விஞர் எம். சக்திவேலின் "புதிய வெளிச்சம்' கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மையில் பாடலாசிரியர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. சங்கத் தலைவர் தமிழமுதன், முனைவர் வ.மு.சே. ஆண்டவர் முன்னிலையில் நடைபெற்றது. பாடலாசிரியர் ஹிருதயாவின் உரையில் தெறித்த சாரலிருந்து...

*என்னுடைய ஞானத்தாய் கண்ணதாசன், ஞானத் தந்தை கவிஞர் திலகம் வாலி. உடல்நிலையோடு போராடிக்கொண்டிருக்கும் என் ஞான குருநாதர் புலமைப்பித்தன் ஆகியோரை வணங்கி என் பேச்சைத் தொடருகின்றேன். குருவை மறந்தால் வாழ்க்கையில்லை.

*கவிதை நூலை வெளியிட்டிருக்கும் கவிஞர் சக்திவேலைப் பாராட்டுகிறேன். சிறந்த கவிஞருக்கான அடையாளம் தெரிவதால் அவர் மீது அன்பு சொரிகிறேன். காரணம் இன்று நல்ல கவிஞர்கள் அருகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பளித்த என் அருமை நண்பரும் தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர் சங்கத் தலைவருமான தமிழமுதனைப் பாராட்டவேண்டும். பிற்காலத்தில் இந்த சங்கம் மிகப்பெரிய வரலாறாக மாறும். காரணம், ஒரு சங்கத்தை அமைத்து ஒருங்கிணைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்று அனைவருக்கும் தெரியும். அதிலும் அரிதார உலகில் சங்கத்தைக் கட்டமைப்பது எவ்வளவு பெரிய செயல்! சங்கத்தை உருவாக்கி, அதன் உயர்வுக்காக உழைக்கக்கூடியவர் தமிழமுதன். அவர் அற்புதமானவர்.

அவர் எனக்கு நண்பனாகக் கிடைத்தது, பெரும் பேறு. தனக்குக் கிடைக்கும் பாடலுக்கான வாய்ப்புகளை மற்றவர்களுக்குப் பெற்றுத்தருகிற பெரிய மனம் அவருடையது. எனக்குக்கூட அப்படிப்பட்ட குணம் கிடையாது. எனக்கு அவரைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருக்கிறது. அதேபோல அவருக்கு வாய்ந்த அவர் மனைவி கவிஞர் இசை, தனது கணவருடன் இணைந்து நிறைய உதவிகளைச் செய்யக்கூடியவர். இப்படிப்பட்ட இலக்கியத் தம்பதிகள் பாராட்டுக்குரியவர்கள்.

Advertisment

*நூலாசிரியர் சக்திவேலைப் பற்றி நேற்றுதான் எனக்கு தமிழமுதன் சொன்னார். அவரது கவிதைகளைப் படித்தேன். இன்றைய விஞ்ஞான உலகில் இது ஒரு வசதி. இந்த புத்தகத்தையே வாட்ஸ் அப்பில் அனுப்பினார்.

lly

இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பார்த்தேன். எதை எடுப்பதென்று தெரியவில்லை. அந்த நூலின் உள்ளே செல்வதற்கு முன்பாக இந்த திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தைப் பற்றியும், அதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு பற்றியும் சுருக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன். சங்கம் எப்படி சாத்தியப் பட்டது என்பது இங்கு இருக்கக்கூடிய சுதந்திரதாஸ் போன்ற சீனியர்களுக்குத் தெரியும். இருந்தாலும் ரொம்ப பேருக்கு தெரியாத ஒரு தகவலை, என் ஞானத் தந்தையான காவியக் கவிஞர் வாலி சொன்ன ஒரு தகவலைச் சொல்லுகிறேன்.

Advertisment

*இதற்கு முன், திரைப்படப் பாடலாசிரியர் களுக்கென்று ஒரு சங்கமே கிடையாது. காரணம், இசைக் கலைஞர்களுக்கென்று ஒரு சங்கத்தை எம்.பி. ஸ்ரீனிவாசன் அவர்கள் உருவாக்கினார்கள்.அது என்ன ஆனது தெரியுமா? இசைக் கலைஞர்களுக்கு முறையான ஊதியம் வேண்டும் என்று சங்கம் நினைத்தது. ஒரு புல்லாங்குழல் வாசிக்கும் கலைஞருக்கு எவ்வளவு ஊதியம், பாடகருக்கு எவ்வளவு ஊதியம், தபேலா வாசிப்பவருக்கு எவ்வளவு ஊதியம் என்று நிர்ணயம் செய்யவேண்டும் என்பதற்காகவே அவர் சங்கத்தை ஆரம்பித்தார். அந்த சங்கத்தை ஆரம்பித்த காரணத்தினாலே எம்.பி. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்பு இல்லை என்று சினிமா முதலாளிகள் மறுக்க ஆரம்பித்தார்கள்.

