சங்க இலக்கியப் புதையலின் ஒரு பகுதியான எட்டுத் தொகை நூல்களில் ஒன்று அகநானூறு. இளமையில், மனிதர் மனங்களில் இயல்பாகக் கிளர்ந்தெழும் அகஉணர் வுகளை அகநானூற்றுப் புலவர்கள் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். தமிழ் மண்ணின் திணை வரையறைக்கு உட்பட்டு, நிலத்தின் தன்மையையும், இதனிலுறையும் விலங்கினம், பறவையினம் குறித்த தப்பாத குறிப்புகளுடன் இவர்கள் யாத்துள்ள கவிதைகள், தமிழரின் இலக்கிய மரபுக்கு சான்றாய் மட்டுமல்ல, அவர்தம் வாழ்க்கை நெறிக்கான விளக்கங்களாகவும் அமைந்துள்ளன.
தமிழர் தம் மண்ணின் மீது எத்துணை ஆழமான காதல் கொண்டிருந்தனர் என்பதை இக்கவிதைகளைப் பயில்பவர் எளிதில் உணர்வர். மண்ணின் பெருமையைச் சொல்லித்தான் இக்கவிதைகளனைத்தும் துவங்குகின்றன. அகத்தின் அகத்தே மண் மீதான காதலும் அகத்தின் புறத்தே தான் ஆண்-பெண் இரு பாலரிடையே முகிழ்த்தெழும் வேட்கையும் அமைந்திருப்பதை நாம் காணும்போது தமிழர் தம் மண்ணுக்குக் கொடுத்திருந்த முன்னுரிமை நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது. அகத்தினுள்ளும் அகம்-புறம் என்ற இரு கூறுகள் பொதிந்திருப்பதை திறனாய்வாளர்கள் அறிந்து தெளிதல், இலக்கிய நயம் துய்க்கப் பேருதவி செய்யும்.
சங்க இலக்கியங்கள் நாயகனைத் தலைவன் என்றும், நாயகியைத் தலைவி என்றும் குறிப்பிடுகின்றன. பதின் வயதுகளில் அவர் மாற்றுப் பாலினரைக் காணும்போது கிளர்ச்சியுறுகின்றனர். காதல் வயப்படுகின்றனர். நாள் முழுவதும், திங்கள் முழுவதும் ஏன் வாழ்க்கை முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோமா என்று எண்ணுகின்றனர். இந்தப் பெண் அல்லது ஆணே தன் வருங்கால இல்லற வாழ்க்கையில் நற்றுணையாய் வரத் தகுந்தவர் என்று முடிவுசெய்கின்றனர். இரவிலோ, பகலிலோ மறைவிடங்களில் சந்தித்துக் கூடுவதும் ஊடி மகிழ்வதும், ஊர் அலருக்கு வழிவகுக்க, தலைவியின் தாய் அதிர்ச்சியுறுகிறாள்; புலம்புகிறாள்; பரிதவிக்கிறாள். மகளைக் குறித்து தாய் இவ்வாறு கூறுகின்ற கவிதைகள் அகநானூற்றில் பலப் பலவாய்ப் பொதிந்திருப்பதைக் காணலாம். தலைவனும் தலைவியும் காதலுணர்வு மிகவோங்கிய நிலையில் அவர் உடன்போகினர் என்றால், அது தாயின் மனதிற்கு ஊர் அலரினும், அதிகமான வலியைத் தரும். இவ்வகைக் கவிதைகள் அனைத்தும், தலைவன் தலைவியருக்கிடையேயான காதலை மட்டு மல்ல, ஒரு தாய் தன் மகள்மீது கொண்டிருக்கக்கூடிய அன்பையும் பாசத்தையும் சிறப்பித்துக் கூறுவது, அகநானூறுக்குப் பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாகும்.
