(அன்னை மணியம்மையார் 1920 மார்ச் 10-ல் பிறந்து 1978 மார்ச் 16-ல் நிறைவெய்தியவர். இடைக்காலத்தில் அவர் வாழ்ந்த கொள்கை அடிப்படையிலான தன்மான வாழ்வுதான், அவரை அன்னையென எண்ணி மகிழவும் நெகிழவும் வைக்கிறது. அவர் எத்தகையவர் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை)
*
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், வியந்து பார்க்கும் மனிதர்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போகமுடியாது. இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக் கும் சட்ட திட்டங்களிலிலிருந்து கற்பிதங்களிலிலிருந்து போதித்த வாழ்க்கை முறையிலிலிருந்து நழுவிவிடக் கூடாது என்று நொடிதோறும் அதிகாரம் செலுத்து கிறது. துணிச்சலானவர்கள் தங்களுக்குப் பிடித்த வற்றைத் தேர்வு செய்யும்போது ஒன்று அவர்களை உண்டு செரித்துவிடுகிறது, இல்லையென்றால் ஏதோ ஒரு சாயம் பூசித் திரித்துக் காண்பிக்கிறது.
மிகப் பல நூற்றாண்டுகளாகச் சங்கப்புலவர் ஔவையார் குறித்த தோற்றத்தைச் சிலைகளிலும், ஓவியங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நிஜத்தில் அவர் வயதான மூதாட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. நாம் சொல்லிலிக் கொண்டிருக்கும் ஔவையின் தோற்றம் அப்படி இருக்கவேண்டிய எந்த அவசியமுமில்லை என்பது கவிஞர் இன்குலாப் எழுதிய ‘ஔவை’ நாடகத்தின் சாராம்சம்.
நாடகக் காட்சியில் தோன்றும் புலவர் இளவயதுத் தோற்றத்தில், கள்ளை ரசித்து ருசித்து உண்பவராகக், கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமானுக்கு மிக நெருங்கிய பெண் தோழியாகப் படைக்கப்பட்டு இருக்கிறாள். கிடைத்தற்கரிய நெல்லிலிக்கனியை, இனிய சுவை கொண்ட கனியைத் தன் தோழிக்கு ஒரு மன்னன் வழங்கினான் என்பதில் நட்பைத் தாண்டி வேறு ஓர் உணர்வும் பயணிக்கவே செய்கிறது. ஆனால் வரலாறு இப்படிச் சொல்லிலிக் கொடுக்கவே இல்லை. புலவருக்கு மூதாட்டியின் சாயத்தைப் பூசி வயதானதால் கையில் ஒரு கொம்பு ஊன்றி நடக்கும் வகையில் புனையப் பட்டதன் அரசியல் பின்னணி இன்றுவரை கட்ட விழ்க்கப் படாத மர்மம்தான்.
சாதி, மதம், பொருளாதாரம், படிப்பு - இப்படி எத்த னையோ பிரித்தாளும் சக்திகள் இருந்தாலும் அதையும் தாண்டி மனிதர்கள் தமக்குள் நேசக்கரம் நீட்டியே வாழ்கின்றனர். பாலிலின ஈர்ப்பு நிகழ்வதும், கொள்கை ரீதியில் இணைப்பு உண்டாவதும், ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் சேர்ந்திருப்பதும் எல்லா காலங்களிலும் நிகழும். அப்படிக் கொள்கை வழியில் ஈர்க்கப்பட்ட ஒருவரின் மீது, தொண்டு செய்வதையே தன் வாழ்நாளின் பயனாக மேற்கொண்டவரின் மீது அவதூறு பரப்பும் சமுதாயத்தை என்னவென்று சொல்வது?
கல்யாணமான புதிதில் இருக்கும் ஈர்ப்பும், கவர்ச்சி யும் மெல்ல குறைவதை வாழ்க்கையில் பார்க்கிறோம்.
ஏதோ ஒரு புள்ளியில் எல்லாம் முடிவுக்கு வரும்போது இனக் கவர்ச்சியால் அல்லாமல், தனக்குப் பின்னாளில் பலன் கிடைக்கும் என்ற வாய்ப்பில்லாமல் ஒருவருக்குத் தொண்டு செய்வதில் என்ன இன்பம் கண்டுவிட முடியும்! பணத்தை எதிர்நோக்கிப் பணி செய்தார் என்றாலும் ஓர் ஆள் போட்டு அப்பணியை நிறைவேற்றி இருக்கலாமே என்பன போன்ற குழப்பங்கள் எழுகின்றன.
ஊர் முழுக்க பெண் விடுதலை யைப் பற்றிப் பேசிவிட்டுத் தனக் குப் பெயர்த்தி வயதில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்வது தான் சீர்திருத்தமா? என்ற அடுக்கடுக் கான கேள்விகளுக்குச் சொல்லப் படும் பதில்களை இந்தச் சமுதாயம் ஏற்கமறுக்கிறது. அதனால்தான் என்னவோ ஔவையாரை மூதாட்டி யாக மாற்றிவைத்து அழகு பார்க்கி றோம். ஆம்! இப்படி எல்லா அவச் சொற்களும் தன்னை நோக்கிப் பாய்ந்து வந்தபோதும் பயம் கொள்ளாத புறநானூற்றுப் பெண்மணியாகத் திகழ்ந்தார் மணியம்மையார்.
