காட்டுமிராண்டியாய் வாழ்ந்த மனிதன் நாகரீக வளர்ச்சியால் தன்னை நெறிப்படுத்திக் கொண்டான். இன வேறுபாடும் வகுப்புக் கலவரங்களும் இல்லாத சமயம் அது. மக்கள் தங்களின் சுய முன்னேற்றத்தை மட்டுமே சிந்தித்தார்கள். வீடும் காடும் நாடும் மிகச் செழிப்பாக வளர்ச்சியடைந்தது. சாதிக் கலவரங்களும் பிரிவினைகளும் தலை தூக்காமல் மனித மனங்கள் இணைந்து செயல்பட்ட காலகட்டம் அது. பண்டைய காலத்தில் முடியாது என்று முடிவெடுக்கப் பட்டவை கள் எல்லாம் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற் றத்தால் மாற்றியமைக்கப்பட்டது. இன்றுவரை இந்த விஞ்ஞான உலகம் பல அதிசயங்களையும் அற்புதங் களையும் நிகழ்த்தி வருகிறது. ஆனால் அறிவு வளர்ந்த வேகத்திற்கு மனிதப் பண்பு வளர்ந்திருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆதியில் இல்லாத சாதி இடையில் புகுந்து தொழிலின் அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் என்று வர்ண வேறுபாடுகளை சமூகத்திற்குள் புகுத்தியது. நிறவெறி, மத வெறி, இன வெறி, சாதி வெறி மற்றும் மொழிவெறி என்று இத்தகைய வேறுபாடுகள் தான் இன்று நம் சமூகத்தைப் பிரித்தாள்கிறது. இடையில் வந்து ஒட்டிக்கொண்ட சாதி சமய வேறுபாடுகள் இன்னும் முடிந்தபாடில்லை. பார்த்தால் பாவம் தொட்டால் தீட்டு என்று வேறுபட்ட இன மக்களிடையே உண்டான பிரிவினை இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது. சைவ சமண சமயங்களுக்கு இடையே அன்று பூசல் வந்து நாட்டின் அமைதி குலைந்தது. மனித மனதைப் பக்குவப்படுத்த உருவாக்கப்பட்டது தான் சமயங்கள். சமயங்கள் பல வேறாய் இருந்தாலும் எல்லா சமயங்களும் அன்பை மட்டுமே போதித்தன.
"வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட் டல்லான்
மாறுபடுங் கருத்தில்லை; முடிவின் மோன
வாரிதியின் நதித்திரள் போல் வயங்கிற் றம்மா!"
என்று வியந்து பாடினார் தாயுமானவ சுவாமிகள்.
எல்லா நதிகளுக்கும் கடல் இடம் கொடுத்திருப்பது போல எல்லா சமயத்திற்கும் முழு முதல்வன் இடம் கொடுத்திருக்கிறான் என்று உணர்ந்து கொண்டால் இங்கே சமயப் பூசலுக்கான இடமில்லை என்கிறார் தாயுமானவர். ஆனால் இவையெல்லாம் ஏட்டுச் சுரக்காயாகவே போய்விட்டது. சமயப் பிரிவினைகளைத் தாண்டி சாதிப் பிரிவு, சாதிக்குள் சாதி என்று மனித மனம் சாதி வெறியில் வேரூன்றி இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. இந்த சாதிய உணர்வுதான் மனித முன்னேற்றத்தைத் தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்பதைப் படித்தவர்களும் பாமரர்களும் உணரவே இல்லை என்பது தான் உண்மை. மனிதர்கள் தான் தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பதற்காகவே சாதிகளை உருவாக்கினார் கள் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் சாதிய சமூகத்தை உருவாக்குவதும் தூண்டி விடுவதுமே இன்றைய பிழைப்பாகப் போய்விட்டது. இதை எதிர்த்துக் குரல் கொடுக்க இன்றைய படைப்பாளிகள் சிலர் தயங்கினாலும் நம் தமிழ் இலக்கியங்கள் மிகச்சிறப்பாக சாதியை மறுத்திருக்கிறது என்பது போற்றுதற்குரியது. சில சுயநல விரும்பிகள் தான், தன் வயிற்றுப் பிழைப்புக் காக நால்வகைச் சாதியையும் அதற்குள் பல பிரிவுகளையும் கொண்டு வந்தார்கள் என்பதை
"தொல்லுலகில் நால்சாதி அனேகம் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத் தானே" (சூத்திர ஞானம்)
என்று வால்மீகர் ஞானம் மிகத் தெளிவாக
எடுத்தியம்புகின்றது.
