தாளை நக்கி வாலை ஆட்டத்

தமிழர் என்ன நாயா?- சீனித்

தூளைப் போன்ற சுகத்துக் காகச்

சுற்றித் திரியும் ஈயா?

Advertisment

என்று கேட்டார் அந்தக் கவிஞர். இன்றைக்கு இருந்தால் எப்படிப் பாடியிருப்பாரோ தெரியாது. தமிழனின் செம்மாந்த வாழ்வு சீரழிந்து போய்விடக் கூடாதே என்ற சீற்றம் கொப்பளிக்கும் கவிதைகளைத் திராவிடச் சிந்தனைகளில் தோய்த்தெடுத்து, சொற்களின் அணிவகுப்பைப் போர்வீரர்களின் அணிவகுப்பாய் நடத்திக் காட்டியவர். ஆரம்ப காலங்களில், வருத்தப்படாமல் வந்து விழுந்த விருத்தங்களில் அவர் அழுத்தந் திருத்தமாக முன்வைத்தவை, அறிஞர் அண்ணாவின் கருத்து களையும் பாவேந்தரின் கவிதைகளையும் வழிமொழிபவையாகவே அமைந்திருந்தன.

நான்இந்த மண்ணுக்குச் சொந்தக் காரன்.

நாடாண்ட மாவீரன்! தீரன்! இன்றோ

Advertisment

ஏன்இந்தக் கொடுந்தாழ்வு எச்சில் வாழ்வு

என்றெண்ணிப் பார்க்கட்டும் ஒவ்வோர் நெஞ்சும்

என்று பொங்கிய கவிஞர் புரட்சிக் கவிஞரின் அடியொற்றிப் புறப்பட்டு வந்தவர். "புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தைத் தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்' என்று தன்னைப் பற்றிய கருத்தை முன்வைத்தவர். அவர் தான் சிவகங்கைச் சீமையின் செழுந்தமிழ் முழக்கமாய் எழுந்த கவிஞர் மீரா.

சிவகங்கையில் 10.10.1938-ல் மீனாட்சி சுந்தரம், இலக்குமி அம்மாள் இணையருக்குப் பிறந்த மீ. ராசேந்திரன், மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்படித்துச் சிவகங்கை மன்னர் கல்லூரியில் பணியாற்றி, கவிஞராய், எழுத்தாளராய், பதிப்பாளராய், "கவி', "அன்னம் விடு தூது' இதழ்களை நடத்தியவராய், கவியரங்கக் கவிஞராய் ஒளிவீசி, திராவிட இயக்கச் சிந்தனை களையும் பொதுவுடமைச் சிந்தனைகளையும் தன் படைப்புகளில் முன்னிறுத்தி, எத்தனையோ இளம் படைப்பாளிகளைத் தன் பதிப் பகத்தின்வழி கைதூக்கிவிட்டு 1.9.2002-ல் கண்மூடிய பெருங்கவிஞர். மீரா என்று தன் பெயரைச் சுருக்கிக்கொண்டு இலக்கிய வானில் சிறகை விரித்துப் பறந்தவர்.

மீராவின் முதல் கவிதை 1959-ல் “தாமரை’’ இதழில் வெளிவந்தது. பாரதியாரைப் பற்றிய கவிதை. பத்துக்கும் மேற்பட்ட, திராவிட இயக்க இதழ்களில் அவர் எழுதிய கவிதைகளில் பாவேந்தரின் தீப்பொறி பற்றிப் படர்ந்து எரிந்தது.

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட் கில்லை

தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

என்று அவர் கேட்ட கேள்வியையும்

சாவா சந்தி்ப்போம்.. வாழ்க்கை நமக்கென்ன

பூவா புறப்படுவோம் .. புல்லியரைத்தூள் செய்வோம்

என்ற முழக்கத்தையும் அறிஞர் அண்ணா தன் எழுத்தில் மேற்கோள்களாகக் காட்டி மேன்மைப்படுத்தினார். 1965-ல் வெளிவந்த முதல் கவிதைத் தொகுப்பு இராசேந்திரன் கவிதைகள், சமூகத்தையே பெருமளவில் பாடு பொருளாகக் கொண்டது. இயற்கையைப் பற்றிய கவிதைகளிலும் இயல்பாகவே அவருடைய சமுதாயப் பார்வை படிந்து கிடந்தது.

