ம் மனிதகுலம் சந்திக்காத போராட்டங்கள் இல்லை; காணாத களங்கள் இல்லை. அனுவிக்காத இழப்பில்லை. அடையாத இன்னல்கள் இல்லை. சுமக்காத துன்பங்கள் இல்லை. அடையாத தோல்விகளும் இல்லவே இல்லை.

அத்தனையும் தாண்டி, அறிவியலால் இதுவரை இயற்கையைக் கட்டி ஆண்டிருக்கிறது மனித இனம். குறிப்பாக நமது முன்னோர்கள், இயற்கைப் பேரிடர்களை, ஆபத்தான நோய் வகையறாக்களை, இயல்பாக எதிர்கொண்டும், முறியடித்தும் முன்னேறியிருக்கிறார்கள்.

நேற்றைகளை வென்றெடுத்த நாம், இன்று இந்த விஞ்ஞான யுகத்தில், கொரானா என்னும் கொடிய அரக்கனின் பிடியில் சிக்கி நிம்மதியை இழந்துத் தவித்துவருகிறோம்.

ஏன், அந்தக் காலத்தில் நுண்ணுயிரிகள் இல்லையா? நம் முன்னோர்கள் இப்படியா அஞ்சி நடுங்கினார்கள்?

Advertisment

அந்தக் காலத்திலும் வைரஸ்கள் இருந்தன.

அதை எதிர்கொள்ளும் சக்தியும் அவர்களின் உடலில் இருந்தது. அதனால் அவற்றை நம் முன்னோர் கள் வென்றிகொண்டனர். ஆனால் அவர்களின் வாரிசான நமது உடல் நிலவரம், கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மிரள்கிறது. துன்ப துயரங்களை அனுபவிக்கிறது. நாகரீகம் வளர்ந்த சூழலில் ஏன் நம் உடலில், அன்று இருந்த எதிர்ப்புச் சக்தி குறைந்தது? அதற்கு மிக முக்கிய காரணம், நம் உணவு முறை மாறியது தான்.

உணவு என்பது, ஒரு செல் உயிரினம் முதல் மாபெரும் உயிரினம் வரை அனைத்திற்கும் தேவையானது. ’கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் இரை தருவான் இறைவன்’ என்பார்கள். இறைவன் தருகிறானோ இல்லையோ, இயற்கை தரும். இயற்கையின் படைப்பை ஆராய்ந்தால் பிரபஞ்சப் பெரு உண்மை விளங்கும்.

Advertisment

*

நம்முடைய முன்னோர்கள், மிகச்சிறந்த மருத்துவ அறிவைப் பெற்றிருந்தனர் என்பது பெருமிதத்திற்குரியது. நம் இலக்கியங்களே அவர்களின் மருத்துவ அறிவை உணர்த்தி வியக்கவைத்தன.

இன்றிருக்கும் அறுவை மருத்துவம் ஆங்கில தந்த கொடை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, நம் தமிழர்களிடம் இருந்தது. உடலின் கட்டியையும் வேண்டாத தொல்லைகளையும் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யும் மருத்துவ முறை நம்மவர்களிடம் இருந்தது. இதை கம்ப ராமாயணம் தனது கும்பகர்ண வதை படலத்திலேயே சுட்டிக் காட்டுகிறது.

விபீடனன், கும்பகர்ணனிடம் சொல்கிறான்...

’உடலிடைத் தோன்றிற் தொற்றை

அறுத்ததின் உதிர மூற்றிச்

துடலுறச் சுட்டு வேறோர்

மருந்தினால் துயரம் தீர்வர்”

லி தொற்றாக வந்த கட்டியைக் கூட அறுத்து வீசி, அழுக்கு உதிரத்தை நீக்கி, கட்டுப்போட்டு மருந்து தடவி, நம்மவர்கள் துயரத்தைத் தீர்த்துக் கொள்வார்கள் என்கின்றன கம்பனின் இந்தக் காவிய வரிகள்.

அதேபோல், அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முலிகைகளும் பச்சிலைகளும் வளர்க்கப்பட்டதை, விவரிக்கும் பழமொழி நானூறு.....

’அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு

நல்ல கிளைகள் எனப்படுவார்லி நல்ல

வினைமரபின் மற்றதனை நீக்கும் மதுவென

மனைமரம் ஆய மருந்து’

லிஎன்று சொல்கிறது.

துன்பம் வரும் போது உதவும் உறவினர்கள், வீட்டில் வளர்க்கப்படும் முலிகை மரம், நோய் நேரத்தில் உதவுவது போன்றவர்கள் ஆவார் என்று இந்தப் பாடல் பக்குவமாய்ப் பேசுகிறது.

fruit

இப்படிப்பட்ட மருத்துவ அறிவு கொண்ட வாழ்வை, நாம் இப்போது கைவிட்டுவிட்டோம் என்பது வருத்தத்திற்குரியது. மனிதன் என்னும் உயர்திணை உயிரான நாம் எப்படி உருவானோம்?