"நான் என்றும் நீ என்றும் சாதிபல வென்றும்
நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே''
(அகத்தியர் ஞானம்)
என்று பாடுகிறார் அகத்தியர்.
சாதியும் தீண்டாமையும் சமூகச் சீர்திருத்த வாதிகளால் களையெடுக்கப்பட்டு விட்டது என்று சொல்ல முடியாது. இரட்டைக் குவளை முறை சட்டப்படி ஒழிக்கப்பட்டது என்றாலும் அது மனதளவில் ஒழிக்கப்பட வில்லை என்பதுதான் உண்மை. சாதியும் இனவெறியும் பலரின் வீட்டு முற்றங்களில் மிகப் பாதுகாப்பா கத் தொங்கிக் கொண்டு தான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டோ ருக்கு குடிநீர் கிடையாது; கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது; பொது நிகழ்வில் கல்வி நிலையங்களில் அனுமதி கிடையாது; காலில் செருப்பு அணியக்கூடாது என்று பழமையான மூடச் சடங்கு சம்பிரதாயங் களால் நிரம்பி இருந்த சமூகம் இன்று அதைவிட மோசமான நிலையில் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தான் மறைக்க முடியாத உண்மை. இன்று நம் சமூகத்தில் நடக்கும் சாதிக்கு எதிரான போராட்டத்திற்குப் பின்னாலும் சாதி மட்டும்தான் இருக்கிறது. சாதியக் கொடுமையைச் சொல்லி அதன் அவலங்களை அம்பலப்படுத்தி எடுக்கப்படும் விழிப்புணர்வு ஊட்டக்கூடிய திரைப்படங்கள் வந்தாலும் அதை எதிர்க்கும் பின்புலம் சாதியாகவே இருக்கிறது. சாதியை எதிர்த்து சமூகத்தில் ஒருவர் குரல் கொடுத்தால், குரல் கொடுப்பவன் எந்த சாதிக்காரன் என்று தான் நம் சமூகம் ஆராய்ச்சி செய்கிறதே தவிர சாதிக்கு எதிரான குரல் கடைசிவரை ஒலிக்கப் படாமலேயே இருக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?, தமிழில் அர்ச்சனை செய்யலாமா? போன்ற கேள்விகளெல்லாம் சாதியின் போர்வைக்குள் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறது. சாதியைப் பிரச்சனையாக பார்த்த சமூகம் மாறி இன்று சாதியையே பாதுகாப்பாக மாற்றிப் பார்க்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சாதிப்பிரிவுகள் இன்று குழுக்களாக மாறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சாதிப் பாகுபாடுகளை இலக்கியம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. சைவ சமய இலக்கியமான பெரியபுராணம் கூட சாதிப் பிரிவினையை அங்கீகரிக்கவில்லை. சேக்கிழார் சுட்டும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகளின் மனதில் சாதிய உணர்வு இருந்தது. அதை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் கனவில் இறைவன் வந்து "தொண்டு செய்வோர் அனைவருமே உயர்வானவர்" என்பதை உணர்த்தினார். பின்பு, நமிநந்தியும் மனம் திருந்தினார் என்பது புராணக் கதை.
"அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே.''
என்று மனதில் இறைவனை மட்டுமே நினைப்பவர்கள் தான் உயர்ந்தவர்கள். குலம் பெரிதல்ல; குணம்தான் பெரிது என்பதை திருநாவுக்கரசர் தேவாரம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்''
என்று சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார் ஒரு சைவப் பெரியார்.
"சாதிகுலம் பிறப்பென்னும் கழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு''
என்று குலம் கோத்திரம் கொண்டு இறைவனை அடைய முடியாது என்பதை ஆணித்தரமாக திருவாசகத்தில் பதிவு செய்கிறார் மாணிக்கவாசகர்.