அதற்குப்பின் தன் கவியரங்கக் கவிதைகளைத் தொகுத்து 1967-ல் "மூன்றும் ஆறும்' என்ற தலைப்பில் வெளியிட்டார். ஒன்பது கவியரங்கக் கவிதைகள் இடம்பெற்றன. இந்த நூலைப் புரட்சிக்கவிஞருக்குக் காணிக்கை ஆக்கியிருந்தார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசையும் பெற்றது.

அதன்பின் 1971-ல் "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்' வெளிவந்து இளைய உள்ளங்களில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கிண்டலும் கேலியும் குத்தலும் நக்கலுமாக 1974-ல் "ஊசிகள்' தொகுப்பு வெளிவந்தது. ஜூன் 2002-ல் "கோடையும் வசந்தமும்' வெளிவந்தது. இதற்கிடையில் நவம்பர் 1985-ல் எதிர்காலத் தமிழ்க்கவிதை’’ உட்படச் சில உரைநடை நூல்கள் வெளிவந்தன. தமிழுக்குப் புது வரவாக "குக்கூ' என்ற தொகுப்பை இறுதிக் காலத்தில் கொண்டுவந்தார். மொத்தம் ஆறு கவிதைத் தொகுப்புகள்.

கவிஞராய்த் தொடங்கிய பயணம், பதிப்பாளராய்த் திசைமாறிப் போனதால் அவருடைய கவிதை ஆற்றல் காலப்போக்கில் வற்றிப் போய்விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. என்றாலும் மங்கிவிடாத சமுதாய உணர்வு பொங்கிவழிகிற கவிதைகளை வழிநெடுக அவர் சிந்திவிட்டே சென்றிருக்கிறார். “ஒரு சீர்திருத்தவாதியாகவும் முற்போக்குச் சிந்தனையாளனாகவும், மனிதாபிமானியாகவும் என்னை முதலில் வளர்த்தது திராவிட இயக்கம்தான்’’ என்கிற அவரின் கூற்று இன்று கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்து.

பின்னாளில் பொதுவுடமைச் சிந்தனைகளைத் தன் கவிதைகளில் பதியனிட்டார். "கோடையும் வசந்தமும்' கவிதை நூலில் “எழுபதுகளுக்குப் பிறகு என் எழுத்துக்களில் “பிரச்சாரம்’’ ஓங்கி ஒலித்தது என்பதை இந்நூல் உறுதிப் படுத்தும். அதற்குக் காரணம் என் பொதுவுடமைச் சித்தாந்தம் தான். அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று மார்க்சியம் எனக்குப் போதித்தது’என்று பதிவுசெய்தார். ஆக, அவருக்கான வாழ்க்கை அறத்தை அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் இருந்தும் பொதுவுடமைச் சிந்தனைகளில் இருந்தும் எடுத்துக்கொண்டார் என்றே கணிக்க முடிகிறது.

கவிதைக் கலை என்பது பொழுதுபோக்குக் கலையல்ல. அது விஞ்ஞானத்தைப் போல் மனித வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும். சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ சமூகத்தை உருவாக்க உதவவேண்டும்’என்பது மீராவின் கருத்து. (எதிர்காலத் தமிழ்க்கவிதை பக்-35). அதற்கேற்பவே அவருடைய கவிதைகளை ஆரம்ப நாள்களில் இருந்து வடிவமைத்துக் கொண்டே வந்திருக்கிறார். மரபுக் கவிதை, புதுக்கவிதை, குறுங்கவிதை என்று பல்வேறு படிநிலைகளிலும் வெவ்வேறு தளங்களில் விளையாடியிருக்கிறார்.

சாகாத வானம்நாம்.. வாழ்வைப் பாடும்

சங்கீதப் பறவைநாம் பெருமை வற்றிப்

போகாத நெடுங்கடல்நாம் நிமிர்ந்து நிற்கும்

பொதியம்நாம் இமயம்நாம்.. காலத் தீயில்

வேகாத.. பொசுங்காத தத்து வம்நாம்!

வெங்கதிர்நாம்.. திங்கள்நாம்..அறிவை மாய்க்கும்

ஆகாத பழமையினை அகற்றிப் பாயும்

அழியாத காவிரிநாம்! கங்கை யும்நாம்

என்று முன்னணி 15.1.1962 இதழில் முழங்கிய கவிஞர் தமிழுக்கு நேரிடுகிற தடைகளையெல்லாம் உடைத்தெறியப் பாடுகிறார்.

