சென்னை பெரம்பூரில் பரதநாட்டியப் பேரரசர் ரவிச்சந்திரன் நடத்திவரும் அஞ்சலி நாட்டியாலயாவின் 27-ஆம் ஆண்டு விழாவும் சதங்கை பூஜையும் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் பேரரங்கில் வெகு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/danceschool.jpg)
சிறப்பு விருந்தினர்களாக ஆன்மீகச் சொற்பொழிவாளர் மா.கி.ரமணன், புற்று நோயாளிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் முனைவர் விஜயஸ்ரீ மகாதேவன், கவிதாயினி அமுதா உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
ஆடல், பாடல், நடனம், உலோகத்தால் ஓவியம் புனைதல், யோகா என பன்முகக் கலைஞராய்த் திகழ்கிறவர் ரவி. தமிழின் இசை மும்மூர்த்திகள் இயற்றிய தமிழ்ப் பாடல் களுக்கே தன் மாணவர்களைப் பயிற்றுவிக்கிறார். ஏராளமான தமிழ்க் கீர்த்தனைகளையும் இயற்றி இசையமைத்திருக்கும் ரவி, அந்தக் கீர்த்தனைகளுக்கான அபிநயங்களையும் மகிழ்வோடு பயிற்றுவிக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/danceschool1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/danceschool2.jpg)
அழகான மேடை. அரங்கு நிறைந்த கூட்டம். அன்பான வரவேற்பு. இனிமை ததும்பும் சூழல். முதலில் ரவிச்சந்திரன் அவர்கள் எழுதிய "நூறுகோடி சூர்யப் பிரகாசம்' உள்ளிட்ட பாடல்களைத் தம் மாணவியர் புடை சூழப் பாடி, நிகழ்வை இனிதாகத் தொடங்கினார், அவர் மகளும் நடன ஆசிரியையுமான கலைவாணி. இவரது பாடல்களை மறைந்த இசை விமர்சகர் சுப்புவே பாராட்டியிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
நடன நிகழ்ச்சி இனிதாகத் தொடங்க, மழலை முகம் மாறாத சின்னச் சின்ன மாணவியரும் கவித்துவம் பொங்கப் பேரழகாய் நடனம் ஆடினர். தீபங்கள் அணிவகுப்பதுபோல், பட்டாம்பூச்சிகள் ஒழுங்கமைவோடு சிறகடிப்பது போல, கால்முளைத்த மல்லிகை மொக்குகள் களிநடம் புரிவது போல், அவர்கள் அபிநயம் காட்டி ஆடிய காட்சி எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. அவர்களின் நடனத்திற்கு கானவேந்தர் தியாகராஜனின் செல்வப் புதல்வியான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி சாருகேசி தமிழ்ப் பாடல்களையும் தமிழ்க் கீர்த்தனைகளையும், தேர்ந்த கலைஞர்களின் இசைப் பின்னணியில் தேன்குரலில் பாடி செவிகளையும் மனதையும் ஒருசேர நனைத்தார்.
பரதம் ரவி அவர்களின் மகள் கலைவாணி, மருமகன் மனோஜ் ராஜ்குமார் என அவர்களின் குடும்பமே கலைத் துறையில் சாதித்துவருவது மகிழ்வுக்குரியது. ரவியின் ஐந்தாறு வயதே ஆன பேரனும் "கொன்னக்கோலில்' வித்தகம் காட்டக் கூடிய வகையில் வளர்கிறார். அன்று ஒரு பாடலையும் மழலைக் குரலில் பாடித் தமிழை மேலும் இனிப்பாக்கினார்.
வாழ்த்துரை வழங்கிய மா.கி.ரமணன், ""முயற்சியும் பயிற்சியும் இருந்தால்தான் நாட்டியத்தில் மிளிரமுடியும். இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் இத்தனை அழகாக ஆடுகின்றன என்றால், அவர்கள் இதற்காக நேரம் ஒதுக்கி, எடுத்துக்கொண்ட பயிற்சி தெரிகிறது. இவர்கள் நாளை உலக அரங்கில் ஆடுவார்கள்'' என்று வாழ்த்தினார்.
முனைவர் விஜயஸ்ரீ மகாதேவனோ, ""நடனம் என்பது தெய்வீகக்கலை. ஆடியவர்களின் அபிநயங்களில் தெய்வீகம் தெரிந்தது'' என்றார். மற்றவர்களும் உளம் நெகிழ்ந்து வாழ்த்தினர்.
நாட்டிய நிகழ்ச்சிக்கு பின்னணி இசை சேர்த்த கலைஞர்களும் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். நாட்டியம் ஆடிய குழந்தைகளுக்கு சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. ஏறத்தாழ நான்கு மணி நேரம், அவை யோரைக் கனவுலகில் மிதக்கவிட்ட நிகழ்ச்சி இது.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் பேத்தியைத் திருமணம் செய்துகொண்டவர் ரவிச்சந்திரன் என்பதால், அவருடைய குடும்பமே தமிழுணர்வில் ஊறிப்போயிருக்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாகவே பரதம் பயிற்றுவிப்பதோடு, அவர்களுக்கான பரத உடைகளையும் வாங்கிக்கொடுத்து, அவர்களை அரங் கேற்றமும் செய்துவருகிறது அஞ்சலி நாட்டியாலா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-10/danceschool-t.jpg)