லையின்மீதிருந்த இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் பங்கெடுப்பதற்கு முதலில் எனக்கு ஆர்வம் இல்லாமலிருந்தற்கு தூரம் மட்டுமே காரணமல்ல. கன்யாஸ்திரீகள் நடத்திக்கொண் டிருக்கும் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்து நான் ஏதாவது கூறினால் அது அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்குமென்று கூறுவதற் கில்லை. என் கருத்தினைக் கூறாமலும் இருக்கமுடியாது. அதனால்தான் நான் நாராயணனிடம் கூறினேன்:

"வேணாம் நாராயணா... வேணாம். என்னால முடியாது. என்ன விட்டுடு...'

அப்போது நாராயணன் கூறினார்:

"அப்படி இல்ல... நீங்க நினைக்கறதைப்போல எதுவுமே இல்ல... நான் அங்க ஒருமுறை போயிருக்கேன். ரொம்ப நல்லவங்க. சுதந்திர நிறுவனங்கள்ல இருக்கக்கூடிய எந்தவொரு முறைகேடும் அங்க இல்லை. பிறகு... எவ்வளவோ வருஷங்களா அங்க பி.டி.ஐ. தலைவரா என் மைத்துனர் இருக்கார். மைத்துனர் என்னைவிட மூத்த தோழர். அவருக்காகதான் நான் சொல்றேன். என்னை நம்புறதா இருந்தா நீங்க என் மைத்துனரையும் நம்பலாம்.''

Advertisment

சிறிது நேரம் எதுவுமே கூறாமல் நாராயண னையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தபிறகு நான் கூறினேன்:

""சரி...''

எனக்கு நாராயணனின்மீது எப்போதும் நம்பிக்கை இருந்தது.

Advertisment

நாராயணனுடன் நடைபெற்ற இந்த உரையா டலுக்குப்பிறகு, அவரது மைத்துனர் பள்ளிக்கூட ஆண்டு விழா சம்பந்தப்பட்ட தகவல்களுடன் என்னை அழைப்பதற்காக வந்தார்.

நாங்கள் முதன்முறையாகப் பார்க்கிறோம்.

அவர் கூறினார்:

""பிரதான சாலையிலிருந்து வரக்கூடிய பாதை கொஞ்சம் கரடுமுரடா இருக்கும். முதன் முறையா வரக்கூடிய ஆளுக்கு வெறுப்பு தோணினா அதை குறைசொல்றதுக்கில்ல. ஆனா மேல வந்துட்டா அழகான காட்சி... குறிப்பா பள்ளிக் கூடமும் சுற்றுப்புறங்களும்...

அங்குள்ள மரங்களும் செடிகளும்... ஆனா, இவை எதுவும் ஒரே நாள்ல உண்டான தில்ல. பத்து... நாற்பது வருஷம் கடுமையான உழைப்பு அதுக்குப் பின்னால இருக்கு. இந்த கடுமையான பாறைங்க நிறைஞ்ச நிலப்பகுதியை, இப்போ பார்க்கும் நிலையில இருக்கும் ஒரு பூந்தோட்டமாக்கியது...''

நாராயணனின் மைத்துனர் ஆவேசத்துடன் கூறிக்கொண்டிருந்தபோது, நான் கேட்டவாறு நின்றுகொண்டிருக்க மட்டுமே செய்தேன்.

""பிறகு... இதையெல்லாம்விட பெரிய ஒரு விஷயம் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடம் இங்க வரலைன்னா இங்குள்ள பிள்ளைங்க யாருக்கும் எழுதப்படிக்கவே தெரிஞ்சிருக்காது. தூரத்திற்கு அனுப்பி பிள்ளைகளைப் படிக்கவைக்கத் தகுதியுள்ள வங்க இங்க குறைவு. இங்க வளைகுடாக்காரங்க யாருமில்ல. ஏழைகளான கொஞ்சம் குடியேறிய குடும்பங்க... அவங்க கிறிஸ்தவங்க. அதிகமா இருக்கறவங்க இப்போதும் இந்துக்கள்தான்.