திரைப்படத்தில் நாடகத்தில் இன்றுங் கூட

தேர்ந்ததமிழ் வளரவில்லை.. காசுக் காக

கரைகாணாக் கடல்போன்ற தமிழை விற்க

கருதல்ஏன்? கெடுதல்ஏன்? களங்கம் ஏன்ஏன்?

தரையுலக, வானுலகச் செய்தி யாவும்

தவறாமல் விரைந்தளிக்கும் நாளி தழ்கள்

அரைகுறையாய்த் தமிழினிலே எழுது தல்ஏன்?

அன்னத்தின் மேல்அம்பை எறிதல் ஏன்?ஏன்?

என்று கேட்கிறார். அரைகுறையாய் எழுதித் தொலைத்தால்கூடப் பரவாயில்லை. தமிழுக்கும் தமிழருக்கும் கேடுவிளைவிக்கும் ஏடுகளாகவல்லவா சில இதழ்கள் பறந்துகொண்டிருக்கின்றன? வாழ்வது தமிழ்மண்ணில், தின்பது தமிழ்ச்சோறு, என்றா லும் எண்ணத்தில் இழையோடிக் கிடப்பதோ தமிழ்ப்பகை. எங்கும் எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக என்ன விலைக் கும் தன்னை விற்றுவிடத் தயாராயி ருக்கிற நிலையில் என்ன முன்னேற் றம் தமிழுக்குக் கிட்ட முடியும்? அதனால்தான் கவிஞர் தன்ஏற்றம் தன்இன்பம் நினைத்தி டாமல் தமிழ்ஏற்றம் தனைப்பெரிதாய்க் கருத வேண்டும்.

dd

முன்னேற்றம் தமிழ்பெற்றால் பின்னர்

அந்த

முன்னேற்றம் தமிழனுக்கும் சொந்த மாகும்’’

என்கிறார். அண்ணாவின் மீது அளவற்ற பற்றுக் கொண்டவராகக் கவிஞர் இருந்திருக்கிறார் என்பதற்கு சிவகங்கையில் நடந்த ’’எழுச்சி நாளுக்கு அண்ணா வருகை தந்தபோது சுற்றறிக்கையாக அச்சிட்டு வழங்கப்பட்ட கவிதையையே சான்றாகக் காட்டலாம். அக்கவிதையின் ஒரு பகுதி டிசம்பர் 1964 “தென்னரசு’’ இதழில் வெளிவந்தது. கவிதையை எப்படி அமைத்தி ருக்கிறார் என்பதையும் உணர்வோடு ஓடுகிற ஓட்டத் தோடு கவிதை எப்படி ஓடுகிறது என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தலைவா! என் தலைவா!என் தலைவா! இந்தத்

தாரணியில் தமிழ்அணியின் கொடியை ஏற்றும்

தலைவா!என் தலைவா!என் தலைவா! இந்தத்

தலைமுறையில் குறள்முறையை மன்றம் ஏற்றும்

தலைவா!என் தலைவா!என் தலைவா! இந்தத்

தாயகத்தார் தம்மகத்துள் விளக்கை ஏற்றும்

தலைவா!என் தலைவர்களில் தலைவா! உன்றன்

தாள்களிலே தலைவைப்பேன்.. கரங்கள் வைப்பேன்

உணர்ச்சிகள் கொந்தளித்து ஓடுகிற இக்கவிதை, கவிஞர் மீரா என்ற தனி மனிதனின் குரலன்று. கோடிக் கணக்கான தமிழர்களின் குரல். அந்தக் குரலைத் தன் சந்தனத் தமிழில் வடித்திருக்கிறார் கவிஞர். அதே நேரத்தில் சமுதாய நிலையை எண்ணிக் குமுறுகிறார்.

போலிகளை நம்புகிறாய் போ! போ!’’என்கிறார். 1963-ல் தமிழ்நாடு’ இதழில் வெளிவந்த கவிதை. இன்றைக்கும் பொருத்தமாகவே இருக்கிறது.

