உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா.கருணாநிதி.
அழகி படத்தில் இடம்பெறும் 'ஒரு சுந்தரி வந்தாளாம்' என்ற பாடலை எழுதியவர் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதி. இவர், மொட்ட சிவா கெட்ட சிவா, மனசெல்லாம் ஜூலி கணபதி, ஆர்யா சூர்யா . நாரதன், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். அஜித் நண்பராக திருப்பதி படத்திலும் தங்கர்பச்சான் நண்பராக சிதம்பரத்தில் அப்பாசாமி படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்.
விரைவில் வெளிவரவிருக்கும் பல முக்கிய படங்களுக்குப் பாடல்களையும் சொற்கோ கருணாநிதி எழுதியிருக்கிறார். அவர், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கு இலக்கணப் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், எளிய உத்தியில் இசைப் பாடல்களாக உலகில் முதல்முறையாக படைத்துள்ளார்.
இவர் சமீபத்தில் தமிழ்நாடு அரசு தந்த முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மாநாடுகளில் கவிதைகள் பாடியிருக்கும் சொற்கோ கருணாநிதி, சென்னை நந்தனம் கல்லூரியில் இணைப்பேராசிரியராக இருக்கிறார். இலக்கணப் பாடல் முயற்சி பற்றி சொல்லும் போது’’பல்வேறு காலகட்டங்களில் மாணவ மாணவிகளைச் சந்திக்கும்போது, தொடர்ந்து ஒரு விஷயத்தை வலியுறுத்தி வந்தனர். அதாவது இலக்கணத்தை எளிதில் புரிந்து கொண்டு அதில் புலமை பெறுவதற்கு ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்கள். வழி வகைகளைத் தேடி கொண்டிருந்தார்கள். அதன் விளைவாக இதுமாதிரியான எளிய வகையில் இலக்கணத்தை செல்வதற்கான ஒரு முயற்சியாக இத்தகைய உத்தியை மேற்கொண்டேன்.
சில பாடல்களை அவ்வப்போது மாணவர்கள் மத்தியில் சொன்னபோது மிகுந்த ஆரவாரமான வரவேற்பைப் பெற்று ஆனந்த எதிரொலியைக் கண்டேன். அதன் விளைவாக ஆறாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை உள்ள இலக்கணத்தை மூன்றரை ஆண்டு காலம் இசைப் பாடலாக ஆக்கி, அதற்கு இசை அமைத்து உருவம் கொடுத்துத் திரைப் பிரபலங்களை வைத்துப்பாட வைத்தேன். டி. ராஜேந்தர் , ஏ.ஆர் ரஹைனா, மாலதி மஹாராஜன், மாலதி,சின்னப்பொண்ணு, செந்தில் தாஸ், வேல்முருகன், முகேஷ், கானா பாலா, ஜெய்கிருஷ், ஹரினி, ராம் சியாமளா உள்ளிட்டோரைப் பாட வைத்துத் தயாராக வைத்துள்ளேன்.
இந்தச் செய்தியைப் பல்கலை வேந்தர் டி.ராஜேந்தர் அவர்களிடம் முதலில் சொன்னேன். அவர். இந்த அரிய முயற்சிக்கு என் வாழ்த்துகள் என்றும் என்னுடைய பங்களிப்பும் இதில் இருக்கவேண்டும் என்றும் சொல்லி டைட்டில் பாடலைப் பாடிக் கொடுத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நிதியமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், மருத்துவத்துறை அமைச்சர் போன்றோர்இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்தப் பாடல்கள் எளிய வகையில் உதவி செய்து வெற்றி இலக்கை அடைய வைக்கும். துள்ளல் இசை பாடலாக இருப்பதால் எல்லா மாணவர்களும் இதனை வீட்டிலும் விழா நிகழ்ச்சியிலும் பாடி ஆடி பரிட்சையில் வெல்வார்கள் என்பது உறுதி என்றார் உற்சாகமாக.
இலக்கணப்பாடல்களைப் படைத்த சொற்கோவுக்கு நமது இனியவாழ்த்துகள்.