காதலர் தினம் என்றாலே, இந்துத்வா ஆசாமிகளான காவி களுக்கு மிரட்சி வந்துவிடுகிறது. அந்த மிரட்சி, ஆத்திரமாக வடிவெடுக்க.... கும்பல் கும்பலாகக் கிளம்பிவிடுகிறார்கள்.

நாய்களுக்கும் கழுதைகளுக்கும் திருமணம் செய்துவைப்பதோடு, கோழிக்கும் வாத்துக்கும்கூட கலப்புத் திருமணம் நடத்துவது... எங்காவது இளம் ஜோடிகள் சுற்றுகிறார்களா என்று தேடிப்பிடித்து, அவர்களை மடக்கி வைத்துக்கொண்டு மிரட்டி, அவர்களிடம் மஞ்சள் கயிறைக் கொடுத்து, "ம்... தாலி கட்டுங்கள்' என்று கயிறைக் கட்டச் சொல்லி, புகைப்படம் எடுத்து வெளியிடுடுவது....

சில நேரம் ஜோடிகளைத் தாக்கி வன்மம் கக்குவது என்றெல்லாம் இந்துத்துவாவின் பெயரில் காவிகள் தொடர்ந்து அடாவடியில் இறங்குவதைப் பார்க்கமுடிகிறது.

கலாச்சாரக் காவலர்கள் என்ற பெயரில் இப்படி அடாவடியில் இறங்கும் அவர்களுக்கு உண்மையான காதலர்களின் இதய உணர்வுகள் புரிகிறதா? என்று தெரியவில்லை.

Advertisment

பொது இடங்களில் எல்லை மீறுகிறவர்களைக் கண்டிப்பதில் தவறு இல்லை. அது பிப்ரவரி 14- ல் மட்டுமல்ல. பொதுவெளியில் எப்போது, யார் எல்லை மீறினாலும் அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை.

ff

Advertisment

ஆனால் "தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்' என்பதுபோல் இளம் ஜோடி களைத் துன்புறுத்துவதும் தண்டிப்பதும் கொடும் வன்முறையாகும். இப்படி சட்டத்தைத் தனி நபர்கள் கையில் எடுக்க, எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

காதல் என்பது அவ்வளவு மோசமான கெட்ட வார்த்தையா? நடுங்க வைக்கும் கொடுஞ்செயலா?

காதலர் தினம் என்பது கலாசார சீரழிவின் அடையாளமா? அவரவரும் மனதைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

காதலை இளைஞர் உலகமே பிப்ரவரி 14-ல் மகிழ் வோடு கொண்டாடு கிறது. இந்த மாதத் திற்கே காதலர் மாதம் என்று பெயர் வைத்தும் சிலர் செல்லம் கொஞ்சுகிறார் கள். பிப்ரவரி 14 என்றாலே பலரின் நினைவுகளில் ரோஜாக்கள் மலர்கின்றன. மனதில் நறுமணம் வீசுகிறது. இதயம் மல்லிகைக் காடாக மாறிவிடுகிறது. இசைவெள்ளம் எங்கிருந்தோ ததும்புகிறது.

‘காதலே காதலே என்னை உடைத்தேனே

என்னில் உன்னை அடைத்தேனே

உயிர் கட்டி இணைத்தேனே’

-என்ற முணுமுணுப்பிற்குள் நினைவுகளை மூழ்கடித்தபடி நெகிழ்ந்தும் கரைந்தும் உருகியும் மகிழ்கிறார்கள்.

காரணம் காதல், மானுடம் வடிவமைத்துக் கொண்ட அன்புணர்வின் திருநாள். மனிதனின் ஆதி உணர்ச்சியான ஐம்புலன் கிளர்ச்சிக்கு, கொடுக்கப்பட்ட அழகியல் வடிவமே காதல். மிருகத்தனத்தோடு இச்சையை அணுகாமல், மிருதுவாக விழைவை வெளிப்படுத்தும் நேர்த்தியான டெக்னிக் அது.

ஆதிகாலத்தில் உடல்வெறிக்கான வடிகாலாக அது இருந்தது. நாகரிகம் வளரத் தொடங்கியபோது அது காதல் என்ற பெயரில் நிரல்படுத்தப்பட்டது.