சமய இலக்கியங்கள் கூட சாதிவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பது சிந்தனைக்குரியது. சாதி வெறியும் மதவெறியும் மக்கள் தங்களுக்குள்ளேயே பின்னிக்கொண்ட சதி வலைகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
"உண்மையின் பெயர் தெய்வம் என்போம்" என்று பாடினான் முண்டாசுக் கவி பாரதி. பல தெய்வங் களின் பெயரைச் சொல்லி நாம் சண்டையிட்டுக் கொண்டி ருக்கிறோம். தெய்வம் என்பது ஒன்றுதான்; 'பால்' என்ற ஒரு திரவப் பொருளிலிருந்து தான் தயிர், மோர், வெண்ணை, நெய் போன்றவை உற்பத்தியாகின்றன. அதுபோல், ஒரே மனித ஜாதி தான்; உருவங்கள் மட்டும் தான் வேறு. ஒரே தெய்வம் தான் பல்வேறு தெய்வங்களாக நாம் வணங்குகிறோம். இந்தச் செய்தியை வாலைக்கும்மி என்ற நூலில் சித்தர் மிக அழகாகப் பாடியிருக்கிறார்.
"சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தான் என்று ஒருவுடல் பேதமுண்டோ? ஓதிய பாலதில் ஒன்றாகி அதிலே உற்பத்தி நெய்தயிர் மோராச்சு!''
என்று தெய்வம் ஒன்றுதான் என்று அழகாக உவமையுடன் பாடி இருக்கிறார் கொங்கணச் சித்தர்.
"சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்றார் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். பாரதி, பாரதிதாசன் இவர்களுக்கெல்லாம் முன்பே சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் இராம-ங்க அடிகளார் தான் என்றால் அது மிகையாகாது.
"சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே.''
என்று சாதி சமய வேறுபாடுகளை முற்றிலும் களைந்தவர் இராமலிங்க அடிகளார் என்ற வள்ளலார். சமரச சன்மார்க்கத்திற்கு வழிகாட்டிய வள்ளலார் வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவி ஏழைகளின் வயிற்றுப் பசியாற்றினார். "இட்டார் பெரியோர்; இடாதார் இழி குலத்தோர்" என்று ஏழையின் பசி தீர்க்க உணவிடுபவனே உயர் குலத்தோர்; அவ்வாறு உணவிடாதவன் இழிகுலத்தோர்; என்றாள் ஔவைப்பாட்டி. 'ஏழைக்கு உணவளிக்காதது மதமே அல்ல' என்றார் சுவாமி விவேகானந்தர். "இட்டுப்பார் உண்டவர்கள் இன்புற்று இருக்கையிலே தொட்டுப்பார் உன் நெஞ்சில் தோன்றும் இன்பம்" என்று விருந்தோம்பலின் சிறப்பை அழகாகச் சொன்னார் புரட்சிக்கவி பாரதிதாசன். நம் வயிற்றுக்கு சாதி கிடையாது. அன்றாடம் நாம் உண்ணுகிற அரிசி பருப்பில் இருந்து காய்கறிகள் பால் பழங்கள் வரை அறுவடை செய்து உற்பத்தி செய்து தருபவன் என்ன சாதி என்று நமக்குத் தெரியாது. நாம் அணியும் உடை அணிகலனிலிருந்து செருப்பு வரை அதை செய்துக் கொடுத்தவனின் கை என்ன சாதி என்று நமக்குத் தெரியாது. சாதி பார்த்து தான் நாம் புசிக்க வேண்டும் என்றால் ஒரு துளி உப்பைக் கூட நம்மால் சுவைக்க முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சாதி சமய மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கடுமை யாகக் குரல் கொடுத்தவர் சிவவாக்கியர் என்ற சித்தர்.
"பறைச்சியாவது ஏதடா?
பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும்
பகுத்துப்பாரும் உம்முளே!''
பிறக்கும்போதே யாரும் பணக்காரனாகவும் பறைச் சியாகவும் பிறப்பதில்லை. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற வேறுபாடும் இங்கில்லை. இதைப் பகுத்துப் பார்க்கும் அறிவு நமக்கு வேண்டும். இன்றைய நவீன உலகில் நம் மக்கள் எதையோ சாதிக்கப் போகிறார் கள் என்று பார்த்தால் திரும்பவும் சாதிக்கே போகிறார் கள் என்பதுதான் வேதனைக்குரியது. என் சாதிக்காரன் என்று ஒருவர் மற்றொருவரை அம்பலப்படுத்திக் கொள்வதைப் பெருமையாக நினைக்கிறது நம் சமூகம்.
"சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்
வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்
வேண்டாத மனைதனிலே உறவு செய்வோம்''
என்று சாதியைக் குப்பைமேட்டில் தீ மூட்டுவோம்; மக்கள் கூடும் பொதுச் சந்தையில் சாதிக்கொடுமை ஒழிந்தது என்று சமரசம் எனும் செங்கோலை நிலைநாட்டி ஒற்றுமையைக் கொண்டு வருவோம் என்று ஆத்திரம் பொங்க பாடியிருக்கிறார் பாம்பாட்டி சித்தர். சாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பல மனிதர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடைபெறும் சாதி மறுப்புத் திருமணங்களை மனதார அங்கீகரிப்பதில்லை. அதிலும், தன் சாதியை விட உயர்ந்த சாதி ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்யும்போது மிகப்பெரிய அளவில் மனக் கசப்புகள் உருவாவதில்லை. ஆனால் தன்னைவிட தாழ்ந்த சாதிப் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்ய முற்படும் போது தான் சாதிவெறி கடுமையாகத் தலைதூக்குகிறது. 'மனிதருக்குள் சாதி இன வேற்றுமை பார்ப்பது அறிவீனம்; அது இயற்கைக்கு மாறானது' என்று சொல்கிறது ஞானவெட்டியான் என்ற சித்தர் பாடல்.
"இஞ்சியிட மஞ்சள் உண்டோ
ஏலம் இடச் சுக்காமோ?
நஞ்சுகந்த எட்டியிலும்
நல்லஎலு மிச்சை யுண்டோ?
துஞ்சு புகழ் பூசை செய்யும்
சுந்தரரே என் குலத்தில்
வஞ்சியை நீர் சேர்ந்ததனால் மைந்தன் தரியாதோ''
இஞ்சியைப் பயிரிட்டால் மஞ்சளா விளையும்; இஞ்சி தானே விளையும். ஏலம் பயிரிட்டால் சுக்கா விளையும்; ஏலம் தானே விளையும். விஷம் கொண்ட எட்டி மரத்தில் நல்ல எலுமிச்சைப் பழம் தோன்றுமா? எட்டிக்காய் தானே விளையும். மிகுந்த புகழுடைய பூசை செய்யும் சுந்தரரே என் குலம் சார்ந்த பெண்ணை நீ திருமணம் செய்தால் நல்ல மகன் பிறக்க மாட்டானா? நிச்சயம் பிறப்பான். ஆகையால், உனக்கும் எனக்கும் சிறிதும் வேற்றுமை இல்லை என்று பாடுகிறார் ஞானவெட்டியான்.
"அந்தணர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்பு வணிகர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களமர், கிணைஞர், கிணைமகள், குறவர், குறத் தியர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகன், நுளையர், பரதவர், பறையர், பாடினி பாணர், பாணிச்சி, புலையர், பூண்செய் கொல்லர், பூவிலைப் பெண்டு, பொது விலைமகளிர், பொருநர், கடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யவணர், யாழ்ப்புலவர், யானைப் பாகர், யானை வேட்டுவர், வட வடுகர், வணிகர், கலைஞர், விலைப்பெண்டிர், வேடர்" போன்ற பலவகையானத் தொழில் பிரிவினர் சங்க காலத்தில் இருந்ததாக உ.வே. சாமிநாதையர் குறிப்பிடுகிறார். அதேசமயம் இந்த எல்லாத் தொழில் பிரிவினரையும் சமமாகக் கருதும் எண்ணமும் சங்கப்பாடல்களில் இருந்துள்ளன. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடலின் கடைசி வரியில் "பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" என்று பெரியவர் சிறியவர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார். சங்க அகப்பாடல்களில் கூட காதல் பாடல்களில் எந்தவித சாதிப் பாகுபாடும் இடம்பெறவில்லை. ஆனால், சங்ககாலத்திற்குப் பிறகு வந்தவர்கள் தொழில், இனம், மொழி மற்றும் பிறப்பின் அடிப்படையில் சாதி என்னும் சுவற்றை மிகப்பெரிதாக எழுப்பி விட்டார்கள்.