மணியம்மையாருக்கும் பகுத்தறி வுப் பகலவன் பெரியாருக்கும் நடந்த திருமணத்தைத்தான் கொச்சைப் படுத்திப் பார்க்கிறது சமூகம். வேலூரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அம்மையார் பெரியாரின் தன்மான இயக்கத்தால் கவரப்பட்டு அவரு டன் இணைந்தார்.
காந்திமதி என்ற இயற்பெயர் கொண்ட இவரின் தந்தையாரும் சுயமரியாதை இயக்கத்தின் அணுக் கத் தொண்டர். ஐயாவுக்குச் சிறுநீர் வழியில் கற்கள் இருக்கும் உபாதை இருந்துகொண்டே இருந்தது.
முதல் மனைவியான நாகம்மை யார் இறந்த பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு யாரும் பராமரிக்க முடியாத நிலையில் இருந்தபோது ஆரம்பத்திலேயே திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத மணியம்மையார் அவருக்குப் பணி செய்வதையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு அவரிடம் வந்துசேர்ந்தார். அன்று தொட்டு அவரின் இறுதிக்காலம் வரை உடனிருந்து கவனித்துக் கொண்டார்.
கழகப் பொறுப்புகளுடன், திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கான விடுதி, தோட்டப் பண்ணை, வாடகை வரும் பல கட்டடங்கள் என்று எல்லாவற்றையும் அம்மையார் நிர்வகிப்பது அவரின் கடமையாகிப் போயின. "பெரியார் வாழட்டும் என்ற தன் துடிக்கும் இளமையைப் பெரியாருக்கு ஒப்படைத்த ஒரு இளம்பெண்ணை "அன்னை' என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?' பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக் காக மல்லிலிகை முதலிலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிலிய மணப்பொருளாலும் அழகுபெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.
அதேநேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரர்போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி - அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை,’’ என்று தனது "குயில்' இதழில் பாரதிதாசன் பதிவு செய்யும்போது இருவருக்கும் இடையில் நிலவிய அன்பின் திறத்தை உணரமுடிகிறது.
உலகத்தில் நடக்கும் திருமணங்கள்போல உடல் ஆசைக்காகவோ, குடும்ப விருத்திக்காகவோ, வாழ்க்கைப் பாதுகாப்புக்காகவோ இந்தக் கல்யாணம் நடக்கவில்லை. அப்படியிருக்க கல்யாணத்தின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் என்ற கேள்வி பூதாகரமாக வெடிக்கிறது. சாதாரணமாக எல்லோரையும் போலப் பிறந்தோம், வளர்ந்தோம், செத்தோம் என்று வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் போவது சாதனையாளர்கள் வாழ்வில் நடந்ததில்லை.
அவர்கள் வாழ்வில் உலகம் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் நடக்காமல் போவதும், மற்றவர்கள் வெறுக்கும் இயல்புக்கு எதிரான மாற்றங் கள் நடப்பதும் இயற்கை. மூடப்பழக்கங்கள் ஒழியவும், சாதிமத பேதம் நீங்கவும் சமத்துவ சமுதாயம் மலரவும், சமூகநீதி ஓங்கவும் பாடுபட்ட பெரியாரும் மணியம்மையாரும் இந்தக் கொள்கையை நிறைவேற்றிடவே மணந்து கொண்டனர் என்றால் நம்புவது கடினமாகவே இருக்கும்.
தன் இறப்புக்குப் பின்னால் கழகத் தொண்டாற்ற, சமூகப்பணி செய்ய யாரையும் நம்பமுடியாத சூழல் தந்தை பெரியாருக்கு உண்டானது. மனைவியும் இறந்து, வாரிசும் இல்லாத நிலையில் எல்லாச் சொத்தும் உறவினர்களுக்குச் சொந்தமாகிவிடும் நிலைமை நீடித்தது. உறவினர்கள் நிச்சயமாகக் கழகப்பணி செய்யமாட்டார்கள் என்று தெரிந்துவைத்திருந்த அவர், மணியம்மையாரை மகளாகத் தத்தெடுத்துக் கொண்டு சுயமரியாதை கொள்கைகளைப் பரப்ப வழிவகுக்கலாம் என்று எண்ணினார். மகளிருக்குச் சொத்துரிமை வழங்கப் படாத அக்காலத்தில் தத்தெடுக்கவும் வழியில்லை.இதை உணர்ந்த பெரியார் தொண்டு செய்வதற்காக அம்மையாரைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழி அறியாதவரானார்.
