திருமணம் முடிந்த ஏழாவது மாதத்தில் பார்வதி பிரசவித்தாள். அழுகைச் சத்தம் கேட்டதும், வாசலில் அமர்ந்திருந்த தந்தை, மனைவியை அழைத்துக் கேட்டான்: ""இதுக்கு அர்த்தமென்ன?''
""குழந்தை இறந்திடும்னு நானும் நினைச்சேன்.''
""ஆனா அது அழுறதைக் கேட்டயில்லியா? இதையும் கேட்டுக்கிட்டு குட்டப்பன் நுழைஞ்சு வர்றப்போ நீ என்ன சமாதானம் சொல்லுவே?''
""அவன் வெளியேறிப் போயிடுவான்.''
""அவமானமும் அழிவும் நுழைஞ்சு வரவும் செய்யும்.'' அவனுக்கு கோபம் வந்தது.
தாய் சோர்வுற்றாள். தந்தை சிந்தனையில் மூழ்கினான். ஆனால், அந்த புதிய உயிர் "கிள்ளே... கிள்ளே...' என்று அழுதுகொண்டிருந்தது.
கோபம் வந்த தந்தை, மனைவி காதில் கூறினான்:
""அது வாயை மூடு.''
""அதுவோட தப்பா?''
""தப்பு யாருதுங்கறதில்ல விஷயம். விளைவு அதுதான். அது இந்த குடும்பத்தை நாசமாக்கிடும்.''
""அதுக்காக...?''
தந்தை சிந்தனையில் மூழ்கியவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
வெந்நீர் இருந்த பாத்திரத்துடன் வேகமாகச் சென்றுகொண்டிருந்த பிரசவம் பார்த்த பெண் உரத்த குரலில் கூறினாள்:
""குழந்தையைக் குளிப்பாட்டிட்டு தாத்தாவுக்குக் காட்டுறேன். பிரசவம் பார்த்த பெண்ணுக்கான அன்பளிப்பை எடுத்து வைக்கணும்.''
அந்த பிரசவம் பார்த்த பெண்ணின் சதைப் பிடிப்பான கன்னத்தில் கையைப் பரப்பி ஒரு அடி கொடுத்துவிட்டு, "இதுதான் உனக்கான அன்பளிப்பு' என்று கூறுவதற்கு அவன் விரும்பினான்.
அப்படியொன்றைச் செய்யமுடிந்தால் சிறிதளவிலாவது நிம்மதி கிடைக்கும்.
மனைவியை அவன் இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் சென்று கூறினான்: ""இந்த கேவலமான குரல் அவனுடைய காதுல விழுந்தா, பிறகு... நாம தொலைஞ்சோம். ஒன்பது ரூபாய் பென்ஷன் பணத்திலும், ஏழு தென்னை மரங்களோட தேங்காய்கள்லயும் இந்த குடும்பம் வாழமுடிய
திருமணம் முடிந்த ஏழாவது மாதத்தில் பார்வதி பிரசவித்தாள். அழுகைச் சத்தம் கேட்டதும், வாசலில் அமர்ந்திருந்த தந்தை, மனைவியை அழைத்துக் கேட்டான்: ""இதுக்கு அர்த்தமென்ன?''
""குழந்தை இறந்திடும்னு நானும் நினைச்சேன்.''
""ஆனா அது அழுறதைக் கேட்டயில்லியா? இதையும் கேட்டுக்கிட்டு குட்டப்பன் நுழைஞ்சு வர்றப்போ நீ என்ன சமாதானம் சொல்லுவே?''
""அவன் வெளியேறிப் போயிடுவான்.''
""அவமானமும் அழிவும் நுழைஞ்சு வரவும் செய்யும்.'' அவனுக்கு கோபம் வந்தது.
தாய் சோர்வுற்றாள். தந்தை சிந்தனையில் மூழ்கினான். ஆனால், அந்த புதிய உயிர் "கிள்ளே... கிள்ளே...' என்று அழுதுகொண்டிருந்தது.
கோபம் வந்த தந்தை, மனைவி காதில் கூறினான்:
""அது வாயை மூடு.''
""அதுவோட தப்பா?''
