சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருமலின் நிலை வந்தபிறகுதான், நான் டாக்டரைத் தேடிச்சென்றேன். டாக்டர் எனக்கு நன்கு தெரிந்தவர். அவரிடம் என் சிரமங்கள் அனைத்தையும் நான் கூறினேன்.
"இருமல்... பயங்கர இருமல்... உலகம் முழுசுக்குமே கேட்கும். ராத்திரி பகல்னு எப்பவும் இருக்கும். சில நேரங்கள்ல இருமி இருமி மூச்சுவிட முடியாத நிலை உண்டாகும். அப்போ செத்துப்போயிடுறதைப்போல... கபம் எதுவுமில்ல. இருமி முடிச்சா... உடல் முழுசும் பிடிச்சு இழுக்கறதைப்போல... முடியல டாக்டர்... முடியல...''
டாக்டர் கேட்டார்: "இது எத்தனை நாளா இருக்கு?''
நான் கூறினேன்: "ரெண்டு மாசம் இருக்கும். காய்ச்சல் இல்லாமலிருந்ததால நான்...''
"ஓகே... ஓகே...''
தொடர்ந்து முழுமையான பரிசோதனைகள்... பரிசோதனைகளுக்குப் பிறகு சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கி நின்றுவிட்டு டாக்டர் கூறினார்: "பிரச்சினை எதுவும் இருக்கறதா தெரியல. அலர்ஜியா இருக்க வாய்ப்பிருக்கு.''
நான் கேட்டேன்: "அலர்ஜி..?''
டாக்டர் சிரித்தார். "ஆமா... அலர்ஜிதான். ஆனா அலர்ஜியில ஒரு பிரச்சினை இருக்கு. உடனடியா சிகிச்சை செய்து குணப்படுத்திட முடியாது. பல காரணங்களாலும் அலர்ஜி வரலாம். முதல்ல அந்த காரணத்தைதான் கண்டுபிடிக்கணும். அது... அந்த அளவுக்கு சாதாரண விஷயமும் இல்ல. உதாரணத்திற்கு சொல்றதா இருந்தா... தூசிமூலம் அலர்ஜி வரலாம். ஆனா, இப்போ மழைக்காலமாச்சே! காத்து வெளியில தூசிகள் மறைஞ்சிருக்கும். அதனால தூசியை நாம ஒதுக்கி வைக்கலாம். பிறகு இருக்கறது... பூக்கள். சில விசேஷ இனத்தைச் சேர்ந்த பூக்களோட வாசனை சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். ஆனா இப்போ... கொஞ்சகாலமாவே உங்களுக்கு பூக்களுடனும் செடிகளுடனும் பெரிய அளவுல உறவில்லைங்கற விஷயம் எனக்குத் தெரியும். அதனால... பூக்களையும் ஒதுக்கிவைக்கலாம். இனி இருக்கறது...''
டாக்டர் பேச்சை நிறுத்திவிட்டு, என்னையே கூர்ந்து பார்த்தார். டாக்டரின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு தெரிந்தது.
டாக்டர் கேட்டார்: "இப்போ வீட்ல எத்தனை பூனைங்க இருக்கு?''
நான் எதுவும் கூறாமல் நின்றிருக்க, டாக்டர் கூறினார்: "தயங்கவேணாம்... சொல்லுங்க. நாலு?
அஞ்சு?''
அப்போது நான் டாக்டரின் முகத்தைப் பார்க்காமல் ஒரே மூச்சில் கூறினேன்: "நாலோ அஞ்சோ இல்ல டாக்டர். பதினேழு... பெரியவை பதிமூணு. சிறியவை நாலு.''
டாக்டரால் நம்பமுடியவில்லை. "ஒரே வீட்ல பதினேழு பூனைங்களா?''
பிறகு சிறிதுநேர அமைதிக்குப்பிறகு டாக்டர் கடுமையான குரலில் கேட்டார்: "நீங்க அங்க ஒரு பூனைப் பண்ணை நடத்துறீங்களா என்ன?''
