மன்னர் மன்னன் குறித்து அவரது மகனும் பாரதிதாசனின் பேரனுமான பாரதி எழுதிய உணர்ச்சிப் பெருக்கு...
அப்பா...’
-தன்னைப் பெற்ற தந்தையாரை அவர் நினைத்து அழைக்கவில்லை; அப்பா அப்படி என்னைத்தான் அழைக்கிறார்.
நான்காண்டுகளாக சற்று உரத்த குரலில்... நான் அவரை விட்டு வீட்டின் வேறு இடத்திற்கு சென்றால், இப்படி உடனே அவரிடம் வந்து விடுவேன். ஆவன செய்துவிடுவேன். காலை முதல் இரவு வரை இரவு. இரவு முதல் காலை வரை.
ஆமாம்... எப்போதும் உடனிருந்து...!
பாவேந்தரின் மைந்தர் என்பதுடன் அவருக்கே உள்ள தனித்துவம் அது. ஏறத்தாழ 23 ஆண்டுகளாக அவருடன் நான் குடியமர்ந்த புதுச்சேரி காந்திநகர் வீட்டுக்கு பல பெருமக்களை, அன்பர்களை வரவழைத்தது. அப்பாவின் இளவயதிலேயே ’கோபதி’ என்ற அவரின் பெயரை அவர் தந்தையாரே மன்னர் மன்னன் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார். எனக்கு தந்தையார் பெயரை வைக்க எண்ணி, அவரிடம் என்னைத் தூக்கிச் சென்று காட்டிக் கேட்டபோது, ’’அவர் பெயரை வை. பாரதி என்று வை’’ எனச் சொல்ல நான் பாரதி பெயர் பெற்றேன்.
பாரதி என்று எப்படி அழைப்பது என எண்ணி, அப்பா ’ஏம்பா’ என அழைப்பார். ’தம்பிக்கிட்ட சொல்லுங்க’ என பிறரிடம் சொல்லுவார். 2016 ஆம் ஆண்டு உடல்நலம் சற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலம் காக்கப் போராட்டம். வீட்டுக்கும், திடீரென மருத்துவமனைக்கும் மூன்று நாள் முதல் ஏறத்தாழ ஒரு மாதம் என வெவ்வேறு காலங்களில் மருத்துவமனையில் சிகிச்சை. அதற்கும் பத்தாண்டு முன்பு வரை, மருத்துவம் தேவைப்படாத நிலை மாறி, குருதி அழுத்தத்திற்கு மட்டுமே மருந்து தேவைப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகள் நடமாட்டம் குறைந்தது. உலகெங்கும் கோரோனா தீநுண்மித் தொற்றுக் காலத்திலும் கடுமையான நோய் ஏதும் இல்லை. உடல், உணவுக் குறைபாட்டால் மெலிந்து போனது. நீர் உணவு தான். ஆனால் மிகச் சத்துணவு. திடீர் நலிவு. மருத்துவமனைக்கு அழைத்துப் போகும் சூழல் இல்லை. வீட்டிலிருந்து வெளிசெல்ல முடியாத நலிவு. 6.7. 2020.. அப்பா... என எனை அழைத்த அன்பு குரல் அடங்கத் தொடங்கியது என்று சொல்லமாட்டேன். என் காதில் கேட்காமல் போனது. அமைதியாகிவிட்டார்.
என் நினைவு தெரிந்து உலகறிந்த நாள் முதல், சிற்சில நாட்கள் படிப்புக்காகவும் பணிக்காகவும் அவரைப் பிரிந்து இருந்தேன். மூப்பு அவரை நம்மிடமிருந்து பிரித்து விடக்கூடாது என முயன்றேன். என் ஆழ்ந்த நம்பிக்கை கடினமான முயற்சிகள் எல்லாவற்றுக்கும் மேலாக பாசம்... அவர் இவற்றுள் துணிவு கொண்டார். வலி இருக்கும். உயிர் போராட்டம் இருக்கும். அவர் கலங்கியதில்லை. நடுங்கியது இல்லை. ஈடற்ற துணிவு. அவர் வலிமை. வியப்புதான்.