தோழியருடன் சிறிது நேரம் பந்து எறிந்து விளை யாடினும் "உய்ங்கின்று, அன்னை! என்மெய் என்று நெற்றியில் வியர்வை முத்துக்கள் படர என்னிடம் கூறிய மகள், இன்று, இற்செறிப்பைக் கடந்து, தன் காதலனுடன் வேறிடம் சென்றுவிட்டாளே, அவள் மென்மையான அடிகள் நடக்கவும் வல்லதோ' என்று ஒரு அன்னை புலம்புவதை கவிதை (அகம், 17) சொல்லுகின்றது.v காதலனுடன் செல்லத் துணிந்தாளாயினும், மகள் அவனால் அன்பாகப் பேணப்பட வேண்டும் என்ற ஏக்கத்தை, "அவளைஇத் தன் மார்பு துணையாகத் துயிற்றுக' என்ற வரிகள் மூலம் இன்னொரு தாய் வெளிப்படுத்து கிறாள் (அகம், 35). "போதல் செல்லா... உயிரொடு' துன்புறு கின்ற இன்னொரு தாய், "என் மகளைப்' பிரிந்து நான் மெலிந்து, தீயிலே வேவது போலவும் நெஞ்சமொடு கண் துயில் பெறேனாய், கனவிலும் அவளையே காண்கின் றேனே' என்று அழுகிறாள் (அகம், 55) "பொற்கலத்திலே தேனும் பாலும் கலந்து அவளுக்கு உணவூட்ட முனையும் வேளைகளிளெல்லாம் உண்ணாது, அடம்மேற் கொண்டாளாய் ஓடிய என் அச்சிறுமகள், யாங்கு வல்லுனள் கொல்' (அகம், 105) என்று திகைப்புற்றுப் பதறும் இன்னொரு தாய் நம் நெஞ்சினை அறுக்கத் தவறவில்லை.
மகளைப் பிரிந்த தாய்க்கு, மகள் தன் சிறு பருவத்தில் நிகழ்த்திய விளையாட்டுக்களெல்லாம் நினைவிற்கு வரும். எதைப்பார்த்தாலும் அதைத் தன் மகளோடு தொடர்புபடுத்தி மனம் வாடுவது மனித இயல்பு. மகள், மணற்பரப்பில், விளையாடிய ஒரு பொம்மையை எடுத்து வைத்துக்கொண்டு, "தருமணற் கிடந்த பாவைஎன் அருமகளே' என்று கண்ணீர் வடிக்கின்றாள் ஒரு தாய் (அகம், 165).
தான் சீர்குலைந்த நிலையைத் தன் ஊரோடு சேர்த்துப் பார்த்து, ஊர் முழுமைக்குமாய்த் தவித்துப் போகிறாள் ஒருத்தி. தேர்கள் ஓடும் தன் ஊர்த் தெருக்களில், எப்போதும் இசைவாணரின், பாணரின் இசையொலி கேட்டுக் கொண்டிருக்குமே, அஃதெல்லாம் இன்று என் மகளின் பிரிவினால், மாறிவிட்டதே, இவ்வூரே, தனக்கு விருப்பமான சிறந்த ஒன்றை இழந்துவிட்டதே என்பதை "ஊர் இழந்தன்று, தன் வீழ்வுஉறு பொருளே' என்ற சொற்கள் மூலம் வெளிப்படுத்துகின்றாள் (அகம் 189).
கபிலரின் 203-வது கவிதை நம் கண்களில் பெரு வெள்ளத்தைத் தோற்றுவிக்கும் ஒன்றாகும். தாயின் அரவணைப்பை மீறி, கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு தான் தேடிக் கொண்ட காதலனுடன் இல்லை நீங்கிய மகளை நினைந்து அவள் புலம்புகின்றாள். "ஊர் அலர் அறிந்த நிலையிலும் இவளைக் கேட்டால், நாணுவாளே என்னெறண்ணி நான் வாளாவிருந்தேன். ஆனால் மகளோ, தன் களவினை அன்னை அறிந்தால், அவள் தன்னை எதிர்ப்பாளே என்று கவலை கொண்ட வளாய், ரகசியமாய் காதலுனுடன் வீட்டைப் பிரிந்து விட்டாள். என்னுடைய உண்மையான, அவளுக்கு ஆதரவான மனநிலையை அவளுக்கு உணர்த்தவேண்டி, அக்காதலரது வழியிலே, அவர்களுக்கு முன்னரே சென்று, அவர்களை விருந்தாக ஏற்று, உண்பித்து, அவர்கள் தங்குமிடத்திலும் இருத்தி உதவ என் மனம் விழைகின்றது' என்ற தன் உள்ள வேட்கையை "முன்னர்....
செல்விருந்து ஆற்றித் துச்சில் இருத்த, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனைகெழு பெண்டுயான் ஆகுக...' என்று சொல்லி ஆற்றிக் கொள்கின்றாளே, இவள் தான் எவ்வளவு உயர்ந்த தாயாய் மிளிர்கின்றாள்! தாயின் மாண்பு ஒரு புறமென்றால் இன்னொரு புறம், சங்ககாலச் சமூகம், பெரிதும் காதலை, அதாவது களவியலை அங்கீ கரித்தே வந்திருக்கின்றது என்ற பேருண்மையும் புலப்படுகின்றது.