நான் வெறுப்புடன் கூறினேன்: "இது என்னோட தலைவிதி டாக்டர். நான் எங்க போனாலும் எனக்குப் பின்னால பூனைங்களும் நாய்களும் இருக்கும். சின்ன வயசிலயிருந்தே அப்படித்தான். இறுதியா... முப்பது வருஷங்களுக்கு முன்ன கொச்சியில வேலையெல்லாம் முடிஞ்சு இங்க வந்தப்போ, ஒரு தீர்மானம் எடுத்தேன். இனி பூனையோடயோ நாயோடயோ எந்தவொரு தொடர்பும் இருக்கக்கூடாதுன்னு. ஆனா அதிக நாள் அப்படி பிடிச்சு நின்னுக்கிட்டிருக்க முடியல. முதல்ல வந்தது... ராணி. ஒரு அல்சேஷன் கலப்பினம்... ஏதோவொரு நல்லவீட்ல இருந்துட்டு.. எப்படியோ எஜமானரை இழந்துட்டு விதியின் விளைவால எங்கிட்ட வந்துசேர்ந்தது.
ஒரு வார காலம் என் சமையலறைக்குப் பின்னால படுத்துக் கிடந்தா. நான் அவளை ஏத்துக்கிற நிமிஷத்தை எதிர்பார்த்து இருக்கறதைப் போல... ஆனா அந்த நாட்கள்ல நான் அவளைப் பார்த்ததைப்போல காட்டிக்கல. உணவும் கொடுக்கல. ஆனா எவ்வளவு நாள் அப்படியே இருக்கமுடியும்? இறுதியில நான்தான் தோத்துட்டேன். நான் தந்த முதல் சோற்று உருண்டையைச் சாப்பிடுறதுக்கு அவ வந்த காட்சி... அன்னைலயிருந்தே அவ வீட்டோட ஒரு உறுப்பினராகிட்டா. பிறகு... சர்வாதிகாரியாவும்...
பூனைகள்ல முதல்ல வந்து சேர்ந்தது... சுந்தரிதான். அப்போ அவ ஒரு குட்டியா இருந்தா. எப்படியோ வழிதவறி அலைஞ்சு திரிஞ்சு வந்திருக்கணும்.
அந்த அளவுக்கு அழகான வேறொரு பூனையை நான் வாழ்க்கையில பார்த்ததேயில்ல. மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சும் கொஞ்சம் கருப்பும் கலந்த... நிறைய ரோமங்களோட... உண்மையிலேயே அவ ஒரு சுந்தரிதான். குணமும் ரொம்ப நல்லதா இருந்தது.''
பிறகு... டாக்டர் கேட்டார்: "இப்போ... நாய்ங்க?''
நான் கூறினேன்: "ரெண்டு பேர் மட்டும். உக்குருவும் வெள்ளையனும்...''
டாக்டர் சற்று கிண்டலுடன் கூறினார்: "ஏன் இவ்வளவு குறைஞ்சிடுச்சு?''
நான் கூறினேன்: "வேற ஒன்பது பேரும்கூட இருந்தாங்க. ஏதோவொரு நோய் வந்து எல்லாரும் இறந்துட்டாங்க. "வெற்'றைக் காட்டி சிகிச்சை யெல்லாம்கூட செய்ய வச்சேன். ஆனா பயனில்லாம போயிட்டது.''
சிறிதுநேரம் என்னையே பார்த்து ஏதோ சிந்னையில் மூழ்கிவிட்டு டாக்டர் கேட்டார்: "இந்தப் பூனைங்க எப்போதும் உங்களோட நெருக்கமா பழகுமா?''
"நாலு பேர் ராத்திரியில என்கூடத்தான் படுத்திருப்பாங்க. ஒரு பிடிவாதம்ங்கறதைபோல... கட்டில்ல வேண்டிய அளவுக்கு இடமிருந்தாலும், என்னோட உரசிக்கிட்டுப் படுத்தாதான் திருப்தி உண்டாகும். அன்பு காரணமாதானேன்னு நினைச்சு நான் இதையெல்லாம் சகிச்சுக்குவேன். பிறகு... ஒருத்தனுக்கு... நான் எங்காவது இருக்குறப்போ என் மடியில ஏறி இருக்கணும். பிறகு... அங்கு படுத்துத் தூங்கவோ நெளியவோ செய்யும். கழுத்தை நீட்டிக் காட்டி சொறிஞ்சு விடச்சொல்லி கூறவும் செய்யும். பக்கத்துல அறிமுகமில்லாத யாராவது இருந்தா, அதெல்லாம் அவனுக்கு பிரச்சினையே இல்லை.''
டாக்டர் கேட்டார்: "நாய்ங்களும் வீட்லதான் இருக்கா?''