அதைவிட்டா, கொஞ்சம் முஸ்லிம்களும்... இவங் களுக்கு மத்தியிலதான் இந்த கன்யாஸ்திரீங்க வந்து அவங்களோட செயல்பாடுகளை ஆரம்பிச் சாங்க. அவங்க மதமாற்றச் செயலிலோ அதைப் போன்ற வேற ஏதாவது செயலிலோ ஈடுபட்டதா யாராலும் சொல்லமுடியாது. அதனாலதான் நானெல்லாம்...''

நான் கேட்டேன்:

""இந்தப் பள்ளிக்கூடம்... நாம இப்போ பெரும்பாலும் பேசிக் கேட்கக்கூடிய தன்னாட்சிக்கொள்ளை...''

முழுமை செய்வதற்கு என்னை நாராயணனின் மைத்துனர் அனுமதிக்கவில்லை.

""உங்களுக்கு தவறு உண்டாகிப்போச்சு. இங்க கொள்ளை நடக்கல. பிள்ளைங்ககிட்டயிருந்து ரொம்ப குறைவான கட்டணமே வாங்கப்படுது. ஆசிரியருக்கோ சுமாரான சம்பளம்தான்... மதத்தின் அடிப்படையில இருக்குற எந்தவொரு வேறுபாடும் இங்க இல்ல. இந்த காரணங்களாலதான் எங்களைப் போன்றவங்க ஆரம்பத்திலிருந்தே இந்த நிறுவனத்தோட ஒத்துழைச்சிக்கிட்டிருக்கோம். உண்மையிலேயே சொல்றதா இருந்தா, இது எங்களோட சொந்த பள்ளிக்கூடம்...''

சிறிது நேர அமைதிக்குப்பிறகு நாராயணனின் மைத்துனர் தொடர்ந்து கூறினார்:

""நான் சொன்னா நீங்க நம்பாம இருக்கமாட்டீங்கன்ற விஷயம் எனக்குத் தெரியும். இருந்தாலும் வேறொரு விஷயத்தையும் நான் சொல்றேன். பள்ளிக்கூட ஆண்டுவிழா கொண்டாட்டத்துக்கு தலைவரா வர்றவர் ஊராட்சித் தலைவர்தானே? தலைவர், லீக்கின் உயர்ந்த தலைவர். அவர்கிட்டயும் கேளுங்க. என்ன சொல்றார்னு தெரிஞ்சிக்கலாமில்லியா?''

இந்த உரையாடல் நடைபெற்றது சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு... அன்றிலிருந்தே ஊராட்சித் தலைவரைப் பார்ப்பதற்கு நான் காத்துக்கொண்டிருந்தேன். இன்று பார்த்தபோது, தொடங்கிவைக்கும் சடங்குகளுக்கு மத்தியில் நான் கேட்கவும் செய்தேன்.''

தலைவரின் அத்தாட்சிப் பத்திரிகை, நாராயணனின் மைத்துனரையும் வெல்லக்கூடிய வகையில் இருந்தது.

அவர் கூறினார்:

""எந்தவொரு சந்தேகமும் வேணாம். அவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க. அவங்களோட எல்லா செயல்பாடுகள்லயும் நாங்க பங்கெடுத்துக்கிட்டிருக்கறதுக்குக் காரணமும் அதுதான்.''

அப்போது நான் மனதிற்குள் கூறிக்கொண்டேன்: "இல்ல... இனிமே எனக்கும் சந்தேகமில்ல.'

ஆண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் வழக்கம்போல தேநீர் விருந்திற்காக மதர் சுப்பீரியரின் அறையில் நான் காத்திருந்தேன். அகலமான அறை... சுவர் முழுவதும் புனித ஆண்களின், புனிதப் பெண்களின் வடிவங்கள்... செய்வதற்கு வேறெதுவுமே இல்லாம லிருந்ததாலும், விருந்திற்கு வரவேண்டியவர்கள் முழுமையாக வராமல் இருந்ததாலும் நான் எழுந்து படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்போது மதர் சுப்பீரியர் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள்:

""இவ்வளவு தீவிரமா எதைப் படிக்கிறீங்க?''

