மிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக தணல்காடாக மாற்றிவருகின்றன இந்துத்துவா சார்ந்த மதவெறிப் பரிவாரங்கள். எனினும் இவற்றின் மூடத்தனமான முயற்சிகளுக்கு உரிய பதிலடியைத் தமிழகம் கொடுக்கத்தவறவே இல்லை. ஏனெனில் இது பெரியார் பூமி.

ராமராஜ்ஜியம் என்ற முழக்கத்தோடு விஸ்வஹிந்து பரிசத், தனது ரத யாத்திரையை ஆரம்பித்தது. மார்ச் 13-ல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்த இந்த யாத்திரை, அயோத்தியில் தொடங்கி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என வலம் வந்தது.

rathayathra

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல், இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை கட்டமைத்தல், அனைத்து மொழிக் கல்வி திட்டத்தில் ராமாயணத்தை முன்னிலைப்படுத்துதல், உலக இந்து தினத்தை அறிவித்தல், பொது விடுமுறையாக ஞாயிற்றுக்கிழமை இருப்பதை மாற்றி ராமருக்கு உகந்தநாளான வியாழக்கிழமையை பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ரதயாத்திரை நடத்தப்பட்டிருக்கிறது.

Advertisment

ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எந்த மாநிலத்திலும் எதிர்ப்புகள் கிளம்பாத நிலையில், தமிழகம் மட்டும் வீறுகொண்டு எழுந்தது. காரணம், தந்தை பெரியாரின் சிந்தனைகளாலும் கோட்பாடுகளாலும் இங்கே திராவிட இயக்கங்கள் வலுவாக இருக்கின்றன. அதனால்தான் இந்துத்துவாவின் பம்மாத்து இங்கே எடுபடவில்லை.

மாறாக, இந்துத்துவாவை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்கிற உணர்வில்தான் தமிழகம் வீறுகொண்டு எழுந்து, தன் எதிர்ப்பு களை வலிமைப்படுத்தியது.

தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக்கட்சி, த.மு.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும், மதவாத அரசியலை எதிர்க்கும் ஜனநாயக அமைப்புகளும், பல்வேறு துறைகள் சார்ந்த பிரபலங்களும் ரதயாத்திரையில் ஒளிந்திருக்கும் பா.ஜ.க.வின் காவி தீவிரவாதத்தை அறிந்து கண்டனக் குரல் எழுப்பினர்.

Advertisment

திராவிட இயக்கத்தை வீழ்த்த அதன் அடையாளமாகவும் தத்துவமாகவும் உயர்ந்து நிற்கும் தந்தை பெரியாரின் சிலையில் கைவைப்பதன் மூலம் சாதிக்கலாம் என திட்டமிட்டு ஆரம்பத்தில் காய்நகர்த்தின காவிகள். அதற்காக ஹெச்.ராஜா என்கிற முனைமழுங்கிய கருவியை ஏவினர். ஆனால், பெரியார் சிலைக்கு எதிராக அவர் பேசிய ஒரே ஒரு வார்த்தைக்கே தமிழகம் கொந்தளித்த கொந்தளிப்பை பார்த்து மிரண்டு போனது காவிகள் கூட்டம்!

seeman

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானிடம் நாம் பேசியபோது, ""ஆண்டாள் பிரச்சனை, அய்யா பெரியார் சிலை உடைப்பு, ராமராஜ்ஜிய ரத யாத்திரை எல்லாமே மோடியின் மூளையில் உதித்த காவி தீவிரவாத சிந்தனை. தந்தை பெரியார் உருவாக்கிய தமிழகத்தில் தங்களின் சித்து விளையாட்டுகள் எல்லாம் செல்லுபடியாகாது என்பதால்தான் வன்முறையையும் கலவரத்தையும் திட்டமிட்டு உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது பா.ஜ.க.! கடவுள் பெயரால் கலவரத்தை உருவாக்குவதுதான் காவிக் கூட்டங்களின் அடிப்படைவாதமே! அதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்? மதத்தின் பெயரால் மனிதத்தைப் பலியிட திட்டமிட்டிருக்கும் சங்பரிவார கூட்டத்தை ஏற்க முடியுமா? தமிழகத்தில் எதுக்கடா ராமராஜ்ஜிய கூப்பாடு? எங்கள் தமிழ்த்தேசத்தில் சிறப்பாக ஆட்சி செய்த சோழ ராஜ்ஜியத்தையும், பாண்டிய ராஜ்ஜியத்தையும் மீண்டும் நாங்கள் நிறுவுவோம். சோழ-பாண்டிய ராஜ்ஜியத்தை நிறுவ தேசமெங்கும் நாங்கள் தேரோட்டம் நடத்தினால் அனுமதிப்பீர்களா?