""தப்பு யாருதுங்கறதில்ல விஷயம். விளைவு அதுதான். அது இந்த குடும்பத்தை நாசமாக்கிடும்.''
""அதுக்காக...?''
தந்தை சிந்தனையில் மூழ்கியவாறு சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.
வெந்நீர் இருந்த பாத்திரத்துடன் வேகமாகச் சென்றுகொண்டிருந்த பிரசவம் பார்த்த பெண் உரத்த குரலில் கூறினாள்:
""குழந்தையைக் குளிப்பாட்டிட்டு தாத்தாவுக்குக் காட்டுறேன். பிரசவம் பார்த்த பெண்ணுக்கான அன்பளிப்பை எடுத்து வைக்கணும்.''
அந்த பிரசவம் பார்த்த பெண்ணின் சதைப் பிடிப்பான கன்னத்தில் கையைப் பரப்பி ஒரு அடி கொடுத்துவிட்டு, "இதுதான் உனக்கான அன்பளிப்பு' என்று கூறுவதற்கு அவன் விரும்பினான்.
அப்படியொன்றைச் செய்யமுடிந்தால் சிறிதளவிலாவது நிம்மதி கிடைக்கும்.
மனைவியை அவன் இன்னொரு பக்கத்திற்கு அழைத்துச் சென்று கூறினான்: ""இந்த கேவலமான குரல் அவனுடைய காதுல விழுந்தா, பிறகு... நாம தொலைஞ்சோம். ஒன்பது ரூபாய் பென்ஷன் பணத்திலும், ஏழு தென்னை மரங்களோட தேங்காய்கள்லயும் இந்த குடும்பம் வாழமுடியுமா?''
"கிள்ளே... கிள்ளே...'
அவன் அதிர்ச்சியடைந்தான். அந்த அழுகைச் சத்தம் சற்று நின்றால் நன்றாக இருக்கும்.
""அதைக் கொல்லணுமா?'' மனைவி கேட்டாள்.
""பிறகு... நாம எல்லாரும் பட்டினி கிடந்து சாகணுமா?''
மனைவியிடம் கணவன் ரகசியமாக என்னவோ கூறினான்.
அந்தப் பெண் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
""என் பேரன்...''
""மண்ணாங்கட்டி...'' அவனுக்குக் கோபம் வந்தது. ""நான் இருந்தாதான் எனக்கொரு பேரன் இருப்பான்.''
முகத்தில் ஒரு மலர்ச்சியுடன் மல்லார்ந்து படுத்திருந்த பார்வதியைப் பற்றி மனைவி நினைத்துப் பார்த்தாள். பிரபஞ்சம் முழுவதும் கையில் கிடைத்துவிட்டதைப் போன்ற அந்த படுத்திருக்கும் நிலை...!
""அவளுக்கு கவலையில்ல.'' மனைவி தன் கணவனிடம் கூறி, புரியவைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள். ""அவ, பையன்கிட்ட சொல்லி ஒத்துக்க வைக்கலாம்.''
""இந்த விஷயத்தில மானமுள்ள எந்தவொரு ஆணும் ஒத்துக்க மாட்டான்டீ.''
பிறகும் சிறிது நேரம் ரகசியமான குரலில்
கூறினான். அப்போது பிரசவம் பார்த்த பெண், குழந்தையைக் குளிப்பாட்டி கொண்டுவந்தாள். அவளை நோக்கி நாலணாவை எறிந்துவிட்டு, குழந்தையைச் சற்று பார்க்கக்கூட செய்யாமல் தாத்தா வாசலுக்குச் சென்றான்.
நாலணா கிடைத்ததும், குழந்தையைத் தாத்தா பார்த்தாகிவிட்டது என்பதாக பிரசவம் பார்த்த பெண் நினைத்துக் கொண்டாள்.
பிரசவம் பார்த்த பெண் போய்விட்டாள்.
சுற்றிலும் அமைதி...
குழந்தையை அருகில் படுக்கச்செய்து பார்வதி புன்சிரிப்புடன் தூங்கிக்கொண்டிருந்தாள். தந்தை சென்று பார்த்தான். தாயிடம் என்னவோ முணுமுணுத்தான்.
அந்த பாட்டி, நின்று அழுதுகொண்டிருந்தாள்.
