உளவியல் ஆய்வுகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் பழைமையானது. என்றோ தமிழன் கண்டறிந்த உளவியல் உண்மைகள் எல்லாம் ஒவ்வொன்றாக இன்று ஆய்வுமுடிவுகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவானது, வாரத்தில் ஒருசில முறைகளாவது தம் துணையை அன்பாய் வருடுவது, ஆசையாய் அணைப் பது, வாஞ்சையாய் முத்தமிடுவது உள்ளிட்ட அன்பான உறவில் தோய்வதால், மனைவிக்கு மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது என்கிறது.
ஒருவரை ஒருவர் அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனநோயற்று இணையர் இன்பமாக வாழலாம் என்கிறது இவ்வாய்வு. இதனைப் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே கண்டு உரைத்தவன் தமிழன்.
இணையருக்கு மனநோய் எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்று வினாக்களுக்கு இணையர் ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே காரணம் என்கிறது தமிழ் புலவர்கள் கண்டறிந்த உளவியல். அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் உளவியலையும் அத்துடன் மருத்துவத்தையும் சேர்த்தே பேசும் பண்டைய தமிழ் இலக்கியங்களை இன்னும் நாம் கூர்ந்து கவனிக்கவில்லை.
சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதில் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.
இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச் சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக் குக் குளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ’புணர்தல்’ என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம்
உளவியல் ஆய்வுகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் பழைமையானது. என்றோ தமிழன் கண்டறிந்த உளவியல் உண்மைகள் எல்லாம் ஒவ்வொன்றாக இன்று ஆய்வுமுடிவுகளாக உலா வந்து கொண்டிருக்கின்றன. சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவானது, வாரத்தில் ஒருசில முறைகளாவது தம் துணையை அன்பாய் வருடுவது, ஆசையாய் அணைப் பது, வாஞ்சையாய் முத்தமிடுவது உள்ளிட்ட அன்பான உறவில் தோய்வதால், மனைவிக்கு மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது என்கிறது.
ஒருவரை ஒருவர் அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனநோயற்று இணையர் இன்பமாக வாழலாம் என்கிறது இவ்வாய்வு. இதனைப் பன்னெடுங் காலத்திற்கு முன்னரே கண்டு உரைத்தவன் தமிழன்.
இணையருக்கு மனநோய் எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்று வினாக்களுக்கு இணையர் ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே காரணம் என்கிறது தமிழ் புலவர்கள் கண்டறிந்த உளவியல். அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் உளவியலையும் அத்துடன் மருத்துவத்தையும் சேர்த்தே பேசும் பண்டைய தமிழ் இலக்கியங்களை இன்னும் நாம் கூர்ந்து கவனிக்கவில்லை.
சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதில் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.
இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச் சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக் குக் குளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ’புணர்தல்’ என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர். ஆதலால் ’இருத்தல்’ என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ’ஊடல்’ என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோ கடலில் சென்ற தலைவன் வருகைக்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பாள் தலைவி. அதனால் ’இரங்கல்‘ என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு ’பிரிதல்‘ என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.
குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகிய திணைப் பாடல்களைக் காட்டிலும் பிரிதலை உரிப்பொருளாகக் கொண்ட பாலைத் திணைப் பாடல்களும் ஊடலை உட்பொருளாகக் கொண்ட மருதத் திணைப் பாடல்களும் பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது.
சங்க இலக்கியத்தில் ‘பசலை நோய்‘ என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். பசலை என்பது உணவு, உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி, மேனி இளைத்து, கருத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே சங்கச் சான்றோர் பசலை என்றனர் சாதாரணமாக ஒருவரது மேனி கருத்து இளைப்பதற்கும் காதல் கொண்டவரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் அவரது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய். மற்றவரது நோய் உண்டு, உறங்கிக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரை அனுபவத்தவர்களுக்கு நன்கு புரியும். இதனை நீர் இறைக்காத கேணியில் நீரின் மீது படர்ந்து இருக்கும் பாசியைப் போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.
“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலைக் காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விடுவழி பரத்த லானே’’ (குறுந்தொகை-399).
காதல் என்பது நோயா? ஆம் நோய்தான். நோயும் மருந்தும் இரண்டும் ஆவது காதல். ஆமா காதல்தான் நோயைத் தரும். காதல்தான் நோய்க்கு மருந்தையும் தரும். அதனால்தான் திருவள்ளுவரும் நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவதுபோல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய் என்கின்றார். இதனைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார். சான்றுக்கு ஒன்று இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது. காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்’’ என்று தலைவி காம மிகுதியால் புலம்புவதை,
“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து’’ (குறள் - 1183)
என்று வடித்திருப்பார்.
“அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார்.
இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது’’ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை நயமாகக் கூறுவாள் வள்ளுவரின் வாக்கில். இதோ அது,
“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது’’ (குறள் - 1185)
மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது இன்னும் சுவையானது. ’’விளக்கு மறைவினைப் பார்த்துக் கவியக் காத்திருக்கிற இருளைப் போல, தலைவனுடைய தழுவுதல் எப்போது மறையும் என்று பார்த்து என் உடலைத் தழுவ, பசலைக் காத்திருக்கிறது’’ என்று தலைவி வருந்தும் குறட்பா பின்வருவது.