ஒரு மகள் காதல் வயப்பட்டு காதலனுடன் வீட்டையும் ஊரையும் நீங்கினாள். வீட்டில் செல்வமாய் வளர்ந்தவள் அவள். அவளது தேவைகளும் எதிர்பார்ப்புகளும், தாயாலும் தந்தையாலும் நிறைவேற்றப்பட, வாடல் என்ப தையே உணராத பசுந்தளிராய் இருந்தவள். ஆனால் ஆண்மகன் ஒருவன்பால் காதல் வயப்பட்டவுடன், அவர் தனது செல்வநிலையை முழுவதுமாகத் துறந்து, காதலனுடன், இன்னல்கள் மிகுந்த எதிர்காலத்தைத் தேடி அமைத்துக் கொள்கிறாள். நெடிய நடை அவளைத் துவளச் செய்கிறது. தாகத்தில் அவளது நா வறண்டுபோக, காதலன், வெய்யிலில் காய்ந்த நிலத்தைத் தோண்டு கின்றான். ஆனால் அங்கு ஊறுவதோ உப்புநீர். அதனையும் இவ்விளைய மகள் அள்ளி அள்ளி அருந்துகின்றாள்.
இதைத் தன் மனக்கண்ணில் கற்பனை செய்து பார்த்த ஒரு தாயின் நிலையை மதுரை செம்பூதனார் என்ற புலவர்
வெயில் தின வருந்திய, நீர்மருப்பு ஒருத்தல்
பிணரழி பெருங்கை புரண்ட கூவல்
தெண்கண் உவரிக் குறைக்குட முகவை
அறனிலாளன் தோண்ட, வெய் துயிர்த்தும்
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ’’
என்ற காலத்தால் அழியா வரிகள் மூலம் பதிவு செய்துள்ளார் (அகம், 207).
இன்று காதலனுடன் பிரிதலை மேற்கொண்டுவிட்ட மகள் சிறுவயதில், தாயின் வீட்டில் உணவுண்ண மறுத்து, அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் வேளைகளில், எவ்வாறு அவளிடம் தாய், “இந்தக் கவளம் அன்னை தருவது; அடுத்தது தந்தை தருவது என்றெல்லாம் கனிவாகப் பேசி மகளை உணவுண்ண வைப்பாள் போன்ற நினைவுகளெல்லாம், அத்தாயை வாட்டுகின்றன. அகநானூற்றின் 219-வது கவிதையின், "என் பாடு உண்டனை ஆயின் ஒருகால் நுந்தை பாடும் உண்' என்ற வரிகள், ஒரு தாயின் பரிதவிப்பை எவ்வளவு ஆழமாக விவரிக்கின்றது!
ஒரு மகள் காதலை முன்னிட்டு தாயைப் பிரிந்துவிட, தாய் அவள் துணிவு அறிந்தனென் ஆயின்......
........ ............... ................................................
இனிதினிற் புணர்க்குவென் மன்னோ - துளிஇன்று
திருநுதல் பொலிந்தவென் பேதை
வருமுலை முற்றத்து ஏழுறு துயிலே!
என்று பாடுகிறாள் (அகம், 263). இதன் பொருள், இவளது காதல் உறுதியை யான் முன்னமேயே அறிந்திருந்தேனாயின், அவளது காதலன், என் மகளினது வளர் முலைப் பரப்பிலே இனிதாகத் துயிலும் வண்ணம் அவனையே இனிமையுற அவளுக்கு மணம் செய்து வைத்திருப்பேனே, என்பதாம்.
அகநானூற்றுக் கவிதைகளை ஆழமாக நாம் பயிலும் போது, இன்னொரு உண்மை புலப்படுகின்றது. கல்வியில் தேர்ந்த அப்பெருங் கவிஞர்கள், தாயைத் தலைவியாகக் கொண்ட ஒரு வீட்டின் இயல்புகளைப் பேசவில்லை. ஏனெனில், அவர்கள் விவரிக்கின்ற குடும்பச் சூழல்கள னைத்திலும் ஒரேயொரு மகள் தான் காணப்பெறுகின் றாள். இரண்டோ அல்லது மூன்றோ பிள்ளைகள் உடைய குடும்பங்கள் பல இருந்திருந்தாலும், அவர்கள் தங்கள் கவிதைக் கருவாய் அமைத்துக் கொண்டது தாய்- ஒருமகள் இருவருக்கிடையேயான உறவு மட்டுமே. இக்கவிஞர்கள் தாயாரைப் பாடவில்லை; தாய்மையைப் பாடியுள்ளனர்.
