தொழில் எதுவுமே சரியாக இல்லாமல் அலைந்து நடந்துகொண்டிருந்த காலம். வீட்டிலிருந்து வெளியே துரத்திவிடப்பட்டிருந்தேன்.

இனிமேல் வீட்டின் படியை மிதிக்கக்கூடாது என்று அப்பா எச்சரிக்கை விட்டிருந்தார்.

காரணம்... சிறிய ஒரு காதல். இறுதியில் வேறு வழியே இல்லாத ஒரு நிலையில் ஓய்வுபெற்ற தேவஸ்தான காசாளரான அனந்தநாராயண அய்யரைச் சென்று பார்த்தேன்.

அனந்தநாராயண அய்யரும் என் தந்தையும் ஒரே அலுவலகத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றியவர்கள்.

Advertisment

நான் தான்தோன்றியாக ஆகிவிட்டபிறகு, சுவாமியைப் பார்க்கும் தைரியமில்லாமற் போனது.

அவர் எனக்கு அறிவுரை கூறி, நல்லவனாக்குவதற்கு முயற்சிப்பார். அதேநேரத்தில் இரக்க மனம்கொண்ட சுவாமி என் வேண்டுகோளை நிராகரிக்கவில்லை. முகுந்தபுரம் கிருஷ்ணராஜா அவர்களுக்கு எழுதப்பட்ட ஒரு சிபாரிசுக் கடிதம் என் கையில் கிடைத்தது. அந்தக் கடிதத்தில் சுவாமி என்னைப் பற்றி எழுதியிருந்த வார்த்தைகள் இவைதான்... "இந்த கடிதத்துடன் வரும் ஆள் பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். என் ஒரு நண்பனின் மகன். ஊர் சுற்றும் பழக்கத்திற்கு அதிகாரியாகி, ஊர் சுற்ற ஆரம்பித்து கொஞ்ச நாட்கள் ஆகிவிட்டன. நிலைமை மிகவும் மோசம். தந்தையும் தாயும் இப்போதும் உயிருடன் இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்று இருப்பது ஒரே மகன்தான். கொஞ்சம் வழிப்போக்கனாக நடந்து திரிந்தான். பயனற்ற செயல்கள் சிலவற்றையும் செய்திருக்கிறான். எனினும், இதுவரை திருட்டுத் தனத்தில் ஈடுபட்டதில்லை.

Advertisment

ss2

எந்தவொரு பணத்தையும் திருடியதாக இன்றுவரை எனக்குத் தெரிந்த அளவில் தகவல் இல்லை. பரம்பரை பரம்பரையாக ஏராளமான சொத்துகளை வைத்திருந்த ஒரு பழமையான குடும்பத்தின் உறுப்பினன். இப்போது சிறிது கஷ்டத்தில் இருக்கிறான்.

இவனிடம் இரக்கம் காட்டவேண்டும். எதுவுமே இல்லையென் றாலும், தரணநல்லூர் மனையிலிருக்கும் குட்டி யானையின் யானைப்பாகனாக இருக்கும் பணிக்காவது உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.'

நான் முகுந்தபுரம் அரண்மனைக்குச் சென்று தம்புரானிடம் திருமுகத்தைக் காட்டி, அனந்தநாராயண அய்யரின் கடிதத்தைப் பணிவுடன் கையில் கொடுத்தேன். அவர் கடிதத்தை வாசித்துப் பார்த்துவிட்டு, அர்த்தத்துடன் என் முகத்தைப் பார்த்து ஒரு ஆழமான புன்னகையைத் தவழவிட்டார்.

கிருஷ்ணராஜா எனக்கு தரணநல்லூர் திருமேனிக்குக் கொடுப்பதற்காக இன்னொரு சிபாரிசு கடிதத்தைத் தந்தார். முற்றிலும் என்னுடைய அப்போதைய சூழல்களை விளக்கி எழுதப்பட்ட ஒரு கடிதம்.

அந்த கடிதத்தில் அவர் அழுத்தமாக எழுதியிருந்தார்....

