இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இயற்கை வளமிக்க பசுமை நிறைந்தது மணிப்பூர். இம்மாநிலத்தின் இரண்டு பகுதிகளான மணிப்பூர் ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதி ஆகியவை முக்கியமானவை. உலகத்தி லேயே மிகப்பெரிய சந்தையை முழுக்க முழுக்க பெண்களே நிர்வகிக்கும் சிறப்பு பெற்ற மாநிலம். இயற்கை அழகுக்கும், கைத்தறிப் பொருட்களுக்காகவும் உலகத்தையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த மணிப்பூர் இன்று பெரிய சீர்கேட்டைச் சந்தித்திருக்கிறது. உலக அரங்கில் ‘இந்திய நாட்டை’ தலை குனிய வைத்திருக்கிறது.
பழங்குடியின மக்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் எதிரான போரா கத் தொடங்கப்பட்ட கலவரத்தில் மனித உரிமை மீறல்களும், உச்சபட்சமாகப் பெண்கள் மீதான வன்முறையுமாக அரங் கேறிக் கொண்டிருக்கிறது. பொது மக்களைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கமும், பாதிக்கப்பட்ட மக்களுக் குத் துணையாக இருக்கவேண்டிய காவல்துறையும் இந்த வன்முறைக்குப் பச்சைக்கொடி காட்டியிருப்பது பெரிய கேடு. சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கும் சக பாலி−னத்தின் மீது நடத்தப் பட்ட அத்துமீறல்களைப் பார்த்து அமைதி காக்கும் அரசாங்கம், இந்தச் சுதந்திர நாளில் தேசியக் கொடி ஏற்றும் தகுதியை இழந்துவிட்டது.
குக்கி பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டுப் பாலி−யல் வன்புணர்வு செய்து, அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லப் பட்ட காணொலிக் காட்சி உலகெங்கும் வலைத்தளங்களில் தீபோல் பரவி விட்டது. இந்தக் கொடூர நிகழ்வுக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார் கள்? இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதுபோன்ற பல சம்பவங்கள் தினம்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்வதற்கு அந்த மாநில முதல்வரால் முடிகிறது என்றால் பெண்கள் குறித்த அந்த ஆணின் பிம்பம் என்னவாக இருக்கமுடியும்! இன்னொரு பக்கம் வெளிவரக்கூடாத இந்தக் காணொலியால் பல பிரச்சினைகள் உருவாகும் என்று பேசுவது கேவலத்தின் உச்சம்.
சிறுபான்மை மக்களான இசுலாமியர்களும், கிறித்தவர்களும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லி− இந்துவெறியைத் தூண்டுகின்றனர். ஒரு பழங்குடியினம் எப்படி வந்தேறிகளாக இருக்கமுடியும் என்ற அடிப்படைக் கேள்வியைக்கூட புரிந்து கொள்ள முடியாதபடி மக்கள் மதம் என்ற போதையில் மயங்கியிருக்கி றார்கள் என்பது வெட்கப்பட வேண்டிய உண்மை! தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், என்று சொன்ன இயேசுபிரானும் பெண்களின் குரலுக்குக் காது கொடுக்கவில்லை. சரி போகட்டும், கௌரவர் சபையில் அவமானப்படும் சூழலி−ல் இருக்கும் பாஞ்சாலி−க்கு ஆடையைச் சுரந்த கண்ணபெருமானும் இந்தக் கொடுமை யிலிருந்து பெண்களின் மானத்தைக் காப்பாற்ற முன்வரவில்லை. ஒரு தாயின் தீட்டு இரத்தத்திலி−ருந்து பிறந்து, அவளின் பாலான இரத்தத்தைக் குடித்து வளர்ந்த ஒருவன் பெண்ணின் உடலைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்துகிறான் என்றால் இங்கே மதங்களும், சட்டங்களும், அரசாங்கமும் எதற்கு? தனிமனித ஆராதனைக்கும், சொகுசுகளை அனுபவிப்பதற் காகவா? அரசு பற்றவைத்த நெருப்பு தொடர்ந்து பல மாதங்களுக்கு மேலாக ஜனநாயகத்தை எரித்துக்கொண்டிருக்கிறது. அதுவரையிலும் என்ன நடந்தது என்றே தெரியாததுபோல கள்ள மௌனம் காத்தவருக்கு பிரதமர் என்ற பொறுப்பை வழங்குவது சரியா, மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று அத்தனை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டும் எந்தப் பயனுமில்லை. கடந்த மே 3ஆம் தேதி முதல் குக்கி மற்றும் மெய்தேயி சமூகத்தினரிடையே வகுப்புவாத அடிப்படையிலான கலவரம் நடைபெற்று வருகிறது.