இது அகநானூற்றின் தனிச்சிறப்புக்களில் ஒன்றாகும்.
தாய்மையின் ஒரு பரிமாணமாக 145-வது கவிதை யைக் குறிப்பிடலாம். காதலனுடன் களவொழுக்கத்தில் திளைத்த மகளை, ஒரு தாய் இற்செறிக்கிறாள், அதாவது வீட்டுக்காவலில் வைக்கிறாள். மேலும் மகள்மீது கொண்ட சினம் முற்றிய நிலையில், அவள் மகளது முதுகில் அடித்தும் விடுகிறாள். இற்செறிப்பையும் மீறி, மகள் வீட்டை நீங்கிய பின்னர், அவளது மனதில் சோகம் கவிழ்கின்றது. மகளை அடித்த நிகழ்வு அவளுக்குள் குற்ற வுணர்வை விதைக்கிறது. என் மகளை அடித்த கையை, இப்போது வெட்டினால்தான் என்ன? என்று நொந்து கொள்கிறாள் (அகம், 145).
ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம்,
எனக்கு உரித்து’ என்னாள், நின்ற என
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே!
என்று ஒரு தாய் ஓலமிடுவது, படிப்பவர்களது நெஞ்சங் களை இளக்கிக் கரைத்திடும் என்பதில் ஐயமில்லை.
எப்பொருளுக்கும் மறுபக்கம் என்ற ஒன்றுண்டு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அகம் வடித்த கவிஞரில் பலர், தலைவியின் தாய் குறித்தும் நிறையப் பேசியுள்ளனர்; பாடியுள்ளனர்.
அகம் கவிதை எண் 92, தலைவியின் அழகை, “நேர் இறை நெடுமென் பணைத்தோள்’’ (அழகிய முன்கையினையும் நீண்ட மெல்லிய மூங்கிலினையொத்த தோளையும்) என்று விவரிக்கின்றது. “முருந்தேர் முறுவல், இளையோள் பெருந்தோள் (அகம் 193 - மயிலிறகு குருத்தினைப் போன்ற பல் வரிசையினையும் பெருத்த தோள்களையும் உடையவள்) என்று மதுரை மருதனிள நாகனார், தனது கவிதைத் தலைவியின் அழகைக் குறிப்பிடுகின்றார்.
கயமனாரின் ஒரு கவிதை (அகம், 7) "முலை முகம் செய்தன' என்ற சொற்களோடு துவங்குகின்றது. அவளது முலைகள் முகம் கூட்டி நிறைந்திருந்தன என்று உரையா சிரியர் கூறுவர். மாமூலனார் (அகம் 61), தலைவி, பொதினி (பொதிகை மலை) அன்ன.... வனமுலை உடையவள் என்று உவமிக்கின்றார். புலவர் குறுவழுதியாரின் (அகம் 150)... வம்புவிடக் கண்ணுருத்து எழுதரு முலை (கச்சுக் கிழியுமாறு கண்கள் உருப்பெற்று எழுந்த முலை) என்ற சொற்றொடர் காளிதாசனின் சாகுந்தலத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றது.
இந்நாடகத்தின் முதற்காட்சியில் சகுந்தலை, தன் தோழி பிரியம்வதையிடம், "எனது மார்க்கச்சு இறுக்கமாக இருக்கின்றது. இதனைச் சற்றே தளர்த்திவிடுவாயாக' என்று கூற, தோழி பிரியம்வதை, "மார்க்கச்சு சரியாக இருக்கின்றது, ஆனால் உன் மார்புகள் தாம் பெரியதாய் உள்ளன, இதற்கு நீ உன் இளமையைத் தான் கடிந்து கொள்ளவேண்டும்' என்று கூறுவாள்.
இத்தகைய பெண்ணொருத்தியை, காளையர் கண்டால் காதல் வயப்படாதிருந்து விடுவாரோ? இருவரிடை யேயும் காதல் மலர்கிறது. அவர்களது காதலுக்குத் துணை யாகத் தலைவியின் தோழி நிற்கின்றாள். பகற்குறி, இரவுக்குறி அனைத்தையும் அறிந்தாளாய், தோழி, தலைவன் தலைவியை அடிக்கடி சந்தித்துக் கூடி ஊடி மகிழ உதவுகிறாள். சில நாட்கள் கழிந்த பின்னர், அத்தோழியே, தலைவனிடம், "நீ இவ்வாறு இரவில் வந்து தலைவியைச் சந்திப்பது முறையன்று; அவளைத் திருமணம் கொள்ள நீ உடனடியாகக் கருத வேண்டும்' (அகம் 12) என்று சொல்லி அவரது களவொழுக்கத்தை முறைப்படுத்து கிறாள். “நீ இரவிலே வரும் உப்பள வழி, முதலைகளும், சுறா மீன்களும் உடையதாகும். பேராபத்து நிறைந்த இந்த வழியைத் தவிர்த்து, நீ பகலில் வந்தால்தான் நாங்கள் நிம்மதியாக இருப்போம் என்று சொல்லும் (அகம் 80) தோழியும் உண்டு. நாளை, இவளும் (தலைவி) யானும் காவல் கண்ணினம் தினையே என்று (அகம் 92) தாயை ஏமாற்ற தினைப்புனக்காவல் வழி கண்டுபிடித்து உதவும் நல்ல தோழியரும் உண்டு!
