ண்மையை அறியும் தேடல் தீவிரமாகும்போது அது ஞானத்தில் முடிகிறது. தான் அடைந்த ஞானத்தை உலகுக்கு வழங்கும் அன்பில் இருந்து தத்துவம் பிறக்கிறது. வானத்தின் கீழே இருக்கும் எல்லாமே ஆய்வுக்கு ஆட்பட வேண்டியதே என விஞ்ஞானம் உரைக்கிறது. கண்திறந்து காண முடியாத அக உலகின் அதிசயக் காட்சிகளை மெய்ஞ்ஞானம் வரைகிறது.

இந்த எல்லாப் பாதைகளிலும் பறந்தும், நீந்தியும், பாய்ந்தும், நடந்தும் பயணித்து ஞானக் குவியல்களை அள்ளிவந்து கொடுக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் "காலநதி'.

பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் காலடிச் சுவடுகளும் சிந்தனைத் தடங்களும் பதிந்த எல்லாப் பாதைகளையும் தன் கவிதைப் பார்வையால் கண்டுணர்ந்து அவற்றைத் தத்துவச் சித்திரங்களாக விரித்துரைக்கிறார் ஆரூர் தமிழ்நாடன் இந்நூலில்.

உண்மைக்கு ஒரு முகம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் காட்டும் அதிசய அழகு அது. யார் எங்கிருந்து பார்க்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல் அவர்கள் கண்ணில் படுகிறது அது. அவரவர் நிலையை அது உணர்த்துகிறதே அன்றி உண்மையின் முழுமை என்று அதனை ஏற்க முடியாது.

Advertisment

அண்ணாந்து பார்த்தால் நமக்கு நீல வானம் தெரிகிறது. ஆனால் வானம் என்ற ஒன்றே இல்லை என்கிறது அறிவியல். இல்லாத வானம் ஏன் நீல நிறத்தில் தெரிகிறது என்ற கேள்வி சர்.சி.வி. ராமனுக்குத்தான் பிறக்கிறது.

மனப்பிறழ்வில் சாலையில் திரிபவர்களைப் பார்த்து நாம் துன்பப்படுகிறோம். ஆனால் அவர்களில் சிலர் கவலை ஏதுமின்றி சிரித்தபடி இருக்கிறார்கள். ஃபிராய்டு போன்ற உளவியல் நிபுணர்கள் மனதை ஆராய்ச்சி செய்து அதற்கான காரணங்களைச் சொல்லுகிறார்கள் பிறந்தால் நோயும் மரணமும் இயல்பென்று நாம் மனதைத் தேற்றிக்கொள்கிறோம். புத்தரையோ அது விசாரணைக்குள் தள்ளுகிறது. அரண்மனை விடுத்துக் காடு நோக்கிப் போய் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கிறார்.

ஏழ்மையும் வறுமையும் விதிப்பயன் எனச் சராசரிகள் வாழப் பழக அது அரசியல் சமூகப் பொருளாதாரத்தின் பக்க விளைவு என கார்ல் மார்க்ஸால் கண்டுபிடிக்கப்படுகிறது.

Advertisment

உலகின் இயற்கை பற்றியும் வாழ்க்கையின் புதிர்கள் பற்றியும் சிந்திப்பவர்கள் சராசரி சிந்தனை மட்டத்தில் இருந்து சற்று உயர்ந்து சிந்திக்கிறார்கள்.

அவர்கள்தான் கவிஞர்களாக, தத்துவாதிகளாக, விஞ்ஞானிகளாக, எழுத்தாளர்களாக மலர்கிறார்கள். வெவ்வேறு பிரிவினர் போல் தோன்றினாலும் இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள். தங்கள் சிந்தனை மூலம் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்துபவர்கள் இவர்கள்.

பெயரும் உருவமும் கொண்ட எல்லாம் மாறியும் அழிந்தும் போகும் என்ற வேதாந்தக் கருத்தைச் சுவாமி விவேகானந்தர் தனது உரைகளில் குறிப்பிடுவார்.

பெயரற்றது உருவமற்றது எதுவோ அது மட்டுமே உண்மை. அது மட்டுமே நிலைத்திருக்கும் எனக் கூறும் ஆன்மீகம் அது. இவ்வுலகம் அனைத்தும் ஒன்றே எனும் அத்வைத ஞானம் அவருடையது.

அந்த பெயரற்ற உருவமற்ற ஒன்றை ஆன்மா என்றால் அது ஆன்மீகம். அதை இயற்கை, அன்பு என்று வேறு பெயர் கொண்டும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூறிக்கொள்ளலாம். பெயரில் என்ன இருக்கிறது?

அனுபவம்தான் முக்கியம்.