அப்புறம் எதுக்கு எங்கள் தமிழ் மண்ணில் உனக்கு ரத யாத்திரை? விடுவோமா நாங்கள்? அய்யா பெரியார் சிலையில் கைவைத்தபோதே உங்களை இருகூறாக வகுந்திருந்தால் தமிழ்த் தேசத்தில் தேரோட்டம் நடத்தும் சிந்தனையேயே அந்த மனக்குருடர்களுக்கு வந்திருக்காது. ஆனால் ஹெச்.ராஜா மன்னிப்புக்கேட்டு தப்பித்துக்கொண்டார்.

அமைதிச் சோலையாக இருக்கும் தீந்தமிழ் நாட்டில், மதவெறி அரசியலை செய்து வரும் தீய சக்திகளுக்கு என்ன வேலை? பல மதங்கள், பல வழிபாட்டு முறைகள், பன்முகத் தன்மை கொண்ட பல தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு தாய்பிள்ளையாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற நிலம்தான் தமிழகம். ஆனால், மோடியின் அடிமைகள் ஆளும் தமிழகத்தில் ரத யாத்திரைக்கு சிவப்புக்கம்பள பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. இந்த ரத யாத்திரை என்னும் மத யாத்திரையின் ஆபத்தை உணர்ந்து அதனை எதிர்க்கும் உணர்வாளர்களுக்கும் மக்களுக்கும் 144 தடை உத்தரவு போடுகிறார்கள்! இப்படி கட்டளையிடுவதற்கு பதில் இந்த எடப்பாடி அரசு, பா.ஜ.க. தமிழிசையை முதல்வராக்கலாம். இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் ஒதுங்கிக்கொள்ளலாம். மோடியா? இந்த லேடியா? என ஒரு கை பார்த்து விடுகிறேன் என சவால் விட்ட ஜெயலலிதா ஆன்மாகூட இவர்களை மன்னிக்காது.

velmuruganரத யாத்திரையை எல்லா மாநிலங்களும் அனுமதிக்கின்றன. தமிழகம் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? என கேள்வி எழுப்புகிறார்கள். மோடிக்கும் காவிக் கூட்டத்துக்கும் நீங்கள் அடிமையாக இருக்கிறீர்கள். நாங்கள் எதற்கடா அடிமையாக இருக்க வேண்டும்? நாங்கள் உப்புப்போட்டுச் சாப்பிடுகிறோம். அதனால் தான் மதவெறிக்கு எதிரான ரோஷத்தோடும் கோபத்தோடும் உணர்ச்சியோடும் எழுந்து நிற்கிறோம். ஆன்மிகம் என்கிற பேரில் மத வெறியைத் தூண்டி அரசியல் லாபம் பெறத் துடிக்கிறது காவிக்கூட்டம். அதனை கொஞ்சமும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். மோடி என்கிற மத வெறியே! உன் விளையாட்டை இதோடு நிறுத்திக்கொள்!'' என கோபமாகச் சீறினார் சீமான்.

பெண்ணிய சமூகச் செயற்பாட்டாளர் நிர்மலா கொற்றவையோ, ""பார்ப்பனிய-சாதி ஆதிக்க அரசியல் செய்யும் பி.ஜே.பி. அரசின் தேர்தல் ஆதாயத்திற்காக விசுவ இந்து பரிஷத் தொடங்கிய ரத யாத்திரை, தமிழக எல்லையை அடைந்து அவமானப்பட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. இராமர் கோவில் கட்ட வேண்டும், இராம இராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்னும் கோஷங்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த இராமர் எப்படிப்பட்டவர்?

மனைவியை சந்தேகித்து தீக்குளிக்கச் சொன்னவர். தன் விருப்பமே இன்றி சீதை கடத்தப்பட்டிருந்த போதும், அவள் தண்டிக்கப்பட்டாள். அதேபோல், சித்திரகுட்டாவில், இலட்சுமணனிடம் இராமர், "நான் ஏன் ஆள விரும்பினேன் தெரியுமா? என் சகோதரர்கள் அனைவரும் எல்லாவிதமான செல்வங்களையும் போகங்களையும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகவே' என்கிறார்.