வேடமிட்டுத் தழைப்போரை, ஞானி போல

வெளிச்சமிட்டுப் பிழைப்போரை, பொருள்உ டம்பைக்

கூடமட்டும் கூடிப்பின் ஒழுக்கம் பற்றிக்

கூசாமல் உரைப்போரை, மதுவ ருந்தி

ஆடமட்டும் ஆடிப்பின் அருள்பா லிக்க

ஆண்டவனை அழைப்போரை எல்லாம் நன்றாய்ச்

சாடமட்டும் சாடாமல் தழுவு கின்றாய்

சமுதாய மே!நீதி வழுவு கின்றாய்

என்கிற வரிகளில் எத்தனை காட்சிகள் நம்முன்னே விரிகின்றன!.

சொற்களில் நடனம் புரிகிற கலை கவிஞருக்குக் கைவந்த கலை யாகவே இருக்கிறது. “கூந்தல் நிழலில் குடியிருக்க வேண்டுமடி!’’ என்கிறார்.

மனத்தின் துடிப்பைச் சொற்களில் கொண்டுவந்து கொட்டுகிறார்.

காதலித்துப் பொங்குதடி சித்தம்- என்றன்

கண்ணில்ஆசை பொங்குதடி நித்தம்-உயிர்

பேதலித்துப் பிரிந்திடுமுன்

பேசாமல் அளி, இன்ப

முத்தம்! அழி பித்தம்!

காந்தளிளம் பூவிரண்டைச் சூடி-வாடி

காட்டுமயில் போல்நடனம் ஆடி-உன்

கூந்தல்தரும் தண்ணிதழில்

குடியிருக்க வேண்டுமடி

வாடி!பண் பாடி!

என்று சலங்கைகட்டி ஆடுகிறார் மீரா. கவிஞரின் எள்ளல் அவரின் முதல் தொகுப்பிலேயே முகங்காட்டி நிற்கிறது. கடவுள் கள்வன் ஆனார் சாமியார் சம்சாரி ஆனார் ஏகாம்பரம் இருக்கிறான்! போன்ற கவிதைகள் அங்கதச் சுவையை அள்ளித் தருகின்றன. இக்கால கட்டத்தில் காளித்தீசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவி அருமையான உருவகக் கவிதையை அடிமறி மண்டில ஆசிரியப்பாவில் மூன்று வரிகளில் அமைத் திருக்கிற புதுமுயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார். அறுகம் புல் என்ற தலைப்பில்

வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே

வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே!

அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே!

என்கிற கவிதையில் அவர் சொல்கிற செய்தி மிக நுட்பமானது. மனிதன் எப்போது நம்பிக்கைக்கு உரியவனாக இல்லாமல் போனான் என்பதை நாணயம் மடிந்த நாள்’என்ற கவிதையில்

அடுத்தவ னிடத்தில் ஐயப் பட்டே

இருக்கும் வீட்டுக் கிரும்புக் கதவை

அமைத்தது மன்றி அறிவுக் கூர்மையால்

கனத்த பூட்டைக் கண்டு பிடித்ததும்

எந்த ஓர் நாளோ அந்த

நாள்முதல் மனிதன் நாணயம் மடிந்ததே

என்கிறார். இக்கவிதையைத் தொடர்ந்து பல கவிஞர்

கள் இதே கருப்பொருளை வைத்துப் பலவிதமாகக் கவிதைகளைத் தீட்டியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

கவியரங்கம் கொடிகட்டிப் பறந்த காலகட்டத் தில், அரங்கைக் கைதட்டல்களால் அலங்கரிக்க வைத்த கவிஞர்களில் மீராவும் ஒருவர். கேட்போரை வசப்படுத்தும் சொல்வளம், குரல்வளம் கவியரங்கக் கவிஞருக்கு இன்றியமையாதவை. கொடுக்கப்பட்ட தலைப்பில், தரப்பட்ட கால அவகாசத்துக்குள் கவிதை யைச் சுவைபடச் சொல்ல வேண்டும். அதிலும் வெற்றி கரமாகவே உலாவந்திருக்கிறார் மீரா.

“கறுப்பு’வண்ணத்தைப் பற்றிப் பாட வருகிற கவிஞர் சுவையான ஒரு செய்தியைச் சொல்கிறார்.