காரணம், அவர் முதலாளிகளுக்கு எதிராக நிற்கிறார் என்றும் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்துப் போராடுகிறார் என்றும் அவரை ஓரம்கட்டினர்.

இதனால் தஞ்சாவூர்க்காரரான ஸ்ரீனிவாசன் படாதபாடு பட ஆரம்பித்தார்.

அவர் அற்புதமான பாடல்களைத் தந்தவர். அதை மறந்து அவரை இந்தத் திரையுலக முதலாளிகள் ஓரம் கட்டினார்கள். அந்த காலகட்டத்திலே தான் வாலி அப்பா அந்தக் கதையைச் சொன்னார், தி.நகர் பனகல் பார்க்கிலே வாலி, ஆலங்குடி சோமு, நடிகர் பாண்டிய ராஜனுடைய மாமனாரான அவினாசி மணி, உள்ளிட்டோர் கூடினார்களாம். இசைக் கலைஞர் சங்கம் பற்றியெலாம் விவாதித்தார்களாம். அந்த காலகட்டத் தில் கண்ணதாசனுக்கு ஒரு பாட்டுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம், இவர்களுக்கெல்லாம் முன்னூறு ரூபாய், இருநூறு ரூபாய்தான் அன்றைக்கு கொடுப்பார்கள். அதனால் இசைக் கலைஞர்கள் சங்கத்தைப் போல் நாமும் திரைப்படப் பாடலாசிரியர் சங்கத்தை ஆரம்பிக்கலாமா? என்றெல்லாம் விவாதித்திருக்கிறார்கள். அடுத்த நாள் விவாதத்தைத் தொடரலாம் என்று சொல்லிவிட்டுக் கலைந்து போயிருக்கிறார்கள். மறுநாள் காலையில் காலையில் வாலி, பனகல் பார்க் போனபோது ஒருவரையும் காணோமாம். உடனே பாண்டிபஜாரில் இருந்த ஒரு கடைக்குப் போய், அங்கிருந்த அவினாசி மணியிடம், "என்னப்பா மணி, என்னாச்சு, இன்னிக்கு மீட்டிங்ன்னு சொன்னீங்களே?' என்று கேட்டிருக்கிறார்.

அவினாசி மணியோ, "அண்ணே மன்னிக்கணும் அண்ணே. இதுபோல் சங்கத்தை நம்மால் அமைக்க முடியாது. காரணம் நாம் நான்கு பேரும் சேர்ந்து பேசிய விஷயம் வெளியில் கசிந்துவிட்டது. உடனே தயாரிப்பாளர்களில் முக்கியமான இரண்டு பேர், நீங்கள் எல்லாம் சங்கம் ஆரம்பிக்கிறேன் என்று சொன்னால் உங்கள் யாருக்கும் பாட்டுக்கான சான்ஸ் கிடையாது என்று மிரட்டியிருக்கிறார்கள். அதனால் சங்கமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம்' என்று, சொல்லியிருக்கிறார் பரிதாபமாக. இந்தக் கதையை வாலி, மேடையிலும் சொல்லியிருக்கிறார்.

இப்படி சங்கம் வைக்க விரும்பிய பாடலாசிரியர்கள் ஒரு காலத்தில் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

*இப்படிப்பட்ட திரையுலகில் தமிழமுதன் சங்கத்தைச் சாதித்திருக்கிறார். ஒருநாள் தமிழமுதன் தன்னுடைய நண்பர்களான பாடலாசிரியர்களை கூட்டிக்கொண்டு வந்தார். இப்படி ஒரு பாடலாசிரியர் சங்கத்தை அமைக்க இருக்கிறோம். சீனியரான உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டார். அன்றிலிருந்து அவரோடு கைகோத்து நடக்கிறேன். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு 25,000 ரூபாய் கேட்கிறார்கள். இதை தொடக்ககால பாடலாசிரியர்களால் எப்படி கொடுக்கமுடியும்? இதைக் கேட்டு குரல் எழுப்பியதால், அவர்களை நான் பகைத்துக் கொண்டேன். அதைப் பற்றி எனக்குச் சிறிதளவும் கவலை இல்லை. இதை யெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட போராட்டத்தை கவிஞர் வாலியும், அவினாசி மணியும் ஆலங்குடி சோமுவும் சந்தித்திருக் கிறார்கள். இதையெல்லாம் தாண்டி இன்று நாம் பாடலாசிரியர் சங்கத்தை நடத்துவது பெரும் சாதனை. சங்கத்தின் தூணாக, அரணாக நிற்கும் தமிழமுதனைப் பாராட்டவேண்டும். இந்த சங்கம் அங்கீகாரம் பெற, நம்மால் ஆனதை எல்லாம் செய்வோம். திரைப்படப் பாடலாசிரியர்களுக்காக, அவர்களின் வாழ்க்கைக்காக இந்த சங்கம் உரியதைச் செய்யும். செய்யவேண்டும்.