நான் கூறினேன்: "பெரும்பாலும் வீட்லதான் இருக்கும். ஒட்டி.. உரசி.. அன்பை வெளிப்படுத்தி... அப்படி வெள்ளையன் குட்டியா இருந்த காலத்தில கட்டில்ல ஏறிப் படுத்திருப்பான். இப்போ இல்ல.''
டாக்டர் கையால் "போதும்' என்று என்னை விலக்கி விட்டு, கூறத் தொடங்கினார்: "பாருங்க... நான் உங்களோட டாக்டர் என்பதற்கும் மேலா, ரொம்ப நெருக்கமா பழகக் கூடியவனும்கூட... வேணும்னா குடும்ப நண்பர்னுகூட சொல்லலாம். இந்த ஒரு உறவை வைச்சு நான் சொல்றேன்... பூனைகளோடவும் நாய்களோடவும் நீங்க இப்போதைய நிலையிலேயே தொடர்றதா இருந்தா, ரொம்ப சீக்கிரமே நீங்க தீவிரமான பல்மனரி நோய்களுக்கு அடிபணியவேண்டிய சூழல் உண்டாகும். நீங்க வேணும்னா கேட்கலாம்... "டாக்டர்... எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லயிருந்து பூனைகளோடவும் நாய் களோடவும் ரொம்ப நெருக்கமா பழகலையா?'ன்னு. ஆனா ஒரு விஷயத்தை நினைவில வச்சுக்கணும்.
அப்போ நீங்க ஒரு நோயாளி இல்ல. முதியவரு மில்ல. வயசு இப்போ எண்பத்தேழு... சதாபிஷேகம் எதுவும் கொண்டாடலைங்கறது ஒருபக்கம் இருந்தா லும்... பிறகு சர்க்கரை நோயிலயிருந்து ஒண்ணுக்கும் மேற்பட்ட நோய்களுக்கு அடிமையும்கூட... அதனால நான் சொல்றது என்னன்னா... நீங்க பூனைங் களையும் நாய்களையும்... குறிப்பா பூனைங்களை வீட்லயிருந்து விலக்கணும்... விலக்கியே ஆகணும்.'' நான் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்க மட்டும் செய்தேன். புறப்படும்போது டாக்டர் தற்காலிகமாக இருமல் நிற்பதற்காக சில மருந்துகளைத் தந்தார்.
வரும் வழியில் ராமச்சந்திரன்... அவனுடைய ஆட்டோவில்தானே நான் டாக்டரைப் பார்ப்பதற் காகச் சென்றேன்... அவன் கூறினான்: "டாக்டர் சொன்ன எல்லாத்தையும் கேட்டீங்கள்ல?''
நான் எதுவும் பேசாமலிருக்க, அவன் மீண்டும் ஞாபகப்படுத்தினான். "ஏதாவது செய்யவேணாமா?''
அவனுடைய குரலில் பெரிய அளவில் பதட்டம் இருந்தது. அதனால் மீண்டும் அவன் கேட்பதற்கு முன்பே நான் கூறினேன்:
"என் மனசுல சில விஷயங்கள் இருக்கு.''
அவ்வாறு கூறினாலும், என் மனம் அப்போதும் ஊசலாடிக்கொண்டுதான் இருந்தது. வீட்டிற்கு வந்தபிறகும் நான் சிந்தித்துக்கொண்டேயிருந்தேன். என் மடியில் அப்போதும் வழக்கம்போல "ராம கிருஷ்ணன்' இருந்தான். அவனுடைய அழகான முதுகில் வருடி, அவனுடைய முனகலைக் கேட்டுக்கொண்டிருக்க, எனக்கு திடீரென ஒரு வெளிச்சம் கிடைத்தது.
நான் ராமச்சந்திரனிடம் கூறினேன்: "டேய்... மருத்துவமனையில டாக்டர்களும் நர்ஸ்களும் முகத்துல கட்டக்கூடிய "மாஸ்க்'கை நீ பார்த்திருக்கேல்ல? துணியாலான... மூக்கையும் வாயையும் மறைக்கக்கூடிய...''
ராமச்சந்திரன் என்னை சந்தேகத்துடன் பார்த்தான். நான் அவனிடம் உறுதியான குரலில் கூறினேன்: "நீ போய் அதுல ஒண்ணு வாங்கிட்டு வா. அதைப் பயன்படுத்தினா எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடும்னு நான் உறுதியா நம்பறேன். கட்டாயம்...''