உலகம் காதலை மிருதுவாக அணுகுவதற்கு முன்பாகவே, நம் தமிழினம் காதலை இதயத்தால் கொண்டாடியது. பல நாடுகளிலும் பல சமூகங் களிலும் உடலியல்ரீதியான வன்முறை போலக் கையாளப் பட்ட கிளர்ச்சி உணர்வு, காதல் என்ற உயர் மனப் பாங்குடன் கட்டமைக்கப்பட்டு, தமிழினம் கொண்டா டிக்கொண்டு இருக்கிறது.

நம் தமிழ் இலக்கண இலக்கியமும் அகம்புறம் என்று வாழ்வை இரண்டாகப் பிரித்து, அகவாழ்வில் காதலுக்கு அதிக இடமளித்தது.

’ இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து’ என்கிறார் வள்ளுவர்.

காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும். மற்றொரு பார்வை, அந்த நோய்க்கு மருந்தளிக்கும் என்று, அன்பின் மயக்கத்தில் காதலுக்கு விளக்கவுரை அருளினார் வள்ளுவர்.

அதே வள்ளுவர் காதலை வினோதத் தீ என்றும் சொல்கிறார். அது என்ன தீயில் வினோதம்?

அந்தத் தீயை விட்டுக் கொஞ்சம் நகரத் தொடங்கி னால் அது சுடத் தொடங்கும். மாறாக அந்தத் தீயை நெருங்கினால்... நெருங்க நெருங்கக் குளிரும் என்கிறார்.

அப்படியொரு தீயை, காதல் தீயை அவள் வைத்திருக் கிறாள். இப்படியொரு தீயை எங்கிருந்து வாங்கி வந்தாள் என்று அவர் வியந்து வியந்து நம்மையும் வியக்க வைக்கிறார்.

’நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்.’

-இப்படியெல்லாம், அறிவியல் கோலோச்சும் முன்பாகவே சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நம் தமிழ்ச் சான்றோர்கள் காதலை வியந்து வியந்து போற்றி இருக்கிறார்கள்.

காமம் என்ற சொல்லுக்கே அன்று காதல் என்பதாகத்தான் பொருள் இருந்தது. காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் பாய்வதல்ல. அது ஒருவரை ஒருவர் வேட்டையாடிக் குதறுவதும் அல்ல. ஒருவருக் காக ஒருவர் மெழுகுவர்த்தியாய் உருகிக் கரைவது என்று தமிழ்ச்சமூகம் அன்றே உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கிறது.

ஆக, காதலை வாழ்வோடு இணைத்துக் கொண்டா டிய தமிழினம், உலகிற்கே இதில் முன்மாதிரியாக இருக்கிறது என்பதுதான் உயரிய உண்மை.

பெண்ணை கசக்கி முகர்ந்து தூக்கி எறியும் பண்பாடு நம்மிடம் இல்லை. ஆணும் பெண்ணும் ஒருவரிடம் ஒருவர் மயங்கி, மனம் கலந்து, உடல் கலந்து, உயிர்கலந்து வாழ்வதே பேரின்பம் என்ற எண்ணத்தை, நம் முன்னோர்கள் விதைத்து வந்திருக்கிறார்கள்.

ஆக காதலிலும் நாகரிகத் தைப் பேணியது நம் தமிழினம்தான்.

*

அதேநேரம், உலக நாடுகள் பலவற்றிலும் காதல் என்பது உடல் வேட்கை என்ற எண்ணமும், ஆணின் உடல் பசியைத் தீர்த்துக்கொள்ள படைக்கப் பட்டவர்களே பெண்கள் என்ற எண்ணமும் ஆணாதிக்கத்தின் அடிப்படையில் இன்னமும் கோலோச்சிக்கொண்டு இருக்கிறது.