கடவுள், ஆன்மா போன்ற கருத்துகளை ஏற்பவர் இல்லை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன். ஆனால் இயற்கையின் இயக்கம் குறித்து அவர் ஆய்வு செய்கிறார். அதிசயிக்கிறார். ஆழ்ந்து சென்று தன் நுண்ணுணர்வால் புலனாய்கிறார்.

இந்த உலகம் தோன்றியது எப்படி என்பது குறித்து எத்தனையோ விதமான கதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. மத நூல்களிலும், நாட்டுப்புறக் கதைகளிலும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மூலமும் பல விதமாக அதை நாம் அறிந்திருக்கிறோம்.

bb

காலநதி’ என்ற கட்டுரையில் ஆரூர் தமிழ்நாடனும் உலகம் மற்றும் உயிர்கள் தோன்றியதைப் பற்றி சிந்திக்கிறார். அது ஒரு கவிஞனின் கற்பனையா தத்துவவாதியின் தரிசனமா எனப் பிரித்தறிய முடியாதபடி ‘தத்துவக் கவிதையாக’ மலர்ந்திருக்கிறது.

மனிதனின் ஆய்வு முடிவுக்கு வராத இடத்தில் கடவுள் பிறக்கிறார். ஆனால் ஆய்வு அங்கு முடிவதில்லை. உண்மையை அயராமல் தேடுகிறவர்கள் விடைகாணும் வரை வினாக்களால் வெளிச்சம் ஏற்படுத்திப் பாதையின் நீளத்தை அதிகரித்து வைக்கிறார்கள். அடுத்து வருகிறவனின் பயணத்தில் அது மைல்கல்லாகப் பயன்படுகிறது.

கேள்விகள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை. திரைகளைத் தாண்டித் தாண்டிப் பயணம் செய்யும் குதிரைப் பாய்ச்சலோடு கேள்விகள் விரைகின்றன.

எத்தனை கேள்விகளை இந்த மனிதன் கடந்துள்ளான்? அந்தக் கேள்விகளின் பதில் தானே அவனது இன்றைய வளர்ச்சி.

அறிவியல், அரசியல், பண்பாடு, மொழி, கலை, கவிதை, தத்துவம், எல்லாம் அவனது கேள்விகளால் பிறந்த குழந்தைகளே.

அவனது சந்தேகங்களில் உண்மை உறங்குகிறது. ஆனால் செத்துவிடுவதில்லை. தூங்கிக்கொண்டே கனவு காண்கிறது. அந்தக் கனவிலும் அது விடை தேடியபடியே இருக்கிறது.

இந்நூலின் பல வாக்கியங்கள் கேள்வி பதிலாகவே இருக்கின்றன. பாமரனாகக் கேள்வி கேட்டு ஞானியாகப் பதில் சொல்கிறார் ஆரூர் தமிழ்நாடன்.

அவரது நான்’ இரண்டாகப் பிரிந்து, கேட்பவ னாகவும் சொல்பவனாகவும் இரட்டை உயிராகச் செயல்படுகிறது. கேள்வி மூலம் தேடலைத் தொடங்கி பதில் மூலம் பயணத்தைத் தொடர்கிறார்.

உரையாடல் வடிவில் கதை போல் சொல்லப் படுவதால் தத்துவக் கட்டுரைகள் கதை போல் சுவாரஸ்யம் அளிக்கின்றன.

வெற்றுக் கோப்பை எனும் கட்டுரையில் குடும்ப வாழ்வை வெறுத்துத் துறவறம் பூணும் நோக்கில் ஞானியைச் சந்திக்கிறான் ஒருவன்.

துறவிக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடல் அவன் இருண்ட மனதில் வெளிச்சம் போடுகிறது. நமக்கும்தான்.

மனைவி தன்னிடம் கேட்கும் வசதிகளைச் செய்து கொடுக்க முடியாமல் காட்டுக்கு ஓடிவந்துவிட்டதாகச் கூறும் அவனிடம் ஞானி சொல்கிறார்.

உன் மனைவியிடம் நீயும் உன்னிடம் உன் மனைவியும் வெற்றுப் பாத்திரமாக இருந்தால் உங்களுக்குள் நீங்கள் நிரம்புவீர்கள் என்று.

இதுபோல் பல சிந்தனைகள் நூல் எங்கும் பரவிக் கிடக்கின்றன.

வலியை வழிபடுங்கள் என்ற கட்டுரையில்

வலியில் இருந்துதான் வழிகள் பிறக்கின்றன

என்பதைப் பல்வேறு உதாரணங்களால் சொல்கிறார்.