நான் மிகுந்த பணிவுடன் கூறினேன்:

""நான் எனக்கு ரொம்ப நெருக்கமான- தெரிஞ்ச ரெண்டு பேரைத் தேடிக்கிட்டிருந்தேன். பார்த்துட்டேன். அவங்கள்ல ஒருத்தர் உயிரோட இல்ல. சாதாரண மரணமில்ல. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால, நாம எல்லாரும் சேர்ந்து மரச்சிலுவையில ஆணியடிச்சி ரொம்ப கொடூரமா... இரண்டாவது ஆள் இப்போதும் இருக்காரு. மதர், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். பேரு... ஃப்ரான்சிஸ், அவருக்கும் மனுஷங்க சிலுவையைத் தயார் செஞ்சிக்கிட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.''

dd

மதர் சுப்பீரியர் சிரித்துக்கொண்டே கூறினாள்:

""புரியுது.''

அப்போது...

ஒரு குளிர்ந்த காற்றினைப்போல சிஸ்டர் மரயா அறைக்குள் நுழைந்துவந்து, மதர் சுப்பீரியரிடம் கூறினாள்:

""எல்லா விஷயங்களும் ரொம்ப நல்ல முறையில நடந்துமுடிஞ்சது. கலைநிகழ்ச்சிங்க எல்லாம் முடிவடைஞ்சு, பிள்ளைங்க எல்லாரையும் வீடுகளுக்கு அனுப்பியாச்சு. பணியாட்களோட கணக்குகளையும் தீர்த்து முடிச்சாச்சு... இனி அடுத்த வருஷம்...''

பிரின்ஸிபாலின் பொறுப்புகள் தலையில் ஏற்றப் பட்டதாலோ என்னவோ தெரியவில்லை... சிஸ்டர் மரயா மேலும்கீழும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள்.

பனியில் நனைந்த "கபோதா' மலரைப்போல அழகான அவளுடைய முகத்தையே நான் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.

நான் அவளை இதற்குமுன்பு பார்த்திருக்கிறேனே!

சிஸ்டர் மரயா எனக்கருகில் வந்து ஏதோ கூறியபோது, அது என்னவென்றுகூட கவனிக்காமல் நான் கூறினேன்:

""சிஸ்டர்... நாம இதுக்குமுன்ன பார்த்திருக்கோம்.''

சிஸ்டர் மரயா சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள்...

""எனக்கு அப்படித் தோணல...''

நான் கூறினேன்:

""இல்ல... இல்ல... பார்த்திருக்கோம்... உண்மையாவே பார்த்திருக்கோம். ஆனா, அது... எப்போ... எங்கன்னு எதுவும்... எவ்வளவு யோசிச்சுப் பார்த்தும்...''

ஒரு நெருப்புக் குழிக்குள் நின்றுகொண்டிருப் பதைப்போல நான் வேகமான சிந்தனையில் மூழ்கியிருந்தேன்.

"எப்போ... எப்போ...'

அப்போது என் காதுகளில் விழுந்தது. தூரத்தில்...

இருட்டுக்குள்ளிருந்து... ஒரு பழமையான தேவால யத்தின் மணியின் முழக்கம் மிதந்து வருவதைப் போல...

மரயா...!

எனக்கு அனைத்தும் தெளி வானது.

"சவுண்ட் ஆஃப் மியூஸிக்...'

மனைவியை இழந்துவிட்ட கேப்டன் வான் ட்ராப்பின் ஏழு பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்காக மடத்திலிருந்து வரும் சிஸ்டர் மரயா. கேப்டனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் இசையையும் அன்பையும் நிறைத்த சிஸ்டர் மரயா... இறுதியில் ட்ராப்பின் மனைவியாகவும் அவருடைய பிள்ளைகளுக்குத் தாயாகவும் மாறிய சிஸ்டர் மரயா...

அதே தோற்றம்... அதே குரல்...

அதே உற்சாகம்...