மகளுக்குச் சொத்துரிமை இல்லையே தவிர மனைவிக்குக் கணவன் சொத்தில் முழு உரிமையும் உண்டு என்பதால் பலர் எதிர்த்தாலும், எத்தனையோ அவதூறு எழுந்தாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாத இருவரும் மணந்து கொண்டனர் (09.07.1949). அன்னையார் பதினெட்டு வயதைத் தாண்டி நடுத்தர வயதை நோக்கிச் சென்று கொண்டிருந் ததால், ஒரு பக்குவப்பட்ட பெண்ணாகத் தன் வாழ்க்கை முடிவுகளைத் தானே எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. இனமானமா? அல்லது தன்மானமா? என்பதில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலையில் தன்மானத்தையும் தியாகம் செய்து இனமானமே பெரிது என்று முடிவு எடுத்துச் செயல்படத் தொடங்கினார்.
பொது வாழ்வுக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பவர் மானம் பாராது தொண்டு செய்யவேண்டும் என்பதல்லவா பெரியார் வகுத்துக் கொடுத்த இலக்கணம். அந்த இலக்கணத்துக்கு எந்தப் பிறழ்வும் ஏற்படாமல் காத்த தொண்டர்களில் ஒரு தொண்டரா கவே தன்னை எண்ணிக் கொண்டார். இதனால் கே.ஏ. மணியம்மையாக இருந்தவர் ஈ.வெ.ரா. மணியம்மையாராக மாறினார். தொண்டர்கள் போற்றும் அன்னையாக வடிவெடுத்தார். தந்தை பெரியாரையும் ஒரு அன்னை நிலையில் இருந்து அக்கறையோடு பராமரித்தார்.
இவை தவிர வேறு எந்தக் கற்பனைகளுக்கும் இடமில்லாமல் வாழ்ந்த நிலையே வரலாறு நமக்குத் தரும் செய்தி.
கழகப் பொறுப்புகளில் தலைமை ஏற்க வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்ததில்லை. இதை "விடுதலை' பத்திரிகையில் அவரே குறிப்பிட்டுள்ளார். மக்களிடம் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பாதவருக்குப் பொறுப்பு கண்டு அச்சமே ஏற்படுகிறதாம். நல்லவர்களையும் சலனப் பட வைக்கும் ஆற்றல் பதவி, பொறுப்புகளுக்கு உண்டு என்பதால் எங்கே தன் மனமும் மாறிவிடுமோ என்று பயப்படுவதாகப் பேசுகிறார். ஆனால் அப்படி ஒன்றும் நிகழாது என்பதுதானே யதார்த்தம்.
முப்பது ஆண்டுகள், மூன்று மாதம், பதிமூன்று நாள்கள் ஐயாவின் நலன் பேணிய போதும் இயற்கை நியதியை மாற்ற இயலாமல் ஐயா மறைந்த பின் (24.12.1973) இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கழகத் தொண்டர்கள் கருதிய போது, “நாமும் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும்.
ஆனால் அது இரங்கல் கூட்டமாக இருக்கக்கூடாது.
உறுதிமொழிக் கூட்டங்களாக அமையவேண்டும்’’ என்று விரும்பினார். மேலும் அன்னாரின் மறைவு நாளை ‘தாய்மார்கள் தினம்’ -ஆக அனுசரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெண் கல்வி, வேலை வாய்ப்பு, விதவை மறுமணம், சொத்துரிமை போன்றவற்றிற்கு வித்திட்டவரின் மறைந்த நாளை மகளிர் உரிமை பெற எழுச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் உணர்ச்சி பெறும் நாளாகக் கொள்ள வேண்டும் என்பதே அன்னையின் நோக்கம். மண்ணுலகை விட்டுச் சென்றவர்களுக்காகச் செய்யப்படும் கருமாதி போன்ற சடங்குகளுக்காக அல்ல என்பதையும் அழுத்தமாகவே பதிவு செய்தார்.
நியாயம் கேட்டு மறியல் போராட்டம், மொழி உரிமைப்போர், கைதாகிச் சிறை இருத்தல், சொற்பொழிவுகள் என்பதாகவே இவரின் வாழ்நாள் சென்றன. இவருக்குத் தெரியாமல் இவரின் பாதுகாப்புக்காக ஐயா ஒதுக்கி வைத்திருந்த சொத்துகளையும் தனக்காக எடுத்துக்கொள்ளாமல் ‘பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக் கழகம்’ (23.09.1974) என்ற அமைப்பை நிறுவி, தற்போது ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடக்க வழிவகுத்திருக்கிறார். 1920-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதி பிறந்த இவர் அதே மாதம் 1978-இல் 16-ஆம் நாள் மாரடைப்பு நோயால் சென்னை, பொது மருத்துவமனையில் காற்றோடு கலந்துவிட்டார். கொள்கைகளால் இன்றும் வாழ்ந்து வருகிறார்.
பொதுவாக, பொங்கல் விழாவான ‘திராவிடர் திருநாள்’ விழாவில் ஏற்பாடு செய்யப்படும் கலை நிகழ்ச்சிகள் எழும்பூரில் நிறுவப்பட்டிருக்கும் ஈ.வெ.ரா. மணியம்மையாரின் உருவச் சிலைக்கு முன் ஆடியபடி பெரியார் திடலுக்குச் செல்வது தனிக்கவனம் பெறுகிறது.