ந்த நிலையிலும் மழையும் மலர்களும் நம்மை மகிழச் செய்கின்றன. நம் கவலைகளை அவை கரைத்துப் புன்னகையை மலரச் செய்துவிடுகின்றன. உண்மையான கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நம்மை மகிழ்ச்செய்யும் அற்புத ஆற்றல் வந்துவிடுகிறது.

அத்தகைய கலைஞர்களில் அரிய கலைஞராக- நகைச்சுவை நடிகராக- இயக்குனராக -சிறுகதை ஆசிரியராக- நல்ல ஓவியராக- திகழ்ந்து மறைந்திருக்கிறார் மனோபாலா.

தமிழ்த் திரையுலகில் எம். ஆர். ராதா, என்.எஸ். கிருஷ்ணன், நாகேஷ், சந்திரபாபு, தங்கவேலு, சோ, சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சார்-, சந்தானம், யோகிபாபு, சூரி என நகைச்சுவை நடிகர்களின் பட்டியல் நீண்டுகொண்டே சென்றாலும் அதில் மனோ பாலாவின் நகைச்சுவை தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது, பாலச்சந்தர் என்ற இயற்பெயருடன் மனோபாலாவாக திரைத்துறையில் வலம்வந்த இவர், ஒரு ஆல்ரவுண்டராகவே இருந்தார். இவருக்குத் தெரியாத கலைநுட்பங்களே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு ரசிகர்ளின் மனதைக் கவரும் ரகசியத்தையும் அவர் படித்து வைத்திருந்தார்.

Advertisment

dd

இவர் 40 திரைப்படங்களையும், 16 தொலைக் காட்சித் தொடர்களையும், 3 தொலைக்காட்சித் திரைச் சித்திரங்களையும் இயக்கியுள்ளார்.

Advertisment

மனோபாலா தனது இறுதிக்காலத்தில், நக்கீரன் இதழில் ’நினைவோ ஒரு பறவை’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை, பலரின் இதயத்தையும் கொள்ளையடித்தது. அதில் தனது திரை அனுபவங்கள் அனைத்தையும் வெள்ளந்தியாகவும் வெளிப்படையாகவும் எழுதி இருந்தார். இந்தப் படைப்பு திரையுலகில் பலரையும் அடையாளம் காட்டியது. திரையுலகையும் அடையாளம் காட்டியது என்று சொல்லலாம்.

1970-களின் முற்பகுதியில் தமிழ்த் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்த மனோபாலா, கார்த்திக் நடித்த ஆகாய கங்கை’ படம் மூலம் இயக்குநர் ஆனார். 1982-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து மோகன் நடிப்பில் “பிள்ளை நிலா’ படத்தை இயக்கினார். இது வெற்றிபெற்றது. அடுத்த “சிறைப்பறவை, ரஜினி நடித்த“ஊர்க்காவலன், விஜயகாந்த் நடித்த’என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், ஜெயராம் நடித்த நைனா உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். மேலும் “சதுரங்கவேட்டை, பாம்புச் சட்டை, “சதுரங்கவேட்டை 2” படங்களைத் தயாரித்துள்ளார். 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். .

சிவாஜி, ரஜினியில் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வந்த இவர், கடந்த சில வருடங்களாக யூடியூப்பிலும் பிரபலங்களைப் பேட்டி எடுத்துவந்தார். மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவி ஹரீஷ் என்ற மகன் உள்ளனர்.

அவர் தன்னைப் பற்றி இப்படித்தான் அறிமுகம் செய்துகொள்கிறார்.

என் அக்கா வீடு பெங்களூரில் இருந்தது. நான் அடிப்படைக் கல்வி கற்றது அங்குதான். என்றாலும், திருக்காட்டுப்பள்ளியில்தான் பத்தாவது, பன்னிரண்டாவது படித்தேன். “பொம்மை, “பேசும் படம்’ போன்ற பத்திரிகைகளில் வரும் இயக்குனர்களின் கட்டுரைகள், ஸ்ரீதர் அவர்களின் பேட்டிகள், கேமராமேன் வில்சன் சாரின் பேட்டிகள் இவை எல்லாமும்தான், நாம் எப்படியாவது சினிமாத்துறைக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது.