நான் ஆவேசத்துடன் கூறினேன்:

""சிஸ்டர்... ஒரு ஹாலிவுட் திரைப்படம் இருக்கு. சவுண்ட் ஆஃப் மியூஸிக்... ரொம்ப பழசு. சரியா சொல்றதா இருந்தா 62 வருஷங்களுக்கு முன்ன எடுக்கப்பட்டது. அதனால சிஸ்டர்... நீங்க பார்த்திருக்க வழியில்லை. படம் ரொம்ப பழசுன்னு சொன்னேனில்லியா? ஆனா, அந்த காரணத்துக்காக அந்தப் படத்தோட மகத்துவத்தன்மைக்கு எந்தவொரு குறைவும் உண்டாகல. ஹாலிவுட்ல யிருந்து வந்த எக்காலத்திற்கும் சிறந்த திரைப்படங்கள்ல ஒன்னு அது. எத்தனை அகாடெமி விருதுங்க! எவ்வளவு... எவ்வளவு... பாராட்டுகள்! அதன் கதாநாயகியோட பேரும் மரயாங்கறதுதான். சிஸ்டர் மரயா, பார்க்கறதுக்கும் உங்களைப் போலத் தான்... அதே குரலும் உற்சாகமும். பிறகு...

பேரழகுன்னு நான் சொல்லக்கூடாதே! அதனால... அழகும்...''

என் வார்த்தைகளைக் கேட்டு சிஸ்டர் மரயா எதுவும் கூறாமல் புன்சிரித்தவாறு நின்றுகொண் டிருந்தாள்.

நான் ஆவேசத்துடன் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தேன்.

""சிஸ்டர்... திரைப்படம் பார்க்கறதுங்கற விஷயம் கன்யாஸ்திரீகளான உங்களுக்கு மறுக்கப்படலன்னா, உண்மையாவே அந்தப் படத்தை நீங்க பார்க்கணும். பழையதா இருந் தாலும், இப்போது அது இடையில அவ்வப்போ திரையரங்குகள்லயும் தொலைக்காட்சிகள்லயும் வந்துக்கிட்டிருக்கு.

பிறகு... இப்போ இதனோட"டிஜிட்டல் ரீமாஸ்டர்' செய்த டிஸ்க்குகளும் கிடைக்கலாம்.''

நான் இவ்வாறு முடிக்காமல் கூறிக்கொண்டே இருந்திருப்பேன். ஆனால், அதற்கு இடம் தராமல் ஒரு மெல்லிய சிரிப்புடன் அவள் கூறினாள்:

""நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கேன். உங்களைப்போலவே பலமுறை! இப்போதும் பார்ப்பதுண்டு. நீங்க சொன்ன "ரீமாஸ்டர்' செய்த டிஸ்க்கும் எங்கிட்ட இருக்கு.''

நம்பமுடியாத ஏதோவொன்றைக் கேட்பதைப் போல இருந்தது. எதுவும் கூறமுடியாமல் நான் நின்றிருந்தேன்.

தேநீர் விருந்திற்கு ஆட்கள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். நல்ல கூட்டம்... வட்ட அப்பம், குழல் இனிப்பு, நெய்யப்பம், மடத்திலிருக்கும் தோட்டத்தில் இயற்கை வேளாண் முறையில் விவசாயம் செய்து உண்டாக்கிய பூவன் பழம்... மதர் சுப்பீரியர் ஓடியோடி நடந்து எல்லாரையும் வைத்து இவற்றையெல்லாம்...

இந்த ஆரவாரத்திலிருந்தெல்லாம் விலகி மாறி நாங்கள் இருவரும் ஒரு மூலையில்...

சிஸ்டர் மரயா கூறினாள்:

""இளம் வயசுல நான் நிறைய வாசிப்பேன். அதிக விருப்பம் கவிதைகள் மேலதான். இருந்தாலும் கதைகளையும் வாசிச்சேன். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும்... இன்னிக்கு வரவேற்புரையில "ஒளியைப் பரப்பும் ஒரு இளம்பெண்'ணைப் பத்தி பேசினதை கவனிச்சிருப்பீங்களே! எதுவுமே பொய்யான வார்த்தைங்க இல்ல. ஆனா, நான் அதிகமா வாசிச்சிருப்பது "கவுரி'யையும் "கடல்' கதையையும்தான். "கவுரி'தான் ரொம்ப புகழ்பெற்றது. ஆனா எனக்கு விருப்பம் "கடல்'தான். எந்த சமயத்திலும் கடலைப் பார்க்க இயலாத, இசைக்காகவும் அனபுக்காகவும் மட்டுமே வாழ்ந்த- எல்லாராலும் தவறாக நினைக்கப்பட்ட பரிதாபத்திற்குரிய தாய்.''

