காதலில் தோல்வியை சந்தித்து கவலையில் மூழ்கிக் கிடந்த இளைஞன், ஒரு சிறிய பாதையின் வழியாகத் தளர்ந்து போன சிந்தனைகளுடன் நடந்துகொண்டிருந்தான். பாதையின் இரு பக்கங்களிலும் ஆழமாக வேரூன்றி, தலைக்குமேலே கிளைகளைப் பரப்பி நின்றிருந்தன பூத்த பாலா மரங்கள். மரங்களின் கிளைகளுக்கு மேலே வீசிச்செல்லும் பனிபடர்ந்த காற்றின் சத்தத்தை அவன் தெளிவாகக் கேட்டான்.

மார்கழி மாதத்தின் குளிர் நிறைந்திருந்த நள்ளிரவு வேளை...

சுற்றிலும் நிழல்கள் பிடித்தணைத்து முத்தமிட்டு படுக்கவைத்திருக்கும் நிலவின் குழந்தைகள்... தன்னுடைய அப்போதைய மன நிலையில் இளைஞனுக்கு அந்த காட்சி விருப்பமற்றதாகத் தோன்றியது.

Advertisment

ss1

நடந்துகொண்டிருக்கும்போது, பாலா மரங்கள் பூத்து நின்றிருந்த பாதை பின்னால் மறைந்துபோனது. சாலையை அடைந்தான். கறுத்த நதி என்பது ஒரு பழைய வர்ணனையாகத் தோன்றியதால், முன்னால் மிகவும் நீளமாக விழுந்து கிடந்து மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் மலைப் பாம்பைப் பார்த்தபோது, அதற்கு எதை உவமானமாகக் கூறலாம் என்பதை நினைத்து அவன் கவலைப்பட்டான்.

தார் போடப்பட்டதன் இரு பக்கங்களிலும் தெறித்து விழுந்த...

அனாதைகளாக்கப்பட்ட பளிங்குகள் கிடந்தன. அவற்றுக்குக் கீழே தூசி நிறைந்த சிவந்த நிலப்பரப்பையும், தரைக்குமேலே மாலை நேரத்தின் ஆரம்பத்தில் சாரலாக விழுந்த மழையின் நூறு ஊசிகள் உண்டாக்கிய 'மொஸைக் ஃப்ளோரிங்'கையும் பார்த்து அவன் திகைப்படைந்தான்.

நிலவு அங்குமிங்குமாக தளம்கட்டி நின்று, பாதையின் ஓரத்தில் மலர்வதற்கு ஏங்கிக்கொண்டிருந்த தும்பைப் பூ மொட்டுகளையும், மாமரத்தின் தளிர்களையும் முழுமையாக மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

நினைத்துப் பார்த்தான்... மழைக்காலம். வீட்டின் அருகிலிருக்கும் தென்னை மரங்களின் மடல்களிலிருந்து உதிரிந்து விழுந்து காய்ந்த பூவிதழ்கள் மிதந்து கொண்டிருக்கும் கலங்கிய நீர்நிலைகள்... புழுதி படிந்த மணல் நிறைந்த முற்றத்தின் வழியாக, நீல நுரைகளை வெளியேற்றியவாறு ஓடிக்கொண்டி ருக்கும் ஆறுகள்... நிலத்தின் கிழக்கு மூலையிலிருந்து வாய்க் காலின் வழியாகப் பாய்ந்து, நனைந்த நெற்பயிர்களுக்குக் கீழிருக் கும் கடலில் சென்றுசேரும் கறுத்த நீரருவி... ஈரமான நெல்லின் ஓலைகள்... ஒவ்வொரு இலையிலும் லட்சக் கணக்கான மணிகள்...

இடியும் மழையும் எனக்கு எந்த அளவுக்கு அச்சமளிக்கக் கூடிய விஷயங்கள் தெரியுமா? வெளியே பலமாக இடி இடிக்கிறது.

நான் அனைத்து சாளரங்களையும் சத்தமாக அடைத்துவிட்டு, கட்டி லில் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக்கொண்டு எழுதுகிறேன்.

கையெழுத்து மோசமாக இருந்தால்... மன்னிக்க வேண்டும். மதியவேளையில் சற்று உறங்க ஆரம்பித்தேன். இப்போதுதான் கண் விழித்தேன்.

எழுந்தபோது... இதோ... வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை அங்கும் இருக்கிறதா?