பெங்களூரில் படிக்கும்போது, பள்ளிக்கு எதிர்த்த மாதிரியே 3 தியேட்டர் இருந்தது. அந்த மூன்று தியேட்டருமே தமிழ் தியேட்டர். ஒரு நாள் நான் ’இதயக்கமலம்” அப்படிங்கிற படம் பாத்துட்டு வீட்டுக்கு போறேன்.

என்னுடைய அக்கா, என்னுடைய அக்காவுடைய ஹஸ்பண்ட் எல்லாரும் என்னுடைய நடவடிக்கையைப் பார்த்துட்டு நான் பள்ளிக்கூடம் போகல அப்படிங்கறத ஒருமாதிரி கணிச்சு என்னுடைய பாக்கெட்டில் பார்க்கும்போது அதுல சினிமா டிக்கெட் இருந்துச்சு. என்ன அடிச்சி உதைச்சு, மிதிச்சி எல்லாம் பண்ணும்போது நான் என்ன பண்ணினேன், எங்க அக்கா வீட்டிலிருந்து உண்டியலை உடைச்சி அதில் இருந்த காச எடுத்துக்கிட்டு, எல்லா பசங்க மாதிரியும் சொல்லாம கொள்ளாம ட்ரெயின புடிச்சு, சென்னை சென்ட்ரல் வந்து இறங்கிட்டேன். எங்க போறதுன்னே தெரியல. அப்படியே பொறுமையா நடந்து போனா, எதிர்த்தா மாதிரி சாந்தி தியேட்டர். சாந்தி தியேட்டர்ல சிவாஜியோட பேனர். அவரைப் பார்த்த உடனே ஆஹா இவருதாம்பா நம்ம ஆளு அப்படிங்கறத என் மனசு முணுமுணுத்துச்சு.

நான் தியேட்டருக்கு முன்னாடி ஒரு ஓரத்துல ஒதுங்கி அந்த பேனரையே பாத்துகிட்டு நின்னேன். ஒருத்தர் அங்கிருந்து வந்தாரு. “தம்பி நீ யாருப்பா, ஊரை விட்டு ஓடிவந்துட்டியா அப்படின்னு என்ன பார்த்த உடனே கேட்டாரு. ஆமான்னு சொன்னேன். அப்பத்தான் அவரு என்ன பண்றாரு, அவரு கார்லயே என்ன அழைச்சிட்டு போயி, சத்தியமூர்த்தி பவன்ல போய் படுக்க வைக்கிறார். அவர் யாருன்னா அவருதான் சிவாஜி மன்றத் தினுடைய தலைவர் ராஜசேகர். ஒரு நாள் எம்ஜிஆர் படம் பார்த்தேன். அது சினிமாவுக்கான ஆசைய இன்னும் தூண்டி விட்டுடுச்சி. கொஞ்ச நாள்ல கையில காசு எல்லாம் தீர்ந்து போச்சு. அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியல. அப்பதான் என்னுடைய அம்மா இறக்கும்போது சொல்லியி ருந்தாங்க மயிலாப்பூரில் எங்க அக்கா வீடு இருக்கு அப்படின்னு.

அப்படியே நான் பொறுமையா நடந்து வந்தேன். அக்கா இருக்கிற தெரு சோலையப்ப முதலித் தெரு. ஒரு வழியா அங்கு வந்து எங்க அக்கா இருக்குற வீட்டுக்குள்ள நுழைஞ்சிட்டேன். இப்பதானே காலேஜ் சேர்ந்தான் அதுக்குள்ள வந்து இருக்கானே அப்படின்னுட்டு, பாலு வா வா அப்படின்னு என்ன அழைச்சாங்க. நல்ல சாப்பாடு போட்டாங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நான் எங்க அக்காகிட்ட சொன்னேன், அக்கா நான் ஓடிவந்துட்டேன் அப்படின்னு. உடனே எங்க அக்கா மயக்கம் போட்டு கீழ விழுந்துடுச்சி. உடனே எங்க மாமா பெங்களூருக்கு எங்க அப்பாவுக்கு போன் பண்றாரு. உடனே எங்க அப்பா குடும்பத் தோட வந்து அழச்சிட்டுப் போறதுக்கு வராரு. அப்ப நான் சொல்றேன் நான் வரமுடியாது. நான் சினிமா வில் சேரனும் அப்படின்னு சொல்றேன். உடனே எங்க அப்பா, இல்லடா சினிமாங்றது நம்ம குடும்பத்துக்கே ஒத்துவராத ஒரு தொழிலு. அதுல நீ சேர முடியாது அப்படின்னு சொல்றாரு. நான் அதுக்கு ஒத்துக்கல.