அகநானூற்றுக் கவிஞர்கள் தாயாரைப் பாடவில்லை; தாய்மையைப் பாடியுள்ளனர் என்று முன்னர் சொல்லியதைப் போலவே இங்கும் அக்கவிஞர் தோழி என்ற பெண்ணைப் பாடவில்லை; தோழமையைப் பாடியுள்ளனர் என்பது கண்கூடு.
காதல் வயப்பட்டோருக்கே உரிய துணிவோடு காதலன், தினமும் காதலியைச் சந்திப்பதன் விளைவாய் ஊர் அலர் எழுகிறது. அதுகுறித்து கவலுற்ற தாயிடம், தோழி சென்று, “அவரின்; மகனை நின் மகள் பார்த் திலள்’’ என்று சொல்லி (அகம் 190) அவளைத் தேற்றுவது நல்லதொரு நாடகம்! தாயைச் சமாதானப்படுத்தும் பொறுப்போடு, குறித்த காலத்தே வாராதிருந்த தலை வனை எண்ணி வாடும் தலைவியைத் தேற்றும் பொறுப்பும் சேர்ந்து கொள்கின்றது. உன் “பணைத்தோள் குரும்பை, மென்முலை, அரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ்இருங் கூந்தல்’’ இவையனைத்தையும் அவர் மறப்பவர் அல்லர் என்று தலைவியின் அழகைப் புகழ்ந்துகூறி, அவ்வழி அவளைத் தேற்ற முனையும் தோழியின் உளவியல் அறிவு நம்மை மலைக்க வைக்கின்றது!
தலைமகள், தலைமகனுடன் உடன்போக்கிலே சென்றுவிட முடிவுசெய்யும் வேளையில், "தோழி, “நீவிர் செல்ல இருக்கின்ற காடு இனியது ஆகுக!' (அகம் 283. வண்ண மூதாய், தண்ணிலம் வரிப்ப/ இனிய ஆகுக தணிந்தே/ இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே) என்று சொல்லி அவ்விருவரையும் வாழ்த்துகிறாள். “வாராய் தோழி, முயங்குதும் பலவே’’ (அகம் 285) என்று சொல்லி, தலைவியை பலமுறை ஆரத்தழுவி பிரியாவிடை கொடுக்கும் தோழி, நல்ல தோழமைக்குச் சான்றாவாள்.
"வசந்தம் வந்துவிட்டது, தம் கைகளை விரித்தபடி வண்ணத் திருவிழாவிற்காக, மலர்கள் தயாராக இருக் கின்றன. ஆனால் நீ வரவில்லை. நண்பகல் வேலைகள் நீளமாய்த் தெரிகின்றன. வயலில் கோதுமை அறுவடை நடக்கின்றது. ஆனால் நீ வரவில்லை. வானில் மேகமூட்டங் கள். மண், இருகரம் நீட்டி மழையை வரவேற்கின்றது. ஆனால் நீ வரவில்லை' என்று பஞ்சாபியப் பெண் கவிஞர் அம்ரிதா பிரிதம் (1919-2005) பாடுகின்றார். இவ்வரிகளில் பொதிந்து கிடக்கும் மெல்லிய காதலுணர்வுகளை. அப் படியே பிரதிபலிக்கின்றன அகநானூற்றின் 115, 227 இரு கவிதைகள்.