என் அம்மாவை இழந்தபோது கலங்கினார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக ’’இவர் கழுத்து எலும்பு பிரச்சனைக்கு ஆபரேஷன் தான் செய்யனும். உடனே அட்மிட் பண்ணுங்க’’ என்று அந்த மூத்த மருத்துவர் என் நிலைமையை அப்பாவிடம் சொன்னபோது கண்கலங்கினார். வேறெப்போதும் இல்லை. நான் பதறுவேன். அவர் நிலை எண்ணித் துவளுவேன். என் முயற்சிகளை விட்டதில்லை.
எலும்பு வலி எல்லாம் எனக்குப் பெரிதல்ல. ’என் வேலை இது. செய்துகொண்டே இருந்தேன்’ ’தனி ஒருவனாக எனக்காகப் போராடுகிறானே’
என்ற அப்பாவின் பார்வையும் பேச்சும் எனக்கு புரியாமல் இல்லை.
‘பாரதி உனக்குப் புண்ணியம்’ என்பார்கள் சிலர். என் கடமை இது என்பதுதான் எனக்குத் தெரியுமே. நான் எப்படியும் அவரைப் பார்த்துக் கொள்வேன். என்பதால் அவர் நெஞ்சம் உறுதியானது. ’எனக்கு பயப்படுறியா சாமிக்குப் பயப்படுவியா’
இவருக்கு சிறுவயது. விளையாடிக் கொண்டிருந்த இவர் நண்பனின் திடீர் கேள்வி அது. இவர் சென்று தன் அப்பாவிடம் கேட்கிறார் ’என்ன சொல்லட்டும்?’
’எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்று சொல்லு’
- பதில் இப்படிக் கிடைத்தது. புரட்சிக்கவிஞர் ஊட்டிய துணிவு அது. ’எவனுக்கும்’ என்பது தவறு செய்யும் எவனுக்கும் தான்! இவர் கடைசிவரை அஞ்சவில்லையே! எதற்கும் அஞ்சாதவர். துணிவுதான் அவர்! மூச்சு நிற்கும்வரை அப்படித்தான். பல மருத்துவர்கள் பாடுபட்ட துண்டு. சிலர் ’வயசாயிடுச்சு’ சிலரோ ’பார்க்கலாம்’ இப்படிச் சொன்னபோதும் நான்கு ஆண்டுகள் கடந்து விட்டோம். 92 வயது நினைவுகள் வாட்டுகின்றன. பொறுப்புகள் அழைக்கின்றன. ’வீழ்ந்து விட மாட்டார்களா?’ -இப்படியும் சிலர் எண்ணிக் கொண்டிருந்தனர். உண்மை.
அவரும் வீழ்ந்துவிடவில்லை. என்னுடன்.. நம்முடன்... வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
மூக்குக்கண்ணாடி, ஜிப்பா, வேட்டி, சால்வை, என் மேசை மீது. அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக.. திடீரென... தாத்தா பாவேந்தர் போலவே தோற்றம். கண்ணாடிகளில் புதுமையாக பல வந்துவிட்டன. ஊம்... கருப்புச் சட்டம் போட்ட அதே கண்ணாடி தான். வானொலி நிலையத்துக்கு முழுக்கால் சட்டையை போட்டுக் கொண்டு மிதிவண்டி மிதித்து போனவர், ஜிப்பா வேட்டியில் மேலே எப்போதாவது மஞ்சள் சால்வை. திருவள்ளூரில் அரசு நலத்திட்ட விழா- சால்வை என் கைகளில் ’போட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும் எப்போதும்’ என் சொற்கள் ஏற்கப்பட்டன அவரால். காலை ஐந்தரைக்கெல்லாம் தெருவுக்கும் வீட்டுக்கும் அவர் நடப்பார். நாளிதழ்கள் வந்துவிடும். பார்த்துவிடுவார். ’அட செடிக்கு தண்ணி ஊத்தணுமே’ பல்லாண்டுகளாக உள்ள முதற்கடமை, அது நிறைவேறும். கைலி பனியனுடன் ’கொண்டாப்பா நான் கொத்திட்டு வரேன்’ என்னிடம் இருந்து வாங்கிக்கொள்வார். மீந்த உணவு தான். சொன்னால் கேட்கப் போவதில்லை.