dd

வித்யா கார்டன்ல எங்களுக்குத் தெரிஞ்ச மாமா ஒருத்தர் இருக்காரு. அவரு ரெக்கார்டிஸ்ட்டா இருக்காரு. அவர் பெயர் சாமிநாதன். அவர பாக்கலாமுன்னு சொல்லிட்டுப் போறோம்.

அங்கு ஒரு தெலுங்குப் படம் மிக்ஸிங் நடந் துக்கிட்டு இருக்கு.

அங்க ஆடியோ எபெக்ட் எல்லாம் பண்ற’வைரம்” அப்படிங்கற ஒருத்தர் இருந்தாரு.

அவரு கடல் அலை வர அந்த சத்தத்தை எல்லாம் ஒரு முறத்துல கடுகு வச்சுக்கிட்டு அப்படியே லேசா ஆட்டி ஆட்டி அந்த சத்தத்தை கொடுத்துக்கிட்டு இருந்தாரு. அப்ப அவர்கிட்ட எங்க அப்பா விஷயத்தை சொல்லும்போது, அவர் சொல்றாரு நான் இருக்கிறதே சவுண்டு தொழில். அவன் என்னவா ஆகணும்னு ஆசைப்படறான் அப்படின்னு அவன் கிட்ட கேட்டுக் கோங்க அப்படின்னு சொல்றாரு. உடனே எங்க அப்பா இது சரிப்படா துன்னு ஊருக்கு அழைச்சிட்டு போயிட்டாரு.

அதுக்கப்புறம் அங்க என்னால இருக்கமுடியல. மறுபடியும் சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.’ என்று தன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் வேட்கையையும் வேகத்தையும் விவரிக்கிறார். பிறகு? சென்னையில் என்ன செய்தார்? “அப்பதான் சிவக்குமார் அண்ணன் ஆர்ட்டெல்லாம் வரைவாரு, அவரை போய் பார்ப்போம் அப்படின்னு தோணுச்சு. அப்ப அவருடைய வீடு எங்கன்னு தேடும்போது அது பாண்டி பஜார் பூக்கடைக்கு பின்னாடிதான் இருந்துச்சு.

அப்போ அவரிடம் போயிட்டு நான் இது மாதிரி சினிமாவில் சேரனும். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வந்து இருக்கேன். அப்படின்னு சொல்லும்போது, போடா போய் ஏதாவது படிடா அப்படின்னு சொன்னாரு. டிராயிங் ஒரு உருப்படாத தொழிலு. அதை நீ அஞ்சு வருஷம் படிச்சு, படிச்சுட்டு வெளியில வந்தாகூட, இதை வச்சு ஒன்னும் பண்ணமுடியாது அப்படின்னு சொன்னாரு. சொல்லிட்டு அவரோட டிராயிங்க எல்லாம் எடுத்து ஏங்கிட்ட காட்டுறாரு. அப்பதான் நான் அவர்கிட்ட சொன்னேன். என்னண்ணே நீங்கள் இவ்வளவு டிராயிங் வரைஞ்சி இருக்கீங்க. நீங்க போயி என்ன டிஸ்க்ரைப் பண்றீங்களே அப்படி சொன்னேன். இல்லடா எனக்கு ட்ராயிங் இருந்தாலும் நான் சினிமாவில நடிக்க போயிட்டேனே அப்படின்னு சொன்னாரு. அஞ்சு வருஷம் படிச்சிட்டு இருந்தேன். சாயங்கால நேரத்துல சிவகுமார் அண்ணனைப் பாக்க வருவேன். அப்பதான் கமலஹாசனுடைய தொடர்பு எனக்கு கிடைச்சது. ”-இப்படி யாக கமலின் நட்பு கிடைக்க அவர் மூலம் தான் திரையுலகக் கதவை திறந்து உள்ளே நுழைந்திருக்கி றார்.