குறித்த காலத்தே வந்து தலைவியைச் சந்திக்கத் தவறிய தலைவனை நினைந்து, “நோயிலராக நம் காதலர்என்று தோழி தலைவியிடம் கூறுவது அவளது நல்லெண்ணத் தைப் புலப்படுத்துகின்றது. தோழியின் நல்லெண்ணத் தையும், மனவாட்டத்தையும் புரிந்து கொண்ட தலைமகள், தோழியைத் தேற்ற முனைவதுதான், அவர்களுக்கிடை யேயான தோழமையின் உச்சம். ஔவையாரின் பதினொன் றாம் எண்ணுடைக் கவிதை தலைவி, தலைவன் வரும்வரை ஆற்றியிருப்பதாகச் சொல்லி தோழியின் வருத்தத்தைப் போக்க முயலும் நிகழ்வைப் படம்பிடித்துக் காட்டு கின்றது. துயருற்றவரினும், அவருக்கு அன்புடையார் அதிகமாக வருந்துவர் என்னும் உலகியல் உண்மையும், இதனால் உணரப்படும். அஞ்சியத்தை மகள் நாகையார் என்ற பெண்பாற் புலவர் தனது கவிதையில் கூறும், "காதல அம்தோழீ இ!' என்ற சொற்றொடர், தலைவி தோழி பால் கொண்டிருந்த நட்பைச் சுட்டுகிறது.
எருமை வெளியனார் என்ற புலவரின், 73-ஆம் எண்ணுடை அகக்கவிதை, காதலனைப் பிரியப்பெற்ற ஒரு தோழியைப் பற்றிப் பாடுகிறது. தலைவியின் காதலனைப் போலவே, அவள் தோழியின் காதலனும் பிரிந்தான். குறித்த பருவம் வந்தும் அவர்கள் இருவரும் வராத நிலையில், தோழியின் வருத்தம் கண்டு தலைவியும் கலங்கினாள்.
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் ஆறுஅன்று என்னா வேறுஅல் காட்சி இருவேம் நம்படர் தீர வருவது காணியவம்மோ என்று தலைவி கூறுவதன் பொருள், “அச்சமுற இரங்கற் தக்கவளாகிய இவள்தான் என்னாகுவளோ என்று என்னு டைய நிலை கண்டும் உறுதியுடன் நிற்கும் என் தோழியே, நம் இருவருடைய வருத்தமும் தீருமாறு நம் காதலர்கள் வருதலைக் காணுதற்கு எழுந்து வருவாயாக!’’ என்பதாம்.
தோழமையின் பல பரிமாணங்களையும் நுணுகி ஆராய்ந்து அவற்றை கவிதைப்படுத்தியுள்ள இக்கவிஞர் போற்றத் தகுவர்.
தலைவி-தலைவன்-தாய், தலைவி-தாய்-தோழி போன்ற முக்கோண மனித உறவுகளைத் தொடர்ந்து, நாம் இன்னொரு முக்கோண உறவையும் அகநானூற்றில் காணலாம். தலைவி-தோழி இருவரின் அறவுரையாலும் அன்புரையாலும், தலைவன் களவொழுக்க வட்டத் தினின்றும் வெளிவந்து தலைவியைத் திருமணம் செய்து கொள்ளுகின்றான். சின்னாளில், அவன் தலைவியின் உறவில் சலிப்புற்றானாய், பரத்தையரை அல்லது பொருட் பெண்டிரை நாடுகிறான். ஆக, தலைவி-தலைவன்-பரத்தை என்ற முக்கோணமும் அகநானூற்றில் பரந்து காணப் படுகின்றது. பரத்தையரை, பண்டைத் தமிழ்ச் சமூகம் இற்பரத்தையர், காதற் பரத்தையர், சேரிப்பரத்தையர் என்றெல்லாம் வகைப்படுத்தியிருந்தது. அக இலக் கியத்தில் பரத்தையரின் குரலுக்கும் இடஒதுக்கீடு செய்துள்ளது, கவிஞரின் விரிந்த பார்வைக்கும் பெருமைக்கும் சான்று.
அகநானூற்றின் இருபத்தி ஆறாவது கவிதை பரத்தையரை, “நல்லோர்’’ என்று குறிப்பிடுகிறது. இங்கு நல்லோர் என்பது “அழகிய பரத்தையர்என்ற பொருள் தரும் என்று சில உரையாசிரியர்கள் கூறுப. 146-வது கவிதையில், தலைவி, பரத்தை குறித்து "வயங்கிழை யார்கொல் அளியள் தானே'என்று சொல்லுகின்றாள்.