எதையோ நினைத்ததைப்போல அவள் திடீரென்று நிறுத்தினாள். தொடர்ந்து தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல மெதுவான குரலில் கூறவும் செய்தாள்.

""என்னவொரு தலையெழுத்து!''

நான் எதுவும் கூறவில்லை.

தொடர்ந்து அவள் திடீரென்று கேட்டாள்:

"""ஹைவேமேன்' வாசித்திருக்கீங்களா? எனக்கு ரொம்ப விருப்பமானது.''

"தி ஹைவே மேன் கேம் ரைடிங்... ரைடிங்... ரைடிங்...' தொடர்ந்து சிறிது நேர அமைதிக்குப்பிறகு...

"தென் லுக் ஃபார் மீ பை மூன்லைட்

ஐ வில் கம் டு தீ பை மூன்லைட்

தோ ஹெல் ஷுட் ஃபார் தி வே...'

ஆல்ஃப்ரட் நாய்ஸின் மரணமற்ற கவிதை!

ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் தொடர்ந்து கூறினாள்:

""இருட்டு வேளையில் யாரும் பார்க்காம தனியா ஒவ்வொன்னையும் சிந்திச்சுக்கிட்டிருக்கறப்போ, முன்ன எப்பவோ வாசிச்ச கவிதைகளோட வரிங்க மனசுக்குள்ள ஓடிவரும்.''

நான் கூறினேன்:

""காற்றில் மிதந்துவரும் ஒளியின் கீற்றுபோல... இல்லையா?''

அவள் ஒரு நீண்ட பெருமூச்சுடன் கேட்டாள்:

"ஆசான்... இல்லியா?''

நான் கூறினேன்:

""அவரைத் தவிர இப்படியெல்லாம் யாரால முடியும்?''

பிறகும் அவள் முணுமுணுக்க ஆரம்பித்தாள்:

""அளவற்ற ஆன்ம ஒளியும் தனக்குள் போதை யேறிய வண்டும்...''

அவளை முழுமை செய்யவிடாமல் அப்போது நான்...

""அதரத்தில் மது என்பதைப்போல உள்மனதில் நீ காதல்வயப்பட்டிருந்ததும்...''

அறியாமல் என் வாயிலிருந்து வந்து விழுந்து விட்டன.

அப்போது என்னை அவள் ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையில்... வேண்டாம்... வேண்டாம்... என்னால் எதையும் கூறமுடியவில்லை.

திரும்புவதற்கு நேரமாகியிருந்தது.

எல்லாரும் வாசலில்... சிஸ்டர் மரயா மட்டும் புன்சிரிப்புடன் கையை வீசியவாறு காரின் அருகில் வந்தாள்.

நான் கூறினேன்:

""மீண்டும் சந்திப்போம்.''

அவள் எதுவும் கூறவில்லை. புன்னகைக்க மட்டும் செய்தாள்.

கார் கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தபோது, நான் மேலும் ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். சிஸ்டர் மரயா அதே இடத்திலேயே இருந்தாள். அவளுடைய உயர்த்தப்பட்ட கை அசையவில்லை. அவளுடைய முகத்தில் புன்சிரிப்பும் இல்லை. அவள் சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

__________________

மொழிபெயர்ப்பாளரின் உரை!

ணக்கம்!

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று அருமையான மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

"எதிர்காலம்' கதையை எழுதியவர் நவீன மலையாள இலக்கியத்தின் தலைமகனும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான எம். முகுந்தன். பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் ஸ்ரீதேவி என்ற சிறுமியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. எந்தவொரு விஷயத்தையும் முகுந்தன் எந்த அளவுக்குக் கூர்மையாகப் பார்க்கிறார் என்பதற்கு இந்தச் சிறுகதை ஒரு எடுத்துக்காட்டு. கதையின் இறுதியில் ஸ்ரீதேவி கூறும் வார்த்தைகள் சிந்தனையைத் தூண்டக் கூடியவை... ஆழமான அர்த்தத்தைக் கொண்டவை!

"மரயா' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான டி. பத்மநாபன். கதையில் டி. பத்மநாபனே கதாபாத்திர மாக வருகிறார். அவருடன் கன்யாஸ்திரீயான மரயா என்ற இளம் பெண்ணும்... கயிறுமீது நடப்பதைப் போன்ற கதைக் கரு. அதை வைத்து ஒரு அற்புதமான கதையை எழுத பத்மநாபனைப் போன்ற பக்குவப்பட்ட ஒரு எழுத்தாளரால் மட்டுமே முடியும். கதையில் "சவுண்ட் ஆஃப் ம்யூஸிக்' திரைப்படத்தை ஞாபகப்படுத்துவது உண்மையிலேயே ஒரு புதுமையான முயற்சி! இறுதிப்பகுதி... கவிதை!

"மந்திரவாதியின் மகள்' கதையை எழுதியவர் மலையாளப் பெண் எழுத்தாளர் களின் திலகமும், சாகித்ய அகாடெமி விருதுபெற்றவருமான மாதவிக்குட்டி. கவர்ணா என்ற பொன் நிறத்தைக்கொண்ட அழகு தேவதையையும், அவளை உயிருக்குயிராகக் காதலிக்கும் டாக்டரையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. மாதவிக்குட்டியின் கைவண்ணத்தில் இப்படியொரு மாறுபட்ட கதையா! உண்மையிலேயே நமக்கு ஆச்சரியம்தான் உண்டாகிறது. கதையின் பிற்பகுதி யாரும் கற்பனை செய்து பார்க்கமுடியாதது... அதிர்ச்சி தரக்கூடியது. ஒருவிதத்தில் சுவர்ணாவின்மீது நமக்குப் பரிதாப உணர்வு உண்டாவதென்னவோ உண்மை. மாதவிக்குட்டி எதிர்பார்ப்பதும் அதைத்தானே?

ஒரு தகவல்... 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிவந்த "இனிய உதய'த்தில் என் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பிரசுரமாயின. அந்தப் பயணம் 18-ஆவது ஆண்டில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உங்களின் கைகளில் தவழும் இந்த மாத "இனிய உதயம்' இதழ் என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தாங்கி வரும் 200-ஆவது இதழ்.

இந்த வெற்றிப் பயணத்திற்கு முழுமுதற் காரணமாக இருக்கும் திரு. நக்கீரன்கோபால் அண்ணன் அவர்களுக்கு என் இதயத்தின் அடித்தளத் திலிருந்து நன்றி. அவரின் பேராதரவால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது.

அவருக்கு நன்றி கூறுவதற்கு வார்த்தைகளும் உண்டோ? அவர் என்றும் என் இதயத்தில் வாழ்வார்- இதுதான் நான் அவருக்குக் காட்டும் நன்றியாக இருக்கும்.

"இனிய உதய'த்தின் இந்த இலக்கியப் பயணத்திற்குப் பாதை வகுத்துக் கொடுத்த என் அருமை நண்பர் மா. முருகனை நான் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

நான் மொழிபெயர்க்கும் படைப்புகளை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வாசித்து, அதைச் செவ்வனே இதழில் இடம்பெறச் செய்து, எனக்கு உற்சாகமூட்டி வரும் அன்புச் சகோதரர் மலரோன் மற்றும் தங்களின் திறமைகளின்மூலம் படைப்புகளுக்கு மெருகு சேர்த்த மதி, த. சரவணப்பெருமாள், இ.ஜெகன், ஜோ.ஸ்டாலின், மைக்கேல் ஸ்டாலின், எஸ்.ராஜா, கி. ஸ்ரீமுருகன்... அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி.

என் மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து, எனக்கு ஊக்கமளித்துவரும் உன்னத இலக்கிய உள்ளங்களே... உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி.

பயணம் தொடர்கிறது... அனைவரும் சேர்ந்தே பயணிப்போம்.

அன்புடன்,

சுரா.