*

முதலில் நீரினில் பாசியைப் போன்ற ஒரு செல் உயிரினங்களைப் படைக்கப்பட்டது. அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆனதும், மீன் போன்ற கடல் வாழ் உயிரினங்களைப் படைக்கப்பட்டது. இப்படியே இயற்கையின் படைப்பு ஒன்றைச் சாரந்து ஒன்று என எல்லாமும் படைக்கப்பட்டன.

கடைசியாக உயிரிகளின் பரிணாமக் கோட்பாட்டின் படி, மனிதன் படைக்கப்பட்டான். இயற்கை அனைத்துப் படைப்புகளையும், காலப்போக்கில் மனிதனின் ஆளுமைக்கு கொண்டு வந்தது. மனிதனையும் தன் ஆளுமைக்குள் வைத்துக் கொண்டது இயற்கை.

உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி திருமூலரைப் போல சிறப்பாக சொல்லியிருப்பவர்கள் யாருளர்?

’உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’

-இப்படிப்பட்ட இந்த உடம்பைச் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும் அல்லவா?

அதற்கு என்ன வழி நாம் உண்ணும் உணவு தான் .

தொல்காப்பியர் கூறும் உணவிற் கும், சங்ககாலத்தில் உள்ள உணவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

முல்லை நில மக்களின் உணவு வரகு. நீர் கான்யாறு. குறிஞ்சி நில மக்களின் உணவு தேனும் திணையும். நீர், அருவி நீர், சுனை நீர்.

மருத நில மக்களின் உணவு செந்நெல், வெண்ணெல், நீர், ஆற்று நீர், கேணி நீர்.

நெய்தல் நில மக்களின் உணவு, உப்புக்கு விலை மாறிய உயர் பண்டம், மீன். நீர், உவர்ப்பு நீர்.

பாலை நில மக்களின் உணவு சூறைக்கொண்ட பொருளும், சுனை நீரும்.

சங்க கால மக்களின் இந்த உணவு முறையானது மாறி, கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட வேண்டிய உணவுகள் எல்லாம், இங்கே நோய்க்கான மருந்தாக, உலா வருவதை யாராலும் மறுக்க முடியாது.

கிராமங்கள் நகரங்களாக மாறிக்கொண்டுவரும் இந்த காலகட்டத்தில், அனைத் திலும் உயர்வு உண்டாகும் படி, நாம் நாகரிக முன்னேற் றம் அடைந்து வருகிறோம்.

ஆனால், இந்த உணவு முறை யில் மட்டும், வேண்டாத வற்றை எல்லாம், நாகரிகம் என்ற பெயரில் அநாகரிக மாக ஏற்றுக்கொண்டு, நோய்களோடு குடும்பம் நடத்துகிறோம். இப்படியொரு நிலை ஏன்?

காலத்தின் கட்டாயத்தால் சில செய்திகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. இயற்கை எழிலோடு ஏகாந்தமாய் இருக்கும் கிராம மக்களின் உணவுக் கோட்பாடு பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

மஞ்சள் கரிசாலை, பிண்ணாக்குக் கீரை, பிரண்டை, வெள்ளைக் கரிசலை, கல்யாண முருங்கை, நச்சுக்கொட்டை, தும்பை, மணலி, சக்கரவர்த்தினி, தவசு, சாணக்கீரை, விழுதி, கொடிக் காசினி, துமியினி, ஓமவல்லி, துத்தி, மூக்குத் தட்டை, நறு தாணி, பொடுதலை, இலைக் கீரை என்றெல்லாம் கிராமங்கள் தோறும், வேலியோரத்திலும், ஆற்றோரங் களிலும் வகை வகையாய்த் தழைத்திருப்பதை நாம் கவனித்தோமா? நோய்கள் நுழையாதபடி உடலை இரும்புக் கோட்டையாக்கும் இத்தகைய கீரைகளைப் பறித்துச் சமைத்துண்ணும் போக்கு குறைந்துவருகிறது.

கிராமங்களில் இப்போதும் ஒரு பழமொழி உலவுகிறது. ’முருங்கையை வச்சவன் வெறுங்கையோடு போகமாட்டான்’ என்று. இதன் பொருள், வாழ்க்கைப் போரில் அவன் நிராயுதபாணியாகச் செல்லமாட்டான் என்பதாகும். ஏனெனில் காக்கும் கவசமாக முருங்கை அவன் முன்பாக நிற்கும். முருங்கை மரத்தின் இலை, காய், பூ அனைத்தும் மருத்துவமாகப் பயன்படும். மருந்து அடிக்காத ஓரே கீரை அதன் கீரைதான்.