பல்வேறு கலைஞர்களுக்கு கதவைத் திறந்து வைத்தாலும் அப்பதான் கமலஹாசனும் கொஞ்சம் கொஞ்சமா கதாநாயகன் ஆகிறார்.

”அரங்கேற்றம்” படம் ஷீட்டிங் நடக்குது. அங்க போறோம். அந்த படம் டைரக்சன் பாலச்சந்தர். அவர்தான் டைரக்ட் பண்ணிட்டு இருந்தாரு. நான் ரொம்ப நாளா யாரை பாக்கணும் அப்படின்னு நெனச் சுக்கிட்டு இருந்தேனோ அவர் என்னுடைய எதித்த மாதிரி நிக்கிறாரு. அவர நேருல பாக்கும்போது எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. பாலச்சந்தர் ஷூட்டிங்ல அவரு டைரக்சன் பண்ற அந்த ஆளுமை இருக்கே, அத பாத்தீங்கன்னா, அப்பா அப்பப்பா அந்த ஆளுமை எனக்குள் ஒரு மிகப்பெரிய மாயையை ஏற்படுத்தியது. அவரு ஷூட்டிங் பாத்துட்டு வந்ததுக்கு அப்புரம், நைட்டு பூரா எனக்கு தூக்கமே வரல. பெயிண்டிங் பண்ணி, ஒரு ஆர்ட் டைரக்டரா ஆகணும் அப்படின்னு நினைச்சிருந்த எனக்குள்ள ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் பாலச்சந்தர். பாலச்சந்தர பார்த்த உடனே டைரக்சன்தான் நம்முடைய தொழில் அப்ப டின்னு முடிவு பண்ணிட்டேன்.

அந்த காலகட்டத்தில்தான் ’முள்ளும் மலரும்” அப்படிங்கற படம் ரிலீஸ் ஆகுது. 16 வயதினிலே படம் ஒரே கலக்கலா போயிட்டு இருக்கு.

முள்ளும் மலரும் படம் பார்த்த உடனே, மகேந்திரன் சார்கிட்ட அசிஸ்டென்டா சேரலாம் அப்படின்னு தோணுச்சு. ஆழ்வார்பேட்டையிலதான் சீதா அம்மாள் ரோடு இருந்துச்சு. அந்த தெருவிலதான் மகேந்திர சார் இருந்தாரு. வாக்கிங் போகும்போது அவரோட பேசுறது, டீ சாப்பிடுறது, இதுமாதிரி பழகு வதற்கான வாய்ப்பு எல்லாம் கிடைச்சுது. அவர்கிட்ட சேரலாம் அப்படின்னு இருக்கும்போது ஒருநாள் என் வீட்டுக்கு கார் வருது. அது கமலஹாசனுடைய கார்.

அந்தக் கார் வந்து, பிளாக் அம்பாசிடர் நம்பர் 7. டிரைவர் சொன்னாரு, கார்ல ஏறுங்க கமலஹாசன் சார் உங்கள கூப்பிட்டு வரச் சொன்னாரு அப்படின்னாரு.

சரின்னு கார்ல ஏறிப் போறோம்.

கார் எங்க போகுதுன்னா பெரியார் சிலையிலிருந்து தூர்தர்ஷன் போற அந்த ரோட்டுக்குப் போகுது, சிகப்பு ரோஜா படத்துல கடைசி எண்டுல வர ஒரு சீன் ஷூட்டிங் அங்க நடக்குது. அங்க போய் கார் நிக்குது.

காரில இருந்து இறங்கி கமலஹாசனை பாக்கலாம்னு போறேன். அப்ப அவர், “நீ சினிமாவுல சேரனும் சேரனும் அப்படின்னு சொன்னியே இப்போ உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்திருக்கு அப்ப டின்னு சொன்னாரு. அப்பத்தான் நான் சொன்னேன் மகேந்திர சார்கிட்ட சேரலாம்னு இருக்கேன் அப்படின்னு சொல்லும்போது, இல்ல இல்ல அவர் தாண்டி வேற ஒரு இடத்துக்கு நான் அனுப்பலாம்னு இருக்கேன் அப்படின்னு கமலஹாசன் சொன்னாரு.