எப்படியாவது... சில நாட்களுக்காவது ஏதாவது தொழிலைக்கொடுத்து இல்லத்தில் சோற்றைச் சாப்பிட வைக்க வேண்டும் என்று... அவர் முக்கியத்துவம் தரும் வகையில் என்னைப் பற்றி சில பலமான வார்த்தைகளை அந்த கடிதத்தில் எழுதியிருந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. "சிறிய குஞ்ஞி சங்கரன் என்ற குட்டி யானையைப் பார்த்துக்கொள்ளக்கூடிய பணியைக் கொடுத்தால் போதும். சம்பளம் இவ்வளவுதான் என்று இப்போது தீர்மானிக்கவேண்டிய தேவையில்லை. பணி செய்வதைப் பார்த்து திருப்தியடைந்தபிறகு, சம்பளத்தை முடிவு செய்தால் போதும். ஆளை நீங்கள் முழுமையாக நம்பலாம். இவன் யானைப் பாகனாக இருக்கவேண்டிய ஒரு ஆளல்ல.

உயிருடன் இருப்பதற்கு பல பணிகள் என்ற நிலையில் அங்கு வருகிறான். எனினும், ஒரு யானைப் பாகனுக்கு முதலில் இருக்கவேண்டிய மன தைரியம் என்ற விஷயம் இவனுக்கு இருக்கிறது. சோதித்துப் பார்க்கலாம். இவன் கவிஞன். பத்தாவது வகுப்பைத் தாண்டி, சமஸ்கிருதத்திலும் தமிழிலும் சற்று அறிவிருக்கிறது.

தேவைப்பட்டால், அதையும் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம்.

எஞ்சியிருக்கும் நேரத்தில் குழந்தைகளுக்கு ட்யூஷன் கற்றுத் தருவதற்கு இவனுடைய அறிவைப் பயன்படுத்தலாம்.'

முகுந்தபுரம் கிருஷ்ணராஜாவின் கடிதத்துடன் நான் வாழ்ந்து கொண்டிருந்த இடத்திலிருந்து இருபது மைல் தூரத்திலிருந்த தரணநல்லூர் மனையின் பெரியவரைப் பார்ப்பதற்காகச் சென்றேன். அங்கும் பெரியவருக்கு முன்னால் போய் நிற்கும் சடங்குதான் நடந்தது. கிட்டத்தட்ட பகல் வேளை பத்து மணி... கடிதத்தைக் கொடுத்துவிட்டு, வாசலில் முகத்தைக் குனிய வைத்தவாறு தொழுத நிலையில் பணிவுடன் நின்றுகொண்டிருந்தேன்.

பெரியவர், நாடிச்சென்ற என்னை அமரவோ நிற்கவோ கூறவில்லை.

ஆஜானுபாகுவான தோற்றம்.... வயது அறுபதைத் தாண்டியிருக்கும். கம்பீரம் குடிகொண்டிருக்கும் முகம்...

உயர்ந்த, சுத்தமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருக் கும் மனிதர்... படிகள் உள்ள வாசலும் தானிய அறையும் சிற்ப வேலைப்பாடுகளும் உள்ள அரண்மனை...

வரிக்காசேரி, ஆவணப்பறம்பு, தேசமங்கலம், கூடலூர், பூமுள்ளி, ஔப்பமண்ண, நாகேரி, நாறேரி....

செழிப்புகள் நிறைந்த மனைகளின் புகழ் குறையாத காலகட்டம்... தரணநல்லூர் மனையும் செழிப்பானது தான்!

"பெரிய கொம்பன் யானையைப் பார்த்திருக்கியா? தும்பிக்கையை உயர்த்தி வைத்துக்கொண்டிருக்கும் ஆண் யானை...'' பெரியவர் மனையின் பின்பகுதியில் நின்றவாறு கேள்விகளைக் கேட்டார்.

கடவுளின் கருணையால் பதைபதைப்பில்லாமல் பதில் கூறினேன்:

"பார்த்திருக்கேன்.''

"ஒன்று... இரண்டு யானைகளின் பெயர்களைச் சொல்லு.''

"குருவாயூர் கேசவன், கீறங்ஙாட்டு குட்டிராமன், பட்டிமடம் கோபாலன், ஆவணப்பறம்பு...''