அதனால் ஆணின் அந்த நேரத்து விழைவே காதல் என்றும், அந்த வேட்கை தணிந்ததும் பெண்ணை அவன் உதாசினப்படுத்துகிறான் என்றும் அங்குள்ள பெண்கள் கருதுகிறார் கள். அதனால் அவர்களுக்கு காதல் மீதே நம்பிக்கை பிறப்பதில்லை. காதல் என்பது, பெண்களை வீழ்த்தக் கையாளும் ஒரு அணுகு முறை என்ற கருத்து பரவலாக மேலோங்கியிருக்கிறது. காதலால் பெண்கள் அடிமைப்படுத்தப் படுகிறார்கள் என்று கருதுகிறார் கள். அதனால் காதலுக்கு எதிரான சிந்தனைகள் மேற்கத்திய நாடுகளில் வெடித்துவருகின்றன. இதனால் பெண்ணியவாதிகளே காதலுக்கு பச்சைக்கொடி அசைக்காமல் சிவப்புக் கொடி காட்டுகிறார்கள்.

புரட்சிகர பெண்ணியலாளரான சுகமித் என்பவர், காதல் என்பது, பெண் ஒடுக்குமுறைக்கான கருவி என்றும், அது ஒரு வசீகரக்குழி என்றும் அதில் பெண்கள் எளிதில் விழுந்து, நரகத்தில் உழலுகிறார் கள் என்றும் மேற்கத்திய பெண்களில் வலியைப் பதிவுசெய்கிறார்.

ஆனால் இங்கோ...

‘இம்மை மாறி மறுமையாயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’

(குறுந்தொகை)

என்ற அன்புணர்வு, நம் சங்கத் தமிழ்ப் பெண்களுக்கு மட்டுமல்ல... இன்றுள்ள பெண்களுக்கும் ஊறுகிறது. இந்தப் பிறவி போய் அடுத்த பிறவி வந்தாலும் நீதான் என் காதலுக்குரிய கணவன். நான்தான் உன் அன்புத் துணை என்று சொல்லி மகிழ்கிறார்கள்.

நம் பழந்தமிழ்க் காதல், அடக்குமுறையும் ஆணாதிக்கமும் தலைகாட்டாத உயர்ந்த காதல்.

நீ என் ஆண்பால் மொழி பெயர்ப்பு. நான் உன் பெண்பால் மொழி பெயர்ப்பு என்று கருதுகிற அளவிற்கு பெண்கள் காதலில் மலர்கிறார்கள். ஆண்களையும் மலரவிடுகிறார்கள்.

சங்க காலத்தில், தலைவனுக்காக தலைவி காத்திருந்து பசலை நோயுற்று உருகுவது போலவே, தலைவிக்காக மடலூர்ந்தும்கூட இங்குள்ள தலைவன் உருகி நின்றான். இப்போதும்கூட பெரும்பாலான குடும்பங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிணக்கு வந்தாலும்கூட அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு அவர்களுக்கிடையில் தோன்றும் அன்புணர்வுக் காதலே அவர்களை ஒட்டிவைத்திருக்கிறது.

காதல் என்பது, ஆணின் இதயத்தையும் பெண்ணின் இதயத்தையும் ஒட்டிவைத்திருக்கும் வசீகரப் பசை. மயக்கம் தரும் விசை.

அத்தகைய காதல் கொண்டாட்டத்திற்கு உரியதுதானா? உறுதியாகக் கொண்டாடத் தக்கதுதான் காதல்.

காதல் என்றதும், கடற்கரை யிலும் பூங்காக்களிலும் வரம்பு மீறுகிற ஒருசில இளசுகளைக் கற்பனை செய்துகொள்ளக் கூடாது.

பார்க்காவிட்டால் கவலை. பேசாவிட்டால் பெருந்துயர். ஊடல் நேர்ந்தால் கொடும் சூறை. இதை அனுபவிக்கச் செய்கிறது காதல்.

’என்விழிப் பார்வையில் எதனால் வந்தாய்?

என்மன திற்குள் எதற்காய் நுழைந்தாய்?

உயிரின் வேர்வரை ஒழுகும் மழையே;

என்னுயிர் நீயென எப்போ துணர்வாய்?

-என்று தவிக்கத் தவிக்கப் பேச வைக்கிறது காதல்.

உன்னைப் பார்த்தால் உயிர்கரை கிறது;

உன்னை நினைத்தால் உயிர்வலிக் கிறது;

உன்னை மறந்தால் உயிர்பிரி கிறது;

எனவே நீயார் இறப்பா? வாழ்வா?’

-என்று கிறக்கக் கேள்வியை எழுப்பி, அன்பின் தியானத்தில் ஆழ்த்துகிறது காதல்.