மழை பெய்யும்போதெல்லாம் நான் மேலே இருக்கக்கூடிய என் சிறிய அறைக்குள் வந்து அமர்ந்து கதவை மூடிவிட்டு ஒரு ஆளின் புகைப்படத்தை எடுத்து நீண்டநேரம் பார்த்துக் கொண்டிருப்பேன்.

"ஹாய்! அழகா இருக்கே!'

அவனுக்கு திடீரென கவலை உண்டானது. பழைய முட்டாள்தனங்கள்...

"இங்க... இப்ப யாருமில்ல. டாடி வெளியே காரை எடுத்துக் கிட்டுப் போயிருக்காரு. மம்மியும் இல்ல. வர்றியா?'

"முற்றத்தில என்னவெல்லாம் பழங்கள்! பேரிக்காய்... சப்போட்டா... இலந்தைப் பழம் எல்லாம் இருக்கு! வந்தா எல்லாத்தையும் தர்றேன். வா....வா...'

சாலையில் வந்துமோதும் கறுத்த சிறிய பாதையின் ஓரங்களில் தோட்டிகளின் வண்டிகள் வரிசை வரிசையாக நிற்கின்றன.

அவன் அவற்றிலொன்றின் அருகில்சென்று வெறுமனே கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

பிரிவது எவ்வளவு எளிது! சேர்வதில் எந்தவொரு சிரமமுமில்லை.'விடமாட்டேன்... விடமாட்டேன்' என்று ஒருவரோடொருவர் எத்தனை முறை கூறியிருப்பார்கள்!

இறுதியில் நேரம் வந்தபோது... முட்டாள்களைப்போல... கோழைகளைப்போல...

அவன் அந்த வண்டிகளுக்கு அருகில் அவ்வாறு நின்று கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞன் சாலையின் வழியாக நடந்துவந்து சிறிய பாதைக்குள் நுழைந்து சென்றான். குளிரால் இருக்கவேண்டும்- அணிந்திருந்த வேட்டியின் கீழ்ப்பகுதியை உயர்த்தி அவன் தோளை மூடியிருந்தான். கறுத்த கால்களும், அவை சென்று இணையும் இடத்திலிருந்த கோடுகள் போட்ட பழைய அண்டர்வேரும்...

அவனைப் பார்த்ததும் அவன் இருமினான். தொடர்ந்து சீட்டியடித்தவாறு திரும்பி நின்று எங்கோ பார்த்தான்.

அவன் நடப்பது தொடர்ந்தது. கறுத்த பையன் அங்கேயே நின்றிருந்தான். சிறிது நடந்தபிறகு, ஏன் இப்படி நடக்கவேண்டும் என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். பிறகு... திருத்தினான்.

வீடு இல்லாதவன்!

உறவினர்கள் இல்லாதவன்!

அவனுக்கு ஒரு லட்சியம் இருந்தது. முன்பு...

"நமக்கு ஒரு வீடு உண்டாக்கவேண்டும். பெயரில்லாத வீடு... காலப்போக்கில் அங்கு வசிக்கக்கூடிய ஆட்களின் முக்கியத் துவத்தின் காரணமாக அந்த சாலைக்கும், அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்கும் ஒரு பெயர் வந்து சேரும். முதலில் கொஞ்ச காலத்திற்கு அங்கு கடிதம் எதுவும் வராது... புரிகிறதா?

சுவர்களுக்குள் சிறியசிறிய நூறு அறைகள் வேண்டும். மேஜையின் மேற்பகுதியை அலங்கோலப்படுத்தாமல் பல விஷயங்களை நாம் அதற்குள் வைக்கலாம். டெட்டால், பொடி புட்டி, குழந்தைகளுக்கான ஹோமியோபதி மருந்துகள், பேன் எடுக்கும் சீப்பு, கண் மை, பென்சில்... இப்படி பலவும்...

சாளரங்கள் வட்ட வடிவமானவை. அவற்றுக்கு கதவுகள் இருக்கக் கூடாது. வேண்டுமெனில் வீட்டிற்குள் ஜவுளிக் கடையின் அலமாரிகளில் இருப்பதைப்போல சுவரில் மறைத்துவைத்து, கண்ணாடி சட்டங்களை இணைத்து வைக்கலாம்.