"கேட்ட கேள்விக்குப் பதில் கூறினால் போதும்.'' பெரியவர் உடனடியாக மிடுக்கான குணம் கொண்ட மனிதராக மாறினார். பாரம்பரிய பெருமையையும் கவுரவத்தையும் முகத்தில் வெளிப்படுத்திக்கொண்டு மீண்டும் கேள்விக்கணைகளுக்குள் நுழைந்தார்.

"நல்ல லட்சணங்களைக் கொண்டிருக்கும் யானையின் கொம்பின் நிறம் என்ன?''

"பலாவின் விதையைப்போல இருக்கும்... சுத்தமான தங்கத்தில் சிறிது செம்பு கலந்ததைப் போன்ற நிறம்...''

"போதும்... போதும்... புரிந்துவிட்டது.'' கையால் சைகை செய்தவாறு, வாயிலிருந்து வெளியே வரும் வார்த்தைகளை நிறுத்தி வைக்கும்படி கூறினார்.

உடனடியாக நிறுத்திவிட்டேன். சில வார்த்தைகளை திடீரென விட வேண்டியிருந்தது.

"அறிவியல் ஏதாவது படிச்சிருக்கியா?''

"படிச்சிருக்கேன்.''

"சொல்லு...'' அனுமதி தந்தார்.

"அறுபத்து நான்கு கலைகள் இருக்கின்றன. நான்கு வேதங்கள்...ஆறு சாஸ்திரங்கள்... பிறகு... பதினெட்டு புராணங்கள் வேறு.''

"பட்டியல் முடிஞ்சதா?'' நகைச்சுவை கலந்த ஒரு தாங்கிக்கொள்ள முடியாத தன்மை அந்த கேள்வியில் இருந்தது.

"அனுமதி அளித்தால், கற்ற வித்தையை செயல் வடிவில் காட்டுறேன்.''

"மற்றவனை அடிப்பியா?'' கேள்வியுடன் முகத்திலிருந்த கடுமையை விலக்கிவிட்டு, பெரியவர் தானே சிரிக்க ஆரம்பித்தார்.

"அடிப்பேன்.'' தயக்கமே இல்லாமல் கூற வேண்டியதிருந்தது.

"எந்த அளவிற்கு?''

"மூன்று ரூபாய் எடைக்கு...''

தரணநல்லூர் மனையின் இனிய இதயம் கொண்டவரும் நல்ல மனிதருமான பெரியவர் வயிறு குலுங்கும் அளவிற்கு சத்தமாக சிரித்து ஆரவாரம் உண்டாக்கினார்.

திடீரென தான் இந்த அளவிற்கு வீட்டில் அப்படி சிரித்திருக்கக் கூடாது என்ற சிந்தனையுடன் சிரிப்பை நிறுத்திவிட்டு, மீண்டும் காரியத்திற்குள் நுழைந்தார்.

"இங்கு... வீட்டில் நாங்கள் மிகவும் அன்புசெலுத்தி வளர்க்கும் ஒரு யானைக் குட்டி இருக்கு. குட்டி யானை...

பெயர்... குஞ்ஞி சங்கரன். குஞ்ஞி சங்கரனை கட்டப் பட்டிருக்கும் இடத்திலிருந்து அவிழ்த்துக் கட்டி பால் தந்துவிட்டு, மீண்டும் கட்டணும். இந்தச் செயலை மூன்று தடவை திரும்பத் திரும்பச் செய்யணும். முடியுமா?'' பணி பரவாயில்லையே! மனதில் நினைத்தேன்.

யானைக் குட்டியைச் சற்று பார்த்துத்தான் கூறமுடியும். அளவில் பெரியதாக இருந்தால், அருகில் செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும்.

மனதிற்குள்ளிருந்த படபடப்பையெல்லாம் அழுத்தி வைத்தவாறு யானை கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு தைரியமாகச் சென்றேன்.

மரக்கொம்பில் கட்டப்பட்டிருந்த குட்டியானையைச் சென்று பார்த்தேன். பெரிய அளவில் குறும்புத் தனம்...