அவரது ராஜ்ஜியம் என்பதை ஆணாதிக்க, நிலவுடைமை இராஜ்ஜியம் என்பதா? அல்லது தம் குடும்பம், சொந்த பந்தம், தன்னை அரசு பதவியில் அமர்த்திய முதலாளிகள் மற்றும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் நலனுக்காக சேவைசெய்ய இராமரின் வழியிலேயே செயல்படுவதற்கான அதிகார வேட்கை என்பதா? எதுவாக இருப்பினும் இவை எதுவும் சமத்துவம் தவழும் தமிழக மண்ணில் அனுமதிக்க முடியாததே! அதேவேளை, "கடவுளை மற; மனிதனை நினை' என்று மனிதநேயம் போதித்த தந்தை பெரியார், லெனின் மற்றும் அம்பேத்கர் சிலையுகளை உடைத்து, நல்லிணக்கம், சமத்துவம், சுயமரியாதை இதையெல்லாம் போட்டுடைப்போம் என்று துணிவுடன் அறிவித்து வருகின்றனர் மத வெறியர்கள். தந்தை பெரியார் கடவுள் மறுப்பாளர். ஆனால் அவரை இந்துமத எதிர்ப்பாளராக மட்டும் சுருக்கி வெறுப்பரசியல் செய்யப்பார்க்கிறது இந்துத்துவா அரசு. இந்தியாவில் பார்ப்பனிய இந்துமதம், ஆளும் மதமாக இருக்கிறது. அதன் பெயரால் இங்கு ஒடுக்குமுறை ஏவப்படுவதால் அதை தீவிரமாக எதிர்ப்பது அவசியமாகிறது. பெரியார் வழி வந்தவர்கள் இந்துமதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் அல்ல. இவர்களிடம் காட்டப்பட்ட கோபம் போதாது. அது இன்னும் வேகமெடுக்க வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காவிகளின் வியூகங்களை விவரித்தார் நம்மிடம். ""ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட சங்பரிவாரங்களின் நோக்கமே நாட்டில் மதவெறி உணர்வுகளை விதைத்து, தேசத்தின் அமைதியைக் குலைத்து அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதுதான்.

அதற்காகத்தான் அவர்களுக்கு ஆன்மிகம் என்கிற முகமூடி! இதற்கு முன்பு சங்பரிவாரங்கள் நடத்திய பல்வேறு ரத யாத்திரைகள் எல்லாமே பொது அமைதியை சீர்குலைத்து மனித உயிர்களை பலி கேட்கவே செய்திருக்கின்றன. குறிப்பாக, கன்யாகுமரியிலிருந்து டெல்லி வரை முரளிமனோகர் ஜோஷி நடத்திய ரத யாத்திரையும், குஜராத் மாநிலம் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி தொடங்கிய யாத்திரையும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து பாபர் மசூதி இடிப்பில் போய் நின்றது. இதன் மூலம் தங்களுக்கான அரசியல் ஆதாயத்தைத் தேடிக்கொண்டன காவிக் கும்பல்கள்.

kushbooஇப்படிப்பட்ட பின்புலத்தில், தற்போது தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை அபகரிக்கும் ஆப்ரேசனை துவக்கியிருக்கிறார் மோடி. ஆனால், தந்தை பெரியாரின் பேரன்களாகிய நாங்கள் தமிழ்த்தேசியத்தை உருவாக்கும் செயல்திட்டங்களில் வீரியமாக களமாடிக் கொண்டிருக்கிறோம். அதனால், மோடியின் கனவுகள் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்த்தேசியம் தமிழகத்தில் உருவாகிவிடுமோ என அச்சப்படும் பா.ஜ.க. தலைமை காவி தீவிரவாதத்தை கையிலெடுத்திருக்கிறது. அதற்காக மெல்ல மெல்ல திட்டமிட்டு நகர்த்தப்படும் செயல் வடிவம்தான் அய்யா பெரியார் சிலை உடைப்பு, ரத யாத்திரை எல்லாமே!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என சூளுரைக்க வேண்டிய அவசியம் என்ன? ஆக, தமிழகத்தில் காலூன்ற வேண்டுமாயின் காவி பயங்கரவாதத்தை விதைப்பதன் மூலமே சாத்தியமாகும் என்கிற கேவலமான அரசியலை முன்னிறுத்தி பெரியார் சிலை உடைப்பையும் ரத யாத்திரையையும் நடத்தியுள்ளனர்.