அவனுக்கு கோபம் வந்தது. அவளை முழங்கையால் குத்தி விலக்கிவிட்டு, அவன் அறைக்குள் நுழைந்தான்.
சிறிய மூக்கு, சிறிய வாய்... மூன்று விரல்களைக் கொண்டு சேர்த்துப் பிடித்துவிடலாம். அப்போது அவன் பார்த்தது ஒரு மூக்கையும் ஒரு வாயையும் மட்டுமே...
ஒரு சிறகடிப்பு! மீண்டுமொருமுறை சிறகடித்தது! சிறிய சிறகுகள் தாழ்ந்தன. அசைவற்ற நிலை...
தானும் தன்னுடைய குடும்பமும் தப்பித்தாகிவிட்டது என்ற மனநிம்மதியுடன் வெளியேறிச் சென்றபோது, வாசலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மனைவியிடம் அவன் கூறினான்:
""அவள் பிரசவித்தது ஒரு இறந்த குழந்தை... புரியுதா முட்டாளே?''
அந்த பாட்டியின் அழுகைச் சத்தம் சிறிதுநேரம் நீண்டு நின்றது.
அது முடிந்ததும், உள்ளேயிருந்து பார்வதியின் பதைபதைப்பு கொண்ட குரல் கேட்டது.
""அம்மா.. அம்மா... ஓடிவாங்க...''
தாய் எதற்காக ஓடவேண்டுமென்று அப்போது தந்தை நினைத்தான்.
மேலும் சிறிது நேரம் கடந்து சென்றபிறகு, பரபரப்பு உண்டானது. பக்கத்து வீட்டிலுள்ள பெரியவரும் மனைவியும் வந்தார்கள். பெரியவர் கூறினார்: ""ஏழாவது மாசத்துல பொறந்த குழந்தை உயிரோட இருக்காது.''
""அது ஒரு இறந்த குழந்தைதான்...'' பார்வதியின் தந்தையும் கூறினான்.
பிணத்தைப் புதைத்துவிட்டபிறகு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிழவரும் கிழவியும் திண்ணையில் ஏறியமர்ந்து, சற்று வெற்றிலை போட்டார்கள். உயிரின் நிலைத்து நிற்கும் தன்மையைப் பற்றி பொதுவாக இருக்கும் சிறிது தத்துவ ஞானத்தையும் கூறிவிட்டு, திரும்பிச் சென்றனர்.
பார்வதிக்கு வேதாந்தம் தேவையற்றதாக இருந்தது. அவள் அழுதாள். சிறிதுநேரம் கடந்தபிறகு, அந்த அழுகைச் சத்தமும் நின்றுவிட்டது.
சுற்றிலும் அமைதி... அப்போது தந்தைக்கு ஒரு சந்தேகம்... குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கிறதோ?
செவியைக் கூர்மைப்படுத்திக்கொண்டு நின்றான். இல்லை...
கஞ்சி குடித்து முடித்து, வெற்றிலை போட்டான். சிறிது உருளைக்கிழங்கு நடுவதற்கு இருந்தது.
அதை நட்பின். மண்வெட்டியில் இறுகப் பிடித்திருந்த மண்ணை வழித்து அகற்றிவிட்டு, திண்ணையில் வைத்தான்.
அந்த மண்வெட்டியால்தானே பேரனையும் புதைத்தான். அவன் மண்வெட்டியையே கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அந்த கருவி, ஒரு பிஞ்சுக் குழந்தையின் குரலை எழுப்புகிறதோ?
தேவையற்ற எதையும் நினைக்கக்கூடாது. அவன் உள்ளே சென்றான். பேரமைதி... மனைவி, கையைத் தலையணையாக்கிக்கொண்டு படுத்திருந்தாள். கண்களை மூடியிருக்கவில்லை. பார்வதி தேம்பி அழவில்லை.
அவன் வாசலில் வந்து அமர்ந்து, கால்களை ஆட்டியவாறு நினைத்தான்:
"இன்னும் இருநூற்றைம்பது உருளைக் கிழங்குகளை நடணும்.'
வெடித்து வரும் உருளைக்கிழங்குச் செடிகள் மனிதக்குழந்தைகளைப் போல அழுவதில்லை.