சுவரில் இடையே சில இடங்களில் கனமான கண்ணாடியைக் கொண்டு பெட்டிகள் அமைக்க வேண்டும். அடுத்தடுத்த அறைகளைப் பார்ப்பதற்காக... அங்கு நீரை நிறைத்து நீரில் மீன்களை வளர்க்கவேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரேயொரு மரம்... அடர்ந்த காட்டிலிருந்து வேருடன் பிடுங்கிக்கொண்டு வந்ததாக அது இருக்கவேண்டும். காற்று வீசும்போது, வாசல் முழுவதும் காட்டுப் பூக்கள்... நிலத்தில்... மொத்தத்தில் நிழல் தருவதற்கு அந்த ஒரு மரம் மட்டும்! மற்ற செடிகள் இல்லை... பூக்கள் இல்லை...

என் செல்லமே! நமக்கு குழந்தைகள் வேண்டுமா? இல்லா விட்டால்... இருக்கட்டும்! அவர்கள் வயதிற்கு வரும்போது... திருமணமாகும்போது... குளியலறையுடன் இருக்கக்கூடிய அறையை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து விடுவோம்.

முன்பொரு முறை எழுதியது ஞாபகத்தில் இருக்கிறதா?

மொத்தத்தில் மூன்று குளியலறைகள்... இரண்டு வீட்டிற்குள்... ஒன்று வெளியே...'

அவன்மீது மெல்லிய பனித்துளிகள் விழுந்துகொண்டிருந்தன. அந்த வீடு அழகான ஒரு காட்சியைப்போல அவனுக்குத் தோன்றியது.

"வேய்வது... வண்ணங்கள் பூசிய ஓலைகளால்... சிவப்பு நிறம் பூசப்பட்ட ஓலைகள்... உள்ளே எந்த அளவுக்கு குளிர்ச்சி இருக்குமென தெரியுமா?'

ரோமம் வளர ஆரம்பித்திருக்கும் கன்னங்கள் ஈரமாயின. கண்களைத் துடைத்தவாறு முன்னால் பார்த்தான். சற்று தூரத்தில் 'பீட்'டிற்காக வெளியே வந்திருக்கும் ஒரு போலீஸ் காரர் தெரு விளக்கிற்குக் கீழே குனிந்து அமர்ந்து எதையோ வாசித்துக்கொண்டிருந்தார். அவன் வருவதைப் பார்த்திருக்க வேண்டும்- போலீஸ்காரர் உடனடியாக எழுந்தார். வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தரையில் போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இளைஞன் அந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்தான்.

மேலட்டையில் ஒரு ஆபாசமான படம்! "பொத்தான் இல்லாத மார்புக் கச்சை' என்று அச்சடிக்கப் பட்டிருந்தது. பகல் வேளையில் பறிமுதல் செய்திருக்க வேண்டும். சாலையோர வியாபாரிக்கு எழுபத்தைந்து பைசா நஷ்டம்!

உறங்கிக்கொண்டிருக்கும் பூக்களின் வாசனையைத் திருடிக்கொண்டோடிப் போன காற்று மோதி, சாலைக்கு அருகில் சேர்ந்துகிடந்த ஈசல் சிறகுகளின் குவியல் சற்று அசைந்தது. அவற்றில் சில காற்றுடன் சேர்ந்து சாலையின் வழியாக வடக்கு நோக்கிப் பயணித்தன.

அவன் தன் கையிலிருந்த புத்தகத்தின் ஒரு தாளை எடுத்து, அலட்சியமாகக் கண்களை ஓட்டினான்.

"போதுமா?'

உடனடியாக அவன் அந்த புத்தகத்தை சட்டைக்குள் வைத்தான். கண்களுக்கு சற்றுக் கீழே எரிச்சல் இருப்பதை உணர்ந் தான். கன்னங்கள் தனியாக ஊதி வீங்கவும், உள்ளங்கை துடிக்கவும் செய்தன.

அவளுடன் சேர்ந்திருந்த ஒரேயொரு இரவின் துயரங்கள் ஞாபகத்தில் வந்தன.

அழுகை வெடித்து வெளியே வருவதற்கு முன்பே... தோட்டிகளின் வண்டிகள் தூங்கிக்கொண்டிருந்த சிறிய பாதையின் வழியாக, அடர்த்தியான இருட்டை இலக்காக வைத்து அவன் வேகமாக நடந்துசென்றான்.