சிறிதும் அடக்க குணமே இல்லாதவன்... யார் அருகில் சென்றாலும், தும்பிக்கையை உயர தூக்கியவாறு அருகில் வருவான். முன் தலை முழுவதும் சிறு சிறு ரோமங்கள். குழந்தை முளைத்து வளர்ந்து கொண்டி ருக்கிறது.

மிகவும் அருகில் சென்று தும்பிக்கையைத் தொட்டுத் தடவினேன்.

தொடர்ந்து நெற்றியின்மீது கையை வைக்க முயன்றபோது, குட்டி முன்னோக்கிப் பாய்ந்து ஒரு பிளிறலை எழுப்பியது.

ஆள் சிறியவனாக இருந்தாலும், பலம் கொண்ட வனாக இருந்தான்.தலையின் முன்பகுதியை வைத்து வயிற்றைத் தாக்கியிருப்பான்.

பின்னங்கால் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததால், வயிற்றில் இடி கிடைக்கவில்லை என்பதே உண்மை. இவனை எப்படி இங்கிருந்து மாற்றிக் கட்டுவது? சிந்தனை ஓடியது.

முன்னங்கால்களைக் கட்டாமல் இந்த அதிக குறும்புகள் செய்பவனை எப்படி வாசல்வரை நடத்திக் கொண்டு செல்வது? அழைத்தாலோ‌ கூறினாலோ திரும்புவானா? அறிமுகமற்ற ஒருவன் ஏதாவது கூறி னால், குழந்தையான குஞ்ஞி சங்கரன் கேட்பானா?v பெரியவரிடம் பெரிதாக வாயைத் திறந்து அவிழ்த்து கட்டி விடுவதாக வீர வசனம் கூறியவன்தான்...

இது வயிற்றுப் பிழைப்பிற்கான பிரச்சினையாக இருப்பதால், இந்த சோதனையிலிருந்து பின்னோக்கிச் செல்வதற்கும் வழியில்லை.

முதல் பணிக்கான இந்த நேர்காணலில் தோல்வி யடைந்தால், பிறகு... நிற்பதற்கான வழியில்லை. அனந்த நாராயண அய்யரும் முகுந்தபுரம் தம்புரானும் கொடுத்த தகுதிச் சான்றிதழ்கள் பொய்யானவை என்று பெரிய திருமேனி கருதுவார்.

குருநாதர்களான பெரியவர்களை ஆழமாக மனதில் நினைத்துக் கொண்டே, வருவது வரட்டும் என்ற மனநிலையுடன் மீண்டும் யானைக் குட்டியின் அருகில் சென்றேன்.

அதிகபட்சம் போனால், பெரிய திருமேனி இருக்கும் வாசற் பகுதிக்கு நூறடி தூரமே இருக்கும். எதைக் கொடுத்தால் இந்தச் சிறிய பையனை வசீகரிக்கமுடியும்? சர்க்கரை, தேங்காய், பழம், கரும்பு... இவை அனைத் தும் யானைக் குட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும் என கேட்டிருக்கிறேன்.

ஆனால், தற்போதைக்கு இந்தப் பகுதியில் கிடைக்கக் கூடியது பச்சை நீர் மட்டுமே... ஒரு பாத்திரம் நிறைய நீரை வைத்துக் கொடுத்தால், யானைக்குட்டி தும்பிக்கையால் எடுத்துக் குடிக்குமா? ஒருவேளை இந்தச் சிறிய குறும்புக்காரனுக்கு நீர் தாகமே இருக்காது என்று யாருக்குத் தெரியும்?

இறந்துவிட்ட பெரியவர்களை மட்டுமல்ல... தர்ம தெய்வங்களையும் மனதிற்குள் நினைத்துப் பிரார்த்தித் தேன்.

குஞ்ஞிசங்கரன் என்ற இந்த குட்டி யானை எனக்குக் கீழ்ப்படிந்து நடந்தால்... கூறியதைக் கேட்டு நடந்தால்... விநாயகருக்கு நூற்றியொரு அப்பம் அளிப்பதாக நேர்ந்து கொண்டேன்.

சாஸ்தாவிற்கு ஒரு தேங்காய்...