சிந்தனைகள் முட்டாள்தனங்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதைப்போல தோன்றியது. உள்ளே சென்றான். பொருட்கள் வைக்கும் அறை யிலிருந்த பெட்டியிலிருந்து சிறிது அவலை எடுத்து தட்டிலிட்டான். ஒரு பாதி தேங்காயைத் துருவி, சர்க்கரையைத் தூவினான். அனைத்தையும் கலந்து சேர்த்தான். மூன்று பகுதிகளாக்கி, ஒரு பகுதியை அவன் சாப்பிடடான். மீதியை மனைவிக்கு அருகில் கொண்டுசென்று வைத்தான். ""இதோ... உனக்கும் மகளுக்கும் உள்ளது.''
அப்போதும் மனைவி கையை தலையணையில் வைத்து, சாய்ந்து படுத்திருந்தாள். அவளுடைய கண்கள் அசையவில்லை.
அவன் அதைப் பார்க்கவில்லை. வாசலில் சென்று அமர்ந்தபோது, மருமகன் படியைக் கடந்து வந்துகொண்டிருந்தான்.
அவன் உள்ளே பார்த்து அழைத்துக்கூறினான்: ""குட்டப்பன் வந்திருக்கேன்டீ.''
உள்ளே சிறிய ஒரு முனகல் சத்தம்... மருமகன் வந்தவுடன் படுக்கையறைக்குதான் சென்றான்.
மகள் படுத்திருந்த அறையின் கதவுக்குப் பின்னால் தந்தை பதுங்கிநின்றிருந்தான். நகத்தில் ஒட்டியிருந்த சர்க்கரை துகள்களைத் துடைத்து நீக்கிக்கொண்டு, காதுகளைத் தீட்டிக் கொண்டான். அப்போது கேட்டது... மகளின் அழுகை.
""நான் தர்றதுக்கு எதுவுமே இல்ல.''
""குழந்தை எங்கே?''
மீண்டும் தேம்பியழும் சத்தம்...
""சொல்லு.''
""மாசம் முடிவடையாம இருந்ததால, குழந்தை இறந்து பிறந்துட்டது...''
""என்ன?'' குட்டப்பன் குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு பேசினான்: மாசம் முடிவடைஞ்சிட்டதுன்னு நம்ம ரெண்டுபேருக்கும் தெரியாதா?''
""தெரிஞ்சிக்கிட்டது தப்பா இருக்கலாம்.''
""முட்டாளைப்போல பேசாதே.''
சிறிது நேரத்திற்குப் பேரமைதி... தந்தையின் மனதிற்குள் என்னவோ வெடித்துச் சிதறுவதைப்போல தோன்றியது. பதைபதைப்புடன் மகள் கூறுவது காதில் விழுந்தது: ""தாய்க்கும் தகப்பனுக்கும் கெட்ட பேரு வரவைக்க வேண்டாம்னு நினைச்சிருக்கலாம்.''
அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
""அந்த கெட்ட பேரை நான் ஏத்துக்கறேன்...'' குட்டப்பனின் தொண்டை இடறியது.
நெஞ்சில் என்னவோ தைத்தது. தந்தை வெளியேறிச் சென்றான். தன்னுடைய நெஞ்சிலிருந்தும் தலையிலிருந்தும் காலிலிலிருந்தும்... எல்லா இடங்களிலிருந்தும் பிஞ்சுக் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்பதைப் போல தோன்றியது.
தனக்கு எதுவுமே தெரியாது என்பதைப்போல திண்ணையில் இருக்கும் மண்வெட்டியைப் பார்த்தபோது, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதையெடுத்து நிலத்தை நோக்கி எறிந்தான். தொடர்ந்து வேகமாக வெளியேறி நடந்தான்.
இவையனைத்தையும் பார்வதியின் அன்னை பார்த்துக் கொண்டிருந்தாள். மகள் ரத்தம் தோய்ந்த குழந்தையாக தன் மடியில் கிடந்து விளையாடிய அந்த காட்சி, அவளுடைய மனதில் தோன்றியது.
அவளுடைய கண் ஈரமாகவில்லை.
பதறாத பார்வையுடன், நடந்து விலகிப் போய்க்கொண்டிருக்கும் தன் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.