ஆனால், தமிழகம் எப்படிப்பட்ட மண்; தமிழர்கள் எப்படிப்பட்ட இனம்; அவர்களின் வீரமும் வீரியமும் எத்தகையது என்பதையெல்லாம் காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. இது, பெரியார் பூமி! அம்பேத்கர் - மார்க்சிய தத்துவங்கள் சூழ்கொண்ட நிலம்! இங்கு, காவி தீவிரவாதம் தலைதூக்கினால் அதை வெட்டி எறிவோம்! வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம்!

இந்த பயணத்துக்கு அனைத்துப் பாதுகாப்பும் தர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. மாநில காவல்துறை தலைவர்களுக்கும் தனியாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். மோடியின் அடிமைகள் ஆளும் தமிழகத்தில், அந்த கட்டளையை நிறைவேற்றுவது எங்களுடைய சித்தம் என அகமகிழ்ந்து யாத்திரைக்கு அனைத்து பாதுகாப்பும் தந்து தங்களின் அடிமை விசுவாசத்தை சங்பரிவாரங்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் பழனிச்சாமியும் பன்னீரும்! அதற்காகவே, 144 தடை உத்தரவை பிறப் பித்தனர். ஆனால், நாங்கள் விடுவோமா? தடையை உடைத்து தேரோட்டத்தை விரட்டியிருக்கிறோம்! தமிழகத்தில் சகோதரர்களாக இணைந்து வாழும் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்து, இந்து பெரும்பான்மையை தனியாக காட்டும் ஒரு முயற்சியாகத்தான் காவி தீவிரவாதத்தை கையில் தூக்கியிருக்கின்றன இந்துத்துவா சக்திகள்! பெரியார் மண்ணில் பொது அமைதியை சீர்குலைக்கத் திட்டமிடும் மோடியின் எந்த ஆப்ரேசனையும் அடித்து நொறுக்குவது காலத்தின் கட்டாயம்!

அதை தடையின்றிச் செய்வதுதான் பெரியாரின் பேரன்களுக்குப் பெருமை என்பதால் தொடர்ந்து அதை செய்துகொண்டே இருப்போம்!'' என்கிறார் ஆவேசமாக!

அகில இந்திய காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்புவிடம் நாம் பேசியபோது, ""கொலை வாளினை எடடா ; மிகு கொடியோர் செயல் அறவே' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது இந்துத்துவா சக்திகளின் மதவெறி அரசியல். ரத யாத்திரை என்கிற பேரில் வட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் குளிர் காய்ந்த ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட மத வெறி அமைப்புகள், தமிழகத்தில் இதுவரை அந்த யாத்திரையை நடத்தியதில்லை. இப்போது நடத்த துணிந்திருக்கிறார்கள். ஒரே நாடு; ஒரே மதம் என்ற கொள்கையின் அடிப்படையில் மத துவேஷத்துடன் செயல்படும் மோடியின் மூளை தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

எல்லா மாநிலங்களிலும் நுழைய முடிந்த நம்மால் தமிழகத்தில் நுழைய முடியவில்லையே என்கிற ஆற்றாமையால் விளைந்த யோசனைதான் ரத யாத்திரை. இன பேதமின்றி, மொழி பேதமின்றி, சாதி பேதமின்றி, மத பேதமின்றி சகோதரத்துவம் சூழ்ந்திருக்கும் தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து ஆன்மிக அரசியலை செய்யத்துடிக்கின்றனர். ஆனால், தந்தை பெரியாரால் இன உணர்வு கட்டியமைக்கப்பட்ட மண் இது. இங்கு, எந்த வடிவத்தில் மோடி நுழைந்தாலும் அவரின் முகத்திரையைக் கிழித்தெறியும் துணிச்சல் விளைந்த நிலம் இது. அதனால், காவிகளின் கொட்டம் இங்கு செல்லுபடியாகாது. மதக்கலவரத்தை உருவாக்கும் திட்டத்தோடு தமிழகத்தில் ஊடுருவிய யாத்திரைக்கு எடப்பாடி அரசு எப்படி அனுமதி தந்தது? தமிழகத்தில் கலவரம் வெடித்தாலும் கவலை இல்லை. ஆனால், மோடியின் பகையை மட்டும் சம்பாதித்துக்கொள்ளக்கூடாது என முடிவு செய்தே அனுமதித்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் இனி காவி வேட்டி கட்டிக்கொள்ளலாம்.

வன்முறைகளை விதைப்பதன் மூலம் மத மோதலை உருவாக்கி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கின்றனர்.