அவர் என்ன சொல்றாரு, நீ நாளைக்கு காலையில, பாம்குரோ ஹோட்டலுக்குப் போ. நானே உனக்கு கார் அனுப்பிவைக்கிறேன். அப்படின்னு சொன்னாரு.

அடுத்த நாள் காலையில நான் பாம்குரோவ் போயி கார்ல இறங்கிறேன். எனக்கு முன்னாடி ஒரு கார் வந்து நிக்குது. அது 1845 அப்படிங்கற காரு.

அந்த காருல இருந்து ஒருத்தர் இறங்குறார். ஆர் யூ பாரதிராஜா நான் உங்ககிட்ட அசிஸ்டன்டா சேரனும். கமலஹாசன் அனுப்பிவச்சாரு அப்படின்னு சொன்னேன். அப்படியா வாங்கன்னு சொல்லிட்டி அங்க 410 அப்படிங்கற ரூமுக்கு போறோம். அங்க பாக்கியராஜெல்லாம் இருந்தாரு. இந்த 410 க்கு மேல 510ல ஒரு ரூம் போட்டாங்க. அங்க உக்காந்து கதை டிஸ்கஸ் பண்ணினோம். அங்க, மூணே நாள்ல உருவா னதுதான் ”புதிய வார்ப்புகள்” அப்படிங்கற படம்.

புதிய வார்ப்புகள் அப்படிங்கிற படத்துக்கு கதாநாயகி செலக்ட் ஆயாச்சு. அப்ப நான்தான் அந்த கதாநாயகன், கதாநாயகி எல்லாருடைய போட்டோவையும் எடுத்துட்டுப் போய் பாரதிராஜா கிட்ட காட்டுறேன். லட்சுமிகாந்தன் அப்படின்னு ஒரு போட்டோகிராபர் அவரை வச்சுதான் போட்டோ எடுக்கணும். ஓரளவுக்கு எல்லாமே செலக்ட் ஆயிடுச்சு. கதாநாயகன் மட்டும்தான் கிடைக்கல.

பாடலுக்கு பார்த்தீங்கன்னா கண்ணதாசன். ஒரு குறுகிய காலத்தில பிரமாண்டமா வளர்ந்த, அவ்வளவு பெரிய ஆளுமைமிக்க ஒரு கவிஞரை நாம பார்க்கவே முடியாது. அவர் பாடல்களை கேட்டுக் கேட்டு வளர்ந்த எனக்கு, அவர பக்கத்துல பார்க்கிறது ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. சந்தோஷத்துக்கும் அவர்தான்.

துக்கத்துக்கும் அவர்தான். அவர் எழுதின வார்த்தை களைக் காப்பி எடுத்து மலேசியா வாசுவுக்கும், ஜானகி அம்மாவுக்கும் கொடுக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

திடீருன்னு டைரக்டர் கூப்பிட்டாரு. வாயா ராஜன் எங்கே? அப்படின்னு கேட்டாரு. நம்ம ஹோட்டல்லதான் சார் டயலாக் எழுதிட்டு இருக்காரு அப்படின்னு சொன்னேன். நீ ஒன்னு செய். லட்சுமிகாந்தனை கூப்பிட்டுகிட்டு நம்ம பாக்கியராஜாவ வச்சு, கையில ஒரு பெட்டி, ஒரு கண்ணாடி, ஒரு குடை, இத வச்சுக்கிட்டு, ஊரிலிருந்து வந்த ஒரு வாத்தியார் எப்படி இருப்பானோ, அது மாதிரி ஒரு டேக் எடு, அப்படின்னு சொன்னாரு.

சார் எக்ஸ்கியூஸ் மீ எதுக்கு அவரை போட்டோ எடுக்க சொல்றீங்க அவர் ஹீரோவா அப்படின்னு கேட்டேன். நான் சொல்றேன் நீ போயி எடுய்யா அப்படின்னாரு.