தரணநல்லூர் களத்திலேயே விநாயகர் சிலை இருக்கிறது. மகா கணபதியே... இங்கு உள்ளவனைக் காப்பாற்றவேண்டும்! கண்களைத் திறந்து வைத்தவாறு சிறிய ஒரு கழியுடன் யானைக்குட்டிக்கு அருகில் சென்று செவியைப் பிடித்தேன்.

செம்புப் பாத்திரத்தில் பிடித்து நிறைக்கப்பட்டிருந்த நீரை எடுத்து பருகுவதற்காக முன்னால் நகர்த்தி வைத்தேன்.

எந்தவொரு தயக்கமும் இல்லாமல் செம்புப் பாத்திரத்திலிருந்த நீரில் பாதியை நின்றிருந்த இடத்திலிருந்தே பருகினான். இரு முறை தும்பிக்கையால் நீரை எடுத்து தன் தலையில் ஊற்றினான். மிகவும் புத்திசாலி...

மனதில் மதிப்பு உண்டானது.

"இனி... என் சின்ன மகனுக்கு பழம் வேண்டுமா?'' சிறிய கோவிந்தனுக்காக முன்கூட்டியே மடியில் சுருட்டி வைத்திருந்த இரண்டு வாழைப் பழங்களை எடுத்து நான் சிறிய வாய்க்குள் திணித்தேன்.

ஒவ்வொரு பழத்தையும் விழுங்கும்போது, "அம்... உம்...' என்றொரு சத்தத்தை நான் எழுப்பினேன். சிறிய குழந்தைகளை உற்சாகப்படுத்தி அன்னைமார்கள் சாப்பிட வைப்பதைப்போல.... சிறிய கோவிந்தனைப் பதினைந்தே நிமிடத்தில் கைக்குள் கொண்டுவந்தேன். சிறிய பையனின் நாக்கு இனித்தவுடன், அவன் அடிபணிந்திருக்கவேண்டும்.

சிறிய கோவிந்தனை யாரும் இதுவரை கவனம் செலுத்திப் பார்த்ததில்லை என்பதுதான் உண்மையோ?

அவனுக்கு இந்த வயதில் தேவை வாழைப் பழமும் பாலும் மோரும் தயிரும்தான். ஆனால், பெரிய திருமேனியின் இல்லத்திலிருந்து அவனுக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது தென்னை மட்டையும் நீரும் மட்டும்தானோ? சிறிய யானைக்குட்டிகளுக்கு தென்னை மட்டையைப் சாப்பிடுவதற்குக் கொடுத்தால், மலச்சிக்கல் பிரச்சினை உண்டாகும் என கேட்டிருக்கிறேன்.

பெரியவருக்கு இப்படிப்பட்ட அறிவியல் விஷயங்கள் தெரியாமல் இருக்குமோ? யாரோ என்னைச் சோதித்துப் பார்ப்பதற்காக முன்கூட்டியே தெரிந்துகொண்டு செய்த செயல்களாக இருக்குமோ?

பெரியவரின் கட்டளை என்பது யானைக் குட்டியை ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து அவிழ்த்து மாற்றிக் கட்டுவதுதான்.

யானைக்குட்டியை எப்படியெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொள்வது என்பதைப் பற்றி அவர் கேட்கவேயில்லை.

கேட்காததற்கு பதில் கூறினால், கூறாத காரியத்தை அங்கு நுழைந்து செய்தால், பெரியவருக்குக் கோபம் வந்துவிடும். தரணநல்லூர் பெரிய திருமேனி...

நெருங்கும்போதும், விலகும்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிருஷ்ணராஜா முன்கூட்டியே எச்சரித்திருந்தது ஞாபகத்தில் வந்தது. யானைக் குட்டியை அவிழ்த்துக் கட்டினாலும், தரணநல்லூர் பெரிய திருமேனியுடன் எப்படி நெருங்கிப் பயணிப்பது என்ற விஷயத்தில் தடுமாற்றம் இருந்தது.