அகத்தில் இருக்கும் தீயைக்கட்டுப் படுத்துவது அகத்திக் கீரை!v அகத்தை சீராக வைப்பது, சீரகம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிட லாம்.லிஇவையெல்லாம் நம் ஆரோக்கியத்திற்கான பாடங்கள்.v உடம்புக்கு காவல் இருக்கும் உயர்தர சத்துப்பொருட்களான கம்பும், கேழ்வரகும், சாமையும்,மூங்கிலரிசியும் நம் அன்றாட பயன்பாட்டில் இருந்து கை நழுவி விட்டது. அதனால் நம் இயல்பான ஆரோக்கியமும் கை நழுவிவிட்டது.

இயற்கை மருந்துப் பொருட்களாக நமக்குக் கிடைத்த இனிய பழங்களான, மா,பலா வாழை எனும் முக்கனிகள் உள்ளிட்ட எலும்பிச்சை, கொய்யா, பப்பாளி, நார்த்தங்காய் , கிச்சிலிக் காய், முந்திரிப்பழம், இலந்தம்பழம், நாகப்பழம், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை நாம் ஒதுக்க ஒதுக்க நம்மையும், ஆரோக்கியம் ஒதுக்கிவிட்டது.

இளநீரும், நுங்கும், வெள்ளரியும் நமக்களித்த குளிர்சியைக் கூட நாம் கைவிட்டுவிட்டு, வெப்ப நோய்களின் கைதிகளாக அல்லல் அடைந்துகொண்டு இருக்கிறோம். கிரமங்கள் நமக்குத் தரும் அமுதப்படையல்களை விட்டுவிட்டு பீசா, பர்கர் என்று குளிர்பதன உணவகங்களை நாம் தேடிப்போவதால், நம்மைத் தேடி நோய்களும் படையெடுத்து வருகின்றன.

பசித்துப் புசி, ருசித்துப் புசி எனும் தத்துவம் அறிந்தவர்கள் நம் முன்னோர்கள். அதிலும் ஊட்டமுள்ள உணவுகளை உண்டு உரமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய நிலையோ, இதற்கு மாறாக நிலைகுலைந்து போயிருக்கிறது.

ஆற்று நீர் வாதம் போக்கும்!

அருவிநீர் பித்தம் போக்கும்!

சோற்று நீர் இரண்டும் போக்கும்!

லிஎன்பது ஊட்டமான பொன்மொழி. இன்று இம்மூன்றுக்கும் வழியில்லை. நகரத்தில் சோற்று நீர் அறவே இல்லை.

’பழ உணவு பத உணவு v பால் உணவு பாழ் உணவு”

லிஎன்பதையும் நாம் மறந்துவிட்டோம்.

பால் பொருட்கள் கொழுப்பை அதிகமாக்கும். அந்தக் கொழுப்பைக் குறைக்க, அருகம்புல் சாறு குடிப்பது பயனுள்ளது. பால் உணவை குறைத்து பழங்களைச் சாப்பிட வைத்தது அன்றைய கிராம வாழ்க்கை. இன்றோ, கிராமங்களே பால் மயக்கம் கொண்டு பரிதவிக்கின்றன.

முன்பெல்லாம் கிராமங்களில் பெண் பருவம் அடைந்தால் அவளுக்கு உளுந்து மாவும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்யும் தருவார்கள். இடுப்பு பலத்திற்கு இதைவிட வேறு இல்லை. இந்த வழக்கமும் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு போய்விட்டது.

நாம் நம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கும் மிகச் சிறந்த சொத்து அவர்களின் ஆரோக்கியம் தான். இதை உணர்ந்து பெற்றோர்கள் இயற்கை உணவுக்கும் இயற்கையான வாழ்க்கைக்கும் திரும்பவேண்டும். இல்லை என்றால் கொரோனா போன்ற நோய்களால் நாம் திண்டாடத்தான் வேண்டும்.

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வேத வாக்கினை மனதிலே பதிய வைத்துக்கொள்வோம்.

’மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு; அருந்தியது

அற்றது போற்றி உணின்’

இதன்படி, உணவையே மருந்தாக்கிக் கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது.

வானமும் மேகமும் போலலி கொடியும் மலரும் போல லிகுழந்தையும் சிரிப்பும் போலலி நம் உணவும் உடலும் இணைந்தது தான் மருந்தில்லா மருத்துவம். அதன் மகத்துவம் உணர்ந்து வாழ்வதே, நோய்களிடமிருந்து வழியாகும்.