ஆனால், ராமச்சந்திரன் அதில் பெரிய அளவில் நம்பிக்கை கொள்ளவில்லை. எனினும், நான் கூறினேன் என்பதற்காக, அவன் போய் "மாஸ்க்' வாங்கிக்கொண்டு வந்தான்.
ஆனால் முதல் நாளிலேயே என் மாஸ்க் சோதனை தோல்வியடைந்துவிட்டது. முதலில் அந்தப் பொருளை என் முகத்தில் வைத்துக் கட்டியபோது, நான் ஒரு மாதிரியாக உணர்ந்தேன். படிப்படியாக சரியாகி விடுமென்று நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டா லும், அப்படி நடக்கவில்லை. நிலைகொள்ளாத நிலைமை அதிகரித்துக்கொண்டுதான் வந்தது. இரவிலும் அதைக் கட்டிக்கொண்டே உறங்குவதற்காகப் படுத்தேன். ஆனால் ஒரு உறக்கம் முடிந்து பார்த்தபோது, முகத்தில் மாஸ்க் இல்லை. அது விழுந்துவிட்டிருக்கிறது. நான் வெறுப்புடன் அதை எடுத்து படுக்கையின் ஒரு மூலையில் போட்டேன்.
மறுநாள் காலையில் எப்போதையும்விட சற்று முன்பே ராமச்சந்திரன் வந்தான். என் மாஸ்க் இல்லாத முகத்தைப் பார்த்து எதுவும் கூறாமல் அவன் நின்றிருக்க, இரவில் நடைபெற்றதை நான் அவனுக்கு விளக்கிக் கூறினேன்.
அப்போது அவன் கூறினான்: "இனி நான் ஒரு பரிகாரம் சொல்றேன். எதிர்த்து எதுவும் சொல்லாதீங்க. அந்தக் காலத்தில மனுஷங்க செஞ்ச விஷயம்தான். அதுல கொடூரமெதுவும் இல்ல.''
நான் உடனடியாக கோபத்துடன் கேட்டேன்: "கொல்றதா?''
ராமச்சந்திரன் கூறினான்: "கொல்லச் சொல்லல. அப்படிப்பட்ட ஒரு காரியத்தில நான் கூட இருப்பேன்னு நினைக்கிறீங்களா? இது வேறு விஷயம்... அங்க... தூரத்துல இருக்குற ஒரு கள்ளுக்கடைக்குப் பின்னால கொண்டுபோய் விட்டுடுங்க. அங்க இவங்க எல்லாரும் சுகமா...''
என் முகத்தில் தெரிந்த சந்தேகத்தைப் பார்த்து ராமச்சந்திரன் கூறினான்: "தயங்க எதுவும் வேணாம். இதைச் செய்தா... பிறகு ஒரு பிரச்சினையும் வராது. வேணும்னா...''
"வேணும்னா..?''
"வேணும்னா... நாம இடையில அப்பப்போ போய் பார்க்கவும் செய்யலாம். அப்போ நாம பார்க்கமுடியும்... இவங்க எல்லாரும் தடிச்சி பருமனாகி அங்கேயே... எனக் குத் தெரிஞ்ச ஒரு ஆள் இருக்கான். நிரந்தரமா இந்த வேலையைச் செய்யற... சார்... நீங்க சம்மதிச்சிட்டா இன்னைக்கே...'
நான் சம்மதித்தேன். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால்... சம்மதிக்கவேண்டிய நிலை உண்டானது.
அப்படித்தான் அந்த பூனைபிடிப்பவன் சைக்கிளில் இரண்டு மூன்று பெரிய கோணிப்பைகளுடன் வீட்டிற்கு வந்தான். அவனைப் பார்த்தபோதே எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஒரு முரட்டு மனிதனைப் பார்ப்பதைப்போல இருந்தது.
உக்குருவும் வெள்ளையனும் உரக்க குரைத்துக் கொண்டிருந்தார்கள். பூனைகளும் அமைதியற்ற நிலையில் இருந்தன.
பிறகு நான் எதுவும் சிந்திக்கவில்லை. பூனை பிடிப்பவன் தன் வேலையைத் தொடங்குவதற்கு முன்பே அவன் கையில் ஒரு நல்ல தொகையைக் கொடுத்துவிட்டு நான் கூறினேன்:
"இன்னிக்கு வேணாம்... இன்னிக்கு நாள் நல்லா இல்ல. நான் பிறகு உங்களுக்குச் சொல்றேன்.''
சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டு நின்று விட்டு, "சரி சார்'' என்று சொல்லிவிட்டு பூனைபிடிப்பவன் புறப்பட்டான்.
"நீங்க என்ன வேலை செஞ்சீங்க?' என்பதைப்போல ராமச்சந்திரன் என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, நான் கூறினேன்:
"நான் ஒரு வழியைக் கண்டுபிடிச்சிட்டேன். யாருக்கும் தொந்தரவே இல்லாத வழி... சரியான வழி...''
ராமச்சந்திரன் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, நான் உறுதியான குரலில் கூறினேன்: "டேய்... நாம வீடு மாறப்போறோம். இதுக்குப் பக்கத்திலேயே எங்காவது... இப்போதான் நிறைய ஃப்ளாட்டுங்க வந்திருக்கே! விலைக்கில்ல... வாடகைக்கு... நீ இன்னைக்கே விசாரி. உனக்குத்தான் இங்க நல்லா தெரிஞ்ச மனுஷங்க நிறைய இருக்காங்களே!''
ராமச்சந்திரன் என்னையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டுக் கேட்டான்: "அப்படின்னா... இந்த வீடும் நாய்களும் பூனைகளும்...?''
நான் கூறினேன்: "அவங்க எல்லாரும் இங்கேயே இருப்பாங்க. தினமும் ரெண்டு தடவை நாம இங்க வருவோம். இவங்களோட உணவும் இப்போ இருக்கற மாதிரியேதான்... மீனும் சோறும் பால் பொடியும். எதுக்கும் எந்தவொரு குறையும் இருக்காது.''
ராமச்சந்திரன் ஆச்சரியத்துடன் கேட்டான்: "உண்மையாதான் சொல்றீங்களா?''
நான் கூறினேன்: "உண்மையாவேதான்.''
அப்போது என் மனம் முழுமையான நிம்மதியுடன் இருந்தது.
===
_________________________________________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த மலையாள சிறுகதைகளை மொழி பெயர்த்திருக் கிறேன்.
"பல வகையில் விளையாடுபவர்கள்' சிறுகதையை எழுதியிருப்பவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், நவீன மலையாள இலக்கியத்தின் அரசருமான எம். முகுந்தன். உதயன் என்ற விளையாட்டு வீரனையும், அவனை உயிரென காதலிக்கும் பார்வதி என்ற இளம்பெண்ணையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. பார்வதியின் கதை உண்மையிலேயே ஒரு சோகக் கதைதான். இத்தகைய நல்ல பெண்களையும், உதயனைப் போன்ற இளைஞர்களையும் நம் வாழ்க்கைப் பாதையில் தினமும் நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!
"ஒரு வீடு பார்க்கணும்... வாடகைக்குப் போதும்'
கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், கவித்துவத் தன்மைகொண்ட கதைகளை எழுதி, மலையாள இலக்கிய உலகில் கடந்த 50 வருடங்களாக ஆட்சிசெய்துகொண்டிருப்பவருமான டி. பத்மநாபன். பூனைகளின்மீதும், நாய்களின்மீதும் அளவற்ற பாசம்வைத்திருக்கும் ஒரு ஈர இதயம்கொண்ட மனிதரின் கதை. இந்தக் கதையில் வருபவர் பத்மநாபனா கவேகூட இருக்கலாம். இந்த கதையின் நாயகர் நிச்சயம் நம் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வார். எப்படிப்பட்ட உன்னத மனதிற்குச் சொந்தக்காரர் அவர்!
"தாத்தாவும் பணிப்பெண்களும்' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், மலையாள பெண் எழுத்தாளர்களின் அரசியுமான மாதவிக்குட்டி. ஆதரவற்ற நிலையிலிருக்கும் ஒரு வயதான மனிதரின் கண்ணீர்க் கதை. இதில் வரும் கிழவரை நம்மால் என்றும் மறக்கமுடியாது. அவருக்கு சேவைசெய்யும் பணிப்பெண்களையும்தான்...
இந்த முத்தான மூன்று கதைகளும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். மீண்டும் சந்திப்போம்.
"இனிய உதயம்' வெளியிடும் என் மொழி பெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா