்பின் கனிவும் ததும்பும் ஒரு முகம். அவரின்றி வேறு யாரைச் சொல்வது? 1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூரில் பிறந்தவர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கல்வி கற்றவர்.

இப்படி கூகிள் ஆண்டவரைத் தட்டிக் கேட்டால் ஆயிரமாயிரம் புள்ளி விவரங்களைக் கொடுக்கக்கூடும். ஆனால், நடிப்பு ஆண்டவர் கமலின் நெருங்கிய வட்டத்தில் இருந்தும் இறுமாப்பு அடையாமல் நன்றியே பாராட்டிய அந்த நல்லுள்ளத்தின் துல்லியத்தை வார்த்தைகளில் எப்படி வடிப்பது?

Advertisment

ss

நடிகர் காத்தாடி ராமமூர்த்தி அவர்களால் நாடக உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர். திரையுலகப் பிரவேசம் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரரின் வழியாக 1974-ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம். அன்று தொடங்கி நிற்காத பொன்விழாக் காணவேண்டிய ஐம்பதாண்டுகளின் அசராத திரைப்பயணம். நகைச்சுவையையும், குணச்சித்திர கதாபாத்திரங்களையும், வில்லன் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்த்திரை ஜாம்பவான் களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் எஸ்..வி சுப்பையா , பாலைய்யா , எஸ்.வி.ரங்காராவ், வி.கே.ராமசாமி , நாகேஷ் , மனோரமா என அறியப்படும் ஆளுமைபட்டியலில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி என்றோ இடம்பெற்றுவிட்டவர்.

Advertisment

டெல்லி கணேஷ் என்ற பெயரைச் சொல்லும்பொழுது தேசத்தின் விமானப்படையில், இந்திய உணவுக் கழகத்தில் பணியாற்றிய தேர்ந்த உழைப்பின் சுவடுகள் ஆங்காங்கே தென்படும். எந்தக் கதாபாத்திரம் ஏற்றாலும் நூறுசதம் நேர்த்தி செய்யும் மாபெரும் கலைஞனுக்குக் கைம்மாறு வெறும் வார்த்தைகளா என மனம் விக்கித்து நிற்கிறது.

ஜவுளிக்கடை சம்பந்திதியாக (சம்சாரம் அது மின்சாரம் ), அறச்சீற்றத்தையும், விசுவாசத்தையும் இரு கண் என்பதை இரு கைகளில் ஓயாமல் வாசித்துக் கொண்டிருக்கும் மிருதங்க குருமூர்த்தியாக (சிந்து பைரவி ) நம்மோடு அவரின் நினைவுகள் காலமெல்லாம் நிச்சயம் நடைபோடும். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் "ஃபிரான்சிஸ் அன்பரசாக உன் முதுகில் நான் குத்தத்தான் வேண்டுமா?" என்று உலகநாயகனிடம் திரையில் கூட தீமை செய்ய விரும்பாத நட்பின் பரந்த மனது அவருக்கே உரியது.

இனிவரும் தலைமுறை சமையல் கலைஞர் என்றால் பாலக்காட்டு மணி ஐயர் (மைக்கேல் மதன காமராஜன் ) என்றுதான் பேசும். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற வாக்கிற்கு இணங்க உணவுத்துறையில் பணியாற்றிய அனுபவம் கைகொடுத்தது.

அவரின் நளபாகம் ஏற்ற பாத்திரத்தை மட்டுமல்ல, வீட்டில் விளக்கேற்றிய தங்கம் அம்மையாருக்கும் காய்நறுக்கி மெருகேற்றியது.

மரபுகளின் வேர்களை அடியாழம் வரைச் சென்று பற்றிக் கொண்ட அதேநேரம், மூன்று தலைமுறைகள் தாண்டிய நவநாகரீகக் காலத்திற்கும் தன்னைப் பொருத்திக் கொண்ட பெரும் கலைப்பற்றாளர் டெல்லி கணேஷ் ."பேபி" என்றழைக்கும் அந்தக் காதல் குரலை அவர் மனைவி தேடிக் கொண்டே இருப்பது நல்ல கணவர் என்று நமக்கு உணர்த்தும்..

மென்குறுநகை எப்போதும் வளைந்தோடும் நிறைவான பக்குவத்தின் முகம் டெல்லி கணேஷ் அவர்களுடையது. இயக்குனர்களின் நடிகராக, தயாரிப்பாளர்களுக்குச் செலவு வைக்காத மனிதாபிமானம் மிக்க நண்பனாக இதயங்களில் இடம்பிடித்துக் கொண்டவர்.

தமிழ்,தெலுங்கு,மலையாளம், ஹிந்தி என 600 படங்களுக்கு மேல் நடித்தவர் என கணக்கு சொல்கிறது. நம் வியப்பின் புருவங்கள் மேலெழும்பொழுது தனக்கே உரித்தான குவிந்த உதடுகளில் குறும்பு பாவனையோடு, கட்டுப்பட்ட எளிமையோடு எங்கோ இருந்துகொண்டு, "என்னை எப்போது பேட்டி எடுப்பீங்க'' என்று அவர் கேட்கமாட்டாரோ என ஊடகங்கள் தவிக்கும் நாளானது நவம்பர் 9, 2024.

டெல்லி கணேஷ் விமானப்படையில் பணி செய்தபோது சந்தித்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட எளிமை கடைசி வரை தொடர்ந்தது. தான் உதவி செய்தவர்க்கும் உதவி செய்ய தானொரு கருவியேயானேன் எனும் எளிமை எளிமை இப்போது வரலாறானது. ஒருவரை எல்லோருமாக, எல்லோரும் காண்கிறார்கள் எனில், தற்போது அவர் இறைவனன்றி வேறென்ன? பிரபலங்கள், திரையுலகத்தினர் மட்டுமல்லாது எங்கிருந்தோ தேடியோடி வந்த பாமர ரசிகர்களின் கண்ணீர் அவரைக் கைகூப்பி வணங்கி வழியனுப்பும் காட்சி மனிதன் இறைவனாகும் புனிதமே.

தலைநகரின் பெயரைக் கொண்டிருந்தாலும் தலைக்கனம் இல்லாத எளிமை. முதலிடம் விரும்பாத எதார்த்தம். ஆம். டெல்லி கணேஷ் - இது பெயரல்ல.தமிழ்த் திரையுலகின் உச்சியில் பொறிக்கப்பட்ட நிஜமான வியப்பின் குணச்சித்திரம்.

அண்ணாந்து பார்த்துச் சிந்தும் நம் விழித்துளிகள் அந்த மகத்தான கலைஞனுக்குச் சிறு அஞ்சலியாகும்.