பாக்யராஜுக்கு மேக்கப் எல்லாம் போட்டு அவர் பிரேம்ல வந்து நிக்கணும். அவர் நிக்க தெரியாம பிரேம தாண்டி போயி நின்னாரு. அப்பதான் புலியூர் சரோஜா அக்காவும் நானும் பாக்கியராஜை பிரேம்ல கொண்டுவந்து நிறுத்துனோம். அன்னைக்கு ஆரம்பிச் சதுதான் பாக்கியராஜ் வாழ்க்கை இன்னைவரைக்கும் பிரமாதமா போய்க்கிட்டு இருக்கு. அவர் ஒரு அருமை யான திரைக்கதை ஆசிரியர். ஒரு நல்ல நடிகர். 21 நாள்ல ஒரு படம் எடுத்து முடிக்கக்கூடிய ஒரு ஆளுமை மிக்கவர்.

அப்புறம்தான் எனக்கு வாழ்க்கையில ஒரு கிராப் அப்படி மேல போச்சு. நான் சொன்ன அதே புரொடியூசர மீட் பண்ணினேன். அவர் வாயால என்ன டைரக்டரேன்னு கூப்பிட்டாரு. எஸ்கியூஸ் மீ நீங்க யாரை கூப்பிடுறீங்கன்னு தெரியலையே. நேத்திக்கு இருந்த அதே மனோபாலாதான் இன்னைக்கும் இருக்கிறேன். அன்னைக்கு டைரக்சன் தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப டைரக்டரேன்னு கூப்பிடுறீங்களே அப்படின்னு கேட்டேன். அவரு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாறுதல ஏற்படுத்தின ஒரு ப்ரொடியூசர். அதுவும் மறக்க முடியாது. சில நேரங்களில் அப்படி யும் இருக்கும். அதையும் சந்திக்கத்தான் வேணும்.

நான் சோர்ந்து போற நேரத்துல, என்னுடைய மனைவிதான் எனக்கு சார்ஜ் ஏத்திக்கிட்டே இருப் பாங்க. என்ன மூஞ்சி எல்லாம் சோர்ந்த மாதிரி இருக்கீங்க. ஏதாவது வெளிய பிரச்சனையா? அப்படின்னு கேப்பாங்க. நான் ஏதாவது சொல்ல ஆரம்பிசேன்னா, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வேலையைப் பாருங்க. அது எல்லாமே தானா சரியாயிடும் அப்படின்னு சொல்லுவாங்க. அது எனக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்கா இருக்கும்.

என் வாழ்க்கையில் சினிமா என்பது மூச்சு. என் வாழ்க்கை ஒரு போராட்டம். எனக்குத் தெரிந்ததெல் லாம் ஒண்ணுமே இல்ல. சினிமா இருக்கு, ஆனா அதுல கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. எனக்கு கோபம் வந்தால் இது செட்டுன்னுகூட பார்க்கமாட்டேன் கேமரா எல்லாம் ஒடச்சிடுவேன். நான் ஜாலியா இருந்தா, மத்தவங்களும் ஜாலியா இருக்கும்னு நினைப் பேன்.

*

இப்படி எல்லாம் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த மனோபாலா மே 3, 2023 அன்று இந்த மண்ணைவிட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாகத்தான் இருக்கிறது.

குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகிற தலைக்காவிரி, வருகிற வழியெல்லாம் பல்வேறு கிளை நதிகளை உருவாக்கி உயிர்களை வாழவைத்தும், மகிழ்வித்தும் கடைசியில் வங்கக்கடலில் கலக்கிறபோது, ஆடுதாண்டும் காவேரியாக குறுகி வாய்க்காலாக முடிவடைகிறது.

இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை இயற்கையும் நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.

மறைந்த மனோபாலாவின் உடலுக்கு ஒளிப்பதி வாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகர்கள் சிவகுமார், விஜய், சித்தார்த், நட்டி என்கிற நட்ராஜ், ஆர்யா, இயக்குநர் கள் சந்தானபாரதி, மணிரத்னம், விக்ரமன், ஏ.ஆர்.முருகதாஸ், ஹெச்.வினோத், சுசீந்திரன், விஜய், மோகன், தாமு, மோகன்ராம், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார் உட்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.