தலைவனின் மாய வார்த்தைகளையெல்லாம் நம்பிய இப்பெண்ணும் இரங்கத் தக்கவளே என்று குறிப் பாலுணர்த்துகிறாள். பெண்மையின் சிறப்பியல்புகளை முற்றிலுமாக உணர்ந்து தெளிந்த கவிஞரால் மட்டுமே இத்தகு செய்யுள் செய்திட இயலும். தலைவன் உறவு கொண்டுள்ள பரத்தை ஒருத்தி, தெருவில், அவனது புதல்வனைக் கண்டு அன்புடன் கொஞ்சுகிறாள். இந் நிகழ்வைக் கண்ட தலைவி, அப்பரத்தையிடம், "மாசுஇல் குறுமகள்!... நீயும் தாயை இவற்கு' என்று சொல்லும் காட்சி 16-வது கவிதையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று சில தலைவியர் மிகவும் நல்லவரா கவும், தலைவனின் சொற்களை எளிதில் நம்பி விடுப வராயும் தெரிகின்றனர். எடுத்துக்காட்டாக, தலைவன் பரத்தையோடு புனலாடியதை அறிந்த தலைவி அவனிடம் விளக்கம் கேட்கும் வேளையில், அவன் நா கூசாமல் அது வேறு யாரோ என்று சொல்ல, இதனை அறிந்த பரத்தை, இந்நிகழ்வை தன் பாங்கியரிடம் சொல்லிச் சிரித்தாள் என்று பாடும், இடையன் நெடுங்கீரனாரின் 166-வது கவிதையைச் சொல்லலாம். அகநானூற்றில், பரத்தையின் குரலும் இவ்வாறு பல இடங்களில் ஒலிப்பது, இதன் தனிச்சிறப்பு. ஆனால் பாங்கியரோடு சிரித்தலில் அமைதி பெறா பிறிதொரு பரத்தை ஒருத்தி, அவளைத் தலைமகள் தூற்றினாள் என்ற செய்தியை அறிந்தவுடன், "இனி (நமக்கு) நாண் உண்டோ' எனக் குமுறுகிறாள். அஃது மட்டுமல்ல, "தலைவனை, அவன் மனைவி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, எனது கூந்தலால் கட்டி, என் மார்பகச்சிறையில டைப்பேன்' என்று சூளுரையும் செய்கின்றாள் (அகம், 276).
இதற்கிடையே தோழியும் தலைவியிடம், "அவள் (பரத்தை) நோக்கியவள் எவரிடத்தும், அவளது கண்கள் சென்று தைத்தலில் தவறுவதேயில்லை' (அகம். 326) என்று கூறுகின்றாள் (“பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே!’’).
அகநானூற்றுக் கவிதை 106-ல் காணப்படும் பரத்தை, மேற்கூறிய அனைவரினும் மிகுந்த வெஞ்சினம் கொண்டவளாய்; தனது தோழியிடம் சொல்லுகின் றாள், "நம்மால் தலைவியை ஒன்றும் செய்ய இயலாது. ஆனாலும், பாணன் அடிக்கும் மத்தளத்தின் கண்போல, அவள் தன் வயிற்றிலே அறைந்து கொள்ளும்படியாக நாமும் சிறிதுபொழுது அவள் வீட்டருகே சென்று உலவி வருவோமா,'
“. . . . . . . . . . . . உய்யா மையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி
பரத்தையின் இத்துணை இகழ்ச்சிகளுக்கும் ஆளான தலைவி தன் சினத்தையும் ஆற்றாமையையும் தலைவன்பால் காட்டுகின்றாள். "இதுவோ மற்றுநின் செம்மல்?' என்ற கேள்விக்கணையை அவள் தன் தலைவன்பால் எறியும்போது (அகம் 306,) அவளோடு சேர்ந்து நாமும் பதறுகின்றோம்.
ஒரு தலைவன் பரத்தையர்பால் கட்டுக்கடங்கா பற்றுக் கொண்டவனாய் சித்தரிக்கப்படுகின்றான்.
அவன் உறவு கொண்டுள்ள இற்பரத்தை, காதற்பரத்தை இருவரிடையே பூசல் முளைக்கிறது (அகம் 336). இற்பரத்தையானவள், தன் தோழியர் கேட்கும்படியாக உரத்த குரலில், "விரைவில் நான் அவனை முழுவதுமாய் வயப்படுத்துவேன். அவன் என்னையே சுற்றித் திரியுமாறு செய்வேன். அங்ஙனம் செய்யேன் என்றால், என்னுடைய முன்கையிலே செறிந்துள்ள வளைகள், சிதைந்து அழிந்து போவதாக' என்று முழங்குகின்றாள் (“உடைகவென் நேரிறை முன்கை வீங்கிய வளையே!).