தெரு சென்று மதில்மேல் வைப்பார். உயிரினங்களுக்கு உணவாகும்.’ உங்க அப்பா என்னப்பா பாரதிதாசன் மவன், கைலியோட அலைகிறார். நீயும் அப்படித்தான்’ இந்த குரல்கள் எல்லாம், ’இவர்கள் இப்படித்தான்’ என அடங்கிப் போயின. பவளமல்லி கொட்டிக் கிடக்கும். அடுக்கு செம்பருத்தி அளவில்லாமல் பூக்கும். அள்ளியும் கிள்ளியும் எடுப்பார். வீடுவீடாகக் கொடுப்பார். பத்திரிக்கைச் செய்திகள் நறுக்குவார்.
அவரே வெட்டி ஓட்டுவார். நானும்...! கோப்புகளில் சேர்ப்போம். சக்கையாக புலால் உண்டவர் அந்த காலத்தில். இட்லி இடியாப்பம் இருந்தால் போதும். தயிர் சோறு, இரசம், அதுவே மிகப் பிடிக்கும். குருமா வைத்தால் சோறு செல்லாது. பிரஞ்சு வகை துண்டு போட்ட உருளை ரொட்டி தான்.
படுத்திருப்பார். ’டக்’கென்று தாவி ஏதோ ஒரு நூலை எடுப்பார். ஆழ்ந்து படிப்பார்... எழுதத் தொடங்கி விடுவார். எது பேசினாலும் எப்போதாவது பதில் பேசுவார். தாத்தாவின் கையெழுத்தை விட, ஒன்றோடு ஒன்று நெருங்கிச் சேர்ந்திருக்கும்.. இவரின் முத்து! அவர் தான் படிக்க முடியும். நான்தான் படிக்க முடியும் பழக்கத்தால். புதியவர் அச்சகத்தில் போராடுவார். மன்னர் மன்னன் என ஒப்பமிடுவார். எழுத்து சேர்ந்து இருக்கும். ஏதோ ஒரு நேர்த்தி இருக்கும். நம்மை ஈர்க்கும். என் ஆறு வயது முதல் இதிலெல்லாம் ஈடுபட்டு சுவைத்துக் கொண்டு இருக்கிறேனே. இன்றைக்கு எங்கு செல்ல வேண்டும்? என்ன செய்யவேண்டும்? இருவரும் திட்டமிடுவோம். நான் சொல்வதை ஏற்றுக் கொள்வார். இலக்கியம், சமுதாயம், நண்பர்கள், குடும்பம், எதிர்ப்புகள், கவிழ்ப்புகள், எல்லாம் பேசுவோம். தோழர்களாக. ஆனால் பிடித்தபடி இளகாது. சரியெனப் பட்டால் விட்டுவிடுவேன். இல்லையென்றால் போராடுவேன். சினம் பொங்கும். அடங்கும். பாரதியார், பெரியார், பாவேந்தர் மட்டுமே இல்லை. யார் யாரோ பேச்சில் வருவார்கள்.
ஊற்றல்ல ;வெள்ளம் பாயும். ஊர் உலக வரலாறு பேசுவார். கேட்டுக் களிப்பேன்.
‘அதை எடு!’
-எதை என்பது எனக்குத் தெரியும்.
’டைரில 6 பக்கம் தள்ளு. மேலே இருந்து நாலாவது பேர். அந்த எண்ணுக்குப் போடு’-
மனப்பாடமாக மனதில் படமாக்கி வைத்துக் கொள்வார். தொலைபேசி எண் மட்டுமல்ல. எல்லாமே. ’இந்த நூலின் இத்தனையாவது பக்கத்தில் இருக்குது பாரு’ அவர் சொல்வார். அப்படியே இருக்கும். நேரம் தவறமாட்டார். உணவுக்கு.
நிறையவும் உண்ண மாட்டார். உண்பதற்கு 5 முதல் 10 நிமிடங்கள்தான். ஐந்து விரல்கள் தட்டில் இருக்கும். சாப்பிட்டால் விரல்களில் நகங்களையும் தாண்டி, ஒரு பருக்கையும் துணுக்கும் இருக்காது. கலைஞர் சொன்னார். ’’மன்னர்மன்னன் சாப்பிடும் அழகில் கவிதை எழுதலாம்’’.
எம்ஜிஆர் சொன்னார் ’’லதா... அவரைப் பாரு... பாண்டிச்சேரி காரரு. மீன் எப்படி சாப்பிடுறாரு...முள் இல்லாமல் எடுத்து சாப்பிடுறார்... அவங்க அப்பாவும் அப்படித்தான் சாப்பிடுவார் போல. நீயும் சாப்பிடுறியே..!’