மனுசாஸ்திரம் சொன்னது சரியா ?தவறா? பெரியார் சொன்னது சரியா? தவறா? புதைந்திருக்கும் புராண வேதத் தத்துவங்கள் சொல்வது என்ன? என்று தேவையில்லாத ஆராய்ச்சிகள் செய்து சர்ச்சைகளை உருவாக்கி நமக்குள் மேலும் பிரிவினையை வளர்ப்பது நம் நேரத்தை நாமே விரையம் செய்வதற்குச் சமம். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தர்க்கம் செய்து சர்ச்சையில் முடியுமே தவிர அதனால் நமக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்." என்று செய்யும் தொழிலில் வேறுபாடு இருந்தாலும் பிறப்பால் அனைவரும் சமம் என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர். சாதி எனும் மரத்தில் அறையப்பட்ட நம் மக்கள் இன்னும் எழுந்திருக்கவே இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
நம் தமிழும் தமிழ் இலக்கியமும் ஒருபோதும் சாதிய சமூகத்தை அங்கீகரிக்கவில்லை. அவை, அன்பையும் அருளையும் மட்டுமே போதித்தன. தமிழிலக்கியம் ஒட்டுமொத்த சாதிவெறிக்கும் எதிராகக் குரல் கொடுத்து சாதிய வேரைப் பிடுங்கி எறிந்து இருக்கிறது என்பது தான் மறுக்கமுடியாத உண்மை. அரசியலில் சாதி, திரைப்படத்தில் சாதி, கல்வி நிலையங்களில் சாதி, அலுவலகங்களில் சாதி, விழாக்களில் சாதி என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது இந்த சாதி என்ற பெருந் தொற்று. புதிதாக வந்த கொரோனா என்ற உயிர்க்கொல்லிக்குக் கூட மருத்துவர்கள் மருந்து கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் பல ஆண்டுகளாக மக்கள் மனதில் புகுந்து தோய்ந்து போன சாதிவெறி என்ற உயிர்க்கொல்லிக்கு நம் சமூகம் இன்னும் மருந்து கண்டு பிடிக்கவே இல்லை.
பிறருக்குத் துன்பம் வரும்போது அதைத் தீர்ப்பது தான் மனிதப் பண்பு. ஒரு கையால் உழைப்பது கடினம் என்பதால் தான் கடவுள் நமக்கு இரண்டு கைகளையும் படைத்திருக்கிறான். அந்தக் கைகள் பிறருக்குக் கொடுப்பதற்குத் தான். ஈகைப் பண்போடு வாழ்பவன் தான் மனிதரில் உயர்ந்தவன்.
"ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம்விலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''
(பாத்திரம் பெற்ற காதை:92:96)
என்று பசிப்பிணி தீர்ப்பதையே சிறந்த அறம் என்று போற்றுகிறது மணிமேகலை. பிறர் பசியைத் தீர்க்க முற்படும் போது மனித மனங்களுக்கு உள்ளே சாதிக்கும் மதத்துக்கும் என்ன வேலை. மணிமேகலையின் கையில் அட்சயப் பாத்திரம் என்ற அமுதசுரபி இருந்ததால் சாதி சமயம் பாராமல் அள்ளி அள்ளி அன்னமிட்டாள். அன்னமிட்டதற்குக் காரணம் அட்சயப் பாத்திரம் மட்டுமல்ல. எல்லோரையும் சமமாக பாவிக்கும் பண்பும் அன்புடன் நேசிக்கும் மனமும் தான். இன்றைய சூழலில் அட்சயப் பாத்திரங்களுக்குப் பஞ்சமில்லை. சாதி சமய வேறுபாடின்றி அள்ளிக் கொடுக்கும் மணிமேகலைகளைத் தான் காண முடிவதில்லை. இலக்கியங்கள் சாதியை ஒட்டுமொத்த மாக வேரருக்கத் தான் செய்திருக்கின்றன. ஆனால் மனித மனங்கள் மட்டும் தான் அதை மீண்டும் மீண்டும் அறுவடை செய்துக் கொண்டே இருக்கிறது. அடித்தட்டு மக்களின் பசியும் மேல்தட்டு மக்களின் சாதி வெறியும் தன் நீண்ட நெடிய வரலாற்றை எழுதிக் கொண்டே இருக்கிறது. அடுத்த தலைமுறை சாதியைப் பிடிக்குமா இல்லை சாதனைப் படைக்குமா என்பது தான் நம் அனைவரின் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.