இந்து மதம் சார்ந்த மெய்தேயி மக்கள் பழங்குடியின ஒதுக்கீடு கேட்பதும், கிறித்தவ மதத்தைப் பின்பற்றும் குக்கி மக்கள் தங்கள் சலுகை பாதிக்கப்படுமோ என்று அச்சம் கொள்வதும் அரசால் தீர்த்து வைக்க முடியாத நிலையில் ஆட்சியை விட்டு விலகுவதுதானே தார்மீக அறம்!
தனிமனிதனுக்கோ அல்லது ஓர் இனத்திற்கோ இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அரசிடம் முறையிடுவார்கள். ஆனால் அரசே தன் சுய லாபத்திற்காக கலவரத்தீயை எண்ணெய் ஊற்றி வளர்க்கும்போது யாரிடம் முறையிட முடியும். இதனால் பரவலான வன்முறையும், தீவைப்புச் சம்பவங்களும் தொடர்கின்றன. பல உயிர்களை, உடைமைகளை இழந்து தவிக்கின்றனர் இருதரப்பு மக்கள். இதற்கிடையில் பல நூற்றுக்கணக்கான வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன. சொந்த மண்ணிலேயே மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.
மணிப்பூரில் உயிர் பிழைக்க முடியாதபடி மனிதம் செத்துக் கொண்டிருக்கிறது. முன்னரும் பழங்குடியினப் பெண் விமான நிலையத்திற்கு வந்தபோது அடித்தே கொல்லப்பட்டார் என்பதும் பேரதிர்ச்சி. இதில் கேவலம் என்னவென்றால் குடியரசுத் தலைவராக ஒரு பெண் அதுவும் பழங் குடியினப் பெண் இருக்கும் இந்தத் தேசத்தில் இப்படி நடக்கிறது, அதைப் பற்றிப் பேசாமல் வாய்மூடி இருப்பதற்கு ‘மக்களாட்சி’ என்ற பெயர்! 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைப்பதற்குப் பதிலாக ஏமாற்றமே மிஞ்சியது என்பதை ஜீரணிப்பதற்குள் மற்றுமொரு கலவரம்! தன் கண்முன் தன் குடும்பத் தாரைக் கொன்று, சிறு குழந்தையைப் பாறையில் அடித்து, கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை பாலி−யல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 11 நபர்களும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர், பா.ஜ.க. மேடையில் மரியாதை செய்யப்பட்டனர்.
பெண் உடல் மீது, குடும்ப கௌரவம், சமூகத்தின் மரியாதை என்று சொல்லி வைத்து வளர்ப்பவர்கள் இனிமேலாவது கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை யும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டியிருக்கிறது! ஆண் பிள்ளைகளை மோசமாக வளர்த்துவிட்டு, மகளிரை ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்பது அடாத செயல். சமூகத்தின் மூளையில் விஷமாகத் திணிக்கப்பட்ட ஆணாதிக்க மனநிலை எப்போது மாறும்!
ஒருவரை அல்லது ஓரினத்தைப் பழிவாங்கு வதற்கு அந்த வீட்டுப் பெண்களை நிர்வாணப் படுத்துவது, பாலி−யல் வன்புணர்வுக்கு ஆளாக்குவது எழுதப்படாத விதியாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தன் மனைவியின் இழப்பின் போது, "ஓர் இராணுவ வீரனாக இருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற முடிந்த எனக்கு என் மனைவி யைக் காப்பாற்ற முடியவில்லையே' என்று கதறும்போது ஆறுதல் உண்டா? தன் கணவனைக் கள்வன் என்று பொய்க் குற்றசாட்டு சொல்லித் தண்டித்துவிட்டான் பாண்டிய மன்னன் என்பதற் காக நீதி கேட்க வந்தாள் கண்ணகி. தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபித்து விடுகிறாள். தன் தவறை உணர்ந்த பாண்டியன் உடனடியாக உயிர் துறந்தான்.