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு’’ (குறள் - 1186)
அதுமட்டுமா? ’’புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த) தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டதுபோல வந்து பரவிவிட்டதே’’ என்றெல்லாம் தலைவியைப் புலம்ப வைத்த தென்றால் அது நோய்தானே?
‘என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது’ என்று ஒருத்தி, “அது கொள் தோழி காம நோயே’’ என்று ஒருத்தி, நோய் தந்தனனே தோழி’’ என்று ஒருத்தி, வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்று இந்நோய்’’ அதாவது வெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவதுபோல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்கிறதே’ என்று ஒருத்தி இப்படி காம நோய் கண்ட சங்கப்பெண்டீர் பலரின் புலம்பல்கள் இவை.
“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி’’ என்று பெருங்கதை கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? ’உள்ள நோய்’, ’வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆனனா நோய்’, ’ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய்’, என்றெல்லாம் கடுமையாகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர்.
இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக் காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.
ஒரு பாலை நிலத்தலைவி கிட்டத்தட்ட மனநோயாளி யாகவே (ஹிஸ்டீரியாபோலவே) தலையில் முட்டிக் கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் ஐயோ! என்நோயை அறியாது உலகோர் எல்லாம் நிம்மதி யாகத் தூங்குகின்றனரே என்று அலறிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்ரூபமாகக் காட்டமுடியுமா என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.
“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே’’ (குறுந்தொகை - 28)
மெல்ல மெல்ல உயிரைப் வதைக் கும் மன நோய் இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன் தம் கடன் முடிந்துவிட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி நோய் தீர்த்த ஆதி மருத்துவன் அவன்.
இந்நோய்க்குப் பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை, ’’மருந்துபிறி தில்லை யவர்மணந்த மார்பே’’ என்று தலைவியும், ‘தன்நோய்க்குத் தானே மருந்து’ என்று தலைவனும் கூறுவதாக சங்கப் பாடல்கள் வாயிலாக தமிழ் மருத்துவ ஆய்வு அன்றே சுட்டுகிறது. இதை இன்றுதான் நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக் கழகம்.
உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது வான் மறை கண்ட வள்ளுவரின் வரிகள். இதோ அவை,
“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து’’ (குறள் - 1102)
இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன்; குறிப்பாக மனவியல் அறிந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்கவேண்டுமாம்..
’’பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ’’ (குறுந்தொகை - 156)
பிரிந்தவர் கூடிப் புணர்வதைவிட சிறந்த மருந்து காதல் நோய்க்கு வேறுஉண்டா? என்று பாடல் புனைகிறான் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?
’’வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு’’ (குறள் - 1108)
காற்றுக்குக் கூட இடம் கொடாது முயங்க வேண்டும், அந்த இனிமை ஒன்றே காதலர்க்குக் காதல் நோயைப் போக்கும் அருமருந்து என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). உடல் மன நோய், நோய்க்கான காரணம் அதற்கான மருந்து என்று எல்லாவற்றையும் பேசிய சங்கத்தமிழனும் வள்ளுவனும் ஐந்நூறு இணையரைப் பார்க்கவில்லை. ஆய்வு செய்யவில்லை. அறிக்கை விடவில்லை. கவிதை பாடினார்கள். காதல் கவிதை பாடினார்கள். காதலோடும் தாய்மையோடும் இவ்வுலக மக்கள் நோயின்ற வாழ்வதற்கான வழிகளையே சொல்லிலிச் சென்றுள்ளனர். அவற்றை நாம் அகப்பாடல் என்றும் காமத்துப் பால் என்று ஒதுக்கி வைத்துவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று கொண்டு இருக்கின்றோம்;
நிறைவாக…..
சங்கப் பாடல்களில் 78 விழுக்காட்டுப் பாடல்கள் அகப் பாடல்களாக அதாவது காதல் பாடல்களாக உள்ளன. வாழ்வியலை அகம் புறம் என்று வகுத்துக் கொண்ட சங்கத்தமிழன் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று உரக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடனும்.. மனைவியை கவனிக் காமலே விட்டு விட்டு மனநோயாளி (ஹிஸ்டீரியா) என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதைவிடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள். இது நம் பாட்டன் பூட்டனின் மருத்துவம் மட்டுமல்ல ஜூரிஜ் பல்கலைக் கழக மருத்துவர்களின் ஆய்வு முடிவும். இதனைச் சிந்தித்து அன்றே எண்ணற்ற அகப்பாடல்கள் வாயிலாக அறிவுறுத்திய ஆதித் தமிழன் ஆகச் சிறந்த மன நல மருத்துவன். அதனால்தான் அவன் அன்பான உறவையே மருந்தாக எண்ணி, அதன் மகத்துவத்தை இதயம் வருடும் பாடல்களால் ஏந்தியிருக்கிறான்.