தலைவர்கள் புகழ்ந்தனர். பிற்பகல் ஒரு தூக்கம்.
’அப்பா இன்னிக்கி விழா இருக்கே. தலைப்பு கூட புதுமையாய் இருக்கு. எப்படி பேசுவீங்க’- நான் கேட்டுக் கேட்டுப் பார்ப்பேன். பதில் வராது. மேடையில் வரும்.
‘பெரியோர்களே... என் முன் பேசிய’- இதெல்லாம் அவரிடம் வராது. நேரடியாகத் தன் கருத்துக்குப் போய்விடுவார். கவனிக்க வைப்பார். இவர் தான் நம்முடைய ஆடியன்ஸ். கேட்கக் கூடியவர் என உணர்ந்து தேர்ந்தெடுத்துக் கொள்வார். அமைதி. தோய்ந்து போவார். கையொலியால் ஆர்ப்பரிப்பார். நகைச்சுவை நுழைந்திருக்கும். ஆனால், கருத்துக்கே முதலிடம். சிலநேரம் சினம் பொங்கும். எனக்குத் தெரியும். தவறை கண்டிக்காமல் விடமாட்டார். ’நான் அவனையாப்பா கண்டிச்சேன். அவன் சொல்ற கருத்து தவறு’ என வீட்டில் விவரிப்பார். அவர் அப்பாவைப் போல இவர் என்பது எப்போதும் உறுதியாகும்.
நான் நகைச்சுவையாக பேசுவேன். அவர் அதையும் தாண்டிப் போவார். மகிழ்ச்சி பொங்கும். ’சரிப்பா... ஏம்பா இப்படி நடந்துக்கிறாங்க... உங்களைப் பிடிக்காமல் தொல்லை கொடுக்கிறார்களே..’ என்பேன். கவலை எனக்கு மட்டும்தான் வரும். ’நான் மட்டுமா படுறேன்? எங்க அப்பாவும் பட்டாரு. நீயும் படறே’- அப்படித்தான் இயலாமை, பொறாமை. சாதி பேதம்..’ பேசிக்கொண்டிருப்பார். அமைதியாகத் தூக்கம் அவரைத் தழுவிடும்.
நான்... அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே.. நானும் திட்டங்கள் வகுத்து தருவேன். இரவெல்லாம் விழித்திருப்பேன். அவர் கவலை துளியும் இல்லாமல் தூங்குவார். நான் இருசக்கர வண்டியில் அழைத்துப் போவேன். பின்னால் இருக்கும் அவரை, இந்நாள் குழந்தை வரை எண்ணிப் பார்ப்பார்.
20 ஆண்டுகள் இப்படி. வாழ்க்கை முழுதும் நீரும் நெருப்புமாக வாழ்க்கை. பாரதியாரைப் பெரியாரை வள்ளலாரை புரட்சிக்கவிஞரை, எண்ணிப் பார்க்கலாம். கனலும் இருக்கும் புனலும் இருக்கும். இன்ப மாலைகள் தோள் ஏறும். எரி ஈட்டிகள் பதம் பார்க்கும். நெருப்பாக கனன்றிடுவர். நீராக குளிர்ந்திருவர். ’ஆமாம் மன்னர்மன்னன் அப்படித்தான்’. -இப்படி என் காதுகளுக்கு குரல்கள் எட்டும்.
தமிழ்ப்பகைவர் தாக்குவர். இனம் பேசுவோர் நீக்குவர். சாதி பார்த்துச் சண்டை தூண்டுவர்.
அப்போது அவரிடம், கனல் அலையும். புனல் கரையும். தோற்றம் மட்டுமல்ல. பாவேந்தரைப் போல ஆற்றலும் நீளும். ’பாப்பம்மாள் கோவில் இடுகாடு’- பாரதிதாசன் நினைவு மண்டபத்தின் அருகில், நான் சேர வேண்டும்’ அவர் விருப்பத்தை அரசிடம் கேட்டு பெற்றேன். கடலோரம்... கடல் புனல் கரையும்... அந்தக் கரையில் அடக்கமானலும், இவர் உணர்வு அனல் அலையும்.. சிறுவனாக அவர் கரம் பிடித்தேன். என் கரம் பிடித்து என்னோடு வந்தார். தேடுகிறேன் இன்னும் தொடர முடியும்.. நிறைய நிறைய...