அப்படிப்பட்ட மனசாட்சி இருக்கும் மனிதர் களை எங்கேயும் பார்க்க முடியாதா? தப்பான நீதி சொல்லக் காரணமாயிருந்த நிர்வாகிகளையும், அவர் கள் சார்ந்தோரையும், அவர்கள் இருந்த ஊரையும் தூய்மைப்படுத்த விரும்பிய கண்ணகி மதுரையை நெருப்புக்கு இரையாக்குகிறாள். அப்போதும், இந்த நெருப்பு யாரையெல்லாம் பொசுக்கக்கூடாது என்று பட்டியலி−டும்போது பெண்களைப் பொசுக்கக் கூடாது என்று கட்டளையிட்டதாக ஒரு பகுதி உண்டு.
தன் சொந்த வாழ்க்கையில் நேரடியாகப் பாதிக்கப் பட்டபோதும் நெறிமுறை தவறாத கண்ணகி எங்கே? பிரிவினைவாதத்தை வளர்த்து ஓட்டு வங்கி யைக் கைப்பற்ற விழையும் அரசாங்கம் எங்கே?
வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவு இன்று இந்த மண்ணில் பெண்கள் பல்வேறு வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலி−ருந்து சுற்றுலா வரும் பெண்களுக்கு, யாரும் இந்தியாவைப் பரிந்துரை செய்வதில்லை. மாறாக, பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடு என்று தடுப்பதை எண்ணிப் பார்க்கும்போது இந்த மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் இந்த மண்ணைப் பற்றி என்னவெல்லாம் கனவு கண்டிருப்பார்கள், அதை எப்படி இந்த ஆணாதிக்கச் சமூகம் குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது என்ற வேதனை உண்டாகிறது. கருவறையில் வைத்துப் பா−லியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமி, பாலியல் வன்முறைக்குப் பின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண் என்று கேவலப்பட்டு, உலகளவில் மகளிருக்குப் பாதுகாப்பற்ற பயங்கரமான நாடாக மாறியிருக்கிறது இந்தியா.
இவ்வளவு நடந்த பிறகு பெண்கள் மீது வன்முறை நிகழ்த்திய மனித விலங்கு களைக் கைதுசெய்ததாக வந்த செய்தியால் யாருக்கு என்ன பயன்? அவர்களின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின்றனர். இதற்குப் பின் சட்டம் தன் கடமையைச் செய்யும், குற்றவாளிகளுக்கு அதிக பட்சமான கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் எந்தப் பின்புலமும் இல்லாத தனிநபர் இத்தனை பெரிய வன்முறையை நடத்தி இருக்க முடியுமா என்ற கேள்விக்கு என்ன பதில்? இதுவரை இந்தியப் பிரதமர் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பதும், சமூக ஆர்வலர்கள் யாரையும் அனுமதிக் காமல் தடைவிதிப்பதும், பல நாள்களாக இணை யத்தின் சேவை முடக்கப்பட்டது என்பதும் யார் குற்றவாளிகள் என்பதை அப்பட்டமாகச் சொல்கிறதே!
உச்சநீதிமன்றம் தலையிட்டால்தான் குற்றம் குறித்துப் பேசப்படுமா?
இன்னமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நீடிக்குமானால் பெண்கள் இல்லாத உலகத்தில் ஆண்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்தப் பூமியில் பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லாத போது எப்படி வாழ முடியும்? ஒட்டுமொத்த ஆண் சமுதாயம் மன்னிப்பு கேட்டாலும் வரலாற்றில் படிந்த அழுக்கைக் கழுவவே முடியாது! உடனடியாக அரசியல் மாற்றம் ஏற்படாதவரை குஜராத்தில், மணிப்பூரில் நிகழ்த்தப்பட அநீதி இன்னும் மற்ற இடங்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும்!
அதற்குள் மக்கள் விழித்துக்கொள்வது, விழிப்புணர்வு பெறுவது அவசியம்...