பல வரிகள் கவிதைகளாகப் பரிணாமம் அடைந்து பளிச்சிடுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒன்று:

புல்லாங்குழலின் காயங்களில் இருந்துதான் இசை பிறக்கிறது தவில் வாங்கும் அடியில் இருந்துதான் தாளம் பிறக்கிறது என்கிறார்.

இந்நூலின் இறுதிக் கட்டுரையாக மரணம் பற்றி எழுதியிருக்கிறார். அவரது அறிவின் உயரமும் ஞானத்தின் ஆழமும் ஒருசேர இதில் வெளிப் பட்டுள்ளது.

மொத்தம் 12 தலைப்புகளில் இந்நூலைப் படைத்துள்ளார்.

இந்த கட்டுரைகளின் இடையே வெளிப்பட்டுள்ள கவித்துவ மின்னல்களும், அனுபவ ஞானமும் கணக்கில் அடங்காதவை. அவற்றில் சில: ஐம்புலன்களும் தூரிகைகள். அவை வரையும் ஓவியத்தின் பெயர்தான் புத்தி.

வலி என்று ஒன்று இல்லை என்றால், உடல் உருப்படியாய் இருக்காது. உடலில் நிரப்பப்பட்டிருக்கும் உயிரும் எப்போது வேண்டுமானாலும் சத்தமில்லாமல், நமக்கே தெரியாமல் ஒழுகிவிடும்.

போராடும் போது மட்டும் கோரிக்கைகளைக் கவனிக்கும் அரசாங்கம் போல், தேகத்தின் பகுதிகள் நோயுற்று வலிதரும்போது மட்டும் கவனித்து மருத்துவர்களிடம் ஓடுகிறோம்.

விழிப்பு, நமது புற உலகைப் பலப்படுத்துகிறது துயில், நமது அக உலகைப் பலப்படுத்துகிறது விழிப்பில் இருக்கும் நாமும், துயிலில் இருக்கும் நாமும் நமது வேறுவேறான ஒருமை.

கவியரசர் கண்ணதாசனின் ராகமாலிகா, புஷ்பமாலிகா, ஞானமாலிகா போன்ற நூல்களின் இனிய உரைநடையை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரூர் தமிழ்நாடனின் இந்தக் காலநதியில் காண முடிந்தது.

கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி உண்மையின் மறுபக்கத்தை உரைப்பவன்.

கவிக்கோ அப்துல்ரகுமானின் ‘பித்தன்’ எதிர்மறைகளின் அழகை ஆராதித்தவன்.

அவர்கள் வழியில் அவர்களின் தொடர்ச்சியாகவே ஆரூர் தமிழ்நாடனின் காலநதி வெளிவருகிறது. இவரும் இருள், உறக்கம், வலி, பள்ளம் என எதிர்மறைகளையே பாடுபொருளாக எடுத்துக்கொண்டிருக் கிறார். வெளிச்சம், விழிப்பு, வலிமை, உயரம் இவைதான் உயர்ந்தவை என்றும் லட்சியம் என்றும் உலகம் நினைத்துக்கொண்டிருக்க எதிர்மறைகளை ஏன் இவர்கள் போற்ற வேண்டும்?

முதலில் சொன்னதைப்போல் உண்மைக்கு ஒரு முகம் இல்லை. மலர் ஒரு உண்மை அதற்குள் இருக்கும் கனி வேறொரு உண்மை. கனிக்குள் இருக்கும் விதை கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் உண்மை. விதைக்குள் இருக்கும் மரங்கள் மறைந்திருக்கும் மாபெரும் பேருண்மை. அந்த மரங்களிலிருந்து மீண்டும் மலர்கள் வருவது உண்மையின் மாயாஜால விளையாட்டு.

தென்றலில் ஆடும் மலரை ரசிப்பவன் சேற்றில் போராடும் வேரைப் பார்ப்பதில்லை. கவிஞன் அதைப் பாடுகிறான்.

தோற்றத்தைப் பார்ப்பவர்கள் மனிதர்கள். தோற்றத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையைப் பார்ப்பவர்கள் ஞானிகள். விலக்கப்பட்டவற்றை போற்றும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களில் ஒருவர்.

சிற்றோடை போல் புறப்பட்டுவரும் இந்த நூல் காலநதி என்ற தன் தலைப்புக்கேற்பக் காலத்தை வென்று நீந்தி நிலைத்திருக்கும் என்பது உறுதி.

கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் உண்மையான உயரம் இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை. ஏன் அவரே அதை வெளிப்படுத்தவில்லை என்றும் சொல்லலாம். இந்நூல் அவரது ஆளுமைக்கு ஒரு சான்று. அவருக்குள் இருக்கிற இது போன்ற பல படைப்புகள் வெளிவரவேண்டும்.

(காலநதி நூலின் அணிந்துரையிலிருந்து)