இற்பரத்தை, காதற்பரத்தை இருவர்பாலும் இன்பம் பெற்றும் மனநிறைவு கொள்ளா கீழ்ப்பண்புடைத் தலைவன் ஒருவன் சேரிப்பரத்தை ஒருத்தியின் பாலும் மையல் கொள்ள (அகம் 376) காதற்பரத்தையானவள் மிகுந்த வருத்தமுற்று, அவன்பால் அன்பாகக் கூறுவதாக அமைந்துள்ள ஒரு கவிதை, புலவர்கள் பரத்தமை குறித்த சமூகச் சீர்கேடுகளையும் சிக்கல்களையும் எவ்வாறு அணுகியிருந்தனர் என்பதற்குச் சான்றாகும். "உன்னையும் ஒருத்தி (சேரிப் பரத்தை) கவர்ந்து கொண்டவள் என்பதற்காக, “நும்வயிற் புலத்தல் செல்லேம், அதாவது உன்னை வெறுக்கமாட்டோம், உன் பொருட்டு எம்மிடை படர்ந்த பசலையையும் நீ காணலாம்' என்று தலைவனை நினைந்து ஒரு காதற் பரத்தை கூறும்போது, பரத்தையர் மனதிலும் அபூர்வராகமாக காதலுணர்வு கிளர்ந்து எழுவதுண்டு என்ற உண்மையை அறிய முடிகிறது. இத்தகு காதற்பரத்தை, பிறிதொரு கவிதையில் (அகம், 396) தலைவனிடம், "நின் மனையோள், நின்னை என்னிடமிருந்து கவர்ந்து கொள்ளலையும் அஞ்சா நிற்பேன்' என்ற சொற்களூடாக தன் மன உறுதியைப் பிரகடனம் செய்கின்றாள் (மனையோள் வவ்வலும் அஞ்சுவல்). ஒரு பரத்தையைத் தலைவன் தழுவியபோது, அவளைத் தலைவி பழிக்கிறாள். ஆனால் தலைவன், அப்பரத்தையையும் பிரிந்து வேறொரு பரத்தையிடம் நாட்டம் கொண்டபோது, முதற்பரத்தை, தலைவியிடம், "யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர் திருநுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே' என்று கூறி அங்கலாய்க்கிறாள் (அகம் 186). தலைவிக்கு அவளது கணவனே பகையாகிப் போன அவலத்தை நயம்பட உரைக்கின்றது இக்கவிதை.
பரணரின் 196-வது கவிதை, பரத்தையிற் பிரிந்த கணவன் திரும்பி வந்தபோதும், அவனை ஏற்றுக்கொள்ள மறுத்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. நவீன பெண்ணியல் சிந்தனைகளோடு ஒத்துப்போகக் கூடிய இக்கருத்தை, சங்க காலத்திலேயே இப்புலவர் ஆராய்ந்து பார்த்திருப்பது வியப்பாக இருக்கின்றது. "அவளைத் (பரத்தையைத்) தழுவிய நின் மார்பினை யாம் தொடவே மாட்டோம்; எம் அருகே நீ வாராதிருப்பாயாக' என்று அவள் தலைவனை ஒதுக்கியபோது, அப்பேதையின் நெஞ்சம் எவ்வளவு புண்பட்டிருக்க வேண்டும் என்பதை நம்மால் உணரமுடிகிறது.
அகநானூறு ஓர் இலக்கியக் களஞ்சியம். ஆண்-பெண் இரு பாலரின் அகஉணர்வுகளை மட்டுமல்ல, அகம் சார்ந்த புற உணர்வுகளையும் இலக்கியத் திரையில், காலத்தை வென்ற ஓவியங்களாகத் தீட்டி நமக்கு அளித்துள்ளது. தாயார், தலைவியர், தோழியர், பரத்தையர் உட்பட்ட பெண்டிர் மற்றும் ஆடவர் அனைவரது உளவியல் பாங்கினையும் அவர் எதிர்கொள்ள இருக்கின்ற வாழ்வியல் சிக்கல்களையும், தெளிவாய் விளக்குகிறது. இவ்வளவு ஆழமான, நுண்ணிய அலசலும் ஆய்வும், வேறெந்த மொழி இலக்கியங்களிலும் காணக்கிடைத்தல் அரிது. இவ்விலக்கியத்தில் உரையாடுவது தனிப்பட்ட மாந்தரல்ல. தாய்மை, தோழமை, பரத்தமை போன்ற கருத்தியல்களே உரையாடுகின்றன. இதனைப் புரிந்து, அந்தப் பின்புலச் சிந்தனையோடு இந்நூலைத் திறனாய்வு செய்யும்போது, அது நமக்கு மேலும் பலப்பல உண்மைகளை வெளிப்படுத்தும் என்பது திண்ணம்.