காதலுக்குரியவர்கள், காதலுக்குரியவர்களின் உறவையும் சுற்றத்தையும்கூட நேசிக்கிறார்கள். வாழ்வின் அழகிய தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கிறது.

அன்பும் காதலும் நிறைந்தவர்களாக திருமணத் திற்கு முன்பும் பின்பும் காதலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற காதலர்களே இங்கு அதிகம். விதிவிலக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

எனவே காதலையும் காதலர் தினத்தையும், காதலை மதிப்பவர்கள் கொண்டாடுவதில் தவறே இல்லை, சரி, காதலர் தினம் எப்படி வந்தது?

கிளாடிஸ் என்ற ரோமானிய மன்னன் ஆட்சிக் காலத்தில் இளைஞர்கள் அனைவரும் போர்ப் படையில் சேரவேண்டும் என்று உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. ஆனால் இளைஞர்கள் தயங்கினர். காதலுக்குரிய மனைவியைப் பிரியவேண்டுமே என்று கவலைப்பட்டனர். இதைப் பார்த்த அந்த மன்னன், "ரோமாபுரியில் இனி யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்ட திருமணங்களும் நிறுத்தப்படுகின்றன” என தடாலடியாக அறிவித்ததோடு, இதை மீறினால் கைதும் கடும் தண்டனையும் தரப்படும் என்றும் எச்சரித்தான்.

இதனால் நாட்டுமக்கள் அதிர்ந்தனர். அரசனின் இந்த அடாவடிக்கு எதிராக் குரல்கொடுக்க முடியாமல் திணறினர்.

அந்த நிலையில் வாலண்டைன் என்ற பாதிரியார், காதலர்களுக்கும் இளம்தம்பதிகளுக்கும் தெய்வமாகத் தோன்றினார். அரசனின் அறிவிப்பை மீறி ரகசியமாக திருமணங்களை நடத்திவைத்தார். இது மன்னன் காதுக்குப் போனதும், அவரைக் கைது செய்து அவன் சிறையில் அடைத்தான்.

வாலண்டைன் பாதிரியாருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டும் அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும், சிறைப் பாதுகாப்புப் பிரிவின் தலைவரின், பார்வையிழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்தது . பாதிரியாரை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதையறிந்த சிறைத் தலைவன், தன் மகளை வீட்டுச் சிறையில் அடைத்துவைத்தான். காதலுக்காகப் போராடிய வாலண்டைன் பாதிரியார் கொல்லப்பட்டார்.

அராஜகம், காதலர்களுக்காகத் துடித்த அவர் இதயத்தை ஒரு பிப்ரவரி 14-ல் நிறுத்தியது.

காதலுக்காக உயிர் துறந்த அந்த பாதிரியாரின் பெயரிலேயே வாலண்டைன் நாள் என்னும் காதலர் தினம், கொண்டாடப்படுவருகிறது. இந்த பாதிரியார், பின்னர் போப் ஆண்டவரால், புனித பாதிரியாராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் காதலர் தினத்தில் காதலர்கள் ரோஜாக் களைப் பரிமாறிக்கொள்வார்கள். வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள். பரிசுப் பொருட்களை ஒருவருக்கு ஒருவர் வழங்கிமகிழ்வார்கள். கவிதைகள் பாடி உருகி நிற்பார்கள். மெல்லிசையில் பொழுதைக் கரைப்பார்கள்.

"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்;

காதலினால் சாகாமலிருத்தல் கூடும்

கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம்."-என்கிறான் பாரதி.

மரணத்தைப் பொய்யாக்கும் மாயவித்தையே காதல். பாரதி சொல்வது போல், கவலையைப் போக்கும் உலகின் தலைமை இன்பம் அதுதான்.

இளசுகள் மட்டுமல்லாது, தம்பதிகளும் முதியோர்களும்கூட அன்பையும் இதயத்தையும் கொண்டாடுகிறார்கள். கலாச்சாரக் காவலர்களே, சற்றே தள்ளி நில்லுங்கள்.

அதே நேரம் காதலைக் கொண்டாடுவோர், காதல் மீது காதல் கொண்டு கொண்டாடுங்கள். எல்லைகளுக்குள் நின்று கொண்டாடப்படும் காதலே எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும்.