பரவாயில்லை... இந்த யானையை மனிதனால் கையாள முடியுமெனில், ஏன் மனிதனிடம் விட்டுக் கொடுத்து வாழ முடியாது? சூட்டைக் கிளப்பும் பல சிந்தனைகளும் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

சிறிய கோவிந்தனின் தும்பிக்கையின் வெளிப்பகுதி யைப் பாசத்துடன் தடவி விட்டேன். தன்னுடைய பிறக்காத செல்ல மகனிடம் பழகுவதைப் போல பழகவேண்டும். முதலில் பார்த்தவுடன் வயிற்றில் இடித்து தாக்குவதற்காக முன்னோக்கி வந்தான். வாழைப் பழத்தைச் சாப்பிட்டபிறகு, மிகவும் நட்பாகிவிட்டான். கடவுளின் அருள் என்பதைத் தவிர, என்ன கூறுவது? சிறிய கோவிந்தன் சொன்னதைக் கேட்கும் குழந்தையைப்போல நடந்து கொண்டான்.

"சின்ன கோவிந்தா... தங்க மகனே... நான் இந்த சோதனையில் வெற்றி பெற்றுவிட்டால், நான் உன்னை என் தங்க மகனைப்போல பார்த்து வளர்ப்பேன். இளம் வயதிலேயே தன் தாயை இழந்துவிட்ட ஒரு குழந்தையை அதன் அன்பின் பெட்டகமான தந்தை தழுவி, வருடி வளர்ப்பதைப் போல...'' அது ஒரு யானைப்பாகனின் சாதாரண வாய்மொழியாக இருக்கவில்லை.

உயிர்களின்மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் நல்ல மனம் கொண்ட ஒரு மனிதனின் இதயத்திலிருந்து வெளியே வந்த வார்த்தைகள்...

யானை கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து சிறிய கோவிந்தனை தரணநல்லூர் பெரிய திருமேனிக்கு முன்னால் கொண்டுபோய் நிறுத்தினேன்.

"இனிமேல் நான் இவனை எங்கு வேண்டுமானா லும், முன்னங்கால்களைக் கட்டாமல் கொண்டு போகலாம்.'' பணிவுடன் திருமேனிக்குப் புரிய வைத்தேன்.

அன்றிலிருந்து நான் ஒரு யானைப்பாகனானேன்.

திருமேனி மீண்டும் பழைய மாதிரியே என்னைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

நம்முடைய சிறிய கொம்பன் எப்படி இருக்கிறான்? பெரியவரின் கண்களில் ஒளிர்ந்து நின்றுகொண்டிருந்த கேள்விக்கு பதில் கூறவில்லை. முதல் முறையாகப் பார்த்த நிமிடத்திலேயே அவர் கூறிய ஒரு வார்த்தை மனதிற்குள் கிடந்து அப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தது...

"உயிருடன் இருப்பதற்கு பல பணிகள்!'

நானும் சிறிய கோவிந்தனும் சேர்ந்து தரணநல்லூரில் வாழ்ந்த ஆனந்த அனுபவங்கள் நிறைந்த நாட்கள்! கஞ்சா நிறைக்கப்பட்ட பீடியின் போதையில் யானைப்பாகனாக வாழ்ந்த அந்த இனிய நாட்கள்! எப்போதும் போதையிலேயே இருந்தேன். எது எப்படியோ... போதை இல்லாமல் யானைப் பணியைச் செய்ய முடியவில்லை.

எனக்கு அங்கு தரணநல்லூர் பெரிய திருமேனி அனைத்து வகையான சுதந்திரங்களையும் அனுமதித்துத் தந்திருந்தார். ஒரு யானைப்பாகன் என்ற பதவிக்கும் மேலாக யானையின் நலம் நோக்கும் மேற்பார்வையாளர் என்ற பதவியில் என்னை அமர்த்தினார். யானை காரியங்களுக்கு மத்தியில் ஏராளமான சேனை காரியங்களுக்கும் திருமேனி என்னைப் பயன்படுத்தினார்.

தரணநல்லூர் பகுதியில் பிடி யானைகளைக் கவனித்துப் பாதுகாக்க வேண்டிய சுமை வந்து சேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பில் இருபது வருடங்கள் கடந்தோடிய பிறகு,நான் அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டேன்.