மலர்களின் தேனருந்தி மயங்கிக் கிடக்கிறதாம் கருவண்டு. நாவல் பழம் என்று அந்த வழியே வந்த மங்கை ஒருத்தி எடுக்கிறாளாம். உற்றுப் பார்க்கிறா ளாம். சட்டென்று அது பறந்து போகிறதாம். என்ன இது? பழம் பறந்து போகுமா என்று நினைத்தாளாம். அப்படி அவளை மயங்கச் செய்தது எதுவாம்? கறுப்பு நிறம்தானாம். அழகான கற்பனை..

மதுமதிபோல் முகங்கொண்ட மங்கை அந்தி

மாலையிலே சோலையிலே நடக்கும் போது

மதுஉண்டு மண்கிடந்த வண்டை நாவல்

மரம்உதிர்த்த பழம்என்று நினைத்துக் கையால்

அதிவேக மாய்எடுத்தாள்.. உற்றுப் பார்த்தாள்..

அரைநொடியில் பறந்துவண்டு செல்லக் கண்டே

அதிசயித்தாள்.. பழம்பறப்ப துண்டோ என்றே

அவள்மயங்கச் செய்ததெது? “கறுப்பு வண்ணம்

இப்படிப்பட்ட கற்பனைகள் அரங்கை அதிரச் செய்யாமல் இருக்குமா?

"கனவுகள் + கற்பனைகள்= காகிதங்கள்' என்கிற தொகுப்பு அசத்தும் அழகிய படங்களோடு வந்து இளைய உள்ளங்களை இழுத்துக்கொண்டு போனது.

உனக்கென்ன

ஒரு பார்வையை

வீசிவிட்டுப் போகிறாய்..

என்

உள்ளமல்லவா

வைக்கோலாய்ப்

பற்றி எரிகிறது

போன்ற பல தெறிப்புகள். "ஊசிகள்' கவிதைகள் உண்மையிலேயே ஊசியைப் போலக் குத்துகிற கவிதை கள்தான். சமுதாய அவலங்களை அங்கதச் சுவையோடு தருகிற கவிதைகள். ஜப்பானிய ஹைகூ கவிதையை அப்படியே ஏற்காமல் தமிழுக்கு ஏற்பத் தன்போக்கில் சற்றே மாற்றிக் குறுங்கவிதைகளாக மீரா புதுவரவைக் காட்டினார். அதற்குக் குக்கூ என்று பெயர் சூட்டினார்.

மார்கழி மாத விடியல்

குளித்து முடித்துக்

குங்குமப் பொட்டிட்டு

மலம்அள்ள வந்தாள்

தோட்டி மகள்

என்றும்

அழுக்கைத் தின்னும்

மீனைத் தின்னும்

கொக்கைத் தின்னும்

மனிதனைத் தின்னும்- பசி

என்றும் வர்ணஜாலங்கள் காட்டின சிந்தனைகள். எனினும் இக்குறுங்கவிதைகளின், குத்தல் கவிதை களின் இலக்கியத் தரம் குறித்துக் காலம்தான் தீர்மானிக்க முடியும். அவர் கவிதைகள் விரிவான தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கவிதை பிறந்த காலச்சூழல், அரசியல், சமுதாயச் சூழல் என்று எல்லா வற்றையும் காணவேண்டும்.

தனியாய்த் தன்னந்தனியாய்த் தனித்தனியாய் என்று புதுக்கவிதையில் காவியம் எழுத விழைந்த கவிஞருக்குக் காலம் கைகொடுக்கவில்லை. ஆனால் பாரி யின் பறம்பை, மூவேந்தர்கள் முற்றுகையிட்டதுபோல, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதயநோய், வாதநோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன்’என்று அவரை நகைக்க வைத்தது. இலக்கிய உலகைத் திகைக்க வைத்தது. இருந்தாலும் வரலாறு காணாத வறட்சி

என்றார்

ஓர் அமைச்சர்.

வம்பெதற்கு?

பள்ளியிலே

வரலாறே வேண்டாம்

என்றார்

மற்றோர் அமைச்சர்

என்று அவர் கவிதை ஒன்று நம் காதில் எதையோ

கிசுகிசுத்துவிட்டுப் போகிறது. எவரையோ கிள்ளி விட்டுப் போகிறது. இன்னுமா உறைக்கவில்லை? என்று மீரா கேட்பதுபோல் இருக்கிறது.