அதற்காகத்தான், பெரியார் சிலைக்கு எதிரான பேச்சு, சிலை உடைப்பு, ஆண்டாள் சர்ச்சை, ராமராஜ்ஜிய ரத யாத்திரை. பெரியாரைப் பற்றி இன்னும் நூறு ஜென்மம் எடுத்தாலும் பா.ஜ.க.வினருக்குப் புரியாது. சாதி, மதம் இனம், மேலோர், கீழோர் என எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்காகவே தமது வாழ்நாளை தியாகம் செய்தவர் அய்யா பெரியார். கருத்துச் சுதந்திரம் குறித்து வாய்கிழிய இன்று பா.ஜ.க.வினர் பேசுவதற்கும் காரணம் பெரியார்தான். அவர்களின் பேச்சு சுதந்திரத்துக்காகவும் பாடுபட்டவர் பெரியார்.

இவையெல்லாம் அறியாதவர்களாகவும், உணராத வர்களாகவும் சங்பரிவாரங்கள் இருக்கின்றன. அதனால் தான் மதவெறியுடன் தமிழகத்தில் நுழைய முற்படுகின்றனர். ஆனால், பெரியார் வகுத்துத்தந்த பாதையில் தமிழகம் இருப்பதால் மதவெறியின் தலை அல்ல; வால் கூட நிமிர முடியாது. நிமிர்ந்தால்? "கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே!' என்கிற பாடல்தான் நினைவுக்கு மீண்டும் வருகிறது'' என்கிறார் மிக இயல்பாக.

விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக செயற்பாட்டாளர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் கௌதமன் நம்மிடம், ""தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் மதவெறி சக்திகளுக்கு மாநிலத்தின் கதவுகளை அகலத் திறந்துவிட்டிருக்கிறது மோடியின் அடிமை அரசு. அதனால்தான் அவர்களால் அய்யா பெரியார் சிலையை உடைக்க முடிகிறது; ராம ராஜ்ஜியத்தை உருவாக்கும் ரத யாத்திரையை நடத்த முடிகிறது. இவர்களின் மத வெறி அரசியலை தடுத்து நிறுத்த மாநில அடிமைகளால் முடியாது என்கிற உணர்வும் சிந்தனையும் பெரியாரின் பிள்ளைகளாகிய எங்களுக்கு இருப்பதால்தான் காவிக் கும்பல்களை விரட்டியடிக்க நாங்களே களமிறங்கினோம். தமிழக அரசியலில் வலிமையான தலைமைகள் கோலோச்சியபோது வாலாட்டத் துணியாத காவிக் கரை வேட்டிகள், இப்போது வாலாட்ட நினைப்பது ஆட்சி அதிகாரத்தை அபகரித்து விடலாம் என்கிற அபரிமிதமான மிதப்பினால்தான். ஆனால், பெரியாரின் தத்துவம் சூறாவளியாக சூல்கொண்டிருக்கும் பூமி என்பதால் மோடிமஸ்தான் வித்தைகள் இங்கு வேகாது. காவிரி நீரோட்டத்தை திறந்து விடுங்கடா என்றால் காவித் தேரோட்டத்தையா நடத்துகிறீர்கள்? சமூகப் பதட்டத்தை உருவாக்கி தங்களின் சதிகளை அரங்கேற்றும் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்ற முயற்சிக்கும் காவிகளுக்கு லாடம் கட்டும் நேரம் வந்துவிட்டது. இனி ஒருமுறை ரத யாத்திரை தமிழகத்தில் நுழைந்து பார்க்கட்டும். பெரியாரின் வலிமை என்னவென்பதை காவிகள் உணரும்'' என்கிறார் அதிரடியாக!

அத்வானி நடத்திய ரத யாத்திரையின் முடிவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது (1992) இந்தியா முழுவதும் உருவான மதக் கலவரங்கள் மனித உயிர்களை பலி கொடுத்தது. தேசமெங்கும் குருதி ஆறு ஓடியது. அந்தச் சூழலிலும் அமைதிப் பூங்காவாக இருந்தது தமிழகம். அதற்கு காரணம், தமிழகம் பெரியார் பூமி என்பதுதான். அதேபோல மீண்டும் 1992-ஐ நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் திட்டமிடுகின்றன. அதற்காக தமிழகத்தில் வட்டமிடுகின்றன. ஆனால், இப்போதும் காவிகளின் திட்டத்தை உடைத்தெறியும் துணிச்சலுடன் நிமிர்ந்து நிற்கிறது பெரியாரின் தத்துவம்! பகையே வா! என தொடைதட்டி நிற்கிறார்கள் பெரியாரின் பேரப்பிள்ளைகள்.